கடவுளுடைய புதிய உலகில் உண்மையான செழுமை
கிறிஸ்தவ கணவரும் தகப்பனுமான டேவிட்a என்பவர் ஐக்கிய மாகாணங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றார், அதுவே தனக்கும் தன் குடும்பத்திற்கும் நல்லது என எண்ணினார். மனைவி மக்களைப் பிரிந்து செல்ல விரும்பாதபோதிலும், அதிக பணமிருந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியுமென அவர் நினைத்தார். ஆகவே, நியூ யார்க்கில் வசித்துவந்த உறவினர்களின் பேச்சைக் கேட்டு அங்கு சென்றார், விரைவில் அவருக்கு ஒரு வேலையும் கிடைத்தது.
ஆனால் காலங்கள் செல்லச் செல்ல, டேவிட்டின் நம்பிக்கை சுடர் மங்க ஆரம்பித்தது. அங்கே, ஆன்மீக காரியங்களுக்குச் செலவிட அவருக்கு நேரமே இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில், கடவுள்மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் கிட்டத்தட்ட இழந்தேவிட்டார். சபலத்திற்கு சரணடைந்து ஒழுக்கங்கெட்ட செயலில் ஈடுபடும்வரை, அவருக்கு புத்தி தெளியவில்லை. பிறகு நிஜத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை முக்கியமான காரியங்களிலிருந்து அவரை படிப்படியாக வழிவிலகச் செய்திருந்தது. அதனால், அவர் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.
டேவிட்டைப் போல், ஒவ்வொரு ஆண்டும் அநேகர் வறுமை தாண்டவமாடும் தங்களுடைய தாயகத்தைவிட்டு வெளிநாடுகளுக்குக் செல்கிறார்கள். என்றாலும், ஆன்மீக ரீதியில் பெரும் விலையைத்தான் அவர்கள் எல்லாரும் அடிக்கடி செலுத்துகிறார்கள். ‘ஒரு கிறிஸ்தவர் செல்வத்தை நாடிக்கொண்டே கடவுளுடனும் நல்ல உறவை அனுபவித்து மகிழ முடியுமா?’ என சிலர் யோசித்திருக்கிறார்கள். முடியுமென பிரபல எழுத்தாளர்களும் பிரசங்கிமார்களும் சொல்கிறார்கள். ஆனால், டேவிட்டும் மற்றவர்களும் பாடம் கற்றுக்கொண்டபடி, ஒன்றை இழக்காமல் மற்றொன்றை அடைவது கஷ்டமே.—லூக்கா 18:24.
பணம் தீங்கானதல்ல
பணம் என்பது மனிதனுடைய ஒரு கண்டுபிடிப்புத்தான். மற்ற கண்டுபிடிப்புகளைப் போல், அதில் எந்தத் தவறோ தீமையோ இல்லை. சொல்லப்போனால், அது பரிமாற்றத்திற்கு உதவும் ஒரு வகை சாதனமே, அதைவிட வேறொரு விசேஷமும் அதில் இல்லை. ஆகவே, அதைத் தகுந்த முறையில் பயன்படுத்தும்போது, ஒரு நல்ல நோக்கத்திற்கு அது துணை புரியலாம். உதாரணமாக, “பணம் ஒரு பாதுகாப்பு,” முக்கியமாக வறுமையோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. (பிரசங்கி 7:12, NW) ஆனால் சிலரைப் பொறுத்தவரை, “எல்லாவற்றிற்கும் பணமே தீர்வாக இருக்கிறது.”—பிரசங்கி 10:19, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்.
சோம்பேறித்தனத்தை பைபிள் கண்டனம் செய்கிறது, கடினமாக உழைப்பதை ஊக்குவிக்கிறது. நம் குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும், அப்போது ஒருவேளை நம்மிடம் கொஞ்சம் அதிகமாக இருந்தால், ‘குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்க’ முடியும். (எபேசியர் 4:28; 1 தீமோத்தேயு 5:8) அதோடு, தன்னலம் துறப்பதற்குப் பதிலாக, நம் உடைமைகளை அனுபவித்து மகிழும்படியே பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. நம் ‘பங்கை நாம் பெற்று’ நம்முடைய உழைப்பின் பலன்களை அனுபவிக்கச் சொல்கிறது. (பிரசங்கி 5:18-20) சொல்லப்போனால், செல்வந்தர்களாக இருந்த உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றிய அநேக பைபிள் உதாரணங்கள் இருக்கின்றன.
