பரிசுத்த காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையில் பார்க்கிறீர்களா?
“ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், . . . சீர்கெட்டவனாகவும் [“பரிசுத்த காரியங்களை மதிக்கத் தவறுகிறவனாகவும்,” NW] இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.”—எபிரெயர் 12:15, 16.
1. இன்றைய உலகில் காணப்படும் எந்த மனப்பான்மையை யெகோவாவின் ஊழியர்கள் ஆதரிப்பதில்லை?
பொதுவாக, இன்றைய உலகில் பரிசுத்த காரியங்களுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. பிரெஞ்சு சமூகவியலாளர் எட்கர் மோரன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “கடவுள், இயற்கை, தாய்நாடு, சரித்திரம், நேர்மை போன்றவற்றைச் சார்ந்த நெறிமுறைகளை மக்கள் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். . . . எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை தாங்களாகவே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டனர்.” இது, “உலகத்தின் ஆவி” அல்லது ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆவியின்’ வெளிக்காட்டாகும். (1 கொரிந்தியர் 2:12; எபேசியர் 2:2) ஆனால், யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய உன்னத அரசதிகாரமே சரியானது என்று ஏற்றுக்கொள்பவர்கள் இத்தகைய ஆவியை, அதாவது மனப்பான்மையை ஆதரிப்பதில்லை. (ரோமர் 12:1, 2) மாறாக, யெகோவாவின் வணக்கத்தில் பரிசுத்த காரியங்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதை கடவுளுடைய ஊழியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் எவற்றையெல்லாம் பரிசுத்தமாக கருத வேண்டும்? கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் பரிசுத்தமாக கருத வேண்டிய ஐந்து காரியங்களைப் பற்றி இக்கட்டுரையில் சிந்திக்கலாம். நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்கள் எந்தளவு பரிசுத்தமானவை என்பதை அடுத்த கட்டுரையில் ஆராயலாம். முதலாவது, “பரிசுத்தம்” என்றால் என்ன?
2, 3. (அ) யெகோவாவின் பரிசுத்தத்தன்மையை பைபிள் எவ்வாறு வலியுறுத்துகிறது? (ஆ) கடவுளுடைய பெயரை நாம் பரிசுத்தமானதாகக் கருதுவதை எவ்வாறு காட்டுகிறோம்?
2 பைபிள் எழுதப்பட்ட எபிரெய மொழியில், “பரிசுத்தம்” என்ற வார்த்தை, விலகியிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. வணக்கத்தில், “பரிசுத்தம்” என்பது சாதாரண உபயோகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒன்றை, அதாவது புனிதமாகக் கருதப்படும் ஒன்றை குறிக்கிறது. யெகோவா முழுமையான விதத்தில் பரிசுத்தராயிருக்கிறார். அவர் “மகா பரிசுத்தர்” என்று அழைக்கப்படுகிறார். (நீதிமொழிகள் 9:10; 30:3, NW) பூர்வ இஸ்ரவேலில், பிரதான ஆசாரியரின் தலைப்பாகையில் மின்னிய தங்கத்தகட்டில் “பரிசுத்தம் யெகோவாவுக்கு உரியது” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. (யாத்திராகமம் 28:36, 37, NW) ‘யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்’ என்று அவருடைய சிங்காசனத்திற்கு மேலாக நிற்கும் பரலோக கேருபீன்களும் சேராபீன்களும் சொல்வதாக பைபிள் குறிப்பிடுகிறது. (ஏசாயா 6:2, 3; வெளிப்படுத்துதல் 4:6-8) யெகோவா பரிசுத்தத்திலும் சுத்தத்திலும் தூய்மையிலும் ஈடிணையற்றவர் என்பதை வலியுறுத்தவே இப்படி மூன்று முறை சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில், அவரே பரிசுத்தத்தின் ஊற்றுமூலர்.
3 யெகோவாவுடைய பெயர் புனிதமானது, அதாவது பரிசுத்தமானது. “மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது” என்று சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 99:3) “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தார். (மத்தேயு 6:9) அவருடைய பூமிக்குரிய தாயான மரியாள் பின்வருமாறு புகழ்ந்தார்: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.” (லூக்கா 1:46, 49) கடவுளுடைய ஊழியர்களாக இருப்பதால் நாம் அவருடைய பெயரை பரிசுத்தமானதாக கருதுகிறோம்; அவருடைய பரிசுத்த பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிற எதையும் செய்யாதிருக்கிறோம். கூடுதலாக, யெகோவா எவற்றை பரிசுத்தமாக கருதுகிறாரோ அவற்றை நாமும் பரிசுத்தமாக கருதுகிறோம்.—ஆமோஸ் 5:14, 15.
