‘உம்முடைய நினைப்பூட்டுதல்களை நேசிக்கிறேன்’
“முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”—ரோமர் 15:4.
1. யெகோவா நமக்கு எவ்வாறு நினைப்பூட்டுதல்களைத் தருகிறார், அவை நமக்கு ஏன் தேவை?
யெகோவா தம் மக்களுக்கு நினைப்பூட்டுதல்களைக் கொடுக்கிறார். இந்த நெருக்கடியான காலங்களில் எதிர்ப்படும் அழுத்தங்களைச் சமாளிக்க அதன் மூலம் அவர் உதவுகிறார். நாம் தனிப்பட்ட விதத்தில் பைபிள் வாசிக்கும்போதோ, சபை கூட்டங்களில் கொடுக்கப்படும் பேச்சுக்களை அல்லது பதில்களைக் கேட்கும்போதோ சில நினைப்பூட்டுதல்களைப் பெற்றுக்கொள்கிறோம். இப்படி நாம் வாசிக்கிற அல்லது கேட்கிற விஷயங்கள் பெரும்பாலும் புதியவை அல்ல. இது போன்ற விஷயங்களை நாம் ஏற்கெனவே கேட்டிருப்போம். இருந்தாலும், நாம் அவற்றை மறந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே, யெகோவாவுடைய நோக்கங்கள், சட்டங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை நாம் எப்போதும் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். அவருடைய நினைப்பூட்டுதல்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவருடைய விருப்பத்துக்கு இசைவான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கு நம்மைத் தூண்டுவித்த காரணங்களை மறந்துவிடாதிருக்க அவை உதவுகின்றன; இவ்வாறு நமக்கு உற்சாகத்தை அளிக்கின்றன. இதனால், யெகோவாவிடம் சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “உம்முடைய நினைப்பூட்டுதல்களை நான் நேசிக்கிறேன்.”—சங்கீதம் 119:24, NW.
2, 3. (அ) பைபிள் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை யெகோவா ஏன் நம் நாள்வரை பாதுகாத்து வைத்திருக்கிறார்? (ஆ) பைபிளிலுள்ள எந்தப் பதிவுகள் இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்?
2 பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டபோதிலும் இன்னும் வல்லமையுள்ளதாகவே இருக்கிறது. (எபிரெயர் 4:12) பைபிள் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அது குறிப்பிடுகிறது. பைபிள் காலங்களிலிருந்த கலாச்சாரங்களும், கருத்துகளும் இன்று பெருமளவு மாறிவிட்டன என்பது உண்மைதான். ஆனால், பிரச்சினைகள் மட்டும் அன்றும் இன்றும் பெரும்பாலும் அப்படியே இருக்கின்றன. கஷ்டமான சூழ்நிலைகளிலும், யெகோவாவை நேசித்து, அவருக்கு உண்மையாகச் சேவை செய்த நபர்களின் அனுபவங்கள் நம் மனதைத் தொடுகின்றன. அவை நம்முடைய நன்மைக்காக பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கடவுள் வெறுக்கிற நடத்தையை வேறு சில பதிவுகள் குறிப்பிடுகின்றன. நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை பைபிளில் யெகோவா பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் முக்கியமான பாடங்களை நமக்கு நினைப்பூட்டுகிறார். இது, அப்போஸ்தலன் பவுல் எழுதியதற்கு இசைவாக இருக்கிறது: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”—ரோமர் 15:4.
3 பைபிளில் சொல்லப்பட்டுள்ள மூன்று பதிவுகளை இப்போது கவனிக்கலாம். சவுலை தாவீது நடத்திய விதத்தைப் பற்றிய பதிவு, அனனியா மற்றும் சப்பீராளைப் பற்றிய பதிவு, போத்திபாரின் மனைவியிடம் யோசேப்பு நடந்து கொண்டதைப் பற்றிய பதிவு ஆகியவற்றைச் சிந்திக்கலாம். இவை ஒவ்வொன்றும் நமக்கு மதிப்புமிக்க பாடத்தைப் புகட்டுகின்றன.
கடவுளுடைய ஏற்பாடுகளுக்கு உண்மையாயிருத்தல்
4, 5. (அ) சவுல் ராஜாவுக்கும் தாவீதுக்கும் இடையே எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவியது? (ஆ) தாவீதை சவுல் வெறுத்தபோது அவர் எப்படி நடந்து கொண்டார்?
