புத்துணர்ச்சி அளிக்கும் தரமான பொழுதுபோக்கு
“நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.
1, 2. மகிழ்ச்சிதரும் சந்தர்ப்பங்களை ஏன் ‘தேவனுடைய பரிசு’ எனச் சொல்லலாம், ஆனாலும் பைபிள் எவ்வாறு நேரடியாக எச்சரிக்கிறது?
இன்பம் தரும் காரியங்களில் ஈடுபட விரும்புவது இயல்புதான். நாம் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்றே நித்தியானந்த தேவனாகிய யெகோவா விரும்புகிறார்; அதற்காக அவர் ஏராளமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11; 6:17) ஞானியாகிய சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: ‘மகிழ்ச்சியாயிருப்பது . . . அல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.’—பிரசங்கி 3:12, 13.
2 இவ்வாறு, சற்று நேரமெடுத்து, சகல பிரயாசத்தின் பலனையும் அனுபவித்து மகிழ்வது உண்மையில் புத்துணர்ச்சி அளிக்கும். முக்கியமாக, குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் இனிதாகப் பொழுதைக் கழிக்கையில் நாம் புத்துயிர் பெறுகிறோம். அப்படிப்பட்ட மகிழ்ச்சிதரும் சந்தர்ப்பங்கள், “தேவனுடைய அநுக்கிரகம்,” அதாவது பரிசு, என சொல்வது பொருத்தமானது. ஆனால் கடவுள் இந்தப் பரிசை வாரி வழங்கியிருக்கிறார் என்பதற்காக, கட்டுப்பாடற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட நமக்கு உரிமை இல்லை. குடிவெறி, பெருந்தீனி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றை பைபிள் கண்டனம் செய்கிறது; அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்கள் ‘தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டார்கள்’ என்றும் எச்சரிக்கிறது.—1 கொரிந்தியர் 6:9, 10; நீதிமொழிகள் 23:20, 21; 1 பேதுரு 4:1-4.
3. ஆன்மீக ரீதியில் விழிப்புடனிருக்கவும் யெகோவாவின் மகா நாளை மனதில் வைத்திருக்கவும் எது நமக்கு உதவும்?
3 இந்தக் கடினமான கடைசி நாட்களில், சீர்கெட்ட உலகின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமல் விவேகத்துடன் வாழ்வது கிறிஸ்தவர்களுக்கு சவாலாக இருக்கிறது; அதுவும் முன்னொருபோதும் இல்லாதளவுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. (யோவான் 17:15, 16) முன்னறிவிக்கப்பட்ட விதமாகவே, இன்றைய சந்ததியினர் ‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்’ இருக்கிறார்கள். அதுவும் எந்தளவுக்கு? “மிகுந்த உபத்திரவம்” மிக அருகே வந்துவிட்டதற்கான அத்தாட்சிகளை ‘உணராதிருக்கும்’ அளவுக்கு. (2 தீமோத்தேயு 3:4, 5; மத்தேயு 24:21, 37-39) இயேசு தம் சீஷர்களை இவ்வாறு எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் [ஒரு கண்ணியைப் போல்] வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 21:34, 35) கடவுளுடைய ஊழியர்களாக நாம் இயேசுவின் எச்சரிப்புக்குச் செவிகொடுக்கத் தீர்மானமாயிருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள தேவபக்தியற்ற உலகத்தாரைப் போலிராமல், ஆன்மீக ரீதியில் விழிப்புடனிருக்கவும் யெகோவாவின் மகா நாளை மனதில் வைத்திருக்கவும் நாம் பிரயாசப்படுகிறோம்.—செப்பனியா 3:8; லூக்கா 21:36.
4. (அ) தரமான பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது ஏன் கஷ்டமாக இருக்கிறது? (ஆ) எபேசியர் 5:15, 16-ல் உள்ள என்ன அறிவுரையைப் பின்பற்ற நாம் விரும்புகிறோம்?
