வாழ்க்கை சரிதை
என் “இருதயத்தின் வேண்டுதல்களை” பெற்றுக்கொண்டேன்
டாமினிக் மார்கூ சொன்னபடி
டிசம்பர் 1998-ல் ஒருவழியாக நான் ஆப்பிரிக்கா வந்தடைந்தேன்! இங்கு வர வேண்டும் என்ற என்னுடைய சிறுவயது கனவு இப்போது நனவானது. ஆப்பிரிக்காவில் பரந்துவிரிந்து கிடக்கும் வெட்டவெளிகளையும் அதில் வாழும் விதவிதமான வன விலங்குகளையும் நினைத்து கனவு கண்டிருக்கிறேன். இப்போதோ நிஜமாகவே அங்கிருக்கிறேன்! அதே சமயத்தில் வெளிநாட்டில் முழுநேர ஊழியம் செய்யவேண்டும் என்ற என்னுடைய இன்னொரு ஆசைக் கனவும் நிறைவேறியது. அந்த ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை என்று அநேகர் நினைத்திருக்கலாம். என் பார்வை ரொம்பவே மோசமாகியிருக்கிறது; அதோடு, ஐரோப்பிய தெருக்களில் வழிகாட்ட பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நாயின் உதவியோடுதான் ஆப்பிரிக்க கிராமங்களின் மண் ரோடுகளில் நடக்கிறேன். ஆப்பிரிக்காவில் சேவை செய்ய எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்ததென்றும் யெகோவா என்னுடைய “இருதயத்தின் வேண்டுதல்களை” எப்படியெல்லாம் நிறைவேற்றினார் என்றும் நான் சொல்ல விரும்புகிறேன்.—சங்கீதம் 37:4.
பிரான்சின் தென்பகுதியில் ஜூன் 9, 1966-ல் நான் பிறந்தேன். எனக்கு இரண்டு அண்ணன், நான்கு அக்கா. நான்தான் கடைக்குட்டி. எங்களுடைய பெற்றோர் எங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்கள். ஆனால், நான் சிறுமியாக இருந்தபோது ஒரு சோகமான சம்பவம் நடந்தது. தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பத்தை வாட்டிய வியாதி என்னையும் வாட்ட ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்சமாக கண்களைக் குருடாக்கும் ஒரு வகையான வியாதியால் என்னுடைய பாட்டியும் அம்மாவும் ஒரு அக்காவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அது என்னையும் பாதித்தது.
இளம் வயதிலிருந்தே இனப்பெருமை, தப்பெண்ணம், மாய்மாலம் போன்ற கொடுமைகளை எல்லாம் அனுபவித்ததால் புரட்சிக்காரியாக மாறினேன். இந்தக் கஷ்டமான சமயத்தில்தான் குடும்பத்தோடு ஏரோ என்ற இடத்திற்கு குடிமாறிப் போனோம். அங்கே ஒரு சந்தோஷமான சம்பவம் நடந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், இரண்டு யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். என் அம்மாவுக்கு அவர்களை முன்பே தெரிந்திருந்ததால் அவர்களை வீட்டுக்குள் அழைத்தார்கள். அவர்களில் ஒரு பெண் என் அம்மாவிடம்: “என்றைக்காவது ஒரு நாள் நிச்சயம் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்வேன் என்று சொன்னீங்களே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார். உடனே அம்மாவுக்கு ஞாபகம் வந்தது; ஆகவே, “எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டார். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் பைபிள் படிப்பு நடத்த அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். இப்படித்தான் என்னுடைய அம்மா ‘சுவிசேஷத்தின் சத்தியத்தை’ படிக்க ஆரம்பித்தார்.—கலாத்தியர் 2:14.
