கடவுளுடன் நடக்க ஓசியா தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது
“அவர்கள் யெகோவாவை பின்பற்றி நடப்பார்கள்.”—ஓசியா 11:10, Nw.
1. ஓசியா புத்தகத்தில் வரும் அடையாளப்பூர்வ நாடகம் என்ன?
பிரபல கதாபாத்திரங்கள் பங்கேற்கும் சதித்திட்டங்கள் நிறைந்த விறுவிறுப்பான நாடகம் என்றால் உங்களுக்குப் பிடிக்குமா? பைபிளில் ஓசியா என்ற புத்தகத்தில் ஓர் அடையாளப்பூர்வ நாடகம் உள்ளது.a கடவுளுடைய தீர்க்கதரிசியான ஓசியாவின் குடும்ப விஷயங்களை அந்த நாடகம் சித்தரித்துக் காட்டுகிறது. இது, மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை மூலம் பூர்வ இஸ்ரவேலுடன் யெகோவா செய்துகொண்ட அடையாளப்பூர்வ திருமண ஒப்பந்தத்தோடு தொடர்புடையது.
2. ஓசியாவைப் பற்றி என்ன தகவல் கொடுக்கப்பட்டுள்ளது?
2 ஓசியா 1-ம் அதிகாரத்தில் இந்நாடகத்தின் பின்னணியைப் பார்க்கலாம். ஓசியா என்பவர் பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலில் வாழ்ந்ததாகத் தெரிகிறது (எப்பிராயீம் கோத்திரம் செல்வாக்குமிக்கதாக விளங்கியதால் இந்த ராஜ்யம் எப்பிராயீம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது). இஸ்ரவேலின் கடைசி ஏழு ஆட்சியாளர்களுடைய காலத்திலும், யூதாவைச் சேர்ந்த உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களுடைய ஆட்சி காலத்திலும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். (ஓசியா 1:1) இப்படியாக, குறைந்தபட்சம் 59 ஆண்டுகள் ஓசியா தீர்க்கதரிசனம் உரைத்தார். இவரது பெயர் தாங்கிய இப்புத்தகம் பொ.ச.மு. 745-க்குப் பிறகு சீக்கிரத்திலேயே எழுதி முடிக்கப்பட்டது, என்றாலும் இப்புத்தகம் இன்றைய காலத்திற்கும் பொருந்துகிறது. ஏனென்றால் “அவர்கள் யெகோவாவைப் பின்பற்றி நடப்பார்கள்” என அதில் முன்னறிவிக்கப்பட்ட வாழ்க்கைப் போக்கை இன்றும் லட்சோபலட்சம் மக்கள் நாடித் தொடருகிறார்கள்.—ஓசியா 11:10, NW.
மேலோட்டமான பார்வை
3, 4. ஓசியா 1 முதல் 5 அதிகாரங்களில் உள்ள விஷயங்களை சுருக்கமாய் விளக்கவும்.
3 ஓசியா 1 முதல் 5 அதிகாரங்களை மேலோட்டமாக பார்வையிடலாம். விசுவாசத்தை செயலில் காட்டுவதன் மூலமும், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவான வாழ்க்கைப் போக்கை நாடித் தொடருவதன் மூலமும் கடவுளுடன் நடப்பதற்கு நாம் எடுத்திருக்கும் தீர்மானத்தை இவை பலப்படுத்தும். இஸ்ரவேல் ராஜ்யத்தின் குடிகள் ஆன்மீக அர்த்தத்தில் விபச்சார குற்றம் செய்தபோதிலும், அவர்கள் மனந்திரும்பினால் கடவுள் அவர்களிடம் கருணை காட்டுவார். கோமேர் என்ற தனது மனைவியை ஓசியா நடத்திய விதத்தின் மூலம் இது எடுத்துக் காட்டப்பட்டது. அவள் ஓசியாவுக்கு ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்த பிறகு, முறைகேடான முறையில் அவளுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்ததாக தெரிகிறது. என்றாலும், மனந்திரும்பிய இஸ்ரவேலருக்கு இரக்கம் காண்பிக்க யெகோவா மனமுள்ளவராக இருந்தது போல, ஓசியாவும் அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ள மனமுள்ளவராக இருந்தார்.—ஓசியா 1:1–3:5.
