உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 7/1 பக். 8-12
  • விடாமுயற்சி தரும் மகிழ்ச்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விடாமுயற்சி தரும் மகிழ்ச்சி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • டிராம் டிரைவரிலிருந்து பிரசங்கிப்பாளராக
  • எடுத்த எடுப்பில் எதிர்ப்பு
  • எனது குறிக்கோள்
  • தாராளமான உதவி
  • புதிய சவாலை சந்தித்தல்
  • கழுதைகள், குதிரைகள், எறும்புதின்னிகள்
  • கடைசியில் வாழ்க்கைத் துணை
  • மோசமான உடல்நிலை, என்றாலும் விடவில்லை
  • யெகோவாவில் என் நம்பிக்கை என்னைத் தாங்கியது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • விடாமுயற்சி முன்னேற்றத்திற்கு வழிநடத்துகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • யெகோவாவின் அழைப்புகளை ஏற்பது வெகுமதிகளைத் தருகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • கடவுளுடைய சேவையில் எனக்குக் கிடைத்த சந்தோஷங்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 7/1 பக். 8-12

வாழ்க்கை சரிதை

விடாமுயற்சி தரும் மகிழ்ச்சி

மார்யோ ரோஷா டசோஸா சொன்னபடி

“இந்த நிலையில் ஆப்ரேஷன் செய்தால் மிஸ்டர் ரோஷாவின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்” என்று ஒரு டாக்டர் சொன்னார். அவர் இந்த வார்த்தைகளை சொல்லி கிட்டத்தட்ட 20 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் நானோ யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக இன்றுவரை முழுநேர ஊழியம்செய்து வருகிறேன். இத்தனை வருடங்களாக தாக்குப்பிடிக்க எனக்கு எது உதவியது தெரியுமா?

வடகிழக்கு பிரேசிலிலுள்ள பாஹியா என்ற மாநிலத்தில் சான்டூ எஸ்டாவாயுன் என்ற கிராமம் உள்ளது. அக்கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில்தான் நான் வளர்ந்தேன். எனக்கு ஏழு வயதாய் இருந்தபோது பண்ணை வேலையில் அப்பாவிற்கு ஒத்தாசையாக இருந்தேன். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அவர் எனக்கு பண்ணையில் ஏதாவது ஒரு வேலை கொடுப்பார். தலைநகரான சால்வடாருக்கு வியாபார விஷயமாக அப்பா செல்வது வழக்கம். அப்படி செல்லும்போதெல்லாம் பண்ணையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார்.

அந்தக் காலத்தில் மின்சாரமோ, குழாய் தண்ணீரோ எங்களுக்கு இருக்கவில்லை; இன்று சர்வசாதாரணமாக இருக்கும் மற்ற வசதிகளும் இருக்கவில்லை; என்றாலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். பட்டம் விடுவதும் நண்பர்களோடு சேர்ந்து செய்த மரக் கார்களை வைத்து விளையாடுவதும்தான் என்னுடைய பொழுதுபோக்கு. மத ஊர்வலங்களில் புல்லாங்குழல் போன்ற கிளாரினெட்டை வாசித்தேன். அங்கிருந்த சர்ச்சின் பாடகர் குழுவிலும் இருந்தேன். அப்போதுதான் இஸ்டார்யா சாக்ராடா (பரிசுத்த சரித்திரம்) என்ற புத்தகத்தைப் பார்த்தேன். இப்புத்தகம், பைபிளில் என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

1932-⁠ல் எனக்கு 20 வயதாய் இருந்தபோது பிரேசிலின் வடகிழக்கு பகுதியைக் கடுமையான பஞ்சம் தாக்கியது. அது நீண்டநாட்கள் நீடித்தது. எங்களுடைய ஆடு, மாடுகள் எல்லாம் செத்துப்போயின, பயிர்களும் காய்ந்துபோயின. அதனால், நான் சால்வடாருக்கு குடிமாறிச் சென்றேன். அங்கு எனக்கு டிராம் டிரைவர் வேலை கிடைத்தது. பிறகு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து என் முழு குடும்பமும் என்னோடு வந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன். 1944-⁠ல் அப்பா இறந்துவிட்டார். அதனால் அம்மாவையும், எட்டு தங்கைகளையும், மூன்று தம்பிகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்மேல் விழுந்தது.

