‘யூகாலுடைய’ முத்திரை
கல்தேயரின் ராஜாவான நேபுகாத்நேச்சார் பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில் எருசலேமைக் கைப்பற்றினார். அந்நகரத்தை எரித்தார், அதன் சுவர்களைத் தரைமட்டமாக்கினார். யூதாவை ஆண்ட சிதேக்கியா ராஜாவைக் கைதுசெய்து, குருடாக்கினார். அதோடு, ‘யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டிப்போட்டார்.’—எரேமியா 39:1-8.
பாபிலோனியர்களின் கைகளில் செத்து மடிந்த யூதாவின் பிரபுக்களில் அல்லது இளவரசர்களில் செலேமியாவின் குமாரனாகிய யூகால் என்பவனும் இருந்திருக்கலாம். பைபிளில் குறிப்பிடப்படும் இந்த நபரைப் பற்றிய புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதைக் குறித்து சிந்திப்பதற்கு முன், யூகாலையும் அவன் வாழ்ந்த காலத்தையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென பார்ப்போமா?
‘அவர்கள் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்’
யூதாவுக்கும் எருசலேமுக்கும் எதிராக நியாயத்தீர்ப்புச் செய்தியை அறிவிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். யூதாவின் ராஜாக்கள், இளவரசர்கள், ஆசாரியர்கள், ஜனங்கள் என எல்லாரும் அவருக்கு “விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்” என்று யெகோவா சொன்னார். “ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்றும் அவர் சொன்னார்.—எரேமியா 1:17-19.
அவ்வாறே, யூதாவின் தலைநகரான எருசலேமை பாபிலோனியர் முற்றுகை போட்டார்கள்; அப்போது, முற்றுகையை விலக்கிக்கொண்டு இந்த நகரத்தைவிட்டு நேபுகாத்நேச்சார் சென்றுவிடுவாரா என்பதை அறியவும், அப்படி நடக்கும்படி யெகோவாவிடம் எரேமியா விண்ணப்பிக்கவும் வேண்டி சிதேக்கியா ராஜா இரண்டு முறை அவரிடம் தூதுவர்களை அனுப்பினார். அந்தத் தூதுவர்களில் இந்த யூகாலும் ஒருவன். எரேமியா அறிவிக்கும்படி கடவுள் சொன்ன செய்தி இதுதான்: பாபிலோனியர்கள் அல்லது கல்தேயர்கள் இந்நகரத்தை அழிப்பார்கள்; எருசலேமிலேயே தங்கிவிடும் எவரும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பட்டயத்தாலும் இறந்துவிடுவார்கள்; ஆனால், கல்தேயர்களிடத்திற்குப் புறப்பட்டுப் போகிறவர்கள் பிழைப்பார்கள். எரேமியாவின் இந்த வார்த்தைகள் யூதாவின் பிரபுக்களை எந்தளவுக்குக் கோபத்தில் கொதித்தெழச் செய்திருக்கும்!—எரேமியா 21:1-10; 37:3-10; 38:1-3.
‘இந்த மனுஷன் [எரேமியா] கொல்லப்பட உத்தரவாக வேண்டும்; அதேனென்றால், யுத்த மனுஷர்களுடைய . . . கைகளைத் தளர்ந்துபோகப் பண்ணுகிறான்’ என்று சிதேக்கியாவைத் தூண்டுவித்த பிரபுக்களில் யூகாலும் ஒருவன். சேறுள்ள உளையில் எரேமியாவைத் தூக்கிப் போட்டவர்களுடன் இந்தப் பொல்லாத யூகாலும் இருந்தான். எனினும், பின்னர் எரேமியா காப்பாற்றப்பட்டார். (எரேமியா 37:15; 38:4-6) யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் எருசலேம் அழிக்கப்பட்டபோது எரேமியா தப்பிப்பிழைத்தார்; ஆனால், மலைபோல் யூகால் நம்பியிருந்த யூத ராஜ்யம் அழிக்கப்பட்டபோது அவனும் அழிந்துபோனான் என்பதில் சந்தேகமே இல்லை.
சுவாரஸ்யமான புதிய தகவல்
யூகாலைப் பற்றிய புதிய தகவல் எருசலேமில் 2005-ம் ஆண்டு கிடைத்தது. தாவீது ராஜாவின் அரண்மனையைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையோடு தொல்லியல் ஆய்வாளர்கள் ஓர் இடத்தைத் தோண்டிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு பெரிய கல் கட்டடத்தைக் கண்டுபிடித்தார்கள்; எரேமியாவின் காலத்தில் எருசலேமை பாபிலோனியர் கைப்பற்றியபோது அது அழிக்கப்பட்டிருக்க வேண்டுமென நம்பினார்கள்.
அது தாவீதின் அரண்மனைதானா இல்லையா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளைத் தொல்லியல் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுபிடித்தார்கள். அது, 1 செ.மீ. அகலமான களிமண் முத்திரையாகும்; பக்கம் 14-ல் உள்ள படத்தில் அதைக் காணலாம். தற்போது சிதைந்துபோன நிலையிலுள்ள ஓர் ஆவணத்திற்கு அது முத்திரையாகப் போடப்பட்டிருந்தது. இதில் பின்வரும் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன: “ஷாவியின் மகனான ஷெலெமியாஹுவின் மகனான யஹுகாலுடையது.” இந்த முத்திரை உண்மையில் எரேமியாவின் எதிரியும் செலேமியாவின் குமாரனுமான யூகாலுடையது.
இந்த எழுத்துக்களைப் புரிந்துகொண்டு அதற்கு விளக்கம் அளித்த தொல்லியல் ஆய்வாளரான ஏலட் மசார், இந்த யூகாலைக் குறித்து, சாப்பானின் குமாரனான கெமரியாவுக்கு அடுத்தபடியான “இரண்டாவது அரசவை மந்திரி” என்று எழுதுகிறார்; இந்த கெமரியாவின் பெயரும் தாவீதின் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் காணப்படுகிறது.a
கடவுளுடைய வார்த்தையின் மீதுள்ள விசுவாசம், கண்டெடுக்கப்படும் இத்தகைய கலைப்பொருள்களைச் சார்ந்ததாய் இல்லை; ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட தீர்க்கதரிசன நிறைவேற்றமே பைபிளை நம்புவதற்குப் பலமான ஆதாரத்தை அளிக்கிறது. எருசலேமின் அழிவைக் குறித்து எரேமியா திருத்தமாக முன்னறிவித்தார் என்பதைச் சரித்திர உண்மைகள் காட்டுகின்றன. எரேமியாவின் எதிரிகளுக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான முடிவு, நம் நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும்; எரேமியாவைப் போல் அதிக விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால், யெகோவா ‘நம்முடனே இருப்பதால்’ நம் எதிரிகள் ‘நம்மை மேற்கொள்ள மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும்.
[அடிக்குறிப்பு]
a கெமரியாவையும் சாப்பானையும் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, டிசம்பர் 15, 2002 தேதியிட்ட காவற்கோபுரம் பத்திரிகையில் பக்கங்கள் 19-22-ல் உள்ள “சாப்பானும் அவருடைய குடும்பத்தாரும் உங்களுக்கு பரிச்சயமானவர்களா?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 15-ன் படம்]
கடவுளுடைய செய்தியின் வலிமையைக் குறைக்கும்படியான வற்புறுத்தலுக்கு எரேமியா அடிபணியவில்லை
[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]
Gabi Laron/Institute of Archaeology/ Hebrew University ©Eilat Mazar