ஏன் நன்மை செய்ய வேண்டும்?
அறிஞர் ஒருவர் ஒரு சமயம் இவ்வாறு குறிப்பிட்டார்: “நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.” தான் விரும்பியபடி நன்மையைச் செய்வது அவருக்கு ஏன் கடினமாக இருந்தது? அவரே காரணத்தைச் சொல்கிறார்: “நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.”—ரோமர் 7:18, 19, 21-23, பொது மொழிபெயர்ப்பு.
அப்போஸ்தலன் பவுல் சொன்ன இந்த வார்த்தைகள் சுமார் 2,000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை. நன்மை செய்வது அபூரண மனிதருக்கு ஏன் கடினமாயிருக்கிறது என்பதை இவை விளக்குகின்றன. முக்கியமாக, கஷ்டமான சூழ்நிலைகளில் சரியான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்குத் தார்மீக பலம் வேண்டும். ஆக, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: என்ன மிக முக்கிய காரணத்திற்காக நன்மை செய்ய வேண்டும்?
ஒழுக்க சீலர் ஒருவரின் முடிவைப் பற்றி அதாவது எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். சங்கீதம் 37:37, 38-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.” நீதிமொழிகள் 2:21, 22 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”
பைபிளிலுள்ள இந்த வாக்குறுதிகளும் பிற வாக்குறுதிகளும் கடவுளுக்குப் பிரியமான விதத்தில் வாழ்வதற்கான தூண்டுதலை நமக்கு அளித்தாலும், அப்படி வாழ்வதற்கு அவை அடிப்படை காரணம் அல்ல. அதற்கான அடிப்படை காரணம் ஒரு விவாதத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது; அதில் புத்திக்கூர்மையுள்ள எல்லா படைப்புகளும் உட்பட்டுள்ளன. அந்த விவாதம் என்ன, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.