யெகோவா “தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக்” கொடுக்கிறார்
“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.”—லூக்கா 11:13.
1. பரிசுத்த ஆவியின் உதவி நமக்கு எப்போது முக்கியமாகத் தேவைப்படுகிறது?
‘பரிசுத்த ஆவியின் உதவி இல்லாமல் இந்தப் பிரச்சினையை என்னால் சமாளிக்கவே முடியாது!’ உங்கள் மனதின் ஆழத்திலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் எப்போதாவது வெளிவந்திருக்கின்றனவா? அநேக கிறிஸ்தவர்கள் இக்கேள்விக்கு ‘ஆம்’ என்றே பதிலளிக்கின்றனர். ஒருவேளை, மோசமான வியாதியால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தபோது நீங்கள் அவ்வாறு சொல்லியிருக்கலாம். அல்லது காலம் முழுவதும் உறுதுணையாக இருந்த வாழ்க்கைத்துணை மரண நித்திரையில் ஆழ்ந்தபோது நீங்கள் அவ்வாறு உணர்ந்திருக்கலாம். அல்லது ஒருகாலத்தில் சிரிப்பும் சந்தோஷமும் பூத்துக்குலுங்கிய உங்கள் மனநிலை உற்சாகமிழந்து மனச்சோர்வால் வாடிப்போனபோது நீங்கள் அப்படி நினைத்திருக்கலாம். யெகோவாவின் பரிசுத்த ஆவி “இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை” கொடுத்ததால்தான் உங்களால் சமாளிக்க முடிந்தது என்பதை வாழ்க்கையில் வேதனை நிறைந்த காலங்களில் நீங்கள் உணர்ந்திருக்கலாம்.—2 கொரிந்தியர் 4:7-9, NW; சங்கீதம் 40:1, 2.
2. (அ) உண்மைக் கிறிஸ்தவர்கள் என்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள்? (ஆ) இக்கட்டுரையில் நாம் எந்தக் கேள்விகளை ஆராய்வோம்?
2 உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்தத் தேவபக்தியற்ற உலகத்திலிருந்து வரும் அதிகதிகமான அழுத்தத்தையும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. (1 யோவான் 5:19) இதுமட்டுமின்றி, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் பிசாசாகிய சாத்தானாலும் தாக்கப்படுகிறார்கள். “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி” கொடுப்பவர்களும் அவனுடைய கடும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:12, 17) ஆகவே, எப்போதைக் காட்டிலும் இப்போதே நமக்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கடவுளுடைய பரிசுத்த ஆவியை தொடர்ந்து அபரிமிதமாக பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? சோதனைகளின்போது நமக்கு தேவைப்படும் பலத்தை அளிக்க யெகோவா அதிக விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்? இக்கேள்விகளுக்கான பதில்களை இயேசு கூறிய இரு உவமைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
விடாமல் ஜெபியுங்கள்
3, 4. இயேசு என்ன உவமையைக் கூறினார், அதை ஜெபத்தோடு எப்படிச் சம்பந்தப்படுத்தினார்?
3 ‘ஆண்டவரே, . . . ஜெபம்பண்ண . . . நீர் எங்களுக்குப் போதிக்கவேண்டும்’ என்று இயேசுவின் சீஷர்களில் ஒருவர் அவரிடம் கேட்டுக்கொண்டார். (லூக்கா 11:1) இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இயேசு இரண்டு உவமைகளை அவர்களிடம் கூறினார்; இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. முதல் உவமை, விருந்தினரை உபசரிக்கும் ஒரு மனிதனைப் பற்றியது. இரண்டாவது உவமை, மகனுடைய விருப்பத்தை நிறைவேற்றும் தகப்பனைப் பற்றியது. இவற்றை ஒவ்வொன்றாக இப்போது சிந்திக்கலாம்.
