உங்களுடைய உணர்ச்சிகளோடு போராடுகிறீர்களா?
கிட்டத்தட்ட வாழ்க்கை பூராவும் எதிர்மறையான உணர்ச்சிகளோடு லீனா போராடியிருக்கிறாள். “என்னுடைய சின்ன வயசில் பல ஆண்டுகள் பாலியல் கொடுமைக்கு ஆளானேன், அது என்னுடைய சுய மரியாதையை அழித்துவிட்டது. நான் ஒன்றுக்குமே உதவாதவளென உணர்ந்தேன்” என அவள் கூறினாள். சிமோன் என்ற பெண்ணும் தனது இளமைப் பருவத்தை நினைத்து இவ்வாறு கூறுகிறாள்: “எனக்குள் ஒரு வெறுமையுணர்வு குடிகொண்டிருந்தது, நான் ஒன்றுக்குமே லாயக்கற்றவளென நினைத்தேன்.” இத்தகைய உணர்ச்சிகளால் வரும் ஆழ்ந்த சோகம் இன்றைக்கு எங்கும் பரவியிருப்பது போல் தோன்றுகிறது. “சுய மரியாதையை இழந்துவிட்டது போன்ற உணர்ச்சிகள் தங்களை பீடித்திருப்பதாக” கிட்டத்தட்ட பாதிப்பேர் தெரிவிக்கிறார்கள் என்று இளைஞருக்கான டெலிபோன் கவுன்சிலிங் சர்வீஸ் ஒன்று கூறுகிறது.
மற்றவர்கள் தங்களைப் பிரயோஜனமற்றவர்கள் என உணரச் செய்யும்போதுதான், லாயக்கற்றவர்கள் என்ற உணர்வு ஆட்களுக்கு ஏற்படுவதாக நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். ஒருவரை சதா திட்டும்போதும், மிதமீறிய வகையில் கடுமையாக விமர்சிக்கும்போதும் அல்லது அவரைத் தன்னல ஆசைகளுக்காக துஷ்பிரயோகம் செய்யும்போதும் இத்தகைய மனநிலை ஏற்படலாம். என்ன காரணமாக இருந்தாலும்சரி, அதன் விளைவுகள் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கலாம், மனதை சுக்குநூறாக்குவதாகவும் இருக்கலாம். எதிர்மறையான உணர்ச்சிகளையுடைய ஆட்களுக்குத் தங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது என்பதை சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி கண்டுபிடித்தது. இதனால், தங்களை அறியாமலேயே நெருங்கிய உறவுகளையும் நட்புகளையும் முறித்துவிடுகிறார்கள். “ஒரு கருத்தில் பார்த்தால், அவர்களே மிகவும் பயப்படுகிற சூழ்நிலைகளை ‘உருவாக்கிவிடுகிறார்கள்’” என இந்த ஆராய்ச்சியின் பேரிலான அறிக்கை கூறுகிறது.
இப்படி உணருகிற ஆட்கள், பைபிள் சொல்கிறபடி, தங்கள் ‘மனதின் கவலைகளால்’ அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 94:19, பொது மொழிபெயர்ப்பு) தாங்கள் ஒருபோதும் நல்லவர்கள் அல்ல என அவர்கள் உணருகிறார்கள். ஏதாவது தவறு நடந்துவிட்டால், உடனடியாக தங்கள் மீதே பழிபோட்டுக் கொள்கிறார்கள். அவர்களுடைய சாதனைகளை மற்றவர்கள் பாராட்டினாலும்கூட, தங்களுடைய அடிமனதில் தங்களை ஒரு மோசடிக்காரன் என்றும் அது சீக்கிரத்தில் வெளிப்பட்டுவிடும் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். சந்தோஷத்தை அனுபவிக்க லாயக்கற்றவர்களென நினைத்துக்கொண்டு, தங்களையே கெடுத்துப்போடும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்; அதை சரிப்படுத்துவதற்கு தாங்கள் திராணியற்றவர்களென உணருகிறார்கள். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட லீனா தனது சுய மரியாதையை இழந்ததால் உணவுப் பழக்கத்தில் அவளுக்குப் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. “என்னால் எதையுமே மாற்ற முடியாது என்பது போல் உணர்ந்தேன்” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள்.
இத்தகைய ‘மனக் கவலைகளோடு’ போராடுகிறவர்கள் வாழ்க்கை பூராவும் இப்படித்தான் உணர வேண்டுமா? இப்படிப்பட்ட உணர்ச்சிகளை விரட்டியடிக்க முடியுமா? பைபிளில் நடைமுறையான ஆலோசனைகளும் நியமங்களும் உள்ளன; இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற இவை அநேகருக்கு உதவி செய்திருக்கின்றன. இந்த நியமங்களில் சில யாவை, வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காண இவை எப்படி அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றன? அடுத்த கட்டுரை இதை விளக்கும்.