4 சவுல் ராஜா, யெகோவாவுக்கு உண்மையற்றவராக ஆனார். கடவுளுடைய மக்களை ஆளுவதற்குத் தகுதியற்றவராகவும் ஆனார். அதனால், கடவுள் அவரைப் புறக்கணித்தார். அவருக்குப் பதிலாக, தாவீதை இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக அபிஷேகம் செய்யும்படி சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பினார். தாவீது தன் வீரதீரத்தை போரில் வெளிக்காட்டியபோது மக்கள் புகழ் மாலைகளைச் சூட்டினார்கள். இதனால் சவுல் அவரைத் தனக்குப் போட்டியாகக் கருத ஆரம்பித்தார். தாவீதைக் கொல்ல பல முறை முயன்றார். ஒவ்வொரு முறையும் யெகோவாவின் உதவியோடு தாவீது உயிர்த் தப்பினார்.—1 சாமுவேல் 18:6-12, 25; 19:10, 11.
5 பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் தாவீதுக்கு ஏற்பட்டது. சவுலைக் கொல்ல அவருக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அப்போதெல்லாம் சவுலைக் கொல்லும்படி அவரோடிருந்தவர்கள் அவரைத் தூண்டினார்கள். அவருடைய எதிரியை யெகோவாவே அவர் கையில் ஒப்படைத்ததாகச் சொன்னார்கள். ஆனால், தாவீது மறுத்துவிட்டார். யெகோவாவுக்கு அவர் உண்மையுள்ளவராக இருந்ததும், யெகோவாவுடைய மக்களை ஆளும் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட சவுலின் ஸ்தானத்துக்கு அவர் மரியாதை காட்டியதுமே அதற்குக் காரணம். இஸ்ரவேலின் ராஜாவாக சவுலை யெகோவாவே நியமித்திருந்தார், அல்லவா? சரியான சமயத்தில் அவரே சவுலை அப்பொறுப்பிலிருந்து நீக்குவார். இதில் தலையிடுவது தன்னுடைய வேலை அல்ல என்று தாவீது உணர்ந்தார். தன்மீது சவுல் காட்டிய வெறுப்பைத் தணிப்பதற்குத் தன்னால் முடிந்ததை எல்லாம் தாவீது செய்தார். அதற்குப் பிறகு இவ்வாறு கூறினார்: “கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர்.”—1 சாமுவேல் 24:3-15; 26:7-20.
6. தாவீதையும் சவுலையும் பற்றிய பதிவைச் சிந்திப்பது நமக்கு ஏன் முக்கியம்?
6 இந்தப் பதிவிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். கிறிஸ்தவ சபையில் சில பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட நபர் சரியாக நடந்துகொள்ளாதிருக்கலாம். அது மிக மோசமான பாவமாக இல்லாதிருக்கலாம், ஆனாலும் அந்தச் செயல் உங்களைப் பாதிக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தக் கிறிஸ்தவ சகோதரர் மீதுள்ள அக்கறையாலும், யெகோவாவுக்கு உண்மைத்தன்மையைக் காட்ட நீங்கள் விரும்புவதாலும் அவரிடம் தயவாகப் பேச தீர்மானிக்கலாம். அவருடனுள்ள பிரச்சினையைச் சரிசெய்து கொள்வதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். அதன் பிறகும் பிரச்சினை நீடித்தால் என்ன செய்வது? உங்களால் முடிந்த அனைத்தையும் செய்த பிறகு, அதை யெகோவாவின் கையில் விட்டுவிடலாம். அதைத்தான் தாவீது செய்தார்.
7. அநியாயமாகவோ, தவறாகவோ நடத்தப்படும்போது தாவீதைப் போல நாம் என்ன செய்யலாம்?
