தேவதூதர்கள்—நமக்கு ஏதாவது செய்கிறார்களா?
கடவுளுடைய தூதர்கள் அடங்கிய பரலோகக் குடும்பத்தை தானியேல் தீர்க்கதரிசி ஒரு தரிசனத்தில் கண்டார்; அதை இவ்வாறு விவரித்தார்: ‘பல்லாயிரம் பேர் [தேவதூதர்கள்] அவருக்கு [அதாவது, கடவுளுக்கு] பணிபுரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.’ (தானியேல் 7:10, பொது மொழிபெயர்ப்பு) தேவதூதர்களைக் கடவுள் படைத்ததற்கான நோக்கத்தை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. அவர்கள் அவருக்குப் பணிபுரிய வேண்டும், அவர் கொடுக்கும் கட்டளைகளை நிறைவேற்ற தயாராகவும் இருக்க வேண்டும்.
மனித விவகாரங்களில், குறிப்பிட்ட சில காரியங்களை நிறைவேற்றுவதற்கு தேவதூதர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். தம்முடைய ஜனங்களைப் பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனிதர்களுக்குச் செய்திகளைத் தெரிவிப்பதற்கும், துன்மார்க்கருக்கு நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கும் தேவதூதர்களை அவர் பயன்படுத்துகிறார்; எப்படி என்பதை இப்போது நாம் சிந்திக்க இருக்கிறோம்.
தேவதூதர்கள் பலப்படுத்துகிறார்கள், பாதுகாக்கிறார்கள்
இந்தப் பூமியும் முதல் மானிடரும் படைக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்த்த சமயத்திலிருந்தே ஆவி சிருஷ்டிகள் மனிதகுலத்தின் மீது ஆழ்ந்த அக்கறை காட்டி வந்திருக்கிறார்கள். மனிதனாக வருவதற்கு முன்னர் ஞானத்தின் உருவாக அறியப்பட்டிருந்த இயேசு கிறிஸ்து, ‘மனித குமாரர்களிடம் இருந்த காரியங்களையே நான் மிகவும் நேசித்தேன்’ என்று சொன்னார். (நீதிமொழிகள் 8:31, NW) கிறிஸ்துவையும், கடவுளுடைய தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட எதிர்கால விஷயங்களையும் பற்றிய உண்மைகளை ‘உற்றுப்பார்க்க தேவதூதர்கள் ஆசையாயிருக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 1:11, 12.
காலம் செல்லச் செல்ல, மனிதகுலத்தில் பெரும்பான்மையோர் தங்களுடைய அன்பான சிருஷ்டிகரைச் சேவிக்காமல் விட்டுவிட்டதை தேவதூதர்கள் கவனித்தார்கள். உண்மையுள்ள தேவதூதர்களுக்கு அது எவ்வளவு விசனமாய் இருந்திருக்கும்! ஆனால், பாவம்செய்த ஒரு நபர் மனம்மாறி யெகோவாவிடம் திரும்புகிற சமயங்களிலெல்லாம் ‘தேவதூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாகிறது.’ (லூக்கா 15:10) கடவுளுக்குச் சேவை செய்பவர்களுடைய நலனில் தேவதூதர்கள் ஆழ்ந்த அக்கறை காண்பிக்கிறார்கள்; யெகோவா, பூமியில் வாழும் உண்மையுள்ள தமது ஊழியர்களைப் பலப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அப்படிப்பட்ட தூதர்களைப் பலமுறை உபயோகித்திருக்கிறார். (எபிரெயர் 1:14) சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
பொல்லாத ஜனங்கள் குடியிருந்த சோதோம் கொமோரா பட்டணங்களின் அழிவிலிருந்து நீதிமானான லோத்துவையும் அவருடைய மகள்களையும் இரண்டு தேவதூதர்கள் காப்பாற்றினார்கள்; அங்கிருந்து வேறு இடத்திற்கு அவர்களைப் பாதுகாப்பாய் அழைத்துச் சென்று அவர்கள் உயிரைக் காப்பாற்றினார்கள்.a (ஆதியாகமம் 19:1, 15-26) நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தானியேல் தீர்க்கதரிசி சிங்கங்களின் குகைக்குள் வீசப்பட்டபோது அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. ஏன்? “தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்” என அவர் சொன்னார். (தானியேல் 6:22) இயேசு பூமியில் தமது ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் தேவதூதர்கள் அவருக்கு உதவினார்கள். (மாற்கு 1:13) இயேசு மரிப்பதற்குச் சில மணிநேரங்கள் முன்பு, ஒரு தேவதூதன் அவருக்குக் காட்சி அளித்து, ‘அவரைப் பலப்படுத்தினார்.’ (லூக்கா 22:43) அவருடைய வாழ்க்கையின் கடுஞ்சோதனையான அச்சமயங்களில், அந்தத் தேவதூதனுடைய ஆதரவு இயேசுவுக்கு எவ்வளவாய் ஊக்கமூட்டியிருக்கும்! அப்போஸ்தலன் பேதுருவையும்கூட ஒரு தேவதூதன் சிறையிலிருந்து விடுவித்தார்.—அப்போஸ்தலர் 12:6-11.
