பிறனிடத்தில் அன்புகூருதல்—அர்த்தமென்ன?
“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”—மத்தேயு 22:39.
1. நாம் கடவுளிடத்தில் அன்புகூருவதை எப்படிக் காட்டுகிறோம்?
யெகோவா தம்மை வணங்குவோரிடத்தில் எதை எதிர்பார்க்கிறார்? கருத்து நிறைந்த, எளிய வார்த்தைகளில் ரத்தின சுருக்கமாக இதற்கு இயேசு பதில் அளித்தார். யெகோவாவிடத்தில் நம் முழு இருதயத்தோடும் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும் அன்புகூருவதே பிரதான கட்டளை என இயேசு சொன்னார். (மத்தேயு 22:37; மாற்கு 12:30) கடவுளிடம் அன்புகூருவதில், நம்மிடம் அவர் காட்டிய அன்புக்குக் கைமாறாக அவருக்குக் கீழ்ப்படிவதும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதும் உட்பட்டிருப்பதை முந்தின கட்டுரையில் பார்த்தோம். கடவுளிடத்தில் அன்புகூருவோருக்கு அவருடைய சித்தத்தைச் செய்வது பாரமானதாய் இருப்பதில்லை; அது அவர்களுக்கு மகிழ்ச்சியையே தருகிறது.—சங்கீதம் 40:8; 1 யோவான் 5:2, 3.
2, 3. பிறரை நேசிப்பதற்கான கட்டளைக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும், என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2 இரண்டாவது முக்கிய கட்டளை முதல் கட்டளையோடு சம்பந்தப்பட்டிருப்பதாக இயேசு சொன்னார். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்பதே அந்தக் கட்டளை. (மத்தேயு 22:39) அதற்கு நாம் இப்போது கவனம் செலுத்தப் போகிறோம்; அப்படிக் கவனம் செலுத்த நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. நாம் வாழும் இக்காலத்தில் ஜனங்கள் சுயநல அன்பைக் காட்டுகிறார்கள், அன்புக்கு மாறுபட்ட அர்த்தம் கற்பிக்கிறார்கள். தேவ ஆவியின் ஏவுதலால் ‘கடைசி நாட்களை’ பற்றி விவரிக்கையில், ஜனங்கள் ஒருவரையொருவர் நேசிப்பதற்குப் பதிலாக தங்களையும் பணத்தையும் சுகபோகத்தையும் நேசிப்பார்கள் என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். அநேகர், ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருப்பார்கள், அதாவது மற்றொரு பைபிள் மொழிபெயர்ப்பு குறிப்பிடுகிறபடி, ‘குடும்பத்தினர்மீது இயல்பான பாசம் இல்லாதிருப்பார்கள்.’ (2 தீமோத்தேயு 3:1-4) இயேசு கிறிஸ்து இவ்வாறு முன்னறிவித்தார்: “அநேகர் . . . ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். . . . அநேகருடைய அன்பு தணிந்துபோம்.”—மத்தேயு 24:10, 12.
3 ஆனால், எல்லாருடைய அன்பும் தணிந்துபோகும் என இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். யெகோவா எதிர்பார்க்கிற, அவருக்கு உரியதான அன்பைக் காட்டுகிறவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள், இருப்பார்கள். யெகோவாவை உண்மையிலேயே நேசிக்கிறவர்கள் மற்றவர்களை அவர் பார்க்கிற விதமாகவே பார்க்க முயலுவார்கள். அப்படியானால், நாம் அன்புகூர வேண்டிய பிறர் யார்? நாம் பிறரிடத்தில் எப்படி அன்புகாட்ட வேண்டும்? இந்த முக்கிய கேள்விகளுக்குப் பதிலைக் காண வேத வசனங்கள் நமக்கு உதவும்.
எனக்குப் பிறன் யார்?
4. லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தின்படி யூதர்கள் யாரிடம் அன்புகாட்ட வேண்டியிருந்தது?