டிராம் டிரைவரிலிருந்து பிரசங்கிப்பாளராக

சால்வடாருக்கு வந்ததும் நான் செய்த முதல் வேலைகளில் ஒன்று பைபிளை வாங்கியதே. சில வருடங்களாக பாப்டிஸ்ட் சர்ச்சுக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது, டூர்வால் என்ற மற்றொரு டிராம் டிரைவரோடு நட்பு ஏற்பட்டது. அவரும் நானும் பைபிளைப் பற்றி பல மணிநேரங்கள் பேசினோம். மரித்தவர்கள் எங்கிருக்கிறார்கள்?a என்ற ஒரு சிறிய புத்தகத்தை ஒருநாள் என்னிடம் கொடுத்தார். மனிதனுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்றுதான் அதுவரை நம்பிவந்தேன். இருந்தாலும், அந்தச் சிறிய புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த பைபிள் வசனங்களையெல்லாம் எடுத்துப் பார்த்தேன். பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்பதற்கான ஆதாரத்தைப் பைபிளில் கண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது!​—⁠எசேக்கியேல் 18:4.

இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமிருப்பதை டூர்வால் உணர்ந்தார். அதனால் ஆன்டான்யூ ஆன்ட்ராடீ என்பவரை என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இவர், யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களில் ஒருவர். ஆன்ட்ராடீ, மூன்று முறை என்னை சந்தித்துப் பேசினார். அதற்கு பிறகு, பைபிள் போதனைகளை மற்றவர்களிடம் சொல்லுவதில் தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி என்னை அழைத்தார். நான் அவருடன் சென்றபோது, முதல் இரண்டு வீடுகளில் அவர் பேசினார். பிறகு, “நீங்கள் பேசுங்கள்” என்று என்னிடம் கூறினார். பயத்தில் நடுநடுங்கிப்போனேன்! என்றாலும், நான் சொன்னதைக் கவனமாகக் கேட்ட ஒரு குடும்பத்தார், கொடுத்த இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டார்கள். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை! பைபிள் சத்தியத்தில் அக்கறை காட்டுவோரைச் சந்தித்தால் இன்றும்கூட அதேபோன்ற சந்தோஷம் ஏற்படுகிறது.

1943-⁠ம் வருடத்தில் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஏப்ரல் 19-⁠ம் தேதி வந்தது. அன்றைய தினம்தான், சால்வடாருக்கு அருகிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் முழுக்காட்டுதல் பெற்றேன். அந்தக் காலத்தில், அனுபவம்வாய்ந்த கிறிஸ்தவ ஆண்கள் குறைவாகவே இருந்தார்கள். ஆகவே, சகோதரர் ஆன்ட்ராடீயின் வீட்டில் கூடிவந்த சாட்சிகளின் தொகுதியை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டேன். சால்வடார் நகரின் மேடான பகுதியையும் பள்ளமான பகுதியையும் இணைத்த குறுகலான தெருக்கள் ஒன்றில்தான் சகோதரர் ஆன்ட்ராடீயின் வீடு இருந்தது.

எடுத்த எடுப்பில் எதிர்ப்பு

இரண்டாம் உலகப் போர் (1939-45) நடந்த சமயத்தில் எங்கள் பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. நாங்கள் உபயோகித்த பிரசுரங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வந்ததால் நாங்கள் அமெரிக்க உளவாளிகள் என்று சில அதிகாரிகள் சந்தேகித்தார்கள். அதன் காரணமாக, பலர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். வெளி ஊழியத்திற்கு சென்ற சாட்சிகளில் யாராவது திரும்பி வரவில்லை என்றால் அவர் போலீஸில் மாட்டிக்கொண்டார் என்று அர்த்தம். ஆகவே, அவரை விடுவிப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவேண்டியிருந்தது.

