ரஷ்யாவின் மிகப் பழமையான நூலகம் பைபிள்மீது “தெளிவான ஒளியை” வீசுகிறது
பண்டைய பைபிள் கையெழுத்துப் பிரதிகளின் தேடுதல் வேட்டையில் இரண்டு மேதைகள் இறங்கினார்கள். அவர்கள் தனித்தனியாக பாலைவனங்கள் வழியே பயணப்பட்டு, குகைகள், துறவி மடங்கள், பண்டைய மலைவாழ் இருப்பிடங்கள் என எல்லா இடங்களிலும் தேடி அலைந்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் ரஷ்யாவின் மிகப் பழமையான பொது நூலகத்தில் சந்தித்தார்கள். இந்த நூலகத்தில்தான் உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெரும் ஆர்வத்திற்குரிய சில பைபிள் பிரதிகள் உள்ளன. இந்த இரண்டு மேதைகள் யார்? அவர்களுடைய பொக்கிஷம் போன்ற கண்டுபிடிப்புகள் எவ்வாறு ரஷ்யாவை அடைந்தன?
கடவுளுடைய வார்த்தையை ஆதரிக்கும் பூர்வகால கையெழுத்துப் பிரதிகள்
இந்த இரண்டு மேதைகளில் ஒருவரைச் சந்திப்பதற்கு நாம் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குச் செல்ல வேண்டும்; அந்தச் சமயத்தில், ஐரோப்பா எங்கும் அறிவுப் புரட்சியின் காற்று வீசிக்கொண்டிருந்தது. அறிவியல் முன்னேற்றமும் பண்பாட்டு சாதனையும் நிகழ்ந்த இந்தச் சகாப்தத்தைக் குறிப்பதற்கு “அறிவொளி” என்ற பதம் பயன்படுத்தப்பட்டது; இச்சகாப்தம், வழிவழியாக நிலவி வந்த நம்பிக்கைகள்மீது அவநம்பிக்கையை வளர்த்தது. அப்போது பைபிளின் செல்வாக்கை குறைத்துப்போட திறனாய்வாளர்கள் முயன்றார்கள். மேதைகள்கூட பைபிளின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்க ஆரம்பித்தார்கள்.
பைபிளின் உண்மையுள்ள ஆதரவாளர்களில் குறிப்பிட்ட சிலர், இதுவரை கண்டுபிடிக்கப்படாதிருந்த அதன் கையெழுத்துப் பிரதிகள் அதன் உண்மைத்தன்மைக்கு நிச்சயம் சான்றளிக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். பைபிளின் செய்தியை அழிப்பதற்கு அல்லது அதைச் சிதைப்பதற்குப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இருந்தபோதிலும், அன்றிருந்த கையெழுத்துப் பிரதிகளைவிட பழமையான பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டால், பைபிள் பதிவு களங்கமற்றது என்பதற்கு அவை மௌன சாட்சிகளாக விளங்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதோடு, அத்தகைய கையெழுத்துப் பிரதிகள், மொழிபெயர்ப்பின்போது சில இடங்களில் சேர்க்கப்பட்டுள்ள தவறான குறிப்புகளையும் வெட்டவெளிச்சமாக்கும் என்பதையும் அறிந்திருந்தார்கள்.
பைபிளின் நம்பகத்தன்மையைக் குறித்த அனல் பறக்கும் விவாதங்களில் சில ஜெர்மனியில் நிகழ்ந்தன. அந்தச் சமயத்தில் பேராசிரியராக இருந்த வாலிபர் ஒருவர் சகல சௌகரியங்களையும் துறந்து ஒரு பயணத்தை மேற்கொண்டார்; அந்தப் பயணத்தின்போதுதான் பைபிள் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய ஒன்றைக் கண்டுபிடிக்க இருந்தார். அவருடைய பெயர் கான்ஸ்டான்டீன் வான் டிஷ்யன்டார்ஃப். பைபிள் மேதையான அவர், திறனாய்வாளர்களின் கடுமையான விமர்சனத்தை ஒதுக்கித் தள்ளியதால் பைபிளின் நம்பகத்தன்மையை ஆதரிப்பதில் அபார வெற்றி பெற்றார். 1844-ல் சீனாய் வனாந்தரத்திற்கு அவர் முதலாவதாகப் பயணப்பட்டது, நம்ப முடியா அந்த வெற்றியைத் தேடித் தந்தது. அங்கு அவர் துறவிமடத்திலிருந்த குப்பைக்கூடையை எதேச்சையாகப் பார்த்தபோது பூர்வ செப்டுவஜின்ட் பிரதியை, அதாவது எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பைக் கண்டார்; கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இதுதான் மிக மிகப் பழமையான பிரதியாகும்!
