பூமியைப் படைத்த நோக்கம் விரைவில் நிறைவேறும்
ஆதாமும் ஏவாளும் பரதீஸில் இருந்தபோது, பின்வரும் கட்டளை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.”—ஆதியாகமம் 1:28.
முதல் மனித தம்பதியரும் அவர்களுடைய சந்ததியாரும் தாங்கள் வாழ்ந்த தோட்டத்தை மட்டுமல்ல, முழு பூமியையுமே பயிர் செய்து பராமரித்து பரதீஸாக மாற்ற வேண்டியிருந்தது. பூமியைக் கீழ்ப்படுத்துங்கள் என்ற கட்டளை இதைத்தான் அர்த்தப்படுத்தியது. ஆனால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததால் அந்தத் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். (ஆதியாகமம் 3:23, 24) அப்படியெனில், இந்தப் பூமியை இனி யாராலும் கீழ்ப்படுத்தி பரதீஸாக மாற்ற முடியாதா? அப்படிச் சொல்ல முடியாது.
கடவுளுடைய சொற்படி நடக்கிற மனிதர்கள் அவருடைய ஆசீர்வாதத்தோடு இந்த பூமியைக் கீழ்ப்படுத்துவார்கள். பூர்வ இஸ்ரவேலருக்கு கடவுளுடைய ஆசீர்வாதம் இருந்தபோது, அவர்களுடைய வயல்கள் நல்ல விளைச்சலைத் தந்தன, பழத்தோட்டங்கள் மிகச்சிறந்த கனிகளைக் கொடுத்தன. நமது பூமி படிப்படியாய் பரதீஸாக மாறும்போது இதுபோன்ற பலன்களைத் தரும். அதைக் குறித்து, கடவுளுடைய வார்த்தையான பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 67:6) சொல்லப்போனால், பூமியிலுள்ள பசும் புல்வெளிகளும் மலைகளும் மரங்களும் மலர்களும் ஆறுகளும் கடல்களும் களிகூரும். (சங்கீதம் 96:11-13; 98:7-9) பச்சைப் பசேலென்ற தாவரங்களாலும் வண்ண வண்ணப் பறவைகளாலும் வியக்க வைக்கும் விலங்குகளாலும் கனிவான மக்களாலும் நம்முடைய பூமி செழித்தோங்கும்.
புதிய பூமி விரைவில்!
யெகோவா தேவன் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகின் வாசலில் நாம் இப்பொழுது நிற்கிறோம். “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பேதுரு 3:13) இந்த வசனத்தைப் படிக்கும் சிலர், இந்தப் பூமி ஒன்றும் பரதீஸாக மாறப்போவதில்லை என்ற முடிவுக்கு ஒருவேளை வரக்கூடும். இன்றுள்ள வானங்களும் பூமியும் அழிந்துபோய் அதற்கு பதிலாக புதிதாய் வேறொரு வானமும் பூமியும் படைக்கப்படும் என்றும் அவர்கள் யோசிப்பதே அதற்குக் காரணம். இது உண்மையா?
‘புதிய வானங்கள்’ என்றால் என்ன? அவை கடவுளால் படைக்கப்பட்ட சொல்லர்த்தமான வானங்கள் அல்ல. (சங்கீதம் 19:1, 2) குடிமக்களைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற மனித அரசாங்கங்களை ‘வானங்கள்’ என்று முந்தைய வசனங்களில் பேதுரு குறிப்பிட்டிருந்தார். (2 பேதுரு 3:10-12) இந்த ‘வானங்கள்’ மனிதகுலத்தை நல்ல முறையில் ஆட்சி செய்யாததால் அவை சீக்கிரத்தில் அழிந்துபோகும். (எரேமியா 10:23; தானியேல் 2:44) அவற்றுக்கு பதிலாக ‘புதிய வானங்கள்’ ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்; ராஜாவான இயேசு கிறிஸ்துவும் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட 1,44,000 உடன் ஆட்சியாளர்களும் இணைந்த கடவுளுடைய ராஜ்யமே ‘புதிய வானங்கள்’ என்று அழைக்கப்படுகிறது.—ரோமர் 8:16, 17; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3.