4 கெட்ட காரியங்களை பிசாசு மிகக் கவர்ச்சியாகத் தோன்றச் செய்கிறான்; அவை எளிதில் கிடைக்கும்படியும் செய்கிறான். ஆகவே இந்த உலகின் சீர்கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது சுலபமல்ல. முக்கியமாக பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. இந்த உலகின் பெரும்பாலான காரியங்கள் நம் ‘மாம்ச இச்சைகளை’ தூண்டும் விதத்தில்தான் இருக்கின்றன. (1 பேதுரு 2:11) தீங்கு விளைவிக்கும் பொழுதுபோக்குகள் பெரும்பாலும் பொது இடங்களில் மலிந்து கிடப்பது உண்மைதான்; ஆனால் அவை வீட்டிற்குள்ளும்கூட நுழைந்துவிட முடியும். புத்தகங்கள், டிவி, இன்டர்நெட், வீடியோ என பல ரூபங்களில் அவை நுழைந்துவிட முடியும். ஆகவே கடவுளுடைய வார்த்தை கிறிஸ்தவர்களுக்கு இந்த ஞானமான அறிவுரையை வழங்குகிறது: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:15, 16) இந்த ஆலோசனையைக் கவனமாகப் பின்பற்றினால்தான் தீங்கான பொழுதுபோக்கில் சிக்காமல் தப்பிப்போம்; இல்லாவிட்டால் அப்படிப்பட்ட பொழுதுபோக்கு நம்மைக் கவர்ந்து, வசப்படுத்தி, யெகோவாவுடன் உள்ள நம் உறவையும் குலைத்து, முடிவில் அழிவுக்கே வழிநடத்திவிடும்!—யாக்கோபு 1:14, 15.
5. நாம் எதைச் செய்தால் அதிக புத்துணர்ச்சியைப் பெற முடியும்?
5 கிறிஸ்தவர்கள் எப்போதும் பிஸியாக இருப்பதால், அவ்வப்போது பொழுதுபோக்குக்காகக் கொஞ்ச நேரத்தை ஒதுக்குவது அவசியமென அவர்கள் நினைப்பது நியாயம்தான். சொல்லப்போனால், “நகைக்க ஒரு காலமுண்டு,” “நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என பிரசங்கி 3:4 சொல்கிறது. ஆகவே பொழுதுபோக்கிற்காக நேரம் செலவிடுவது வீண் என்பதாக பைபிள் சொல்வதில்லை. அதேசமயத்தில், பொழுதுபோக்கு நமக்குப் புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்; அது, நம் ஆன்மீகத்துக்கு அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது. கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் என்பதை முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கே வாழ்க்கையில் முதலிடம் தருகிறார்கள்; மேலும், இயேசுவின் மெதுவான நுகத்தை ஏற்றுக்கொண்டு, ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு’ மெய்யான ‘இளைப்பாறுதலை,’ அதாவது புத்துணர்ச்சியைப் பெறுகிறார்கள்.—மத்தேயு 11:29, 30; அப்போஸ்தலர் 20:35.
பொருத்தமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்தல்
6, 7. ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு ஏற்றதா இல்லையா எனத் தீர்மானிக்க எது உங்களுக்கு உதவும்?
6 ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதா இல்லையா எனத் திட்டவட்டமாக எப்படித் தெரிந்துகொள்ளலாம்? பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம், மூப்பர்களும் தேவைப்படும்போது உதவி அளிக்கலாம். ஆனால் உண்மையில், ஏதோவொரு புத்தகமோ சினிமாவோ விளையாட்டோ நடனமோ இசையோ, ஏற்றதா இல்லையா என்பதை மற்றவர்கள் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படக்கூடாது. ‘முதிர்ச்சி அடைந்தோர் . . . நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்’ என பவுல் கூறினார். (எபிரெயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு; 1 கொரிந்தியர் 14:20) இது சம்பந்தமாக வழிகாட்டும் நியமங்களை பைபிள் தருகிறது. கடவுளுடைய வார்த்தையால் பயிற்றுவிக்கப்பட்டுள்ள உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் செவிகொடுத்தால் அது உங்களுக்கு உதவும்.—1 தீமோத்தேயு 1:19.
