நன்னடத்தை சிறந்த பலன்களைத் தருகிறது
தெற்கு ஜப்பானின் கடலோர பகுதிக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறு தீவில், ஒரு தாயும் அவருடைய மூன்று பிள்ளைகளும் யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். பாரம்பரியத்தில் ஊறிப்போன இந்த ஒதுக்குப்புற பகுதியில் வசித்த அக்கம்பக்கத்தார் அதைக் கவனித்தார்கள். எனவே, அந்தத் தாயை எங்கு பார்த்தாலும் அலட்சியப்படுத்த ஆரம்பித்தார்கள். அந்தத் தாய் இவ்வாறு சொன்னார்: “அவர்கள் என்னை அலட்சியப்படுத்துவதைக்கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடிந்தது, ஆனால் என் பிள்ளைகளையும் என் கணவரையும் ஒதுக்குவதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.” என்றபோதிலும், அவர் தன்னுடைய பிள்ளைகளிடம் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவுக்காக, நாம் தொடர்ந்து அக்கம்பக்கத்தாருக்கு வணக்கம் சொல்ல வேண்டும்.”—மத்தேயு 5:47, 48.
வீட்டில் இருக்கையில், எதிர்ப்புகளின் மத்தியிலும் சாந்தமாக இருக்க அவர் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். அவர்கள் வெந்நீர் ஊற்றுக்கு தவறாமல் செல்வார்கள்; அப்போது காரில் செல்லும்போதே, எல்லோருக்கும் வணக்கம் சொல்ல பிள்ளைகள் பழகிப் பார்த்துக் கொண்டார்கள். பிறகு கட்டிடத்திற்குள் நுழைந்தபோது, எல்லாரிடமும் “கோனிசீவா” அதாவது “வணக்கம்” என்று சந்தோஷமாகச் சொன்னார்கள். அக்கம்பக்கத்தார் முகம் சுளித்தாலும் இவர்கள் பொறுமையாக இருந்து, பார்க்கிற அனைவருக்கும் தொடர்ந்து வணக்கம் சொல்லி வந்தார்கள். இந்தப் பிள்ளைகளுடைய நன்னடத்தையை அந்த ஜனங்கள் கவனித்தார்கள்.
கடைசியாக, அவர்களில் ஒருவர் பதிலுக்கு “கோனிசீவா” சொன்னார்; அதன்பின் இன்னொருவரும் அவ்வாறு சொன்னார். இரண்டு வருடங்கள் முடிவதற்குள், அந்த ஊரிலிருந்த கிட்டத்தட்ட அனைவரும் அந்தக் குடும்பத்தாருக்கு திரும்ப வணக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவரும் வணக்கம் சொல்ல ஆரம்பித்ததால் அனைவரும் நண்பர்கள் ஆனார்கள். இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருந்த அந்தப் பிள்ளைகளைக் கௌரவிக்க அவ்வூரின் துணை மேயர் விரும்பினார். ஆனால், அந்தப் பிள்ளைகளுடைய தாய், கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் தன்னுடைய பிள்ளைகள் நடந்துகொண்டார்கள் என்று அவரிடம் சொன்னார். பிற்பாடு, அந்தத் தீவில் ஒரு பேச்சுப் போட்டி நடந்தது. அதில் அந்தத் தாயின் ஒரு மகன் கலந்துகொண்டான். அவன், அடுத்தவர் என்ன செய்தாலும் சரி, மற்றவர்களுக்கு வணக்கம் சொல்ல தன்னுடைய தாய் எப்படிப் பயிற்சி அளித்தார் என்று அதில் விளக்கினான். அந்தப் பேச்சுக்காக அவனுக்கு முதல் பரிசு கிடைத்தது. அது அந்தத் தீவின் செய்தித்தாளிலும் வெளியானது. கிறிஸ்தவ நியமங்களைக் கடைப்பிடித்ததினால் கிடைத்த நல்ல பலன்களை நினைத்து இன்றும் அந்தக் குடும்பத்தார் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். ஜனங்கள் சிநேகப்பான்மையுடன் நடந்துகொள்ளும்போது நற்செய்தியைச் சுலபமாகப் பிரசங்கிக்க முடிகிறது.