மனக்கண் திறந்தது
அம்மா கற்றுக்கொண்ட காரியங்களை நன்றாக புரிந்துகொள்ளவும் ஞாபகத்தில் வைக்கவும் கடுமையாக முயற்சி செய்தார். அவருக்கு கண்பார்வை இல்லாததால் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்தார். சாட்சிகள் என் அம்மாவுக்கு ரொம்ப பொறுமையாக சொல்லித்தந்தார்கள். ஆனால் நானோ, அவர்கள் வந்தாலே என் ரூமுக்குள் போய் ஒளிந்துகொள்வேன். அவர்கள் போன பிறகுதான் வெளியே வருவேன். ஒருநாள் மத்தியானம் யூஜீன் என்ற சகோதரி என்னை சந்தித்துப் பேசினார். இந்த உலகத்திலிருக்கும் மாய்மாலம், வெறுப்பு, தப்பெண்ணம் போன்றவற்றிற்கு கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் முடிவு கொண்டுவரப் போகிறது என்றும் கடவுளால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும் என்றும் சொன்னார். “இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா?” என்று கேட்டார். அடுத்த நாளே எனக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தன. சில நியாயமான காரணங்களுக்காகத்தான் கடவுள் இந்தப் பூமியில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் விட்டுவைத்திருக்கிறார் என்று புரிந்தது. (ஆதியாகமம் 3:15; யோவான் 3:16; ரோமர் 9:17) அதோடு, நம்பிக்கையே இல்லாத நிலைமையில் நம்மை யெகோவா விட்டுவிடவில்லை என்றும் கற்றுக்கொண்டேன். பரதீஸ் பூமியில் நித்திய காலமாக வாழ்வதற்கான ஓர் அருமையான வாக்குறுதியை அவர் அளித்திருக்கிறார் என்றும் கற்றுக்கொண்டேன். (சங்கீதம் 37:29; 96:11, 12; ஏசாயா 35:1, 2; 45:18) நான் இழந்துகொண்டிருந்த கண்பார்வை அந்த பரதீஸ் பூமியில் எனக்கு திரும்பவும் கிடைக்கப்போகிறது என்றும் தெரிந்துகொண்டேன்.—ஏசாயா 35:5.
முழுநேர ஊழியத்தில் காலெடுத்து வைத்தேன்
டிசம்பர் 12, 1985-ல் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றேன். என் அக்கா மாரி-கிளார் எனக்கு முன்பே முழுக்காட்டுதல் எடுத்திருந்தார். எனக்குப் பின் சீக்கிரத்திலேயே அன்பான என் அம்மாவும் என் அண்ணன் ஷான்-பியெரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
நான் இருந்த சபையில் ஒழுங்கான பயனியர்கள், அதாவது முழு நேர ஊழியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஊழியத்தில் அவர்கள் காட்டிய சந்தோஷமும் ஆர்வமும் எனக்கு உற்சாகம் அளித்தது. என்னுடைய அக்கா மாரி-கிளார் கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதே சமயத்தில் ஒரு கால் ஊனமாகவும் இருந்தது. இப்படியிருந்தும் அவர் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தார். இதுநாள்வரை அவருடைய முன்மாதிரி எனக்கு தூண்டுகோலாய் இருந்துவருகிறது. சபையிலும் வீட்டிலும் பயனியர்கள் இருந்ததால், நானும் பயனியர் செய்ய ஆசைப்பட்டேன். எனவே நவம்பர் 1990-ல் பேஸ்யே என்ற இடத்தில் என்னுடைய பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.—சங்கீதம் 94:17-19.
சோர்வுகளை எதிர்த்துப் போராட்டம்
ஊழியத்தில் மற்ற பயனியர்கள் எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் பார்த்துப் பார்த்து செய்தார்கள். இருந்தாலும் என்னுடைய குறைபாடுகளின் காரணமாக என்னால் அதிகம் செய்யமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் நான் அடிக்கடி சோர்ந்து போவேன். ஆனால், சோர்வுகளின் மத்தியிலும் யெகோவா எனக்கு பக்கபலமாக இருந்தார். உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸில் என்னைப்போல் கண்பார்வை பாதிக்கப்பட்ட பயனியர்களின் வாழ்க்கை சரிதை ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ஒன்றா, இரண்டா, அத்தனை இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்! அந்த பயனியர்களுடைய நடைமுறையான, அதே சமயத்தில் உற்சாகமூட்டும் அனுபவங்கள், என்னால் செய்யமுடிந்த காரியங்களை நினைத்து சந்தோஷப்படவும் என்னுடைய குறைகளைப் புரிந்து நடக்கவும் உதவியது.