4 இஸ்ரவேலருக்கு எதிராக யெகோவா வழக்குத் தொடர்ந்தார், ஏனென்றால் அவர்களிடம் உண்மையோ அன்புள்ள தயவோ கடவுளைப் பற்றிய அறிவோ இல்லை. சோரம்போன இஸ்ரவேல் ராஜ்யத்திடமும் தான்தோன்றித்தனமாக நடக்கும் யூதா ராஜ்யத்திடமும் அவர் கணக்குக் கேட்பார். என்றாலும், கடவுளுடைய ஜனங்கள் “ஆபத்தில்” இருக்கும்போது, யெகோவாவைத் தேடுவார்கள்.—ஓசியா 4:1–5:15.
நாடகம் தொடருகிறது
5, 6. (அ) பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலில் வேசித்தனம் எந்தளவுக்குக் காணப்பட்டது? (ஆ) பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை ஏன் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
5 “கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப் பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டுவிலகிச் சோரம் போயிற்று என்றார்.” (ஓசியா 1:2) பூர்வ இஸ்ரவேலில் வேசித்தனம் எந்தளவுக்குப் பரவலாக இருந்தது? நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “வேசித்தன ஆவி அவர்களை [அதாவது, பத்துக் கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்த ஜனங்களை] வழிதப்பித் திரியப் பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள். . . . உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள். . . . அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்.”—ஓசியா 4:12-14.
6 ஆன்மீக ரீதியிலும் சரீர ரீதியிலும் இஸ்ரவேலில் வேசித்தனம் எங்கும் காணப்பட்டது. ஆகவே, இஸ்ரவேலரிடம் யெகோவா ‘கணக்குக் கேட்பார்.’ (ஓசியா 1:4; 4:9; NW) இந்த எச்சரிப்பு நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனென்றால் இன்று ஒழுக்கயீனத்திலும் அசுத்தமான வழிபாட்டிலும் ஈடுபடுகிறவர்களிடம் யெகோவா கணக்குக் கேட்பார். ஆனால் கடவுளுடன் நடப்பவர்கள் சுத்தமான வழிபாட்டிற்குரிய தராதரங்களைப் பின்பற்றுகிறார்கள், ‘விபசாரக்காரர் . . . தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை’ என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—எபேசியர் 5:5; யாக்கோபு 1:27.
7. கோமேருடன் ஓசியா செய்துகொண்ட திருமணம் எதற்கு அடையாளமாக இருந்தது?
7 கோமேரை ஓசியா மணமுடித்தபோது அவள் கன்னியாக இருந்தாள், ‘அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்ற’ சமயத்தில் அவள் உண்மையுள்ளவளாகவே இருந்தாள். (ஓசியா 1:3) இந்த அடையாளப்பூர்வ நாடகத்தில் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளபடி, பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்த சில காலத்திற்குப் பிறகு, அவர்களுடன் கடவுள் ஓர் உடன்படிக்கை செய்தார், அது சுத்தமான திருமண ஒப்பந்தத்தைப் போல் இருந்தது. அந்த உடன்படிக்கைக்குச் சம்மதித்ததன் மூலம் தங்கள் ‘நாயகரான’ யெகோவாவுக்கு உண்மையுடன் இருப்பதாக இஸ்ரவேலர் வாக்குறுதி அளித்தார்கள். (ஏசாயா 54:5) ஆம், கடவுளுடன் இஸ்ரவேலர் செய்துகொண்ட அந்த அடையாளப்பூர்வ திருமணம் கோமேருடன் ஓசியா செய்துகொண்ட சுத்தமான திருமணத்திற்கு ஓர் அடையாளமாக இருந்தது. ஆனால் சூழ்நிலை எந்தளவு மாறிப்போனது!
8. இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யம் எப்படி தோன்றியது, அதன் வழிபாட்டைக் குறித்து என்ன சொல்லலாம்?
