வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நியாயப்பிரமாண சட்டத்தில், பாலியல் சம்பந்தப்பட்ட இயல்பான சில பழக்கங்கள் ஒருவரைத் ‘தீட்டுப்படுத்துவதாக’ ஏன் கருதப்பட்டது?
மனித இனம் பெருகுவதற்காகவும் தம்பதியரின் இன்பத்திற்காகவுமே பாலுறவை கடவுள் ஏற்படுத்தினார். (ஆதியாகமம் 1:28; நீதிமொழிகள் 5:15-18) இருப்பினும், லேவியராகமம் 12, 15 ஆகிய அதிகாரங்களில் ஒருவரைத் தீட்டுப்படுத்துவது சம்பந்தமாக விவரமான சட்டங்களை நாம் காண்கிறோம்; அவற்றில், இந்திரியம் கழிதல் (விந்து கழிதல்), சூதகம் (மாதவிடாய்), பிள்ளைப்பேறு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களைக் காண்கிறோம். (லேவியராகமம் 12:1-6; 15:16-24) பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட அச்சட்டங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிசெய்தன, மேம்பட்ட ஒழுக்க நெறிகளை ஆதரித்தன, இரத்தத்தின் பரிசுத்த தன்மையை வலியுறுத்தின, பாவநிவிர்த்திக்கான அவசியத்தைச் சிறப்பித்துக் காட்டின.
பாலியல் பழக்கங்களுடன் சம்பந்தப்பட்ட நியாயப்பிரமாண சட்டங்கள் பல நன்மைகளை அளித்தன; இஸ்ரவேலரின் உடல் நலத்தை மேம்படுத்தியது அவற்றில் ஒன்றாகும். பைபிளும் நவீன மருத்துவமும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மாதவிடாயின்போது பாலுறவு கொள்ளாதிருக்கும்படி சொல்லப்பட்டது; இது, பாலியல் சம்பந்தப்பட்ட சில நோய்கள் வராமல் தடுப்பதற்குப் பெரிதும் உதவியது . . . அதோடு, கருப்பை சார்ந்த புற்றுநோய்கள் வராமலும் பாதுகாத்தது.” இத்தகைய சட்டங்கள், கடவுளுடைய ஜனங்கள் அறிந்திராத அல்லது அவர்களால் கண்டுபிடிக்க முடியாத வியாதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றின. பாலியல் விஷயங்களில் சுத்தத்தைக் கடைப்பிடித்தபோது, ஜனங்கள் ஏராளமாகப் பெருகினார்கள்; காரணம், அவர்களைத் திரளாகப் பெருகச் செய்து, சீரும்சிறப்புமாக வாழ வைப்பதாகக் கடவுள் வாக்குறுதி அளித்திருந்தார். (ஆதியாகமம் 15:5; 22:17) இச்சட்டங்கள், உணர்ச்சி ரீதியிலும் கடவுளுடைய மக்களைப் பாதுகாத்தன. இச்சட்டங்களுக்குக் கணவனும் மனைவியும் கீழ்ப்படிந்தபோது, அவர்கள் தங்கள் காம வேட்கையைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டார்கள்.
எனினும், பாலியல் சம்பந்தப்பட்ட இத்தகைய தீட்டுகளில் இரத்த இழப்புதான் முக்கியமான விஷயமாக இருந்தது. இரத்தம் சம்பந்தமாக யெகோவா கொடுத்த சட்டங்கள் இரண்டு விஷயங்களை இஸ்ரவேலரின் மனதில் ஆழப் பதிய வைத்தன. ஒன்று, இரத்தம் பரிசுத்தமானது என்ற விஷயம்; மற்றொன்று, யெகோவாவின் வணக்கத்தில் அது விசேஷப் பங்கு வகித்தது என்ற விஷயம். அதாவது, பலிகளிலும் பாவநிவிர்த்திகளிலும் இரத்தம் பயன்படுத்தப்பட்டது.—லேவியராகமம் 17:11; உபாகமம் 12:23, 24, 27.
எனவே, இது சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட விவரமான சட்டங்களுக்கும் மனித அபூரணத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆதாம் ஏவாள் பாவம் செய்ததால் பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாமல் போனது; அவர்களுடைய சந்ததியில் வந்த எல்லாருமே அபூரணத்தையும் மரணத்தையும் சுதந்தரித்தார்கள், இதனால்தான் தாங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதையெல்லாம் இஸ்ரவேலர் அறிந்திருந்தார்கள். (ரோமர் 5:12) தாம்பத்திய உறவுகொள்ளும் தம்பதியர் பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் விதத்திலேயே மனித இனப்பெருக்க உறுப்புகள் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தன; ஆனால் பாவத்தின் பாதிப்பால், பாவத் தன்மையுள்ள அபூரணப் பிள்ளைகளையே அவர்களால் பெற்றெடுக்க முடிந்தது.
இவ்வாறு, சுத்திகரிப்பு சம்பந்தப்பட்ட இந்தச் சட்டங்கள், தாங்கள் வழிவழியாய் பாவத்தைப் பெற்றிருப்பதை இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டின; அத்துடன், அந்தப் பாவம் அடியோடு நீக்கப்பட்டு, பரிபூரணத்தைப் பெறுவதற்கு மீட்கும் பலி தேவை என்பதையும் நினைப்பூட்டின. அவர்கள் செலுத்திய மிருக பலிகள் பாவத்தை அடியோடு நீக்கிவிடவில்லை என்பது உண்மைதான். (எபிரெயர் 10:3, 4) என்றாலும், அவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்துவதற்காகவும் அவருடைய பரிபூரண ஜீவ பலியால் மட்டுமே உண்மையான மன்னிப்பு சாத்தியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதற்காகவுமே நியாயப்பிரமாண சட்டம் கொடுக்கப்பட்டது; இப்படியாக நல்மனமுள்ளோர் நித்திய ஜீவனைப் பெற வழிசெய்தது.—கலாத்தியர் 3:24; எபிரெயர் 9:13, 14.