உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 12/15 பக். 24-29
  • உறுதியுடன் செயல்பட காலம் இதுவே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உறுதியுடன் செயல்பட காலம் இதுவே
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏறுமாறாக நடந்த தமது ஜனங்கள்மீது கடவுளின் அன்பு
  • இப்பொழுதே உறுதியுடன் செயல்படுங்கள்
  • பொய் மதத்தின் திடீர் அழிவு
  • இவர் உண்மை வணக்கத்திற்காக உறுதியோடு நின்றார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • கர்மேல் மலையில் ஒரு சோதனை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • யெகூ பக்திவைராக்கியத்தோடு உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • உண்மை கடவுளை எலியா உயர்த்துகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 12/15 பக். 24-29

உறுதியுடன் செயல்பட காலம் இதுவே

“நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்”?​—⁠1 இராஜாக்கள் 18:⁠21.

1. கடந்த காலத்திலிருந்து நம் காலத்தை வேறுபடுத்திக் காட்டுவது எது?

யெகோவாவே மெய்யான தேவன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நாம் வாழும் காலத்தை சாத்தானுடைய பொல்லாத உலகின் ‘கடைசி நாட்கள்’ என பைபிள் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டுவதையும் நீங்கள் நம்புகிறீர்களா? (2 தீமோத்தேயு 3:1) அப்படியானால், இப்பொழுதே உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை நீங்கள் கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள். மனித சரித்திரத்தில் முன்னொருபோதும் இத்தனை அநேக உயிர்கள் ஆபத்தில் இருந்ததில்லை.

2. ஆகாப் ராஜா ஆட்சிபுரிந்த காலத்தில் பத்துக் கோத்திர ராஜ்யத்தில் என்ன நடந்தது?

2 பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில், இஸ்ரவேல் தேசத்தார் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எதிர்ப்பட்டார்கள். அவர்கள் யாரை வழிபடுவார்கள்? புறமதத்தைச் சேர்ந்த தனது மனைவி யேசபேலின் செல்வாக்கிற்கு அடிபணிந்து, ஆகாப் ராஜா இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தில் பாகால் வழிபாட்டை ஊக்குவித்தான். பாகால் என்பது ஒரு கருவள தெய்வம், அது மழையையும் செழிப்பான விளைச்சலையும் அருளும் தெய்வமாகக் கருதப்பட்டது. பாகாலை வழிபட்ட பலர் அத்தெய்வத்திற்கு தூரத்திலிருந்தே முத்தம் கொடுத்திருக்கலாம் அல்லது அதன் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கியிருக்கலாம். தங்கள் பயிர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாகால் ஆசி வழங்க வேண்டும் என்பதற்காக ஆலய வேசிகளுடன் சேர்ந்து காம விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள். இரத்தம் வழிந்தோட தங்களுடைய உடம்பை கீறிக்கொள்ளும் பழக்கமும்கூட அவர்களுக்கு இருந்தது.​—⁠1 இராஜாக்கள் 18:⁠28.

3. கடவுளுடைய ஜனங்கள்மீது பாகால் வழிபாடு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது?

3 விக்கிரகாராதனையும் ஒழுக்கயீனமும் வன்முறையும் நிறைந்த இத்தகைய வழிபாட்டில், இஸ்ரவேலரில் மீதியாயிருந்த சுமார் 7,000 பேர் கலந்துகொள்ள மறுத்தார்கள். (1 இராஜாக்கள் 19:18) யெகோவா தேவனுடன் செய்திருந்த உடன்படிக்கைக்கு அவர்கள் உண்மையுடன் இருந்தார்கள், இதற்காக துன்புறுத்தப்பட்டார்கள். உதாரணமாக, யெகோவாவின் தீர்க்கதரிசிகள் பலரை யேசபேல் ராணி கொலை செய்தாள். (1 இராஜாக்கள் 18:4, 13) இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் நிலவியதால், இஸ்ரவேலரில் பெரும்பாலோர் கலப்பு விசுவாசத்தில் ஈடுபட்டு வந்தார்கள், அதாவது யெகோவாவையும் பாகாலையும் பிரியப்படுத்த முயன்றார்கள். ஆனால் யெகோவாவை விட்டுவிலகி பொய் தெய்வத்தை வழிபடுவது ஓர் இஸ்ரவேலருக்கு விசுவாசதுரோகச் செயலாக இருந்தது. இஸ்ரவேலர் தம்மை நேசித்து தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவர்களை ஆசீர்வதிப்பதாக யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். என்றாலும், தமக்கு ‘தனிப்பட்ட பக்தியை’ செலுத்தத் தவறினால், அவர்கள் அழிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தார்.​—⁠உபாகமம் 5:6-10, NW; 28:15, 63.

