ஆணுக்கும் பெண்ணுக்கும்—கண்ணியமிக்க பொறுப்புகள்
யெகோவா தேவன் முதலில் ஆதாமைப் படைத்தார், பிறகு ஏவாளைப் படைத்தார். ஏவாள் படைக்கப்படுவதற்கு முன், ஆதாம் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற்றான். அந்தச் சமயத்தில் யெகோவா அவனுக்கு சில அறிவுரைகளைக் கொடுத்தார். (ஆதியாகமம் 2:15-20) கடவுளுடைய சார்பாகப் பேசுபவனாக, ஆதாம் அந்த அறிவுரைகளைத் தன்னுடைய மனைவிக்குச் சொல்ல வேண்டியிருந்தது. அதனால், பொருத்தமாகவே வணக்கம் சம்பந்தமான எல்லாக் காரியங்களிலும் அவனே தலைமை தாங்கி வழிநடத்த வேண்டியிருந்தது.
இதேமாதிரியான ஏற்பாடு கிறிஸ்தவ சபையிலும் உள்ளது. அதைப்பற்றிச் சிந்திப்பதிலிருந்து நாம் பயன்பெற முடியும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.” (1 தீமோத்தேயு 2:12, 13) கிறிஸ்தவ சபையில் நடக்கும் கூட்டத்தில் ஒரு பெண் பேசவே கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. அவள் அமைதலாக இருக்கவேண்டும் என்பது ஓர் ஆணோடு சச்சரவு செய்யக்கூடாது என்பதை அர்த்தப்படுத்துகிறது. அதோடு, அவனுடைய ஸ்தானத்தை இழிவுப்படுத்தக் கூடாது, சபையில் அவள் போதிக்கவும் முயற்சி செய்யக் கூடாது. சபையை வழிநடத்தவும், அதில் போதிக்கவும் ஆண்களுக்குப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், பெண்கள் பல்வேறு வழிகளில் கிறிஸ்தவக் கூட்டங்களில் பங்கேற்பதன்மூலம் நிறையவே செய்யமுடியும்.
கடவுளுடைய ஏற்பாட்டில் ஆணுக்கும் பெண்ணுக்குமான பொறுப்புகளில் நமக்கு உட்பார்வையைக் கொடுப்பவராக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். . . . ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை [ஒருவரைவிட்டு ஒருவர் சுதந்திரமாக இல்லை]. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.”—1 கொரிந்தியர் 11:8-12.
பெண்களுக்கு அருமையான நியமிப்புகள்
இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த சட்டத்தில் பெண்கள் அநேக நியமிப்புகளைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் முன்வந்து காரியங்களைச் செய்வதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை. உதாரணமாக, நீதிமொழிகள் 31:10-31 வரையிலான வசனங்கள், நல்ல பொருள்களை வாங்கி, தன் வீட்டிலுள்ளவர்களுக்கு அருமையான உடைகளை உருவாக்கும் “குணசாலியான ஸ்திரீயை” பற்றிப் பேசுகின்றன. அவள் “உள்ளாடைகளையும்கூட உருவாக்கி விற்கிறாள்.” (வசனங்கள் 13, 21-24, NW) ‘வியாபாரக் கப்பலைப்போலிருக்கும்’ இந்தத் திறமையுள்ள பெண் தூரத்திலிருந்தாலும்கூட நல்ல ஆகாரத்தைப் பெறுகிறாள். (வசனம் 14) “ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;” அதில் “திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.” (வசனம் 16) “தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்,” அதனால் அவளுடைய செயல்கள் லாபம் ஈட்டித்தருகின்றன. (வசனம் 18) இவற்றிற்கெல்லாம் மேலாக “தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்,” கடுமையாய் உழைக்கும் கடவுள் பயமுள்ள இந்தப் பெண் சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவுகிறாள். (வசனங்கள் 20, 27) அவள் புகழப்படுவதில் எந்த ஆச்சரியமுமில்லையே!—வசனம் 31.
பெண்கள் ஆன்மீக ரீதியில் வளருவதற்கு மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டங்கள் ஏராளமான வாய்ப்புகளை அளித்தன. உதாரணமாக, யோசுவா 8:35-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்.” வேதபாரகனாகிய எஸ்றாவைப்பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “[அவர்] நியாயப் பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஐனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.” (நெகேமியா 8:2, 3) சட்டங்களை இதுபோன்று வாசித்ததால் பெண்கள் பயனடைந்தார்கள். மேலும், மதப் பண்டிகைகளையும் அவர்கள் ஆசரித்தார்கள். (உபாகமம் 12:12, 18; 16:11, 14) மிக முக்கியமாக, பூர்வ இஸ்ரவேலில் இருந்த பெண்கள் யெகோவா தேவனிடம் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்கவும் தனியாக அவரிடம் ஜெபம் செய்யவும் முடிந்தது.—1 சாமுவேல் 1:10.
