பெற்றோர்களே—உங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய எதிர்காலத்தை விரும்புகிறீர்கள்?
‘வாலிபரே, கன்னிகைகளே, . . . அவர்கள் யெகோவாவின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்.’ —சங்கீதம் 148:12, 13.
1. பிள்ளைகள்மீது பெற்றோருக்கு என்ன கவலைகள் ஏற்படுகின்றன?
எந்தப் பெற்றோர்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை? குழந்தை பிறந்த தருணம் முதல்—ஒருவேளை அதற்கும் முன்பிருந்தே—பிள்ளையின் நலனைப் பற்றி பெற்றோர் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். அவன் ஆரோக்கியமாக இருப்பானா? அவனுக்கு இயல்பான வளர்ச்சி இருக்குமா? என்றெல்லாம் யோசிக்கிறார்கள். பிள்ளை வளர்ந்து வருகையிலோ, இன்னும் அதிகமான கவலைகள் சேர்ந்துவிடுகின்றன. மொத்தத்தில், தங்களுடைய பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததையே பெற்றோர் விரும்புகிறார்கள்.—1 சாமுவேல் 1:11, 27, 28; சங்கீதம் 127:4-6.
2. பிள்ளைகள் பெரியவர்களாக வளரும்போது செழித்தோங்க வேண்டுமென்ற பலமான ஆசை ஏன் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது?
2 என்றாலும், இன்றைய உலகில், பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததைக் கொடுப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. பெற்றோர்கள் பலர் அநேக கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்—போர்கள், அரசியல் கிளர்ச்சிகள், பொருளாதார கஷ்டங்கள், உடல் மற்றும் உணர்ச்சி ரீதியிலான காயங்கள், இன்னும் பிறவற்றை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இந்தக் கஷ்டங்களையெல்லாம் தங்களுடைய பிள்ளைகளும் படக்கூடாது என்று அவர்கள் உள்ளப்பூர்வமாக ஆசைப்படுவது இயல்பானதே. செல்வச்செழிப்பான நாடுகளில், தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடைய பிள்ளைகள் நல்ல வேலை பார்த்து வாழ்க்கையில் செழித்தோங்குவது போல் தோன்றுவதைப் பெற்றோர்கள் பார்க்கலாம். ஆகவே, தங்களுடைய பிள்ளைகளும் பெரியவர்களாக வளரும்போது ஓரளவுக்காவது சொகுசான வாழ்க்கையை, திருப்தியான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமென்ற தூண்டுதல் ஏற்படுகிறது.—பிரசங்கி 3:13.
நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தல்
3. கிறிஸ்தவர்கள் என்ன தெரிவு செய்திருக்கிறார்கள்?
3 இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கவே தெரிவு செய்திருக்கிறார்கள். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்ற இயேசுவின் வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் பதிய வைத்திருக்கிறார்கள். (லூக்கா 9:23; 14:27) ஆம், கிறிஸ்தவ வாழ்க்கையில் சுயதியாகம் உட்பட்டுள்ளது. ஆனால் அது வறுமையோ துன்பமோ நிறைந்த வாழ்க்கை அல்ல. மாறாக, மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கை—நல்ல வாழ்க்கை—ஏனென்றால் அது கொடுப்பதை உட்படுத்துகிறது, அதனால் இயேசு இவ்வாறு கூறினார்: ‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்.’—அப்போஸ்தலர் 20:35, NW.
4. எதை நாடும்படி இயேசு தமது சீஷர்களை அறிவுறுத்தினார்?
4 இயேசுவின் நாளில் ஜனங்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வந்தார்கள். வயிற்றுப்பாட்டுக்காக கடினமாக உழைத்ததோடு, ரோமர்களுடைய கொடுங்கோல் ஆட்சியையும் அன்றிருந்த மதவாதிகளுடைய கெடுபிடியான கொள்கைகளால் ஒடுக்குதலையும் சகிக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 23:2-4) என்றாலும், இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட அநேகர் தனிப்பட்ட நாட்டங்களை—தங்களுடைய தொழில்களையும்கூட—விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். (மத்தேயு 4:18-22; 9:9; கொலோசெயர் 4:14) அந்த சீஷர்கள் வேண்டுமென்றே தங்களுடைய எதிர்காலத்தை பாழ்படுத்தினார்களா? இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: ‘என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.’ (மத்தேயு 19:29) பரலோகப் பிதா அவர்களுடைய தேவைகளை அறிந்திருக்கிறார் என தமது சீஷர்களுக்கு இயேசு உறுதியளித்தார். ஆகவே அவர்களிடம் இவ்வாறு அறிவுறுத்தினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:31-33.
