உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 9/1 பக். 22-26
  • ‘ஜெபத்தைக் கேட்கிறவரை’ அணுகுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘ஜெபத்தைக் கேட்கிறவரை’ அணுகுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளை அணுகுவதற்குத் தேவைப்படுபவை
  • நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி அணுகுதல்
  • கிறிஸ்தவ ஏற்பாட்டின்படி அணுகுதல்
  • எப்படிப்பட்ட ஜெபங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன?
  • உங்கள் ஜெபம் மணம் கமழும் ‘தூபம்போல் இருக்கிறதா’?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுளிடம் நீங்கள் எவ்வாறு நெருங்கிவரலாம்
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • ஜெபம் என்ற பாக்கியத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 9/1 பக். 22-26

‘ஜெபத்தைக் கேட்கிறவரை’ அணுகுதல்

“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.”​—⁠சங்கீதம் 65:2.

1. பூமியிலுள்ள மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதருக்கும் இடையிலான ஒரு வித்தியாசம் என்ன, இது என்ன வாய்ப்பை அளிக்கிறது?

பூமியில் வாழும் ஆயிரக்கணக்கான ஜீவராசிகளில் மனிதருக்கு மட்டுமே படைப்பாளரை வணங்குவதற்கான திறன் இருக்கிறது. கடவுளை வணங்க வேண்டுமென்ற உணர்வும் ஆசையும் மனிதருக்கு மட்டுமே இருக்கிறது. நம் பரலோகத் தகப்பனுடன் தனிப்பட்ட விதத்தில் பந்தத்தை அனுபவிக்க இது நமக்கு அருமையான வாய்ப்பை அளிக்கிறது.

2. படைப்பாளரோடு மனிதன் வைத்திருந்த பந்தத்தைப் பாவம் எப்படிச் சீர்குலைத்துப் போட்டது?

2 படைப்பாளரை அணுக முடிகிற விதத்தில், அதாவது அவரோடு பேச்சுத்தொடர்பு கொள்ள முடிகிற விதத்தில், மனிதரைக் கடவுள் படைத்தார். ஆதாமையும் ஏவாளையும் பாவமற்றவர்களாகப் படைத்தார். இதனால், தன் அப்பாவிடம் ஒரு பிள்ளை பேசுவதுபோல் கடவுளிடம் அவர்கள் தயக்கமின்றி பேசினார்கள். ஆனால், அவர்கள் பாவம் செய்தபிறகு அந்த அருமையான வாய்ப்பை இழந்தார்கள். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால், அவரோடு வைத்திருந்த நெருக்கமான பந்தத்தையும் இழந்தார்கள். (ஆதியாகமம் 3:8-13, 17-24) அப்படியானால், ஆதாமுக்குப் பிறந்த அபூரண சந்ததியாரால் கடவுளை அணுகவே முடியாதென்று அர்த்தமா? இல்லை, இன்னமும்கூட தம்மை அணுகுவதற்கு கடவுள் அவர்களை அனுமதிக்கிறார்; ஆனால், சில தேவைகளைப் பூர்த்தி செய்யும்படி எதிர்பார்க்கிறார். அவை யாவை?

கடவுளை அணுகுவதற்குத் தேவைப்படுபவை

3. பாவமுள்ள மனிதர்கள் கடவுளை எப்படி அணுக முடியும், இதை யாருடைய உதாரணம் விளக்குகிறது?

3 தம்மை அணுக விரும்பும் அபூரண மனிதரிடமிருந்து கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு, ஆதாமுடைய இரண்டு மகன்களைப் பற்றிய சம்பவம் நமக்கு உதவுகிறது. காயீனும் ஆபேலும் காணிக்கைகளைச் செலுத்துவதன் மூலம் கடவுளை அணுக முயன்றார்கள். ஆபேலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது, காயீனின் காணிக்கையோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஆதியாகமம் 4:3-5) இதற்குக் காரணம் என்ன? எபிரெயர் 11:4 இவ்வாறு குறிப்பிடுகிறது: “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்.” அப்படியானால், கடவுளை அணுகுவதற்கு முதலாவது விசுவாசம் தேவைப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. மற்றொன்றும் தேவைப்படுகிறது, அது, காயீனிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளிலிருந்து தெரிய வருகிறது: “நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?” ஆம், காயீன் நல்லது செய்திருந்தால், அவனுடைய காணிக்கையைக் கடவுள் ஏற்றுக்கொண்டிருந்திருப்பார். ஆனால், அவன் கடவுளுடைய ஆலோசனையை நிராகரித்து, ஆபேலைக் கொலை செய்தான். இதனால் அந்த இடத்தைவிட்டே ஓட வேண்டியதாயிற்று. (ஆதியாகமம் 4:7-12) ஆகவே, விசுவாசத்தோடும் நற்செயல்களோடும் கடவுளை அணுகுவதன் முக்கியத்துவம் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே வலியுறுத்திக் காட்டப்பட்டது.