தேவதூதர்கள் இன்று நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்களா? பைபிளில் சொல்லப்பட்டுள்ளபடி யெகோவாவை நாம் வணங்கினால், வல்லமைமிக்க காணக்கூடாத தேவதூதர்கள் கட்டாயம் நமக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.”—சங்கீதம் 34:7.
என்றாலும், தேவதூதர்கள் முக்கியமாக கடவுளுக்கே சேவை செய்கிறார்கள், மனிதர்களுக்கு அல்ல என்பதை நாம் புரிந்திருக்க வேண்டும். (சங்கீதம் 103:20, 21) கடவுளின் கட்டளைபடிதான் அவர்கள் எதையுமே செய்வார்கள், மனிதர்களுடைய அழைப்புகளின்படியோ வேண்டுதல்களின்படியோ அல்ல. எனவே, உதவிக்காக தேவதூதர்களிடம் அல்ல, ஆனால் யெகோவா தேவனிடமே நாம் மன்றாட வேண்டும். (மத்தேயு 26:53) தேவதூதர்களை நாம் பார்க்க முடியாததால், வெவ்வேறு விஷயங்களில் மனிதர்களுக்கு உதவ அவர்களைக் கடவுள் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் யெகோவா ‘தம்மிடமாக உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுவார்’ என்பது நமக்கு நன்றாகவே தெரியும். (2 நாளாகமம் 16:9; சங்கீதம் 91:11) ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் [கடவுள்] நமக்குச் செவிகொடுக்கிறார்’ என்ற உறுதியும் நமக்கு இருக்கிறது.—1 யோவான் 5:14.
நம்முடைய ஜெபமும் வணக்கமும் கடவுளிடம் மட்டுமே ஏறெடுக்கப்பட வேண்டுமெனவும் பைபிள் நமக்குச் சொல்கிறது. (யாத்திராகமம் 20:3-5; சங்கீதம் 5:1, 2; மத்தேயு 6:9) அவ்வாறு செய்யும்படியே உண்மையுள்ள தேவதூதர்கள் நம்மை ஊக்குவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் யோவான் ஒரு தேவதூதனை வணங்க முற்பட்டபோது, அந்தத் தூதன் அவரை அதட்டி, “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; . . . தேவனைத் தொழுதுகொள்” என்று சொன்னார்.—வெளிப்படுத்துதல் 19:10.
தேவதூதர்கள் கடவுளுடைய செய்திகளை அறிவிக்கிறார்கள்
“தேவதூதன்” என்ற வார்த்தை “தூதுவன்” எனும் அர்த்தத்தைக் கொடுக்கிறது; தேவதூதர்கள் கடவுளுக்குச் சேவை செய்கிற மற்றொரு வழி அதுதான், அதாவது கடவுள் சொல்லி அனுப்பும் செய்திகளை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதுவர்களாகச் சேவை செய்கிறார்கள். உதாரணத்திற்கு, ‘காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊருக்கு தேவனாலே அனுப்பப்பட்டான்.’ ஏன்? மரியாள் என்ற ஓர் இளம் பெண்ணுக்கு ஒரு செய்தியை அறிவிப்பதற்காக; அதாவது கன்னியாக இருக்கும் அவள் கர்ப்பவதியாகி இயேசு எனப் பெயரிடப்படும் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள் என்ற செய்தியை அறிவிப்பதற்காக. (லூக்கா 1:26-31) “கர்த்தராகிய கிறிஸ்து” பிறந்திருக்கிறார் என்ற செய்தியை வயல்வெளியிலிருந்த மேய்ப்பர்களிடம் தெரியப்படுத்துவதற்காகவும் ஒரு தேவதூதன் அனுப்பப்பட்டார். (லூக்கா 2:8-11) அதேபோல், ஆபிரகாமிடமும், மோசேயிடமும், இயேசுவிடமும், பைபிள் பதிவுகளிலுள்ள வேறு பலரிடமும் கடவுள் சொல்லி அனுப்பிய செய்திகளைத் தேவதூதர்கள் அறிவித்தார்கள்.—ஆதியாகமம் 18:1-5, 10; யாத்திராகமம் 3:1, 2; லூக்கா 22:39-43.
