வாழ்க்கை சரிதை
கிறிஸ்துவின் படைவீரனாக நிலைத்திருந்தேன்
யூரி காப்டாலா சொன்னது
“உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்குன்னு இப்போ நம்புறேன்!” ஒரு சோவியத் ராணுவ அதிகாரி இப்படிச் சொல்வாரென நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை; சரியான நேரத்தில் அவர் அப்படிச் சொன்னது எனக்குத் தெம்பளித்தது. ஏனென்றால் அந்தச் சமயத்தில் நான் நீண்ட காலமாகச் சிறையில் அடைப்பட்டு கிடந்தேன், அதனால் உதவிக்காக யெகோவாவிடம் ஊக்கமாக மன்றாடி வந்திருந்தேன். அப்போது நான் ஒரு பெரும் போராட்டத்தை எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தேன். அதில் நிலைத்திருக்க எனக்குச் சகிப்புத்தன்மையும் உறுதியும் தேவைப்பட்டது.
அக்டோபர் 19, 1962-ல் நான் பிறந்தேன், மேற்கு உக்ரைனில் வளர்ந்தேன். அதே வருடத்தில் யெகோவாவின் சாட்சிகள் என் அப்பாவைச் சந்தித்தார்கள். அப்பாவுடைய பெயரும் யூரிதான். சீக்கிரத்திலேயே அவர் ஒரு யெகோவாவின் சாட்சி ஆனார்; எங்கள் கிராமத்திலேயே அவர்தான் முதல் யெகோவாவின் சாட்சி. யெகோவாவின் சாட்சிகளை எதிர்த்த அதிகாரிகள் அவருடைய நடவடிக்கைகள்மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தார்கள்.
என்றாலும், அக்கம்பக்கத்தார் என்னுடைய பெற்றோர்மீது மதிப்பு மரியாதை வைத்திருந்தார்கள். ஏனென்றால் அருமையான கிறிஸ்தவக் குணங்களை அவர்கள் காட்டினார்கள், மற்றவர்களிடம் கரிசனையுடன் நடந்துகொண்டார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனக்கும் என்னுடைய மூன்று சகோதரிகளுக்கும் சிறு வயதிலிருந்தே கடவுளுடைய அன்பைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். இதனால், ஸ்கூலில் எதிர்ப்பட்ட அநேக சவால்களை என்னால் சமாளிக்க முடிந்தது. அச்சவால்களில் ஒன்று, லெனின்ஸ் அக்டோபர் சில்ட்ரன் என அடையாளம் காட்டும் ஒரு பேட்ஜை எல்லா மாணவர்களும் அணிய வேண்டுமென்பது. நடுநிலை வகித்த நான் அந்த பேட்ஜை அணியவில்லை, அதனால் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவனாக இருந்தேன்.—யோவான் 6:15; 17:16.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, ‘யங் பயனியர்ஸ்’ என்று அழைக்கப்பட்ட கம்யூனிஸ இளைஞர் அமைப்பில் மாணவர்கள் எல்லாரும் சேர வேண்டியிருந்தது. ஒருநாள், அதில் சேருபவர்களுக்காக ஸ்கூல் மைதானத்தில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு வகுப்பிலுள்ள எல்லாரும் அழைத்துச் செல்லப்பட்டனர். என்னைக் கேலி செய்வார்களோ, திட்டுவார்களோ என பயந்தேன். என்னைத் தவிர எல்லாருமே அவரவருடைய புதிய சிவப்பு ஸ்கார்ஃப்பை எடுத்து வந்திருந்தனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மேல்வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு முன்னால் நீண்ட வரிசையில் மாணவர்கள் நின்றனர். எங்கள் கழுத்தில் அந்த ஸ்கார்ஃப்பைக் கட்டிவிடும்படி மேல்வகுப்பு மாணவர்களிடம் சொல்லப்பட்டபோது, என்னை யாரும் கவனிக்காதிருப்பதற்காக தலையைச் சற்றுத் தாழ்த்தியவாறு கீழே பார்த்தபடி நின்றேன்.
