சாமுவேல் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறார்
தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்ட தன் சக விசுவாசிகளைக் கடிந்துகொண்டு, அவர்களைக் கடவுளுக்குக் கீழ்ப்படியுமாறு வலியுறுத்துகிறார் ஒரு தீர்க்கதரிசி. தான் கடவுளின் தீர்க்கதரிசி என்பதை நிரூபிக்க, இடிமழை மூலம் ஓர் அடையாளத்தைக் காட்டும்படி யெகோவாவிடம் அவர் கேட்கிறார். இஸ்ரவேலில் கோதுமை அறுப்பு காலத்தின்போது இடிமழை பெய்வது மிகவும் அரிது. என்றாலும், இடிமுழக்கங்களையும் மழையையும் கடவுள் அனுப்புகிறார். அதன் காரணமாக, மக்கள் அனைவரும் யெகோவாவுக்கும் அவருடைய தீர்க்கதரிசியான சாமுவேலுக்கும் மிகவும் பயந்து நடுங்குகிறார்கள்.—1 சாமுவேல் 12:11-19.
சாமுவேல் தீர்க்கதரிசி ஓர் எழுத்தாளராகவும் இருந்தார். அவருடைய விறுவிறுப்பூட்டும் வரலாற்றுப் பதிவுகள் ஏறத்தாழ 330 வருட சம்பவங்களையும் இஸ்ரவேலில் இருந்த நியாயாதிபதிகளின் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகளையும் உள்ளடக்குகின்றன. உதாரணமாக, எக்காலத்திலும் வாழ்ந்தவர்களில் மிகவும் பலசாலியான சிம்சோனுடைய வாழ்க்கையின் உண்மைக் கதை கவிதையிலும், இசை நாடகத்திலும், நாடகத்திலும், திரைப்படத்திலும் வந்திருக்கிறது. (நியாயாதிபதிகள், அதிகாரங்கள் 13-16) மேலும், விதவைகளாக வறுமையில் வாடிய ரூத்தைப் பற்றியும் அவளுடைய மாமியான நகோமியைப் பற்றியும்கூட சாமுவேல் எழுதியுள்ளார். சுபமாக முடியும் இந்த உண்மைக் கதையும் சிம்சோனின் வாழ்க்கையைப் போன்றே சுவராஸ்யமுள்ளது.—ரூத், அதிகாரங்கள் 1-4.
சாமுவேல் எழுதினவற்றிலிருந்தும் அவருடைய வாழ்க்கையிலிருந்தும் நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? அவர் எப்படி உண்மை வணக்கத்தை முன்னேற்றுவித்தார்?
அவருடைய இளமைக்காலம்
சாமுவேலின் அப்பாவான எல்க்கானா, யெகோவாவை வணங்கியவர், ஓர் அன்பான கணவனும்கூட. அவருடைய மனைவி அன்னாள், ஆன்மீகத்தில் உறுதியான பெண். பிள்ளையில்லாத அன்னாள், சீலோவிலுள்ள யெகோவாவின் ஆலயத்தில் தீவிரமாக ஜெபித்து இப்படிப் பொருத்தனை செய்தாள்: “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்திபடுவதில்லை.” (1 சாமுவேல் 1:1-11) அந்தப் பிள்ளை யெகோவாவின் சேவைக்கு அர்ப்பணிக்கப்படுவான் என்பதை இது குறித்தது.
அன்னாள் மனதுக்குள் ஜெபம் செய்தாள். “அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது,” என்று பதிவு சொல்கிறது. பிரதான ஆசாரியனான ஏலி, அவள் குடித்து வெறித்திருக்கிறாளென்று தவறாக நினைத்து அவளைத் திட்டினான். என்றாலும், அன்னாள் மரியாதையோடு தன்னுடைய நிலைமையை விளக்கிச் சொன்னாள். பின்பு ஏலி, “நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.” யெகோவா அன்னாளின் வேண்டுதலைக் கேட்டார். பதிவு இவ்வாறு தொடர்ந்து சொல்கிறது: “சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.”—1 சாமுவேல் 1:12-20.
“கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” சாமுவேல் வளர்க்கப்பட்டார். (எபேசியர் 6:4) சாமுவேல் பால்மறந்த பிறகு, சீலோவிலுள்ள தேவனின் ஆலயத்திற்கு அன்னாள் அவனை கூட்டிவந்து பிரதான ஆசாரியனான ஏலியிடம் ஒப்படைத்தாள். அவனுடைய கவனிப்பில், “அந்தப் பிள்ளை கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.” அன்னாளின் பொங்கிவழிந்த மகிழ்ச்சி, நன்றி தெரிவித்துச் சொன்ன அவளுடைய வார்த்தைகளில் வெளிப்பட்டது. அதை சாமுவேல் பிற்பாடு பதிவு செய்தார்.—1 சாமுவேல் 2:1-11.