7 “மரமானது அதின் கனியினால் அறியப்படும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 12:33) ஒரு பொழுதுபோக்கு கெட்ட ‘கனியைப்’ பிறப்பித்தால், அதாவது வன்முறை, ஒழுக்கக்கேடு, ஆவியுலகத்தொடர்பு போன்றவற்றிடம் ஆசையை வளர்த்தால் அதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அது உயிருக்கோ உடல்நலத்திற்கோ ஆபத்தாக இருந்தால், பணக்கஷ்டத்தை ஏற்படுத்தினால், அல்லது சோர்வூட்டினால் அதைத் தவிர்க்க வேண்டும். அதோடு, மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கும் பொழுதுபோக்கு தரமற்றதாகும்; ஏனென்றால், நம் சகோதரர்களின் மனசாட்சியைப் புண்படுத்தினால் நாம் பாவம் செய்கிறோம் என அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.”—1 கொரிந்தியர் 8:12, 13.
8. எலக்ட்ரானிக் கேம்ஸுகளிலும் வீடியோக்களிலும் என்னென்ன ஆபத்துக்கள் மறைந்திருக்கின்றன?
8 கடைகளில் எலக்ட்ரானிக் கேம்ஸுகளும் வீடியோக்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சில தீங்கற்றவை, ஓய்வையும் புத்துணர்ச்சியையும் தருபவை. ஆனால் பொதுவாகப் பார்த்தால், அவை பைபிள் கண்டனம் செய்யும் விஷயங்களையே அதிகமதிகமாக சிறப்பித்துக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட விளையாட்டில் ஈடுபடுபவர்கள், அதில் வரும் கதாபாத்திரங்களின் கைகால்களை முறிக்க வேண்டும் என்றால், கொலை செய்ய வேண்டும் என்றால், அல்லது மிக ஒழுக்கக்கேடாக நடக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாகவே தீங்கற்ற விளையாட்டாக இருக்க முடியாது! “வன்முறையில் நாட்டங்கொள்வோரை” யெகோவா வெறுக்கிறார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 11:5, பொ.மொ.; நீதிமொழிகள் 3:31; கொலோசெயர் 3:5, 6) ஏதேனும் ஒரு விளையாட்டு உங்கள் மனதில் பேராசையை அல்லது மூர்க்கத்தைத் தூண்டுகிறதென்றால், உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் சக்தியை உறிஞ்சிவிடுகிறதென்றால், அல்லது பொன்னான நேரத்தை வீணாக்குகிறதென்றால், அது ஆன்மீகத்திற்கு தீங்கிழைப்பதை உணர்ந்து, தேவையான மாற்றங்களை உடனடியாகச் செய்யுங்கள்.—மத்தேயு 18:8, 9.
பொழுதுபோக்குக்கான தேவையை தகுந்த வழிகளில் திருப்திசெய்தல்
9, 10. விவேகமுள்ளவர்கள், பொழுதுபோக்குக்கான தேவையை எப்படி திருப்திசெய்து கொள்ளலாம்?
9 “இந்த உலகில் நிறைந்திருக்கும் பெரும்பாலான பொழுதுபோக்குகள் பைபிள் தராதரங்களுக்கு முரணாகத்தான் இருக்கின்றன, அப்படியிருக்கும்போது எதைத்தான் தரமான பொழுதுபோக்கு என சொல்ல முடியும்?” என்று சிலசமயம் கிறிஸ்தவர்கள் கேட்கிறார்கள். மனந்தளர்ந்துவிடாதீர்கள், திருப்தி அளிக்கும் பொழுதுபோக்கைக் கண்டுபிடிக்க முடியும், ஆனால் உங்கள் பங்கில் முயற்சி தேவைப்படுகிறது. அதோடு, முன்யோசனையும் திட்டமிடுதலும்கூட தேவைப்படுகிறது, முக்கியமாக பெற்றோரின் பங்கில். நிறைய பேர் குடும்பத்தாரோடும் சபையில் உள்ளவர்களோடும் சேர்ந்து சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். அன்றைய தினம் நடந்த விஷயங்களைப் பற்றி அல்லது பைபிள் விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே சாவகாசமாக சாப்பிடுகிறார்கள்; அது மனதுக்கு இதமாய் இருக்கிறது, உற்சாகமும் அளிக்கிறது. பிக்னிக்குகள், பொருத்தமான விளையாட்டுகள், காம்ப்பிங் ட்ரிப்புகள், நீண்டதூர நடைபயணங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யலாம். அப்படிப்பட்ட நல்ல பொழுதுபோக்கு சந்தோஷமும் புத்துணர்ச்சியும் அளிக்கும்.