தொலைதூர சிறைகளுக்கு
18-வது வயதில், கிறிஸ்தவ நடுநிலை காரணமாக மூன்று வருட சிறை தண்டனை பெற்றேன். (ஏசாயா 2:4) முதல் வருடம், உக்ரைனில் வின்னிட்ஸ்கயா மாகாணத்திலுள்ள ட்ருடோவோயி நகரிலிருந்த சிறையில் இருந்தேன். அங்கு ஏறக்குறைய 30 யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன், நாங்கள் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக அதிகாரிகள் இரண்டிரண்டு பேராக எங்களைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் வேலை செய்ய வைத்தனர்.
ஆகஸ்ட் 1982-ல், வேறுசில கைதிகளுடன் நானும் இடூயார்டு என்ற மற்றொரு யெகோவாவின் சாட்சியும் கைதிகளுக்குரிய ரயில் பெட்டியில் ஏற்றப்பட்டு யூரல் மலைகளின் வடபகுதிக்கு அனுப்பப்பட்டோம். எட்டு நாட்களுக்குப் பிறகு பெர்ம்ஸ்கயா மாகாணத்திலுள்ள சோலிக்காம்ஸ்க் சிறையை அடைந்தோம். அந்த எட்டு நாள் பயணத்தின்போது தாங்க முடியாத உஷ்ணம், பற்றாக்குறைக்கு இடநெருக்கடி வேறு, படாதபாடுபட்டுவிட்டோம். அந்தச் சிறையில் நானும் இடூயார்டும் தனித்தனி அறைகளுக்கு அனுப்பப்பட்டோம். இரண்டு வாரங்களுக்குப்பின், வடக்கே இன்னும் தொலைதூரத்தில் க்ராஸ்னோவிஷெர்ஸ்கி பகுதியிலுள்ள வியோல்ஸ் என்ற கிராமத்திற்கு அனுப்பப்பட்டோம்.
நள்ளிரவில் அங்கு போய்ச்சேர்ந்தபோது ஒரே கும்மிருட்டாக இருந்தது. அந்த இருட்டிலும் படகில் ஏறி ஆற்றைக் கடக்கும்படி ஓர் அதிகாரி எங்களுக்கு உத்தரவிட்டார். எங்களால் ஆற்றையும் பார்க்க முடியவில்லை படகையும் பார்க்க முடியவில்லை! என்றாலும் தட்டுத்தடுமாறி ஒருவழியாகப் படகைக் கண்டுபிடித்தோம். ரொம்ப பயமாக இருந்தாலும் சமாளித்து எப்படியோ ஆற்றைக் கடந்தோம். கரை சேர்ந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி நடந்தோம். அங்கே கூடாரங்கள் சிலவற்றைப் பார்த்தோம். அவை நாங்கள் குடியிருக்கப் போகிற புதிய வீடுகள். என்னுடைய கூடாரம் ஏறக்குறைய 30 கைதிகள் தங்குமளவுக்குப் பெரிதாயிருந்தது. குளிர்காலத்தின்போது வெப்பநிலை சில சமயங்களில் பூஜ்யத்திற்கும் கீழ் 40 டிகிரி செல்ஷியஸுக்குச் சென்றது. அதனால் அந்தக் கூடாரத்தில் எங்களால் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அங்கிருந்த கைதிகளின் முக்கிய வேலை மரங்களை வெட்டிச் சாய்ப்பதாகும், நானோ கைதிகளுக்கு கூடாரங்களை அமைக்கும் வேலையைச் செய்தேன்.