1943, ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஆடால்ஃப் மெஸ்மர் என்ற சாட்சி, மாநாட்டை ஏற்பாடு செய்வதில் எங்களுக்கு உதவ சால்வடாருக்கு வந்தார். அதுவே அங்கு நடைபெற்ற முதல் மாநாடு. மாநாட்டை நடத்த அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றோம். “புதிய உலகில் சுதந்திரம்” என்ற பொதுப் பேச்சைப் பற்றி செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தோம். அதோடு, அந்தப் பொதுப் பேச்சை விளம்பரப்படுத்திய போஸ்டர்களை கடை ஜன்னல்களிலும் டிராம்களிலும் மாட்டினோம். ஆனால், மாநாட்டின் இரண்டாம் நாளில் ஒரு போலீஸ்காரர் வந்து, மாநாடு நடத்த எங்களுக்கு கிடைத்திருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார். மாநாட்டை நிறுத்தும்படி, தலைமை போலீஸ் அதிகாரியை சால்வடாரின் ஆர்ச் பிஷப் தூண்டிவிட்டிருந்ததே இதற்குக் காரணம். என்றாலும், விளம்பரப்படுத்திய பொதுப் பேச்சைக் கொடுக்க அடுத்த ஏப்ரல் மாதத்தில் எங்களுக்கு ஒருவழியாக அனுமதி கிடைத்தது.

எனது குறிக்கோள்

1946-⁠ல் சாவோ போலோ நகரில், ‘மகிழ்ச்சியுள்ள தேசங்கள் தேவராஜ்ய மாநாடு’ நடந்தது. அதில் பங்குகொள்ள எனக்கு அழைப்பிதழ் வந்திருந்தது. சால்வடாரிலுள்ள ஒரு சரக்கு கப்பலின் காப்டன், அவருடைய கப்பலில் பயணிக்க எங்களில் சிலருக்கு அனுமதி கொடுத்தார். ஆனால் நாங்கள் கப்பலின் மேல்தளத்தில்தான் தூங்க வேண்டுமென்று சொன்னார். போகும் வழியில் புயலடித்ததால் எங்கள் அனைவருக்குமே குமட்டல் எடுக்க ஆரம்பித்தது. இருந்தாலும், நான்கு நாட்கள் கழித்து பத்திரமாக ரியோ டி ஜெனிரோ சென்று சேர்ந்தோம். அந்நகரிலுள்ள சாட்சிகள் எங்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்த பிறகு இரயிலில் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்கள் இரயில் சாவோ போலோ போய்ச் சேர்ந்தபோது, “யெகோவாவின் சாட்சிகளே வருக!” என்ற பேனர்களைப் பிடித்திருந்த சிறிய கூட்டம் எங்களை வரவேற்றது.

சால்வடாருக்கு திரும்பி வந்தபின் சீக்கிரத்திலேயே, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷனரியான ஹாரி பிளாக் என்பவரைச் சந்தித்தேன். அப்போது, (யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் அழைக்கப்படுகிறபடி) பயனியராக சேவிக்க வேண்டுமென்ற என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனால், குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கிருப்பதை அவர் நினைப்பூட்டினார்; அதனால் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி ஆலோசனை கூறினார். கடைசியாக, ஜூன் 1952-⁠ல் என் தம்பி, தங்கைகள் எல்லாருமே சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தார்கள். ஆகவே, இல்ஹ்யூஸ் என்ற நகரிலிருந்த சிறிய சபையில் பயனியராக நியமிக்கப்பட்டேன். இது, சால்வடாரிலிருந்து தெற்கே 210 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

தாராளமான உதவி

அடுத்த வருடம் ஷெக்யே என்ற ஒரு பெரிய நகரத்திற்கு செல்ல நியமிக்கப்பட்டேன். மாநிலத்தின் மத்தியிலிருந்த அந்நகரில் சாட்சிகள் யாருமே இருக்கவில்லை. அந்த ஊர் பாதிரியாரைத்தான் முதன்முதலில் சந்தித்தேன். அந்த ஊரே தனக்கு சொந்தம் என்றும், நான் அங்கு பிரசங்கிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு “பொய் தீர்க்கதரிசி” வந்திருப்பதாக சொல்லி அவருடைய சபையாரை எச்சரித்திருந்தார்; என் நடவடிக்கைகளை கண்காணிக்க நகரம் முழுவதும் உளவாளிகளை வைத்திருந்தார். இருந்தாலும், அன்றைய தினம் 90-⁠க்கும் அதிகமான பிரசுரங்களைக் கொடுத்தேன், நான்கு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஷெக்யே நகரில் ஒரு சபை உருவானது. 36 சாட்சிகளைக் கொண்ட அந்தச் சபையினர் சொந்தமாக ஒரு ராஜ்ய மன்றத்தையும் கட்டினார்கள்! இன்றோ ஷெக்யேவில், எட்டு சபைகளும் சுமார் 700 சாட்சிகளும் இருக்கிறார்கள்.