10 மூன்று பிள்ளைகளை வளர்த்த ஒரு மூப்பரும் அவரது மனைவியும் இவ்வாறு சொல்கிறார்கள்: “பிள்ளைகள் சின்னஞ்சிறியவர்களாக இருந்த சமயத்திலிருந்தே, விடுமுறைக்கு எங்கே போகலாம் என்று அவர்களைக் கேட்பது எங்கள் வழக்கம். சில சமயத்தில் ஒவ்வொரு பிள்ளையும் தனது க்ளோஸ் ஃபிரெண்டை கூட்டிக்கொண்டுவர அனுமதித்தோம்; இதனால் அவர்களுக்கு இன்னும் ஜாலியாக இருந்தது. அதுமட்டுமல்ல, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை நினைவுகூர்ந்தோம். அவ்வப்போது, உறவினர்களையும் சபையிலுள்ள நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்தோம். வெளியே எங்காவது போய் சமைத்து சாப்பிட்டு, விளையாட்டுக்கள் விளையாடினோம். மலைகளுக்குச் சென்று, அங்கு காலார நடந்தோம்; யெகோவாவின் படைப்பைப் பற்றி கற்றுக்கொள்ள இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டோம்.”
11, 12. (அ) பொழுதைக் கழிக்க எப்போதாவது நீங்கள் திட்டமிடும்போது மற்றவர்களையும் எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம்? (ஆ) எப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கின்றன?
11 தனிப்பட்ட விதமாகவோ குடும்பமாகவோ, பொழுதைக் கழிக்க எப்போதாவது நீங்கள் திட்டமிடும்போது மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ள முடியுமா? விதவைகள், மணமாகாதவர்கள், ஒற்றைப் பெற்றோரை உடைய குடும்பத்தினர் போன்றவர்களுக்கு உற்சாகம் தேவைப்படலாம். (லூக்கா 14:12-14) புதிதாகச் சபைக்கு வருகிற சிலரைக்கூட நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்; ஆனால், எவ்விதத்திலாவது மற்றவர்கள்மீது தீய செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளவர்களை சேர்த்துக்கொள்ளாதிருங்கள். (2 தீமோத்தேயு 2:20, 21) வயதானவர்களுக்கு வெளியே செல்ல சிரமமாக இருந்தால், அவர்களுடைய வீட்டிற்கே சாப்பாட்டை எடுத்துச் சென்று அவர்களோடு சேர்ந்து சாப்பிடத் திட்டமிடலாம்.—எபிரெயர் 13:1, 2.
12 ஒருசிலரை மட்டும் எளிய விருந்துக்கு அழைத்து, அவர்கள் எப்படிச் சத்தியத்திற்கு வந்தார்கள் என்பதையும், கடவுளுக்கு விசுவாசமாக இருக்க எதெல்லாம் உதவியது என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்வது அநேகருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பைபிள் விஷயங்களைப் பேசலாம்; பிள்ளைகள் உட்பட, கூடிவந்திருக்கும் எல்லாரையும் அது சம்பந்தமாக ஏதாவது குறிப்புகள் சொல்லும்படி கேட்கலாம். அவ்வாறு உரையாடுவது பயனுள்ள விதத்தில் உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்ள உதவும்; முக்கியமாக, யாருக்குமே தர்மசங்கடத்தையோ தாழ்வுணர்ச்சியையோ ஏற்படுத்தாமல் இருக்கும்.
