மிருக ஜீவன்கள் யெகோவாவை மகிமைப்படுத்துகின்றன
யெகோவாவின் மகத்துவத்தை மிருக ஜீவன்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மனிதரை கவனித்துக் காப்பதுபோல் விலங்கினங்களையும் அவர் செம்மையாக பராமரித்துக் காக்கிறார். (சங்கீதம் 145:16) விலங்கினங்களையும் மனிதர்களையும் படைத்தவரை குறைகூறுவது எப்பேர்ப்பட்ட தவறு! யோபு நேர்மை வழுவாமல் நடந்தபோதிலும், ஒரு சந்தர்ப்பத்தில் ‘தேவனைப் பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினார்.’ ஆகவே, யோபுக்குப் பாடம் புகட்ட வேண்டியிருந்தது!—யோபு 32:2; 33:8-12; 34:5.
கடவுளுடைய வழிகளை எதிர்த்து கேள்வி கேட்க மனிதருக்கு எந்த அருகதையுமில்லை என்பதை மிருக ஜீவன்களின் உதாரணங்கள் யோபுக்கு உணர்த்தின. யெகோவா தம் ஊழியக்காரனான யோபுக்கு சொல்லிய வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது அது எவ்வளவு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது!
விலங்குகளுக்கு மனித உதவியே தேவையில்லை
விலங்கினங்களின் வாழ்க்கையைப் பற்றி கடவுள் கேட்ட கேள்விகளுக்கு யோபுவால் பதிலளிக்க முடியவில்லை. (யோபு 38:39-41) கடவுள் சுட்டிக்காட்டியபடி, மனிதனுடைய உதவியின்றிதான் அவர் சிங்கத்திற்கும் காக்கைக்கும் உணவு அளிக்கிறார். உணவுக்காக காக்கைகள் தேடி அலைந்தாலும், அவை உண்மையில் கடவுளிடமிருந்தே உணவைப் பெற்றுக்கொள்கின்றன.—லூக்கா 12:24.
காட்டு விலங்குகளைப் பற்றி யோபுவிடம் கடவுள் கேள்வி கேட்டபோது அவர் திகைத்துப்போனார். (யோபு 39:1-8, பொது மொழிபெயர்ப்பு) வரையாடுகளையும் பெண் மான்களையும் எந்தவொரு மனிதனும் பாதுகாக்க முடியாது. ஏன், வரையாடுகளின் அருகில்கூட அண்ட முடியாதே! (சங்கீதம் 104:18) பெண் மான் ஈனும்போது கடவுள் தந்த இயல்புணர்ச்சியால் காட்டுக்குள் தனியாகப் பிரிந்து சென்றுவிடுகிறது. குட்டிகளுக்குத் தகுந்த கவனிப்பு தருகிறது, ஆனால் அந்தக் குட்டிகள் வளர்ந்தபிறகு “பலத்து,” தாயிடம் ‘திரும்ப வராமற்போய்விடும்.’ அதன் பிறகு அவை தானாகவே தங்களை கவனித்துக்கொள்ளும்.
வரிக்குதிரை எல்லா இடங்களிலும் சுற்றித்திரிகிறது, காட்டுக் கழுதையோ வனாந்தர வெளியில் வாசம்பண்ணுகிறது. இந்தக் காட்டுக் கழுதையை பொதிகள் சுமக்க யோபு பயன்படுத்த முடியாது. அது ‘சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரிந்து,’ மலைகளிலே மேய்ச்சலைக் கண்டுபிடிக்கும். பட்டணங்களில் அதிக எளிதில் உணவு கிடைக்கும் என்பதற்காக இந்த விலங்கு வனாந்தரத்திலுள்ள தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுத்திடாது. அது “ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை,” அதாவது வேடனுடைய சப்தங்களுக்குக் காதுகொடுப்பதில்லை; ஏனென்றால் மனிதன் அதனுடைய எல்லைக்குள் காலடி எடுத்துவைத்தால் போதும் அது விருட்டென்று ஓடிவிடுமே!