5. கடவுள் தமது ஊழியர்களுடைய தேவையைக் கவனித்துக்கொள்வார் என்ற உறுதியைப் பற்றி பெற்றோர்கள் சிலர் எப்படி உணருகிறார்கள்?
5 இன்றைக்கும் நிலைமைகள் அதேபோல்தான் இருக்கின்றன. நம்முடைய தேவைகளை யெகோவா அறிந்திருக்கிறார். ஆகவே, வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பவர்கள், முக்கியமாக முழுநேர சேவையை நாடுகிறவர்கள், தங்களை யெகோவா கவனித்துக்கொள்வார் என்ற அதே உறுதியைப் பெற்றிருக்கிறார்கள். (மல்கியா 3:6, 16; 1 பேதுரு 5:7) ஆனால் பெற்றோர்கள் சிலர், இந்த விஷயத்தில் குழப்பமாக இருக்கிறார்கள். ஒரு புறத்தில், தங்களுடைய பிள்ளைகள் யெகோவாவின் சேவையில் முன்னேறி வருவதை, ஒருவேளை காலப்போக்கில் முழுநேர சேவையில் ஈடுபடுவதை, பார்க்க விரும்புகிறார்கள். மறு புறத்தில், இன்றைய உலகில் நிலவும் பொருளாதார சூழலையும் வேலை வாய்ப்பையும் யோசித்துப் பார்த்துவிட்டு, நல்ல வேலைக்கு ஏற்ற தகுதிகளைப் பெற அல்லது கஷ்டம் வரும்போது சார்ந்திருப்பதற்கு ஏதாவது ஒன்று கைவசம் வைத்திருக்க பிள்ளைகளுக்கு முதலில் நல்ல படிப்பு முக்கியமென நினைக்கிறார்கள். இத்தகைய பெற்றோர்களுக்கு, நல்ல படிப்பு என்றால் மனதுக்கு வருவது உயர் கல்வியே.
எதிர்காலத்திற்காக தயார் செய்தல்
6. இந்தக் கட்டுரையில், “உயர் கல்வி” என்பது என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
6 நாட்டுக்கு நாடு கல்வி திட்டம் மாறுபடுகிறது. உதாரணமாக, இந்தியாவில், அடிப்படை கல்வி என்பது அரசு பள்ளிகளில் 10 அல்லது 12 வருடங்கள் கல்வி பயிலுவதாகும். அதற்குப்பின், கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ மாணவர்கள் சேர்ந்து மூன்று அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் படிக்க விரும்பலாம். இதன் மூலம் மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற பாடத் திட்டங்களில் இளங்கலைப் பட்டமோ முதுகலைப் பட்டமோ பெறலாம். இந்தக் கட்டுரையில், “உயர் கல்வி” என்பது இத்தகைய பல்கலைக்கழக படிப்பையே அர்த்தப்படுத்துகிறது. மறுபட்சத்தில், தொழில்நுட்ப கல்வியும் தொழிற்கல்வியும் வழங்கும் பள்ளிகளும் இருக்கின்றன; இவை குறுகிய கால பாடத் திட்டங்களாகும், பள்ளி இறுதி ஆண்டில் ஏதாவது தொழிலுக்கு சர்டிஃபிகேட் அல்லது டிப்ளமா கிடைக்கும்.
7. பள்ளிகளில் மாணவர்கள் எதிர்ப்படும் அழுத்தங்கள் என்ன?