8 ஓசியாவின் மனைவி “திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்.” இதுவும் இதற்குப்பின் பிறந்த மற்றொரு பிள்ளையும் கோமேருக்கு முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளாக இருக்கலாம். (ஓசியா 1:6, 8) இஸ்ரவேலுக்கு கோமேர் படமாக இருப்பதால், ‘எந்த விதத்தில் இஸ்ரவேல் வேசித்தனம் செய்தது?’ என்று நீங்கள் கேட்கலாம். பொ.ச.மு. 997-ல், இஸ்ரவேலின் பத்துக் கோத்திரங்கள் யூதா மற்றும் பென்யமீன் என்ற தெற்கு கோத்திரங்களிலிருந்து பிரிந்தன. இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தில் கன்றுக்குட்டி வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது; எருசலேமிலிருந்த ஆலயத்திற்குச் சென்று யெகோவாவை வழிபட யூதாவுக்கு ஜனங்கள் செல்லாதிருப்பதற்காகவே அப்படிச் செய்யப்பட்டது. இவ்வாறு, பொய்க் கடவுளான பாகால் வழிபாடும் அதோடு சம்பந்தப்பட்ட பாலியல் ஒழுக்கக்கேடுகளும் இஸ்ரவேலில் வேரூன்றின.
9. ஓசியா 1:6-ல் முன்னறிவிக்கப்பட்டபடி, இஸ்ரவேலுக்கு என்ன நிகழ்ந்தது?
9 கோமேருக்கு இரண்டாவது பிள்ளை முறைகேடாகப் பிறந்த சமயத்தில், ஓசியாவிடம் கடவுள் இவ்வாறு கூறினார்: “இவளுக்கு லோருகாமா [“அவளுக்கு இரக்கம் காட்டப்படவில்லை” என்பது அர்த்தம்] என்னும் பேரிடு; ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.” (ஓசியா 1:6) பொ.ச.மு. 740-ல் அசீரியர்கள் இஸ்ரவேலரை அடிமைகளாய் கொண்டு சென்ற சமயத்தில் யெகோவா அவர்களை ‘அகற்றிவிட்டார்.’ ஆனால், இரண்டு கோத்திர ராஜ்யமான யூதாவுக்குக் கடவுள் இரக்கம் காட்டி, வில்லோ வாளோ போரோ குதிரைகளோ குதிரை வீரர்களோ இல்லாமல் அதைக் காப்பாற்றினார். (ஓசியா 1:7) பொ.ச.மு. 732-ல், யூதாவின் தலைநகரான எருசலேமை அச்சுறுத்திக் கொண்டிருந்த 1,85,000 அசீரிய படைவீரர்களை ஒரே இரவில் ஒரே தூதன் கொன்றுபோட்டார்.—2 இராஜாக்கள் 19:35.
இஸ்ரவேலுக்கு எதிராக யெகோவா தொடுக்கும் வழக்கு
10. கோமேரின் முறைகேடான நடத்தை எதை எடுத்துக் காட்டுகிறது?
10 ஓசியாவை கைவிட்டுவிட்டு கோமேர் “சோர ஸ்திரீ”யானாள், அதாவது வேறொருவனுடன் முறைகேடான வாழ்க்கை நடத்திவந்தாள். இஸ்ரவேல் ராஜ்யம் விக்கிரகங்களை வழிபடும் தேசங்களுடன் உறவு வைத்துக்கொண்டு அவற்றைச் சார்ந்திருக்கத் தொடங்கியதை இது எடுத்துக் காட்டுகிறது. இஸ்ரவேல் தன்னுடைய செல்வச் செழிப்புக்குக் காரணம் யெகோவாவே என்பதை உணர்ந்து அவருக்குப் புகழ் சேர்ப்பதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட தேசங்களின் கடவுட்களைப் போற்றிப் புகழ்ந்தது. பொய் மத வழிபாட்டில் ஈடுபட்டதால் கடவுளுடன் செய்திருந்த திருமண ஒப்பந்தத்தை மீறியது. ஆன்மீக அர்த்தத்தில் விபச்சாரம் செய்த தேசத்திற்கு எதிராக யெகோவா வழக்கு தொடர்ந்தது ஆச்சரியம் அல்லவே!—ஓசியா 1:2; 2:2, 12, 13.