13. உபசரிப்பதிலும் அதை ஏற்றுக்கொள்வதிலும் இயேசுவும் பவுலும் எப்படிச் சிறந்த முன்மாதிரிகளாக விளங்கினார்கள்?
13 உபசரிப்பதிலும் அதை ஏற்றுக்கொள்வதிலும் இயேசு சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். ஆன்மீக விதத்தில் மற்றவர்களுக்கு நன்மைகள் அளிக்கவே அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எப்போதும் பயன்படுத்திக் கொண்டார். (லூக்கா 5:27-39; 10:42; 19:1-10; 24:28-32) அவரது ஆரம்பகால சீஷர்கள் அவரது முன்மாதிரியைப் பின்பற்றினார்கள். (அப்போஸ்தலர் 2:46, 47) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், [“உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்ளும்படிக்கும்,” NW] உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.” (ரோமர் 1:10-12) அதேபோல் நாம் பொழுதைக் கழிக்க ஒன்றுகூடி வரும்போது உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற சூழல் நிலவ வேண்டும்.—ரோமர் 12:13; 15:1, 2.
சில நினைப்பூட்டுதல்களும் எச்சரிப்புகளும்
14. பெரிய பார்ட்டிகளை ஏற்பாடு செய்வது ஏன் ஞானமானது அல்ல?
14 பெரிய பார்ட்டிகளை ஏற்பாடு செய்வது ஞானமானது அல்ல. ஏனென்றால் ஏராளமானோர் கூடிவரும்போது மேற்பார்வை செய்வது கஷ்டமாகிவிடும். ஆன்மீக நடவடிக்கைகளுக்கு இடையூறாக இல்லாத ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து, சில குடும்பங்கள் மட்டும் ஒன்றாகச் சேர்ந்து பிக்னிக் போகலாம் அல்லது போட்டி மனப்பான்மையை அதிகமாகத் தூண்டாத ஏதேனும் விளையாட்டு விளையாடலாம். மூப்பர்கள், உதவி ஊழியர்கள், அல்லது முதிர்ச்சி வாய்ந்த மற்ற கிறிஸ்தவர்கள் அவற்றில் கலந்துகொள்ளும்போது எல்லாரும் உற்சாகம் அடைவார்கள், இன்னுமதிக புத்துணர்ச்சியும் பெறுவார்கள்.
15. பார்ட்டிகளை ஏற்பாடு செய்கிறவர்கள், ஏன் சரியானபடி மேற்பார்வை செய்ய வேண்டும்?
15 பார்ட்டிகளை ஏற்பாடு செய்கிறவர்கள், சரியானபடி மேற்பார்வை செய்வதன் அவசியத்தை மறந்துவிடக் கூடாது. உண்மைதான், உபசரிப்பைக் காட்ட நீங்கள் விரும்பலாம்; ஆனால், உங்கள் அஜாக்கிரதை காரணமாக விருந்தாளி ஒருவர் உங்கள் வீட்டில் நடந்த எதையோ பார்த்து இடறல் அடைந்துவிட்டார் என்பது பிற்பாடு தெரியவரும்போது மனம் வருந்த மாட்டீர்களா? உபாகமம் 22:8-ல் சொல்லப்பட்டுள்ள நியமத்தைச் சிந்தித்துப் பாருங்கள். இஸ்ரவேலர் புதிதாக வீடு கட்டுகையில் அதன் மொட்டைமாடிக்குக் கைப்பிடிச் சுவரைக் கட்ட வேண்டியிருந்தது; விருந்தினரை உபசரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட அந்த மொட்டைமாடிக்கு ஏன் கைப்பிடிச் சுவரைக் கட்ட வேண்டியிருந்தது? ‘ஒருவன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, இரத்தப்பழியை வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு’ அப்படிக் கட்ட வேண்டியிருந்தது. அதேபோல் உங்கள் விருந்தினரின் சரீர நலனையும் ஆன்மீக நலனையும் மனதில் வைத்து, அவர்களைப் பாதுகாக்க நீங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்; அதேசமயத்தில் நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது.