சொந்த செலவுகளுக்காக மற்ற பயனியர்களுடன் சேர்ந்து நானும் ஷாப்பிங் சென்டர்களில் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டேன். ஒரு நாள், என்னுடன் வேலை செய்துகொண்டிருந்தவர்கள், நான் சுத்தம் செய்த இடத்திற்கே திரும்பவும் சென்று சுத்தம் செய்வதை கவனித்தேன். என்னால் ஒழுங்காக சுத்தம் செய்ய முடியவில்லை என்பதை புரிந்துகொண்டேன். வாலேரீ என்ற ஒரு பயனியர் சகோதரி சுத்தம் செய்யும் குழுவின் மேற்பார்வையாளராக இருந்தார். அவரிடம் சென்று: “நான் எல்லாருக்கும் ரொம்ப வேலை வைக்கிறேனா? கொஞ்சம் மறைக்காமல் சொல்லுங்களேன்” என்று கேட்டேன். இனி என்னால் வேலை செய்ய முடியாது என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது வேலையை விட்டால் போதும் என்று கரிசனையோடு சொன்னார். மார்ச் 1994-ல் அந்த வேலையை விட்டுவிட்டேன்.
எதற்கும் லாயக்கற்றவள் என்ற எண்ணம் என்னை மறுபடியும் வாட்ட ஆரம்பித்தது. அதற்காக யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபம் செய்தேன். என் வேண்டுதல்களை எல்லாம் அவர் கேட்டார் என்பது நிச்சயம். இந்த முறையும் பைபிளும் கிறிஸ்தவ பிரசுரங்களும்தான் எனக்கு கைகொடுத்தன. என்னுடைய கண்பார்வை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போனாலும் யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற என்னுடைய ஆசை, நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. ஆனால் என் ஆசை எப்படி நிறைவேறியது தெரியுமா?
முதலில் வெயிட்டிங் லிஸ்ட், பிறகு உடனடி தீர்மானம்
நீம் என்ற இடத்தில் கண்பார்வை இழந்தவர்களுக்கும் கண் கோளாறு உள்ளவர்களுக்கும் நடத்தப்படும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறுவதற்காக நான் விண்ணப்பித்தேன். கடைசியில், மூன்று மாத பயிற்சியில் சேர்க்கப்பட்டேன். அங்கே நான் செலவழித்த காலம் ரொம்பப் பிரயோஜனமாக இருந்தது. அங்கு கிடைத்த பயிற்சியால் என்னுடைய வரம்புகளை புரிந்துகொள்ளவும் அதோடு அனுசரித்துப்போகவும் நான் கற்றுக்கொண்டேன். பல விதமான பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களோடு பழகியபோதுதான் என்னுடைய எதிர்கால நம்பிக்கை எவ்வளவு விலைமதிப்புள்ளதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்காவது வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கிறது, ஏதாவது பயனுள்ள காரியத்தைச் செய்ய முடிகிறது என்றெல்லாம் நினைத்து ஆறுதல் அடைந்தேன். அதோடு, பிரெஞ்சு பிரெயிலையும் நான் கற்றுக்கொண்டேன்.
பயிற்சி முடிந்து வீடு திரும்பியபோது என்னுள் ஏற்பட்ட மாற்றங்களை என் குடும்பத்தார் கவனித்தார்கள். ஆனால் ஒரு வெள்ளைக் கோலை உபயோகித்துதான் நான் நடக்க வேண்டும் என்று சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. அதை நினைத்தாலே வெறுப்பாக இருந்தது. அதற்கு பதிலாக வேறு ஏதாவது, ஒருவேளை ஒரு வழிகாட்டி நாய் இருந்தால்கூட எவ்வளவோ மேல் என்று நினைத்தேன்.