4 இயேசு பின்வருமாறு கூறினார்: “உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவுசெய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக் கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இந்த உவமை எப்படி ஜெபத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை இயேசு அதன்பிறகு இவ்வாறு விளக்கினார்: “மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: [“தொடர்ந்து,” NW] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; [“தொடர்ந்து,” NW] தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; [“தொடர்ந்து,” NW] தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.”—லூக்கா 11:5-10.
5. ஜெபிக்கும்போது நாம் கொண்டிருக்க வேண்டிய மனநிலையைக் குறித்து விடாப்பிடியான மனிதனின் உவமை என்ன கற்பிக்கிறது?
5 விடாமுயற்சியை விட்டுவிடாத மனிதனைப் பற்றிய இந்தத் தத்ரூபமான உவமை, ஜெபிக்கும்போது நாம் எப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அந்த மனிதன் ‘விடாப்பிடியாய்’ இருந்ததால்தான் தனக்கு தேவையானதைப் பெற்றுக்கொண்டான் என்று இயேசு குறிப்பிட்டதைக் கவனியுங்கள். (லூக்கா 11:8, பொது மொழிபெயர்ப்பு) ‘விடாப்பிடியாய்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை பைபிளில் ஒரேயொரு முறை மட்டுமே காணப்படுகிறது. “வெட்கமில்லாதிருத்தல்” என்ற பொருளைத் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்து இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வெட்கமில்லாதிருத்தல் என்பது பொதுவாக மோசமான அர்த்தத்தையே தருகிறது. என்றாலும், நல்ல காரணத்திற்காக ஒருவர் வெட்கமில்லாமல் அல்லது விடாப்பிடியாக நடந்துகொண்டால் அது நிச்சயம் பாராட்டுக்குரிய ஒன்றுதான். அப்படிப்பட்ட குணத்தையே இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட அந்த மனிதன் வெளிக்காட்டினார். தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வதற்காக விடாப்பிடியாக கேட்பதைப் பற்றி அவர் வெட்கப்படவில்லை. அவர் நமக்கு முன்மாதிரியாய் இருப்பதாக இயேசு சுட்டிக்காட்டினார்; ஆகவே, நம்முடைய ஜெபங்களிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நாம் ‘[“தொடர்ந்து,” NW] கேட்க வேண்டும், [“தொடர்ந்து,” NW] தேட வேண்டும், [“தொடர்ந்து,” NW] தட்ட வேண்டும்’ என்று யெகோவா விரும்புகிறார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, “தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார்.”
6. இயேசுவின் காலத்தில் உபசரிக்கும் வழக்கம் எப்படிக் கருதப்பட்டது?
6 நாம் விடாப்பிடியாக ஜெபிக்க வேண்டும் என்று சொன்னதோடு இயேசு நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்கான காரணத்தையும் விளக்கினார். இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனில், விருந்தளித்த மனிதனைப் பற்றிய அந்த உவமையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் உபசரிக்கும் வழக்கத்தை எப்படிக் கருதினார்கள் என்பதை முதலாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பைபிள் காலங்களில், விருந்தினரை உபசரிப்பது முக்கியமான வழக்கமாக கருதப்பட்டது; அதுவும் கடவுளுடைய ஊழியர்கள் அதை முக்கியமானதாகக் கருதினர் என்பதை பைபிளிலுள்ள பல்வேறு பதிவுகள் காட்டுகின்றன. (ஆதியாகமம் 18:2-5; எபிரெயர் 13:2) உபசரிப்பை காட்டாமலிருப்பது அவமரியாதைக்குரிய ஒன்றாக இருந்தது. (லூக்கா 7:36-38, 44-46) இதை மனதில் வைத்துக்கொண்டு, இயேசு கூறிய உவமையை மறுபடியும் கவனிக்கலாம்.
7. இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட மனிதன் தன் நண்பரை எழுப்புவதற்கு ஏன் பயப்படவில்லை?