தேவதூதர்கள் இன்று கடவுளுடைய தூதுவர்களாக எவ்வாறு சேவை செய்கிறார்கள்? இந்தப் பொல்லாத உலகம் முடிவடைவதற்குள் தம்முடைய சீஷர்கள் செய்யப்போகும் வேலையைப் பற்றி இயேசு முன்னறிவித்த விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 24:3, 14) யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக வருடந்தோறும் நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரத்தைச் செலவிடுகிறார்கள். ஆனால், தேவதூதர்களும் இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்போஸ்தலன் யோவான் தான் கண்ட ஒரு தரிசனத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: ‘வேறொரு தூதனை . . . கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்தான்.’ (வெளிப்படுத்துதல் 14:6, 7) மனிதர்களுடைய சார்பில் தேவதூதர்கள் இன்று செய்துவருகிற அதிமுக்கியமான வேலையை இந்த வசனம் சிறப்பித்துக் காட்டுகிறது.
யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, தேவதூதர்களின் வழிநடத்துதல் இருப்பதற்கான அத்தாட்சியைக் காண்கிறார்கள். கடவுளுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்ள யாராவது வந்து தங்களுக்கு உதவ வேண்டுமென ஜெபித்துக்கொண்டிருந்த நபர்களை அவர்கள் அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள். தேவதூதர்களின் வழிநடத்துதலினாலும், சாட்சிகளின் மனமுவந்த வேலையினாலும், லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் யெகோவாவை அறிந்துகொள்கிறார்கள். தேவதூதர்களின் வழிநடத்துதலில் நடைபெறுகிற உயிர்காக்கும் இந்த வேலையிலிருந்து நீங்களும்கூட நன்மை அடைவீர்களாக.
தேவதூதர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுகிறார்கள்
மனிதர்களை நியாயந்தீர்க்க தேவதூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்க்கிறவர்கள் அல்ல. (யோவான் 5:22; எபிரெயர் 12:22, 23) கடந்த காலங்களில் அவர்கள் மரணதீர்ப்பைச் செயல்படுத்தி, கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார்கள். உதாரணத்திற்கு, இஸ்ரவேலரை அடிமைப்படுத்தி வைத்திருந்த பூர்வ எகிப்தியர்களுக்கு எதிராகக் கடவுள் போரிட்டபோது, தேவதூதர்களை அவர் பயன்படுத்தினார். (சங்கீதம் 78:49) மற்றொரு சமயம், அவரது ஜனங்களுடைய எதிரியின் முகாமிலிருந்த ஒரு லட்சத்து எண்பத்தையாயிரம் போர்வீரர்களை “கர்த்தருடைய தூதன்” ஒரே இராத்திரியில் கொன்றுபோட்டார்.—2 இராஜாக்கள் 19:35.
வருங்காலத்தில்கூட, தேவதூதர்கள் கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுவார்கள். “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, . . . தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும்” இயேசு வருவார். (2 தெசலோனிக்கேயர் 1:7, 8) ஆனால், தேவதூதர்களின் உதவியோடு இன்று உலகெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிற செய்திக்குச் செவிகொடுக்காத ஜனங்கள் மட்டுமே அப்போது அழிக்கப்படுவார்கள். கடவுளைத் தேடுபவர்களும் பைபிள் போதனைகளுக்கு இசைய வாழ்பவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.—செப்பனியா 2:3.
கடவுளுடைய கட்டளைகளை எப்போதும் நிறைவேற்றுகிற உண்மையுள்ள தேவதூதர்களுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! பூமியிலுள்ள பற்றுமாறா தமது ஊழியர்களுக்கு உதவவும், பாதுகாப்பு அளிக்கவும் அவர்களை யெகோவா பயன்படுத்துகிறார். இது குறிப்பாக நமக்கு ஆறுதல் அளிக்கிறது, ஏனென்றால் நமக்குத் தீங்கு விளைவிக்க விரும்புகிற ஆபத்தான ஆவி சிருஷ்டிகள் இருக்கின்றன; அவை பேய்கள் என அழைக்கப்படுகின்றன.