4. கிறிஸ்தவர்கள் மத்தியில் என்ன சம்பவிக்குமென இயேசுவும் அப்போஸ்தலர்களும் முன்னறிவித்தார்கள், அது எவ்வாறு நிறைவேறியிருக்கிறது?

4 இன்று கிறிஸ்தவமண்டலத்தில் இதுபோன்ற சூழல் நிலவுகிறது. சர்ச் அங்கத்தினர்கள் தங்களை கிறிஸ்தவர்களென சொல்லிக் கொள்கிறார்கள், ஆனால் அவர்களுடைய பண்டிகைகளும் நடத்தைகளும் நம்பிக்கைகளும் பைபிள் போதனைகளுக்கு முரணாக இருக்கின்றன. யேசபேலைப் போல், கிறிஸ்தவமண்டல பாதிரிமார் யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதில் முன்னணி வகிக்கிறார்கள். கிறிஸ்தவமண்டல பாதிரிமார் போர்களை ஆதரித்ததையும் கோடானுகோடி சர்ச் அங்கத்தினர்களுடைய மரணத்திற்குக் காரணமாக இருந்ததையும் சரித்திர ஏடுகள் எடுத்துரைக்கின்றன. உலக அரசாங்கங்களுக்கு அவர்கள் அளிக்கும் இத்தகைய மத ஆதரவை ஆன்மீக வேசித்தனம் என பைபிள் வெளிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 18:2, 3) அதோடு, சொல்லர்த்தமான வேசித்தனத்தை, அதுவும் பாதிரிமார் மத்தியிலேயே நடக்கும் வேசித்தனத்தை, கிறிஸ்தவமண்டலம் கண்டுங்காணாமல் விட்டுவிட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் இத்தகைய பெரும் விசுவாசதுரோகத்தைப் பற்றி முன்னறிவித்தார்கள். (மத்தேயு 13:36-43; அப்போஸ்தலர்கள் 20:29, 30; 2 பேதுரு 2:1, 2) கிறிஸ்தவமண்டலத்தைப் பின்பற்றும் நூறுகோடிக்கும் அதிகமான ஆட்களுக்கு இறுதியில் என்ன நடக்கப்போகிறது? இவர்களுக்கும், பொய் மதத்தால் தவறாக வழிநடத்தப்படுகிற மற்றெல்லாருக்கும் யெகோவாவின் மெய் வணக்கத்தார் என்ன செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்? ‘பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போடுவதற்கு’ முன் நிகழ்ந்த தத்ரூபமான சம்பவங்களை ஆராய்வதன் மூலம் இத்தகைய கேள்விகளுக்குத் தெளிவான பதிலை நாம் பெறலாம்.​—⁠2 இராஜாக்கள் 10:⁠28.

ஏறுமாறாக நடந்த தமது ஜனங்கள்மீது கடவுளின் அன்பு

5. ஏறுமாறாக நடந்த தமது ஜனங்களிடம் யெகோவா எப்படி அன்புடன் அக்கறை காட்டினார்?

5 உண்மையற்றவர்களாக மாறியவர்களைத் தண்டிப்பதில் யெகோவா சந்தோஷப்படுவதில்லை. துன்மார்க்கர் மனந்திரும்பி தம்மிடம் மீண்டும் வர வேண்டும் என்றே ஓர் அன்பான தகப்பனைப் போல் அவர் விரும்புகிறார். (எசேக்கியேல் 18:32; 2 பேதுரு 3:9) இதற்கு அத்தாட்சியாக, பாகால் வழிபாட்டின் மோசமான விளைவுகளைப் பற்றி தமது ஜனங்களை எச்சரிப்பதற்கு ஆகாப் மற்றும் யேசபேலின் நாட்களில் தீர்க்கதரிசிகள் பலரை யெகோவா பயன்படுத்தினார். அவர்களில் ஒருவரே எலியா தீர்க்கதரிசி. முன்னறிவிக்கப்பட்ட கடும் வறட்சிக்குப்பின், இஸ்ரவேலரையும் பாகால் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலையில் ஒன்றுகூட்டும்படி ஆகாப் ராஜாவிடம் எலியா கூறினார்.​—⁠1 இராஜாக்கள் 18:1, 19.

