முதியோரிடம் கடவுள் அக்கறை காட்டுகிறார்
இன்றைக்கு எங்கு பார்த்தாலும் முதியோர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்; இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், தேவ பக்தியற்ற உலகின் “கடைசி நாட்களில்” ஜனங்கள் ‘தற்பிரியராயும் . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும்’ இருப்பார்கள் என வெகு காலத்திற்கு முன்பே பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1-3) ‘சுபாவ அன்பு’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தை பொதுவாக குடும்பத்தார் மத்தியில் நிலவும் அன்பைக் குறிக்கிறது. இந்த பைபிள் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக, இத்தகைய அன்பு இன்றைக்கு மருந்துக்குக்கூட இல்லை.
முதியோரைத் துன்புறுத்தும் ஆட்களைப் போலின்றி, யெகோவா தேவன் அவர்களை உயர்வாக மதிக்கிறார், அவர்கள்மீது அக்கறையும் காட்டுகிறார். இது பைபிளில் எப்படி விவரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள்.
‘விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவர்’
முதியோரிடம் யெகோவா அக்கறை காட்டுகிறார் என்பதை எபிரெய வேதாகமத்தில் தெள்ளத் தெளிவாகக் காணலாம். உதாரணமாக, சங்கீதம் 68:5-ல் ‘விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவர்’ என்பதாக கடவுளை தாவீது அழைக்கிறார்; இந்த விதவைகள் பெரும்பாலும் முதிர்வயதினரே.a பிற பைபிள் மொழிபெயர்ப்புகளில், ‘நியாயம் விசாரிக்கிறவர்’ என்ற வார்த்தை ‘பாதுகாப்பவர்,’ ‘ஆதரவளிப்பவர்,’ ‘பரிந்துபேசுகிறவர்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விதவைகளை யெகோவா கவனித்துக் காக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. சொல்லப்போனால், அவர்களைத் துன்புறுத்தினால் அவருடைய கோபம் பற்றியெரியுமென்றும் பைபிள் கூறுகிறது. (யாத்திராகமம் 22:22-24) விதவைகள் உட்பட உண்மையுள்ள எல்லா முதியோரையும் கடவுளும் அவருடைய ஊழியர்களும் உயர்வாய் மதிக்கிறார்கள். முதியோரை யெகோவா தேவனும் அவரது மக்களும் எப்படிக் கருதுகிறார்கள் என்பதை நீதிமொழிகள் 16:31 இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.”
வயதானோருக்கு மரியாதை காட்டுவது இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தின் அடிப்படை அம்சமாக இருந்ததில் ஆச்சரியமே இல்லை. இஸ்ரவேலருக்குப் பின்வருமாறு கட்டளையிடப்பட்டிருந்தது: “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.” (லேவியராகமம் 19:32) ஆகவே, முதியோரைக் கனம்பண்ணுவதற்கும் யெகோவா தேவனுடனுள்ள உறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இஸ்ரவேலர் கருதினார்கள். முதியோரை மோசமாக நடத்தும் ஒருவர், தான் கடவுளை நேசிப்பதாக சொல்ல முடியாது.
கிறிஸ்தவர்கள் இன்று நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை. என்றாலும், அவர்கள் ‘கிறிஸ்துவினுடைய பிரமாணத்தின்கீழ்’ இருக்கிறார்கள்; இது அவர்களுடைய நடத்தையிலும் மனோபாவத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; அதனால் பெற்றோர்களிடமும் முதியோரிடமும் அன்பும் அக்கறையும் காட்டுகிறார்கள். (கலாத்தியர் 6:2; எபேசியர் 6:1-3; 1 தீமோத்தேயு 5:1-3) அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளையால் அல்ல, உள்ளத் தூண்டுதலாலேயே அவர்கள் அன்பு காட்டுகிறார்கள். “ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்” என அப்போஸ்தலன் பேதுரு அறிவுறுத்தினார்.—1 பேதுரு 1:22.
முதியோர்மீது அக்கறை காட்டுவதற்கான மற்றொரு காரணத்தை சீஷனாகிய யாக்கோபு தருகிறார். “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” என்று அவர் எழுதினார். (யாக்கோபு 1:27) அவருடைய குறிப்பு நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இந்த நேசத்திற்குரியவர்கள் யெகோவாவுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இது நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறது.
ஆகவே, முதியோரைத் துன்புறுத்தாமலிருந்தால் மட்டும் போதாது, அவர்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்வதன் மூலம் அவர்களிடம் உள்ளப்பூர்வமான அக்கறையும் காட்ட வேண்டும். (பக்கங்கள் 6-7-லுள்ள “அன்பு—செயலில்” என்ற பெட்டியைக் காண்க.) ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ என யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 2:26.