பேய்கள்—யார்?
ஏதேனில் பிசாசாகிய சாத்தான் ஏவாளை வஞ்சித்த பின், அடுத்துவந்த 15 நூற்றாண்டுகளின்போது ஆபேல், ஏனோக்கு, நோவா போன்ற ஒரு சிலரைத் தவிர எல்லா மனிதர்களையுமே கடவுளைவிட்டு விலகிப்போகச் செய்தான்; கடவுளுடைய தேவதூதர்கள் அதைக் கவனித்தார்கள். (ஆதியாகமம் 3:1-7; எபிரெயர் 11:4, 5, 7) ஒருசில தேவதூதர்களும்கூட சாத்தானின் பக்கம் சேரத் தொடங்கினார்கள். ‘நோவாவின் நாட்களிலே’ கீழ்ப்படியாமல்போன ஆவிகள் என அவர்களை பைபிள் குறிப்பிடுகிறது. (1 பேதுரு 3:19, 20) அவர்களுடைய கீழ்ப்படியாமை எப்படி வெட்டவெளிச்சமானது?
நோவாவின் காலத்திலே தேவதூதர்கள் கடவுளுடைய பரலோகக் குடும்பத்தை விட்டுவிட்டு மனித உருவெடுத்து பூமிக்கு வந்தார்கள், எத்தனை பேர் வந்தார்கள் என பைபிள் குறிப்பிடுவதில்லை. பூமிக்கு அவர்கள் ஏன் வந்தார்கள்? பெண்களோடு பாலுறவுகொள்ள வேண்டுமென்ற ஆசை ஏற்கெனவே அவர்களுக்கு உண்டாயிருந்தது. இதன் விளைவாக நெஃபிலிம் என்றழைக்கப்பட்ட பிள்ளைகள் அவர்களுக்குப் பிறந்தார்கள்; அந்த நெஃபிலிம்கள் மூர்க்கத்தனமான இராட்சசர்களாய் ஆனார்கள். அதுமட்டுமல்ல, ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகியது, அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாய் இருந்தது.’ (ஆதியாகமம் 6:1-7, 17; 7:23) என்றாலும், மனிதகுலம் இந்த இழிவான நிலையில் தொடர்ந்திருக்க யெகோவா அனுமதிக்கவில்லை. ஜலப்பிரளயத்தை அவர் கொண்டுவந்தார்; அப்போது நெஃபிலிம்கள் உட்பட, பொல்லாத ஜனங்கள் அனைவருமே அழிக்கப்பட்டார்கள். கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் மாத்திரமே உயிரோடு பாதுகாக்கப்பட்டார்கள்.—ஆதியாகமம் 6:1-7, 17; 7:23.
கலகம்செய்த தூதர்கள் ஜலப்பிரளயத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்கள். தங்களுடைய மாம்ச உடல்களை விட்டுவிட்டு, மீண்டும் ஆவி சிருஷ்டிகளாக மாறி பரலோகத்திற்குச் சென்றார்கள். அதுமுதற்கொண்டு, பேய்கள் என அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ‘பேய்களின் தலைவன்’ என அழைக்கப்படுகிற சாத்தானின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். (மத்தேயு 12:24-27, NW) தங்களுடைய தலைவனைப் போலவே, அந்தப் பேய்கள் மனிதர்களிடமிருந்து வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள துடிக்கின்றன.