அப்படிப்பட்ட ஒரு நாயைக் கேட்டு விண்ணப்பித்தேன்; ஆனால் எனக்கு முன் பலர் அதற்கு விண்ணப்பித்திருந்ததால் ஒரு பெரிய வெயிட்டிங் லிஸ்ட் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அதோடு அந்த நிறுவனம் நிறைய விசாரணையெல்லாம் நடத்திய பிறகுதான் அந்த நாயைத் தரும் என்பதையும் தெரிந்துகொண்டேன். ஒரு நாள், பார்வையற்றோர் நல சங்கத்திற்கு உதவும் ஒரு பெண்ணை நான் சந்தித்தேன். ஒரு டென்னிஸ் க்ளப், எங்கள் ஏரியாவிலுள்ள பார்வையில்லாத ஒருவருக்கு அல்லது பார்வை கோளாறுள்ள ஒருவருக்கு வழிகாட்டி நாய் ஒன்றை வழங்கப்போகிறதென்று அந்தப் பெண் சொன்னாள்; அவளுக்கு என் ஞாபகம் வந்ததாகவும் சொன்னாள். வேண்டுமா என்று கேட்டபோது நான் யோசித்தேன். பிறகு, இது யெகோவாவிடமிருந்து வந்த உதவி என்று உணர்ந்து அந்த கனிவான உதவியை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அந்த நாய்க்காக நான் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆப்பிரிக்காவின் நினைவாகவே
நாய்க்காக காத்துக்கொண்டிருந்தபோது என்னுடைய கவனத்தை வேறொரு காரியத்தில் திசைதிருப்பினேன். ஆரம்பத்தில் சொன்ன விதமாக சிறு வயதிலிருந்தே ஆப்பிரிக்காவுக்குப் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். கண்பார்வை மங்கிக்கொண்டே போனாலும் என்னுடைய ஆசை நாளுக்கு நாள் ஒளிவீசிக்கொண்டே இருந்தது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் பைபிளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் யெகோவாவை சேவிக்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரிந்ததிலிருந்து அங்கு போகவேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். ஆப்பிரிக்காவுக்கு ஒரு முறை போக ஆசையிருப்பதாக வாலேரீயிடம் சில நாட்களுக்கு முன்பு எதேச்சையாக சொல்லியிருந்தேன். “நீங்களும் என்னுடன் வருகிறீர்களா?” என்று கேட்டேன். அவர் வருவதாக சொன்னார். உடனே எங்களுடைய விருப்பத்தைப் பற்றி ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் பிரெஞ்சு பேசும் பல கிளை அலுவலகங்களுக்கு எழுதினோம்.
டோகோவிலிருந்து எங்களுக்கு ஒரு பதில் கடிதம் வந்தது. எனக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை! அதை எனக்கு வாசித்துக்காட்டுமாறு வாலேரீயிடம் கேட்டேன். அந்தக் கடிதம் எங்களை உற்சாகமூட்டியது. உடனே வாலேரீ: “அப்போ நாம் டோகோவுக்கு போகலாம்” என்றார். கிளை அலுவலகத்தில் உள்ள சகோதரர்களிடம் நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர்கள் லோம் என்ற தலைநகரில் சான்ட்ரா என்ற ஒரு பயனியர் சகோதரியை தொடர்புகொள்ளச் சொன்னார்கள். டிசம்பர் 1, 1998-ல் நாங்கள் லோமுக்கு கிளம்பினோம்.
ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனாலும் அது எவ்வளவு மகிழ்ச்சியளித்தது! லோமை வந்தடைந்தவுடன் நானும் வாலேரீயும் விமானத்திலிருந்து இறங்கினோம். ஆப்பிரிக்காவின் உஷ்ணம் எங்களைப் பொசுக்கியது. அங்கே நாங்கள் சான்ட்ராவை சந்தித்தோம். இதற்கு முன் நாங்கள் சான்ட்ராவை சந்தித்ததே இல்லை. இருந்தாலும், பல வருடம் நெருங்கிப் பழகிய தோழிகளைப்போல் உணர்ந்தோம். நானும் வாலேரீயும் அங்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் டாப்லிக்போ என்ற ஒரு சிறிய நகரில் சான்ட்ராவும் அவருடைய பயனியர் பார்ட்னரான கிறிஸ்டீனும் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றோம். நாங்கள் அங்கே சுமார் இரண்டு மாதங்கள் தங்கினோம். நான் நிச்சயம் அங்கே திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையோடு கிளம்பினேன்.
