பைபிளைப் புரிந்துகொள்ளுதல் நீங்களும் இன்பம் காணலாம்
கடவுள் தந்த சத்தியங்கள் எனும் மணிக்கற்கள் பைபிளில் குவிந்து கிடக்கின்றன. வாழ்க்கையின் நோக்கத்தையும், மனிதர் படும் துன்பங்களுக்கு காரணத்தையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பற்றி பைபிள் நமக்குச் சொல்கிறது. மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது, நண்பர்களை எப்படிச் சம்பாதிப்பது, பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாய் சமாளிப்பது போன்றவற்றை கற்பிக்கிறது. மிக முக்கியமாக, நமது படைப்பாளரும் பரலோகப் பிதாவுமான யெகோவா தேவனைப் பற்றி பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். இத்தகைய அறிவு நமக்கு சந்தோஷத்தை அள்ளித் தருகிறது; வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைக் கொடுக்கிறது, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவுகிறது.
கடவுளைப் பற்றி தொடர்ந்து அறிந்து வருவதை உணவு சாப்பிடுவதோடு பைபிள் ஒப்பிடுகிறது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 4:4; எபிரெயர் 5:12-14) நாம் தொடர்ந்து உயிர்வாழ ஒவ்வொரு நாளும் போஷாக்குமிக்க உணவை உட்கொள்வது அவசியம். அதேபோல, கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் நித்திய ஜீவனைப் பெற விரும்பினால் பைபிளைத் தவறாமல் வாசிப்பது அவசியம்.
சாப்பிடுவதில் நாம் இன்பம் காண்கிறோம், ஏனென்றால் அந்த விதமாகவே கடவுள் நம்மை படைத்திருக்கிறார், சாப்பிடுவதன் மூலம் நமது அடிப்படை தேவைகளில் ஒன்று திருப்தி செய்யப்படுகிறது. என்றாலும், நாம் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்றால், திருப்தி செய்ய வேண்டிய மற்றொரு அடிப்படைத் தேவையும் இருக்கிறது. “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்” என இயேசு கூறினார். (மத்தேயு 5:3, NW) கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதன் மூலம் நமது ஆன்மீகத் தேவை திருப்தி செய்யப்படுவதால் நாம் நிச்சயம் சந்தோஷத்தை அடைய முடியும்.
உண்மைதான், பைபிளைப் புரிந்துகொள்வது சிலருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. உதாரணமாக, பரிச்சயமில்லாத பழக்கவழக்கங்களை அல்லது அடையாள அர்த்தமுடைய வார்த்தைகளைப் பற்றி கூறுகிற வசனங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி தேவைப்படலாம். அதுமட்டுமல்ல, அடையாள மொழியில் எழுதப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களும் இருக்கின்றன; இத்தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இதே விஷயத்தை பற்றி கூறும் மற்ற வசனங்களை எடுத்துப் பார்க்க வேண்டும். (தானியேல் 7:1-7; வெளிப்படுத்துதல் 13:1, 2) இப்படிப்பட்ட சவால்கள் இருந்தாலும்கூட, உங்களால் பைபிளைப் புரிந்துகொள்ள முடியும். இதைப் பற்றி எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?
எல்லாரும் இன்பம் காணலாம்
பைபிள் கடவுளுடைய வார்த்தை. அதன் வாயிலாக கடவுள் தமது சித்தத்தை வெளிப்படுத்துகிறார். யாருக்குமே புரியாத அல்லது உயர்ந்த படிப்பு படித்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு புத்தகத்தை கடவுள் நமக்குத் தருவாரா? யெகோவா மிகவும் இரக்கமுள்ளவர், அதனால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டார். கிறிஸ்து இயேசு இவ்வாறு கூறினார்: “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா”! (லூக்கா 11:11-13) கடவுளிடம் உள்ளப்பூர்வமாய் கேட்டால் அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள உங்களுக்கும் உதவி செய்வார். ஆகவே, பைபிளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம். பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுபிள்ளைகளும்கூட அடிப்படை பைபிள் போதனைகளைப் புரிந்துகொள்ள முடியும்!—2 தீமோத்தேயு 3:15.
பைபிளைப் புரிந்துகொள்ள முயற்சி தேவையென்றாலும், அப்படிச் செய்வது நம்மை பலப்படுத்தும், ஊக்குவிக்கும். இயேசு உயிர்த்தெழுந்தபின் தமது சீஷர்களில் இருவருக்குக் காட்சியளித்து, பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி அவர்களிடம் பேசினார். லூக்காவின் பதிவு இவ்வாறு கூறுகிறது: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.” விளைவு? தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி அன்று மாலை அவர்கள் யோசித்துப் பார்த்தபோது அவர்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு சொல்லிக்கொண்டார்கள்: “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” (லூக்கா 24:13-32) கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொண்டது அவர்களுக்கு இன்பம் தந்தது, ஏனென்றால் கடவுளுடைய வாக்குறுதிகள் மீது அவர்களுடைய விசுவாசத்தை அது பலப்படுத்தியது, எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்க உதவியது.
கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வது பாரமான ஒன்றல்ல, மாறாக அது சுவாரஸ்யமானது, நன்மையானது, சுவையான உணவைப் புசிப்பதைப் போல் இனிமையானது. இதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “தேவனை அறியும் அறிவை” எப்படி அனுபவித்து மகிழலாம் என்பதைப் பின்வரும் கட்டுரை காட்டுகிறது.—நீதிமொழிகள் 2:1-5.
[பக்கம் 4-ன் படம்]
அன்புள்ள தகப்பனைப் போல், பைபிளைப் புரிந்துகொள்ள யெகோவா நமக்கு பரிசுத்த ஆவியைத் தருகிறார்