ஷெக்யே நகருக்கு சென்ற புதிதில் ஒரு சிறிய ரூமை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தேன். அது நகர்ப்புற எல்லையில் இருந்தது. பின்னர் ஒரு சமயம், மீகெல் வாஸ் டீ ஓலிவேரா என்பவரைச் சந்தித்தேன். அவர், ஷெக்யேவிலுள்ள மிகச் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான சூடஎஸ்டா ஹோட்டலின் உரிமையாளர். பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்ட அவர், தனது ஹோட்டலில் வந்து தங்கும்படி என்னை வருந்திக் கேட்டுக்கொண்டார். பின்னர், மீகெலும் அவருடைய மனைவியும் சாட்சிகளானார்கள்.

ஷெக்யேவில் இருக்கையில் லூயீஸ் கோட்ரீன் என்பவரைச் சந்தித்ததும் மறக்க முடியாத அனுபவம். உயர்நிலைப் பள்ளி ஆசிரியராயிருந்த அவருடனும் பைபிளைப் படித்தேன். எனக்கு போர்ச்சுகீஸ் மொழியையும் கணிதத்தையும் கற்றுக்கொடுக்க அவர் முன்வந்தார். நான் ஆரம்பக் கல்வி மட்டுமே படித்திருந்ததால் அவருடைய உதவியை உடனே ஏற்றுக்கொண்டேன். ஒவ்வொரு வாரமும் நான் அவருக்கு பைபிளைப் பற்றி கற்றுக்கொடுத்த பிறகு அவர் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்தவை, யெகோவாவின் அமைப்பு சீக்கிரத்தில் கொடுக்கவிருந்த கூடுதலான பொறுப்புகளை நிறைவேற்ற உதவியாக இருந்தன.

புதிய சவாலை சந்தித்தல்

1956-⁠ல் ஒரு கடிதம் வந்தது. வட்டாரக் கண்காணியாக (யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணியாக) பயிற்சிபெற, அப்போது ரியோ டி ஜெனிரோவிலிருந்த கிளை அலுவலகத்திற்கு வரும்படி அது அழைப்புவிடுத்தது. ஏறக்குறைய ஒரு மாதமளவு நீடித்த அந்தப் பயிற்சியில் ஒன்பது பேர் கலந்துகொண்டோம். பயிற்சி முடிந்த பிறகு சாவோ போலோவிற்கு நியமிக்கப்பட்டேன். அதனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ‘இத்தாலியர்கள் நிறைந்திருக்கும் அந்த இடத்தில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த நான் போய் என்னத்தை செய்யப்போகிறேன்? அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?’ என்ற கேள்விகள் என் மனதில் ஓடின.b

சான்டூ ஆமாரூ என்ற மாவட்டத்திலுள்ள ஒரு சபையைத்தான் முதலில் சந்தித்தேன். சாட்சிகளும் அக்கறைகாட்டும் மற்றவர்களும் ராஜ்ய மன்றத்தில் நிரம்பி வழிந்ததைக் கண்டு உற்சாகமடைந்தேன். அந்தச் சபையிலிருந்த 97 சாட்சிகளும் வாரயிறுதி ஊழியத்தில் கலந்துகொண்டபோது, நான் பயந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்தேன். ‘அவர்கள் உண்மையில் என்னுடைய சகோதரர்களே’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அன்பான அந்தச் சகோதர, சகோதரிகள் காண்பித்த கனிவுதான், பயணக் கண்காணியாக தொடர்ந்து நிலைத்திருக்க எனக்கு தைரியத்தை அளித்தது.