அடுத்து, காட்டெருதைப் பற்றி கடவுள் குறிப்பிட்டார். (யோபு 39:9-12, NW) அதைப் பற்றி ஆங்கில தொல்லியலாளர் ஆஸ்டன் லேயர்டு இவ்வாறு எழுதினார்: “செதுக்கோவியங்களில் காட்டெருது பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டிருக்கிற விதத்தைப் பார்க்கையில், அது ஏறக்குறைய சிங்கத்தைப் போல் மகா பலம் வாய்ந்ததாகவும் கம்பீரமானதாகவும் கருதப்பட்டு வேட்டையாடப்பட்டதாகத் தெரிகிறது. ராஜா இதோடு சண்டையிடுவதாகவும், போர்வீரர்கள் குதிரையில் சென்றும் நடந்து சென்றும் இதைத் துரத்துவதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.” (நினிவேயும் அதன் இடிபாடுகளும், [ஆங்கிலம்] 1849, தொகுதி 2, பக்கம் 326) என்றாலும், அடக்க முடியாத இந்தக் காட்டெருதை ஞானமுள்ள எந்த மனிதனும் கயிறுபோட்டு ஏரில் பூட்டத் துணிவதில்லை.—சங்கீதம் 22:21, NW.
பறவைகள் யெகோவாவை மகிமைப்படுத்துகின்றன
அடுத்ததாக, பறவைகளைப் பற்றி யோபுவிடம் கடவுள் கேள்வி கேட்டார். (யோபு 39:13-18) நாரை அதன் வலிமைமிக்க இறக்கைகளைப் பயன்படுத்தி உயரத்தில் பறக்கிறது. (எரேமியா 8:7) தீக்கோழி அதன் இறக்கைகளைப் படபடவென அடித்தாலும் பறக்க முடிவதில்லை. நாரையைப் போல், தீக்கோழி மரத்தில் கூடுகட்டி முட்டையிடுவதில்லை. (சங்கீதம் 104:17) அது, மணலில் குழிதோண்டி முட்டைகள் இடுகிறது. ஆனால் அவற்றை அப்படியே அம்போவென்று விட்டுவிடுவதில்லை. ஆணும் பெண்ணும் அவற்றைக் கவனித்துக்கொள்கின்றன; முட்டைகளை மணலால் மூடி தகுந்த வெப்பநிலையிலும் வைத்துக்கொள்கின்றன.
ஆபத்து வருகிறதென அறியும்போது, தீக்கோழி ‘ஞானத்தை மறந்து’ முட்டைகளை விட்டு ஓடிவிடுவது போல் தோன்றலாம். என்றாலும், பைபிள் விலங்குகளைப் பற்றிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) இவ்வாறு கூறுகிறது: “இது கவனத்தை திசைதிருப்பும் ஒரு யுக்தி: அச்சுறுத்தும் பிற விலங்கினுடைய அல்லது மனிதனுடைய கவனத்தை திசைதிருப்ப [தீக்கோழிகள்] தங்கள்மீது தனிக் கவனத்தை ஈர்த்து இறக்கைகளைப் படபடவென அடிக்கின்றன, இவ்வாறாக முட்டைகள் இருக்கும் இடத்திலிருந்து வேறு பக்கம் கவனத்தைத் திருப்பிவிடுகின்றன.”
தீக்கோழி எப்படி ‘குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் பண்ணுகிறது?’ த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “தீக்கோழியால் பறக்க முடியாது, ஆனால் நிலத்தில் மிக வேகமாய் ஓட முடியும். அதன் நீண்ட கால்களால் 15 அடி தூரம் எட்டெடுத்து வைக்க முடியும், மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.”
குதிரைக்கு கடவுள் பலம் தருகிறார்
அடுத்ததாக, குதிரையைப் பற்றி யோபுவிடம் கடவுள் கேட்டார். (யோபு 39:19-25; NW) பூர்வ காலங்களில், போர் வீரர்கள் குதிரையில் அமர்ந்து போர் புரிந்தார்கள்; அல்லது, குதிரைகள் இழுத்துச் சென்ற இரதங்களில் இருந்துகொண்டு ஓட்டுபவரும் இரு படைவீரர்களும் சண்டை செய்தார்கள். போருக்குப் போகத் துடிக்கும் குதிரை கனைத்துக்கொண்டு குளம்புகளால் மண்ணைப் பறிக்கும். அது அஞ்சவே அஞ்சாது, பட்டயத்தைக் கண்டு பின்வாங்கவும் செய்யாது. எக்காள சத்தத்தைக் கேட்டவுடன், “ஆஹா!” என்பதுபோல் போர்க்குதிரை செயல்படுகிறது. ‘தரையை விழுங்கிவிடுவதைப் போல்’ முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. அதே சமயத்தில், சவாரி செய்பவருடைய கட்டளைக்கும் கீழ்ப்படிகிறது.