11. இஸ்ரவேலும் யூதாவும் நாடுகடத்தப்படுவதற்கு யெகோவா அனுமதித்தபோது நியாயப்பிரமாண உடன்படிக்கை என்ன ஆனது?
11 தனது நாயகரை விட்டுப் பிரிந்ததற்கு இஸ்ரவேல் செலுத்திய தண்டம் என்ன? பொ.ச.மு. 740-ல் இஸ்ரவேலர் அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள், பிறகு அசீரியாவை வென்ற தேசமான பாபிலோனியாவின் ‘வனாந்தரத்திற்குப்’ போகும்படி கடவுள் செய்தார், (ஓசியா 2:14) இவ்வாறு, 10 கோத்திர ராஜ்யம் முடிவுக்கு வரும்படி யெகோவா செய்தபோது, 12 கோத்திர இஸ்ரவேல் தேசத்தோடு தாம் செய்திருந்த திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடவில்லை. சொல்லப்போனால், பொ.ச.மு. 607-ல் பாபிலோனியரால் எருசலேம் அழிக்கப்படவும், யூதா ஜனங்கள் அடிமைகளாக சிறைபிடித்து செல்லப்படவும் கடவுள் அனுமதித்தபோதும்கூட 12 கோத்திர இஸ்ரவேலுடன் செய்திருந்த அடையாளப்பூர்வ திருமண ஒப்பந்தமாகிய நியாயப்பிரமாண உடன்படிக்கையை அவர் ரத்து செய்துவிடவில்லை. யூத தலைவர்கள் இயேசு கிறிஸ்துவை புறக்கணித்து பொ.ச. 33-ல் அவரை கொலை செய்த பிறகே அந்த உறவு முடிவுக்கு வந்தது.—கொலோசெயர் 2:14.
இஸ்ரவேலுக்கு யெகோவா புத்திமதி கூறுகிறார்
12, 13. ஓசியா 2:6-8-ல் உள்ள வசனங்களின் கருத்து என்ன, அந்த வார்த்தைகள் எவ்வாறு இஸ்ரவேலுக்குப் பொருந்தின?
12 இஸ்ரவேல் “தன் வேசித்தனங்களை . . . விலக்கிப்போடக்கடவள்” என்று கடவுள் புத்திமதி கொடுத்தார், ஆனால் தன்மீது மோகம் கொண்டு நேசம் வைத்தவர்களின் பின்னால் போகவே அவள் விரும்பினாள். (ஓசியா 2:2, 5) “ஆகையால், இதோ, நான் உன் வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக் கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன். அவள் தன் நேசர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின புருஷனிடத்துக்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள். தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப் பண்ணினவரென்றும் அவள் அறியாமற் போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள் [அதாவது, “பாகால் உருவமாக செய்தார்கள்,” NW அடிக்குறிப்பு].”—ஓசியா 2:6-8.
13 இஸ்ரவேல் தன்மீது ‘மோகம் கொண்ட நேசர்களான’ தேசங்களிடமே உதவியை நாடியபோதிலும், அவர்களில் ஒருவரும் அவளுக்கு உதவ முடியவில்லை. நுழைய முடியாத புதர்களால் சூழப்பட்டதைப் போல் அவள் வேலியடைக்கப்பட்டாள், அதனால் அவளுக்கு எந்த உதவியும் அவர்களால் செய்ய முடியவில்லை. அசீரியருடைய மூன்று வருட முற்றுகைக்குப்பின், பொ.ச.மு. 740-ல் அவளுடைய தலைநகரான சமாரியா வீழ்ச்சியடைந்தது; அதன்பின் பத்துக் கோத்திர ராஜ்யம் ஒருபோதும் மீண்டும் ஸ்தாபிக்கப்படவே இல்லை. தங்களுடைய முன்னோர்கள் யெகோவாவை வழிபட்டுவந்தபோது நிலைமை எவ்வளவு நன்றாக இருந்தது என்பதை சிறைபட்டுப்போன இஸ்ரவேலரில் வெகு சிலரே உணருவார்கள். அந்த மீதியானோர் பாகால் வழிபாட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு, யெகோவாவுடன் புதிய உடன்படிக்கை உறவுக்குள் வர நாடுவார்கள்.