6, 7. (அ) இஸ்ரவேலருடைய விசுவாசதுரோகத்தின் ஆணிவேரை எலியா எப்படி அம்பலப்படுத்தினார்? (ஆ) பாகால் தீர்க்கதரிசிகள் என்ன செய்தார்கள்? (இ) எலியா என்ன செய்தார்?

6 யெகோவாவின் பலிபீடம் ‘தகர்க்கப்பட்டிருந்த’ இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது; ஒருவேளை யேசபேலைப் பிரியப்படுத்த அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். (1 இராஜாக்கள் 18:30) வருத்தகரமாக, அந்தச் சமயத்தில் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்ட மழையை உண்மையிலேயே யார் வருவிக்க முடியும்​—⁠யெகோவாவா அல்லது பாகாலா​—⁠என்பதைக் குறித்து அங்கு கூடியிருந்த இஸ்ரவேலர் நிச்சயமின்றி இருந்தார்கள். பாகாலைப் பிரதிநிதித்துவம் செய்து 450 தீர்க்கதரிசிகள் கூடிவந்திருந்தார்கள், மறுபட்சத்தில் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்ய எலியா மாத்திரமே வந்திருந்தார். அந்த ஜனங்களுடைய பிரச்சினையின் ஆணிவேரை அம்பலப்படுத்தும் விதத்தில், எலியா அவர்களிடம் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்”? பிறகு, இன்னும் எளிய வார்த்தைகளில் இந்த விவாதத்தை அவர்கள் முன்வைத்தார்: ‘யெகோவா தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்.’ யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தி செலுத்துவதற்கு இருமனமுள்ள இஸ்ரவேலரைத் தூண்டுவதற்காக, யார் உண்மையான தெய்வம் என்பதை நிரூபித்துக்காட்டும் ஒரு பரீட்சையை எலியா முன்வைத்தார். பலியாக இரண்டு காளைகள் வெட்டப்பட வேண்டும், ஒன்று யெகோவாவுக்கு மற்றொன்று பாகாலுக்கு. யார் உண்மையான கடவுளோ, அவர் தமது பலியை அக்கினியால் பட்சிப்பார். பாகால் தீர்க்கதரிசிகள் தங்களுடைய பலியைத் தயார்ப்படுத்தி, “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்”! என்று மணிக்கணக்காக கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள். எலியா அவர்களைப் பரிகசிக்கத் தொடங்கியபோது, இரத்தம் சொட்டுமளவுக்கு அவர்கள் தங்களுடைய உடம்பில் கீறிக்கொண்டார்கள், உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்கள். ஆனால் எந்தப் பதிலும் இல்லை.​—⁠1 இராஜாக்கள் 18:21, 26-29.

7 இப்பொழுது எலியாவின் முறை வந்தது. முதலாவதாக, யெகோவாவின் பலிபீடத்தை சரிசெய்து, இளம் காளையின் துண்டுகளை அதன்மீது வைத்தார். பின்பு பலிபீடத்தின் மீது நான்கு பெரிய குடங்களில் தண்ணீர் ஊற்றும்படி கட்டளையிட்டார். பலிபீடத்தைச் சுற்றிலும் கால்வாய் போல் தண்ணீர் ஓடும்வரை இப்படி மூன்று முறை செய்யப்பட்டது. பிறகு எலியா ஜெபம் செய்தார்: ‘ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். யெகோவாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றார்.’​—⁠1 இராஜாக்கள் 18:30-37.

8. எலியாவின் ஜெபத்திற்கு கடவுள் எப்படிப் பதிலளித்தார், அந்தத் தீர்க்கதரிசி எடுத்த நடவடிக்கை என்ன?

8 பரலோகத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணி பலியையும் பலிபீடத்தையும் பட்சிப்பதன் மூலம் உண்மையான கடவுள் பதிலளித்தார். அந்தப் பலிபீடத்தைச் சுற்றியிருந்த தண்ணீர்களையும்கூட அக்கினி பட்சித்தது! இஸ்ரவேலர்மீது இச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். ‘ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம்!’ என்று சொன்னார்கள். அப்பொழுது எலியா மேலுமான நடவடிக்கை எடுத்து, இஸ்ரவேலருக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள்”! பின்பு 450 பாகால் தீர்க்கதரிசிகள் எல்லாரும் கர்மேல் மலையின் அடிவாரத்தில் கொலை செய்யப்பட்டார்கள்.​—⁠1 இராஜாக்கள் 18:38-40.