4. கடவுளை அணுக விரும்பினால் நாம் எதை ஒத்துக்கொள்ள வேண்டும்?

4 கடவுளை அணுக விரும்பினால், நாம் பாவிகள் என்பதை ஒத்துக்கொள்வது மிக முக்கியம். எல்லாருமே பாவம் செய்பவர்களாய் இருப்பதால் கடவுளை அணுக அது ஒரு தடையாக உள்ளது. இஸ்ரவேலரைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: ‘நாங்கள் துரோகஞ்செய்தோம். . . . ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.’ (புலம்பல் 3:42, 44) மனிதர் பாவிகளாக இருந்தாலும்கூட, ஆரம்பத்திலிருந்தே அவர்களுடைய ஜெபங்களை ஏற்றுக்கொள்ள கடவுள் மனமுள்ளவராய் இருந்திருக்கிறார். எப்படியெனில், விசுவாசத்தோடும் சரியான மனநிலையோடும் அவரை அணுகி அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தபோது அவர்களது ஜெபங்களை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவராய் இருந்திருக்கிறார். (சங்கீதம் 119:145) இவ்வாறு ஜெபம் செய்த சிலர் யார், அவர்கள் செய்த ஜெபங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5, 6. கடவுளை ஆபிரகாம் அணுகிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 இவ்வாறு ஜெபம் செய்தவர்களில் ஒருவர் ஆபிரகாம். தம்மை அணுக அவர் எடுத்த முயற்சியை கடவுள் அங்கீகரித்தார்; ஏனெனில் அவரை ‘என் சிநேகிதன்’ என கடவுள் அழைத்தார். (ஏசாயா 41:8) கடவுளை ஆபிரகாம் அணுகிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? உண்மையுள்ள கோத்திர தகப்பனாகிய இவர் தன் வாரிசு சம்பந்தமாக யெகோவாவிடம் பின்வருமாறு கேட்டார்: “அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே.” (ஆதியாகமம் 15:2, 3; 17:18) மற்றொரு சந்தர்ப்பத்தில், சோதோம் கொமோராவிலிருந்த கெட்ட ஜனங்கள் மீது கடவுள் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகையில், யார்தான் காப்பாற்றப்படுவார் என்று தன் கவலையை அவர் தெரிவித்தார். (ஆதியாகமம் 18:23-33) மற்றவர்களுக்காகவும் அவர் வேண்டினார். (ஆதியாகமம் 20:7, 18) ஆபேல் செய்ததைப் போல, ஒரு சந்தர்ப்பத்தில், யெகோவாவுக்கு பலி செலுத்தியதன் மூலமும் அவர் கடவுளை அணுகினார்.​—⁠ஆதியாகமம் 22:9-14.

6 இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும், யெகோவாவிடம் ஆபிரகாம் தயங்காமல் மனந்திறந்து பேசினார். அதோடு, தன் படைப்பாளருடன் ஒப்பிட தான் ஒன்றுமே இல்லை என்பதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். அவர் கண்ணியத்தோடு யெகோவாவிடம் பேசிய வார்த்தைகள் ஆதியாகமம் 18:27-⁠ல் காணப்படுகின்றன. அது இவ்வாறு சொல்கிறது: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத் துணிந்தேன்.” பின்பற்றுவதற்குரிய சிறந்த மனப்பான்மை, அல்லவா?

7. கோத்திரப் பிதாக்கள் எந்தெந்த விஷயங்களுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள்?