பேய்கள் ஆபத்துமிக்கவை, ஆனால் அவற்றைக்கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. அவற்றிற்கு ஓரளவுதான் வல்லமை இருக்கிறது. கீழ்ப்படியாத அந்தத் தூதர்கள் பரலோகத்திற்குத் திரும்பியபோது, உண்மையுள்ள தேவதூதர்கள் அடங்கிய கடவுளுடைய குடும்பத்திற்குள் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மாறாக, கடவுள் தரும் ஆன்மீக அறிவொளி அவற்றிற்கு முற்றிலும் துண்டிக்கப்பட்டது; அவற்றிற்கு இருண்ட எதிர்காலமே இருந்தது. ஆம், டார்டரஸ் என்ற ஆன்மீக இருளுக்குள் அவை தள்ளப்பட்டன. (2 பேதுரு 2:4, NW) அத்தகைய ஆன்மீக இருளிலேயே அவை இருக்க வேண்டுமென்பதற்காக அவற்றை யெகோவா “நித்திய சங்கிலிகளினாலே” கட்டிப்போட்டார். இப்போது அவற்றால் மனித உடல்களைத் தரித்துக்கொள்ளவும் முடியாது.—யூதா 6.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பேய்கள் இன்னமும் மனிதர்கள்மீது செல்வாக்கு செலுத்தி வருகின்றனவா? ஆம், தங்கள் தலைவனான பிசாசாகிய சாத்தான் பயன்படுத்துகிறவற்றைப் போன்ற ‘தந்திரங்களின்’ மூலமாக அவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன. (எபேசியர் 6:11, 12) ஆனால், கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அந்தப் பேய்களை நம்மால் எதிர்த்துநிற்க முடியும். அதுமட்டுமல்ல, கடவுளை நேசிப்பவர்கள் அவருடைய வல்லமைமிக்க தேவதூதர்களால் பாதுகாக்கப்படுவார்கள்.
அப்படியானால், கடவுள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் காரியங்களை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டு, அவற்றின்படி நடப்பது எவ்வளவு முக்கியம்! உங்களுடைய இடத்தில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளைச் சந்திப்பதன் மூலம் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுவதன் மூலம் பைபிள் போதனைகளை நீங்கள் அதிகமாய்க் கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு வசதிப்பட்ட ஒரு நேரத்தில் இலவசமாக உங்களோடு பைபிளைப் படிக்க யெகோவாவின் சாட்சிகள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
[அடிக்குறிப்பு]
a தேவதூதர்களை பைபிள் ஆண் மகன்களாகப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதர்கள் முன்பாக அவர்கள் எப்போதும் ஆண் உருவில்தான் தோன்றியிருக்கிறார்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
தேவதூதர்கள்—ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதம்
தேவதூதர்கள் அடங்கிய மிகப் பரந்த தமது குடும்பத்தை யெகோவா பின்வருமாறு ஒழுங்கமைத்திருக்கிறார்:
மிகமிக அதிகமான வல்லமையும் அதிகாரமும் பெற்ற தூதன், பிரதான தூதனாகிய மிகாவேல் ஆவார், அதாவது இயேசு கிறிஸ்து ஆவார். (1 தெசலோனிக்கேயர் 4:16; யூதா 9) சேராபீன்களும், கேருபீன்களும், மற்ற தேவதூதர்களும் அவருக்குக் கீழ் இருக்கிறார்கள்.
சேராபீன்கள் கடவுளுடைய ஏற்பாட்டில் மிக உயர்ந்த பதவி வகிக்கிறார்கள். கடவுளுடைய சிம்மாசனத்திற்கு அருகே ஊழியர்களாக சேவை செய்கிறார்கள். கடவுளுடைய பரிசுத்தத்தன்மையை அறிவிப்பதும், அவருடைய ஜனங்களை ஆன்மீக ரீதியில் சுத்தமாக வைத்திருப்பதும் அவர்களுடைய வேலைகளில் அடங்கும்.—ஏசாயா 6:1-3, 6, 7.
கேருபீன்கள் கடவுளுடைய சிம்மாசனத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், யெகோவாவின் மாட்சிமைக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.—சங்கீதம் 80:1; 99:1; எசேக்கியேல் 10:1, 2.
மற்ற தேவதூதர்கள் யெகோவாவின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள், அவருடைய சித்தத்தின்படி காரியங்களை நிறைவேற்றுகிறார்கள்.
[பக்கம் 6-ன் படம்]
லோத்துவையும் அவருடைய மகள்களையும் தேவதூதர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்
[பக்கம் 5-ன் படம்]
அப்போஸ்தலன் யோவான் ஒரு தேவதூதனை வணங்க முற்பட்டபோது, “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்” என அந்தத் தேவதூதன் சொன்னார்
[பக்கம் 6-ன் படம்]
கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளைத் தேவதூதர்கள் நிறைவேற்றுகிறார்கள்
[பக்கம் 7-ன் படம்]
தேவதூதர்களின் வழிநடத்துதலில் நடைபெறுகிற பிரசங்க வேலையிலிருந்து நீங்கள் நன்மை அடைகிறீர்களா?