செல்வந்தராயிருந்த உண்மையுள்ள ஆண்கள்
கடவுளுடைய உண்மை ஊழியரான ஆபிரகாமுக்கு ஆடுமாடுகள் மந்தை மந்தையாக இருந்தன; வெள்ளியும் பொன்னும் ஏராளமாக இருந்தன, வேலைக்காரர்களும் நூற்றுக்கணக்கில் இருந்தார்கள். (ஆதியாகமம் 12:5; 13:2, 6, 7) நீதிமானாகிய யோபுவுக்கும் அதிக செல்வம் இருந்தது—ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், பொன், வெள்ளி என எல்லாம் இருந்தன. (யோபு 1:3; 42:11, 12) இன்றைய தராதரங்களின்படி பார்த்தால்கூட, இவர்கள் செல்வந்தர்களாகத்தான் இருந்தார்கள், அதேசமயத்தில் கடவுளிடத்திலும் செல்வந்தர்களாக இருந்தார்கள்.
‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என ஆபிரகாமை பவுல் அழைக்கிறார். ஆபிரகாம் கஞ்சத்தனமானவராகவோ சொத்துபத்துகள்மீது மிதமீறிய ஆசை உடையவராகவோ இருக்கவில்லை. (ரோமர் 4:11; ஆதியாகமம் 13:9; 18:1-18) அது போலவே, யோபுவை ‘உத்தமன், சன்மார்க்கன்’ என்று கடவுளே விவரித்தார். (யோபு 1:8) ஏழைகளுக்கும் துன்பப்படுவோருக்கும் உதவ எப்பொழுதும் யோபு தயாராக இருந்தார். (யோபு 29:12-16) ஆபிரகாமும் யோபுவும் கடவுளின் மீது நம்பிக்கை வைத்தார்கள், செல்வத்தின் மீது அல்ல.—ஆதியாகமம் 14:22-24; யோபு 1:21, 22; ரோமர் 4:9-12.
மற்றொரு உதாரணம் சாலொமோன் ராஜா. எருசலேமில் கடவுளுடைய சிங்காசனத்திற்கு வாரிசாக இருந்ததன் காரணமாக, தெய்வீக ஞானத்தால் மட்டுமல்ல, செல்வத்தாலும் மகிமையாலும் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார். (1 இராஜாக்கள் 3:4-14) வாழ்க்கையின் பெரும்பாலான காலப்பகுதியில் கடவுளுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார். ஆனால் அந்திம காலத்தில், அவருடைய ‘இருதயம் தன் தேவனாகிய யெகோவாவோடே உத்தமமாயிருக்கவில்லை.’ (1 இராஜாக்கள் 11:1-8) சொல்லப்போனால், பொருளாதார செழுமையால் வருகிற படுகுழிகள் சிலவற்றை அவருடைய சோக அனுபவம் பிட்டு வைக்கிறது. அவற்றில் சிலவற்றை கவனியுங்கள்.
செல்வத்தின் படுகுழிகள்
பணத்திலும் பணத்தைக் கொடுத்து வாங்க முடிந்தவற்றிலும் ஆசை வைப்பதே மிகவும் ஆபத்தான முதல் படுகுழியாகும். ஒருபோதும் திருப்தியடையாத ஆசையை செல்வம் சிலருக்குள் உண்டாக்குகிறது. மற்றவர்களிடம் இந்த ஆசை இருந்ததை சாலொமோன் தன் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் கவனித்தார். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே” என்று அவர் எழுதினார். (பிரசங்கி 5:10) இந்த ஆபத்தான ஆசையைக் குறித்து பின்னர் இயேசுவும் பவுலும் கிறிஸ்தவர்களை எச்சரித்தார்கள்.—மாற்கு 4:18, 19; 2 தீமோத்தேயு 3:2.