நாம் ஏன் இயேசுவுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறோம்
4. பைபிள் ஏன் இயேசுவை “பரிசுத்தர்” என்று சொல்கிறது?
4 பரிசுத்தமுள்ள கடவுளான யெகோவாவின் “ஒரேபேறான” குமாரனான இயேசு, பரிசுத்தமானவராக படைக்கப்பட்டார். (யோவான் 1:14; கொலோசெயர் 1:15; எபிரெயர் 1:1-3) அதனால்தான், அவர் “கடவுளுடைய பரிசுத்தர்” என்று அழைக்கப்படுகிறார். (யோவான் 6:69, NW) அவருடைய உயிர் பரலோகத்திலிருந்து பூமிக்கு மாற்றப்பட்டபோதும் அவருடைய பரிசுத்தத்தன்மை பாதுகாக்கப்பட்டது; ஏனெனில், பரிசுத்த ஆவியின் வல்லமையாலேயே இயேசுவை மரியாள் பெற்றெடுத்தார். “பரிசுத்த ஆவி உன்மேல் வரும் . . . உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்று மரியாளிடம் ஒரு தேவதூதர் சொல்லியிருந்தார். (லூக்கா 1:35) எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் யெகோவாவிடம் ஜெபித்தபோது, கடவுளுடைய குமாரனைப் பற்றி சொல்கையில் “உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசு” என்று இருமுறை குறிப்பிட்டார்கள்.—அப்போஸ்தலர் 4:28, 30.
5. பூமியில் என்ன பரிசுத்தமான பணியை இயேசு நிறைவேற்றினார், அவருடைய இரத்தம் ஏன் விலையேறப்பெற்றது?
5 இயேசு பூமியில் இருந்தபோது ஒரு பரிசுத்தமான பணியை செய்துமுடிக்க வேண்டியிருந்தது. அதற்காக, பொ.ச. 29-ல் அவர் முழுக்காட்டப்பட்டு, யெகோவாவின் பெரிய ஆன்மீக ஆலயத்தின் பிரதான ஆசாரியராக அபிஷேகம் செய்யப்பட்டார். (லூக்கா 3:21, 22; எபிரெயர் 7:26; 8:1, 2) அதோடு, அவர் தன்னையே பலியாக அளிக்க வேண்டியிருந்தது. அவர் சிந்தும் இரத்தம் பாவமுள்ள மனிதர்களை விடுவிப்பதற்கான மீட்கும்பொருளை அளிக்கவிருந்தது. (மத்தேயு 20:28; எபிரெயர் 9:14) ஆகவே, நாம் இயேசுவின் இரத்தத்தை பரிசுத்தமானதாக, “விலையேறப்பெற்ற” ஒன்றாக கருதுகிறோம்.—1 பேதுரு 1:19.
6. கிறிஸ்து இயேசுவை நாம் எப்படிக் கருதுகிறோம், ஏன்?
6 அரசரும் பிரதான ஆசாரியருமான கிறிஸ்து இயேசுவின்மீது உண்மை கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த மரியாதையை, பின்வரும் வார்த்தைகள் மூலம் பேதுரு விவரித்தார்: “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக [அவருடைய மகனை] உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:9-11) நம்முடைய தலைவரும், ஆட்சிசெய்யும் அரசரும், கிறிஸ்தவ சபையின் தலைவருமான கிறிஸ்து இயேசுவுக்கு சந்தோஷமாக கீழ்ப்படிந்து அடங்கியிருப்பதன் மூலம், யெகோவா பரிசுத்தமாக கருதுபவற்றை நாமும் பரிசுத்தமாக கருதுகிறோம் என்பதை வெளிக்காட்டுகிறோம்.—மத்தேயு 23:10; கொலோசெயர் 1:18.
7. கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து அடங்கியிருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
7 கிறிஸ்து வழிநடத்திக்கொண்டிருக்கும் வேலையை முன்நின்று செய்வதற்காக அவர் யாரை பயன்படுத்துகிறாரோ அவர்களுக்கு மரியாதை காட்டும்போது, நாம் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து அடங்கியிருப்பதை வெளிக்காட்டுகிறோம். ஆளும் குழுவில் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டோருடைய பொறுப்புகளை பரிசுத்தமானவையாகக் கருத வேண்டும்; அதோடு, அவர்களால் நியமிக்கப்பட்டு, கிளை அலுவலகங்களிலும், மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும், சபைகளிலும் சேவை செய்யும் கண்காணிகளின் பொறுப்புகளையும் பரிசுத்தமானவையாகக் கருத வேண்டும். பொறுப்பிலுள்ள இத்தகைய சகோதரர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த மரியாதையைக் காட்டி அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருக்க வேண்டும்.—எபிரெயர் 13:7, 17.
பரிசுத்த ஜனம்
8, 9. (அ) எவ்விதத்தில் இஸ்ரவேலர் பரிசுத்த ஜனமாக இருந்தார்கள்? (ஆ) பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தை இஸ்ரவேலருக்கு யெகோவா எப்படி வலியுறுத்தினார்?
8 இஸ்ரவேலருடன் யெகோவா ஓர் உடன்படிக்கை செய்தார். இந்தப் பந்தம் அந்தப் புதிய தேசத்திற்கு விசேஷ அந்தஸ்தைக் கொடுத்தது. அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டார்கள், அதாவது பிரித்துவைக்கப்பட்டார்கள். யெகோவாவே பின்வருமாறு அவர்களிடம் கூறினார்: “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.”—லேவியராகமம் 19:2; 20:26.
9 இஸ்ரவேல் தேசம் உருவானபோதே, பரிசுத்தமாயிருப்பதன் முக்கியத்துவத்தை யெகோவா அவர்களிடம் வலியுறுத்தினார். பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்ட சீனாய் மலையை தொடவும் கூடாது என்றும் மீறினால் மரண தண்டனை என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது. அந்த மலை அப்போது ஒருவிதத்தில் பரிசுத்தமாகக் கருதப்பட்டது. (யாத்திராகமம் 19:12, 23) ஆசாரிய பணி, ஆசரிப்புக் கூடாரம், அதன் தட்டுமுட்டு சாமான்கள் ஆகியவையும்கூட பரிசுத்தமானவையாகக் கருதப்பட்டன. (யாத்திராகமம் 30:26-30) கிறிஸ்தவ சபையில் நிலைமை எவ்வாறு இருக்கிறது?
கிறிஸ்தவ சபை
10, 11. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை பரிசுத்தமானது என்று ஏன் சொல்லலாம், இது ‘வேறே ஆடுகள்’ மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
10 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலான சபை யெகோவாவின் பார்வையில் பரிசுத்தமாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 1:2) அந்தத் தொகுதி, யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயமாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு பரிசுத்த ஆலயத்திற்கு அது ஒப்பிடப்படுகிறது. பூமியில் எந்தவொரு காலப்பகுதியில் வாழ்ந்துவந்திருக்கிற அபிஷேகம் செய்யப்பட்டோரின் தொகுதியும் அந்த ஆலயத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக யெகோவா அந்த ஆலயத்தில் தங்குகிறார். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “அவர்மேல் [இயேசுமேல்] மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் [யெகோவாவுக்குள்] பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.”—எபேசியர் 2:21, 22; 1 பேதுரு 2:5, 9.
11 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பவுல் கூடுதலாக இவ்வாறு எழுதினார்: “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? . . . தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.” (1 கொரிந்தியர் 3:16, 17) யெகோவா, தம்முடைய ஆவியின் மூலமாக, அபிஷேகம் செய்யப்பட்டோரின் மத்தியில் “வாசம்பண்ணி,” ‘அவர்களுக்குள்ளே உலாவுகிறார்.’ (2 கொரிந்தியர் 6:16) தம்முடைய உண்மையுள்ள ‘அடிமையை’ தொடர்ந்து வழிநடத்துகிறார். (மத்தேயு 24:45-47, NW) “ஆலய” வகுப்பாரோடு சேர்ந்து வேலை செய்யும் மதிப்புமிக்க வாய்ப்பை ‘வேறே ஆடுகள்’ பெரிதும் போற்றுகிறார்கள்.—யோவான் 10:16; மத்தேயு 25:37-40.