9. உண்மை வணக்கத்தார் எப்படி மீண்டும் பரீட்சிக்கப்பட்டார்கள்?

9 மறக்க முடியாத அதே நாளில், மூன்றரை வருஷங்களில் முதல் முறையாக அத்தேசத்தின் மீது யெகோவா மழையை வருவித்தார். (யாக்கோபு 5:17, 18) இஸ்ரவேலர் வீடு திரும்புகையில் அவர்களுடைய உரையாடலை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்; தாமே உண்மையான கடவுள் என்பதை யெகோவா அன்று நிரூபித்துக் காட்டினார். என்றாலும், பாகாலை வணங்கியவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. யெகோவாவின் ஊழியர்களை யேசபேல் தொடர்ந்து துன்புறுத்தி வந்தாள். (1 இராஜாக்கள் 19:1, 2; 21:11-16) ஆகவே, கடவுளுடைய ஜனங்களின் உத்தமத்தன்மை மீண்டும் பரீட்சிக்கப்பட்டது. பாகால் வணக்கத்தார்மீது நியாயத்தீர்ப்பு நாள் வரும்போது, அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியைச் செலுத்துவார்களா?

இப்பொழுதே உறுதியுடன் செயல்படுங்கள்

10. (அ) நவீன காலங்களில், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்து வந்திருக்கிறார்கள்? (ஆ) வெளிப்படுத்துதல் 18:4-⁠ல் உள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிவது எதை அர்த்தப்படுத்துகிறது?

10 நவீன காலங்களில், எலியா செய்ததைப் போன்ற வேலையை அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் செய்திருக்கிறார்கள். வாய்மொழியாகவும் அச்சுத்தாள்கள் வாயிலாகவும் பொய் மதத்தின் ஆபத்தைப் பற்றி கிறிஸ்தவமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற எல்லா தேசத்து மக்களுக்கும் அவர்கள் எச்சரிப்பு விடுத்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பொய் மதத்தை விட்டுவிலகுவதற்கு லட்சோபலட்சம் பேர் உறுதியுடன் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள். ஆம், “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என பொய் மதத்தைக் குறித்து கடவுள் கொடுத்த அவசர வேண்டுகோளுக்கு அவர்கள் செவிசாய்த்திருக்கிறார்கள்.​—⁠வெளிப்படுத்துதல் 18:⁠4.

11. யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

11 இன்னும் லட்சோபலட்சம் பேர் யெகோவாவின் சாட்சிகள் கற்பித்துவருகிற பைபிள் செய்தியிடம் மனம் கவரப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இன்னும் நிச்சயமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு, அதாவது கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புக்கோ மாவட்ட மாநாடுகளின் சில நிகழ்ச்சிநிரல்களுக்கோ, எப்பொழுதாவது வருகிறார்கள். “எவ்வளவு காலம் நீங்கள் மதில்மேல் உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள்?” என்ற எலியாவின் வார்த்தைகளைக் கவனமாக சிந்தித்துப் பார்க்கும்படி இவர்கள் அனைவரையும் நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். (1 இராஜாக்கள் 18:21, நியூ இங்லிஷ் பைபிள்) தாமதிப்பதற்குப் பதிலாக, இப்பொழுதே அவர்கள் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படும் இலக்கை அடைய ஆர்வமாக உழைக்க வேண்டும். ஏனென்றால் நித்திய ஜீவன் கிடைக்குமா கிடைக்காதா என்பது அதன்பேரில்தான் சார்ந்திருக்கிறது!​—⁠2 தெசலோனிக்கேயர் 1:6-9.

12. முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர்கள் சிலர் என்ன ஆபத்தான நிலைக்குள் அகப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

12 முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர்கள் சிலர், தங்களுடைய வழிபாட்டில் ஒழுங்கற்றவர்களாக அல்லது செயலற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. (எபிரெயர் 10:23-25; 13:15, 16) துன்புறுத்தல் வருமென்ற பயம், பிழைப்புக்காகச் சம்பாதிக்க வேண்டுமென்ற கவலைகள், பணக்காரராவதற்கு அல்லது சுயநல இன்பங்களை நாடுவதற்கு முயற்சிகள் போன்ற காரணங்களால் கடவுளுடைய சேவையில் சிலர் தங்களுடைய பக்திவைராக்கியத்தை இழந்திருக்கிறார்கள். தம்மைப் பின்பற்றுகிற சிலருக்கு இதே காரியங்கள்தான் இடறல் உண்டாக்கும், அவர்களை நெருக்கிப்போடும், கண்ணியில் அகப்படுத்தும் என்று இயேசு எச்சரித்தார். (மத்தேயு 10:28-33; 13:20-22; லூக்கா 12:22-31; 21:34-36) இப்படிப்பட்டவர்கள் ‘இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பதற்குப்’ பதிலாக, கடவுளுக்குத் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் ‘பக்திவைராக்கியமுள்ளவர்களாய் இருந்து மனந்திரும்ப’ வேண்டும்.​—⁠வெளிப்படுத்துதல் 3:15-19, NW.

பொய் மதத்தின் திடீர் அழிவு

13. யெகூ ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டபோது இஸ்ரவேலில் நிலவிய சூழ்நிலையை விவரியுங்கள்.

13 கடவுள் யார் என்பதைப் பற்றிய கேள்வி கர்மேல் மலையில் தீர்க்கப்பட்டு, ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரவேலில் மற்றொரு சம்பவம் நடந்தது. மனிதர்கள் இப்பொழுதே உறுதியான நடவடிக்கை எடுப்பது ஏன் அவசரம் என்பதற்குரிய காரணத்தை அந்தச் சம்பவத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். எலியாவுக்குப் பின் வந்த எலிசாவின் ஊழிய காலத்தில் பாகால் வணக்கத்தாருக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் திடீரென எதிர்பாராத விதத்தில் வந்தது. ஆகாப் ராஜாவுடைய மகன் யோராம் இஸ்ரவேலை ஆண்டு வந்தான், தாயார் யேசபேல் ராணி இன்னும் உயிரோடிருந்தாள். இஸ்ரவேலின் சேனைத் தலைவரான யெகூவை புதிய ராஜாவாக அபிஷேகம் செய்யும்படி எலிசா அமைதியாய் தன் ஊழியக்காரனை அனுப்பினார். அந்தச் சமயத்தில் யெகூ யோர்தானின் கிழக்குப் பகுதியில் ராமோத் கீலேயாத்தில் இருந்து, இஸ்ரவேலின் சத்துருக்களுக்கு எதிரான போரைத் தலைமைதாங்கி நடத்திக்கொண்டிருந்தார். யோராம் ராஜா மெகிதோவுக்கு அருகில் பள்ளத்தாக்கு சமபூமியிலுள்ள யெஸ்ரயேலில் தங்கி, போர் காயத்திலிருந்து குணமடைந்து வந்தார்.​—⁠2 இராஜாக்கள் 8:⁠29-​9:⁠4.

14, 15. யெகூவுக்கு என்ன கட்டளை கொடுக்கப்பட்டது, அதற்கு ஏற்ப அவர் என்ன செய்தார்?

14 யெகூவிடம் யெகோவா கட்டளையிட்டது இதுவே: “நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய். ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, . . . யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம் பண்ணுகிறவன் இல்லை.”​—⁠2 இராஜாக்கள் 9:​7-​10.

15 அனைத்து விஷயங்களிலும் யெகூ உறுதியானவராக இருந்தார். தாமதிக்காமல், தனது இரதத்தில் ஏறி யெஸ்ரயேலை நோக்கி விரைந்தார். இரதத்தை ஓட்டி வருவது யெகூதான் என்பதை யெஸ்ரயேலில் இருந்த ஒரு காவற்காரன் அடையாளம் கண்டுகொண்டு, ராஜாவான யோராமுக்கு அறிவித்தான். உடனே யோராம் தனது இரதத்தில் ஏறி தன்னுடைய சேனைத் தலைவரான யெகூவைச் சந்திக்கச் சென்றார். அவரைச் சந்தித்தபோது, “யெகூவே சமாதானமா?” என்று கேட்டார். அதற்கு யெகூ: “உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும் இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது”? என்று பதிலுக்குக் கேட்டார். பின்பு யோராம் ராஜா தப்பியோடுவதற்குள் தனது வில்லை எடுத்து அவன் நெஞ்சில் எய்து அவனைக் கொன்றார்.​—⁠2 இராஜாக்கள் 9:​20-​24.