7 நீங்கள் ஒருவேளை சமூக அநீதிகளைச் சந்திக்கலாம், மதத்தைக் காரணம்காட்டி தவறாக நடத்தப்படலாம். இது போன்ற சூழ்நிலையில் உங்களால் எதுவுமே செய்ய முடியாதிருக்கலாம். இதைச் சகிப்பது சுலபமல்ல. எனினும், இப்படிப்பட்ட அநீதிகளை தாவீது எப்படிச் சமாளித்தார் என்பதை அறிவது நமக்கு உபயோகமாக இருக்கும். சவுலின் பிடியிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கடவுளிடம் தாவீது உள்ளப்பூர்வமாக மன்றாடியது, அவர் இயற்றிய இதயத்தைத் தொடும் பாடல்களில் இடம்பெற்றது. அதே சமயத்தில், கடவுளுக்கு அவர் காட்டிய உண்மைத்தன்மையும், கடவுளுடைய பெயர் மகிமைப்பட வேண்டுமென்ற அக்கறையும் அப்பாடல்களில் வெளிப்பட்டன. (சங்கீதம் 18:1-6, 25-27, 30-32, 48-50; 57:1-11) சவுல் வருடக்கணக்காக தாவீதை அநியாயமாக நடத்தியபோதிலும் அவர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராகவே நிலைத்திருந்தார். அதேபோல, நாமும் என்ன அநீதிகளை அனுபவித்தாலும், மற்றவர்கள் என்ன செய்தாலும் யெகோவாவுக்கும் அவரது அமைப்புக்கும் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க வேண்டும். சூழ்நிலைகளை யெகோவா நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை நினைத்து நாம் நிம்மதியாக இருக்கலாம்.—சங்கீதம் 86:2.
8. மொசாம்பிக் நாட்டிலுள்ள சாட்சிகள், யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதில் சோதனைகளைச் சந்தித்தபோது எப்படிச் சமாளித்தனர்?
8 சோதனை காலத்தில் யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதில் மொசாம்பிக் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் நமக்கு நல்ல முன்மாதிரி வைக்கின்றனர். 1984-ல் ஓர் இரகசிய அமைப்பைச் சேர்ந்த ஆயுதமேந்தியவர்கள் அவர்களுடைய கிராமங்களை பல முறை தாக்கினர். அவற்றைச் சூறையாடி, வீடுகளைக் கொளுத்தி, மக்களின் உயிரையும் பறித்தனர். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இந்த உண்மைக் கிறிஸ்தவர்களால் எதையுமே செய்ய முடியவில்லை. அப்பகுதிகளில் வசித்தவர்கள் இந்த அமைப்பில் சேரும்படி சொல்லப்பட்டனர் அல்லது அதற்கு ஆதரவளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவ்வாறு செய்வது தங்களுடைய கிறிஸ்தவ நடுநிலைக்கு முரணாக இருக்குமென யெகோவாவின் சாட்சிகள் கருதினர். எனவே அவர்கள் மறுத்தபோது அந்த அமைப்பினர் கொதிப்படைந்தனர். அந்தக் கொந்தளிப்பான காலப்பகுதியில் யெகோவாவின் சாட்சிகளில் கிட்டத்தட்ட 30 பேர் கொல்லப்பட்டனர். உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோதிலும் கடவுளுடைய ஜனங்கள் தங்கள் உண்மைத்தன்மையை விட்டுக்கொடுக்கவில்லை.a தாவீதைப் போலவே அவர்களும் அநீதிகளைச் சகித்தனர். ஆனால், காலப்போக்கில் அவர்கள் வெற்றி கண்டனர்.
எச்சரிப்பூட்டும் உதாரணம்
9, 10. (அ) குறிப்பிட்ட சில பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்? (ஆ) அனனியாவும் சப்பீராளும் என்ன தவறைச் செய்தனர்?
9 பைபிளில் சொல்லப்பட்டுள்ள சில ஆட்களின் உதாரணத்திலிருந்து தவிர்க்க வேண்டிய நடத்தையைப் பற்றிய எச்சரிப்பூட்டும் நினைப்பூட்டுதலைப் பெறலாம். தவறு செய்துவிட்டு அதன் விளைவுகளை அனுபவித்த பலரைப் பற்றி பைபிள் சொல்கிறது; அவர்களில் கடவுளுடைய ஊழியர்களும் அடங்குவர். (1 கொரிந்தியர் 10:11) அதற்கு ஓர் உதாரணம் அனனியா, சப்பீராள் தம்பதியர். இவர்கள் எருசலேமிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாக இருந்தனர்.