பேதுரு குறிப்பிட்ட “புதிய பூமி” ஒரு புதிய கிரகத்தை அர்த்தப்படுத்துவதில்லை. மனிதர் என்றென்றும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவே யெகோவா இந்தப் பூமியைப் படைத்தார். (சங்கீதம் 104:5) சிலசமயங்களில், மக்களைக் குறிப்பிடுவதற்கு ‘பூமி’ என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. (ஆதியாகமம் 11:1) சீக்கிரத்தில் இந்தப் பூமி அழிக்கப்படும் என சொல்லப்பட்டிருப்பது, கெட்ட மக்கள் அழிக்கப்படுவதையே அர்த்தப்படுத்துகிறது. அது போலவே, நோவாவின் நாளிலும் தேவபக்தியற்ற மக்களைக் கொண்ட உலகம் அழிக்கப்பட்டது. (2 பேதுரு 3:5-7) அப்படியானால், “புதிய பூமி” என்றால் என்ன? ‘நேர்மை இதயமுள்ள’ மெய் வணக்கத்தாரைக் கொண்ட ஒரு புதிய மனித சமுதாயத்தை அது குறிக்கிறது. (சங்கீதம் 125:4, NW; 1 யோவான் 2:17) ‘புதிய பூமிக்குரிய’ எல்லா சட்டதிட்டங்களும் அந்தப் ‘புதிய வானங்களிலிருந்து’ வரும். இந்தச் சட்டதிட்டங்களை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை பூமியில் வாழும் உண்மையுள்ள ஆண்கள் கவனித்துக்கொள்வார்கள்.
புதுப்புது மாற்றங்கள், வியத்தகு மாற்றங்கள்!
யெகோவா இந்தப் பூமியை மனிதர் வாழ்வதற்கு ஏற்ற ஓர் அருமையான வீடாக தயார் செய்து கொடுத்தார். பூமியை உருவாக்குவதற்காக அவர் செய்த அனைத்தும் “மிகவும் நன்றாயிருந்தது” என அவரே சொன்னார். (ஆதியாகமம் 1:31) ஆனால் பிசாசாகிய சாத்தானோ ஆதாமையும் ஏவாளையும் கலகம் செய்யத் தூண்டிவிட்டான். (ஆதியாகமம் 3:1-5; வெளிப்படுத்துதல் 12:9) என்றாலும், நேர்மையான மக்கள் ‘மெய் வாழ்வைப்’ பெற விரைவில் கடவுள் நடவடிக்கை எடுப்பார். பரதீஸில் நல்ல நிலைமைகளில் ‘முடிவில்லா வாழ்வை’ அனுபவிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 6:12, 19, NW) அந்தச் சமயத்தில், மனிதர் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்கள் சிலவற்றை இப்பொழுது நாம் ஆராயலாம்.
கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்போது, சாத்தான் கட்டுப்படுத்தப்படுவான், அவனால் மனிதருக்கு துன்பத்தைத் தர முடியாது. அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு கூறுகிறார்: “ஒரு தூதன் [பிரதான தூதன் மிகாவேல், அதாவது இயேசு கிறிஸ்து] பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.” (வெளிப்படுத்துதல் 20:1-3; 12:12) சாத்தான் பாதாளத்தில் தள்ளப்படுகையில் மனிதர்கள் அவனுடைய செல்வாக்கிலிருந்து விடுதலை பெறுவார்கள்; அதோடு, இன்னும் அநேக ஆசீர்வாதங்களையும் கிறிஸ்துவின் ஆட்சியில் அனுபவித்து மகிழ்வார்கள்.
அக்கிரமம், வன்முறை, போர் ஆகியவை இராது. பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11, 29) யெகோவா தேவன் ‘பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுவார்.’ (சங்கீதம் 46:9) சமாதானமும் பாதுகாப்பும் நிச்சயம் என்பதை இந்த அருமையான வாக்குறுதிகள் நமக்கு உணர்த்தவில்லையா?