நம் கிறிஸ்தவ வாழ்வில் பரிசுத்தமான காரியங்கள்
12. நம் வாழ்க்கையில் எவையெல்லாம் பரிசுத்தமானவை, ஏன்?
12 கிறிஸ்தவ சபையின் அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்கள், அவர்களுடைய தோழர்கள் ஆகியோரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட அநேக காரியங்கள் பரிசுத்தமானவையாக கருதப்படுவதில் ஆச்சரியமில்லை. யெகோவாவுடன் நமக்குள்ள உறவு பரிசுத்தமானது. (1 நாளாகமம் 28:9; சங்கீதம் 36:7) அது நமக்கு அந்தளவு விலையேறப்பெற்றதாக இருப்பதால், நமக்கும் யெகோவாவுக்கும் இடையே உள்ள உறவை பலவீனப்படுத்துவதற்கு எதையும் அல்லது எவரையும் நாம் அனுமதிக்கக்கூடாது. (2 நாளாகமம் 15:2; யாக்கோபு 4:7, 8) யெகோவாவுடன் ஒரு நெருக்கமான உறவை தொடர்ந்து வைத்துக்கொள்வதில் ஜெபம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதை தீர்க்கதரிசியாகிய தானியேல் மிகப் பரிசுத்தமானதாகக் கருதினார்; அதனால்தான் உயிருக்கு ஆபத்து வந்தபோதும், ஜெபம் செய்யும் வழக்கத்தை அவர் விட்டுவிடவில்லை. (தானியேல் 6:7-11) “பரிசுத்தவான்களுடைய” அதாவது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடைய ‘ஜெபங்கள்’ ஆலய வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட தூபவர்க்கத்திற்கு ஒப்பிடப்படுகின்றன. (வெளிப்படுத்துதல் 5:8; 8:3, 4; லேவியராகமம் 16:12, 13) இந்த ஒப்புமை ஜெபத்தின் பரிசுத்தத்தன்மையை வலியுறுத்துகிறது. சர்வலோக பேரரசருடன் பேசுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஜெபத்தை நாம் பரிசுத்தமாய் கருதுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!
13. எந்தச் சக்தி பரிசுத்தமானது, அது நம் வாழ்வில் செயல்பட நாம் எப்படி அனுமதிக்க வேண்டும்?
13 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் வாழ்வில் ஒரு சக்தி செயல்படுகிறது. அதை அவர்கள் நிச்சயமாகவே பரிசுத்தமானதாகக் கருதுகிறார்கள். அதுதான், பரிசுத்த ஆவி. அது யெகோவாவின் செயல் நடப்பிக்கும் சக்தி. பரிசுத்தமான கடவுளின் சித்தத்திற்கு இசைவாக அது எப்போதும் செயல்படுவதால், அது சரியாகவே “பரிசுத்த ஆவி” அல்லது “பரிசுத்தமுள்ள ஆவி” என்று அழைக்கப்படுகிறது. (யோவான் 14:26; ரோமர் 1:5) நற்செய்தியை அறிவிப்பதற்கு தம்முடைய ஊழியர்களை பரிசுத்த ஆவியின் மூலமாக யெகோவா பலப்படுத்துகிறார். (அப்போஸ்தலர் 1:8; 4:31) அரசராக அவருக்கு ‘கீழ்ப்படிகிறவர்களுக்கும்’ மாம்ச இச்சைகளின்படி நடக்காமல் ‘ஆவிக்கேற்றபடி நடப்பவர்களுக்கும்’ யெகோவா தம் பரிசுத்த ஆவியைத் தருகிறார். (அப்போஸ்தலர் 5:32; கலாத்தியர் 5:16, 25; ரோமர் 8:5-8) சிறந்த பண்புகளான “ஆவியின் கனி”யையும் ‘பரிசுத்த நடக்கையையும் தேவபக்தியான’ செயல்களையும் வெளிக்காட்ட இந்த வலிமைவாய்ந்த சக்தி கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது. (கலாத்தியர் 5:22, 23; 2 பேதுரு 3:11) பரிசுத்த ஆவியை புனிதமானதாக நாம் கருதினால், அதை துக்கப்படுத்தும் எதையும், அல்லது அது நம்முடைய வாழ்வில் செயல்படுவதை தடுக்கும் எதையும் நாம் செய்யமாட்டோம்.—எபேசியர் 4:30.