எங்கள் தொலைதூர குடியிருப்பில் ஆன்மீக உணவு எட்டுகிறது
அந்தக் குடியிருப்பில் நான் மாத்திரமே யெகோவாவின் சாட்சியாக இருந்தேன். என்றாலும் யெகோவா என்னைக் கைவிடவில்லை. ஒருநாள் பார்சல் ஒன்றை என் அம்மா அனுப்பியிருந்தார். அவர் இன்னும் மேற்கு உக்ரைனில்தான் வசித்து வந்தார். காவலர் ஒருவர் அந்த பார்சலைத் திறந்தபோது முதலில் அவருடைய கண்ணில்பட்டது ஒரு சிறிய பைபிள்தான். அவர் அதை எடுத்து பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார். எனக்கு வந்த இந்த ஆன்மீகப் பொக்கிஷத்தை அவர் பறிமுதல் செய்துவிடாதிருக்க என்ன சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது, “இது என்ன?” என்று அவர் சட்டென என்னைக் கேட்டார். பதில் சொல்ல யோசிப்பதற்குள், அருகில் நின்றுகொண்டிருந்த ஓர் இன்ஸ்பெக்டர் “ஓ! அதுவா, ஒரு டிக்ஷ்னரி” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. (பிரசங்கி 3:7) அந்த பார்சலில் வேறு என்னவெல்லாம் இருக்கிறதென பார்த்துவிட்டு, அருமையான அந்த பைபிளோடுகூட பார்சலை இன்ஸ்பெக்டர் என்னிடம் கொடுத்தார். எனக்குச் சொல்ல முடியாதளவு சந்தோஷம், அதனால் அந்த பார்சலில் வந்த கொட்டைப் பருப்புகளில் கொஞ்சத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தேன். அந்த பார்சல் கையில் கிடைத்ததுமே, யெகோவா என்னை மறந்துவிடவில்லை என்று அறிந்துகொண்டேன். அவர் எனக்குத் தாராளமாகக் கொடுத்து என் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக்கொண்டார்.—எபிரெயர் 13:5.
தொடர்ந்து பிரசங்கித்தல்
சில மாதங்களுக்குப்பின், ஒரு கிறிஸ்தவ சகோதரரிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏறக்குறைய 400 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள ஒரு சிறையில் இருந்தார். பைபிள் சத்தியங்களைத் தன்னிடம் ஆர்வமாகக் கேட்டிருந்த ஒருவர் இப்போது நான் இருக்கும் சிறையில் இருக்கிறாரா எனத் தேடிப் பார்க்கும்படி அதில் குறிப்பிட்டிருந்தார். அப்படி நேரடியாக எழுதியது புத்திசாலித்தனம் அல்ல, ஏனெனில் எங்களுக்கு வரும் கடிதங்களெல்லாம் வாசிக்கப்பட்ட பிறகே எங்களிடம் தரப்பட்டன. நான் நினைத்தது நடந்தது; அதிகாரிகளில் ஒருவர் என்னை அவருடைய அலுவலகத்திற்கு வரும்படி உத்தரவிட்டார், பிரசங்கிக்கக் கூடாதென்று கடுமையாய் எச்சரித்தார். பிறகு, என் மதத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேச மாட்டேன் என்று எழுதப்பட்டிருந்த ஓர் ஆவணத்தில் கையெழுத்திடும்படி கட்டளையிட்டார். அதற்கு, ‘நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பது இங்குள்ள எல்லாருக்கும் ஏற்கெனவே தெரியும், அப்படியிருக்கும்போது எதற்காக இதில் கையெழுத்துப் போடச் சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. என்னைச் சிறையில் அடைத்திருப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள மற்ற கைதிகள் விரும்புகிறார்கள், அவர்களிடம் ஒன்றுமே சொல்லாமல் சும்மா இருக்க முடியுமா?’ என்று கேட்டேன். (அப்போஸ்தலர் 4:20) அவருடைய உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல என்பதைப் புரிந்துகொண்ட அந்த அதிகாரி என்னை அங்கிருந்து வெளியேற்றத் தீர்மானித்தார். இதனால் வேறொரு முகாமுக்கு அனுப்பப்பட்டேன்.