7 இந்த உவமையில் குறிப்பிடப்படும் மனிதனுடைய வீட்டிற்கு நள்ளிரவில் ஒரு விருந்தாளி வருகிறார். அவருக்கு கட்டாயம் உணவளிக்க வேண்டுமென்று அந்த மனிதன் உணருகிறார். ஆனால், ‘அவர்முன் வைக்கிறதற்கு [அந்த மனிதனிடம்] ஒன்றுமில்லை.’ இது ஒரு அவசரமான நிலை என்று அந்த மனிதன் கருதுகிறார். என்ன ஆனாலும்சரி, எப்படியாவது அப்பத்தை வாங்கிவர வேண்டுமென நினைக்கிறார். அதனால், நண்பருடைய வீட்டிற்குச் சென்று அவரை தைரியமாக எழுப்புகிறார். “சிநேகிதனே, . . . நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறார். தனக்கு வேண்டியது கிடைக்கும்வரை விடாப்பிடியாக கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஏனெனில், அப்பங்களை வாங்கினால்தான் அவர் தன்னுடைய உபசரிக்கும் வழக்கத்தை குறையின்றி செய்யமுடியும்.
அதிக தேவை—அதிக முறை விண்ணப்பித்தல்
8. பரிசுத்த ஆவிக்காக விடாமல் ஜெபிக்க எது நம்மைத் தூண்டும்?
8 விடாமல் ஜெபிக்க வேண்டியதைப் பற்றி இந்த உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? உபசரிக்க வேண்டிய கடமையை சரிவர செய்ய தனக்கு அப்பங்கள் கண்டிப்பாகத் தேவை என்பதை உணர்ந்ததால்தான் அந்த மனிதன் அப்பங்களுக்காகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான். (ஏசாயா 58:5-7) அப்பங்கள் இல்லையெனில், அவரால் நல்லமுறையில் உபசரிக்க முடியாது. அதேபோல, நாமும்கூட உண்மைக் கிறிஸ்தவர்களாக நம்முடைய ஊழியத்தைச் செய்ய கடவுளுடைய ஆவி கண்டிப்பாகத் தேவை என்பதை உணர்வதால் அந்த ஆவியைத் தரும்படி கேட்டு கடவுளிடம் தொடர்ந்து ஜெபிக்கிறோம். (சகரியா 4:6) அது இல்லையெனில், நாம் சோர்ந்துவிடுவோம். (மத்தேயு 26:41) இந்த உவமையிலிருந்து நாம் என்ன முக்கியமான கருத்தை தெரிந்துகொள்கிறோம்? கடவுளுடைய ஆவி நமக்கு அவசரமாகத் தேவை என்பதை நாம் உணர்ந்தால், அதைத் தரும்படி நாம் விடாமல் ஜெபித்துக்கொண்டே இருப்போம்.
9, 10. (அ) பரிசுத்த ஆவிக்காக கடவுளிடம் ஏன் விடாப்பிடியாக ஜெபிக்க வேண்டும் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள். (ஆ) எந்தக் கேள்வியை நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?
9 இதுதொடர்பாக அன்றாட சம்பவங்களில் ஒன்றையே உதாரணமாக சிந்திக்கலாம். உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு திடீரென நள்ளிரவில் சுகமில்லாமல் போய்விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். உதவி கேட்டு ஒரு மருத்துவரை எழுப்புவீர்களா? லேசான உடல்நலக்குறைவு என்றால் எழுப்பமாட்டீர்கள். ஒருவேளை, மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், மருத்துவரை கூப்பிட நீங்கள் வெட்கப்படமாட்டீர்கள். ஏன்? ஏனெனில், அது ஓர் அவசர சூழ்நிலை. மருத்துவ நிபுணரின் உதவி கண்டிப்பாகத் தேவை என்பதை நீங்கள் உணருகிறீர்கள். உதவி கேட்காமலிருப்பது, விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். அதேபோல, உண்மைக் கிறிஸ்தவர்களும் தொடர்ந்து அவசரமான நிலையை எதிர்ப்பட்டுவருகிறார்கள் என்றே கூறலாம். சொல்லப்போனால், “கெர்ச்சிக்கிற சிங்கம்போல்” சாத்தான் நம்மை விழுங்குவதற்காக சுற்றித்திரிகிறான். (1 பேதுரு 5:8) ஆன்மீக ரீதியில் உயிரோடிருக்க நாம் விரும்பினால், கடவுளுடைய ஆவியின் உதவி நமக்கு நிச்சயம் தேவை. கடவுளுடைய உதவிக்காக கேட்காமலிருந்தால் படுமோசமான விளைவுகள் ஏற்படலாம். ஆகவே, நாம் கடவுளிடம் அவருடைய பரிசுத்த ஆவிக்காக விடாமல் கேட்கிறோம். (எபேசியர் 3:14-16) அவ்வாறு செய்வதன் மூலமே ‘முடிவுபரியந்தம் நிலைநிற்பதற்கான’ பலத்தை நாம் தொடர்ந்து கொண்டிருக்க முடியும்.—மத்தேயு 10:22; 24:13.
10 ‘ஜெபிக்கும்போது நான் எந்தளவு விடாப்பிடியாக இருக்கிறேன்’ என்று அவ்வப்போது சிந்தித்துப்பார்ப்பது மிக முக்கியம். கடவுளுடைய உதவி நமக்குத் தேவை என்பதை நாம் முழுமையாக உணரும்போது, பரிசுத்த ஆவிக்காக நாம் விடாப்பிடியாக ஜெபிப்போம் என்பதை மறவாதீர்கள்.
நம்பிக்கையோடு ஜெபிக்க எது தூண்டுகிறது?
11. தகப்பனையும் மகனையும் பற்றிய உவமையை இயேசு எவ்வாறு ஜெபத்தோடு தொடர்புபடுத்தினார்?
11 விடாப்பிடியாக இருந்த மனிதனைப் பற்றிய இயேசுவின் உவமை, ஜெபிப்பவரின் மனநிலை எப்படியிருக்க வேண்டுமென்பதை சிறப்பித்துக் காட்டுகிறது. அடுத்த உதாரணம் ஜெபத்தைக் கேட்பவரான யெகோவா தேவனின் மனப்பான்மையை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. இயேசு பின்வருமாறு கேட்டார்: “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் . . . மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?” இதன் நடைமுறைப் பயனை இயேசு பின்வருமாறு விளக்கினார்: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.”—லூக்கா 11:11-13.
12. மகனுடைய வேண்டுகோளுக்கு செவிகொடுக்கும் தகப்பனைப் பற்றிய உவமை, நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க யெகோவா மனமுள்ளவராய் இருப்பதை எப்படித் தெளிவுபடுத்துகிறது?
12 ஒரு தகப்பன் தன் மகன் எதையாவது கேட்கையில் எப்படிச் செயல்படுவார் என்பதைப் பற்றிய உவமையின் மூலம், யெகோவா தம்மிடம் ஜெபிப்பவர்களைக் குறித்து எவ்விதம் உணர்கிறார் என்பதை இயேசு விளக்கினார். (லூக்கா 10:22) மேற்குறிப்பிடப்பட்ட இரு உவமைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை முதலாவது கவனியுங்கள். முதல் உவமையில், இயேசு குறிப்பிட்ட மனிதன் தன்னிடம் உதவி கேட்டவருக்கு அதைச் செய்ய தயங்கினான். யெகோவா அப்படிப்பட்டவரல்ல. மாறாக, இரண்டாவது உவமையில் சொல்லப்பட்ட கரிசனையுள்ள மனிதத் தகப்பனைப்போல அவர் இருக்கிறார்; தன் பிள்ளையின் தேவைகளை பூர்த்திசெய்ய ஆவலாக காத்திருக்கிற தகப்பனைப்போல அவர் நடந்துகொள்கிறார். (சங்கீதம் 50:15) சாதாரண மனிதத் தகப்பனையும் பரலோகத் தகப்பனான யெகோவாவையும் ஒப்பிட்டதன் மூலம் தம் பிள்ளைகளுக்கு உதவ யெகோவா எந்தளவு ஆவலாக இருக்கிறார் என்பதையும் இயேசு தெளிவாக்கினார். வழிவழியாகப் பாவத்தைப் பெற்றதால் ‘பொல்லாதவராக’ இருக்கும் ஒரு மனிதத் தகப்பனே தன் மகனுக்கு நல்ல பரிசைக் கொடுக்கும்போது, தாராள குணமுடைய நம் பரலோக தகப்பன் தம்மை வணங்கும் தம் பிள்ளைகளுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்பதில் நாம் எவ்வளவு நிச்சயமாயிருக்கலாம்!—யாக்கோபு 1:17.
13. யெகோவாவிடம் ஜெபிக்கையில் நாம் எதைக் குறித்து உறுதியாயிருக்கலாம்?
13 இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? பரிசுத்த ஆவிக்காக நம்முடைய பரலோகத் தகப்பனிடம் கேட்கும்போது, அதைக் கொடுக்க அவர் அதிக விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதில் நாம் நம்பிக்கையோடிருக்கலாம். (1 யோவான் 5:14) நாம் மறுபடியும் மறுபடியுமாக அவரிடம் ஜெபிக்கையில், “என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று” என்பதுபோல் யெகோவா ஒருபோதும் சொல்லமாட்டார். (லூக்கா 11:7) அதற்கு மாறாக, இயேசு பின்வருமாறு குறிப்பிட்டார்: “[“தொடர்ந்து,” NW] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; [“தொடர்ந்து,” NW] தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; [“தொடர்ந்து,” NW] தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” (லூக்கா 11:9, 10) உண்மைதான், யெகோவா நாம் ‘கூப்பிடும் வேளையில் நமக்கு பதிலளிப்பார்.’—சங்கீதம் [திருப்பாடல்கள்] 20:9, பொ.மொ; 145:18.
14. (அ) என்ன தவறான எண்ணம், சோதனைகளை எதிர்ப்படும் சிலரை வாட்டுகிறது? (ஆ) சோதனைகளை எதிர்ப்படுகையில், யெகோவாவிடம் நாம் ஏன் நம்பிக்கையோடு ஜெபிக்கலாம்?
14 கரிசனையுள்ள தகப்பனைப் பற்றிய இயேசுவின் உவமை, எந்த மனிதத் தகப்பன் காட்டும் நற்குணங்களைவிட யெகோவாவின் நற்குணம் மிக உயர்ந்தது என்பதையும் வலியுறுத்துகிறது. ஆகவே, யெகோவா நம்மீது கோபமாயிப்பதால்தான் நமக்கு கஷ்டங்கள் வருகின்றன என்பதாக நம்மில் எவரும் ஒருபோதும் நினைக்கக்கூடாது. நாம் அப்படிச் சிந்திக்க வேண்டுமென விரும்புவது நம்முடைய பரம எதிரியாகிய சாத்தானே. (யோபு 4:1, 7, 8; யோவான் 8:44) அப்படி நினைப்பதற்கு எந்த வேதப்பூர்வ ஆதாரமும் இல்லை. யெகோவா நம்மை “பொல்லாங்கினால்” சோதிப்பதில்லை. (யாக்கோபு 1:13) பாம்பைப்போன்ற கஷ்டத்தையோ தேளைப்போன்ற சோதனையையோ அவர் நமக்குக் கொடுப்பதில்லை. நம்முடைய பரலோகத் தகப்பன் ‘தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளை’ கொடுக்கிறார். (மத்தேயு 7:11; லூக்கா 11:13) உண்மையில், யெகோவாவின் நற்குணத்தையும், நமக்கு உதவிசெய்ய அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதையும் நாம் எந்தளவு புரிந்துகொள்கிறோமோ அந்தளவு அவரிடம் நம்பிக்கையோடு ஜெபிக்கத் தூண்டப்படுவோம். அப்படிச் செய்கையில், “மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்” என்று கூறிய சங்கீதக்காரனின் வார்த்தைகளை நம்மாலும் கூற முடியும்.—சங்கீதம் 10:17; 66:19.
பரிசுத்த ஆவி எவ்வாறு உதவுகிறது
15. (அ) பரிசுத்த ஆவியைக் குறித்து இயேசு என்ன வாக்குறுதி அளித்தார்? (ஆ) பரிசுத்த ஆவி நமக்கு உதவும் ஒரு வழி என்ன?
15 இயேசு தம் உவமைகளில் கொடுத்திருந்த அதே உறுதியை தம்முடைய மரணத்திற்கு சற்று முன்பு மறுபடியும் கொடுத்தார். பரிசுத்த ஆவியைப் பற்றி தம் அப்போஸ்தலர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை [“உதவியாளரை,” NW] அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (யோவான் 14:16) இவ்வாறாக, உதவியாளர் அதாவது, பரிசுத்த ஆவி தம் சீஷர்களோடு இனிவரும் காலங்களில் இருக்கும் என்று இயேசு வாக்குறுதியளித்தார். அது நமக்கும் பொருந்துகிறது. பரிசுத்த ஆவி இன்று நமக்கு உதவுகிற ஒரு முக்கியமான வழி என்ன? பல்வேறு சோதனைகளை சகிக்க அது நமக்கு உதவுகிறது. எப்படி? சோதனைகளை சந்தித்த அப்போஸ்தலன் பவுல் கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கடவுளுடைய ஆவி தனக்கு எவ்வாறு உதவியது என்பதை விளக்கினார். அவர் என்ன எழுதினார் என்பதை நாம் சுருக்கமாகப் பார்க்கலாம்.
16. நம்முடைய சூழ்நிலை எவ்வாறு பவுலுடையதைப் போல இருக்கலாம்?
16 முதலாவதாக, “மாம்சத்திலே ஒரு முள்,” அதாவது, ஏதோவொரு சோதனையை தான் சமாளித்து வருவதாக பவுல் தன் சக விசுவாசிகளிடம் வெளிப்படையாகவே கூறினார். அதன்பிறகு, “அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் [யெகோவாவிடத்தில்] வேண்டிக்கொண்டேன்” என்று அவர் கூறினார். (2 கொரிந்தியர் 12:7, 8) தன்னுடைய கஷ்டத்தை நீக்கும்படி கடவுளிடம் பவுல் மன்றாடியபோதிலும், அது நீக்கப்படவில்லை. அதேபோன்ற ஒரு சூழ்நிலையை இப்போது நீங்கள் எதிர்ப்பட்டுவரலாம். பவுலைப்போலவே நீங்களும் அந்தச் சோதனையை நீக்கும்படி விடாப்பிடியாக நம்பிக்கையோடு யெகோவாவிடம் ஜெபித்திருக்கலாம். திரும்பத் திரும்ப மன்றாடியபோதிலும், அந்தப் பிரச்சினை உங்களைத் தொடர்ந்து தொல்லைப்படுத்துகிறது. அப்படியானால், யெகோவா உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கவில்லை, அவருடைய ஆவி உங்களுக்கு உதவவில்லை என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை! (சங்கீதம் 10:1, 17) அப்போஸ்தலன் பவுல் அடுத்ததாக என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்.
17. பவுலின் ஜெபங்களுக்கு யெகோவா எவ்வாறு பதிலளித்தார்?
