எப்லா —புதையுண்ட பூர்வ நகரம் புலப்பட்டது
அது 1962-ஆம் ஆண்டின் கோடைக்காலம். இத்தாலியைச் சேர்ந்த பாவோலோ மாடீயை என்ற இளம் தொல்லியல் வல்லுநர், சிரியாவின் வடமேற்கிலுள்ள சமவெளிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டார். என்ன கண்டுபிடிக்கப்போகிறார் என்பதைப்பற்றி அப்போது அவருக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. சிரியாவுக்கு உட்புறமாக இருக்கும் இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல எனக் கருதப்பட்டது. என்றாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அலிப்போவின் தென்பகுதியில் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள டெல் மார்டீக்கில் அகழ்வாராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு, ‘இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்பு’ என்று அநேகர் கருதும் ஒன்று கண்டுபிடிக்கப்படவிருந்தது.
எப்லா என்றழைக்கப்பட்ட நகரம் இருந்ததற்கு பூர்வகாலக் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன. என்றாலும், மத்திய கிழக்கு முழுவதிலும் சிதறிக்கிடக்கும் குன்றுகளில் எதற்கு அடியில் அந்த நகரம் கண்டுபிடிக்கப்படும் என ஒருவரும் அறிந்திருக்கவில்லை. அக்காட் நகரை ஆண்ட சர்கோன் மன்னன், “மாரீ, யார்மூடீ, எப்லா” ஆகியவற்றை வெற்றி கொண்டதாக ஒரு கல்வெட்டு வாசகம் சொன்னது. மற்றொரு கல்வெட்டில், சுமேரிய அரசன் கூடேயா “ஈப்லாவின் [எப்லாவின்] மலைகளில்” இருந்து பெற்ற விலைமதிப்புள்ள மரக்கட்டைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தான். பார்வோன் மூன்றாம் தூட்மோஸ் கைப்பற்றிய பூர்வ நகரங்களின் பட்டியல் எகிப்திலுள்ள கார்னக்கில் உள்ளது; அந்நகரங்களில் எப்லாவும் ஒன்று. எப்லாவைக் கண்டுபிடிக்க ஏன் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தார்கள் என இப்பொழுது உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, அல்லவா?
மேலுமான அகழ்வாராய்ச்சிகள் பயனுள்ளதாக இருந்தன. 1968-ல் எப்லாவின் அரசனான ஐபிட்-லிம்முடைய உருவச்சிலையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அதில், “எப்லாவில் மேன்மையாகத் திகழும்” இஷ்டார் தேவதைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்று அக்காடியன் மொழியில் எழுதப்பட்ட ஓர் உறுதிமொழி இருந்தது. ஆம், “ஒரு புதிய மொழியை, புதிய சரித்திரத்தை, புதிய கலாச்சாரத்தை” தொல்லியல் கண்டுபிடிப்புகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரத் துவங்கின.
எப்லா என்ற பழமையான பெயரைக் கொண்ட ஆப்புவடிவ எழுத்துகளுள்ள பலகைகள் 1974/75 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. பூர்வ நகரமான எப்லா இருந்த அதே இடத்தில்தான் டெல் மார்டீக் இருக்கிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதிசெய்தன. மேலும், அந்த இடத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது அந்த நகரம் இருந்திருக்க வேண்டுமென அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன. எப்லாவின் முதல் ஆதிக்க காலத்திற்குப் பிறகு அது பாழாக்கப்பட்டது. பின்னர், அது திரும்ப எடுப்பித்துக் கட்டப்பட்டது, மறுபடியும் அது அழிக்கப்பட்டு, நூற்றாண்டுகளாக மண்ணுக்குள் புதைந்துபோனது.