200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த வாயா கிராமத்துக்கு மாற்றப்பட்டேன். அங்கிருந்த மேற்பார்வையாளர்கள் என் கிறிஸ்தவ நிலைநிற்கையை மதித்ததால், ராணுவத்துடன் சம்பந்தப்படாத வேலையை எனக்குக் கொடுத்தார்கள்; முதலில் தச்சு வேலையையும் பிறகு எலெக்ட்ரிக்கல் வேலையையும் கொடுத்தார்கள். ஆனால் இந்த வேலைகளிலும் சில பிரச்சினைகள் இருந்தன. ஒரு சமயம், என் கருவிகளை எடுத்துக்கொண்டு கிராம கழகத்திற்குப் போகச் சொன்னார்கள். அங்கிருந்த படைவீரர்கள் என்னைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டார்கள். ஏனென்றால், பல வித்தியாசமான ராணுவ சின்னங்களை அலங்கரித்த லைட்டுகளை சரிவர எரிய வைக்க முடியாமல் அவர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். சிவப்பு சேனை நாள் கொண்டாட்டத்திற்கு வேண்டிய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டிருந்ததால், அந்த லைட்டுகளை எரிய வைப்பதில் உதவி செய்வேன் என்று எதிர்பார்த்தார்கள். என்ன செய்வதென்று ஜெபத்துடன் யோசித்த பிறகு, இந்த மாதிரியான வேலையை என்னால் செய்ய முடியாதென்று சொன்னேன். என் கருவிகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர்கள் என்னைப் பற்றி துணை இயக்குநரிடம் புகார் செய்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால், என்னைப் பற்றிய புகாரையெல்லாம் கேட்ட பின் அவர் இவ்வாறு பதிலளித்தார்: “அவன் அப்படிச் சொன்னதற்குப் பாராட்ட வேண்டும். தன் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன்.”
எதிர்பாராத இடத்திலிருந்து ஊக்குவிப்பு
ஜூன் 6, 1984-ல், சரியாக மூன்று வருட சிறை வாசத்திற்குப் பின், விடுதலையானேன். உக்ரைனுக்குத் திரும்பி வந்ததும், முன்னாள் கைதி என்று படைத்துறையில் என்னுடைய பெயரைப் பதிவுசெய்ய வேண்டியிருந்தது. ஆறு மாதங்களுக்குள் மறுபடியும் விசாரணை செய்யப்படுவேன் என்பதால் அந்த மாகாணத்தை விட்டே சென்றுவிடும்படி அதிகாரிகள் சொன்னார்கள். அதனால் உக்ரைனை விட்டு வெளியேறினேன், அதன் பிறகு லாட்வியாவில் வேலை கிடைத்தது. அதன் தலைநகரான ரிகாவிலும் அதற்கு அருகேயும் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகளின் ஒரு சிறிய தொகுதியுடன் சில காலம் கூட்டுறவு கொண்டேன், அங்கு பிரசங்கிக்கவும் செய்தேன். ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாக, ராணுவ சேவையில் சேரும்படி மறுபடியும் எனக்கு உத்தரவு வந்தது. படைத்துறையில் ஆள்சேர்க்கும் அலுவலகத்திற்குச் சென்று, ஏற்கெனவே ராணுவ சேவையை மறுத்திருப்பதை அங்கிருந்த அதிகாரியிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், “உன் மனசில நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே? வா, வந்து படைத் துணைத் தலைவர் கிட்ட இதையெல்லாம் சொல்லு பார்க்கலாம்!” என்று கத்தினார்.
இரண்டாம் மாடியில் ஓர் அறையில் நீண்ட மேசைக்குப் பின் உட்கார்ந்திருந்த படைத் துணைத் தலைவரிடம் அவர் என்னை அழைத்துச் சென்றார். என் நிலைநிற்கையைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொல்கையில், காதுகொடுத்துக் கேட்டார். பிறகு, ராணுவ கமிட்டி என்னை அழைப்பதற்கு முன்பு என் தீர்மானத்தைப் பற்றி திரும்பவும் சிந்தித்துப் பார்க்க எனக்குப் போதிய கால அவகாசம் இருப்பதாகச் சொன்னார். படைத் துணைத் தலைவர் அலுவலகத்தைவிட்டு வெளியே வருகையில், என்னை முதலில் திட்டின அந்த அதிகாரி, “உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்குன்னு இப்போ நம்புறேன்!” என்று மனந்திறந்து சொன்னார். ராணுவ கமிட்டிக்கு முன் ஆஜரானபோது, என் நிலைநிற்கையைப் பற்றி திரும்பவும் எடுத்துச் சொன்னேன், அதனால் அப்போதைக்கு என்னை விட்டுவிட்டார்கள்.