நீங்கள் ஒரு பெற்றோரா, அப்படியானால் யெகோவாவின் சேவையை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்க உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துகிறீர்களா? மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதன் மூலமே ஒருவர் தன் சக்தியை சிறந்த விதத்தில் பயன்படுத்த முடியும்.
தேவாலய வாழ்க்கைக்கு இசைவாக சாமுவேல் நன்றாகத் தன்னை மாற்றிக்கொண்டார். அவர் ‘கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தார்,’ ‘கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டார்.’ அவர் கடவுளுடைய குணங்களை வெளிக்காட்டினார், அது அவரை மற்றவர்களுக்குப் பிரியமுள்ளவராக்கியது.—1 சாமுவேல் 2:21, 26.
ஆனால், ஏலியின் குமாரர்களான ஓப்னியும், பினெகாசும் அப்படியிருக்கவில்லை, ‘அவர்கள் யெகோவாவை அறிந்திருக்கவில்லை.’ அவர்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார்கள். மக்கள் தேவாலயத்தில் செலுத்திய பலிகளில் சிறந்த பாகங்களை அவர்கள் தங்களுக்காக எடுத்துக்கொண்டார்கள். தேவன், ஏலிக்கு வரப்போகிற தண்டனையைப் பற்றியும் அவனுடைய குமாரர்களுடைய மரணத்தைப் பற்றியும் அறிவிக்க ஏற்கனவே ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருந்தார். (1 சாமுவேல் 2:12, 15-17, 22-25, 27, 30-34) இன்னொரு நியாயத்தீர்ப்புச் செய்தியையும் சாமுவேல் மூலம் யெகோவா அறிவிக்கிறார்.
சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாக
தேவன் சாமுவேலிடம், “அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன்” என்று ஏலியிடம் சொல்லச் சொன்னார். சொல்வதற்கு இது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. கடவுள் சொன்ன வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கூட மறைக்காமல் சொல்லுமாறு ஏலி சாமுவேலை வற்புறுத்தினான். அதனால் சாமுவேல், யெகோவா சொன்ன அனைத்தையும் அவனிடம் சொன்னார். அதைச் சொல்ல அவருக்கு நிச்சயம் தைரியம் தேவைப்பட்டிருக்கும்!—1 சாமுவேல் 3:10-18.
சாமுவேல் பெரியவராக வளர்ந்தபோது, அவர் கடவுளுடைய தீர்க்கதரிசிதான் என்று சகல இஸ்ரவேலரும் அறிந்துகொண்டார்கள். (1 சாமுவேல் 3:19, 20) பெலிஸ்தர்களால் இஸ்ரவேலர் நசுக்கப்பட்டபோது, சாமுவேல் முன்னுரைத்த நியாயத்தீர்ப்பு ஆரம்பமானது. ஓப்னியும் பினெகாசும் யுத்தத்தில் இறந்துபோனார்கள், பெலிஸ்தர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றினார்கள். தன்னுடைய மகன்கள் இறந்துபோனதையும் பெட்டி பிடிக்கப்பட்டதையும் அறிந்தவுடன் ஏலி தான் உட்கார்ந்திருந்த ஆசனத்திலிருந்து மல்லாக்காக விழுந்து கழுத்து முறிந்து செத்துப்போனான்.—1 சாமுவேல் 4:1-18.
இருபது வருடங்களுக்குப் பிறகு, பொய் வணக்கத்தை விட்டொழிக்கும்படி சாமுவேல் இஸ்ரவேலரைத் தூண்டினார். அதனால் அவர்கள் தங்களுடைய விக்கிரகங்களை அகற்றி, உபவாசமிருந்து தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்தனர். சாமுவேல் அவர்களுக்காக ஜெபம் செய்து சர்வாங்க தகனபலியைச் செலுத்தினார். அதன் விளைவு? பெலிஸ்தர்கள் தாக்கவந்தபோது தேவன் அவர்களைக் கலங்கடித்தார், எதிரிகளை இஸ்ரவேலர் முறியடித்தார்கள். யெகோவாவுடைய ஆசிர்வாதத்தால் இஸ்ரவேலருடைய நிலைமை முன்னேறியது. தங்களிடமிருந்து பெலிஸ்தர்கள் பறித்துக்கொண்ட இடங்களைத் திரும்பவும் பெற்றார்கள்.—1 சாமுவேல் 7:3-14.