பொ.ச. முதல் நூற்றாண்டில், தேவபயமுள்ள பெண்கள் இயேசுவுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்கள். (லூக்கா 8:1-3) பெத்தானியாவில் ஒரு மாலைநேர உணவின்போது, இயேசுவின் தலையையும் பாதத்தையும் ஒரு பெண் அபிஷேகம் செய்தாள். (மத்தேயு 26:6-13; யோவான் 12:1-7) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவர் காட்சியளித்தவர்களில் பெண்களும் இருந்தார்கள். (மத்தேயு 28:1-10; யோவான் 20:1-18) அவர் பரலோகத்திற்குச் சென்றபிறகு, சுமார் 120 பேர் சேர்ந்திருந்த கூட்டத்தில் ‘சில பெண்களும் இயேசுவின் தாயாகிய மரியாளும்’ இருந்தார்கள். (அப்போஸ்தலர் 1:3-15) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமிலுள்ள மேல்மாடி ஒன்றில் இயேசுவின் சீஷர்கள் கூடிவந்திருக்கையில் பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டு, அவர்கள் பல அந்நிய பாஷைகளில் அற்புதகரமாகப் பேசினபோது இந்தப் பெண்களில் அநேகர் அல்லது அனைவரும் அங்கு இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.—அப்போஸ்தலர் 2:1-12.
யோவேல் 2:28, 29 வசனங்களின் நிறைவேற்றத்தைக் கண்டவர்களில் ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். நிறைவேற்றமடைந்த அந்த வசனத்தை அப்போஸ்தலன் பேதுரு மேற்கோள் காட்டினார்: “நான் [யெகோவா] மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; . . . என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்.” (அப்போஸ்தலர் 2:13-18) பொ.ச. 33 பெந்தெகொஸ்தேக்குச் சில நாட்களுக்குப் பிறகு, கிறிஸ்தவப் பெண்கள் பரிசுத்த ஆவியின் மதிப்புமிகு பரிசுகளைப் பெற்றார்கள். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள், தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; எதிர்காலத்தில் நடக்கப்போவதை அல்ல, ஆனால் வேதப்பூர்வ சத்தியங்களைச் சொன்னார்கள்.
ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், அப்போஸ்தலன் பவுல் “நம்முடைய சகோதரி பெபேயாளை”ப் புகழ்ந்து பேசி, அவளை ஏற்றுக்கொள்ளும்படி சிபாரிசு செய்தார். மேலும் அவர் திரிபேனாளையும் திரிபோசாளையும் பற்றிக் குறிப்பிட்டார். அவர்களை “கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற [பெண்கள்]” என அழைத்தார். (ரோமர் 16:1, 2, 12) இந்தப் பெண்கள் பூர்வ கிறிஸ்தவ சபைகளில் நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் இல்லாவிட்டாலும், அவர்களும், மற்ற அநேக பெண்களும் பரலோக ராஜ்யத்தில் கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடன் இருக்கும் பாக்கியத்திற்காகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.—ரோமர் 8:16, 17; கலாத்தியர் 3:28, 29.
தேவ பக்தியுள்ள பெண்கள் இன்று எப்பேர்ப்பட்ட மாபெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்! “யெகோவாவே சொல்கிறார்; நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி” என்று சங்கீதம் 68:11 (NW) சொல்கிறது. இம்மாதிரியான பெண்கள் போற்றத் தகுந்தவர்கள். உதாரணமாக, வீட்டுப் பைபிள் படிப்புகளை அவர்கள் திறமையாக நடத்துவதால், கடவுளைப் பிரியப்படுத்தும் உண்மையான போதனைகளை அநேகர் ஏற்றிருக்கிறார்கள். மணமான கிறிஸ்தவப் பெண்கள் தங்களுடைய பிள்ளைகள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக ஆவதற்கு உதவியிருக்கிறார்கள்; சபையில் நிறைய கடமைகளைக் கொண்டிருக்கும் தங்களுடைய கணவர்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள். இவர்களும் பாராட்டுக்குரியவர்களே. (நீதிமொழிகள் 31:10-12, 28) மணமாகாத பெண்களும் கடவுளுடைய ஏற்பாட்டில் மதிப்புமிகு பங்கைக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ ஆண்களுக்கு ‘முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவிக்க’ அறிவுரை கூறப்படுகிறது.—1 தீமோத்தேயு 5:1, 2.
