கோபப்படுவது எப்போது நியாயமானது?
பிரசங்கி 7:9-ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.’ யாராவது நம்மை புண்படுத்தினால் நாம் மிதமிஞ்சி உணர்ச்சிவசப்படக் கூடாதென இந்த வசனம் காட்டுகிறது; மாறாக, நாம் மன்னிக்க வேண்டும்.
ஆனால் நாம் ஒருபோதும் கோபப்படவே கூடாது, எவ்வளவு மோசமாக புண்பட்டிருந்தாலும் சரி, எவ்வளவு அடிக்கடி புண்படுத்தப்பட்டாலும் சரி, எல்லாவற்றையும் நாம் மன்னிக்க வேண்டும், அதை சரிப்படுத்த எதுவுமே செய்யக்கூடாதென பிரசங்கி 7:9 கூறுகிறதா? புண்பட்டவர் மன்னிக்க வேண்டுமென்று நாம் அறிந்திருப்பதால் சொல்லிலோ செயலிலோ நாம் பிறரை புண்படுத்துவதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லையா? அப்படியல்ல.
யெகோவா தேவன் அன்பு, இரக்கம், மன்னிப்பு, நீடிய பொறுமை ஆகியவற்றின் உருவாக திகழ்கிறார். என்றாலும், அவர் கோபப்பட்டதாக அல்லது புண்பட்டதாக பைபிளில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. பெரிய குற்றம் செய்தவர்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுத்தார். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
யெகோவாவுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்
யெரொபெயாம் செய்த பாவங்களைப் பற்றி 1 இராஜாக்கள் 15:29 கூறுகிறது. அதாவது, ‘யெரொபெயாம் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணின பாவங்களினிமித்தம், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு கோபத்தை உண்டாக்கினான்’ அல்லது கர்த்தரை புண்படுத்தினான் என்று அது கூறுகிறது. யூதாவின் அரசனான ஆகாஸை பற்றி 2 நாளாகமம் 28:25-ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான் [அதாவது, யெகோவாவைப் புண்படுத்தினான்].” மற்றொரு உதாரணம் நியாயாதிபதிகள் 2:11-14-ல் காணப்படுகிறது: ‘இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து, . . . கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள் [அதாவது, யெகோவாவைப் புண்படுத்தினார்கள்]. . . . அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, . . . கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார்.’
யெகோவாவை புண்படுத்திய வேறுசில காரியங்களும் இருக்கின்றன, அவற்றிற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. உதாரணமாக, யாத்திராகமம் 22:18-20-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சூனியக்காரியை உயிரோடே வைக்க வேண்டாம். மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்பட வேண்டும். கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.”
பூர்வ இஸ்ரவேலர் தொடர்ந்து யெகோவாவைப் புண்படுத்தி, உண்மையான மனந்திரும்புதலை காட்டாதிருந்த சமயத்தில் அவர்கள் செய்த பெரும் தவறுகளை அவர் மன்னிக்கவில்லை. கீழ்ப்படிதலுக்கு அத்தாட்சியாக உண்மையான மனந்திரும்புதலை செயலில் காட்டாதபோது, தவறு செய்தவர்களை கடவுள் அழித்தார். பொ.ச.மு. 607-ல் பாபிலோனியராலும், பிறகு பொ.ச. 70-ல் ரோமராலும் இஸ்ரவேலர் தேசிய அளவில் அழிக்கப்பட்டார்கள்.
ஆம், ஜனங்கள் சொல்கிற, செய்கிற அருவருப்பான காரியங்கள் யெகோவாவைப் புண்படுத்துகின்றன, மனந்திரும்பாத பாவிகளுடைய படுமோசமான பாவங்களுக்காக அவர்களை அவர் அழிக்கிறார். ஆனால் இவ்வாறு செய்வதற்காக, பிரசங்கி 7:9-ல் சொல்லப்படும் ஆட்களுடைய வரிசையில் அவரும் வருகிறாரா? இல்லவே இல்லை. மோசமான பாவங்கள் செய்யும்போது அவர் நியாயமாகவே கோபப்படுகிறார், அதேசமயத்தில் நீதியாகவும் நியாயந்தீர்க்கிறார். யெகோவாவைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
தனிநபர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும் குற்றங்கள்
பூர்வ இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தின்படி, தனி நபர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும் குற்றங்களுக்கு மோசமான விளைவுகள் இருந்தன. உதாரணமாக, இராத்திரியில் வீட்டுக்குள் நுழைந்த ஒரு திருடனை அந்த வீட்டுக்காரர் கொன்றுவிட்டால், அவர் மேல் எந்த இரத்தப்பழியும் சுமராது. பெரும் குற்றத்தை அறியாமல் செய்தவராகவே அவர் கருதப்பட்டார். ஆகவே, நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் [வீட்டுக்காரர் மேல்] இரத்தப்பழி சுமராது.”