4 ஒருவர் தன்னைப்போல பிறரை நேசிக்க வேண்டுமென்ற இரண்டாவது முக்கிய கட்டளையைப் பற்றி பரிசேயனிடம் சொல்கையில், இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சட்டத்தையே இயேசு குறிப்பிட்டார். இது லேவியராகமம் 19:18-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சக இஸ்ரவேலரைத் தவிர மற்றவர்களையும் தங்கள் சகமனிதராகக் கருதும்படி யூதர்களிடம் சொல்லப்பட்டதும்கூட அதே அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 34-ஆம் வசனம் இவ்வாறு சொல்கிறது: “உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தீர்களே.” ஆகவே, யூதரல்லாதவர்களிடமும், முக்கியமாக யூத மதத்திற்கு மாறியவர்களிடமும் அவர்கள் அன்பாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது.
5. பிறரை நேசிக்க வேண்டுமென்ற கட்டளையை யூதர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்?
5 என்றாலும், இயேசுவின் காலத்திலிருந்த யூத மதத் தலைவர்கள் வித்தியாசமான கருத்துடையவர்களாய் இருந்தார்கள். ‘நண்பன்,’ ‘பிறன்’ என்ற வார்த்தைகள் யூதர்களுக்கு மட்டுமே பொருந்துமென அந்த மதத் தலைவர்களில் சிலர் போதித்தார்கள். யூதரல்லாதவர்களை வெறுக்க வேண்டுமெனவும் போதித்தார்கள். கடவுள் பக்தியுள்ளவர்கள் கடவுள் பக்தியில்லாதவர்களை இழிவாகக் கருத வேண்டுமென அவர்கள் நியாய விவாதம் செய்தார்கள். “அத்தகைய சூழலில் பகைமைக்குப் பஞ்சமே இருக்கவில்லை. பகைமை தழைத்தது” என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது.
6. பிறரிடம் அன்பு காட்டுவதைப் பற்றி பேசுகையில் என்ன இரண்டு விஷயங்களை இயேசு குறிப்பிட்டார்?
6 தம்முடைய மலைப்பிரசங்கத்தில் யாரிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டுமென்ற விஷயத்தை இயேசு குறிப்பிட்டு, அதைத் தெளிவுபடுத்தினார். “உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:43-45) இங்கு இயேசு இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டார். முதலாவது, நல்லோருக்கும் தீயோருக்கும் யெகோவா தயவும் தயாளமும் காட்டுகிறார். இரண்டாவது, நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
7. நல்ல சமாரியன் கதையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
7 மற்றொரு சந்தர்ப்பத்தின்போது, நியாயப்பிரமாணத்தில் புலமைப் பெற்றிருந்த ஒரு யூதன் இயேசுவிடம் வந்து, “எனக்குப் பிறன் யார்” என்று கேட்டார். அதை விளக்க இயேசு ஒரு கதை சொன்னார். திருடர்களால் தாக்கப்பட்டு, உடைமைகளெல்லாம் பறிபோன நிலையில் கிடந்த யூதனுக்கு ஒரு சமாரியன் உதவியதைப் பற்றியது இக்கதை. பொதுவாக, சமாரியர்களை யூதர்கள் இகழ்ந்தபோதிலும், இந்தச் சமாரியன் அந்த யூதனுடைய காயங்களுக்குக் கட்டுப்போட்டு அவன் குணமடைவதற்காக பத்திரமாய் ஒரு சத்திரத்தில் கொண்டுசேர்த்தார். இக்கதை புகட்டும் பாடம் என்ன? பிறர் மீதுள்ள நம் அன்பை நம்முடைய இனத்தாராக, தேசத்தாராக, மதத்தாராக இல்லாதவர்களிடத்திலும் நாம் காட்ட வேண்டும்.—லூக்கா 10:25, 29, 30, 33-37.
பிறரை நேசிப்பதன் அர்த்தம்
8. அன்புகாட்ட வேண்டிய விதத்தைப் பற்றி லேவியராகமம் 19-ஆம் அதிகாரம் என்ன சொல்கிறது?