அந்தச் சமயத்தில் நான் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். ஒருநாள் சாயங்காலம், கதவை யாரோ மெதுவாகத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது, சூட் அணிந்து, கையில் சிறிய பெட்டியோடு ஒருவர் நின்றிருந்தார். அவர் தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார்: “நான் தேசிய பாதுகாப்பு குழுவிலிருந்து வருகிறேன், உனக்குச் சில பிரச்சினைகள் இருக்கிறதென்றும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படப் போகிறாய் என்றும் கேள்விப்பட்டேன்.” “ஆமாம், நீங்கள் சொன்னது சரிதான்” என்றேன். அதற்கு அவர், “நீ எங்களோடு சேர்ந்துகொண்டால் நாங்கள் உனக்கு உதவுவோம்.” “இல்லை, அது முடியவே முடியாது, நான் என் கிறிஸ்தவ நம்பிக்கைகளை விட்டு விலகவே மாட்டேன்” என்று சொன்னேன். இனி என்ன சொன்னாலும் என்னைச் சம்மதிக்க வைக்கவே முடியாது என்பதை அறிந்து அவர் சென்றுவிட்டார்.
மீண்டும் சிறைச்சாலையும், பிரசங்க வேலையும்
ஆகஸ்ட் 26, 1986-ல், ரிகா தேசிய நீதிமன்றம் நான்கு வருடம் கட்டாய உழைப்பு முகாமிற்குச் செல்லும்படி எனக்குத் தீர்ப்பளித்தது, அதனால் ரிகா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டேன். இன்னும் 40 கைதிகளுடன் ஒரு பெரிய அறையில் அடைக்கப்பட்டேன், அந்த அறையிலிருந்த ஒவ்வொருவருக்கும் பிரசங்கிக்க முயற்சி செய்தேன். சிலர் கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார்கள்; மற்றவர்களோ ஏளனமாகச் சிரித்தார்கள். அங்கிருந்த ஆண்கள் கும்பல்கும்பலாகச் சேர்ந்திருந்ததைக் கவனித்தேன்; இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்தக் கும்பல்களின் தலைவர்கள் என்னிடம் வந்து அவர்கள் ஏற்படுத்திய சட்டங்களுக்கு நான் கட்டுப்படாததால் அவர்களிடம் பிரசங்கிக்கக் கூடாது என்று சொன்னார்கள். அந்தக் காரணத்திற்காகத்தான், அதாவது வித்தியாசப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுவதால்தான் நான் சிறையில் இருக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன்.
ஆனாலும், பிரசங்கிப்பதை நான் விடவில்லை, கொஞ்சம் உஷாராகவே பிரசங்கித்தேன், ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டிய சிலரைக் கண்டுபிடித்தபோது, அவர்களில் நான்கு பேருக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். படிப்பின்போது, அடிப்படை பைபிள் போதனைகளை அவர்கள் ஒரு நோட்டில் எழுதிக்கொண்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, வல்மியிராவிலுள்ள பலத்த பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டேன். அங்கு எலெக்ட்ரிஷனாக வேலை செய்தேன். அங்கு மற்றொரு எலெக்ட்ரிஷனுக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். அவர் நான்கு வருடங்களுக்குப் பின் யெகோவாவின் சாட்சி ஆனார்.
மார்ச் 24, 1988-ல் அந்த முகாமிலிருந்து, அருகிலிருந்த குடியிருப்பு முகாமுக்கு மாற்றப்பட்டேன். அது உண்மையிலேயே எனக்கு நல்லதாயிற்று, ஏனென்றால் அங்கே எனக்கு இன்னுமதிக சுதந்திரம் இருந்தது. பல்வேறு இடங்களில் கட்டடப் பணி செய்ய அனுப்பப்பட்டதால், பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருந்தேன். அடிக்கடி அந்த முகாமுக்கு வெளியே வெகு தூரம் சென்று, இருட்டிப்போகும் வரை பிரசங்கித்தாலும் தங்குமிடத்திற்குத் திரும்பி வருகையில் எனக்கு எந்தத் தொந்தரவுமே ஏற்பட்டதில்லை.