ஒரு நகரம், பல சரித்திரம்
டைக்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கிடையே உள்ளது போன்ற, வண்டல் நிறைந்த நிலத்தில் பூர்வகால நகரங்கள் பல அமைக்கப்பட்டன. இது மிகப் பெரியளவில் விவசாயம் செய்ய வாய்ப்பளித்தது. பைபிளில் குறிப்பிடப்பட்ட முதல் நகரங்கள் மெசொப்பொத்தாமியாவில் இருந்தன. (ஆதியாகமம் 10:10) எப்லா என்பதற்கு “வெள்ளைப் பாறை” என்று அர்த்தம்போல் தெரிகிறது. சுண்ணாம்புக்கல் அடுக்குகளின் மீது அந்நகரம் அமைந்திருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம். இந்தச் சுண்ணாம்புக்கல் அடுக்கு அந்தப் பகுதியில் இயற்கையான நீர்வரத்து இருப்பதை உறுதிப்படுத்துகிறது. பெரிய ஆறுகளிலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருக்கும் நகரத்திற்கு இது மிகவும் முக்கியம். அதனாலேயே நகரத்தைக் கட்டுவதற்கு இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எப்லா பகுதியில் குறைந்தளவு மழையே பெய்வதால் தானியம், திராட்சை, ஒலிவ மரங்கள் போன்றவற்றை மட்டுமே அதிகளவில் சாகுபடி செய்ய முடிந்தது. மேலும் அந்தப் பகுதி கால்நடை வளர்ப்புக்கு, குறிப்பாக செம்மறியாடு வளர்ப்புக்கு ஏற்றதாய் இருந்தது. மெசொப்பொத்தாமியா சமவெளிக்கும் மத்தியதரைக் கடல் கரையோரப் பகுதிக்கும் இடையே எப்லா அமைந்திருந்ததால் மரம், மதிப்புள்ள இரண்டாம்தர கற்கள், உலோகங்கள் ஆகியவற்றின் வாணிபத்திற்கு இது ஏற்ற இடமாக இருந்தது. அங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசித்தனர்; இதில் ஏறத்தாழ பத்து சதவிகிதத்தினர் தலைநகரில் வாழ்ந்தார்கள்.
எப்லா நாகரிகத்தின் முதல் கட்டம் எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தது என்பதற்கு ஒரு மாபெரும் அரண்மனையின் சிதிலங்கள் சான்று பகருகின்றன. அரண்மனை நுழைவாயிலின் கதவு சுமார் 12-15 மீட்டர் உயரமாயிருந்தது. பல காலங்களினூடே, வல்லமை வாய்ந்த நிர்வாகத்தினரின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த அரண்மனை பெரிதாக்கப்பட்டது. அதிகாரிகள் ஒரு சிக்கலான ஒழுங்கமைப்பின் கீழ் வேலை செய்தார்கள்; “பிரபுக்களும்,” “ஆளுநர்களும்” அரசனுக்கும் அவரது மனைவிக்கும் உதவி செய்தனர்.
17,000-க்கும் அதிகமான களிமண் பலகைகளும் சிறு துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், அவை 4,000-க்கும் மேற்பட்ட முழுமையான பலகைகளாக இருந்திருக்கலாம்; அவை மர அலமாரிகளில் கவனமாக வைக்கப்பட்டிருந்திருக்கலாம். எப்லாவின் வாணிபம் எந்தளவுக்கு மிகப் பரந்ததாய் இருந்தது என்பதற்கு இந்த ஆவணங்கள் சான்றளிக்கின்றன. உதாரணமாக, இந்நகரம் எகிப்தோடு வாணிபம் செய்தது என்பதை இரண்டு பார்வோன்களுடைய அரசாங்க முத்திரைகள் காட்டுகின்றன. பெரும்பாலான பலகைகள் சுமேரியன் ஆப்புவடிவ எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. ஆனால் சில பலகைகள் எப்லைட் மொழியில் எழுதப்பட்டிருந்தன. இந்த மிகப் பழமையான செமிட்டிக் மொழியை இந்த ஆவணங்களின் உதவியால் புரிந்துகொள்ள முடிந்தது. இதுபோன்ற பழமையான செமிட்டிக் மொழியைக் கண்டுபிடித்தது கீழை நாடுகளின் மொழியியல் வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சில பலகைகளில் சுமேரியன்-எப்லைட் ஆகிய இரு மொழிகளிலும் வார்த்தைகள் பட்டியலிடப்பட்டிருந்ததை அறிந்து நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படலாம். “நமக்குத் தெரிந்ததிலேயே மிகப் பழமையான அகராதிகள்” என்று எப்லா—ஆலெ ஓரீஜீனீ டெலா சீவீல்டா உர்பானா (எப்லா—நகர நாகரிகத்தின் தோற்றத்தில்) புத்தகம் இவற்றை அழைக்கிறது.
அகழ்ந்தெடுக்கப்பட்டவற்றில் எப்லாவின் போர் வீரர்கள் தங்கள் எதிரிகளுக்குத் தண்டனை கொடுப்பது போலவோ வெட்டிய தலைகளைப் பரிசளிப்பது போலவோ சித்திரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இதிலிருந்து எப்லா இராணுவம் பலம் வாய்ந்ததாக இருந்தது எனத் தெளிவாகத் தெரிகிறது. என்றாலும், அசீரியாவும் பாபிலோனும் வல்லரசுகளானபோது எப்லாவுடைய மேன்மையான சரித்திரம் முடிவுக்கு வந்தது. இந்தச் சம்பவங்கள் எப்படிப் படிப்படியாக நடந்தன என்பதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்வது எளிதல்ல; ஆனால் முதலாம் சர்கோனும் (ஏசாயா 20:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள சர்கோன் இல்லை), பிறகு அவனுடைய பேரனான நாராம்-சின்னும் எப்லாவைத் தாக்கினார்கள் எனத் தெரிகிறது. எதிரிகள் கொடூரமானவர்கள் என்றும் பயங்கரமாகச் சூறையாடினார்கள் என்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட அத்தாட்சி காட்டுகிறது.
என்றாலும், ஏற்கெனவே குறிப்பிட்டபடி சில காலத்திற்குப் பிறகு நகரம் திரும்பக் கட்டப்பட்டது; அந்தப் பகுதியில் முக்கியமானதாகவும் ஆனது. ஒரு நுட்பமான கட்டுமானத் திட்டத்தின்படி அந்தப் புதிய நகரம் கட்டப்பட்டிருந்ததால், அது இன்னுமதிக கம்பீரமாய் தோற்றமளித்தது. நகரத்தின் தாழ்வான இடத்திலிருந்த ஒரு பரிசுத்தப் பகுதி, பாபிலோனியர்களால் கருவள தெய்வமாகக் கருதப்பட்ட இஷ்டார் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. பாபிலோனின் இடிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிரபலமான இஷ்டார் வாயிலைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குறிப்பாக, எப்லாவிலிருந்த பிரமிப்பூட்டுகிற ஒரு கட்டடம் இஷ்டார் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சிங்கங்களை வளர்க்கப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது எப்லாவுடைய மதத்தை ஆராய நம்மைத் தூண்டுகிறது.
எப்லாவில் மதம்
பூர்வ கிழக்கத்திய நாடுகளில் எங்கும் இருந்தது போல எப்லாவிலும் பல கடவுட்கள் வழிபாடு இருந்தது. பாகால், ஹாடாட் (சில சீரிய ராஜாக்களின் பெயர்களில் பகுதியாகத் தோன்றும் ஒரு பெயர்), தாகோன் ஆகியவை அவற்றில் சில. (1 இராஜாக்கள் 11:23; 15:18; 2 இராஜாக்கள் 17:16) எப்லா மக்கள் அவற்றையெல்லாம் பயபக்தியோடு வணங்கினர். மற்ற மக்களின் கடவுட்களைக்கூட உயர்வாகக் கருதினர். குறிப்பாக, பொ.ச.மு. இரண்டாயிரமாவது ஆண்டுகளில் கெளரவமிக்க அரச மூதாதையர்களை வணங்கும் பழக்கம் இருந்ததாக அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
எப்லா மக்கள் தங்கள் கடவுட்களையே முழுமையாக நம்பவில்லை. புதிய எப்லா நகரத்தில், எந்த எதிரிகளையும் பயமுறுத்தும் இரட்டை மதிற்சுவர் இருந்தது. வெளிப்புறச் சுவர்கள் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் சுற்றளவு உள்ளவையாக இருந்தன. இன்றைக்கும்கூட அவற்றைத் தெளிவாகக் காண முடியும்
ஆயினும், திரும்பக் கட்டப்பட்ட எப்லாவும் ஒரு முடிவுக்கு வந்தது. சுமார் பொ.ச.மு. 1600-ல் ஒருகாலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த இந்நகருக்கு ஏத்தியர்கள் கடைசி அடியைக் கொடுத்திருக்கலாம். பூர்வகால ஒரு பாடலின்படி, எப்லா “ஒரு மண்பாண்டத்தைப்போல சுக்குநூறாக நொறுக்கப்பட்டது.” விரைவில் அது சரித்திரத்திலிருந்து காணாமல் போனது. 1098-ல் எருசலேமை நோக்கிச் சென்ற சிலுவைப் போராளிகளால் எழுதப்பட்ட ஓர் ஆவணம், முற்காலத்தில் எப்லா இருந்த இடத்தைக் குறிப்பிடுகிறது; அது தேசத்திலுள்ள ஒதுக்குப்புறமான தொலைதூரக் குடியிருப்பு என்றும், பெயர் மார்டீக் என்றும் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட மறைந்துபோன எப்லா, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 14-ன் பெட்டி]
எப்லாவும் பைபிளும்
பைபிள் தொல்லியல் நிபுணர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் 1976-ல் வெளிவந்த ஒரு கட்டுரை பைபிள் அறிஞர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. எப்லா பலகைகளில் பல தகவல்கள் இருந்தன; அவற்றிலிருந்த சில பெயர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பைபிளில் சொல்லப்பட்டுள்ள மக்களின் பெயர்களாகவும், இடங்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என அந்தப் பலகைகளில் உள்ளவற்றிற்கு விளக்கமளித்தவர் கருத்துத் தெரிவித்திருந்தார். சில அறிஞர்கள் அந்தக் கட்டுரை உண்மையில் சொல்லுகிற விஷயத்திற்கும் கொஞ்சம் மேலே சென்று, ஆதியாகமப் பதிவிற்கு எப்லா தொல்லியல் சான்றாகத் திகழ்கிறது என எழுதத் தொடங்கிவிட்டனர்.a ஜெஸ்யூட்டான மிச்சல் டேஹட், “களிமண் பலகைகள் [எப்லாவிலிருந்து பெறப்பட்டவை] பைபிளின் புரியாப் புதிர்களைத் தெளிவுபடுத்துகின்றன” என்று கூறினார். உதாரணமாக, “இஸ்ரவேல் மக்கள் வணங்கிய கடவுளுடைய பெயர் எவ்வளவு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்பதைத் தெரிந்துகொள்ள இவை உதவலாம் என்று அவர் நம்பினார்.