8 கடவுள் மீதுள்ள அன்பைப் போலவே, பிறர் மீதுள்ள அன்பும்கூட வெறும் ஓர் உணர்ச்சி அல்ல, அது செயலில் காட்டப்படுகிறது. இதற்கு, லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்திலுள்ள கட்டளையின் சூழமைவைக் கவனிப்பது பயனுள்ளது; கடவுளுடைய மக்கள் தங்களைப்போல பிறரையும் நேசிக்கும்படி அதில் கூறப்பட்டுள்ளது. அறுவடையில் மீதியானதை ஏழைகளுக்கும் அந்நியர்களுக்கும் விட்டுவிடும்படி இஸ்ரவேலருக்குக் கட்டளையிடப்பட்டிருந்ததை அதில் நாம் வாசிக்கிறோம். திருடுதல், ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் ஆகியவற்றிற்கு அங்கு இடமிருக்கவில்லை. நியாய விசாரணையில் இஸ்ரவேலர் பாரபட்சம் காட்டக் கூடாது. தேவைப்படுகையில் கடிந்துகொள்ள வேண்டியிருந்தபோதிலும், “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக” என திட்டவட்டமாக அவர்களிடம் சொல்லப்பட்டது. இவையும் பிற கட்டளைகளும் பின்வரும் வார்த்தைகளில் தொகுத்தளிக்கப்பட்டது: “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக.”—லேவியராகமம் 19:9-11, 15, 17, 18.
9. பிற தேசத்தாரிடமிருந்து விலகியிருக்கும்படி இஸ்ரவேலருக்கு யெகோவா ஏன் கட்டளையிட்டார்?
9 இஸ்ரவேலர் பிறரிடத்தில் அன்புகாட்டுவது அவசியமாய் இருந்தபோதிலும், பொய்க் கடவுட்களை வணங்கியோரிடமிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டியிருந்தது. கெட்ட சகவாசத்தால் வரும் ஆபத்துகளையும் தீய விளைவுகளையும் பற்றி யெகோவா எச்சரித்தார். உதாரணமாக, இஸ்ரவேலர் துரத்திவிட வேண்டியிருந்த தேசத்தாரைக் குறித்து யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: ‘அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூளும்.’—உபாகமம் 7:3, 4.
10. நாம் எதைத் தவிர்ப்பது அவசியம்?
10 அவ்வாறே, கிறிஸ்தவர்களும் தங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்த வாய்ப்புள்ளவர்களோடு நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:33) கிறிஸ்தவ சபையின் பாகமல்லாத “அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்ற அறிவுரை நமக்குக் கொடுக்கப்படுகிறது. (2 கொரிந்தியர் 6:14) மேலுமாக, ‘கர்த்தருக்குட்பட்டவரை’ மட்டுமே மணம்செய்யும்படி கிறிஸ்தவர்களான நமக்கு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 7:39) என்றாலும், யெகோவா மீதுள்ள நம் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் ஒருபோதும் ஏளனம் செய்யக்கூடாது. ஏனெனில், பாவிகளுக்காக கிறிஸ்து மரித்திருக்கிறார், அதோடு முன்பு தீய காரியங்களைச் செய்து வந்த அநேகர் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு கடவுளோடு ஒப்புரவாகியிருக்கிறார்கள்.—ரோமர் 5:8; 1 கொரிந்தியர் 6:9-11.
11. யெகோவாவை வணங்காதவர்களிடத்தில் அன்பு காட்டுவதற்குச் சிறந்த வழி எது, ஏன்?
11 யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதே அவரை வணங்காதவர்களிடம் அன்பு காட்டுவதற்கு சிறந்த வழியாகும். அவர் துன்மார்க்கத்தை வெறுக்கிறபோதிலும், எல்லாரிடமும் அன்பும் கருணையும் காட்டுகிறார்; அவர்கள் கெட்ட வழிகளிலிருந்து திரும்புவதற்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறார். (எசேக்கியேல் 18:23) அவர், ‘எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென விரும்புகிறார்.’ (2 பேதுரு 3:9) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டுமென்பது அவருடைய சித்தமாயிருக்கிறது. (1 தீமோத்தேயு 2:4) அதனால்தான், ‘சகல தேசத்தாருக்கும்’ பிரசங்கித்து, கற்பித்து அவர்களை ‘சீஷராக்கும்படி’ தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு பொறுப்பளித்தார். (மத்தேயு 28:19, 20) இந்த வேலையில் கலந்துகொள்வதன் மூலம் நாம் கடவுளிடத்திலும் பிறரிடத்திலும், ஏன் நம் பகைவர்களிடத்திலும்கூட அன்பு காட்டுகிறோம்.