7 உயர் கல்விக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதே இன்றைய போக்கு. இந்த இலக்கை எட்டுவதற்காக, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற உதவும் பாடத் திட்டங்களின் மீதே பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகள் கவனத்தை ஊன்றுகின்றன. மாணவர்களுக்கு வேலை கிடைக்க உதவும் பாடங்களில் அதிக கவனத்தை ஊன்றுவதில்லை. மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு இலக்கு வைக்கும்படி ஆசிரியர்கள், ஆலோசகர்கள், சக மாணவர்கள் ஆகியோரிடமிருந்து மாணவர்கள் இன்றைக்கு பயங்கர அழுத்தத்தை எதிர்ப்படுகிறார்கள்; அவர்கள் பட்டம் பெற்று நல்ல சம்பளம் தரும் வேலைகளில் சேர இவற்றை ஒரு நுழை வாயிலாக கருதும்படி தூண்டப்படுகிறார்கள்.
8. கிறிஸ்தவ பெற்றோர்கள் எதிர்ப்படும் தெரிவுகள் என்ன?
8 அப்படியானால், கிறிஸ்தவ பெற்றோர்கள் என்ன செய்யலாம்? உண்மைதான், தங்களுடைய பிள்ளைகள் பள்ளியில் வெற்றி பெறவும் பிற்காலத்தில் தங்கள் சொந்த காலில் நிற்பதற்குத் தேவையான திறமைகளைக் கற்றுக்கொள்ளவுமே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். (நீதிமொழிகள் 22:29) ஆனால், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், வெற்றி பெற வேண்டுமென்ற போட்டி மனப்பான்மை பிள்ளைகளைச் செல்வாக்குச் செலுத்த அவர்கள் விட்டுவிட வேண்டுமா? சொல்லிலோ செயலிலோ தங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட இலக்குகளை அவர்கள் வைக்கிறார்கள்? பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களை பெரிய படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் சிலர் மிகக் கடினமாக உழைத்து பணத்தை சேமித்து வைக்கிறார்கள். இதற்காக சிலர் கடனும்கூட வாங்குகிறார்கள். என்றாலும், இத்தகைய தீர்மானம் எடுப்பதால் வரும் நஷ்டத்தை ரூபாய் நோட்டுகளில் மதிப்பிட முடியாது. இன்று உயர் கல்விக்கு என்ன விலையை செலுத்த வேண்டியுள்ளது?—லூக்கா 14:28-33.
உயர் கல்வியை நாடுவதற்கு செலுத்தும் விலை
9. இன்று உயர் கல்வி கற்பதற்கு செலுத்தும் விலையைப் பற்றி என்ன சொல்லலாம்?
9 செலவைப் பற்றி யோசிக்கும்போது, நாம் பொதுவாக பணச் செலவைப் பற்றித்தான் யோசிக்கிறோம். சில நாடுகளில், உயர் கல்வியை அரசாங்கமே வழங்குகிறது, தகுதிவாய்ந்த மாணவர்கள் கல்வி கட்டணம் எதுவுமே செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், பெரும்பாலான இடங்களில், உயர் கல்வி கற்க அதிக செலவாகிறது, அது இன்னும் அதிகமாகிக் கொண்டேயும் வருகிறது. நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு கூறுகிறது: “உயர் கல்வியானது வாய்ப்பு எனும் கதவுகளைத் திறப்பதாக கருதப்பட்டு வந்தது. இப்பொழுதெல்லாம் அது செல்வந்தருக்கும் குறைந்த செல்வந்தருக்கும் இடையே உள்ள பாகுபாட்டையே உறுதிப்படுத்துகிறது.” வேறு வார்த்தைகளில் சொன்னால், தரமான உயர் கல்வி என்பது பணக்காரருக்கும் செல்வாக்கு பெற்றவருக்குமே உரிய ஒன்றாக ஆகிவருகிறது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு இத்தகைய கல்வியை அளிப்பதன் மூலம் இந்த உலகில் அவர்களும் அதிக செல்வந்தராகவும் செல்வாக்கு பெற்றவராகவும் ஆவதற்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள். இத்தகைய இலக்கை கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன் வைக்க வேண்டுமா?—பிலிப்பியர் 3:7, 8; யாக்கோபு 4:4.
10. உயர் கல்வி எப்படி தற்போதைய ஒழுங்குமுறையை முன்னேற்றுவிப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது?