ஆரோக்கியம் அளிக்கும் அறுசுவை உணவு அபரிமிதமாகக் கிடைக்கும். ‘பூமியில் ஏராளமான தானியம் விளையும். மலைகளின் உச்சியில் அது நிரம்பிவழியும்’ என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 72:16, NW) அந்தச் சமயத்தில், பசிக் கொடுமையின் பயங்கரத்திற்கு யாருமே ஆளாக மாட்டார்கள்.
நோய்நொடியினால் யாருமே அவதிப்பட மாட்டார்கள். “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24; 35:5, 6) இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார், முடவரையும் பார்வையற்றோரையும் சுகப்படுத்தினார். (மத்தேயு 9:35; மாற்கு 1:40-42; யோவான் 5:5-9) அப்படியிருக்க, புதிய உலகில் என்னென்ன காரியங்களை அவர் செய்வார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பார்வையற்றோரும் காதுகேளாதோரும் முடவரும் ஊமையரும் சுகப்படுத்தப்படும்போது உண்டாகும் சந்தோஷத்தை எண்ணிப் பாருங்கள்.
கீழ்ப்படிதலுள்ள மனிதர் படிப்படியாகப் பரிபூரணத்தை அடைகையில், முதுமையின் பாதிப்புகள் தலைகீழாக மாறும். மூக்குக் கண்ணாடிகளோ கைத்தடிகளோ சக்கர நாற்காலிகளோ மருத்துவமனைகளோ மருந்து மாத்திரைகளோ இனிமேல் தேவைப்படாது. நாம் மீண்டும் இளமைத் துடிப்பைப் பெறுகையில், அது எப்பேர்ப்பட்ட மாற்றமாக இருக்கும்! (யோபு 33:25) ஒவ்வொரு நாளும் இரவில் நன்கு ஓய்வெடுத்து, அடுத்த நாள் ஆனந்தமாய் வேலை செய்ய புதுத்தெம்புடன் விழித்தெழுவோம்.
அன்பானவர்களும் மற்றவர்களும் உயிர்த்தெழுந்து வருகையில் நம் இதயம் மகிழ்ச்சியில் துள்ளும். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) ஆபேல், நோவா, ஆபிரகாம், சாராள், யோபு, மோசே, ரூத், தாவீது, எலியா, எஸ்தர் போன்ற எண்ணற்றோரை வரவேற்பது எவ்வளவாய் மெய்சிலிர்க்க வைக்கும்! கோடிக்கணக்கான இன்னும் அநேகர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அவர்களில் பெரும்பாலோர் யெகோவாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். அதனால், கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவையும் பற்றி கற்பிக்க ஆவலாயிருக்கும் ஆட்கள் அத்தகையவர்களை வரவேற்பார்கள். இவ்வாறு, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் படைப்பாளரைப் பற்றி அறியும்போது இந்தப் பூமி உண்மையிலேயே யெகோவாவைப் பற்றிய அறிவினால் நிரம்பியிருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரே மெய்க் கடவுளை நாம் என்றென்றும் வணங்குவோம். ‘மகிழ்ச்சியோடே யெகோவாவை ஆராதிக்கும்’ பாக்கியம் நமக்கு இருக்கிறது; நாம் ஒன்றுசேர்ந்து அழகிய வீடுகளைக் கட்டுவோம், நிலத்தைப் பண்படுத்துவோம், கடைசியில் இந்த முழு பூமியையும் கீழ்ப்படுத்துவோம். (சங்கீதம் 100:1-3; ஏசாயா 65:21-24) யெகோவாவின் புனித பெயருக்கு பெருமை சேர்க்கும் அழகிய பரதீஸில்—ஆம், பலன் தருகிற, சமாதானம் நிலவுகிற அழகிய பரதீஸில்—என்றென்றும் வாழ்வது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்!—சங்கீதம் 145:21; யோவான் 17:3.