கிறிஸ்தவ சகோதரர்கள்மீது அன்பு
12. சகோதரனிடத்தில் அன்புகூருவது பற்றி அப்போஸ்தலன் யோவான் என்ன எழுதினார்?
12 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) கிறிஸ்தவர்களாக நாம், விசுவாச குடும்பத்தாரிடம், அதாவது நம் ஆன்மீக சகோதர சகோதரிகளிடம், அன்புகூர கடமைப்பட்டிருக்கிறோம். இந்த அன்பு எந்தளவு முக்கியமானது? இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். . . . தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 3:15; 4:20) இவை அழுத்தந்திருத்தமான வார்த்தைகள். இயேசு கிறிஸ்து, ‘கொலைபாதகன்,’ “பொய்யன்” என்ற இந்த வார்த்தைகளை பிசாசாகிய சாத்தானுக்குப் பயன்படுத்தினார். (யோவான் 8:44) இந்தப் பட்டப்பெயர்களைப் பெற நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.
13. சக விசுவாசிகளிடத்தில் நாம் என்னென்ன வழிகளில் அன்பு காட்டலாம்?
13 உண்மை கிறிஸ்தவர்கள் ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.’ (1 தெசலோனிக்கேயர் 4:9) நாம் “வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர” வேண்டியுள்ளது. (1 யோவான் 3:18) நம்முடைய அன்பு ‘மாயமற்றதாயிருக்க’ வேண்டும். (ரோமர் 12:9) தயவு, பரிவு, நீடிய பொறுமை உள்ளவர்களாயும் மன்னிக்கிறவர்களாயும், பொறாமை, பெருமை, அகந்தை அல்லது சுயநலம் இல்லாதவர்களாயும் இருக்க அன்பு நம்மைத் தூண்டுகிறது. (1 கொரிந்தியர் 13:4, 5; எபேசியர் 4:32) ‘ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்ய’ நம்மை உந்துவிக்கிறது. (கலாத்தியர் 5:13) சீஷர்களிடத்தில் தாம் அன்பாயிருந்ததுபோல அவர்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி இயேசு சொன்னார். (யோவான் 13:34) ஆகையால், தேவைப்படும்போது ஒரு கிறிஸ்தவர் தன் சக விசுவாசிகளுக்காக உயிர்கொடுக்கவும் தயாராய் இருக்க வேண்டும்.
14. குடும்பத்தில் நாம் எப்படி அன்பு காட்டலாம்?
14 முக்கியமாக, கிறிஸ்தவ குடும்பத்திலும் குறிப்பாக கணவன் மனைவிக்கு இடையிலும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது அவசியம். திருமண பந்தம் அந்தளவுக்கு நெருக்கமானதாய் இருப்பதால் பவுல் இவ்வாறு சொன்னார்: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.” (எபேசியர் 5:28) ஐந்து வசனங்களுக்குப் பின் இதே ஆலோசனையை பவுல் மீண்டும் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம். மல்கியாவின் காலத்திலிருந்த இஸ்ரவேலர் தங்களுடைய மனைவிகளுக்குத் துரோகம் செய்தார்கள்; தன் மனைவியை நேசிக்கிற ஒரு கணவன் அந்த இஸ்ரவேலரைப் பின்பற்ற மாட்டார். (மல்கியா 2:14) மாறாக, அவளை உயர்வாக மதிப்பார். சபையைக் கிறிஸ்து நேசித்ததைப்போல, அவரும் தன் மனைவியை நேசிப்பார். அதேபோல், தன் கணவனுக்கு மரியாதைகாட்ட அன்பு ஒரு மனைவியையும் தூண்டும்.—எபேசியர் 5:25, 29-33.
15. சகோதர அன்பைச் செயலில் பார்த்த சிலர் என்ன சொல்லியிருக்கிறார்கள், என்ன செய்திருக்கிறார்கள்?