டிஷ்யன்டார்ஃப் சந்தோஷத்தில் கூத்தாடினார், எப்படியோ 43 சுருள்களை அவரால் எடுத்து வர முடிந்தது. இன்னும் நிறைய சுருள்கள் இருக்க வேண்டுமென அவர் நம்பியபோதிலும் 1853-ல் திரும்பச் சென்றபோது சுருளின் ஒரேவொரு துண்டு மட்டுமே அவருக்குக் கிடைத்தது. அப்படியென்றால் மீதமுள்ளவை எங்கே போய்விட்டன? அதற்குள் டிஷ்யன்டார்ஃப்பின் கையிலிருந்த காசெல்லாம் கரைந்துபோனது, எனவே தன் பணிக்கு பண உதவி கேட்டு ஒரு பணக்காரரிடம் சென்றார். மேலும், அவர் தன் சொந்த ஊரைவிட்டு, பழைய கையெழுத்துப் பிரதிகளைத் தேடுவதற்காக மீண்டும் புறப்பட்டார். அப்படிப் புறப்படுவதற்கு முன்பு ரஷ்ய பேரரசரிடம் உதவி கேட்க தீர்மானித்தார்.
பேரரசரின் ஆர்வம்
புராட்டஸ்டன்ட் மேதையான தனக்கு ரஷ்யாவில் எத்தகைய வரவேற்பு கிடைக்குமோவென டிஷ்யன்டார்ஃப் ரொம்பவே கவலைப்பட்டிருப்பார்; ஏனெனில் அந்தப் பரந்த சாம்ராஜ்யம் எங்கும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மதம் பின்பற்றப்பட்டு வந்தது. மகிழ்ச்சிகரமாக, மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்குமுரிய சாதகமான ஒரு சகாப்தத்திற்குள் ரஷ்யா அப்போது காலடியெடுத்து வைத்திருந்தது. கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், (மகா காத்தரீன் என்றும் அறியப்படுகிற) பேரரசி இரண்டாம் காத்தரீன் என்பவரால் 1795-ல் செ. பீட்டர்ஸ்பர்க்கின் இம்பீரியல் லைப்ரரி உருவாக்கப்பட்டது. இது, ரஷ்யாவின் முதல் பொது நூலகமாக இருந்ததால் இங்கிருந்த ஏராளமான தகவல் லட்சக்கணக்கானோருக்குப் பயனளித்தது.
ஐரோப்பாவில் இருந்த அருமையான நூலகங்களில் ஒன்றாகப் புகழ்மணம் பரப்பிய இந்த இம்பீரியல் லைப்ரரியில் ஒரேவொரு குறை இருந்தது. அது ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகியும் அதில் ஆறே ஆறு எபிரெய கையெழுத்துப் பிரதிகள்தான் இருந்தன. பைபிள் எழுதப்பட்ட மொழிகளைப் படிப்பதற்கும், மொழிபெயர்ப்புகள் செய்வதற்கும் ரஷ்யர்களிடம் தலைதூக்கிய ஆர்வப் பசியை அவற்றால் ஈடுகட்ட முடியவில்லை. எனவே, பேரரசி இரண்டாம் காத்தரீன், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்குச் சென்று எபிரெய மொழி பயில மேதைகளை அனுப்பி வைத்தார். அந்த மேதைகள் திரும்பி வந்ததும், முக்கியமான ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் இறையியல் கல்லூரிகளில் எபிரெய மொழி பயிற்சி ஆரம்பமானது; முதன்முதலாக, பூர்வ எபிரெய மொழியிலிருந்த பைபிளை ரஷ்ய மொழிக்குத் திருத்தமாக மொழிபெயர்க்கும் பணி ரஷ்ய மேதைகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒருபுறம் இதற்குத் தேவைப்பட்ட பணம் கைவசமில்லாதிருந்தது, மறுபுறம் பழமையை ஆதரிக்கும் சர்ச் தலைவர்களின் எதிர்ப்பு தலைதூக்கியது. ஆனால் பைபிள் அறிவைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு மெய்யான அறிவொளி இன்னும் பிரகாசிக்கத் தொடங்கவில்லை.