10 இலவசமாக உயர் கல்வி கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலும்கூட, ஏதாவது மறைமுகமான உத்தரவாதங்கள் இருக்கலாம். உதாரணமாக, தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில், அரசாங்கம் நடத்தும் “பள்ளியின் அமைப்பு முறை பிரமிடு பாணியில் இருக்கிறது, அது வேண்டுமென்றே தலைசிறந்த மாணவர்களை மேல் நிலைக்குத் தள்ளுகிறது” என தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவிக்கிறது. “மேல் நிலை” என்பது உலகிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், அதாவது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களிலும் ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஐவி லீக்கில் உட்படும் பிரபல நிறுவனங்களிலும் படிப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஏன் இந்த அரசாங்கம் இத்தகைய நீண்டகால திட்டத்தை வழங்குகிறது? “தேசிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு” என அந்த அறிக்கை கூறுகிறது. கல்வி கிடைப்பதென்னவோ இலவசம்தான், ஆனால் இந்த உலகத்தை முன்னேற்றுவிக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதே அந்த மாணவர்கள் செலுத்தும் விலை. இத்தகைய வாழ்க்கையைத்தான் இந்த உலகம் அதிகமதிகமாய் நாடுகிறது. இதைத்தான் கிறிஸ்தவ பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு விரும்புகிறார்களா?—யோவான் 15:19; 1 யோவான் 2:15-17.
11. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் காணப்படும் மதுபான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேட்டைப் பற்றி அறிக்கைகள் என்ன காட்டுகின்றன?
11 சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் சூழல். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்கள் மோசமான நடத்தைக்குப் பேர்போனவையாக இருக்கின்றன—போதைப்பொருள் மற்றும் மதுபான துஷ்பிரயோகம், ஒழுக்கயீனம், ஏமாற்றுதல், ‘ராகிங்’ என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மதுபான துஷ்பிரயோகத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். போதை ஏறுவதற்காகவே தொடர்ந்து குடிக்கும் ‘பின்ஞ்’ குடிப்பழக்கத்தைப் பற்றி அறிக்கை செய்கையில், நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “[அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களில்] சுமார் 44 சதவீதத்தினர் இரண்டுவார காலப்பகுதியில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது ‘பின்ஞ்’ குடிப்பழக்கத்தில் ஈடுபட்டார்கள்.” இதே பிரச்சினை ஆஸ்திரேலியாவிலும் பிரிட்டனிலும் ரஷ்யாவிலும் மற்ற இடங்களிலும் இளைஞர் மத்தியில் சர்வசாதாரணமாக காணப்படுகிறது. பாலியல் ஒழுக்கக்கேட்டைப் பொறுத்ததில், “ஒருதடவை போய்விட்டு வருவதே” இன்று மாணவர்கள் மத்தியில் பேசப்படும் பேச்சாகும். இது, “ஒருதடவை பாலுறவு கொள்வதை—முத்தத்திலிருந்து பாலுறவு வரை எல்லாவற்றையும்—குறிக்கிறது; இப்படி ஒருமுறை பழகிவிட்டு, பிறகு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுகூட கிடையாது” என நியூஸ்வீக் சொல்கிறது. 60 முதல் 80 சதவீதம் வரையிலான மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. “நீங்கள் ஒரு ‘நார்மல்’ காலேஜ் ஸ்டூடன்ட்டாக இருந்தால், இதில் ஈடுபடுகிறீர்கள்” என ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார்.—1 கொரிந்தியர் 5:11; 6:9, 10.
12. கல்லூரி மாணவர்கள் எதிர்ப்படும் அழுத்தங்கள் யாவை?
12 மோசமான சூழலோடுகூட, பள்ளிப்பாடமும் தேர்வுகளும் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. இயல்பாகவே, பரீட்சையில் தேர்ச்சி பெற மாணவர்கள் படிக்க வேண்டும், வீட்டுப் பாடம் செய்ய வேண்டும். கல்லூரிக்குச் செல்லும்போது சிலர் பகுதிநேர வேலையாவது செய்ய வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் அவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகின்றன. அப்படியானால், ஆன்மீக காரியங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும்? அழுத்தங்கள் அதிகரிக்கும்போது, எதை அவர்கள் விட்டுவிடுவார்கள்? அப்போதும் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் தருவார்களா, அல்லது அவற்றை ஒதுக்கித் தள்ளிவிடுவார்களா? (மத்தேயு 6:33) கிறிஸ்தவர்களை பைபிள் இவ்வாறு உந்துவிக்கிறது: “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:15, 16) கல்லூரி படிப்பு தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொண்டதால் அல்லது கல்லூரியில் வேதப்பூர்வமற்ற நடத்தையில் ஈடுபடும் கண்ணியில் சிக்கிக்கொண்டதால், சிலர் விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போயிருப்பது எவ்வளவு வருந்தத்தக்கது!