இந்நாடகத்தைப் பற்றிய மற்றொரு பார்வை
14. கோமேருடன் ஓசியா ஏன் மீண்டும் தாம்பத்திய உறவுகொள்ள ஆரம்பித்தார்?
14 ஓசியாவின் தாம்பத்திய வாழ்க்கைக்கும் யெகோவாவுடன் இஸ்ரவேலருடைய உறவுக்கும் இடையே இருந்த தொடர்பை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “கர்த்தர் என்னை நோக்கி: . . . நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.” (ஓசியா 3:1) கோமேர் தொடர்பு வைத்திருந்த மனிதனிடமிருந்து அவளை மீட்பதன் மூலம் இந்தக் கட்டளைக்கு ஓசியா கீழ்ப்படிந்தார். பிறகு, ஓசியா தன் மனைவிக்கு இவ்வாறு உறுதியாக புத்திமதி கூறினார்: “நீ வேசித்தனம் பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேக நாள் எனக்காகக் காத்திரு.” (ஓசியா 3:2, 3) கோமேர் அந்த சிட்சைக்குக் கீழ்ப்படிந்ததால் ஓசியா அவளுடன் மீண்டும் தாம்பத்திய உறவுகொள்ள ஆரம்பிக்கிறார். இஸ்ரவேல் மற்றும் யூதாவுடன் கடவுள் வைத்திருந்த உறவுகளுடன் இது எவ்வாறு பொருந்தியது?
15, 16. (அ) கடவுளுடைய சிட்சைக்குக் கீழ்ப்படிந்த தேசம் எத்தகைய சூழ்நிலையில் இரக்கம் பெற முடிந்தது? (ஆ) ஓசியா 2:18 எவ்வாறு நிறைவேறியுள்ளது?
15 இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் நாடுகடத்தப்பட்டவர்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கையில், கடவுள் தமது தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி ‘அவர்களோடே பட்சமாய்ப் பேசினார்.’ தெய்வீக இரக்கத்தைப் பெறுவதற்கு, கோமேர் தனது கணவரிடம் திரும்ப வந்ததுபோல், அவருடைய ஜனங்களும் மனந்திரும்பி தங்கள் நாயகரிடம் திரும்ப வேண்டியிருந்தது. அப்பொழுது, சிட்சைக்குக் கீழ்ப்படிந்த மனைவி போன்ற தமது தேசத்தினரை பாபிலோனின் ‘வனாந்தரத்திலிருந்து’ மீண்டும் அழைத்துவந்து, அவர்களை யூதாவிலும் எருசலேமிலும் குடிவைப்பார். (ஓசியா 2:14, 15) அந்த வாக்குறுதியை பொ.ச.மு. 537-ல் அவர் நிறைவேற்றினார்.
16 பின்வரும் வாக்குறுதியையும் கடவுள் நிறைவேற்றினார்: “அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கை பண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருக்கப் பண்ணுவேன்.” (ஓசியா 2:18) தங்களுடைய தாயகத்திற்குத் திரும்பிய யூத மீதியானோர் மிருக பயம் ஏதுமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். இத்தீர்க்கதரிசனம் பொ.ச. 1919-லும் நிறைவேறியது, அப்பொழுது ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோர் ‘மகா பாபிலோன்’ எனும் பொய் மத உலகப் பேரரசிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் இப்பொழுது பாதுகாப்புடன் சுகமாக வாழ்கிறார்கள், பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய தங்கள் தோழர்களுடன் ஆவிக்குரிய பரதீஸில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறார்கள். இந்த மெய் கிறிஸ்தவர்கள் மத்தியில் மிருகத்தனமான குணங்கள் கிடையாது.—வெளிப்படுத்துதல் 14:8; ஏசாயா 11:6-9; கலாத்தியர் 6:16.
பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
17-19. (அ) கடவுளுடைய என்ன பண்புகளை நாம் பின்பற்றுவதற்கு உந்துவிக்கப்படுகிறோம்? (ஆ) யெகோவாவின் இரக்கமும் பரிவும் நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
17 கடவுள் இரக்கமுள்ளவர், அனுதாபமுள்ளவர், நாமும் அவரைப் போலவே இருக்க வேண்டும். இது ஓசியாவின் ஆரம்ப அதிகாரங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பாடம். (ஓசியா 1:6, 7; 2:23) மனந்திரும்பிய இஸ்ரவேலருக்கு கடவுள் மனப்பூர்வமாய் இரக்கம் காட்டியது ஏவுதலால் எழுதப்பட்ட பின்வரும் நீதிமொழிக்கு இசைவாக இருக்கிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள் 28:13) சங்கீதக்காரனுடைய பின்வரும் வார்த்தைகளும் மனந்திரும்பிய பாவிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது: “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.”—சங்கீதம் 51:17.
18 நாம் வணங்கும் கடவுளுடைய பரிவையும் இரக்கத்தையும் ஓசியாவின் தீர்க்கதரிசனம் சிறப்பித்துக் காட்டுகிறது. சிலர் அவருடைய நீதியான வழிகளிலிருந்து வழிவிலகிப் போனாலும்கூட, அவர்கள் மனந்திரும்பி வரமுடியும். அப்படி செய்தால், அவர்களை யெகோவா வரவேற்கிறார். அடையாளப்பூர்வ திருமண பந்தத்திற்குள் இருந்த இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த மனந்திரும்பியவர்களுக்கு அவர் இரக்கம் காண்பித்தார். அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் ‘இஸ்ரவேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தியபோதிலும், அவர் இரக்கமுள்ளவராக இருந்தார், அவர்கள் மாம்சமென்று எப்பொழுதும் நினைவுகூர்ந்தார்.’ (சங்கீதம் 78:38-41) பரிவுள்ள நம் கடவுளாகிய யெகோவாவுடன் தொடர்ந்து நடப்பதற்கு இத்தகைய இரக்கம் நம்மை உந்துவிக்க வேண்டும்.
19 கொலை, திருட்டு, விபச்சாரம் போன்ற பாவங்கள் இஸ்ரவேலில் தலைவிரித்தாடியபோதிலும், யெகோவா ‘அவர்களிடம் பட்சமாகப் பேசினார்.’ (ஓசியா 2:14; 4:2) அவருடைய இரக்கத்தையும் பரிவையும் சிந்தித்துப் பார்க்கும்போது, அது நம் இருதயத்தைத் தூண்ட வேண்டும், யெகோவாவிடம் நாம் வைத்திருக்கும் நெருக்கமான உறவையும் பலப்படுத்த வேண்டும். ஆகையால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வோமாக: ‘மற்றவர்களோடு பழகும் விஷயத்தில், யெகோவாவின் இரக்கத்தையும் பரிவையும் நான் எப்படி இன்னும் நன்றாக காட்ட முடியும்? சக கிறிஸ்தவர் என்னை புண்படுத்திவிட்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டால், கடவுளைப் போல மன்னிக்கத் தயாராக இருக்கிறேனா?’—சங்கீதம் 86:5, NW.
20. கடவுள் தந்திருக்கும் நம்பிக்கையில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்கு ஓர் உதாரணம் தருக.
20 கடவுள் உண்மையான நம்பிக்கையை அளிக்கிறார். உதாரணமாக, ‘அவளுக்கு . . . நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுப்பேன்’ என அவர் வாக்குறுதி அளித்தார். (ஓசியா 2:15) யெகோவாவின் மனைவி போன்றிருந்த பூர்வகால ஜனத்திற்கு தாயகம் திரும்புவோம் என்ற நிச்சயமான நம்பிக்கை இருந்தது, அங்குதான் ‘ஆகோரின் பள்ளத்தாக்கு’ இருந்தது. பொ.ச.மு. 537-ல், இந்த வாக்குறுதி நிறைவேற்றம் அடைந்தது, இது நமக்கு முன்னால் யெகோவா வைத்திருக்கும் நிச்சயமான நம்பிக்கையில் களிகூருவதற்கு நியாயமான காரணத்தைத் தருகிறது.
21. நாம் கடவுளுடன் நடப்பதில் அறிவு வகிக்கும் பங்கு என்ன?