ஒன்றை சாதிக்க உதவும் ஏதுவாக இல்லாமல் நம் ஆசைக்குரிய ஒரு பொருளாக பணம் மாறும்போது, ஒழுக்க ரீதியில் எல்லா சபலங்களுக்கும்—பொய் சொல்லுதல், திருடுதல், ஏமாற்றுதல் போன்ற எல்லாவற்றிற்கும்—நாம் ஆளாகிறோம். கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவனான யூதாஸ்காரியோத்து வெறும் 30 வெள்ளிக்காசுக்காகத் தன் எஜமானரை காட்டிக்கொடுத்தான். (மாற்கு 14:11; யோவான் 12:6) பணத்தின் மீது மிதமீறி ஆசைப்பட்டு, கடவுளுக்குரிய இடத்தில் பணத்தை ஒரு பூஜைப் பொருளாக சிலர் வைத்திருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:10) ஆகவே, அதிக பணம் சம்பாதிப்பதில் தங்களுடைய உண்மையான உள்நோக்கமென்ன என்பதை கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் நேர்மையுடன் எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.—எபிரெயர் 13:5.
செல்வத்தை நாடுவது மறைமுகமான ஆபத்துகளையும்கூட உண்டாக்குகிறது. முதலாவதாக, செல்வத்தில் மிதக்கையில் ஒருவர் தன்னையே சார்ந்திருக்க மனம்சாய்கிறார். ‘செல்வத்தின் வஞ்சகமான சக்தியைப்’ பற்றி குறிப்பிட்டபோது இயேசு இதையும் கூறினார். (மத்தேயு 13:22, NW) வியாபார திட்டங்கள் போடும்போதுகூட, கடவுளை மறந்துவிடாமல் இருக்குமாறு பைபிள் எழுத்தாளரான யாக்கோபும் கிறிஸ்தவர்களை எச்சரித்தார். (யாக்கோபு 4:13-16) பணம் ஓரளவு சுதந்திரத்தைக் கொடுப்பது போல் தோன்றுவதால், அதை வைத்திருப்பவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, பணத்தின் மீது நம்பிக்கை வைக்கும் ஆபத்து எப்பொழுதுமே இருக்கிறது.—நீதிமொழிகள் 30:7-9; அப்போஸ்தலர் 8:18-24.
இரண்டாவதாக, முன்பு குறிப்பிடப்பட்ட டேவிட் உணர்ந்து கொண்டது போல், செல்வத்தை நாடுவது பெரும்பாலும் ஒருவருடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சி படிப்படியாக ஆன்மீக காரியங்களிலிருந்து வழிவிலகச் செய்துவிடுகிறது. (லூக்கா 12:13-21) செல்வந்தருக்கு, இன்பமான காரியங்களிலோ தனிப்பட்ட நாட்டங்களிலோ திளைத்திருப்பதற்கு தங்களுடைய பணத்தைப் பயன்படுத்தும் சபலமும் தொடர்ந்து இருக்கிறது.
சாலொமோனுடைய ஆன்மீக வாழ்க்கை அழிந்ததற்கு ஓரளவு காரணம், சொகுசான வாழ்க்கை அவருடைய உணர்ச்சிகளை மரத்துப்போக செய்ததாக இருந்திருக்கக்கூடுமா? (லூக்கா 21:34) அந்நிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வதைத் தடை செய்யும் கடவுளுடைய நேரடி சட்டங்களை அவர் அறிந்திருந்தார். என்றாலும், கடைசியில் அவர் சுமார் ஓராயிரம் பெண்களை அந்தப்புரத்திற்குள் கூட்டிச்சேர்த்தார். (உபாகமம் 7:3) தன்னுடைய அந்நிய நாட்டு மனைவிகளைப் பிரியப்படுத்தும் ஆவலில், அவர்களுக்காக ஒருவகை கலப்பு விசுவாசத்தை ஏற்படுத்தினார். முன்பு குறிப்பிடப்பட்டபடி, சாலொமோனுடைய இருதயம் படிப்படியாக யெகோவாவிடமிருந்து விலகியது.
“தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது” என்று இயேசு சொன்ன ஆலோசனை எவ்வளவு உண்மை என்பதையே இந்த உதாரணங்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. (மத்தேயு 6:24) அப்படியானால், இன்றைக்குப் பொருளாதார ரீதியில் பெரும்பாலோர் எதிர்ப்படும் சவால்களை எப்படி ஒரு கிறிஸ்தவர் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்? மிக முக்கியமாக, மேம்பட்ட எதிர்கால வாழ்க்கைக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
உண்மையான செல்வம் உங்களுக்கு முன்னால்
முற்பிதாக்களான ஆபிரகாமையும் யோபுவையும் இஸ்ரவேல் தேசத்தினரையும் போலின்றி, ‘சகல தேசத்தாரையும் சீஷராக்கும்’ பொறுப்பு இயேசுவைப் பின்பற்றுவோருக்கு இருக்கிறது. (மத்தேயு 28:19, 20) இந்தப் பொறுப்பை நிறைவேற்ற நேரமும் முயற்சியும் தேவை; அவற்றை உலகப்பிரகாரமான வேலையில் நாம் செலவிட்டால் இப்பொறுப்பை நிறைவேற்ற முடியாது. ஆகவே, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்று இயேசு நமக்குச் சொன்னதைச் செய்வதில்தான் வெற்றியின் இரகசியமே இருக்கிறது.—மத்தேயு 6:33.