15 தெளிவாகவே, இத்தகைய அன்பு உண்மை கிறிஸ்தவர்களின் அடையாள சின்னமாகத் திகழ்கிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) ஒருவருக்கொருவர் நாம் காட்டும் அன்பு, நாம் நேசிக்கிற, பிரதிநிதித்துவம் செய்கிற கடவுளிடத்தில் ஆட்களை கவர்ந்திழுக்கிறது. உதாரணமாக, மொசம்பிக்கைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு குடும்பத்தைப் பற்றிய அறிக்கையைக் கவனியுங்கள்: “இதுபோன்ற ஒன்றை நாங்கள் பார்த்ததே இல்லை. மத்தியானத்தில் பேய்க் காற்று வீச ஆரம்பித்தது, அதன் பிறகு கனத்த மழை பெய்தது, ஆலங்கட்டிகளும் விழ ஆரம்பித்தன. அந்தப் பலத்த காற்றில் எங்களுடைய குடிசை தரைமட்டமானது, அதன் கூரையாக இருந்த தகடுகள் பறந்தன. பக்கத்து சபைகளிலிருந்து சகோதரர்கள் வந்து எங்களுடைய வீட்டைத் திரும்பக் கட்டுவதில் உதவினார்கள். அதைப் பார்த்து அசந்துபோன அக்கம்பக்கத்தார், ‘உங்களுடைய மதம்தான் நல்ல மதம். எங்களுடைய சர்ச்சிலிருந்து யாரும் வந்து இந்த மாதிரி உதவி செய்ததே இல்லை’ என்று சொன்னார்கள். நாங்கள் பைபிளைத் திறந்து யோவான் 13:34, 35 வசனங்களை அவர்களுக்குக் காட்டினோம். எங்களுடைய அக்கம்பக்கத்தார் அநேகர் இப்போது சாட்சிகளோடு பைபிள் படித்து வருகிறார்கள்.”
தனிப்பட்டவர்களிடம் அன்பு
16. ஒரு தொகுதியிடம் அன்பு காட்டுவதற்கும் தனிப்பட்டவர்களிடம் அன்பு காட்டுவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
16 ஒரு தொகுதியாக பிறரை நேசிப்பது கடினம் அல்ல. ஆனால், தனிப்பட்ட ஒவ்வொருவரையும் நேசிப்பதுதான் கடினம். உதாரணமாக, சிலர் தர்ம ஸ்தாபனத்திற்கு நன்கொடை வழங்குவதன் மூலம் மட்டுமே பிறர் மீதுள்ள அன்பைக் காட்டுகிறார்கள். சொல்லப்போனால், பிறரை நேசிக்கிறோம் என சொல்வது எளிது, ஆனால், நம்மைக் கண்டுகொள்ளாத சக பணியாளரிடம், நம்மை வெறுக்கிற பக்கத்து வீட்டுக்காரரிடம், அல்லது நம்மை நிலைகுலையச் செய்கிற நண்பரிடம் அன்பு காட்டுவது கடினம்.
17, 18. தனிப்பட்டவர்களிடம் இயேசு எப்படி அன்பு காட்டினார், அவர் என்ன காரணத்துடன் அன்பு காட்டினார்?
17 தனிப்பட்டவர்களிடம் அன்பு காட்டும் விஷயத்தில், நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்; அவர் கடவுளுடைய குணங்களை அப்படியே பிரதிபலித்தார். அவர் உலகத்தின் பாவத்தை நீக்குவதற்காக பூமிக்கு வந்தபோதிலும், தனிப்பட்டவர்களிடம் அன்பு காட்டினார்; சுகவீனமாயிருந்த ஒரு பெண்ணிடம், ஒரு குஷ்டரோகியிடம், ஒரு பிள்ளையிடம் அவர் அன்பு காட்டினார். (மத்தேயு 9:20-22; மாற்கு 1:40-42; 7:26, 29, 30; யோவான் 1:29) அவ்விதமாகவே, அன்றாடம் நாம் தொடர்புகொள்கிற ஆட்களிடத்தில் நாம் நடந்துகொள்ளுகிற விதத்தின் மூலமாக பிறரை நேசிக்கிறோம்.