மீண்டும் சென்றதில் சந்தோஷம்
பிரான்சுக்கு சென்றவுடன் இரண்டாவது பயணத்திற்கு நான் தயாரானேன். என் குடும்பத்தின் உதவியோடு ஆறு மாதங்கள் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். எனவே, செப்டம்பர் 1999-ல் நான் திரும்பவும் டோகோவுக்கு விமானம் ஏறினேன். ஆனால், இந்த முறை நான் தனியாக சென்றேன். எனக்கு இருக்கும் குறையையும் பொருட்படுத்தாமல் நான் தனியாக போவதை பார்த்து என் குடும்பத்தார் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! ‘லோமில், எனக்காக காத்துக்கொண்டிருக்கும் என் நண்பர்களும் என் குடும்பத்தார் மாதிரிதான், அதனால் என்னை நினைத்து கவலைப்படவேண்டியதில்லை’ என்று என் பெற்றோருக்கு தைரியமூட்டினேன்.
பைபிளில் ஆர்வம் காட்டும் அநேக ஜனங்கள் உள்ள இடத்திற்கு திரும்பி வந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்! ஜனங்கள் தெருவில் இருந்துகொண்டு பைபிள் படிக்கும் காட்சியை அங்கே அடிக்கடி பார்க்கமுடியும். பைபிளைப் பற்றி பேசுவதற்காகவே டாப்லிக்போ ஜனங்கள் சாட்சிகளை அழைப்பார்கள். அதோடு, இரு விசேஷ பயனியர்களுடன் சேர்ந்து ஒரு சின்ன வீட்டில் வாழ்வது எவ்வளவு பெரிய பாக்கியம்! அந்த நாட்டு கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டேன். அதோடு, காரியங்களை புதிய கோணத்தில் பார்க்கவும் கற்றுக்கொண்டேன். மிக முக்கியமாக, நம்முடைய ஆப்பிரிக்க சகோதர சகோதரிகள் ராஜ்ய அக்கறைகளுக்கு வாழ்க்கையில் முதலிடம் தருவதற்காக எடுக்கும் முயற்சிகளை கவனித்தேன். உதாரணத்திற்கு ராஜ்ய மன்றங்களுக்கு பல கிலோமீட்டர் நடக்கவேண்டியிருந்தாலும் அவர்கள் கூட்டங்களை தவறவிடுவதேயில்லை. அவர்களுடைய கனிவான அன்பிலிருந்தும் உபசரிப்பிலிருந்தும் நான் பல காரியங்களைக் கற்றுக்கொண்டேன்.
ஒரு நாள் நாங்கள் வெளி ஊழியத்தை முடித்துவிட்டு திரும்பி வரும்போது சான்ட்ராவிடம் எனக்கு பிரான்சுக்கு போகவே பயமாக இருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்டேன். என்னுடைய கண்பார்வை இன்னும் மோசமாகியிருந்தது. அதனால் பேஸ்யே நகரின் ஜன நெரிசலையும் சந்தடி இரைச்சலையும் அடுக்கு மாடி கட்டிடங்களின் படிக்கட்டுகளையும் இன்னும் அநேக காரியங்களையும் நினைத்து பயப்பட்டேன். டாப்லிக்போவில் மண் ரோடுகள்தான் இருக்கிறதென்றாலும் ஜன நெரிசலும் போக்குவரத்து நெரிசலும் இல்லை. இது பழகிவிட்டதால் நான் எப்படி பிரான்சில் இருக்கப்போகிறேனோ என்று நினைத்துக் கவலைப்பட்டேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வழிகாட்டி நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் பள்ளி தொடங்கப்போவதாக என் அம்மா ஃபோன் செய்தார். பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு இளம் லாப்ரடார் நாய் எனக்கு “கண்களாக” இருக்கத் தயாராக இருந்தது. அதன் பெயர் ஓசெயான். இந்த முறையும் என்னுடைய தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டதோடு என் ஆதங்கங்களுக்கெல்லாம் தீர்வும் கிடைத்தது. டாப்லிக்போவில் ஆறு மாதங்கள் சந்தோஷமாக ஊழியம் செய்த பிறகு ஓசெயானை ‘பார்க்க’ நான் பிரான்சுக்கு திரும்பிச் சென்றேன்.