16. பார்ட்டியில் மதுபானத்தைப் பரிமாற நினைத்தால் எவ்வாறு விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்?
16 பார்ட்டியில் மதுபானத்தைப் பரிமாற நினைத்தால் அதை மிகுந்த விவேகத்தோடு செய்ய வேண்டும். விருந்தை ஏற்பாடு செய்யும் அநேக கிறிஸ்தவர்கள், எவ்வளவு மதுபானம் பரிமாறப்படுகிறது அல்லது எவ்வளவு மதுபானம் அருந்தப்படுகிறது என்பதை தாங்களே நேரடியாக மேற்பார்வை செய்ய முடிந்தால் மட்டுமே அதைப் பரிமாறத் தீர்மானிக்கிறார்கள். மற்றவர்களை இடறலடையச் செய்யும் அல்லது அளவுக்குமீறி குடிக்கத் தூண்டும் எதையும் அனுமதிக்கக் கூடாது. (எபேசியர் 5:18, 19) பார்ட்டிக்கு வரும் சிலர், அநேக காரணங்களுக்காக, மதுபானத்தை அடியோடு தவிர்க்கத் தீர்மானிக்கலாம். சில இடங்களில், மதுபானம் அருந்துவதற்கு வயதுவரம்பு இருக்கலாம்; அந்த இடங்களில் கிறிஸ்தவர்கள் அரசாங்க சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவை மட்டுக்குமீறி கண்டிப்பானதாகத் தோன்றினாலும் கீழ்ப்படிய வேண்டும்.—ரோமர் 13:5.
17. (அ) பார்ட்டியில் இசை இருந்தால், பார்ட்டியை நடத்துபவர் ஏன் அதை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? (ஆ) பார்ட்டியில் நடனத்தை அனுமதித்தால் அதில் எவ்வாறு அடக்கத்தைக் காட்ட வேண்டும்?
17 இசை, நடனம் போன்ற ஏதாவது நிகழ்ச்சிகள் பார்ட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டால், அவையும் கிறிஸ்தவ நியமங்களுக்கு ஏற்ப இருக்கின்றனவா என்பதை அந்தப் பார்ட்டியை நடத்துபவர் உறுதிசெய்ய வேண்டும். இன்று எத்தனை எத்தனையோ இசைகள் இருக்கின்றன, அதேபோல் ரசனையும் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. ஆனால் பொதுப்படையில், இன்றைய இசைகள் கலகத்தையும் ஒழுக்கக்கேட்டையும் வன்முறையையுமே பெரும்பாலும் தூண்டுகின்றன. ஆகவே அவற்றைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியம். மென்மையான இசைதான் தரமானது என்றில்லை; அதேசமயத்தில் அது காம உணர்வைக் கிளறுவதாகவும், சப்தமான “பீட்டுகளுடன்” காதைப் பிளப்பதாகவும் இருக்கக்கூடாது. சப்தத்தை மிதமாக வைக்கும் அவசியத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவரிடம்போய் இசையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். ஆபாசமான நடனங்கள்—காம உணர்வைத் தூண்டும் விதத்தில் இடுப்பையும் மார்புகளையும் அசைத்து நடனமாடுவது—நிச்சயமாகவே கிறிஸ்தவருக்குப் பொருத்தமானது அல்ல.—1 தீமோத்தேயு 2:8-10.
18. பிள்ளைகள் கலந்துகொள்ளும் பார்ட்டிகளைக் கண்காணிப்பதன் மூலம் பெற்றோர் எவ்வாறு அவர்களைப் பாதுகாக்கலாம்?