நிச்சயமாகவே சாமுவேல் மெய்வணக்கத்தை முன்னேற்றுவித்தார். உதாரணமாக, போரில் கைப்பற்றிய பொருள்களில் சிலவற்றை ஆசரிப்புக் கூடாரத்தைப் பராமரிக்கப் பயன்படுத்தும்படி பார்த்துக்கொண்டார். பஸ்கா பண்டிகைகளையும், லேவிய வாயிற்காவல் பணியையும் ஒழுங்கமைப்பதில் உதவினார். (1 நாளாகமம் 9:22; 26:27, 28; 2 நாளாகமம் 35:18) நியாயத்தீர்ப்புக் கொடுக்க ராமாவிலிருந்த தன்னுடைய வீட்டிலிருந்து, சாமுவேல், வருடந்தோறும் பல்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்தார். அவர் நேர்மையானவர், பாரபட்சமற்றவர் என்று அறியப்பட்டார். மக்கள் சாமுவேலை மதித்ததால் ஆன்மீக ரீதியில் அவர்களுக்கு உதவிசெய்ய அவரால் முடிந்தது. (1 சாமுவேல் 7:15-17; 9:6-14; 12:2-5) சாமுவேலுடைய நேர்மையும் ஆவிக்குரிய தன்மையும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அநேகரைத் தூண்டின என்பதில் சந்தேகமேயில்லை. அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற நீங்களும் தூண்டப்படுகிறீர்களா?
இஸ்ரவேலர் ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்கின்றனர்
சாமுவேல் முதிர்வயதானபோது, தன்னுடைய மகன்களான யோவேலையும் அபியாவையும் நியாயாதிபதிகளாக வைத்தார். அவர்கள் “அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.” அவர்களுடைய நடத்தையால் இஸ்ரவேலின் மூப்பர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்டார்கள். (1 சாமுவேல் 8:1-5) அது சாமுவேலின் கண்களுக்குத் தகாததாயிருந்தது. என்றாலும், அவர் அதுகுறித்து ஜெபம் செய்யும்போது யெகோவா இவ்வாறு சொன்னார்: “அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.” (1 சாமுவேல் 8:6, 7) மக்களின் விருப்பப்படியே செய்ய கடவுள் சாமுவேலிடம் கூறினார். அதோடு ஒரு ராஜாவின் கீழ் இருக்கையில் அவர்கள் சில அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கச் சொன்னார். மக்கள் வற்புறுத்தியபோது, சாமுவேல், சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்வதற்கு யெகோவா ஏற்பாடு செய்தார்.—1 சாமுவேல் 8:6-22; 9:15-17; 10:1.
சாமுவேல் குழம்பிப்போயிருந்தாலும் இந்த ஏற்பாட்டிற்கு ஆதரவளித்தார். இஸ்ரவேலர் அம்மோனியர்களை வென்றபிறகு, சவுலின் அரசாட்சியை நிச்சயப்படுத்த மக்களை சாமுவேல் கில்காலில் கூடிவரச்செய்தார். (1 சாமுவேல் 10:17-24; 11:11-15) இஸ்ரவேலருடைய சரித்திரத்தைத் திரும்பவும் எடுத்துச்சொல்லி, யெகோவாவுக்குக் கீழ்ப்படியுமாறு ராஜாவுக்கும் மக்களுக்கும் அறிவுரை கூறினார். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடிமுழக்க மழையைப் பருவமல்லாத சமயத்தில் பெய்யச் செய்வதன்மூலம் சாமுவேலுடைய ஜெபத்திற்குக் கடவுள் பதிலளித்தார். அந்த மக்கள் யெகோவாவை தள்ளிவிட்ட தவறை அந்த இடிமழை அவர்களுக்கு உணர்த்தியது. சாமுவேலிடம் அவர்கள் தங்களுக்காக ஜெபம் செய்யும்படி கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.” யெகோவாவுக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் காட்டப்பட்ட உண்மையான அன்புக்கு என்னவோர் அருமையான முன்மாதிரி! (1 சாமுவேல் 12:6-24) அதேபோல நீங்களும் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும் சகோதர சகோதரிகளின் சார்பாக ஜெபம் செய்வதற்கும் விரும்புகிறீர்களா?