ஆண்களுக்குப் பல்வேறு நியமிப்புகள்
ஒரு கிறிஸ்தவ ஆண் தெய்வீக நியமிப்பைப் பெற்றிருக்கிறார், அதை நிறைவேற்றவும் எதிர்பார்க்கப்படுகிறார். பவுல் இவ்வாறு சொன்னார்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாறென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3) ஆண்களும் கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆண் உண்மையில் கிறிஸ்துவுக்கும், இறுதியாக கடவுளுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியவராக இருக்கிறார். ஆண் தன்னுடைய தலைமைத்துவத்தை அன்பாக கையாளவேண்டுமெனக் கடவுள் எதிர்பார்க்கிறார். (எபேசியர் 5:25) மனிதன் உருவாக்கப்பட்டதிலிருந்தே இந்த எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது.
தலைமைத்துவத்துடன் இசைந்திருக்கும் பொறுப்புகளைக் கடவுள் ஆணுக்குக் கொடுத்தார் என பைபிள் காட்டுகிறது. உதாரணமாக, ஜலப்பிரளயத்தின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்குப் பேழையைக் கட்டும் பொறுப்பை யெகோவா நோவாவுக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 6:9–7:24) தன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள சகல குடும்பங்களும் தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆபிரகாம் பெற்றார். அந்தச் சந்ததியின் முக்கியபாகம் இயேசு கிறிஸ்து. (ஆதியாகமம் 12:3; 22:18; கலாத்தியர் 3:8-16) எகிப்தின் பிடியிலிருந்து இஸ்ரவேலர்களைத் தலைமைதாங்கி வழிநடத்த மோசேயைக் கடவுள் நியமித்தார். (யாத்திராகமம் 3:9, 10, 12, 18) நியாயப்பிரமாண சட்டமென்றும் மோசேயின் சட்டமென்றும் அழைக்கப்பட்ட சட்டத் தொகுப்பை மோசேயின் மூலமாக யெகோவா வழங்கினார். (யாத்திராகமம் 24:1-18) விதிவிலக்கின்றி, பைபிளை எழுதியவர்கள் எல்லாரும் ஆண்களே.
கிறிஸ்தவ சபையின் தலைவராக, இயேசு “மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்.” (எபேசியர் 1:23; 4:7-13) கண்காணிகளுக்குரிய தகுதிகளைப் பட்டியலிடும்போது, பவுல் ஆண்களைத்தான் குறிப்பிடுகிறார். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) எனவே, யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் ஆண்கள் கண்காணிகளாகவும் அதாவது மூப்பர்களாகவும், உதவி ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். (பிலிப்பியர் 1:1, 2; 1 தீமோத்தேயு 3:8-10, 12) கிறிஸ்தவ சபையில் ஆண்கள் மட்டுமே மேய்ப்பர்களாக சேவை செய்ய வேண்டும். (1 பேதுரு 5:1-4) என்றாலும், ஏற்கெனவே பார்த்தபடி, பெண்களுக்கும் கடவுளால் அருமையான பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அவரவர் பொறுப்புகளில் சந்தோஷம்
கடவுள் கொடுத்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்றும்போது ஆண், பெண் இருவருக்குமே அது சந்தோஷத்தைத் தருகிறது. கணவர்களும் மனைவிகளும் கிறிஸ்துவின் முன்மாதிரியையும் அவருடைய சபையின் முன்மாதிரியையும் பின்பற்றும்போது திருமண வாழ்க்கை சந்தோஷமானதாக அமைகிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்[தார்], . . . உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.” (எபேசியர் 5:25-33) ஆகவே, கணவர்கள் தங்களுடைய தலைமைத்துவத்தை செலுத்தும் விதத்தில் சுயநலமாக அல்லாமல் அன்பாக இருக்க வேண்டும். கிறிஸ்துவினுடைய சபை பரிபூரண மனிதர்களால் ஆனதல்ல. என்றாலும், இயேசு அதை அக்கறையாய் கவனித்து அன்பு காட்டுகிறார். அதேவிதமாக, ஒரு கிறிஸ்தவக் கணவனும் தன்னுடைய மனைவியை அக்கறையாய் கவனித்து அன்புகாட்ட வேண்டும்.