பல மாத பயிற்சிக்குப் பிறகு ஓசெயானை என்னிடம் ஒப்படைத்தார்கள். ஆரம்பத்தில் எங்களுக்கு ஒத்துப்போவது கஷ்டமாக இருந்தது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஓசெயான்மீது நான் எந்தளவுக்கு சார்ந்திருக்கிறேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டேன். சொல்லப்போனால் ஓசெயான் என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஆகிவிட்டது. ஊழியத்தில் பேஸ்யே நாட்டு ஜனங்களின் வீட்டுக்கு முன்பு நாயுடன் சென்று நின்றபோது அவர்கள் என்னை எப்படி நடத்தினார்கள் தெரியுமா? மிகுந்த மரியாதையோடும் கனிவோடும் நடத்தினார்கள். அக்கம்பக்கத்திலுள்ள எல்லோர் கண்களிலும் ஓசெயான் ஒரு “ஹீரோ” ஆனது. பொதுவாக, உடல் ஊனமுற்றோரிடம் சகஜமாகப் பேச அநேகர் தயங்குவார்கள். ஆனால் என் நாய் கூடவே வந்ததால் என்னுடைய ஊனத்தைப் பற்றி மற்றவர்களுடன் இயல்பாகப் பேச முடிந்தது. ஜனங்கள் சாவதானமாக நான் சொல்வதை கவனித்துக் கேட்டார்கள். சொல்லப்போனால் அவர்களிடம் பேச ஆரம்பிக்க ஓசெயானே ஒரு கருவியாக இருந்தது.
ஓசெயானுடன் ஆப்பிரிக்காவில்
ஆனால், நான் ஆப்பிரிக்காவையும் மறந்துவிடவில்லை. மூன்றாவது முறையாக அங்கே பயணம் செய்யத் தயாரானேன். இந்த முறை ஓசெயானும் என்னுடன் வந்தது. அதோடு, ஆன்டனி மற்றும் ஆராரொ என்ற இளம் தம்பதியும் என்னுடைய தோழி காரலினும் என்னோடுகூட வந்தார்கள். என்னைப் போலவே இவர்களும் பயனியர்கள். செப்டம்பர் 10, 2000-ல் நாங்கள் லோமில் வந்து சேர்ந்தோம்.
ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் ஓசெயானைப் பார்த்து பயந்தார்கள். இவ்வளவு பெரிய நாயை லோமிலுள்ள பலர் பார்த்ததுகூட இல்லை. ஏனென்றால் டோகோவிலுள்ள பெரும்பாலான நாய்கள் சிறிதாக இருந்தன. ஓசெயானுக்கு கட்டப்பட்டிருந்த பெரிய பெல்ட்டைப் பார்த்து சிலர் அது ஆபத்தான நாய் என்றும் அதைப் பயிற்றுவிக்கத்தான் அதற்கு அவ்வளவு பெரிய பெல்ட் கட்டப்பட்டிருக்கிறது என்றும் நினைத்தார்கள். எனக்கு எவையெல்லாம் ஆபத்து என்று ஓசெயான் நினைத்ததோ அவை எல்லாவற்றிலுமிருந்தும் என்னைக் காப்பாற்றத் தயாராக இருந்தது. சீக்கிரத்திலேயே ஓசெயானுக்கு அந்தப் புதிய இடம் பழகிவிட்டது. ஓசெயானுக்கு பெல்ட்டை மாட்டினால் ரொம்ப ஒழுங்காகவும் பொறுப்பாகவும் என் பக்கத்தில் நின்றுகொள்ளும். ஆனால் பெல்ட்டை கழற்றினால்போதும் துறுதுறுவென்று குறும்பு செய்ய ஆரம்பித்துவிடும். நாங்க இரண்டு பேரும் எப்போதும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருப்போம்.