கழுதைகள், குதிரைகள், எறும்புதின்னிகள்

அந்நாட்களில், சபைகளையும் கிராமப்புறங்களிலிருந்த சாட்சிகளின் சிறிய தொகுதிகளையும் சந்திக்க நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. இதுவே பயணக் கண்காணிகள் சந்தித்த மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகும். அந்த இடங்களில் பொதுப் போக்குவரத்து ஆபத்தானதாக இருந்தது, அல்லது போக்குவரத்தே இருக்கவில்லை. அங்கு பெரும்பாலும் குறுகலான, புழுதிபடிந்த ஒற்றையடிப்பாதைகளே இருந்தன.

வட்டாரக் கண்காணிகளின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அவர் உபயோகிப்பதற்கென்றே ஒரு கழுதையை அல்லது குதிரையை சில வட்டாரங்கள் வாங்கி வைத்திருந்தன. பெரும்பாலான திங்கட்கிழமைகளில் கழுதை அல்லது குதிரைக்கு சேணம் கட்டி, என் பொருட்களை எல்லாம் அதன்மீது ஏற்றி, அதில் சவாரிசெய்து அடுத்த சபைக்கு சென்றுசேர சுமார் 12 மணிநேரம் பிடிக்கும். சான்டா ஃபே டூ சூல் என்ற நகரிலுள்ள சாட்சிகள் டராடூ (கோல்டீ) என்ற பெயர்கொண்ட ஒரு கழுதையை வைத்திருந்தார்கள். கிராமப்புறத்திலிருந்த தொகுதிகளுக்கு செல்லும் வழி அதற்கு அத்துப்படி. டராடூ, பண்ணைக் கதவுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு நான் கதவைத் திறக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்கும். அங்கு சந்திப்பை முடித்த பிறகு அடுத்த தொகுதிக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போகும்.

நம்பகமான கடிதத்தொடர்பு இல்லாததும்கூட வட்டாரக் கண்காணிக்கு மற்றொரு சவாலாக இருந்தது. உதாரணத்திற்கு, மாடோ க்ரோசா மாநிலத்திலுள்ள ஒரு பண்ணையில் கூடிவந்த சாட்சிகளின் சிறிய தொகுதியைச் சந்திக்க அரகுவயா என்ற ஆற்றைப் படகில் கடந்து, காட்டு வழியாக சுமார் 25 கிலோமீட்டர் சவாரிசெய்ய வேண்டியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், இந்தத் தொகுதியைச் சந்திக்க வருவதாக கடிதம் எழுதியிருந்தேன், ஆனால் அந்தக் கடிதம் எங்கோ தொலைந்துவிட்டது போலும். அதனால்தான், ஆற்றைக் கடந்த பிறகு என்னைச் சந்திக்க அங்கு யாருமே வந்திருக்கவில்லை. அது சாயங்கால நேரம். அங்கிருந்த சிறிய ஹோட்டலின் ஓனரிடம் என் சாமான்களைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, கையில் சூட்கேஸுடன் நடக்க ஆரம்பித்தேன்.

சீக்கிரத்திலேயே இருட்டிவிட்டது. இருளில் தட்டுத்தடுமாறி செல்கையில் எறும்புதின்னி விலங்கு ஒன்று உறுமுவதைக் கேட்டேன். பொதுவாக, ஓர் எறும்புதின்னி பின்னங்கால்களை ஊன்றி தன் பலமான கைகளால் தாக்கி ஆட்களைக் கொன்றுவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, புதர்களிலிருந்து ஏதாவது சத்தம் கேட்டால் பாதுகாப்பிற்காக சூட்கேஸை முன்னால் பிடித்துக்கொண்டு கவனமாக நடந்தேன். பல மணிநேரம் நடந்த பிறகு ஒரு சிறிய ஓடையை அடைந்தேன். அதன் அக்கரையில் கம்பி வேலி இருந்திருக்கிறது, இருட்டாக இருந்ததால் அது தெரியவில்லை. ஒரே தாவில் அந்த ஓடையைத் தாண்டினேன். ஆனால், அந்தக் கம்பி வேலியில் சிக்கி என்னைக் காயப்படுத்திக்கொண்டதுதான் மிச்சம்!