ஒரு கிறிஸ்தவ மனைவி “புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்க” அல்லது ஆழ்ந்த மரியாதை காட்டவேண்டும். (எபேசியர் 5:33) இந்த விஷயத்தில் அவள் சபையின் முன்மாதிரியைக் கவனிக்க வேண்டும். எபேசியர் 5:21-24-ல் உள்ள வசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.” சிலசமயங்களில், ஒரு மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிவது சவாலாக அல்லது பிரச்சினையாக இருந்தாலும், அவ்வாறு கீழ்ப்படிவது “கர்த்தருக்கேற்கும்படி” இருக்கிறது. (கொலோசெயர் 3:18) தன்னுடைய கணவனுக்குக் கீழ்ப்படிவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாயிருக்கிறது என்பதை ஒரு மனைவி நினைவுகூரும்போது அப்படிக் கீழ்ப்படிவது எளிதானதாக இருக்கிறது.
தன்னுடைய கணவர் சக விசுவாசியாக இல்லாவிட்டாலும் ஒரு கிறிஸ்தவ மனைவி அவருடைய தலைமைத்துவத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2) தன்னுடைய கணவரான ஆபிரகாமுக்கு மரியாதை காட்டின சாராள், ஈசாக்கைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தையும், இயேசு கிறிஸ்துவுக்கு மூதாதையாகும் பாக்கியத்தையும் பெற்றாள். (எபிரெயர் 11:11, 12; 1 பேதுரு 3:5, 6) சாராள் செய்ததைப் போலச் செய்யும் மனைவிமார்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.
ஆணும் பெண்ணும் கடவுள் கொடுத்துள்ள பொறுப்புகளை நிறைவேற்றும்போது சமாதானமும் ஐக்கியமும் மேலோங்கி நிற்கும். இது அவர்களுக்குத் திருப்தியையும் சந்தோஷத்தையும் தரும். மேலும், கடவுளுடைய ஏற்பாட்டில் ஒவ்வொருவருக்கும் பாக்கியம் மிகுந்த ஒரு இடம் இருக்கிறது. வேதப்பூர்வ தேவைகளுக்கு இணங்கிச் செல்லும்போது, அந்த இடத்தோடு சம்பந்தப்பட்ட கண்ணியமும் அவர்களுக்குச் சீதனமாகக் கிடைக்கிறது.
[பக்கம் 7-ன் பெட்டி]
கடவுள் கொடுத்துள்ள பொறுப்பை எப்படிக் கருதுகிறார்கள்
கிறிஸ்தவ மனைவிகள் தங்களுடைய பொறுப்பை எப்படிக் கருதுகிறார்கள்? “என் கணவர் அன்பான, கனிவான குடும்பத்தலைவராக இருக்கிறார். வழக்கமாக, தீர்மானங்களைப்பற்றி நாங்கள் கலந்து பேசுவோம். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அவர் தீர்மானிக்கும்போது, அது எங்களுடைய நன்மைக்குத்தான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். கிறிஸ்தவ மனைவிகளுக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடு உண்மையில் எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. எங்களுடைய மண வாழ்வை உறுதியாக்கியிருக்கிறது. நாங்கள் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறோம். ஆன்மீக இலக்குகளை எட்டுவதற்கு சேர்ந்தே உழைக்கிறோம்” என்கிறார் சூசன்.
மின்டீ என்ற பெண் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா தம்முடைய பெண் ஊழியர்களுக்காகக் கொடுத்திருக்கும் பொறுப்பு, அவர் எங்கள்மீது வைத்திருக்கும் அன்புக்கு அடையாளமாக இருக்கிறது. என் கணவருக்கு மதிப்பு, மரியாதை காட்டுவதன் மூலமும் சபையில் அவருக்கு இருக்கும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஆதரவளிப்பதன் மூலமும் இந்த ஏற்பாட்டிற்காக யெகோவாவுக்கு நான் நன்றி காட்டமுடியுமென உணருகிறேன்.”
[பக்கம் 5-ன் படங்கள்]
ஆணுடைய தலைமைத்துவத்திற்கு ஏற்றபடி நோவா, ஆபிரகாம், மோசே ஆகியோருக்கு வித்தியாசமான பொறுப்புகளைக் கடவுள் கொடுத்தார்
[பக்கம் 7-ன் படம்]
“நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி”