கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?
மனித சரித்திரத்தின் ஆரம்பம் அது. திடீரென்று ஒரு கலகம் தலைதூக்கியது. அது மனிதகுலத்தையே அழிவின் பாதையில் கொண்டுவந்து நிறுத்தியது! தன்னைப் படைத்தவர் என்றுகூட பார்க்காமல் ஒரு தேவதூதன் துணிந்து கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்தான். இந்தக் கலகக்காரன்தான் முதல் மனுஷியான ஏவாளிடம் நயவஞ்சகமாகப் பேசி கடவுள் சாப்பிட வேண்டாமென சொல்லியிருந்த பழத்தை சாப்பிட ஆசை காட்டினான். அவளையும் அவளுடைய கணவன் ஆதாமையும் குறித்து, “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றான். (ஆதியாகமம் 2:16, 17; 3:1-5) பிறகு, கலகக்காரனான இந்தத் தேவதூதன், பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்டான்.—வெளிப்படுத்துதல் 12:9.
சாத்தான் சொன்னபடி ஏவாள் செய்தாளா? “அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 3:6 [தொடக்க நூல்], பொது மொழிபெயர்ப்பு) இப்படித்தான் முதல் தம்பதியரான ஆதாமும் ஏவாளும் கலகத்தில் சாத்தானுடன் கைகோத்துக்கொண்டார்கள். விளைவு? பூங்காவன பரதீஸ் பூமியை அவர்கள் மட்டுமல்ல அவர்களுடைய சந்ததியினரும் இழந்தார்கள். அதனால் பூரணமாகப் பிறக்க வேண்டிய பிள்ளைகள் பாவத்துடன் பிறந்தார்கள். என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் பிறக்க வேண்டிய பிள்ளைகள் மரணத்தை ருசிக்கும் கட்டாயத்துடன் பிறந்தார்கள்.—ரோமர் 5:12.
இப்படி நடந்ததற்குச் சர்வத்துக்கும் பேரரசரான யெகோவா தேவன் என்ன நடவடிக்கை எடுத்தார்? பாவங்களை மன்னிப்பதற்கு வழிசெய்தார். (ரோமர் 5:8) இந்தக் கலகத்தால் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கு யெகோவா தேவன் ஓர் அரசாங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். அது “தேவனுடைய ராஜ்யம்” அதாவது கடவுளுடைய அரசாங்கம், என்று அழைக்கப்படுகிறது. (லூக்கா 21:31) கடவுளுடைய சர்வலோக அரசாட்சியின் கீழ் செயல்படும்படி ஏற்படுத்தப்பட்ட இந்த அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது.
கடவுளுடைய அந்த அரசாங்கத்தின் நோக்கமென்ன? அதனுடைய சில அம்சங்கள் யாவை? அந்த அம்சங்கள் மனித அரசாங்கங்களின் அம்சங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்? பின்வரும் கட்டுரையில் இந்தக் கேள்விகள் கலந்தாலோசிக்கப்படும்.