“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”
‘யுத்தம் யெகோவாவுடையது’
இரண்டு எதிரி படைகள் பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. 40 நாட்களாக இஸ்ரவேலர் பயத்தில் நடுநடுங்கிக் கொண்டிருக்கின்றனர். பெலிஸ்த மாவீரனான கோலியாத் ஏளனப் பேச்சுகளால் இஸ்ரவேலரை சரமாரியாக தாக்கிக்கொண்டிருக்கிறான்.—1 சாமுவேல் 17:1-4, 16.
கோலியாத் சத்தமாக இஸ்ரவேலரிடம் சவால் விடுகிறான்: “உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும். அவன் என்னோடே யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து எங்களைச் சேவிக்க வேண்டும். . . . நான் இன்றைய தினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள்!”—1 சாமுவேல் 17:8-10.
பூர்வ காலங்களில் ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, இரு படையினரும் தங்கள் சார்பாக ஒவ்வொரு வீரனை அனுப்புவார்கள்; அந்த இரு வீரரும் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவார்கள்; அதில் எந்த வீரன் ஜெயிக்கிறானோ அவனுடைய படையே வெற்றி பெற்றதாகக் கருதப்பட்டது. ஆனால் இஸ்ரவேலரிடம் இங்கே சவால் விட்டுக் கொண்டிருந்தது சாதாரண வீரன் அல்ல. அவன் உயரத்திலும் உயரமான இராட்சதன், குலைநடுங்க வைக்கும் எதிரி. இருந்தாலும், யெகோவாவுடைய ஜனங்களின் படையை கேலி செய்வதன் மூலம் தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்கிறான்.
இந்தப் போரை இரு தேசங்களுக்கு இடையிலான சாதாரண போராக எடுத்துக்கொள்ள முடியாது. உண்மையில், இது யெகோவாவுக்கும் பெலிஸ்த தெய்வங்களுக்கும் இடையிலான போட்டி. இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல், கடவுளுடைய விரோதிகளுக்கு எதிராகத் தன்னுடைய படைகளைத் தைரியமாக வழிநடத்திச் செல்வதற்குப் பதிலாக, பயத்தில் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்.—1 சாமுவேல் 17:11.
யெகோவாவில் நம்பிக்கை வைக்கும் ஓர் இளைஞர்
இந்தச் சூழ்நிலையில், சவுலின் படையில் இருக்கும் தன் அண்ணன்களைப் பார்க்க ஓர் இளைஞர் வருகிறார். அவர் இஸ்ரவேலின் எதிர்கால அரசராக ஏற்கெனவே அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய பெயர் தாவீது. கோலியாத்தின் சவாலைக் கேட்ட பிறகு தாவீது இவ்வாறு சொல்கிறார்: “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்.” (1 சாமுவேல் 17:26) இப்படி தாவீது கோபப்பட்டதில் நியாயம் இருக்கிறது. கோலியாத்தை பெலிஸ்தருடைய பிரதிநிதியாகவும் அவர்களுடைய தெய்வங்களின் பிரதிநிதியாகவுமே தாவீது கருதுகிறார். எனவே, யெகோவாவின் சார்பாகவும் இஸ்ரவேலின் சார்பாகவும் இந்த புறமத இராட்சதனுடன் சண்டையிட தாவீது தீர்மானிக்கிறார். ஆனால் சவுல் ராஜா சொல்வதைக் கவனியுங்கள்: “நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன்.”—1 சாமுவேல் 17:33.