21 கடவுளுடன் தொடர்ந்து நடப்பதற்கு, அவரைப் பற்றிய அறிவை விடாமல் பெற்றுவர வேண்டும், அதை நம்முடைய வாழ்க்கையில் பொருத்தவும் வேண்டும். இஸ்ரவேல் ஜனத்தாருக்கு யெகோவாவைப் பற்றிய அறிவே இருக்கவில்லை. (ஓசியா 4:1, 6) என்றாலும், கடவுளுடைய போதனையை சிலர் உயர்வாக மதித்து, அதற்கு இசைவாக வாழ்ந்தார்கள், அதனால் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அவர்களில் ஓசியாவும் ஒருவர். இவர்களைப் போலவே எலியாவின் நாளில் பாகாலுக்கு முன்பு மண்டியிடாதிருந்த 7,000 பேரும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். (1 இராஜாக்கள் 19:18; ரோமர் 11:1-4) கடவுளுடைய போதனைக்கு நாம் காட்டும் நன்றியுணர்வு அவருடன் தொடர்ந்து நடப்பதற்கு உதவும்.—சங்கீதம் 119:66; ஏசாயா 30:20, 21.
22. விசுவாசதுரோகத்தை நாம் எப்படி கருத வேண்டும்?
22 தமது ஜனங்கள் மத்தியில் முன்நின்று வழிநடத்துகிறவர்கள் விசுவாசதுரோகத்தைப் புறக்கணிக்கும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். என்றாலும், ஓசியா 5:1 இவ்வாறு கூறுகிறது: “ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.” விசுவாசதுரோக தலைவர்களே இஸ்ரவேலருக்கு கண்ணியாகவும் வலையாகவும் இருந்து, விக்கிரகாராதனையில் ஈடுபட அவர்களைத் தூண்டினார்கள். தாபோர் மலையும் மிஸ்பா என்ற இடமும் இத்தகைய பொய் வழிபாட்டிற்கு மையமாக இருந்திருக்கலாம்.
23. ஓசியா 1-ம் அதிகாரம்முதல் 5-ம் அதிகாரம்வரை ஆராய்ந்தவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு பயன் அடைந்திருக்கிறீர்கள்?
23 யெகோவா நம்பிக்கை அளிக்கிற இரக்கமுள்ள கடவுள் என்பதையும், அவருடைய அறிவுரைகளைக் கடைப்பிடித்து நடந்து விசுவாசதுரோகத்தைப் புறக்கணிக்கிறவர்களை ஆசீர்வதிக்கிற கடவுள் என்பதையும் ஓசியா தீர்க்கதரிசனம் இதுவரை நமக்கு காண்பித்திருக்கிறது. மனந்திரும்பிய இஸ்ரவேலரைப் போலவே, நாமும் யெகோவாவை நாடி எப்பொழுதும் அவரைப் பிரியப்படுத்த முயலுவோமாக. (ஓசியா 5:15) அப்படி செய்தால் நன்மையை அறுவடை செய்வோம், கடவுளுடன் உத்தமமாக நடக்கிற அனைவரும் அனுபவித்து மகிழும் ஈடில்லா சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அடைவோம்.—சங்கீதம் 100:2; பிலிப்பியர் 4:6, 7.
[அடிக்குறிப்பு]
a கலாத்தியர் 4:21-26-ல் ஓர் அடையாளப்பூர்வ நாடகம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு வேதாகமத்தின் பேரில் உட்பார்வை என்ற ஆங்கில நூலில் தொகுதி 2, பக்கங்கள் 693-4-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• கோமேரை ஓசியா மணமுடித்தது எதை அடையாளப்படுத்தியது?
• இஸ்ரவேலுக்கு எதிராக யெகோவா ஏன் வழக்குத் தொடுத்தார்?
• ஓசியா 1 முதல் 5 அதிகாரங்களில் உங்கள் மனதைக் கவர்ந்தது எது?
[பக்கம் 18-ன் படம்]
ஓசியாவின் மனைவி யாரை பிரதிநிதித்துவம் செய்கிறாள் என உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 19-ன் படம்]
பொ.ச.மு. 740-ல் சமாரியாவின் குடிகளை அசீரியர் வென்றனர்
[பக்கம் 20-ன் படம்]
சந்தோஷமுள்ள ஜனங்கள் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்புகின்றனர்