யூத சடங்குக் குளியல் —முழுக்காட்டுதலுக்கு முன்னோடியா?
முழுக்காட்டுபவராகிய யோவான் “மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தை [அதாவது, முழுக்காட்டுதலை] குறித்து” பிரசங்கம் செய்தார். இயேசுவும்கூட மக்களை சீஷராக்கி, முழுக்காட்டும்படி தம்மைப் பின்பற்றியவர்களிடம் கட்டளையிட்டார்.—மாற்கு 1:4; மத்தேயு 28:19.
கிறிஸ்தவ முழுக்காட்டுதலின்போது ஒரு நபர் தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழ வேண்டும் என பைபிள் சொல்கிறது. “இதற்கு ஒத்த சடங்குகள் அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, கலாச்சாரம், நாடு என்ற பாகுபாடில்லாமல் பல மதங்களில் காணப்படுகின்றன” என இயேசுவும் அவரது காலமும் என்ற ஆங்கில புத்தகம் அடித்துக் கூறுகிறது. அதுமட்டுமல்ல, “கிறிஸ்தவ முழுக்காட்டுதல் யூத மதத்திலிருந்து தோன்றிய பழக்கம்” எனவும் அப்புத்தகம் ஆணித்தரமாக கூறுகிறது. இந்தக் கூற்று நம்பகமானதா?
யூத சடங்குக் குளியல் தொட்டிகள்
எருசலேம் ஆலயப் பகுதிக்கு அருகே தோண்டிய புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், இதுபோன்று கிட்டத்தட்ட 100 குளியல் தொட்டிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை பொ.ச.மு. முதல் நூற்றாண்டுக்கும் பொ.ச. முதல் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்தவை. “விருந்தினர் பயன்படுத்திக்கொள்வதற்காக” அத்தகைய குளியல் தொட்டிகள் கட்டப்பட்டதாக பொ.ச. இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத ஜெபாலயக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. எருசலேமில் வசதியான குடும்பங்களும், ஆசாரியக் குடும்பங்களும் வசித்த பகுதியில் இதுபோன்ற மற்ற தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலுமே ஒரு சடங்குக் குளியல் தொட்டி இருந்தது.
அவை பாறையில் செவ்வக வடிவத்தில் வெட்டப்பட்ட தொட்டிகளாக இருந்தன, அல்லது நிலத்தில் குழி தோண்டி, செங்கல் அல்லது கற்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன. தண்ணீர் கசிவதைத் தடுப்பதற்காக அவற்றுக்குச் சாந்து பூசப்பட்டிருந்தது. பெரும்பாலான தொட்டிகள் 1.8 மீட்டருக்கு 2.7 மீட்டர் என்ற அளவில் இருந்தன. கால்வாய்கள் வழியாக மழைநீர் இந்தத் தொட்டிகளுக்குச் சென்றது. தொட்டிக்குள் குறைந்தபட்சம் 1.2 மீட்டர் ஆழத்திற்கு தண்ணீர் நிறைந்திருந்தது. இதனால் ஒருவர் லேசாகக் குனிந்தால் போதும், அவரால் தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழ முடிந்தது. சில சமயம், தொட்டிக்குள் செல்லும் படிகளை இரண்டாகப் பிரிக்க குட்டையான சுவர் கட்டப்பட்டிருந்தது. குளிக்கச் செல்லும் நபர் சுத்தமில்லாமல் இருப்பதால் ஒரு பக்கத்திலுள்ள படிகள் குளியல் தொட்டிக்குள் இறங்குவதற்காகவும், மறுபக்கத்திலுள்ள படிகள் தொட்டியிலிருந்து ஏறுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வாறு செய்வது, ஒருவர் தன்னை மீண்டும் அசுத்தமாக்கிக் கொள்ளாமல் தடுத்ததாகக் கருதப்பட்டது.
இந்தக் குளியல் தொட்டிகள் யூதர்களின் சடங்கு முறைப்படியான சுத்திகரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டன. இந்தச் சடங்கில் என்ன உட்பட்டிருந்தது?
நியாயப்பிரமாணமும் சடங்குக் குளியலும்
கடவுளுடைய மக்கள் ஆன்மீக ரீதியிலும், உடல் ரீதியிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாணம் வலியுறுத்தியது. பல்வேறு காரியங்கள் இஸ்ரவேலரைத் தீட்டுப்படுத்தின. அந்தச் சமயங்களில் குளித்து, துணிகளைத் துவைத்து அவர்கள் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டியிருந்தது.—லேவியராகமம் 11:28; 14:1-9; 15:1-31; உபாகமம் 23:10, 11.
யெகோவா தேவன் தூய்மையிலும் பரிசுத்தத்திலும் பூரணமானவர். ஆகவே, ஆசாரியர்களும் லேவியர்களும் அவரது பலிபீடத்தின் அருகில் வருவதற்கு முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.—யாத்திராகமம் 30:17-21.
பொ.ச. முதலாம் நூற்றாண்டிற்குள், லேவியரல்லாத மற்றவர்களும்கூட ஆசாரியர்களைப் போலவே தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டுமென்ற விதிமுறையை யூத மதத் தலைவர்கள் ஏற்படுத்தியதாக அறிஞர்கள் நம்புகிறார்கள். யூதத்துறவிகளும் பரிசேயர்களும் அடிக்கடி சடங்கு முறையில் தங்களைச் சுத்திகரித்துக்கொண்டார்கள். இயேசுவின் காலத்தைப் பற்றி ஒரு பத்திரிகை பின்வருமாறு கூறுகிறது: “ஆலயப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பும், பலியிடுவதற்கு முன்பும், ஆசாரியர் மூலம் செலுத்தப்பட்ட காணிக்கையின் ஒரு பங்கைப் பெறுவதற்கு முன்பும், அதுபோன்ற பிற சந்தர்ப்பங்களிலும் ஒரு யூதர் சடங்கு முறையில் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டியிருந்தது.” அப்படிச் சுத்திகரித்துக்கொள்வோர் தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழுந்திருக்க வேண்டியிருந்தது என டால்மூட் எழுத்துகள் கூறுகின்றன.