16. (அ) என்ன சூழ்நிலைமையை யேசபேலின் அரசவை அதிகாரிகள் திடீரென எதிர்ப்பட்டார்கள்? (ஆ) யேசபேலைக் குறித்து யெகோவா உரைத்த வார்த்தை எப்படி நிறைவேறியது?

16 தாமதிக்காமல் உடனடியாக அந்தப் பட்டணத்திற்கு யெகூ தனது இரதத்தில் விரைந்து சென்றார். அளவுக்கு அதிகமாக அலங்கரித்திருந்த யேசபேல், ஜன்னல் வழியாக கீழ்நோக்கி, அச்சுறுத்தும் தோரணையில் யெகூவை வரவேற்றாள். அவளைக் கண்டுகொள்ளாமல், “என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்?” என யெகூ உதவிக்காக கூப்பிட்டார். யேசபேலின் அதிகாரிகள் இப்போது உறுதியுடன் செயல்பட வேண்டியிருந்தது. இரண்டு மூன்று அரசவை அதிகாரிகள் ஜன்னல் வழியாய் வெளியே எட்டிப் பார்த்தார்கள். உடனடியாக, அவர்களுடைய உண்மைப் பற்றுறுதி பரீட்சிக்கப்பட்டது. “அவளைக் கீழே தள்ளுங்கள்” என்று யெகூ கட்டளையிட்டார். உடனே, ஜன்னலிலிருந்து யேசபேலை கீழே தள்ளினார்கள். யெகூவின் குதிரைகளும் இரதமும் அவளை மிதித்து நசுக்கின. இவ்வாறு, இஸ்ரவேலில் பாகால் வணக்கத்தைத் தூண்டியவள் தக்க தண்டனையைப் பெற்றாள். அவளை அடக்கம் செய்வதற்குள், முன்னறிவிக்கப்பட்டபடியே, நாய்கள் அவளுடைய மாம்சத்தை தின்றுபோட்டன.​—⁠2 இராஜாக்கள் 9:​30-​37.

17. யேசபேல்மீது கடவுள் கொண்டுவந்த நியாயத்தீர்ப்பு, எந்த எதிர்கால சம்பவத்தின்மீது நமது விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும்?

17 “மகா பாபிலோன்” என்ற அடையாள அர்த்தமுடைய வேசிக்கு இதே போன்ற திடுக்கிடும் முடிவு வரும். இந்த வேசி சாத்தானுடைய உலகத்தின் பொய் மதங்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறாள், இந்தப் பொய் மதங்களெல்லாம் பூர்வ பாபிலோன் நகரத்திலிருந்து தோன்றியவை. பொய் மதம் அழிந்தபின், சாத்தானுடைய உலகத்தின் மதசார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த ஆட்கள் யாவரிடமும் யெகோவா தேவன் தமது கவனத்தைத் திருப்புவார். இவர்களும் அழிக்கப்படுவார்கள், அப்பொழுது நீதியுள்ள ஒரு புதிய உலகம் உதயமாகும்.​—⁠வெளிப்படுத்துதல் 17:3-6; 19:19-21; 21:1-4.

18. யேசபேலின் மரணத்திற்குப் பின், இஸ்ரவேலில் பாகால் வணக்கத்தாருக்கு என்ன நடந்தது?

18 யேசபேலின் மரணத்திற்குப் பின், ஆகாபின் சந்ததியார் அனைவரையும் முக்கிய ஆதரவாளர்களையும் ஒழித்துக்கட்டுவதற்கு ராஜாவான யெகூ தாமதிக்கவில்லை. (2 இராஜாக்கள் 10:11) ஆனால், பாகாலை வணங்கிய இஸ்ரவேலர் பலர் தேசத்தில் இருந்தார்கள். ‘யெகோவாவுக்காக தனக்கு இருக்கிற பக்தி வைராக்கியத்தைக்’ காட்டுவதற்கு இவர்கள்மீது யெகூ உறுதியான நடவடிக்கை எடுத்தார். (2 இராஜாக்கள் 10:16) தானே ஒரு பாகால் வணக்கத்தான் என்பதுபோல் நடித்து, சமாரியாவில் ஆகாப் கட்டிய பாகால் கோயிலில் மாபெரும் பண்டிகை ஒன்றை ஏற்பாடு செய்தார். இஸ்ரவேலில் இருந்த பாகால் வணக்கத்தார் அனைவரும் அந்தப் பண்டிகைக்கு வந்தார்கள். கோயிலுக்குள் சிக்கியிருந்த அவர்கள் அனைவரும் யெகூவின் ஆட்களால் கொல்லப்பட்டார்கள். “இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்” என்ற வார்த்தைகளுடன் இந்த விவரப்பதிவு முடிவடைகிறது.​—⁠இராஜாக்கள் 10:18-28.