10 பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, புதிதாக விசுவாசிகளானவர்களில் பலர் எருசலேமில் தங்கிவிட்டனர். காரணம், அவர்கள் அப்போஸ்தலர்களின் கூட்டுறவிலிருந்து பயனடைய விரும்பினர். அவர்களுக்குப் பொருளுதவி அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக சபையிலிருந்த சிலர் தங்களுடைய சொத்துக்களை விற்றனர். (அப்போஸ்தலர் 2:41-45) அனனியாவும் சப்பீராளும் தங்கள் நிலத்தை விற்று, கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மட்டும் அப்போஸ்தலர்களிடம் கொண்டு வந்தனர். ஆனால், விற்ற மொத்த பணத்தையும் கொடுத்ததாகப் பொய் சொன்னார்கள். தங்கள் விருப்பப்படி அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்க அவர்களுக்கு உரிமை இருந்தது உண்மைதான். ஆனால் அவர்களுடைய உள்நோக்கம் தவறானதாகவும், செயல்கள் நேர்மையற்றதாகவும் இருந்தன. மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருந்தது. அவர்கள் ஒரு பகுதியை மட்டுமே கொடுத்திருந்தாலும், அதிகம் கொடுத்ததாகக் காட்டிக்கொள்ள விரும்பினர். பரிசுத்த ஆவியின் உதவியால் அப்போஸ்தலன் பேதுரு அவர்களுடைய ஏமாற்று வேலையையும், வெளிவேஷத்தையும் வெட்டவெளிச்சமாக்கினார். யெகோவா தண்டித்ததால் அவர்கள் இறந்தனர்.—அப்போஸ்தலர் 5:1-10.
11, 12. (அ) நேர்மையைப் பற்றி பைபிள் கொடுக்கும் சில நினைப்பூட்டுதல்கள் யாவை? (ஆ) நேர்மையாக இருப்பதால் வரும் நன்மைகள் யாவை?
11 பிறரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக எப்போதாவது நாம் உண்மையை மறைக்கத் தூண்டப்பட்டால், அனனியா, சப்பீராளின் அனுபவம் நமக்கு எச்சரிப்பூட்டும் நினைப்பூட்டுதலாக இருக்கட்டும். மனிதர்களை நாம் ஏமாற்றிவிடலாம், ஆனால் யெகோவாவை ஏமாற்ற முடியாது. (எபிரெயர் 4:13) நீதி நிலவும் பூமியில் பொய்யர்களுக்கு இடமில்லாததால் ஒருவருக்கொருவர் நேர்மையாய் நடந்துகொள்ளும்படி பைபிள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறது. (நீதிமொழிகள் 14:2; வெளிப்படுத்துதல் 21:8; 22:15) பிசாசாகிய சாத்தானே பொய்யை ஊக்குவிக்கிறான் என்பதால் அது அவ்வாறு சொல்கிறது.—யோவான் 8:44.
12 நேர்மையாக வாழ்வதில் நிறைய நன்மைகள் உண்டு. சுத்தமான மனசாட்சி, மற்றவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகையில் கிடைக்கும் திருப்தி ஆகியவை அவற்றில் அடங்கும். பல சந்தர்ப்பங்களில், நேர்மையின் காரணமாக கிறிஸ்தவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது, அல்லது அதை இழக்காமல் இருக்க முடிந்திருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, நேர்மையாக இருப்பதால் சர்வவல்லமையுள்ள கடவுளுடைய நட்பை நம்மால் பெற முடிகிறது.—சங்கீதம் 15:1, 2.
ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ளுதல்
13. யோசேப்பு என்ன சூழ்நிலையை எதிர்ப்பட்டார், அவர் எப்படி நடந்துகொண்டார்?
13 கோத்திரப் பிதாவான யாக்கோபின் மகன் யோசேப்பு, 17 வயதில் அடிமையாக விற்கப்பட்டார். அதன் பிறகு, எகிப்திய அரசவை அதிகாரியான போத்திபாரின் வீட்டில் வேலை பார்த்து வந்தார். போத்திபாரின் மனைவியின் பார்வை அவர்மீது விழுந்தது. அழகிய இளைஞனாக இருந்த யோசேப்புடன் பாலுறவு கொள்ள அவள் விரும்பினாள். அதனால் தினமும் “என்னோடு படு” என்று அவரை வற்புறுத்தினாள். யோசேப்பு தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெகுதூரத்தில் இருந்தார். இங்கே அவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியாமல் இந்தப் பெண்ணுடன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்க முடியும். ஆனால், போத்திபாரின் மனைவி ஒருநாள் யோசேப்பைப் பிடித்து இழுத்தபோது, அவர் அவ்விடத்தை விட்டே ஓடினார்.—ஆதியாகமம் 37:2, 18-28; 39:1-12, பொது மொழிபெயர்ப்பு.