டிஷ்யன்டார்ஃப் மேற்கொண்ட பயணம் எந்தளவு மதிப்புமிக்கது என்பதை ரஷ்ய பேரரசர் இரண்டாம் அலெக்சாண்டர் உடனடியாகப் புரிந்துகொண்டார்; அதற்காகும் செலவை தானே ஏற்றுக்கொண்டார். டிஷ்யன்டார்ஃப், சிலரது “பொறாமையினாலும் மதவெறியினாலும் எழுந்த எதிர்ப்பின்” மத்தியில், சீனாய் பயணத்தை முடித்துக்கொண்டு செப்டுவஜின்ட்டின் எஞ்சிய பாகத்துடன் திரும்பி வந்தார்.a கோடெக்ஸ் சினியாட்டிகஸ் எனப் பின்னர் பெயரிடப்பட்ட இந்தச் சுருள்கள், இன்றுள்ள மிகப் பழமையான பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் சில ஆகும். செ. பீட்டர்ஸ்பர்க் திரும்பியதும், பேரரசரைக் காண, அவரது கோடை மாளிகைக்கு டிஷ்யன்டார்ஃப் விரைந்தார். “பகுப்பாய்வு செய்து பைபிளைப் படிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் பணிகளில் ஒன்றிற்கு” பேரரசரின் ஒப்புதலை வேண்டினார். இது புதிதாகக் கண்டுபிடித்த கையெழுத்துப் பிரதிகளை ஒரு பதிப்பாக வெளியிடும் பணியாகும். பின்னர் இது இம்பீரியல் லைப்ரரியில் வைக்கப்பட்டது. அந்தப் பதிப்பை வெளியிடுவதற்கு பேரரசர் உடனடியாக ஒப்புதல் அளித்தார், பெருமகிழ்ச்சியடைந்த டிஷ்யன்டார்ஃப் பின்னர் இவ்வாறு எழுதினார்: “கடவுள் அருளால் நம்முடைய காலத்தில் . . . சினியாட்டிக் பைபிள் . . . கிடைத்திருக்கிறது; இது, கடவுளுடைய வார்த்தையின் மூல பதிவில் எழுதப்பட்டிருந்ததை அறிவதிலும், அந்த நம்பகமான பதிவை நிலைநாட்டி சத்தியத்தை ஆதரிப்பதிலும் உதவுகிறது; இவ்வாறு, பைபிள் மீது முழு அளவில் தெளிவான ஒளியை வீசுகிறது.”
க்ரைமியாவிலிருந்து பைபிள் பொக்கிஷங்கள்
இன்னொரு மேதையும் பைபிள் பொக்கிஷங்களுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கியதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. அவர் யார்? டிஷ்யன்டார்ஃப் ரஷ்யாவுக்கு திரும்பி வருவதற்கு சில வருடங்கள் முன்பு, இன்னொருவர் நம்ப முடியாதளவுக்கு எக்கச்சக்கமான பிரதிகளை இம்பீரியல் லைப்ரரிக்கு அளிக்க முன்வந்தார்; அவரது செயல் பேரரசரின் ஆர்வத்தைக் கிளறியது, அதோடு, ஐரோப்பா முழுவதுமுள்ள மேதைகளை ரஷ்யாவுக்கு வரவழைத்தது. அந்த மேதைகளால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. சேகரிக்கப்பட்ட எக்கச்சக்கமான கையெழுத்துப் பிரதிகளும் வேறு பிரசுரங்களும் அவர்கள் முன் குவிந்து கிடந்தன. 975 கையெழுத்துப் பிரதிகளையும், தோல் சுருள்களையும் சேர்த்து அவற்றின் மொத்த எண்ணிக்கை 2,412 ஆக இருந்தது வியப்பில் ஆழ்த்தியது. இவற்றில் பத்தாம் நூற்றாண்டிற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த 45 கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. இது ஆச்சரியத்தை அளிப்பதாகத் தோன்றினாலும், கிட்டத்தட்ட இந்தக் கையெழுத்துப் பிரதிகள் அனைத்துமே, 70 வயதைத் தாண்டிய ஒரு தனி நபர் சொந்தமாகச் சேகரித்து வைத்திருந்தவை! அவருடைய பெயர் ஆவ்ராம் ஃபிர்காவிச், அவர் ஒரு கரயய்ட் மேதை ஆவார். கரயய்ட்கள் யார்?b
இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதில் ரஷ்ய பேரரசரும் அதிக ஆர்வம் காட்டினார். பிற நாடுகளின் வசமிருந்த பிராந்தியத்தை ரஷ்யா ஆக்கிரமித்து அதன் எல்லையை விஸ்தரித்திருந்தது. இதனால் புதிய இனத் தொகுதிகள் அதன் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தன. கருங்கடல் ஓரம் அமைந்துள்ள, இயற்கை வனப்புமிக்க க்ரைமியா என்ற பகுதியில், பார்ப்பதற்கு யூதர்களைப் போல் இருந்தவர்கள் குடியிருந்தார்கள்; அவர்கள் துருக்கியரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள், டாடர் என்ற மொழியுடன் தொடர்புடைய ஒரு மொழியைப் பேசினார்கள். இவர்கள்தான் கரயய்ட்கள்; இவர்கள், பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டு, பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்ட யூதர்களின் சந்ததியில் தாங்கள் வந்ததைக் கண்டுபிடித்தார்கள். எனினும், யூத ரபீக்களைப் போலில்லாமல் இவர்கள் டால்மூட்டை நிராகரித்தார்கள், வேதாகமத்தைப் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். க்ரைமியாவிலிருந்த கரயய்ட்கள், தாங்கள் யூத ரபீக்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள் என்பதை ரஷ்ய பேரரசரிடம் நிரூபிப்பதன் மூலம் தங்களுக்கு ஒரு தனி அந்தஸ்தை தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். எனவே இவர்கள் தங்கள் வசமிருந்த பழமையான கையெழுத்துப் பிரதிகளை அவரிடம் அளிப்பதன் மூலம், தாங்கள் பாபிலோனின் சிறையிருப்புக்குப் பிறகு க்ரைமியாவுக்கு வந்து குடியேறிய யூதர்களின் வழி வந்தவர்கள் என்பதை நிரூபித்தார்கள்.
பூர்வகால பதிவுகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் தேடுகிற பணியை, க்ரைமியர்கள் குடியிருந்த சூஃபூட் காலி என்ற மலை உச்சியிலிருந்து ஃபிர்காவிச் ஆரம்பித்தார். கரயய்ட்கள், மலை உச்சியிலுள்ள கற்களில் குடையப்பட்ட சிறிய வீடுகளில் வழி வழியாக வாழ்ந்து வந்தார்கள், அங்கேயே கடவுளை வழிபட்டும் வந்தார்கள். கடவுளுடைய பெயர், அதாவது யெகோவா என்ற பெயர் காணப்பட்ட நைந்துபோன வேதாகமப் பிரதிகளை இவர்கள் அழிக்கவே இல்லை; ஏனெனில் அப்படிச் செய்வதை தெய்வக்குற்றமாகக் கருதினார்கள். எனவே அந்தக் கையெழுத்துப் பிரதிகளை கெனீஸா என்று அழைக்கப்படும் சிறிய கிடங்கில் அவர்கள் பத்திரப்படுத்தி வைத்தார்கள்; கெனீஸா என்பதற்கு எபிரெயுவில் “ஒளிப்பிடம்” என்று அர்த்தம். கடவுளுடைய பெயருக்கு கரயய்ட்கள் பெரும் மரியாதை காட்டியதால் அத்தகைய தோல் சுருள்கள் அழிக்கப்படாமல் பத்திரமாக அப்படியே இருந்தன.
பல நூற்றாண்டு காலமாக புழுதி மூடியிருந்த, கெனீஸாக்களை ஃபிர்காவிச் வெகு கவனமாக ஆராய்ந்தார். அவற்றுள் ஒன்றில் பொ.ச. 916-ஐச் சேர்ந்த பிரசித்திபெற்ற ஒரு கையெழுத்துப் பிரதியை அவர் கண்டுபிடித்தார். பிற்கால தீர்க்கதரிசிகளின் பதிவுகளை உடைய பீட்டர்ஸ்பர்க் கோடெக்ஸ் என்றழைக்கப்படும் இது, இன்றுள்ள எபிரெய வேதாகமத்தின் மிகப் பழமையான பிரதிகளில் ஒன்றாகும்.