13. கிறிஸ்தவ பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்விகள் என்ன?
13 உண்மைதான், ஒழுக்கக்கேடும் மோசமான நடத்தையும் அழுத்தங்களும் கல்லூரிக்கோ பல்கலைக்கழகத்திற்கோ மட்டுமே உரிய விஷயங்கள் அல்ல. என்றாலும், உலகப்பிரகாரமான இளைஞர்கள் பலர் இவற்றையெல்லாம் வெறுமனே கல்வியின் பாகம் என்றும் இவை அப்படியொன்றும் பெரிய விஷயங்கள் அல்ல என்றும் கருதுகிறார்கள். கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை மூன்று அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு அத்தகைய சூழலில் தெரிந்தே விட்டுவிட வேண்டுமா? (நீதிமொழிகள் 22:3; 2 தீமோத்தேயு 2:22) இளைஞர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளோடு ஒப்பிடுகையில், அதில் உட்பட்டிருக்கும் ஆபத்துகள் கவனியாமல் விடுவதற்குத் தகுதியானவையா? மிக முக்கியமாக, இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முதலில் வைக்க வேண்டிய காரியங்களைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறார்கள்?a (பிலிப்பியர் 1:10, NW; 1 தெசலோனிக்கேயர் 5:21) இந்தக் கேள்விகளுக்கும் வேறொரு நகரத்திற்கு அல்லது நாட்டிற்கு பிள்ளைகளைப் படிக்க அனுப்புவதால் வரும் ஆபத்துகளுக்கும் பெற்றோர்கள் ஜெபத்தோடு ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
என்ன மாற்று வழிகள்?
14, 15. (அ) பிரபலமான கருத்துகள் நிலவுகிறபோதிலும், இன்றைக்கு பைபிள் தரும் எந்த அறிவுரை பொருந்துகிறது? (ஆ) இளைஞர்கள் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
14 பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதே இளைஞர்களுடைய வெற்றிக்கு ஒரே வழி என்ற கருத்து இன்று பிரபலமாக இருக்கிறது. என்றாலும், பிரபலமான கருத்தை பின்பற்றுவதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள் பின்வரும் பைபிள் புத்திமதிக்குச் செவிசாய்க்கிறார்கள்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) இளைஞராக இருந்தாலும்சரி முதியோராக இருந்தாலும்சரி, முடிவு காலத்தின் கடைசி கட்டத்தில் வாழும் கடவுளுடைய மக்களுக்கு அவருடைய சித்தம் என்ன? தீமோத்தேயுவுக்கு பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை [“முழுமையாக,” NW] நிறைவேற்று.” இந்த வார்த்தைகள் இன்றுள்ள நம் அனைவருக்கும் நிச்சயம் பொருந்துகின்றன.—2 தீமோத்தேயு 4:5.
15 இந்த உலகத்தின் பொருளாசைமிக்க மனப்பான்மையில் சிக்கிக்கொள்வதற்குப் பதிலாக, நாம் அனைவரும் ‘மனத்தெளிவுள்ளவர்களாக’ இருப்பது—ஆன்மீக காரியங்களில் கவனத்தை ஒருமுகப்படுத்துவது—அவசியம். நீங்கள் இளைஞராக இருந்தால், இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: “‘ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு,’ கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் தகுதிவாய்ந்த ஊழியராவதற்கு எல்லா முயற்சியும் எடுக்கிறேனா? ஊழிய வேலையை ‘முழுமையாக’ செய்வதற்கு என்னென்ன திட்டங்களை நான் போட்டிருக்கிறேன்? முழுநேர சேவையை ஒரு வாழ்க்கைத் தொழிலாக செய்வதற்கு சிந்தித்துப் பார்த்திருக்கிறேனா?” இவையெல்லாம் சவாலான கேள்விகளே, முக்கியமாக மற்ற இளைஞர்களெல்லாம் சுயநலமிக்க நாட்டங்களில் திளைத்திருப்பதையும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிநடத்துமென அவர்கள் நினைக்கும் ‘பெரிய காரியங்களைத் தேடுவதையும்’ நீங்கள் பார்க்கும்போது இவையெல்லாம் சவாலான கேள்விகளே. (எரேமியா 45:5) ஆகையால், கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குச் சிசுப்பருவம் முதற்கொண்டே தகுந்த ஆன்மீக சூழலையும் பயிற்சியையும் ஞானமாக அளிக்கிறார்கள்.—நீதிமொழிகள் 22:6; பிரசங்கி 12:1; 2 தீமோத்தேயு 3:14, 15.