தனது குடும்பத்தையும் ஆன்மீக உணர்வையும் கிட்டத்தட்ட இழந்துவிட்ட பிறகு, டேவிட் கடைசியில் தனது வாழ்க்கையைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்தார். இயேசு வாக்குறுதி அளித்தபடி, பைபிள் படிப்பு, ஜெபம், ஊழியம் ஆகியவற்றிற்கு தனது வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க துவங்கியபோது, மற்ற காரியங்களெல்லாம் வாழ்க்கையில் சீரடைய ஆரம்பித்தன. தன் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் உள்ள உறவு படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. சந்தோஷமும் திருப்தியும் வாழ்க்கையில் மீண்டும் எட்டிப்பார்த்தன. அவர் இன்னமும் கடினமாக உழைக்கிறார். கந்தல் துணியிலிருந்து பட்டுத்துணிக்கு மாறிய கதையல்ல இவருடைய வாழ்க்கை. என்றாலும், தனது வேதனைமிக்க அனுபவத்திலிருந்து மதிப்புமிக்க பாடங்கள் சிலவற்றை அவர் கற்றுக்கொண்டார்.
அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்றது பற்றிய தனது தீர்மானத்தை டேவிட் மீண்டும் சிந்தித்துப் பார்த்திருக்கிறார். அதோடு, தான் எடுக்கும் தீர்மானங்களில் இனி ஒருபோதும் பணம் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது என்று அவர் உறுதிபூண்டிருக்கிறார். வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க காரியங்களை—அன்பான குடும்பத்தை, நல்ல நண்பர்களை, கடவுளோடுள்ள உறவை—பணத்தால் வாங்க முடியாது என்பதை இப்பொழுது அறிந்துகொண்டார். (நீதிமொழிகள் 17:17; 24:27; ஏசாயா 55:1, 2) சொல்லப்போனால், பொருளுடைமைகளைவிட தார்மீக நெறிமுறைகளின்படி உத்தமமாய் நடப்பதே அதிக மதிப்புமிக்கது. (நீதிமொழிகள் 19:1; 22:1) தன்னுடைய குடும்பத்தினரோடுகூட, முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கு டேவிட் திடதீர்மானமாய் இருக்கிறார்.—பிலிப்பியர் 1:10, NW.
செழிப்புமிக்க ஆனால் நெறிமுறைமிக்க சமுதாயத்தைப் படைப்பதற்கு மனிதன் எடுத்த முயற்சிகளெல்லாம் மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்வியிருக்கின்றன. என்றாலும், திருப்தியான வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார மற்றும் ஆன்மீக காரியங்களை தமது ராஜ்யம் அபரிமிதமாக நமக்கு அளிக்கும் என கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். (சங்கீதம் 72:16; ஏசாயா 65:21-23) உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதலாவதாக நாம் ஆன்மீக உணர்வுடையவர்களாக இருக்க வேண்டுமென இயேசு கற்பித்தார். (மத்தேயு 5:3, NW) ஆகவே, நாம் செல்வந்தர்களாக இருந்தாலும்சரி ஏழைகளாக இருந்தாலும்சரி, ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதே வெகு விரைவில் வரப்போகும் கடவுளுடைய புதிய உலகிற்குத் தயாராக மிகச் சிறந்த வழி. (1 தீமோத்தேயு 6:17-19) அந்த உலகமே பொருளாதார ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் உண்மையில் செழிப்பான சமுதாயமாக விளங்கும்.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 5-ன் படங்கள்]
கடவுளின் மீது யோபு நம்பிக்கை வைத்தார், செல்வத்தின் மீது அல்ல
[பக்கம் 7-ன் படங்கள்]
வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க காரியங்களை பணத்தால் வாங்க முடியாது