உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• முதல் பாவத்தை, அதாவது ஆதாமின் கீழ்ப்படியாமையை, ஏன் பரம்பரை வியாதிக்கு ஒப்பிடலாம்?
அது வியாதியைப் போல் இருப்பதற்குக் காரணம், பாவத்தை ஆதாம் தனது சந்ததியாருக்குக் கடத்தியதே. பெற்றோரிடமிருந்து சில பிள்ளைகள் ஒரு வியாதியைப் பெறுவதுபோல் பாவம் என்ற குறைபாட்டை நாம் பெற்றிருக்கிறோம்.—8/15, பக்கம் 5.
• இன்று வன்முறை அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணங்கள் யாவை?
திரைப்படங்கள், இசை, கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றின் வாயிலாக நம் இருதயங்களில் ஓரளவு மூர்க்க குணத்தை விதைப்பதன் மூலம் யெகோவாவிடமிருந்து ஜனங்களை விலக்க சாத்தான் முயற்சி செய்கிறான்; கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுபவர்களின் மனதில் அவை கொடூரத்தையும் கொலையையும் தூண்டிவிடுகின்றன. மீடியாக்களில் காட்டப்படும் வன்முறையே பல வன்முறை செயல்களுக்குக் காரணமாக இருக்கின்றன.—9/1, பக்கம் 29.
• பொந்தியு பிலாத்து யார்?
அவர் ஒரு ரோமர், இரண்டாந்தர உயர்குடியைச் சேர்ந்தவர்; ஒருவேளை இராணுவ அதிகாரியாக இருந்திருக்கலாம். பொ.ச. 26-ல், ரோமப் பேரரசரான திபேரியு, யூதேயா மாகாணத்தின் மீது பிலாத்துவை ஆளுநராக நியமித்தார். இயேசுவை விசாரணை செய்த சமயத்தில் யூதத் தலைவர்களுடைய குற்றச்சாட்டுகளை பிலாத்து கேட்டார். ஜனக்கூட்டத்தாரைப் பிரியப்படுத்துவதற்காக இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தார்.—9/15, பக்கங்கள் 10-12.
• மத்தேயு 24:3-ல் குறிப்பிடப்பட்டுள்ள “அடையாளம்” என்பது என்ன?
அந்தக் கூட்டு அடையாளத்தில், அதாவது அறிகுறியில் ஏராளமான அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. போர், பஞ்சம், கொள்ளைநோய், பூமியதிர்ச்சிகள் ஆகிய அம்சங்கள் அந்த அடையாளத்தில் அடங்கியிருக்கின்றன; இயேசுவைப் பின்பற்றுபவர்கள், அவருடைய ‘பிரசன்னத்தையும்,’ ‘உலகத்தின் முடிவையும்’ பற்றிப் புரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது.—10/1, பக்கங்கள் 4-5.
• சிதறியிருந்த யூதர்கள் எந்தெந்த இடங்களில் இருந்தார்கள்?
முதல் நூற்றாண்டில், சீரியா, ஆசியா மைனர், பாபிலோனியா, எகிப்து ஆகிய இடங்களில் யூதர்கள் அதிகமாகக் குடியிருந்தார்கள். ரோம சாம்ராஜ்யத்தின் ஐரோப்பிய பகுதியிலும் சிறிய தொகுதிகளாகக் குடியிருந்தார்கள்.—10/15, பக்கங்கள் 12.
• ஆயுதம் ஏந்த வேண்டிய வேலையைச் செய்தால் ஒரு கிறிஸ்தவர் நல்மனச்சாட்சியைக் காத்துக்கொள்ள முடியுமா?
துப்பாக்கியை அல்லது வேறொரு ஆயுதத்தை ஏந்த வேண்டிய ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பது அவரவருடைய சொந்த தீர்மானத்திற்கு உட்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட வேலை செய்யும் ஒருவர் தனது ஆயுதத்தை உபயோகிக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்ப்படலாம்; அப்போது அவர் இரத்தப்பழிக்கு ஆளாகலாம். எதிராளி தாக்குகையில் அல்லது பழிவாங்குகையில் அவர்கள் காயப்படலாம் அல்லது கொல்லப்படலாம். இத்தகைய ஆயுதத்தை ஏந்தி வேலை செய்பவர் சபையில் எந்தவொரு விசேஷ நியமிப்பிற்கும் தகுதிபெற மாட்டார். (1 தீமோத்தேயு 3:3, 10)—11/1, பக்கம் 31.
• “அர்மகெதோன்” என்ற வார்த்தை “மெகிதோ மலை” என்ற வார்த்தையிலிருந்து வந்திருப்பதால் அர்மகெதோன் யுத்தம் மத்திய கிழக்கிலுள்ள ஒரு மலையில் நடக்குமா?
இல்லை. மெகிதோ என்பது ஒரு மலையே கிடையாது; இஸ்ரவேலில் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அருகில் வெறும் ஒரு குன்றுதான் இருக்கிறது. ‘பூமியிலுள்ள ராஜாக்கள் மற்றும் அவர்களுடைய சேனைகள்’ அனைவரையும் அங்கு கூட்டிச்சேர்க்க முடியாது. கடவுள் தொடுக்கும் மாபெரும் போர் உலகளவில் நடக்கப்போகிறது; அது எல்லாப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும். (வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:19; சங்கீதம் 46:8, 9)—12/1, பக்கங்கள் 4-7.