ஃபிர்காவிச் அரும்பாடுபட்டு அநேக கையெழுத்துப் பிரதிகளைத் திரட்டினார், 1859-ல், தான் பெருமளவு சேகரித்திருந்தவற்றை இம்பீரியல் லைப்ரரிக்குக் கொடுக்க அவர் முடிவு செய்தார். 1862-ல் இரண்டாம் அலெக்ஸாண்டர், நூலகத்துக்காக அந்தத் தொகுப்புகளை எல்லாம் 1,25,000 ரூபிள்கள் கொடுத்து வாங்குவதில் உதவினார்; அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய தொகையாகும். அச்சமயத்தில், வரவு செலவு திட்டத்தில் நூலகத்திற்காக வருடத்திற்கு 10,000 ரூபிள்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது! இப்படி வாங்கியவற்றில், பிரசித்திபெற்ற லெனின்கிராட் கோடெக்ஸும் (B 19A) இருந்தது. 1008-ம் வருடத்தைச் சேர்ந்த இதுதான், உலகில் கண்டெடுக்கப்பட்ட முழு எபிரெய வேதாகமத்தின் மிகப் பழமையான பிரதியாகும். “நவீன எபிரெய பைபிளின் பகுப்பாய்வு பதிப்புகள் பல நம்பகமானவை என்பதை உறுதிப்படுத்த, இது மட்டுமே மிக முக்கியமான பைபிள் கையெழுத்துப் பிரதியாக விளங்கலாம்” என ஒரு மேதை குறிப்பிட்டார். (அருகே உள்ள பெட்டியைக் காண்க.) அதே வருடத்தில், அதாவது 1862-ல், உலகமே வியந்து பாராட்டுமளவுக்கு டிஷ்யன்டார்ஃப் உருவாக்கிய கோடெக்ஸ் சினியாட்டிகஸ் பிரசுரிக்கப்பட்டது.
இன்று ஆன்மீக ஒளி
இன்று த நேஷனல் லைப்ரரி ஆஃப் ரஷ்யா என அறியப்படும் அந்த நூலகம், மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளை உலகிலேயே அதிகளவில் சேகரித்து வைத்திருக்கும் ஒரு நூலகமாகத் திகழ்கிறது.c ரஷ்யாவின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இந்த நூலகத்தின் பெயர் இரண்டு நூற்றாண்டுகளில் ஏழு முறை மாற்றப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதன் பிரசித்திபெற்ற பெயர்களில் ஒன்று த ஸ்டேட் சால்டிகாஃப்-ஷிசிட்ரின் பப்ளிக் லைப்ரரி என்பதாகும். இருபதாம் நூற்றாண்டில் தலைதூக்கிய கிளர்ச்சியால் இந்த நூலகம் பாதிக்கப்பட்டாலும் இதிலிருந்த கையெழுத்துப் பிரதிகள் இரண்டு உலகப் போர்களின் சமயத்திலும், லெனின்கிராட் முற்றுகையின் சமயத்திலும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. இத்தகைய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
இன்றைய பைபிள் மொழிபெயர்ப்புகள் பலவற்றிற்கு இந்தப் பழமையான கையெழுத்துப் பிரதிகள் நம்பகமான ஆதாரத்தை அளிக்கின்றன. சத்தியத்தை உண்மை மனதுடன் தேடுவோர், பரிசுத்த வேதாகமத்தின் வெகு திருத்தமான மொழிபெயர்ப்பைப் பெறுவதற்கு வழிசெய்திருக்கின்றன. சினியாட்டிகஸ் கோடெக்ஸும் லெனின்கிராட் கோடெக்ஸும், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் உருவாவதில் ஒப்பற்ற விதத்தில் உதவியிருக்கின்றன; இந்த பைபிள், யெகோவாவின் சாட்சிகளால் 1961-ல் முழுமையாக வெளியிடப்பட்டது. உதாரணமாக, பிப்ளியா ஹெப்ராய்கா ஸ்டுட்கார்டென்சியா, கிட்டல் என்பவரின் பிப்ளியா ஹெப்ராய்கா ஆகியவை புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவால் பயன்படுத்தப்பட்டன; இவை இரண்டும் லெனின்கிராட் கோடெக்ஸை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் அந்த கோடெக்ஸின் மூலப் பிரதியில், கடவுளுடைய பெயர் அல்லது அதைக் குறிக்கும் நான்கெழுத்துக்கள் 6,828 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.
நிசப்தம் நிலவும் செ. பீட்டர்ஸ்பர்க் நூலகத்திற்கும் அதிலுள்ள கையெழுத்துப் பிரதிகளுக்கும் தாங்கள் எந்தளவு கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஏராளமான வாசகர்கள் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. இந்தக் கையெழுத்துப் பிரதிகளில் சில, லெனின்கிராட் என்ற அந்த நகரத்தின் முன்னாள் பெயரில் உள்ளன. அந்த நூலகத்திற்கு நாம் எந்தளவு கடமைப்பட்டிருந்தாலும் நமக்கு ஆன்மீக ஒளியைத் தருகிற யெகோவாவுக்கு, பைபிளின் நூலாசிரியருக்கு, நாம் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவேதான் சங்கீதக்காரன் யெகோவாவிடம், ‘உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்துவதாக’ என விண்ணப்பித்தார்.—சங்கீதம் 43:3.