16. எவ்வாறு கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குத் தகுந்த ஆன்மீக சூழலை ஞானமாக ஏற்படுத்திக் கொடுக்கலாம்?
16 “நாங்கள் யாருடன் கூட்டுறவு கொள்கிறோம் என்பதைக் குறித்து எங்களுடைய அம்மா மிகவும் கவனமாக இருந்தார்கள்” என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பையன்களில் மூத்தவர் சொல்கிறார்; அந்தக் குடும்பத்தின் தாய் பல ஆண்டுகளாக முழுநேர ஊழியம் செய்து வந்திருக்கிறார். “எங்களுடைய பள்ளித் தோழர்களோடு கூட்டுறவு கொள்ளாமல், சபையில் நல்ல ஆன்மீக பழக்கங்களைக் கொண்ட ஆட்களோடுதான் நாங்கள் கூட்டுறவு கொண்டோம். கூட்டுறவுக்காக முழுநேர சேவை செய்துவந்த மிஷனரிகளையும் பயணக் கண்காணிகளையும் பெத்தேல் ஊழியர்களையும் பயனியர்களையும் தவறாமல் எங்கள் வீட்டிற்கு அழைத்தார்கள். அவர்கள் சொன்ன அனுபவங்களைக் கேட்டதும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்ததும் முழுநேர ஊழியத்திற்கான ஆசையை இருதயத்தில் ஊன்றுவதற்கு உதவியது.” இந்த மூன்று மகன்களும் இப்போது முழுநேர சேவை செய்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது—ஒருவர் பெத்தேலில் ஊழியம் செய்கிறார், ஒருவர் ஊழியப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றார், இன்னொருவர் பயனியர் ஊழியம் செய்கிறார்!
17. படிப்புக்குப் பாடங்களையும் வாழ்க்கைத் தொழிலையும் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இளைஞர்களுக்கு எத்தகைய வழிநடத்துதலை பெற்றோர்கள் கொடுக்கலாம்? (பக்கம் 29-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
17 நல்ல ஆன்மீக சூழலைக் கொடுப்பதோடுகூட, பள்ளியில் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள், தொழிற்கல்வி ஆகியவை சம்பந்தமாக பெற்றோர்கள் முடிந்தவரை ஆரம்பத்திலிருந்தே தகுந்த வழிநடத்துதலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். இப்பொழுது பெத்தேலில் சேவை செய்யும் மற்றொரு இளைஞர் இவ்வாறு கூறுகிறார்: “என்னுடைய பெற்றோர்கள் இருவரும் கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பும் பின்பும் பயனியர் சேவை செய்தார்கள். முழு குடும்பத்திற்கும் அதே பயனியர் மனப்பான்மையை ஊட்டுவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். பள்ளியில் ஏதாவது பாடங்களைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும்சரி எங்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும் தீர்மானங்களை எடுப்பதாக இருந்தாலும்சரி, பகுதிநேர வேலை செய்துகொண்டு பயனியர் சேவை செய்ய மிகச் சிறந்த வாய்ப்பளிக்கும் ஒன்றையே தேர்ந்தெடுப்பதற்கு எங்களை எப்போதும் உற்சாகப்படுத்தினார்கள்.” பட்டப் படிப்பிற்கு உதவும் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, தேவராஜ்ய சேவையை நாடுவதற்கு உதவும் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி பெற்றோர்களும் பிள்ளைகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.b
18. இளைஞர்கள் எத்தகைய வேலை வாய்ப்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம்?
