வறுமை—இன்றைய சூழல்
பிரேசில் நாட்டு சாவோ போலோ நகர வீதிகளில், விசன்டா என்பவர்a ஒரு கைவண்டியை இழுக்க முடியாமல் இழுத்துக்கொண்டு போவதை அடிக்கடி பார்க்கலாம். கார்டுபோர்டுகள், பழைய இரும்புத் துண்டுகள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை அவர் பொறுக்குகிறார். ராத்திரி நேரத்தில், தனது வண்டியின்கீழ் கார்டுபோர்டுகளைப் பாய்போல் விரித்து அதில் படுத்துத் தூங்குகிறார். சந்தடிமிக்க அந்தத் தெருவில்தான் இரவுப்பொழுதைக் கழிக்கிறார். கார், பஸ்களின் இரைச்சலைப் பற்றி துளிகூட அவர் கவலைப்படுவதாகத் தெரிவதில்லை. ஒருகாலத்தில் அவருக்கு உத்தியோகம் இருந்தது, வீடுவாசல் இருந்தது, மனைவி மக்கள் இருந்தார்கள்—ஆனால் இப்போது எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்; அரைவயிற்றுக்கும் கால்வயிற்றுக்கும்கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்.
விசன்டாவைப் போலத்தான் உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் கொடிய வறுமையில் வாடுகிறார்கள். வளரும் நாடுகளில், அநேகர் தெருக்களிலோ சேரிகளிலோ வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நொண்டியாகவோ குருடாகவோ குழந்தையும் கையுமாகவோ திரியும் பிச்சைக்காரர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். டிராஃபிக் சிக்னல்களில் கார்கள் நின்றவுடன், நாலு காசு சம்பாதிக்கிற நம்பிக்கையில் பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஓடி ஏதாவது விற்பதைப் பார்க்கலாம்.
ஏன் இந்தளவு வறுமை தாண்டவமாடுகிறது என்பதை விளக்குவது கடினமே. இது சம்பந்தமாக பிரிட்டிஷ் பத்திரிகை தி எக்கானமிஸ்ட் இவ்வாறு குறிப்பிட்டது: “வறுமையை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்தும் இப்பொழுது மனிதர்களிடம் இருக்கிறது; முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு புத்திக்கூர்மையும், மருத்துவ அறிவும், தொழில் திறமைகளும் இருக்கின்றன.” இவற்றால் அநேகருக்கு நிச்சயமாகவே பயன் கிடைத்திருக்கிறது. வளரும் நாடுகளில், பளபளக்கும் புதுப்புது கார்கள் பெருநகரத்து வீதிகளில் வலம் வருவதைக் காணலாம். கடைகளில் அதிநவீன கருவிகள் மலிந்து கிடக்கின்றன, அவற்றை வாங்கிச் செல்கிற ஆட்களுக்கும் பஞ்சமே இல்லை. பிரேசிலில் உள்ள இரண்டு ஷாப்பிங் சென்டர்கள் சில பொருள்களுக்கு விளம்பரம் செய்ய விசேஷ முறையைக் கையாண்டன. 2004 டிசம்பர் 23, 24 தேதிகளில் அந்த ஷாப்பிங் சென்டர்கள் இராமுழுக்க திறந்தே இருந்தன; ஒரு ஷாப்பிங் சென்டர், கடைக்கு வருவோரை குஷிப்படுத்த டான்ஸர்களை வாடகைக்கு அமர்த்தியது. இந்த டான்ஸ் நிகழ்ச்சி சுமார் 5,00,000 வாடிக்கையாளர்களைச் சுண்டியிழுத்தது!
சிலரிடம் பணம்காசு கொட்டிக்கிடப்பது உண்மைதான், ஆனாலும் ஏழை ஜனங்களுக்கு அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் இந்த இமாலய வித்தியாசத்தைப் பார்க்கும் அநேகர், வறுமையை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். வேஷா என்ற பிரேசில் நாட்டுப் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “வறுமைக்கு எதிரான போரே இந்த வருடம் [2005] உலகத் தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயம்.” மிகவும் ஏழ்மையில் இருக்கும் நாடுகளுக்கு, முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட மார்ஷல் பிளான் என்ற புதிய திட்டத்தைப் பற்றியும் வேஷா குறிப்பிட்டது.b இதுபோன்ற திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படுவதுபோல் தோன்றினாலும், அதே பத்திரிகை மேலும் இவ்வாறு கூறியது: “எதிர்பார்த்த பலன் கிடைக்குமா என அநேகர் சந்தேகப்படுகிறார்கள். பெரும்பாலான நாடுகள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை கொடுக்கத் தயங்குகின்றன, அந்த நிதி உரிய ஆட்களுக்குப் போய்ச் சேர்வது அரிதாக இருப்பதே அதற்குக் காரணமாகும்.” ஊழல் மற்றும் அலுவலகங்களில் காணப்படும் இழுபறி நிலை காரணமாக, அரசாங்கங்களும் சர்வதேச ஏஜென்ஸிகளும் தனிநபர்களும் வழங்கும் நிதியில் பெரும்பாகம் உண்மையாகவே வறுமையில் இருப்போருக்குப் போய்ச் சேருவதில்லை.
வறுமை ஒரு தொடர்கதை என்பதை இயேசு அறிந்திருந்தார். “ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். (மத்தேயு 26:11, பொது மொழிபெயர்ப்பு) அப்படியானால், பூமியில் என்றென்றும் வறுமை இருக்குமென அர்த்தமா? இந்நிலையை மேம்படுத்த ஏதாவது செய்ய முடியுமா? ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்யலாம்?
[அடிக்குறிப்புகள்]
a உண்மைப் பெயரல்ல.
b மார்ஷல் பிளான் என்பது அமெரிக்கா கொண்டுவந்த ஒரு திட்டம்; இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்த இத்திட்டம் போடப்பட்டது.