சவுல் மற்றும் தாவீதின் கண்ணோட்டங்களில் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! சவுலின் கண்ணோட்டத்தில், ஆடு மேய்க்கும் ஓர் இளைஞன் கொடூரமான இராட்சதனோடு சண்டையிட விரும்புகிறான். தாவீதின் கண்ணோட்டத்திலோ, சர்வலோக பேரரசரான யெகோவாவை ஒரு சாதாரண மானிடன் எதிர்க்கிறான். கடவுளுடைய பெயரையோ ஜனத்தையோ பழிக்கும் எவரையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார் என்பதில் தாவீதுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இதுவே அவருக்குத் தைரியத்தையும் அளிக்கிறது. நடக்கிற சம்பவங்களைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் தாவீது பார்க்கிறார். எனவேதான், கோலியாத் தன்னுடைய சரீர பலத்தைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருக்கும்போது, தாவீது முழுமையாக யெகோவாவையே நம்பியிருக்கிறார்.
‘யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’
இப்படி யெகோவாவை முழுமையாக நம்பியிருக்க தாவீதுக்கு நல்ல காரணம் இருக்கிறது. தன்னுடைய ஆடுகளைக் கரடியிடமிருந்தும், சிங்கத்திடமிருந்தும் காப்பாற்றுவதற்கு அவர் தனக்கு உதவியதை நினைத்துப் பார்க்கிறார். இந்தப் பெலிஸ்த இராட்சதனை ஜெயிக்கவும் அவர் தனக்கு உதவுவார் என்பதில் இந்த இளம் மேய்ப்பனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. (1 சாமுவேல் 17:34-37) தாவீது வெறுமனே ஒரு கவணையும், ஐந்து கூழாங்கற்களையும் எடுத்துக்கொண்டு கோலியாத்துடன் சண்டையிட செல்கிறார்.
இந்த சவாலில் வெற்றிபெற வாய்ப்பில்லாதது போல் தோன்றியபோதும், யெகோவாவின் பலத்தில் தாவீது சார்ந்திருந்து அதை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். எனவே அந்த பெலிஸ்தனிடம் தாவீது தைரியமாக இவ்வாறு கூறுகிறார்: ‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய தினம் யெகோவா உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; . . . அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள். யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது.’—1 சாமுவேல் 17:45-47.
இதன் முடிவு என்ன தெரியுமா? ‘தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டார்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது’ என்று பைபிள் பதிவு குறிப்பிடுகிறது. (1 சாமுவேல் 17:50) உண்மைதான், தாவீதின் கையில் பட்டயம் இருக்கவில்லை, ஆனால் யெகோவா தேவனின் பலத்த ஆதரவு அவருக்கு இருந்தது.a
யெகோவா மேல் தாவீது நம்பிக்கை வைத்தது எவ்வளவு சரி என்பது அந்தப் போட்டியில் தெள்ளத்தெளிவானது. மனிதருக்குப் பயப்படுவதா அல்லது யெகோவாவுடைய காக்கும் வல்லமையில் நம்பிக்கை வைப்பதா என்ற தெரிவை நாம் எதிர்ப்படும்போது, ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியம்’ என்பது தெளிவாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 5:29) அதோடு, பிரச்சினைகளை நாம் யெகோவாவின் நோக்குநிலையில் பார்க்கும்போது, மலை போன்ற பிரச்சினைகள் வந்தாலும் தடுமாறிவிடாமல் நம்பிக்கையோடு அவற்றை எதிர்கொள்ள முடியும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2006-ல், மே/ஜூன் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
கோலியாத் உண்மையில் எவ்வளவு பெரிதாக இருந்தான்?
1 சாமுவேல் 17:4-7-ல் உள்ள பதிவு கோலியாத்தின் உயரம் சுமார் ஆறு முழம், அதாவது சுமார் மூன்று மீட்டர் என்று கூறுகிறது. அவன் அணிந்திருந்த செம்பு போர்க் கவசம் அவனுடைய பருமனையும் பலத்தையும் பறைசாற்றுகிறது. அதன் எடை 57 கிலோ என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அவனுடைய ஈட்டியின் தண்டு, மர உத்திரம் போல் இருந்தது. அதன் கூர்முனை ஏழு கிலோ இரும்பால் ஆனது. சொல்லப்போனால், கோலியாத்தின் போராயுதம் தாவீதின் எடையைவிட அதிகமாக இருந்தது!