18 பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களுக்கு அல்ல, ஆனால் தொழில் தெரிந்தவர்களுக்கே பல நாடுகளில் அதிக தேவை இருக்கிறதென ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. “வருகிற பத்தாண்டுகளில் 70% தொழிலாளர்களுக்கு நான்கு வருட கல்லூரிப் பட்டம் அல்ல, குறைந்த வருடம் படித்த அரசு தொழில்நுட்ப கல்வி பட்டம் அல்லது ஏதாவது தொழிற்கல்வி பயின்ற சான்றிதழே தேவைப்படும்” என்று யுஎஸ்ஏ டுடே அறிவிக்கிறது. அலுவலக வேலைகள், வாகனம் பழுதுபார்த்தல், கம்ப்யூட்டர் பழுதுபார்த்தல், குழாய் பழுதுபார்த்தல், முடிதிருத்துதல், இன்னும் ஏராளமான இதுபோன்ற தொழில்களில் குறுகிய கால கல்வியை அத்தகைய நிறுவனங்கள் அளிக்கின்றன. இவை விரும்பத்தக்க வேலைகளா? நிச்சயமாகவே! சிலர் கற்பனை செய்கிறபடி, அவை அந்தளவுக்கு கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், யெகோவாவை சேவிப்பதையே உண்மையான வாழ்க்கைத் தொழிலாக நினைப்பவர்களுக்கு போதிய வருமானத்தையும் வசதியான நேரத்தில் தேவைக்கேற்ப வேலை செய்யும் வாய்ப்பையும் அவை தருகின்றன.—2 தெசலோனிக்கேயர் 3:8.
19. ஆனந்தமும் திருப்தியுமான வாழ்க்கைக்கு எது நம்பகமான வழி?
19 “வாலிபரே, கன்னிகைகளே, . . . கர்த்தரைத் துதியுங்கள். அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது” என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 148:12, 13) உலகம் தரும் அந்தஸ்துகளோடும் ஆதாயங்களோடும் ஒப்பிடுகையில், யெகோவாவுக்குச் செய்யும் முழுநேர சேவையே ஆனந்தமும் திருப்தியுமான வாழ்க்கைக்கு நம்பகமான வழி என்பதில் சந்தேகமே இல்லை. பைபிள் தரும் இந்த உறுதியை மனதிற்கொள்ளுங்கள்: ‘[யெகோவாவின்] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.’—நீதிமொழிகள் 10:22.
[அடிக்குறிப்புகள்]
a பல்கலைக்கழக கல்வியைவிட தேவராஜ்ய கல்வியை உயர்வாக மதித்தவர்களைப் பற்றிய அனுபவங்களுக்கு, ஆங்கில இதழ்களில் காவற்கோபுரம், மே 1, 1982, பக்கங்கள் 3-6; ஏப்ரல் 15, 1979, பக்கங்கள் 5-10; விழித்தெழு! ஜூன் 8, 1978, பக்கம் 15, ஆகஸ்ட் 8, 1974, பக்கங்கள் 3-7 ஆகியவற்றைக் காண்க.
b விழித்தெழு! அக்டோபர் 8, 1998 இதழில், பக்கங்கள் 4-6-ல், “பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி” என்பதையும், ஜூன் 8, 1990 இதழில், பக்கங்கள் 12-14-ல், “நான் என்ன வாழ்க்கைப் பணியைத் தெரிந்துகொள்ள வேண்டும்?” என்பதையும் காண்க.
விளக்க முடியுமா?
• திருப்தியான எதிர்காலத்திற்காக கிறிஸ்தவர்கள் எதன்மீது நம்பிக்கை வைக்கிறார்கள்?
• பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்து கிறிஸ்தவ பெற்றோர்கள் எதிர்ப்படும் சவால்கள் யாவை?
• உயர் கல்வியை நாடுவதால் வரும் பலாபலன்களை சீர்தூக்கிப் பார்க்கையில் என்னென்ன விஷயங்களை கவனத்திற்கொள்ள வேண்டும்?
• பிள்ளைகள் யெகோவாவின் சேவையை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்வதற்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
[பக்கம் 29-ன் பெட்டி]
உயர் கல்வியின் மதிப்பென்ன?