என்னுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். யெகோவாவின் சாட்சிகளில் சிலர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் வசித்துவந்தார்கள், ஆனால் இந்தக் குடியிருப்புப் பகுதியில் வில்மா குரூமின்னா என்ற ஒரேயொரு வயதான சகோதரி மட்டுமே இருந்தார். சகோதரி குரூமின்னாவும் நானும் நிறைய இளைஞர்களுக்கு பைபிள் படிப்புகளை நடத்தத் தொடங்கினோம். எப்போதாவது ரிகாவிலிருந்து சகோதர சகோதரிகள் வந்து ஊழியம் செய்தார்கள்; லெனின்கிராடிலிருந்தும்கூட (இன்று செ, பீட்டர்ஸ்பர்க்) ஒழுங்கான பயனியர்கள் சிலர் வந்தார்கள். யெகோவாவின் உதவியால் பல பேருக்கு பைபிள் படிப்பு நடத்தினோம்; விரைவில் நான் பயனியர் ஆனேன், ஒரு மாதத்தில் 90 மணிநேரம் ஊழியம் செய்தேன்.
ஏப்ரல் 7, 1990-ல், வல்மியிராவிலுள்ள மக்கள் மன்றத்தில் என்னுடைய வழக்கு விசாரணைக்கு வரவிருந்தது. விசாரணையின்போதுதான், அரசுதரப்பு வழக்கறிஞர் யாரென்பது தெரியவந்தது. முன்பு ஒருசமயம் நான் பைபிளைப் பற்றிப் பேசியிருந்த ஓர் இளைஞர் அவர். என்னை அடையாளம் கண்டுகொண்டு புன்முறுவல் செய்தார், ஒன்றும் பேசவில்லை. அன்று நடந்த விசாரணையின்போது நீதிபதி என்னிடம் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது: “யூரி, நான்கு வருஷத்துக்கு முன் உனக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை சட்டப்படி சரி அல்ல. அன்று உன்னைக் குற்றவாளியென தீர்ப்பளித்திருக்கக்கூடாது.” இதைக் கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை, அதன்பின் விடுதலையானேன்!
கிறிஸ்துவின் படைவீரன்
ஜூன் 1990-ம் வருடம், ரிகாவில் குடியேற மறுபடியும் குடியுரிமை அனுமதிச் சீட்டைப் பெற வேண்டியிருந்தது, அதற்காக படைத்துறை அலுவலகத்தில் என் பெயரைப் பதிவுசெய்ய வேண்டியிருந்தது. ராணுவத்தில் சேர மாட்டேன் என்று படைத் துணைத் தலைவரிடம் சொல்ல நான்கு வருடங்களுக்கு முன் சென்றிருந்த அதே அலுவலகத்திற்கு மீண்டும் சென்றேன், அதே நீண்ட மேசை அங்கிருந்தது. இந்த முறை என்னை வரவேற்க அவர் எழுந்து நின்றார், கைகுலுக்கிவிட்டு, “இதெல்லாம் உனக்கு நடந்திருக்கவே கூடாது. இதற்காக நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன்” என்றார்.
அதற்கு, “நான் கிறிஸ்துவின் படைவீரன், என்னுடைய வேலையைச் செய்து முடிக்க வேண்டும். கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவோருக்கு அளிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் நித்திய எதிர்காலத்தையும் பைபிளின் உதவியோடு நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்” என்றேன். (2 தீமோத்தேயு 2:3, 4) “கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் ஒரு பைபிளை வாங்கினேன், இப்போது அதை வாசித்து வருகிறேன்” என்றார் அந்தப் படைத் துணைத் தலைவர். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்a என்ற புத்தகம் அப்போது என்னிடம் இருந்தது. கடைசி நாட்களின் அடையாளத்தை விளக்குகிற அதிகாரத்திற்குத் திருப்பி, பைபிள் தீர்க்கதரிசனம் நம்முடைய காலத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை அவருக்கு விளக்கினேன். மனநிறைவோடு மறுபடியும் கைகுலுக்கிவிட்டு, என் வேலையில் வெற்றிபெற வாழ்த்தினார்.