ஒருவழியாக, பண்ணையை அடைந்தேன். சத்தம் கேட்டதும் நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிட்டன. அந்தக் காலங்களில், ஆடு திருடுகிறவர்கள் இரவில் வருவதுதான் வழக்கம். ஆகவே, வீட்டின் கதவு திறக்கப்பட்டவுடனே நான் யார் என்பதைக் கூறினேன். உடைகள் கிழிந்து, இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த என்னைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்திருக்கும். ஆனாலும், என்னைக் கண்டதும் அங்கிருந்த சகோதரர்களின் முகங்கள் மலர்ந்தன.

அந்தக் காலம் ரொம்பவே கஷ்டமான காலம் என்பது உண்மைதான்; என்றாலும் அந்தக் கஷ்டங்களிலும் சந்தோஷம் கண்டேன். குதிரைமீதும் நடைப்பயணமாகவும் நீண்ட தூரம் சென்றதை அனுபவித்து மகிழ்ந்தேன். அவ்வாறு செல்கையில், சில சமயம் மர நிழலில் ஓய்வெடுத்தேன்; பறவைகளின் கீதங்களை ரசித்தேன்; ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளில் நரிகள் குறுக்கே கடந்து செல்வதைக் கவனித்தேன். என்னுடைய சந்திப்புகளால் மற்றவர்கள் உற்சாகமடைந்ததைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி தந்த மற்றொரு காரியமாகும். அநேகர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மாநாடுகளில் சந்தித்தபோது மற்றவர்கள் நேரடியாகவே நன்றி சொன்னார்கள். ஆட்கள் தங்களுடைய பிரச்சினைகளை சமாளித்து ஆவிக்குரிய முதிர்ச்சி பெறுவதைக் கண்டபோது நான் அடைந்த திருப்திக்கு அளவே இல்லை!

கடைசியில் வாழ்க்கைத் துணை

பயணக் கண்காணியாக சேவை செய்த வருடங்களில் பெரும்பாலும் தனியாகத்தான் சென்றேன். யெகோவாவை “என் கன்மலையும், என் கோட்டையும்” ஆக்குவதற்கு அது எனக்கு கற்றுக்கொடுத்தது. (சங்கீதம் 18:2) அதுமட்டுமல்ல, தனியாக இருந்ததால் ராஜ்ய வேலைகளுக்கு முழுமையான கவனத்தைக் கொடுக்க முடிந்தது என்பதையும் உணர்ந்தேன்.

ஆனால் 1978-⁠ல் ஷூல்யா டாகாஹாஷீ என்ற பயனியர் சகோதரியைச் சந்தித்தேன். சாவோ போலோவிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்துவந்தார்; கைநிறைய சம்பளம் வாங்கிவந்த அவர், ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகமாக தேவைப்படுகிற இடத்தில் சேவிப்பதற்காக அந்த வேலையை விட்டுவிட்டார். அவரை அறிந்திருந்த மூப்பர்கள், அவருடைய ஆவிக்குரிய குணங்களையும் பயனியராக அவருடைய திறமைகளையும் பற்றி உயர்வாகப் பேசினார்கள். ஆகவே அவரைத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தேன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படித் தீர்மானம் செய்ததைக் கேட்டபோது சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நெருங்கிய நண்பர் ஒருவரால் அதை நம்பவே முடியவில்லை. உண்மையிலேயே நான் திருமணம் செய்துகொண்டால் 270 கிலோ எடையுள்ள ஒரு மாட்டை பரிசாகத் தருவதாக அவர் வாக்கு கொடுத்தார். ஜூலை 1, 1978-⁠ல் எங்கள் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பின்போது அந்த மாட்டை அடித்து விருந்து வைத்தோம்.