7 பல்வேறு விஷயங்களுக்காக மற்ற கோத்திர பிதாக்களும் ஜெபம் செய்திருக்கிறார்கள், அவர்களுடைய ஜெபங்களையும் யெகோவா ஏற்றுக்கொண்டு பதில் அளித்திருக்கிறார். யாக்கோபு தன் ஜெபத்தில் பொருத்தனையை முன்வைத்தார். கடவுளுடைய உதவிக்காக ஜெபித்த பின்பு அவர் இவ்வாறு பொருத்தனை செய்தார்: “தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்.” (ஆதியாகமம் 28:20-22) பிற்பாடு, தன் சகோதரனை சந்திக்கவிருந்த சமயத்தில் பாதுகாப்புக்காக யெகோவாவிடம் இவ்வாறு மன்றாடினார்: “என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், . . . அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.” (ஆதியாகமம் 32:9-12) கோத்திரப் பிதாவாகிய யோபு தன் குடும்பத்தாருக்காக ஜெபம் செய்தார், அவர்களுக்காகப் பலிகளையும் செலுத்தினார். யோபுவின் மூன்று தோழர்கள் அவர்களுடைய யோசனையற்ற பேச்சின் மூலம் பாவம் செய்தபோது, அவர்களுக்காக அவர் ஜெபம் செய்தார்; யெகோவா அதை அங்கீகரிக்கும் விதத்தில், “யோபின் முகத்தைப் பார்த்தார்.” (யோபு 1:5; 42:7-9) நாம் எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபிக்கலாம் என்பதை அறிந்துகொள்ள இந்தப் பதிவுகள் நமக்கு உதவுகின்றன. சரியான மனநிலையோடு யெகோவாவை அணுகுவோரின் ஜெபங்களை ஏற்றுக்கொள்ள அவர் மனமுள்ளவராய் இருக்கிறார் என்பதையும் இதிலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம்.

நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி அணுகுதல்

8. நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி, ஜனங்களின் சார்பாக எவ்வாறு யெகோவாவிடம் ஜெபங்கள் செய்யப்பட்டன?

8 இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்த பிறகு அவர்களுக்கு யெகோவா நியாயப்பிரமாண உடன்படிக்கையைக் கொடுத்தார். அதில், ஆசாரியர்கள் மூலம் கடவுளை அணுகுவதற்கான ஏற்பாடு குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனங்கள் சார்பாக ஆசாரியர்களாகச் சேவை செய்வதற்கு லேவியர்கள் சிலர் நியமிக்கப்பட்டார்கள். முழு தேசத்தையும் உட்படுத்தும் விவகாரங்களைக் குறித்து ஜனங்கள் சார்பாக ராஜாவோ தீர்க்கதரிசியோ கடவுளிடம் ஜெபம் செய்தார்கள். (1 சாமுவேல் 8:21, 22; 14:36-41; எரேமியா 42:1-3) உதாரணமாக, ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் ராஜா இருதயப்பூர்வமாக யெகோவாவிடம் ஜெபித்தார். யெகோவாவும் அதற்குச் செவிசாய்த்ததற்கு அடையாளமாக, ஆலயத்தை தமது மகிமையினால் நிரப்பி, இவ்வாறு கூறினார்: ‘இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்தை . . . என் செவிகள் கவனிக்கும்.’​—⁠2 நாளாகமம் 6:12–7:3, 15.

9. யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவரை ஆலயத்தில் அணுகுவதற்கு என்ன செய்ய வேண்டியிருந்தது?

9 ஏற்றுக்கொள்ளும் விதமாக ஆலயத்தில் தம்மை எப்படி அணுகும்படி எதிர்பார்க்கிறார் என்பதை யெகோவா நியாயப்பிரமாணத்தில் குறிப்பிட்டிருந்தார். மிருக பலிகள் செலுத்தப்படுவதோடுகூட, பிரதான ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நறுமண தூபவர்க்கத்தை யெகோவாவுக்கு முன் எரிக்க வேண்டியிருந்தது. பிற்பாடு, பாவநிவாரண நாள் தவிர பிற நாட்களில் மற்ற ஆசாரியர்களும் இந்த வேலையைச் செய்தார்கள். ஆசாரியர்கள் மரியாதைக்குரிய விதத்தில் இப்படிப்பட்ட வணக்க செயல்களில் ஈடுபடாதபோது, யெகோவாவும் அவர்களுடைய சேவையை ஏற்றுக்கொள்ளவில்லை.​—⁠யாத்திராகமம் 30:7, 8; 2 நாளாகமம் 13:11.