இந்தச் சமயத்திற்குள்ளாக லாட்வியாவில், அடையாள அர்த்தமுள்ள வயல் விளைந்து, அறுப்புக்கு உண்மையிலேயே தயாராயிருந்தது. (யோவான் 4:35) 1991-ல் சபை மூப்பராகச் சேவை செய்யத் தொடங்கினேன். அந்த நாட்டில் மொத்தம் இரண்டு மூப்பர்கள் மாத்திரமே இருந்தார்கள்! ஒரு வருஷத்திற்கு பின், லாட்வியாவிலிருந்த அந்த ஒரே சபை இரண்டு சபைகளாக, அதாவது, ஒன்று லாட்வியா மொழி பேசுவோருக்கும் மற்றொன்று ரஷ்ய மொழி பேசுவோருக்கும் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ரஷ்ய மொழி சபையில் சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எங்கள் சபை அந்தளவு வேகமாக வளர்ந்ததால், அதற்கு அடுத்த வருஷம் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டது! கடந்து வந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கையில் யெகோவாதாமே தம்முடைய செம்மறியாடுகளைத் தம் அமைப்புக்கு வழிநடத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
1998-ல், யெல்கவா என்ற இடத்தில் விசேஷ பயனியராகச் சேவை செய்ய நியமிப்பைப் பெற்றேன். இது ரிகாவுக்கு தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். அதே வருடம், ரஷ்ய மொழியில் நடத்தப்பட்ட முதல் ஊழியப் பயிற்சி பள்ளியில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றேன். இது ரஷ்யாவில், செ. பீட்டர்ஸ்பர்க்குக்கு அருகிலுள்ள சோல்நியெச்னாயி என்ற இடத்தில் நடத்தப்பட்டது. இப்பள்ளிக்கு லாட்வியாவிலிருந்து முதன்முதலாக அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஊழியத்தில் வெற்றி காண்பதற்கு ஆட்களிடம் அன்பு காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பள்ளியிலிருந்து தெரிந்துகொண்டேன். கற்றுக்கொண்ட விஷயங்களைவிட, பெத்தேல் குடும்பத்தாரும் பள்ளி போதகர்களும் காட்டிய அன்பும் கவனிப்பும்தான் என்னை ரொம்பவுமே கவர்ந்தன.
2001-ல் கரினா என்ற அழகிய கிறிஸ்தவப் பெண்ணை நான் மணம் செய்தபோது, என் வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டினேன். கரினாவும் விசேஷ பயனியர் ஊழியத்தில் என்னுடன் சேர்ந்துகொண்டாள். ஒவ்வொரு நாளும் வெளி ஊழியம் முடித்து வீடு திரும்புகையில் அவளுடைய முகத்தில் தெரியும் சந்தோஷம் எனக்கு ஊக்கமூட்டுகிறது. யெகோவாவைச் சேவிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. கம்யூனிஸ ஆட்சியில் பட்ட கஷ்டங்களெல்லாம் யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்க எனக்குக் கற்பித்தன. யெகோவாவிடம் நட்புறவு வைக்கவும் அவருடைய பேரரசுரிமையை ஆதரிக்கவும் விரும்புகிற ஒருவருக்கு எந்தத் தியாகமும் அவ்வளவு பெரிதல்ல. யெகோவாவை அறிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவது என் வாழ்க்கையை நோக்கமுள்ளதாக ஆக்கியிருக்கிறது. ‘கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனாய்’ யெகோவாவுக்குச் சேவை செய்வது எனக்கு கௌரவமிக்க ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது.—2 தீமோத்தேயு 2:3, பொது மொழிபெயர்ப்பு.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, தற்போது அச்சில் இல்லை.
[பக்கம் 10-ன் படம்]
நான்கு வருடம் கட்டாய உழைப்பு முகாமிற்குச் செல்லும்படி தீர்ப்பளிக்கப்பட்டு, ரிகாவிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்
[பக்கம் 12-ன் படம்]
ஊழியத்தில் கரினாவுடன்