மனிதகுலத்திற்கு கடைசி பரீட்சை
இயேசுவின் ஆயிரவருட ஆட்சியில், கீழ்ப்படிதலுள்ள மனிதர் அனைவரும் மீட்கும்பலியின் நன்மைகளைப் பெறுவார்கள். இவ்வாறு, கடைசியில் சகல பாவங்களும் நீக்கப்பட்டு, மனிதர் பரிபூரணத்தை அடைவார்கள். (1 யோவான் 2:2; வெளிப்படுத்துதல் 21:1-4) ஆதாமுடைய பாவத்தின் விளைவுகள் முற்றிலும் ஒழிந்து போயிருப்பதால், பரிபூரண மனிதர் உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் கடவுளுடைய நெறிகளின்படி நடப்பார்கள். இப்படியாக அவர்கள் பாவமின்றி பரிபூரண நிலையை அடையும்போது, முழுமையான கருத்தில், ‘உயிரடைவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 20:5) மனிதர்கள் பரிபூரணத்தை அடைவதும் பூமி பரதீஸாக மாறுவதும் யெகோவாவுக்கு எவ்வளவாய் மகிமை சேர்க்கும்!
கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சிக்குப்பின் பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்களும், அதாவது பொல்லாத தேவதூதர்களும், பாதாளத்திலிருந்து கொஞ்ச காலத்திற்கு விடுதலை செய்யப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 20:1-3) கடவுளிடமிருந்து ஜனங்களைத் திருப்ப கடைசியாக ஒருமுறை அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தவறான ஆசைகளுக்கு சிலர் அடிபணிந்தாலும் இந்தக் கலகம் தோல்வி அடைவது நிச்சயம். இந்தச் சுயநலவாதிகளை சாத்தானோடும் அவனுடைய பேய்களோடும் சேர்த்து யெகோவா அழித்துவிடுவார். தீமை இனி ஒருபோதும் தலைதூக்காது. பொல்லாதவர்கள் ஒரேயடியாக அழிக்கப்படுவார்கள், நீதிமான்களோ முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள்.—வெளிப்படுத்துதல் 20:7-10.
நீங்கள் அங்கு இருப்பீர்களா?
ஆண்டாண்டு காலமாக ஆனந்தமாய் வாழும் எதிர்பார்ப்பு யெகோவா தேவனை நேசிப்போருக்கு இருக்கிறது. அந்தப் பரதீஸ் வாழ்க்கை சலிக்கவே சலிக்காது. சொல்லப்போனால், காலம் செல்லச் செல்ல வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகவே ஆகும். ஏனென்றால் யெகோவா தேவனைப் பற்றி அறிந்துகொள்வதற்கு எல்லையே இல்லை. (ரோமர் 11:33) நாம் கற்றுக்கொள்வதற்கு புதுப் புது விஷயங்கள் எப்போதுமே இருக்கும். இதற்கெல்லாம் உங்களுக்கு ஏகப்பட்ட நேரம் கிடைக்கும். ஏன்? நீங்கள் 70, 80 வருடங்கள் அல்ல, என்றென்றுமாய் வாழப் போகிறீர்களே!—சங்கீதம் 22:26; 90:10; பிரசங்கி 3:11.
கடவுள்மீது உங்களுக்கு அன்பிருந்தால், அவருடைய சித்தத்தை எப்பொழுதும் அதிக சந்தோஷத்தோடு செய்வீர்கள். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) ஆகவே, நீதியானதைச் செய்து யெகோவா தேவனுக்குப் பிரியமாக நடப்பதை எதுவும் தடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தையான பைபிள் உங்களுக்குத் தரும் அருமையான நம்பிக்கையை மனதில் வைத்திருங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் மனவுறுதியுடன் இருங்கள், அதை விட்டுவிடாதீர்கள். அப்போது, கடவுளுடைய நோக்கத்தின்படி இந்தப் பூமி நிரந்தரமாகவே ஒரு பரதீஸாக மாறுகையில் நீங்களும் அங்கே இருப்பீர்கள்.
[பக்கம் 4-ன் படம்]
கடவுளுடைய ஆசீர்வாதத்தால், இஸ்ரவேலரின் வயல்கள் அமோக விளைச்சலைத் தந்தன
[பக்கம் 7-ன் படம்]
பரதீஸில் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்க விரும்புகிறீர்கள்?