18 என்றாலும், கடவுள்மீது அன்பிருப்பதாலேயே பிறர்மீது அன்பு காட்டுகிறோம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இயேசு, எளியோருக்கு உதவினார், சுகவீனரைச் சுகப்படுத்தினார், பசியில் வாடியோருக்கு உணவளித்தார். இருந்தாலும், இதையெல்லாம் அவர் செய்ததற்கும் ஜனக்கூட்டத்தாருக்கு அவர் கற்பித்ததற்கும் காரணம் யெகோவாவுடன் ஒப்புரவாக ஜனங்களுக்கு உதவுவதற்கே. (2 கொரிந்தியர் 5:19) இயேசு எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகச் செய்தார்; தாம் நேசித்த கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்கிறார், அவரைப் பிரதிபலிக்கிறார் என்ற விஷயத்தை அவர் ஒருபோதும் மறந்துவிடவில்லை. (1 கொரிந்தியர் 10:31) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், நாமும்கூட பிறர்மீது உண்மையான அன்பைக் காட்டலாம், அதே சமயத்தில் இந்தத் துன்மார்க்க உலகின் பாகமாக இல்லாதிருக்கலாம்.
நம்மைப்போல பிறரை நேசிப்பது எப்படி?
19, 20. நம்மைப்போல பிறரையும் நேசிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
19 “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்று இயேசு சொன்னார். நம்மீதே நமக்கு அக்கறை இருப்பதும் நியாயமான அளவுக்குச் சுயமரியாதை இருப்பதும் இயல்புதான். அப்படி இல்லாவிட்டால், இந்தக் கட்டளைக்கு அர்த்தமே இருந்திருக்காது. நம் மீதுள்ள இந்த அன்பை, 2 தீமோத்தேயு 3:2-ல் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டுள்ள சுயநல அன்போடு குழப்பிக்கொள்ளக் கூடாது. மாறாக, இது ஒருவருடைய சொந்த மதிப்புமரியாதை குறித்த நியாயமான உணர்வாகும். பைபிள் அறிஞர் ஒருவர் விவரித்தபடி இது “சமநிலையான, சுய அன்பு ஆகும்; இது ‘நான்தான் உயர்ந்தவன்’ என்ற எண்ணமும் அல்ல, ‘நானொரு உதவாக்கறை’ என்ற எண்ணமும் அல்ல.”
20 நம்மைப் போல பிறரை நேசிப்பது என்பது, மற்றவர்கள் நம்மை எப்படிக் கருத வேண்டுமென விரும்புகிறோமோ அப்படியே அவர்களை நாம் கருதுவதையும், மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறோமோ அப்படியே அவர்களை நாம் நடத்துவதையும் அர்த்தப்படுத்துகிறது. “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என இயேசு சொன்னார். (மத்தேயு 7:12) மற்றவர்கள் நமக்குச் செய்த தீங்கை மனதில் வைத்துக்கொண்டு அதையே அவர்களுக்குத் திரும்பச் செய்யும்படி இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறோமோ அப்படியே மற்றவர்களை நடத்த நாம் நினைக்க வேண்டும். நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் மட்டுமே இவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென இயேசு சொல்லவில்லை என்பதையும் கவனியுங்கள். அவர், “மனுஷர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்; எல்லா ஆட்களிடமும், நாம் சந்திக்கிற எல்லாரிடமும் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம்.
21. மற்றவர்களை நேசிப்பதன் மூலம் நாம் எதை மெய்ப்பித்துக் காட்டுகிறோம்?
21 பிறரை நேசிப்பது, தீமையைச் செய்யாதவாறு நம்மைப் பாதுகாக்கிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, . . . இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது.” (ரோமர் 13:9, 10) மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான வழிகளைக் காண அன்பு நம்மை உந்துவிக்கும். சக மனிதரை நேசிப்பதன் மூலம், மனிதனை தம் சாயலில் படைத்த யெகோவா தேவனையும் நேசிக்கிறோம் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறோம்.—ஆதியாகமம் 1:26.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• நாம் யாரிடம் அன்புகாட்ட வேண்டும், ஏன்?
• யெகோவாவை வணங்காதவர்களிடம் நாம் எப்படி அன்பு காட்டலாம்?
• நம் சகோதரர்களிடம் காட்ட வேண்டிய அன்பை பைபிள் எப்படி விவரிக்கிறது?
• நம்மைப்போல பிறரை நேசிப்பதன் அர்த்தம் என்ன?
[பக்கம் 26-ன் படம்]
“எனக்குப் பிறன் யார்”?
[பக்கம் 29-ன் படம்]
இயேசு தனிப்பட்டவர்களிடம் அன்பு காட்டினார்