14, 15. (அ) யோசேப்பைப் பற்றிய பதிவு நமக்கு ஏன் அக்கறைக்குரியது? (ஆ) கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்கு செவிசாய்த்ததற்காக ஒரு கிறிஸ்தவ பெண் ஏன் நன்றியுள்ளவளாக இருக்கிறாள்?
14 கடவுள் பயமுள்ள குடும்பத்தில் யோசேப்பு வளர்க்கப்பட்டிருந்தார். தம்பதியராக இல்லாதவர்கள் பாலுறவில் ஈடுபடுவது தவறு என்பதை அவர் அறிந்திருந்தார். “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று அவர் கேட்டார். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறிமுறையைக் கடவுள் ஏதேனில் ஏற்படுத்தியிருந்தார்; இதை அறிந்திருந்ததால் இதன் அடிப்படையில் அந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருக்கலாம். (ஆதியாகமம் 2:24) யோசேப்பு அந்தச் சூழ்நிலையில் நடந்து கொண்ட விதத்தை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் கடவுளுடைய மக்கள் பயனடையலாம். பாலுறவு விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாமென சில இடங்களில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடாத இளைஞர்களை அவர்களுடைய சகாக்கள் கேலி செய்கிறார்கள். தங்கள் மணத்துணையைவிட்டு வேறொருவருடன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவது பெரியவர்கள் மத்தியில் சகஜமாக உள்ளது. ஆகவே, யோசேப்பைப் பற்றிய பதிவு காலத்துக்கேற்ற நினைப்பூட்டுதலாக நமக்கு இருக்கிறது. விபச்சாரத்தையும் வேசித்தனத்தையும் பாவங்கள் என்றே கடவுளுடைய நெறிமுறை இன்னமும் வலியுறுத்துகிறது. (எபிரெயர் 13:4) தகாத பாலுறவில் ஈடுபடுவதற்கான தூண்டுதலுக்கு இணங்கிய அநேகர், அதைத் தவிர்ப்பதற்கு நியாயமான காரணம் இருப்பதை ஒத்துக்கொள்கிறார்கள். அவமானம், குறுகுறுக்கும் மனசாட்சி, கோபதாபங்கள், கருத்தரித்தல், பாலியல் நோய்கள் ஆகியவை இதனால் ஏற்படும் வேண்டாத விளைவுகளாகும். வேசித்தனம் செய்கிற எவனும் தன் “சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” என்ற பைபிளின் நினைப்பூட்டுதல் உண்மையாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 5:9-12; 6:18; நீதிமொழிகள் 6:23-29, 32.
15 யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஜென்னிb என்ற மணமாகாத சகோதரி, கடவுளுடைய நினைப்பூட்டுதலுக்கு நன்றியுள்ளவளாக இருப்பதற்குக் காரணம் உள்ளது. அவள் வேலை செய்யுமிடத்திலிருந்த ஓர் அழகிய இளைஞன் அவளை தன் வலையில் சிக்கவைக்க முயன்றான். ஜென்னி அதைப் பொருட்படுத்தாதபோது, இன்னும் தீவிரமாக முயற்சி செய்தான். “ஒழுக்கநெறி தவறாதிருக்க நான் ரொம்பவே போராட வேண்டியிருந்தது, ஏனெனில் எதிர்பாலார் ஒருவர் நம்மையே கவனிக்கும்போது நமக்குத் தலைகால் புரியாது” என்று அவள் கூறுகிறாள். ஆனால், அவன் பாலுறவு கொண்ட பெண்களின் பட்டியலில் பத்தோடு பதினொன்றாக இவளையும் சேர்க்கவே முயன்று வந்தான் என்பதை ஜென்னி உணர்ந்தாள். ஒழுக்கநெறி தவறாதிருக்க வேண்டுமென்ற தீர்மானம் பலவீனமாவதைப் போல உணர்ந்தபோதெல்லாம் அவள் ஜெபித்தாள். யெகோவாவுக்கு உண்மையாக நிலைத்திருக்க உதவும்படி அவரிடம் மன்றாடினாள். பைபிளையும், பைபிள் பிரசுரங்களையும் ஆராய்ந்தபோது, தான் கற்றுக்கொண்ட விஷயங்களை எல்லாம் எச்சரிக்கையாய் இருக்க தனக்கு ஊக்கம் அளித்த நினைப்பூட்டுதல்களாய் ஜென்னி கருதுகிறாள். யோசேப்பையும், போத்திபாரின் மனைவியையும் பற்றிய பதிவு அப்படிப்பட்ட நினைப்பூட்டுதல்களில் ஒன்றாக இருந்தது. “யெகோவாவை நான் எந்தளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நானே நினைப்பூட்டிக் கொள்கிறேன். இதைச் செய்துகொண்டிருக்கும்வரை, இப்படிப்பட்ட மிக மோசமான தவறுகளில் ஈடுபட்டு அவருக்கு விரோதமாகப் பாவம் செய்துவிடுவேனோ என்று நான் பயப்பட தேவையே இல்லை” என்று முடிவாகக் கூறுகிறாள்.
கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்குச் செவிசாயுங்கள்!
16. பைபிளில் குறிப்பிடப்பட்ட ஆட்களின் வாழ்க்கையைப் பற்றி படிப்பதாலும் ஆழ்ந்து சிந்திப்பதாலும் நாம் எவ்வாறு பயனடையலாம்?
16 சில சம்பவங்களை பைபிளில் யெகோவா ஏன் பதிவுசெய்து வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயலுவதன் மூலம் அவருடைய தராதரங்களுக்கு நம்முடைய போற்றுதலை வளர்த்துக்கொள்ளலாம். அப்பதிவுகள் என்ன கற்பிக்கின்றன? பைபிள் கதாபாத்திரங்களின் என்னென்ன குணங்களை நாம் பின்பற்ற வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்? சொல்லப்போனால், நூற்றுக்கணக்கான ஆட்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. கடவுளுடைய ஆலோசனைகளை நேசிப்போர் அனைவரும், நித்திய ஜீவனைத் தரும் ஞானத்தைப் பெறுவதற்கான ஆசையையும், பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் உதாரணங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆசையையும் வளர்த்துக்கொள்ளும்போது பயனடையலாம். நமக்குப் பாடமாக அமைந்த ஆட்களுடைய பதிவுகளைப் பற்றி இந்தப் பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை மறுபடியும் வாசிக்க கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம், அல்லவா?
17. யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள், ஏன்?
17 யெகோவா தம்முடைய சித்தத்தை செய்ய முயலுபவர்களிடம் காட்டும் அன்பான அக்கறைக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! நாமும் பரிபூரணர் அல்ல, பைபிளில் குறிப்பிடப்பட்ட ஆண்களும் பெண்களும்கூட பரிபூரணர் அல்ல. எனினும், அவர்களுடைய செயல்களைப் பற்றிய பதிவு நமக்கு அதிக மதிப்புமிக்கதாய் இருக்கிறது. யெகோவாவின் நினைப்பூட்டுகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலம், மிக மோசமான தவறுகளை நாம் தவிர்க்கலாம். நீதியின் பாதையில் நடந்தவர்களுடைய அருமையான முன்மாதிரியைப் பின்பற்றலாம். அவ்வாறு செய்யும்போது, சங்கீதக்காரன் பின்வருமாறு கூறியதையே நாமும் கூற முடியும்: ‘யெகோவாவுடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள். என் ஆத்துமா உமது நினைப்பூட்டுதல்களை காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.’—சங்கீதம் 119:2, 167, NW.
[அடிக்குறிப்புகள்]
b பெயர் மாற்றப்பட்டுள்ளது.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• சவுலிடம் தாவீது காட்டிய மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
• அனனியா, சப்பீராளைப் பற்றிய பதிவு நமக்கு எதைக் கற்பிக்கிறது?
• யோசேப்பைப் பற்றிய பதிவு இன்று ஏன் மிக முக்கியமானதாய் இருக்கிறது?
[பக்கம் 26-ன் படம்]
சவுலைக் கொல்ல தாவீது ஏன் அனுமதிக்கவில்லை?
[பக்கம் 27-ன் படம்]
அனனியா, சப்பீராளைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 28-ன் படம்]
ஒழுக்கக்கேட்டிலிருந்து விலகி ஓட யோசேப்புக்கு எது உதவியது?