10, 11. தனி நபர்களின் ஜெபங்களை யெகோவா கேட்டார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

10 பூர்வ இஸ்ரவேலில், நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் மட்டுமே ஜனங்கள் கடவுளை அணுக முடிந்ததா? இல்லை, தனி நபர்களின் ஜெபங்களையும் யெகோவா கேட்டார் என பைபிள் காட்டுகிறது. ஆலய பிரதிஷ்டையின்போது யெகோவாவிடம் சாலொமோன் ஜெபத்தில் இவ்வாறு மன்றாடினார்: ‘எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், . . . இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்பீராக.’ (2 நாளாகமம் 6:29, 30) முழுக்காட்டுபவனாகிய யோவானின் தகப்பனான சகரியா, ஆலயத்தில் தூபம் காட்டிய சமயங்களில் ஆசாரியரல்லாதவர்கள் கூட்டமாய் “வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்” என லூக்கா சுவிசேஷம் சொல்கிறது. பொற்பீடத்தில் யெகோவாவுக்கு தூபவர்க்கம் எரிக்கப்படுகையில் ஜனங்கள் ஆலயத்திற்கு வெளியே கூட்டமாய் நின்று ஜெபம் செய்வது வழக்கமாய் இருந்தது.​—⁠லூக்கா 1:8-10.

11 ஆகவே, யெகோவாவைத் தகுந்த முறையில் அணுகியபோது, ஜனங்கள் எல்லார் சார்பாகவும் செய்யப்பட்ட ஜெபங்களையும் தனி நபர்களின் ஜெபங்களையும் யெகோவா சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். ஆனால், இன்று நாம் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் இல்லை. இருந்தாலும், பூர்வ இஸ்ரவேலர் கடவுளை அணுகிய விதங்களிலிருந்து நாமும் ஜெபத்தைக் குறித்து சில முக்கிய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

கிறிஸ்தவ ஏற்பாட்டின்படி அணுகுதல்

12. கிறிஸ்தவர்கள் யெகோவாவை அணுகுவதற்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

12 இன்று நாம் கிறிஸ்தவ ஏற்பாட்டின் கீழ் இருக்கிறோம். அன்று, ஜனங்கள் எல்லார் சார்பாகவும் ஆசாரியர்கள் ஆலயத்தில் கடவுளை அணுகினார்கள். இன்று அப்படிப்பட்ட ஓர் ஆலயமும் இல்லை, அதை நோக்கி நாம் ஜெபம் செய்வதுமில்லை. இருந்தாலும்கூட, தம்மை அணுகுவதற்கு ஓர் ஏற்பாட்டை கடவுள் செய்திருக்கிறார். அது என்ன ஏற்பாடு? பொ.ச. 29-⁠ல் கிறிஸ்து அபிஷேகம் செய்யப்பட்டு, பிரதான ஆசாரியராக நியமிக்கப்பட்டபோது ஓர் ஆன்மீக ஆலயம் செயல்பட ஆரம்பித்தது.a இந்த ஆன்மீக ஆலயம், இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் அடிப்படையில் யெகோவாவை அணுகுவதற்குச் செய்யப்பட்ட புதிய ஏற்பாடாகும்.​—⁠எபிரெயர் 9:11, 12.

13. ஜெபத்தைக் குறித்ததில் எருசலேம் ஆலயத்திற்கும் ஆன்மீக ஆலயத்திற்கும் இடையே உள்ள ஒரு பொருத்தத்தைக் குறிப்பிடுங்கள்.

13 எருசலேம் ஆலயத்தின் பல அம்சங்கள், இந்த ஆன்மீக ஆலயத்தின் அம்சங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன. அவற்றில் ஜெபம் செய்வதோடு சம்பந்தப்பட்ட அம்சங்களும் உட்படுகின்றன. (எபிரெயர் 9:1-10) உதாரணமாக, ஆலயத்திலிருந்த பரிசுத்த ஸ்தலத்தின் தூபபீடத்தில் காலையிலும் மாலையிலும் எரிக்கப்பட்ட தூபவர்க்கம் எதைப் பிரதிநிதித்துவம் செய்தது? ‘பரிசுத்தவான்களுடைய ஜெபங்களே தூபவர்க்கம்’ என வெளிப்படுத்துதல் புத்தகம் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 5:8; 8:3, 4) தேவ ஆவியின் தூண்டுதலால் தாவீது இவ்வாறு எழுதினார்: ‘என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாக இருக்கக்கடவது.’ (சங்கீதம் 141:2) ஆகவே, கிறிஸ்தவ ஏற்பாட்டில் இந்த நறுமணப் புகை, யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செய்யப்படும் ஜெபங்களுக்கும் அவருக்குச் செலுத்தப்படும் துதிகளுக்கும் பொருத்தமான அடையாளமாக இருக்கின்றன.​—⁠1 தெசலோனிக்கேயர் 3:10.

14, 15. (அ) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் யெகோவாவை அணுகுவது பற்றி என்ன சொல்லலாம்? (ஆ) ‘வேறே ஆடுகளை’ பற்றி என்ன சொல்லலாம்?