19. அதிசயிக்கத்தக்க என்ன எதிர்பார்ப்பு ‘திரள் கூட்டமாகிய’ யெகோவாவின் உண்மைப் பற்றுறுதியுள்ள வணக்கத்தாருக்குக் காத்திருக்கிறது?

19 பாகால் வணக்கம் இஸ்ரவேலிலிருந்து அடியோடு ஒழிக்கப்பட்டது. அதைப் போலவே இந்த உலகிலுள்ள பொய் மதங்களுக்கும் திடுக்கிடும் விதத்தில் அழிவு திடீரென வரும். நியாயத்தீர்ப்பின் அந்த மகா நாளில் நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள்? இப்பொழுதே உறுதியுடன் செயல்படுங்கள், ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைக்கும் ‘திரள் கூட்டத்தாரில்’ ஒருவராக இருக்கும் பாக்கியத்தை நீங்கள் பெறலாம். அப்போது கடந்த காலத்தை நீங்கள் மகிழ்ச்சியுடன் நினைவுகூருவீர்கள். அதோடு, ‘தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு’ நியாயத்தீர்ப்பு கொடுத்ததற்காக’ கடவுளைத் துதிப்பீர்கள். மெய் வணக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களுடன் ஐக்கியப்பட்டவர்களாய், பரலோகத்திலிருந்து வரும் குரல்களோடு சேர்ந்து மெய்சிலிர்க்கும் பின்வரும் வார்த்தைகளுக்கு இசைய நீங்களும் பாடுவீர்கள்: “ஜனங்களே, யாவைத் துதியுங்கள்! சர்வவல்ல நம் தேவனாகிய யெகோவா அரசராக ஆளுகை செய்ய ஆரம்பித்துவிட்டார்.”​—⁠வெளிப்படுத்துதல் 7:9, 10, 14, 19:1, 2, 6, NW.

தியானிக்க சில கேள்விகள்

• பூர்வ இஸ்ரவேலர், பாகால் வணக்கத்தில் ஈடுபட்டு குற்றமுள்ளவர்களாக ஆனது எப்படி?

• பைபிள் முன்னறிவித்த பெரும் விசுவாசதுரோகம் எது, அத்தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியிருக்கிறது?

• பாகால் வணக்கத்தை யெகூ எப்படி ஒழித்துக்கட்டினார்?

• கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாளில் தப்பிப்பிழைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

[பக்கம் 25-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சோக்கோ

ஆப்பெக்

எல்காத்

யொக்னியாம்

மெகிதோ

தானாக்

தோத்தான்

சமாரியா

எந்தோர்

சூனேம்

ஓப்ரா

யெஸ்ரயேல்

இப்லெயாம் (காத்ரிம்மோன்)

திர்சா

பெத்ஷிமேசு

பெத்செயான்

யாபெஷ் கிலேயாத்?

ஆபேல்மேகொலா

பெத்தார்பேல்

ராமோத்-கீலேயாத்

[மலைச் சிகரங்கள்]

கர்மேல் மலை

தாபேர் மலை

மோரே

கில்போவா மலை

[நீர்நிலைகள்]

மத்திய தரைக்கடல்

கலிலேயாக் கடல்

[நதி]

யோர்தான் நதி

[ஊற்றுகள், கிணறுகள்]

ஆரோத்தின் கிணறு

[படத்திற்கான நன்றி]

Based on maps copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel

[பக்கம் 26-ன் படங்கள்]

தவறாமல் பிரசங்க வேலையில் பங்குகொள்வதும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருவதும் மெய் வணக்கத்தின் இன்றியமையாத அம்சங்கள்

[பக்கம் 28-ன் படங்கள்]

யெகோவாவின் நாளில் தப்பிப்பிழைக்க விரும்புகிற யாவரும் யெகூவைப் போல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்