கற்பழிப்பது கடவுளுடைய பார்வையில் கொடிய குற்றமாக இருப்பதால், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் கற்பழித்தவன் மீது கொதித்தெழுவதற்கு உரிமை இருக்கிறது. நியாயப்பிரமாண சட்டத்தின்படி, ஒரு பெண்ணை கற்பழித்தவன் கொலை செய்யப்பட வேண்டும்; ஏனென்றால் “இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினது போல இருக்கிறது.” (உபாகமம் 22:25, 26) நாம் இப்பொழுது நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லாவிட்டாலும், கற்பழித்தல் என்ற கொடிய தவறைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
நம்முடைய காலத்திலும்கூட, கற்பழிப்பது கடுமையான தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். இதற்குப் பலியானவர் போலீசாரிடம் புகார் செய்ய எல்லா உரிமையும் இருக்கிறது. அப்போதுதான், அதிகாரிகள் அந்தக் குற்றவாளியை தண்டிக்க முடியும். பாதிக்கப்பட்டவர் வயதுவராதவராக இருந்தால், பெற்றோர்கள் இதற்கு நடவடிக்கைகள் எடுக்கலாம்.
சிறுசிறு தவறுகள்
என்றாலும், எல்லா தவறுகளுமே அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றங்கள் அல்ல. எனவே, மற்றவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளுக்குத் தேவையில்லாமல் கோபப்பட அல்லது புண்படக் கூடாது; மாறாக, மன்னிக்க வேண்டும். எவ்வளவு அடிக்கடி நாம் மன்னிக்க வேண்டும்? “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரமட்டுமோ” என்று இயேசுவிடம் அப்போஸ்தலன் பேதுரு கேட்டார். அதற்கு இயேசு: “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்று பதிலளித்தார்.—மத்தேயு 18:21, 22.
மறுபட்சத்தில், மற்றவர்களைப் புண்படுத்துவதைக் குறைப்பதற்கு நம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள தொடர்ந்து போராடுவது அவசியம். உதாரணமாக, மற்றவர்களிடம் பழகும்போது, சிலசமயங்களில் அவர்களிடம் உணர்ச்சியற்ற, சாதுரியமற்ற, அவமதிக்கிற விதத்தில் நடந்துகொள்கிறீர்களா? இது அவர்களைப் புண்படுத்தலாம். பாதிக்கப்பட்டவர்மீது குற்றஞ்சாட்டி அவருக்கு மன்னிக்கிற குணம் வேண்டுமென நினைப்பதற்குப் பதிலாக, அவரைப் புண்படுத்தியதற்குத் தானே காரணம் என்பதை புண்படுத்தியவர் உணர வேண்டும். இனி புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு, அவர் தனது செயல்களையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். இப்படி செய்தால் அடிக்கடி பிறருடைய உணர்ச்சிகளைப் புண்படுத்துவதைத் தவிர்க்கலாம். பைபிள் நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.” (நீதிமொழிகள் 12:18) நாம் பிறரை புண்படுத்தும்போது, அப்படி செய்யும் எண்ணம் நமக்கு இல்லாதபோதிலும், மன்னிப்பு கேட்பது பிரச்சினையை சுமூகமாக்கி சிறந்த பலனளிக்கிறது.
“சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்” என கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (ரோமர் 14:19) நாம் சாதுரியமாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளும்போது, பின்வரும் நீதிமொழியைக் கடைப்பிடிக்கிறோம்: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.” (நீதிமொழிகள் 25:11) அது மனதிற்கு எவ்வளவு இன்பத்தையும் ஆனந்தத்தையும் தருகிறது! சாந்தத்தோடும் சாதுரியத்தோடும் பேசுவது பிறருடைய பிடிவாதமான மனப்பான்மைகளையும்கூட மாற்றிவிடும்: “இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.”—நீதிமொழிகள் 25:15.
ஆகவே, கடவுளுடைய வார்த்தை நமக்கு இவ்வாறு அறிவுரை அளிக்கிறது: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர் 4:6) ‘உப்பால் சாரமேறியது’ என்றால் நம்முடைய வார்த்தைகள் பிறருக்கு சுவையூட்டுவதாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். இப்படியாக மற்றவர்களைப் புண்படுத்துவதை நாம் குறைக்கலாம். ‘சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்’ என்ற பைபிள் புத்திமதியை சொல்லிலும் செயலிலும் பின்பற்றுவதற்குக் கிறிஸ்தவர்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள்.—1 பேதுரு 3:11.
ஆகவே, பிறருடைய சிறுசிறு பாவங்களுக்கெல்லாம் புண்பட்டு கோபப்படுவதைத் தவிர்ப்பதையே பிரசங்கி 7:9 அர்த்தப்படுத்த வேண்டும். இவை மனித அபூரணத்தால் நேரிடலாம் அல்லது வேண்டுமென்றேகூட செய்யப்படலாம், என்றாலும் அவை கொடிய பாவங்கள் அல்ல. ஆனால் இழைக்கப்பட்ட கொடுமை பெரியதாக இருந்தால், பாதிக்கப்பட்டவர் கோபப்படலாம், தகுந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.—மத்தேயு 18:15-17.
[பக்கம் 14-ன் படம்]
மனந்திரும்பாத இஸ்ரவேலரை பொ.ச. 70-ல் ரோமர்கள் மூலம் யெகோவா அழித்தார்
[பக்கம் 15-ன் படம்]
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை . . . பொற்பழங்களுக்குச் சமானம்”