14 இந்த ஆன்மீக ஆலயத்தில் யாரெல்லாம் கடவுளை அணுக முடியும்? ஆசாரியர்களும் லேவியர்களும் எருசலேம் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் சேவை செய்யும் தனிச்சலுகை பெற்றிருந்தார்கள்; ஆனால், ஆசாரியர்களால் மட்டுமே அதன் பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்ல முடிந்தது. உட்பிரகாரத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் முன்நிழலாக இருக்கும் ஒப்பற்ற ஆன்மீக நிலையை, பரலோக நம்பிக்கையுடைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அனுபவித்து மகிழ்கிறார்கள்; இவ்வாறு, கடவுளிடம் ஜெபிப்பதற்கும் அவரைத் துதிப்பதற்கும் அவர்கள் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

15 பூமிக்குரிய நம்பிக்கையுடைய ‘வேறே ஆடுகளுக்கு’ என்ன வாய்ப்பு உள்ளது? (யோவான் 10:16) “கடைசி நாட்களில்” அநேக நாடுகளைச் சேர்ந்தவர்கள் யெகோவாவை வழிபடுவதற்கு வருவார்கள் என ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிட்டார். (ஏசாயா 2:2, 3) ‘அந்நியரும்’கூட யெகோவாவிடம் வருவார்கள் என அவர் எழுதினார். அவர்களுடைய ஜெபத்தை கடவுள் ஏற்றுக்கொள்ள மனமுள்ளவராய் இருப்பதை இவ்வாறு சொல்கிறார்: “என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்.” (ஏசாயா 56:6, 7) வெளிப்படுத்துதல் 7:9-15 வசனங்கள் ‘வேறே ஆடுகளான’ ஜனங்களைப் பற்றி கூடுதலான தகவலை அளிக்கின்றன. ‘சகல தேசத்தையும்’ சேர்ந்த ‘திரள் கூட்டத்தாரான’ இவர்கள், “இரவும் பகலும்” கடவுளை வணங்கி, அவரிடம் ஜெபிப்பதற்காக ஆன்மீக ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் கூடிவருகிறார்கள். தங்கள் ஜெபங்களைக் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்ற முழு நம்பிக்கையோடு இன்று அவருடைய ஊழியர்கள் எல்லாரும் அவரை தயங்காமல் அணுக முடியும். இதை அறிவது நமக்கு எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!

எப்படிப்பட்ட ஜெபங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன?

16. ஜெபத்தைப் பற்றி ஆரம்பகால கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 ஜெபம் செய்வது ஆரம்பகால கிறிஸ்தவர்களின் வழக்கமாயிருந்தது. அவர்கள் எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்தார்கள்? அமைப்பில் பொறுப்புகளைக் கவனிக்க ஆண்களைத் தேர்ந்தெடுக்கையில் கிறிஸ்தவ மூப்பர்கள் ஜெபம் செய்தார்கள். (அப்போஸ்தலர் 1:24, 25; 6:5, 6) எப்பாப்பிரா என்பவர் சக விசுவாசிகளின் சார்பாக ஜெபம் செய்தார். (கொலோசெயர் 4:12) பேதுரு சிறையில் அடைக்கப்பட்டபோது, எருசலேமிலிருந்த சபையார் அவருக்காக ஜெபம் செய்தார்கள். (அப்போஸ்தலர் 12:5) எதிர்ப்பு வந்தபோது தைரியத்தைத் தரும்படி ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடவுளிடம் இவ்வாறு கேட்டார்கள்: “கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, . . . உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும்.” (அப்போஸ்தலர் 4:23-30) சோதனைகள் வரும்போது ஞானத்திற்காக கடவுளிடம் ஜெபம் செய்யும்படி சீஷனாகிய யாக்கோபு கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். (யாக்கோபு 1:5) இதுபோன்ற விஷயங்களுக்காக யெகோவாவிடம் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?

17. யாருடைய ஜெபங்களைக் கடவுள் ஏற்றுக்கொள்கிறார்?

17 எல்லா ஜெபங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியானால், நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படும் என்ற நம்பிக்கையோடு நாம் எப்படி ஜெபிக்கலாம்? முற்காலத்தில் உண்மையுள்ள ஜனங்கள் நேர்மை மனதோடும் நல் இருதயத்தோடும் கடவுளிடம் ஜெபித்தபோது அதற்கு அவர் செவிகொடுத்தார். அவர்கள் தங்கள் நற்செயல்கள் மூலம் விசுவாசத்தைக் காட்டினார்கள். இன்றும்கூட அதேவிதமாக கடவுளை அணுகுவோருக்கு அவர் செவிசாய்ப்பார் என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம்.