இப்போது இந்த வாசகங்கள் மிகத் தெளிவாக ஆராயப்படுகின்றன. எபிரெயுவும் எப்லைட்டும் செமிட்டிக் மொழிகளாக இருப்பதால் சில நகரங்களின் அல்லது நபர்களின் பெயர்கள் பைபிளில் உள்ளவையாக அல்லது அவற்றைப்போல இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதற்காக அவை ஒரே மக்களை அல்லது இடங்களைத்தான் குறிப்பிடுகிறது என்று சொல்ல முடியாது. எப்லாவில் கண்டெடுக்கப்பட்டவை பைபிள் ஆராய்ச்சிகளுக்கு எப்படி உதவும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். பைபிள் தொல்லியல் நிபுணர் பத்திரிகையில் வந்த அந்தக் கட்டுரையின் எழுத்தாளர், “யாவே” என்ற தெய்வீகப் பெயர் எப்லா வாசகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது எனத் தான் ஒருபோதும் சொல்லவில்லை என்கிறார். சில அறிஞர்கள், ஜா என்று அர்த்தங்கொள்ளப்பட்ட ஆப்புவடிவக் குறியீடு எப்லா மக்கள் வணங்கிய பல குலதெய்வங்களில் ஒன்றையே குறிக்கிறது என்கிறார்கள். ஆனால், மற்ற அநேக நிபுணர்கள், அது ஓர் இலக்கணக் குறியீடேயன்றி வேறொன்றுமில்லை என விளக்கமளிக்கிறார்கள். எப்படியானாலும், அது ஒரே உண்மைக் கடவுளாகிய யெகோவாவைக் குறிக்கவில்லை—உபாகமம் 4:35; ஏசாயா 45:5.
[அடிக்குறிப்பு]
a பைபிள் பதிவுக்கு தொல்பொருள் ஆராய்ச்சிகள் எவ்வாறு அத்தாட்சியளிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் அதிகாரம் 4-ஐக் காண்க.
[பக்கம் 12-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பெருங்கடல்
கானான்
சிரியா
அலிப்போ
எப்லா (டெல் மார்டீக்)
யூப்ரடீஸ் நதி
[படத்திற்கான நன்றி]
தொல்லியல் வல்லுநர்: Missione Archeologica Italiana a Ebla - Università degli Studi di Roma ‘La Sapienza’
[பக்கம் 12, 13-ன் படம்]
சுமார் பொ.ச.மு. 1750-ஐச் சேர்ந்த ஒரு தங்க அட்டிகை
[பக்கம் 13-ன் படம்]
மாபெரும் அரண்மனையின் சிதிலங்கள்
[பக்கம் 13-ன் படம்]
ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள களிமண் பலகைகளின் கற்பனை ஓவியம்
[பக்கம் 13-ன் படம்]
ஆப்புவடிவ எழுத்துகளுள்ள பலகைகள்
[பக்கம் 13-ன் படம்]
எகிப்தியரின் செங்கோல் பொ.ச.மு. 1750-1700
[பக்கம் 13-ன் படம்]
எதிரிகளின் தலைகளுடன் எப்லாவின் போர்வீரர்
[பக்கம் 14-ன் படம்]
இஷ்டார் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கற்பாளம்
[படத்திற்கான நன்றி]
Missione Archeologica Italiana a Ebla - Università degli Studi di Roma ‘La Sapienza’
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
எல்லாப் படங்களும் (அரண்மனை சிதிலங்கள் தவிர): Missione Archeologica Italiana a Ebla - Università degli Studi di Roma ‘La Sapienza’