வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஞானத்தைப் பற்றி நீதிமொழிகள் 8:22-31-ல் கொடுக்கப்பட்டுள்ள விவரிப்பு, மனிதனாக வருவதற்கு முன்னிருந்த இயேசு கிறிஸ்துவுக்குப் பொருந்துகிறது என நாம் எப்படி அறிகிறோம்?
ஞானத்தைப் பற்றிய தேவாவியால் ஏவப்பட்ட விவரிப்பு நீதிமொழிகள் புத்தகத்தில் காணப்படுகிறது; அவ்வசனங்களை பைபிளின் பொது மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது: “ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார். . . . மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். . . . வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது . . . நான் அங்கே இருந்தேன். . . . நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் [“கைதேர்ந்த வேலையாளாய்,” NW] இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன், எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். . . . மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.”
இந்த வசனங்கள் வெறுமனே தெய்வீக ஞானத்தையோ ஞானம் என்ற குணத்தையோ பற்றி சொல்லியிருக்க முடியாது. ஏன் தெரியுமா? யெகோவா தமது படைப்பின் தொடக்கத்தில் இந்த ஞானத்தை ‘படைத்ததாக’ இந்த வசனம் சொல்கிறது. யெகோவா என்றென்றும் இருக்கிறார், எப்பொழுதும் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார். (சங்கீதம் 90:1, 2) அவருடைய ஞானத்திற்கு ஆரம்பமேதுமில்லை; அது படைக்கப்படவுமில்லை, ‘பிறப்பிக்கப்படவுமில்லை.’ மேலுமாக, இந்த ஞானம் பேசுவதாகவும் செயல்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது; ஆகையால், இது ஒரு நபரையே குறிக்கிறது.—நீதிமொழிகள் 8:1.
யுகா யுகங்களுக்கு முன், படைப்பாளரான யெகோவாவுக்கு அருகே ஞானம் “கைதேர்ந்த வேலையாளாக” இருந்தது என்று நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது. நிச்சயமாகவே, இது இயேசுவுக்குத்தான் பொருந்துகிறது. அவர் பூமிக்கு வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பு, யெகோவாவுடன் மிக நெருக்கமாக வேலை செய்தார். அதனால், இயேசுவைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.”—கொலோசெயர் 1:17; வெளிப்படுத்துதல் 3:14.
யெகோவாவின் ஞானமான நோக்கங்களையும் சட்டங்களையும் இயேசு வெளிப்படுத்தியதால், அவரை ஞானமாக சித்தரிப்பது பொருத்தமாகவே இருக்கிறது. அவர் மனிதராக வருவதற்கு முன், கடவுளுடைய வார்த்தையாக, அதாவது கடவுளுடைய சார்பில் பேசுபவராக இருந்தார். (யோவான் 1:1) அவர் “தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்” என்றும் விவரிக்கப்படுகிறார். (1 கொரிந்தியர் 1:24, 30) கடவுளுடைய மகனைப் பற்றிய என்னே அருமையான விவரிப்பு! மனிதகுலத்தை நேசித்ததால் அவர்களுக்காகத் தம் உயிரையே மீட்கும் பொருளாகக் கொடுத்தாரே!—யோவான் 3:16.
[பக்கம் 31-ன் படம்]
“மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, . . . நான் பிறந்தேன்”