18. தங்களுடைய ஜெபங்கள் கேட்கப்படுவதற்கு கிறிஸ்தவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?

18 கிறிஸ்தவர்களிடம் மற்றொரு காரியமும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போஸ்தலன் பவுல் இதை இவ்வாறு விளக்கினார்: “ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.” இங்கு, “அவர் மூலமாய்” என பவுல் யாரை குறிப்பிடுகிறார்? இயேசு கிறிஸ்துவையே குறிப்பிடுகிறார். (எபேசியர் 2:13, 18) இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பிதாவிடம் தடையின்றி அணுக முடியும்.​—⁠யோவான் 14:6; 15:16; 16:23, 24.

19. (அ) இஸ்ரவேலர் தூபம் காட்டியதை யெகோவா எப்போது அருவருப்பாக கருதினார்? (ஆ) நம்முடைய ஜெபங்கள் யெகோவாவுக்கு நல்வாசனைமிக்கவையாய் இருக்கின்றனவா என்பதை நாம் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்?

19 இஸ்ரவேல் ஆசாரியர்கள் தூபம் காட்டியது, கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உண்மை ஊழியர்கள் செய்கிற ஜெபங்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். என்றாலும், சில சமயங்களில் அவர்கள் தூபம் காட்டியது யெகோவாவுக்கு அருவருப்பாய் இருந்தது. ஆம், இஸ்ரவேலர் ஆலயத்தில் தூபம் காட்டி, அதே சமயத்தில் விக்கிரகங்களுக்கும் தலைவணங்கியபோது யெகோவா அதை அருவருப்பாகக் கருதினார். (எசேக்கியேல் 8:10, 11) அவ்வாறே இன்றும், யெகோவாவைச் சேவிப்பதாகச் சொல்லிக்கொண்டு, அதே சமயத்தில் அவருடைய சட்டங்களுக்கு முரணான காரியங்களைச் செய்வோரின் ஜெபங்கள் நல்வாசனைமிக்கவையாய் இருப்பதற்குப் பதிலாக அவருக்கு அருவருப்பானவையாய் இருக்கும். (நீதிமொழிகள் 15:8) அப்படியானால், நம்முடைய ஜெபங்கள் கடவுளுக்கு நல்வாசனைமிக்கவையாய் இருப்பதற்கு, நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தொடர்ந்து சுத்தமுள்ளோராய் இருப்போமாக. தம்முடைய நீதியான வழிகளில் நடப்போரின் ஜெபங்கள் யெகோவாவின் மனதைக் குளிர்விக்கின்றன. (யோவான் 9:31) என்றாலும், பதில் அளிக்கப்பட வேண்டிய கேள்விகள் இன்னும் சில இருக்கின்றன. நாம் எப்படி ஜெபிக்க வேண்டும்? என்னென்ன காரியங்களுக்காக ஜெபிக்கலாம்? நம் ஜெபங்களுக்குக் கடவுள் எப்படிப் பதில் அளிக்கிறார்? இக்கேள்விகளுக்கும் இன்னும் பிற கேள்விகளுக்கும் அடுத்தக் கட்டுரையில் பதிலைக் காணலாம்.

[அடிக்குறிப்பு]

a காவற்கோபுரம், மே 15, 2001, பக்கம் 27-ஐக் காண்க.

நீங்கள் விளக்க முடியுமா?

• கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அபூரண மனிதர் எப்படி ஜெபம் செய்யலாம்?

• கோத்திரப் பிதாக்களைப் போல் நாம் எப்படி ஜெபிக்கலாம்?

• ஆரம்பகால கிறிஸ்தவர்கள் செய்த ஜெபங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

• நம்முடைய ஜெபங்கள் எப்போது கடவுளுக்கு நல்வாசனைமிக்க தூபம்போல் இருக்கும்?

[பக்கம் 23-ன் படம்]

கடவுள் ஏன் காயீனின் காணிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டார்?

[பக்கம் 24-ன் படம்]

‘நான் தூளும் சாம்பலுமாயிருக்கிறேன்’

[பக்கம் 25-ன் படம்]

“எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்”

[பக்கம் 26-ன் படம்]

உங்களுடைய ஜெபங்கள் யெகோவாவுக்கு நல்வாசனைமிக்க தூபம்போல் இருக்கின்றனவா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்