பல்கலைக்கழகத்தில் சேருகிற பெரும்பாலோர் கைநிறைய சம்பாதிப்பதற்கும் நம்பகமான வேலைகளுக்கும் வாய்ப்பளிக்கிற ஒரு டிகிரியை வாங்கிவிடலாம் என எதிர்நோக்குகிறார்கள். ஆனால், கல்லூரிக்குச் செல்கிறவர்களில் 25 சதவீதத்தினரே ஆறு ஆண்டுகளில் ஒரு டிகிரி வாங்குகிறார்கள் என்பதாக அரசாங்க அறிக்கைகள் காட்டுகின்றன—இது வருந்தத்தக்க சதவீதம். அப்படியே கிடைத்தாலும், அந்த டிகிரி ஒரு நல்ல வேலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா? தற்போதைய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்பதை கவனியுங்கள்.
“ஹார்வர்ட் அல்லது டியூக் யுனிவர்சிட்டிக்கு செல்வதால் நல்ல வேலையும் கைநிறைய சம்பாத்தியமும் கிடைத்துவிடாது. . . . வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களைப் பற்றி கம்பெனிகளுக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. பெரிய பட்டப் படிப்பு சான்றிதழ் (ஒரு ஐவி லீக் பட்டம்) அவர்களைக் கவரக்கூடும். ஆனால், வேலையில் சேர்ந்த பிறகு அவர்கள் எந்தளவுக்குச் செய்கிறார்கள் அல்லது செய்வதில்லை என்பதையே முதலாளிகள் முக்கியமாகப் பார்க்கிறார்கள்.”—நியூஸ்வீக், நவம்பர் 1, 1999.
“முன்புபோல் அல்லாமல் இன்று ஒரு வேலைக்கு அதிக திறமைகள் தேவைப்பட்டாலும் . . . , உயர்நிலைப் பள்ளி படிப்பு திறமைகள்—கணக்கு போடுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற ஒன்பதாம் வகுப்பு அளவிலான திறமைகள்—முக்கியமாகத் தேவைப்படுகின்றன, . . . கல்லூரி படிப்பு திறமைகள் அல்ல. . . . நல்ல வேலை கிடைப்பதற்கு மாணவர்கள் கல்லூரிக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் உயர்நிலைப் பள்ளியில் நன்கு படித்து திறமைகளை வளர்ப்பது அவசியம்.”—அமெரிக்கன் எஜுகேட்டர், ஸ்பிரிங் 2004.
“பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்களை வேலைக்குத் தயார்படுத்துவதில் துளிகூட கவனம் செலுத்துவதில்லை. தொழிற்கல்வி நிறுவனங்கள் . . . பிரபலமடைந்து வருகின்றன. அவற்றில் சேருகிறவர்களின் எண்ணிக்கை 1996-லிருந்து 2000-க்குள் 48% அதிகரித்துள்ளது. . . . இதற்கிடையே அதிக பணமும் நேரமும் செலவழிக்க வேண்டிய கல்லூரி படிப்புக்கு மவுசு குறைந்துவருகிறது.”—டைம், ஜனவரி 24, 2005.
“நான்கு வருட கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகளில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பாகத்தினருக்குப் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காது என்ற அதிர்ச்சியூட்டும் விஷயத்தை 2005-ம் வருடத்திற்கான ஐ.மா. தொழில்துறையின் கணிப்புகள் காட்டுகின்றன”.—த ஃபியூச்சரிஸ்ட், ஜூலை/ஆகஸ்ட் 2000.
இவையெல்லாவற்றின் காரணமாக, உயர் கல்வியின் மதிப்பைக் குறித்து இன்று ஆசிரியர்கள் பலர் பெரிதும் சந்தேகிக்கின்றனர். “நாம் கற்றுக்கொடுப்பது மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களுக்குப் பயன்படுவதில்லையே” என ஃபியூச்சரிஸ்ட் பத்திரிகை ஆதங்கத்தோடு அறிவிக்கிறது. அதற்கு நேர்மாறாக கடவுளைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
[பக்கம் 26-ன் படம்]
அவர்கள் தனிப்பட்ட நாட்டங்களை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்
[பக்கம் 31-ன் படம்]
கிறிஸ்தவ பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு சிசுப்பருவம் முதற்கொண்டே தகுந்த ஆன்மீக சூழலை ஞானமாக அளிக்கிறார்கள்