18 பிள்ளைகள் கலந்துகொள்ளவிருக்கும் பார்ட்டிகளில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை கிறிஸ்தவ பெற்றோர் முன்கூட்டியே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை அவர்களுடன் சேர்ந்து செல்வதும் ஞானமானது. சில பெற்றோர், பெரியவர்களின் மேற்பார்வையில்லாத பார்ட்டிகளில் கலந்துகொள்ள பிள்ளைகளை அனுமதித்திருப்பது வருந்தத்தக்கது; இதனால் அநேக பிள்ளைகள் ஒழுக்கக்கேட்டிலோ மற்ற தவறான நடத்தையிலோ ஈடுபட்டிருக்கிறார்கள். (எபேசியர் 6:1-4) பிள்ளைகள் வாலிப வயதைத் தாண்டுமளவு வளர்ந்துவிட்டிருந்தாலும், இதுவரை பொறுப்பானவர்களாக நடந்து வந்திருந்தாலும், ‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோட’ அவர்களுக்கு இன்னமும் உதவி தேவை.—2 தீமோத்தேயு 2:22.
19. எந்த எதார்த்தத்தை உணருவது, உண்மையிலேயே முக்கியமானதை வாழ்க்கையில் ‘முதலாவது தேட’ நமக்கு உதவும்?
19 புத்துணர்ச்சி அளிக்கும் தரமான பொழுதுபோக்கில் அவ்வப்போது ஈடுபடுவது வாழ்க்கைக்கு இன்னுமதிக மகிழ்ச்சியூட்டும் என்பது உண்மைதான். இந்த வகையில் நாம் இன்பம் பெறுவதை யெகோவாவும் தடுப்பதில்லை; ஆனால், எதார்த்தமாகப் பார்க்கையில், இப்படிப்பட்ட காரியங்கள் பரலோகத்தில் ஆன்மீக பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க நமக்கு உதவுவதில்லை என்பதை அறிந்திருக்கிறோம். (மத்தேயு 6:19-21) ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதே’ வாழ்க்கையில் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு தம் சீஷர்களுக்கு உதவினார். எதை உண்போம், குடிப்போம், அல்லது உடுத்துவோம் என்பதையெல்லாம் ‘அஞ்ஞானிகளே நாடித்தேடுகிறார்கள்,’ அவை வாழ்க்கைக்கு முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டார்.—மத்தேயு 6:31-34.
20. கொடை வள்ளலான யெகோவாவிடமிருந்து என்ன நன்மைகளை அவரது உண்மையுள்ள ஊழியர்கள் எதிர்பார்க்கலாம்?
20 ஆம், நாம் ‘புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று’ செய்ய முடியும்; நலமான அனைத்தையும் மிதமாக அனுபவித்து மகிழ்ந்திட வழிசெய்திருப்பதற்காக, கொடை வள்ளலான யெகோவாவுக்கு நன்றி சொல்ல முடியும். (1 கொரிந்தியர் 10:31) அவர் விரைவில் கொண்டுவரவிருக்கும் பரதீஸிய பூமியில், அவரது தாராள குணத்தின் வெளிக்காட்டுகளை நாம் முழுமையாக அனுபவிக்க எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கும்; அவரது நீதியுள்ள தராதரங்களைக் கடைப்பிடிக்கிறவர்களின் நல்ல தோழமையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியும்.—சங்கீதம் 145:16; ஏசாயா 25:6; 2 கொரிந்தியர் 7:1.
நினைவிருக்கிறதா?
• இன்று தரமான பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது கிறிஸ்தவர்களுக்கு ஏன் கஷ்டமாயிருக்கிறது?
• கிறிஸ்தவ குடும்பங்களுக்கு திருப்தி அளித்திருக்கும் பொழுதுபோக்குகள் சில யாவை?
• தரமான பொழுதுபோக்கை மகிழ்ந்து அனுபவிக்கையில், என்னென்ன நினைப்பூட்டுதல்களையும் எச்சரிப்புகளையும் நாம் மனதில் வைக்க வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
பயன் அளிக்கும் பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுங்கள்
[பக்கம் 19-ன் படம்]
எத்தகைய பொழுதுபோக்குகளை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும்?