14. என்ன பொறுப்பை அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரிசுத்தமானதாய் கருதுகிறார்கள், இதில் வேறே ஆடுகள் எப்படி பங்குகொள்கிறார்கள்?
14 பரிசுத்தமான கடவுளான யெகோவாவின் பெயரை தாங்கியவர்களாகவும், அவருடைய சாட்சிகளாகவும் இருப்பதற்கு கிடைத்த பாக்கியத்தை நாம் பரிசுத்தமானதாகக் கருதுகிறோம். (ஏசாயா 43:10-12, 15) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், “புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி” யெகோவாவால் தகுதி பெற்றிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 3:5, 6) அதோடு, ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை’ பிரசங்கித்து, ‘சகல ஜாதிகளையும் [தேசத்தாரையும்] சீஷராக்கும்’ பொறுப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:14; 28:19, 20) இப்பொறுப்பை அவர்கள் உண்மையோடு நிறைவேற்றி வருகிறார்கள். நல்மனமுள்ள லட்சக்கணக்கானோர் அதை மனதார ஏற்றுக்கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்டோரிடம் அடையாள அர்த்தத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.” (சகரியா 8:23) ‘தேவனுடைய பணிவிடைக்காரரான’ அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு ஆன்மீக ரீதியில் இவர்கள் “பண்ணையாட்களும்” ‘திராட்சத் தோட்டக்காரருமாக’ சந்தோஷத்துடன் சேவை செய்கிறார்கள். இதன்மூலம், அபிஷேகம் செய்யப்பட்டோர் உலகளவில் தங்கள் ஊழியத்தை நிறைவேற்ற வேறே ஆடுகள் பெரிதும் உதவுகிறார்கள்.—ஏசாயா 61:5, 6.
15. எந்த வேலையை அப்போஸ்தலன் பவுல் பரிசுத்தமானதாக கருதினார், நாமும் ஏன் அவ்வாறே கருதுகிறோம்?
15 உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய பிரசங்க ஊழியத்தை பரிசுத்தமானதாக அல்லது புனிதமானதாகக் கருதினார். ‘புறஜாதிகளுக்கு இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாக’ “கடவுளுடைய நற்செய்தியின் பரிசுத்த ஊழியத்தில் ஈடுபட்டு” வருவதாக தன்னைக்குறித்து அவர் கூறினார். (ரோமர் 15:16, NW) கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், பவுல் தன் ஊழியத்தை ஒரு ‘பொக்கிஷம்’ எனக் குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 4:1, 7) நம்முடைய பிரசங்க ஊழியத்தின் மூலமாக நாம் “கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளை” தெரியப்படுத்துகிறோம். (1 பேதுரு 4:11, NW) ஆகவே, நாம் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, வேறே ஆடுகளாக இருந்தாலும் சரி, சாட்சி கொடுக்கும் வேலையில் பங்குபெறுவதை பரிசுத்த பாக்கியமாக கருதுகிறோம்.
“பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்”
16. ‘பரிசுத்த காரியங்களை மதிக்காதவர்களாக’ ஆகிவிடாதிருக்க எது நமக்கு உதவும்?
16 ‘சீர்கெட்டவர்களாக, [“பரிசுத்த காரியங்களை மதிக்கத் தவறுகிறவர்களாக,” NW]’ ஆகிவிடாதிருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தன் சக கிறிஸ்தவர்களை எச்சரித்தார். அதற்குப் பதிலாக, “பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க” நாடவும், “யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும் . . . எச்சரிக்கையாயிருங்கள்” என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார். (எபிரெயர் 12:14-16) “கசப்பான வேர்” என்ற பதம், கிறிஸ்தவ சபையில் காரியங்கள் நடைபெறும் விதத்தை குறைகூறும் சிலரையே குறிக்கிறது. உதாரணமாக, திருமணத்தின் பரிசுத்தத்தன்மையைக் குறித்த யெகோவாவின் நோக்குநிலையையோ, ஒழுக்கரீதியில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையோ அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். (1 தெசலோனிக்கேயர் 4:3-7; எபிரெயர் 13:4) ‘சத்தியத்தை விட்டு விலகிய’ ஆட்கள் ‘பரிசுத்தமானதை கெடுக்கும் கட்டுக்கதைகளை,’ பரப்புகையில் அந்த விசுவாசதுரோக கருத்துக்களை கலந்துபேசுவதில் அவர்கள் ஈடுபடலாம்.—2 தீமோத்தேயு 2:16-18, NW.