கிட்டத்தட்ட இதே போன்ற வர்ணனை அளித்து, தொல்லியலாளர் லேயர்டு இவ்வாறு எழுதினார்: “ஓர் ஆட்டுக்குட்டியைப் போல் சாதுவானது, எளிதில் அடக்கக்கூடியது, கடிவாளத்தைவிட வேறெதுவும் அதற்குத் தேவையில்லை, என்றாலும் போர் முழக்கத்தைக் கேட்டவுடன், சவாரி செய்பவனிடமிருந்து அம்பு பறப்பதைப் பார்த்தவுடன், அரேபிய குதிரையின் கண்கள் நெருப்புபோல் பளிச்சிடுகின்றன, இரத்த சிவப்பில் இருக்கும் நாசிகள் பரந்து விரிகின்றன, கழுத்து ஒய்யாரமாய் வளைகிறது, வாலும் பிடறியும் சிலிர்த்து நிற்கிறது.”—நினிவே, பாபிலோன் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிப்புகள் (ஆங்கிலம்), 1853, பக்கம் 330.
ராஜாளியையும் கழுகையும் கவனியுங்கள்
இப்பொழுது, யோபுவின் கவனத்தை வேறுசில பறவைகள்மீது யெகோவா திருப்புகிறார். (யோபு 39:26-30) ‘ராஜாளி பறந்து, [காற்றுக்குத்] தன் செட்டைகளை விரிக்கிறது.’ மிக வேகமாய் பறக்கும் பறவை என பெரெக்ரைன் ராஜாளியைப் பற்றி குறிப்பிட்டு த கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவ்வாறு கூறுகிறது: “வானில் வட்டமிடுகையில் அல்லது மிக உயரத்திலிருந்து இரைதேடி திடீரென கீழ்நோக்கிப் பாய்ந்து வருகையில், பயங்கர வேகத்தில் வருகிறது.” 45 டிகிரி கோணத்தில் இறங்கும்போது, இந்தப் பறவை மணிக்கு 349 கிலோமீட்டர் வேகத்தை அடைந்திருக்கிறது!
கழுகுகள் மணிக்கு 130 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் பறந்திருக்கின்றன. வாழ்க்கை மிக வேகமாய் கடந்துவிடுவதை, இரையைக் கவ்வ வரும் கழுகின் வேகத்திற்கு யோபு ஒப்பிட்டார். (யோபு 9:25, 26) சளைக்காமல் தொடர்ந்து சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை கடவுள் நமக்குத் தருவதால், உயரத்தில் சளைக்காமல் பறக்கும் கழுகின் செட்டைகளில் நாம் அமர்ந்திருப்பது போல் இருக்கிறோம். (ஏசாயா 40:31) உயரே எழும்பும் ‘தெர்மல்’ என்ற வெப்பக் காற்றுக்குள்ளேயே கழுகு பறக்கிறது. அந்த வெப்பக் காற்று உயரே செல்லச் செல்ல கழுகையும் உயரே கொண்டு செல்கிறது. கழுகு ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைகையில், அடுத்த வெப்பக் காற்றுக்குள் செல்கிறது, இதனால் மிகக் குறைந்தளவு சக்தியைப் பயன்படுத்தி மணிக்கணக்காக வானில் மிதக்க முடிகிறது.
அண்ட முடியாத ‘உயரத்திலே கழுகு தன் கூட்டைக் கட்டி,’ குஞ்சுகளை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது. இதை இயல்புணர்ச்சியால் செய்யும்படி யெகோவா படைத்திருக்கிறார். அவர் தந்த பார்வையால், ‘கழுகின் கண்கள் தூரத்திலிருந்து பார்க்கின்றன.’ கண்களின் குவிமையத்தை வேகமாய் மாற்றும் திறமை அதற்கு இருக்கிறது, இதனால் இரையை அல்லது பிணத்தைக் குறிவைத்து வேகமாகப் பாய்ந்து வருகிறது. செத்துப்போன மிருகங்களின் உடல்களை கழுகு உண்கிறது, ஆகவே “பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்.” இந்தப் பறவை சிறுசிறு விலங்குகளைப் பிடித்து குஞ்சுகளுக்குக் கொண்டுபோய் கொடுக்கிறது.