[அடிக்குறிப்புகள்]
a பொ.ச. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் நகல் முழுவதையும்கூட அவர் கொண்டு வந்தார்.
b கரயய்ட்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, காவற்கோபுரம், ஜூலை 15, 1995-ல் வெளியான, “கரயய்ட்களும்—சத்தியத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் நாட்டமும்” என்ற கட்டுரையைக் காண்க.
c கோடெக்ஸ் சினியாட்டிகஸ் பிரதிகளில் பெரும்பாலானவை பிரிட்டிஷ் மியூஸியத்திற்கு விற்கப்பட்டன. த நேஷனல் லைப்ரரி ஆஃப் ரஷ்யாவில் ஒருசில சுருள்களே உள்ளன.
[பக்கம் 13-ன் பெட்டி]
கடவுளுடைய பெயர் அறியப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வந்தது
யெகோவா தம்முடைய ஞானத்தினாலே, நம்முடைய நாள்வரை பைபிளைப் பாதுகாக்க தேவையானவற்றைச் செய்திருக்கிறார். பல நூற்றாண்டுகளாக, ஊக்கமாய் உழைத்த பிரதியெடுப்பவர்களுக்கும் இவ்வாறு பைபிளைப் பாதுகாப்பதில் பங்குண்டு. இவர்களில் மசோரெட்டுகள் எனப்பட்டவர்கள் வெகு கண்ணும்கருத்துமாக இப்பணியில் ஈடுபட்டார்கள்; இந்த எபிரெயர்கள் கைத்தேர்ந்தவர்கள், பொ.ச. ஆறாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை பணியாற்றியவர்கள். பூர்வ எபிரெய மொழி உயிரெழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்டது. நாட்கள் உருண்டோடுகையில் எபிரெய மொழிக்குப் பதிலாக அரமேயிக் மொழி புழக்கத்திற்கு வந்தபோது எபிரெயுவின் சரியான உச்சரிப்பு மறக்கப்பட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. எனவே, எபிரெய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பைச் சுட்டிக்காட்டுவதற்கு, உயிரெழுத்து அடையாளக் குறிப்புகளை பைபிள் பிரதியில் சேர்க்கும் முறையை மசோரெட்டுகள் கண்டுபிடித்தார்கள்.
லெனின்கிராட் கோடெக்ஸில் உள்ள மசோரெட்டுகளின் உயிரெழுத்து அடையாளக் குறிப்புகள், கடவுளுடைய பெயரிலுள்ள நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களை, யஹ்வஹ், யஹ்வைஹ், மற்றும் யெகோவா என உச்சரிக்க இடமளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும், “யெகோவா” என்றே இப்போது உச்சரிக்கப்படுகிறது. பூர்வ காலங்களில் பைபிள் எழுத்தாளர்களும் மற்றவர்களும் அப்பெயரை நன்கு அறிந்திருந்தார்கள். இன்று லட்சக்கணக்கானோர் கடவுளுடைய பெயரை அறிந்திருக்கிறார்கள், அதைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்; ‘யெகோவாவே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்’ என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.—சங்கீதம் 83:17.
[பக்கம் 10-ன் படம்]
த நேஷனல் லைப்ரரியில் கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டுள்ள அறை
[பக்கம் 11-ன் படம்]
பேரரசி இரண்டாம் காத்தரீன்
[பக்கம் 11-ன் படங்கள்]
(நடுவில்) கான்ஸ்டான்டீன் வான் டிஷ்யன்டார்ஃப்பும் ரஷ்ய பேரரசரான இரண்டாம் அலெக்சாண்டரும்
[பக்கம் 12-ன் படம்]
ஆவ்ராம் ஃபிர்காவிச்
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
இரண்டு படங்களும்: National Library of Russia, St. Petersburg
[பக்கம் 11-ன் படங்களுக்கான நன்றி]
இரண்டாம் காத்தரீன்: National Library of Russia, St. Petersburg; இரண்டாம் அலெக்சாண்டர்: From the book Spamers Illustrierte Weltgeschichte, Leipzig, 1898