இஸ்ரவேலின் முதல் இரண்டு ராஜாக்கள்
கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட சவுல் தன்னடக்கமுள்ளவராக இருந்தார். (1 சாமுவேல் 9:21; 11:6) ஆனால், பிறகு கடவுளுடைய வழிநடத்துதலைப் புறக்கணித்தார். உதாரணமாக, கட்டளையிட்டபடி காத்திருப்பதற்குப் பதிலாகப் பொறுமையிழந்து பலி செலுத்தியதற்காக சாமுவேல் அவரைக் கடிந்துகொண்டார். (1 சாமுவேல் 13:10-14) அமலேக்கியரின் ராஜாவான ஆகாக்கைக் கொல்லாமல் இரக்கம் காட்டியதன்முலம் சவுல் கீழ்ப்படியாமல் போனபோது, சாமுவேல் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.” சாமுவேல் தானே ஆகாக்கைக் கொன்றுபோட்டு, சவுலுக்காகத் துக்கப்பட்டார்.—1 சாமுவேல் 15:1-35.
யெகோவா கடைசியாக சாமுவேலிடம் இவ்வாறு சொன்னார்: “இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்?” பிறகு, யெகோவா ஈசாயின் குமாரர்களில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் செய்யும்படி சாமுவேலை எருசலேமுக்கு அனுப்பினார். கடைசி மகனான தாவீதை அபிஷேகம் செய்ய யெகோவா அங்கீகாரம் கொடுக்கும்வரை சாமுவேல் ஈசாயின் குமாரர்களை ஒவ்வொருவராகப் பார்வையிட்டார். அந்த நாளில் சாமுவேல், “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன் [கடவுள் பார்ப்பதில்லை]; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்றவொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார்.—1 சாமுவேல் 16:1-13.
சவுல் கீழ்ப்படியாமற்போனதே சாமுவேலை வாட்டிவதைத்ததென்றால், தாவீதுக்கெதிராக சவுல் வெறுப்பை வளர்த்தது அவருக்கு எவ்வளவு வேதனையைத் தந்திருக்கும்! சோதனைகள் மத்தியிலும் முதிர்வயதான சாமுவேல் சுறுசுறுப்பாக இருந்தார். யெகோவாவின் சேவையில் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார்.—1 சாமுவேல் 19:18-20.
சாமுவேலின் சொத்து
அநேகருடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்திய மனத்தாழ்மையான, தைரியமான சாமுவேல் தீர்க்கதரிசி இறந்தபோது, இஸ்ரவேலர் அவருக்காக அழுது புலம்பினர். (1 சாமுவேல் 25:1) சாமுவேல் அபூரணராக இருந்தார், நியாயத்தீர்ப்பில் சில சமயம் தவறுகளும் செய்தார். என்றாலும், தன்னுடைய குறைபாடுகள் மத்தியிலும் சாமுவேல் யெகோவாவை முழு இருதயத்துடன் சேவித்தார். மற்றவர்களும் அதையே செய்வதற்குச் சலிப்பின்றி உதவினார்.
சாமுவேலின் காலம் முதல் இன்று வரை நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன, ஆனாலும் அவருடைய வாழ்க்கை மதிப்புமிகு பாடங்களை நமக்குக் கற்பிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சாமுவேல் யெகோவாவின் உண்மை வணக்கத்தைப் பின்பற்றி அதை முன்னேற்றுவிக்கவும் செய்தார். அதைத்தான் நீங்களும் செய்கிறீர்களா?
[பக்கம் 16-ன் பெட்டி]
சாமுவேலுடைய வாழ்க்கையிலிருந்து
• சாமுவேலுடைய பெற்றோர் அவருக்குக் கடவுளுடைய வார்த்தையைக் கற்பித்ததுபோல, உங்களுடைய பிள்ளைகளையும் “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
• சாமுவேலைப்போல யெகோவாவின் சேவையை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்க உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள்.
• சாமுவேல் தெய்வீக குணங்களை வெளிக்காட்டியதால் மற்றவர்களுக்குப் பிரியமுள்ளவராக இருந்தார். அது நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறது.
• மெய்வணக்கத்தை முன்னேற்றுவிக்க சாமுவேல் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார், நாமும் அவ்வாறே செய்யவேண்டும் அல்லவா.
[பக்கம் 15-ன் படம்]
சாமுவேல் மெய் வணக்கத்தை முன்னேற்றுவித்தார், மனப்பூர்வமாக ஆன்மீக உதவியும் செய்தார்