யோபுவை யெகோவா சிட்சிக்கிறார்
விலங்குகளைப் பற்றி மேலும் கேள்விகள் கேட்பதற்கு முன், யோபுவை கடவுள் சிட்சித்தார். அதற்கு யோபு எப்படி பிரதிபலித்தார்? அவர் தன்னை தாழ்த்தி, கூடுதலான அறிவுரையை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டார்.—யோபு 40:1-14.
யோபுவின் அனுபவங்களைப் பற்றிய பைபிள் பதிவின் இந்தக் குறிப்பிட்ட பகுதியிலிருந்து மிக முக்கியமான ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். சர்வ வல்லவர்மீது எந்தவொரு மனிதனும் தப்பு கண்டுபிடிக்க முடியாது என்பதே அந்தப் பாடம். நமது பரம பிதாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் நாம் பேசவும் செயல்படவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல், யெகோவாவின் புனிதப் பெயரை பரிசுத்தப்படுத்துவதும் அவருடைய அரசுரிமையே நியாயமென நிரூபிப்பதும் நம்முடைய பிரதான அக்கறையாக இருக்க வேண்டும்.
கடவுளை மகிமைப்படுத்தும் பிகெமோத்
யோபுவின் கவனத்தை மீண்டும் விலங்குகளிடம் திருப்பி, பிகெமோத்தைப் பற்றி கடவுள் கேள்வி கேட்டார்; பிகெமோத் என்பது நீர்யானை என பொதுவாக கருதப்படுகிறது. (யோபு 40:15-24) முழு வளர்ச்சியுற்ற ஒரு நீர்யானை நான்கு முதல் ஐந்து மீட்டர் நீளமாகவும் 3,600 கிலோகிராம் எடை உள்ளதாகவும் இருக்கலாம். பிகெமோத்தின் ‘பெலன் அதின் இடுப்பில்’ இருக்கிறது, அதாவது பின்புற தசைகளில் இருக்கிறது. குட்டையான கால்களைக் கொண்ட பிகெமோத் ஆற்றுப்படுகைகளில் செல்லும்போது, அதன் உடலானது கற்களில் உரசாமல் இருக்க அதன் வயிற்றுப்பகுதியில் உள்ள கெட்டியான தோல் பேருதவி புரிகிறது. நிச்சயமாகவே, எந்தவொரு மனிதனும் பிகெமோத்திற்கு—பருத்த உடலும் வாயும் வலிமைமிக்க தாடைகளும் கொண்ட நீர்யானைக்கு—ஈடாக முடியாது.
‘பசும் புற்களை’ சாப்பிட நீரிலிருந்து பிகெமோத் வெளியே வருகிறது. ஒரு மலையில் வளரும் பசுஞ்செடி கொடிகள் அத்தனையும் அதற்கு அவசியம் போல் தெரிகிறதே! ஒவ்வொரு நாளும் சுமார் 90 முதல் 180 கிலோகிராம் தாவரம் அதன் வயிற்றுக்குள் செல்கிறது. பசியாறிய பிறகு லோட்டஸ் அல்லது நெட்டிலிங்க மரங்களின் நிழலில் பிகெமோத் படுக்கிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால், நீர்யானை அதன் தலையை தண்ணீருக்கு மேல் வைத்துக்கொண்டு அனாவசியமாக நீந்திச் செல்கிறது. பிகெமோத்தின் அகன்ற வாயையும் வலிமைமிக்க பற்களையும் பார்த்த பிறகு, அதன் மூக்கைத் துளைத்து மூக்கணாங்கயிறு போட யோபு எப்படித் துணிவார்!