‘அவர்கள் படுகிற உபத்திரவத்திலே’ ஆறுதல் அளியுங்கள்
யாக்கோபின் வார்த்தைகளிலிருந்து நாம் மற்றொரு குறிப்பையும் கற்றுக்கொள்ளலாம். விதவைகளை, ‘அவர்கள் படுகிற உபத்திரவத்திலே’ கவனித்துக்கொள்ளும்படி கிறிஸ்தவர்களுக்கு அவர் கூறினார். ‘உபத்திரவம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, வாழ்க்கையில் எதிர்ப்படும் அழுத்தங்களால் விளைகிற கடுந்துன்பத்தை, அல்லது கஷ்டத்தைக் குறிக்கிறது. வயதான அநேகர் இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. சிலர் தனிமையில் வாடுகிறார்கள். வேறு சிலரோ முதுமையின் பலவீனங்களால் சோர்ந்துவிடுகிறார்கள். கடவுளுக்குச் சேவை செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறவர்களும்கூட உற்சாகமிழந்து விடக்கூடும். உதாரணத்திற்கு, ஜான்b என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ஊக்கமாய் அறிவித்து வருகிறார், அதில் முப்பது ஆண்டுகளை விசேஷ முழுநேர ஊழியத்தில் செலவிட்டிருக்கிறார். இப்பொழுது 80 வயதைத் தாண்டிய இவர், சில சமயங்களில் சோர்ந்துவிடுவதாகக் கூறுகிறார். “நான் அடிக்கடி என் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் செய்த நிறைய தவறுகள்தான் என் மனதுக்கு வருகின்றன. அதையெல்லாம் தவிர்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென எப்பொழுதும் யோசிப்பதுண்டு” என்று கூறுகிறார்.
யெகோவா பரிபூரணராக இருந்தாலும் நம்மிடம் பரிபூரணத்தை அவர் எதிர்பார்ப்பதில்லை என்பதை அறிந்து இப்படிப்பட்டவர்கள் ஆறுதல் அடையலாம். நாம் செய்கிற தவறுகள் அவருக்குத் தெரியுமென்றாலும், பைபிள் அவரைப் பற்றி இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.” (சங்கீதம் 130:3) ஆம், யெகோவா நம் தவறுகளைக் கவனித்துக்கொண்டிருப்பதில்லை, மாறாக நம் இருதயத்தையே கூர்ந்து கவனிக்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்?
தாவீது ராஜாகூட அநேக தவறுகளையும் பாவங்களையும் செய்திருக்கிறார்; இருப்பினும், சங்கீதம் 139:1-3-ல் காணப்படும் இந்தப் பாடல் வரிகளை கடவுளுடைய தூண்டுதலால் இயற்றினார்: “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர் [“அளந்திருக்கிறீர்,” NW]; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.” இந்த வசனத்திலுள்ள “அளந்திருக்கிறீர்” என்ற வார்த்தையின் நேர்பொருள் “சலித்தல்” என்பதாகும்; அதாவது, ஒரு விவசாயி பதரை நீக்கி தானியத்தைப் பிரித்தெடுப்பதைக் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். நம்மை ‘சலித்தெடுத்து,’ நாம் செய்த நல்ல காரியங்களை தம்முடைய நினைவில் பொக்கிஷமாக பாதுகாக்கிறார் என்பதை கடவுளுடையத் தூண்டுதலால் தாவீது உறுதிப்படுத்துகிறார்.
நம்முடைய இரக்கமுள்ள பரலோக தகப்பனுக்குத் தொடர்ந்து உண்மையோடிருக்கும் வரையில் அவரும் நாம் செய்கிற நல்ல காரியங்களை நினைவில் வைக்கிறார், அவற்றை நெஞ்சாரப் போற்றுகிறார். சொல்லப்போனால், நாம் செய்தவற்றையும் அவரது பெயருக்காக நாம் காண்பித்த அன்பையும் மறந்துவிடுவதை அநீதியான செயலாக அவர் கருதுகிறார் என பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 6:10.
“முந்தினவைகள் ஒழிந்துபோயின”
வயோதிகத்தின் பிரச்சினைகளை மனிதகுலம் அனுபவிக்க வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாயிருக்கவில்லை என பைபிள் காட்டுகிறது. முதல் மனிதனும் மனுஷியுமான நம் ஆதி பெற்றோர் படைப்பாளருக்கு விரோதமாக கலகம் செய்த பிறகே வயோதிகத்தின் பாதிப்புகள் நம் வாழ்க்கையின் அங்கமாயின. (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 5:12) இவை என்றென்றைக்கும் நீடிக்காது.