17. பரிசுத்தமாயிருப்பதில் யெகோவாவின் நோக்குநிலையைக் கொண்டிருக்க அபிஷேகம் செய்யப்பட்டோர் ஏன் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது?
17 பவுல் தன்னுடைய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு பின்வருமாறு எழுதினார்: “பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) “பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய” அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பரிசுத்தமாயிருப்பதில் யெகோவாவின் நோக்குநிலையைக் கொண்டிருக்க தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும் என்பதையே இவ்வார்த்தைகள் காட்டுகின்றன. (எபிரெயர் 3:1) அதேபோல பேதுருவும், ஆவியால் பிறப்பிக்கப்பட்ட தன் சகோதரர்களுக்கு பின்வருமாறு அறிவுரை கூறினார்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.”—1 பேதுரு 1:14, 15.
18, 19. (அ) யெகோவா பரிசுத்தமாக கருதுபவற்றைத் தாங்களும் பரிசுத்தமாகக் கருதுவதை ‘திரள் கூட்டத்தார்’ எப்படிக் காட்டுகிறார்கள்? (ஆ) நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் முக்கிய இடத்தை பிடிக்கும் எந்தப் பரிசுத்தமான அம்சத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்?
18 ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்கும் ‘திரள் கூட்டத்தின்’ அங்கத்தினரைப் பற்றி என்ன சொல்லலாம்? யெகோவா பரிசுத்தமானதாக கருதுபவற்றைத் தாங்களும் பரிசுத்தமாகக் கருதுவதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அவர்கள் யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களில் அவருக்கு “பரிசுத்த சேவை” செய்வதாக வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அவர்கள் கிறிஸ்துவின் கிரயபலியில் விசுவாசம் வைத்து, அடையாள அர்த்தத்தில் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 14, 15) இது யெகோவாவுக்கு முன் ஒரு சுத்தமான நிலைநிற்கையை கொண்டிருக்க அவர்களுக்கு உதவுகிறது. “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்த” வேண்டிய பொறுப்பையும் அவர்களுக்குத் தருகிறது.
19 யெகோவாவை வணங்குவதற்கும் அவருடைய வார்த்தையைப் படிப்பதற்கும் தொடர்ந்து கூடிவருவது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. தம் மக்கள் ஒன்றுகூடிவருவதற்கான ஏற்பாட்டை யெகோவா பரிசுத்தமானதாக கருதுகிறார். இந்த முக்கிய அம்சத்தை யெகோவா எப்படி பரிசுத்தமாக கருதுகிறாரோ, அப்படியே நாமும் கருதுவது ஏன் அவசியம்? அதை எப்படிக் காட்டலாம்? இக்கேள்விகளுக்கு பதிலை அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
மறுபார்வை
• இன்றைய உலகில் காணப்படும் எந்த மனப்பான்மையை யெகோவாவின் ஊழியர்கள் தவிர்க்கிறார்கள்?
• யெகோவா ஏன் பரிசுத்தமான எல்லாவற்றுக்கும் ஊற்றுமூலராக இருக்கிறார்?
• கிறிஸ்துவின் பரிசுத்தத்தன்மையை நாம் மதிக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டுகிறோம்?
• நம் வாழ்வில் எவற்றையெல்லாம் நாம் பரிசுத்தமாக கருத வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
ஆசாரிய பணி, ஆசரிப்புக் கூடாரம், அதன் தட்டுமுட்டு சாமான்கள் ஆகியவை பூர்வ இஸ்ரவேலில் பரிசுத்தமானவையாய் கருதப்பட்டன
[பக்கம் 24-ன் படம்]
பூமியில் உள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆலயமாக இருக்கிறார்கள்
[பக்கம் 25-ன் படங்கள்]
ஜெபமும், பிரசங்க ஊழியமும் பரிசுத்த பரிசுகளாக இருக்கின்றன