கடவுளுக்குத் துதிசேர்க்கும் லிவியாதான்
அடுத்ததாக லிவியாதானைப் பற்றி கடவுள் யோபுவிடம் கேட்டார். (யோபு 41:1-34) அந்த எபிரெய வார்த்தை “மடிப்புகள் நிறைந்த ஒரு மிருகத்தைக்” குறிக்கிறது—இது முதலையையே குறிக்க வேண்டும். யோபுவால் லிவியாதானை ஒரு விளையாட்டுப் பொருளாக பிள்ளைகளுக்குக் காட்ட முடியுமா? நிச்சயமாகவே முடியாது! இந்த ஜீவராசியிடம் நெருங்குவது பெரும்பாலும் ஆபத்தை விளைவித்திருக்கிறது. சொல்லப்போனால், லிவியாதானை ஒரு மனிதன் அடக்க முயன்றால், அது படுபயங்கரமான போராட்டமாக இருக்கும், அதற்குமேல் அவன் அதை அடக்கத் துணியமாட்டான்!
சூரியன் உதிக்கையில் லிவியாதான் தண்ணீருக்கு மேல் தலையைத் தூக்குகிறது; அப்போது அதன் கண்கள் ‘அருணோதயத்தைப் போல்’ பளிச்சிடுகின்றன. லிவியாதானின் செதில்கள் நெருக்கமாக மூடியிருக்கின்றன, எலும்புத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ள அதன் தோலில் புல்லட்கள் துளைப்பதே கடினமென்றால், வாள்களும் ஈட்டிகளும் எந்த மூலைக்கு! முதலையின் வயிற்றுப்பகுதியில் கூர்மையான செதில்கள் இருப்பதால் ‘சேற்றில் அதின் தடம், போரடிக்கும் கருவியின் தடம்போல்’ இருக்கும். (திருத்திய மொழிபெயர்ப்பு) அது சீற்றத்துடன் நீந்திச் செல்கையில் தண்ணீரில் நுரை பொங்கி வருகிறது. அதற்கு பிரமாண்டமான உடலும், கவசமும், ஆயுதங்களும்—பயமுறுத்தும் வாயும் வலிமைமிக்க வாலும்—இருப்பதால், எதைக் கண்டும் அஞ்சாது.
யோபு கருத்தை மாற்றிக்கொள்கிறார்
‘எனக்குப் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை’ என்று யோபு ஒத்துக்கொண்டார். (யோபு 42:1-3, பொ.மொ.) கடவுளிடமிருந்து வந்த திருத்தத்தை அவர் ஏற்று, தான் சொன்னது தவறென ஒப்புக்கொண்டு, மனந்திரும்பினார். அவருடைய தோழர்கள் கடிந்துகொள்ளப்பட்டார்கள், ஆனால் அவரோ அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டார்.—யோபு 42:4-17.
யோபுவின் அனுபவத்தை மனதிற்கொள்வது எவ்வளவு ஞானமானது! அவரிடம் யெகோவா தேவன் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நம்மால் பதிலளிக்க முடியாது. என்றாலும், தேவனை மகிமைப்படுத்தும் பல்வகைப்பட்ட அற்புத படைப்புகள் அனைத்திற்கும் நாம் போற்றுதல் காட்டலாம், காட்டவும் வேண்டும்.
[பக்கம் 13-ன் படம்]
வரையாடு
[பக்கம் 13-ன் படம்]
காக்கை
[பக்கம் 13-ன் படம்]
பெண் சிங்கம்
[பக்கம் 14-ன் படம்]
வரிக்குதிரை
[பக்கம் 14-ன் படம்]
அச்சுறுத்தப்படுகையில் தீக்கோழி முட்டைகளை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறது, ஆனால் அவற்றை கைவிட்டுவிட்டதாக அர்த்தமல்ல
[பக்கம் 14-ன் படம்]
தீக்கோழி முட்டைகள்
[பக்கம் 14, 15-ன் படம்]
பெரெக்ரைன் என்ற ராஜாளி
[படத்திற்கான நன்றி]
ராஜாளி: © Joe McDonald/Visuals Unlimited
[பக்கம் 15-ன் படம்]
அரேபிய குதிரை
[பக்கம் 15-ன் படம்]
பொன் கழுகு
[பக்கம் 16-ன் படம்]
பிகெமோத் என்பது நீர்யானை என பொதுவாக கருதப்படுகிறது
[பக்கம் 16-ன் படம்]
லிவியாதான் என்பது வலிமைமிக்க முதலை என எண்ணப்படுகிறது