மேற்குறிப்பிட்டபடி, இன்று நாம் அனுபவித்து வருகிற மோசமான நிலைமைகள், அதாவது வயதானவர்களை கொடுமைப்படுத்துவது போன்றவை, நாம் இந்தப் பொல்லாத உலகின் “கடைசி நாட்களில்” வாழ்ந்து வருகிறோம் என்பதற்கு அத்தாட்சிகளாகும். (2 தீமோத்தேயு 3:1) முதுமை, சாவு உட்பட பாவத்தின் பாதிப்புகள் அனைத்தையும் நீக்கிவிடுவதே கடவுளின் நோக்கம். அதை பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
கடவுளுடைய புதிய உலகில், முதுமையினால் வரும் வலியும் வேதனையும் இருக்காது. அதுபோல, வயதானவர்களைக் கொடுமைப்படுத்துவோரும் இருக்க மாட்டார்கள். (மீகா 4:4) கடவுளுடைய நினைவில் உள்ள இறந்தவர்களும்கூட மீண்டும் உயிரடைவார்கள்; அப்போது பிரச்சினைகள் இல்லா பூங்காவன பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பை அவர்கள் பெறுவார்கள். (யோவான் 5:28, 29) அப்போது, முதியோரிடம் மட்டுமல்ல தமக்குக் கீழ்ப்படிகிற அனைவரிடமும் யெகோவா தேவன் அக்கறை காட்டுகிறார் என்பது முன்னொருபோதும் இல்லாதளவுக்குத் தெளிவாகிவிடும்.
[அடிக்குறிப்புகள்]
a உண்மைதான், எல்லா விதவைகளும் வயதானவர்கள் அல்ல. இளம் விதவைகளையும் கடவுள் கவனித்துக் காக்கிறார் என்பதாக பைபிள் கூறுகிறது. உதாரணமாக, லேவியராகமம் 22:13-ல் அதைக் காணலாம்.
b அவருடைய உண்மைப் பெயர் அல்ல.
[பக்கம் 6, 7-ன் பெட்டி/படம்]
அன்பு—செயலில்
யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், சபை மூப்பர்கள் முதியோரைக் கவனிப்பதில் முன்நின்று செயல்படுகிறார்கள். “உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்” என்ற அப்போஸ்தலன் பேதுருவின் அறிவுரையை அவர்கள் முக்கியமானதாய் கருதுகிறார்கள். (1 பேதுரு 5:2, பொது மொழிபெயர்ப்பு) முதியோருக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பது கடவுளுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வதன் ஒரு பாகமாகும். அப்படியானால், அவர்களுக்கு என்னென்ன உதவிகளைச் செய்துகொடுக்கலாம்?
முதியோரின் தேவைகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு பொறுமை அவசியம், அதோடு, பல முறை அவர்களைச் சந்தித்து, அக்கறையோடு பேச வேண்டியிருக்கும். ஒருவேளை, கடைக்குப் போய்வருவதில், சுத்தம் செய்வதில், கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போய் வருவதில், பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசிப்பதில் என பல காரியங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். எனவே, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறையான, நம்பகமான ஏற்பாடுகளை செய்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.c
சபையிலுள்ள வயதான ஒரு சகோதரரோ சகோதரியோ அவசர தேவையில் இருந்தால், ஒருவேளை பண நெருக்கடியில் இருந்தால் என்ன செய்வது? முதலாவதாக, அந்த நபருக்கு உதவ பிள்ளைகளோ உறவினர்களோ இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இது 1 தீமோத்தேயு 5:4-ல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு இசைவான ஒரு செயலாகும்: “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.”
முதியோருக்கென அரசாங்கம் சில சலுகைகளை வழங்குகிறது; அவற்றைப் பெற தாங்கள் தகுதியானவர்களா என்பதைத் தீர்மானிக்க வயதான சகோதரருக்கோ சகோதரிக்கோ உதவி தேவைப்படலாம். ஒருவேளை, சபையிலுள்ள சிலர் அந்த உதவியை அவருக்குச் செய்துகொடுக்கலாம். இப்படி எந்தவித உதவியையும் பெற அவருக்கு வாய்ப்பு இல்லையெனில், சபை அளிக்கும் உதவியைப் பெற அவர் தகுதியானவரா என்பதை மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும். முதல் நூற்றாண்டு சபையில் சிலருக்கு இப்படிப்பட்ட உதவி அளிக்கப்பட்டது; தன்னோடு வேலை செய்த தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தன் பவுல் எழுதிய கடிதத்திலிருந்து இது புலப்படுகிறது: “அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”—1 தீமோத்தேயு 5:9, 10.
[அடிக்குறிப்பு]
c கூடுதல் தகவலுக்கு, ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுரத்தில் “முதியோரின் தேவைகளைப் பூர்த்திசெய்தல்—ஒரு சவால்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 5-ன் படம்]
ஏழை விதவைகளுக்கு தொற்காள் உதவி செய்தாள்.—அப்போஸ்தலர் 9:36-39