இத்தகைய சடங்குக் குளியலுக்கு அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுத்ததற்காக பரிசேயர்களை இயேசு கண்டித்தார். அவர்கள் “செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும்” சுத்திகரிப்பது உட்பட ‘பலவித ஸ்நானங்களை’ செய்தார்கள். பரிசேயர்கள் தங்கள் பாரம்பரியங்களைத் திணிப்பதற்காக, கடவுளுடைய சட்டங்களையே மீறியதாக இயேசு குறிப்பிட்டார். (எபிரெயர் 9:10; மாற்கு 7:1-9; லேவியராகமம் 11:32, 33; லூக்கா 11:38-42) ஆனாலும், ஒருவர் தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழ வேண்டுமென மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எங்குமே சொல்லப்படவில்லை.
யூதர்கள் செய்துவந்த சடங்குக் குளியல்தான் கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்கு முன்னோடியா? இல்லவே இல்லை!
சடங்குக் குளியலும் கிறிஸ்தவ முழுக்காட்டுதலும்
யூதர்கள் சடங்கு முறையிலான சுத்திகரிப்பை தாங்களாகவே செய்துகொண்டார்கள். ஆனால், யோவான் கொடுத்த முழுக்காட்டுதல் யூதர்களுடைய சடங்குக் குளியலில் இருந்து வேறுபட்டது. முழுக்காட்டுபவர் என்ற பெயரால் யோவான் அழைக்கப்பட்டது அவர் கொடுத்த முழுக்காட்டுதல் வித்தியாசமானது என்பதைக் காட்டுகிறது. ஆகவேதான் யூத மதத்தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, “நீர் . . . ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர்” என்று யோவானிடம் கேட்டார்கள்.—யோவான் 1:25.
ஒருவர் எத்தனை அடிக்கடி தீட்டுப்படுகிறாரோ, அத்தனை அடிக்கடி தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டுமென மோசேயின் நியாயப்பிரமாணம் தேவைப்படுத்தியது. ஆனால், யோவான் கொடுத்த முழுக்காட்டுதலோ, பிற்பாடு கிறிஸ்தவர்கள் கொடுத்த முழுக்காட்டுதலோ அப்படியிருக்கவில்லை. யோவான் கொடுத்த முழுக்காட்டுதல் மனந்திரும்புதலையும், முந்தைய வாழ்க்கைப் போக்கை விட்டு விலகுவதையும் அர்த்தப்படுத்தியது. கிறிஸ்தவ முழுக்காட்டுதல், ஒரு நபர் தன்னை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை அடையாளப்படுத்தியது. இந்த ஒப்புக்கொடுத்தல் ஒருமுறை மட்டுமே செய்யப்படுகிறது, அடிக்கடி அல்ல.
யூத ஆசாரியர்களுடைய வீடுகளிலும், எருசலேம் ஆலயத்திற்கு அருகிலிருந்த பொது குளியல் தொட்டிகளிலும் செய்யப்பட்ட சடங்குக் குளியல், பார்வைக்கு மட்டுமே கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்கு ஒத்திருந்தது. அவற்றுக்கான காரணங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டன. தி ஆங்கர் பைபிள் டிக்ஷ்னரி பின்வருமாறு குறிப்பிடுகிறது: “[முழுக்காட்டுபவரான] யோவான் தன் காலத்தில் செய்யப்பட்ட எந்தக் குறிப்பிட்ட முழுக்காட்டுதல் முறையையும் [அதாவது, யூத மதத்தின் முறையை] பின்பற்றவில்லை என்பதை அறிஞர்கள் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்.” கிறிஸ்தவ முழுக்காட்டுதலைப் பொருத்தவரையிலும் அதுவே உண்மை.
கிறிஸ்தவ முழுக்காட்டுதல், ‘நல்மனசாட்சிக்காக கடவுளிடம் செய்யும் வேண்டுகோளை’ அர்த்தப்படுத்துகிறது. (1 பேதுரு 3:21, NW) அதோடு, ஒரு நபர் தன்னை யெகோவாவுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து, இயேசுவின் சீஷராகச் சேவை செய்யப்போவதைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட ஒப்புக்கொடுத்தலுக்கு தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழுவது பொருத்தமான அடையாளமாக இருக்கிறது. தண்ணீருக்கடியில் மூழ்குவது ஒரு நபர் தன்னுடைய முந்தைய வாழ்க்கைப் போக்கிற்கு மரிப்பதைக் குறிக்கிறது. தண்ணீரை விட்டு வெளியே வருவது, கடவுளுடைய சித்தத்தைச் செய்ய உயிர்ப்பிக்கப்படுவதைக் குறிக்கிறது.
அவ்வாறு தமக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவோருக்கு யெகோவா நல்மனசாட்சியைத் தருகிறார். அதனால்தான், ‘ஞானஸ்நானம் . . . இரட்சிக்கிறது’ என்று கடவுளுடைய ஆவியால் தூண்டப்பட்ட அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். இதை யூத சடங்குக் குளியலால் தரவே முடியாது.