மோசமான உடல்நிலை, என்றாலும் விடவில்லை

பயண ஊழியத்தில் ஷூல்யாவும் என்னோடு சேர்ந்துகொண்டாள். அடுத்த எட்டு வருடங்களாக பிரேசிலின் தென்பகுதியிலும் தென்கிழக்குப் பகுதியிலும் உள்ள சபைகளைச் சந்தித்தோம். அப்போதுதான் எனக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டது. வெளி ஊழியம் செய்து கொண்டிருந்தபோது இரண்டு முறை மயங்கி விழுந்தேன். என்னால் அதிகம் செய்ய முடியவில்லை என்பதால் சாவோ போலோ மாநிலத்திலுள்ள பீரீக்வீ என்ற இடத்தில் விசேஷ பயனியர்களாக சேவிக்கும் நியமிப்பை ஏற்றுக்கொண்டோம்.

அந்தச் சமயத்தில்தான், பீரீக்வீயிலுள்ள சாட்சிகள் என்னை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர், ஏறக்குறைய 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொயானியா நகரில் இருந்ததால் என்னைக் காரிலேயே அங்கு அழைத்துச் சென்றார்கள். என் உடல்நிலை கொஞ்சம் தேறினதும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பேஸ்மேக்கர் என்ற ஓர் எந்திரம் பொருத்தப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்கு முன் நடந்த கதை அது. அதற்கு பிறகு இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், சீஷராக்கும் வேலையில் இன்றும் சுறுசுறுப்பாகவே ஈடுபடுகிறேன். உண்மையுள்ள அநேக கிறிஸ்தவ மனைவிகளைப் போலவே ஷூல்யா எனக்கு பக்கபலமாகவும் உற்சாகத்தின் ஊற்றாகவும் இருந்து வந்திருக்கிறாள்.

உடல்நிலை சரியில்லாததால் என்னால் அதிகம் செய்ய முடிவதில்லை. அதனால் சில சமயம் மனதளவில் சோர்வும் ஏற்படுகிறது. இருந்தாலும் என்னால் தொடர்ந்து பயனியராக சேவிக்க முடிகிறது. இந்த மோசமான உலகில் பிரச்சினை இல்லாத வாழ்க்கை நமக்கு கிடைக்கும் என யெகோவா உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வேன். அப்போஸ்தலன் பவுலும் உண்மையுள்ள மற்ற கிறிஸ்தவர்களும் விடாது சகித்தார்களே, அவர்களைப்போல் நாமும் சகித்திருக்க வேண்டாமா என்ன?​—⁠அப்போஸ்தலர் 14:22.

1930-களில் முதன்முதலாக வாங்கிய பைபிளை சமீபத்தில் கண்டெடுத்தேன். அட்டையின் உட்புறத்தில் 350 என்று எழுதி வைத்திருந்தேன். அது, 1943-⁠ல் நான் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்த சமயத்தில் பிரேசிலிலிருந்த ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையாகும். இன்றோ ஆறு லட்சத்திற்கும் அதிகமான சாட்சிகள் அங்கிருக்கிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை. இந்த மாபெரும் வளர்ச்சியில் நான் ஒரு சிறிய பங்காற்றியது என்னே ஒரு பாக்கியம்! விடாமல் நிலைத்திருந்ததால் யெகோவா என்னை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்” என்று சொன்ன சங்கீதக்காரனைப் போலவே நானும் உணருகிறேன்.​—⁠சங்கீதம் 126:3.

[அடிக்குறிப்புகள்]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது; இப்போது அச்சில் இல்லை.

b 1870-⁠க்கும் 1920-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் இத்தாலியர்கள் சாவோ போலோவில் குடியேறியிருந்தார்கள்.

[பக்கம் 9-ன் படம்]

சால்வடார் நகரில் நடந்த முதல் மாநாட்டின் பொதுப் பேச்சை சாட்சிகள் விளம்பரப்படுத்துகிறார்கள், 1943

[பக்கம் 10-ன் படம்]

மகிழ்ச்சியுள்ள தேசங்கள் மாநாட்டிற்காக சாட்சிகள் சாவோ போலோவிற்கு வந்துசேர்கிறார்கள், 1946

[பக்கம் 10, 11-ன் படங்கள்]

1950-களின் முடிவில் பயண ஊழியத்தில்

[பக்கம் 12-ன் படம்]

மனைவி ஷூல்யாவுடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்