சான்ட்ராவும் கிறிஸ்டீனும், எங்கள் எல்லோரையும் டாப்லிக்போவில் தங்கச் சொன்னார்கள். ஓசெயானுடன் பழகுவதற்காக அங்கு இருந்த சகோதர சகோதரிகளை எங்கள் வீட்டுக்கு அழைத்தோம். ஒரு வழிகாட்டி நாய் என்னென்ன செய்யுமென்றும், எனக்கு ஏன் அப்படி ஒரு நாய் தேவைப்படுகிறது என்றும், அதனுடன் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாங்கள் விளக்கினோம். ராஜ்ய மன்றத்திற்கு ஓசெயானை என்னுடன் அழைத்துவர மூப்பர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் டோகா நாட்டவருக்கு இது ஆச்சரியமாக இருந்தது. எனவே இதைக் குறித்து சபையில் ஒரு விளக்கமான அறிவிப்பு செய்யப்பட்டது. ஊழியத்தைப் பொறுத்ததில் மறுசந்திப்புகளுக்கும் பைபிள் படிப்புகளுக்கும் மட்டும் ஓசெயானை என்னோடு அழைத்துச் செல்வேன். ஏனெனில் ஓசெயான் வருவதை முன்கூட்டியே சொல்லிவிடுவேன் என்பதால், அவர்கள் பொதுவாக ஆட்சேபிக்க மாட்டார்கள்.
டாப்லிக்போவில் ஊழியம் செய்வது எப்போதும் குதூகலமாக இருந்தது. பண்புள்ள ஜனங்கள் என்னைப் பார்த்தவுடனே எனக்கு உட்கார ஒரு நாற்காலி கொண்டுவந்தார்கள். இதுபோன்ற அவர்களுடைய முன்யோசனையான செயல்கள் என்னை எப்போதும் கவர்ந்தன. அக்டோபர் 2001-ல் நான் நான்காவது முறை டோகோவிற்குச் சென்றபோது என் அம்மாவும் என்னோடு வந்திருந்தார். மூன்று வாரங்கள் என்னுடன் தங்கிய பிறகு இங்கே எனக்கு எந்தக் குறையும் இல்லை என்ற திருப்தியுடன் சந்தோஷமாக பிரான்சுக்கு திரும்பிச் சென்றார்.
டோகோவில் சேவை செய்ய வாய்ப்பு தந்ததற்காக யெகோவாவுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். யெகோவாவின் சேவையில் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது என் “இருதயத்தின் வேண்டுதல்களை” அவர் தொடர்ந்து பூர்த்தி செய்வார் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.a
[அடிக்குறிப்பு]
a சகோதரி மார்கூ பிரான்சுக்கு திரும்பிய பிறகு ஐந்தாவது முறையாக டோகோவுக்குப் பயணம் செய்தார். அக்டோபர் 6, 2003-லிருந்து பிப்ரவரி 6, 2004 வரை அவர் அங்கே தங்கினார். ஆனால் மருத்துவ சிக்கல்கள் காரணமாக, அதுவே இந்த உலகில் அவர் செய்த கடைசிப் பயணமாக இருந்திருக்கலாம். என்றபோதிலும், எப்போதும் யெகோவாவை சேவிப்பதே அவருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருக்கிறது.
[பக்கம் 10-ன் படங்கள்]
ஆப்பிரிக்காவின் பரந்துவிரிந்த வெட்டவெளிகளையும் அவற்றில் வாழும் விதவிதமான வன விலங்குகளையும் நினைத்தாலே எனக்குப் புல்லரிக்கும்
[பக்கம் 10-ன் படம்]
மறுசந்திப்புகளின்போது, ஓசெயானுடன்
[பக்கம் 11-ன் படம்]
ஓசெயானை கூட்டங்களுக்கு அழைத்துவர மூப்பர்கள் ஒத்துக்கொண்டார்கள்