17 பவுலின் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கடவுள் அவரிடம் பின்வருமாறு கூறினார்: “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” பவுல் இவ்வாறு கூறினார்: “கிறிஸ்துவின் வல்லமை [“ஒரு கூடாரத்தைப்போல,” NW] என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.” (2 கொரிந்தியர் 12:9; சங்கீதம் 147:5) கிறிஸ்துவின் மூலமாக, கடவுளுடைய வல்லமையான பாதுகாப்பு தன்மீது கூடாரத்தைப்போல இருந்ததை பவுல் அனுபவத்தில் கண்டார். அவ்விதமாகவே இன்றும் யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். அவர் தம் பாதுகாப்பை ஒரு கூடாரத்தைப்போல தம் ஊழியர்கள்மீது விரிக்கிறார்.
18. நம்மால் சோதனைகளை ஏன் தாங்க முடிகிறது?
18 ஒரு கூடாரம், மழையை நிறுத்தாது, புயலை தடுக்காது என்பது உண்மைதான். இருந்தாலும், அது புயல், மழையிலிருந்து ஓரளவு பாதுகாப்பை அளிக்கிறது. அதேபோல, ‘கிறிஸ்துவின் வல்லமையால்’ கிடைக்கும் பாதுகாப்பும் நமக்கு வரும் சோதனைகளையோ, கஷ்டங்களையோ தடுத்து நிறுத்துவதில்லை. ஆனாலும், அது இந்த உலகத்தின் மோசமான செல்வாக்கிலிருந்தும், அதை ஆளும் சாத்தானிடமிருந்து வரும் தாக்குதலிலிருந்தும் ஆன்மீக ரீதியில் நம்மைப் பாதுகாக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 15, 16) ஆகவே, ‘உங்களிடமிருந்து நீங்காத’ ஒரு சோதனையோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், யெகோவா உங்கள் போராட்டத்தை அறிந்திருக்கிறார், உங்கள் “கூப்பிடுதலின் சத்தத்துக்கு” அவர் பதிலளித்திருக்கிறார் என்பதில் நீங்கள் உறுதியாயிருக்கலாம். (ஏசாயா 30:19; 2 கொரிந்தியர் 1:3, 4) பவுல் பின்வருமாறு எழுதினார்: “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”—1 கொரிந்தியர் 10:13; பிலிப்பியர் 4:6, 7.
19. எதைச் செய்ய நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்கள், ஏன்?
19 இந்த தேவபக்தியற்ற உலகத்தின் ‘கடைசிநாட்கள்,’ “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களாக” இருக்கின்றன என்பது உண்மையே. (2 தீமோத்தேயு 3:1, NW) இருந்தாலும், கடவுளுடைய ஊழியர்களால் இவற்றை கையாள முடியும். ஏன்? ஏனெனில், அவர்களுக்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஆதரவும் பாதுகாப்பும் இருக்கிறது. தம்மிடம் விடாப்பிடியாகவும் நம்பிக்கையோடும் பரிசுத்த ஆவிக்காக கேட்போருக்கு யெகோவா அதை மனதார, அபரிமிதமாக அளிக்கிறார். ஆகவே, தினந்தோறும் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும் என்பதில் நாம் தீர்மானமாயிருப்போமாக.—சங்கீதம் 34:6; 1 யோவான் 5:14, 15.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
• பரிசுத்த ஆவியைக் கேட்டு நாம் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிப்பார் என்பதில் நாம் ஏன் உறுதியாயிருக்கலாம்?
• சோதனைகளை சகிக்க பரிசுத்த ஆவி நமக்கு எவ்வாறு உதவுகிறது?
[பக்கம் 21-ன் படம்]
விடாப்பிடியான மனிதனைப் பற்றி இயேசு கூறிய உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 22-ன் படம்]
கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காக விடாப்பிடியாக ஜெபிக்கிறீர்களா?
[பக்கம் 23-ன் படம்]
கரிசனையுள்ள தகப்பனைப் பற்றிய உவமையிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?