உண்மை—மற்றவர்களிடம் மட்டுமே எதிர்பார்க்கிறோமா?
“பொய் என்றாலே எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. யாராவது என்னிடம் பொய் சொன்னால் எனக்குப் பயங்கர கோபம் வரும்” என்றாள் 16 வயது பெண் ஒருத்தி. நம்மில் பெரும்பாலோர் அப்படித்தான் நினைக்கிறோம். நமக்குக் கிடைக்கிற தகவல்கள், அதாவது நாம் கேட்கிற, படிக்கிற விஷயங்கள் எல்லாமே உண்மையானதாய் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஆனால், மற்றவர்களிடம் தகவல்களைத் தெரிவிக்கையில் நாம் உண்மையானதைச் சொல்கிறோமா?
“பிரச்சினையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அல்லது மற்றவர்களைக் காப்பாற்றுவதற்குச் சின்னச் சின்ன விஷயங்களில் பொய் சொல்வதில் தப்பே இல்லை. சொல்லப்போனால், அப்படிச் செய்தால்தான் ஒருவரோடொருவர் ஒத்துப்போக முடியும்” என்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட சுற்றாய்வில் கலந்துகொண்ட பெரும்பாலோர் தெரிவித்தனர். ஒரு நிருபர் பின்வருமாறு எழுதினார்: “எப்போதும் உண்மை பேசுவது உயர்ந்த கொள்கைதான், ஆனால், அப்படிப்பட்ட வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது.”
மற்றவர்கள் நம்மிடம் பொய் சொல்லக்கூடாதென்று விரும்புகிறோம்; ஆனால் அதே சமயத்தில், நியாயமான காரணங்களுக்காக சில சமயங்களில் நாம் பொய் சொன்னால் தப்பில்லை என்று நினைக்கிறோமா? உண்மை பேசுகிறோமா இல்லையா என்பது முக்கியமா? பொய் சொல்வதால் வரும் பாதிப்புகள் யாவை?
உண்மை பேசாவிட்டால் . . .
உண்மை பேசாதபோது என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன? உண்மையற்றவர்களாக நடந்துகொள்ளும்போது, தம்பதிகளிடையேயும் குடும்பத்தாரிடையேயும் நம்பிக்கை மறைந்துவிடுகிறது. ஆதாரமற்ற கிசுகிசுக்கள் ஒருவருடைய நற்பெயரை நாசமாக்கிவிடலாம். தொழிலாளரின் பித்தலாட்டங்களால் உற்பத்தி செலவுகள் உயருகின்றன, விலைவாசியும் அதிகரிக்கிறது. வரி ஏய்ப்பு செய்பவர்களால் பொது பணிக்குப் போதுமான நிதி இல்லாமல் அரசாங்கம் திண்டாடுகிறது. உண்மையான தகவல்களைத் தரவேண்டிய ஆராய்ச்சியாளர்கள் பொய்யும் புரட்டுமான தகவல்களைத் தருகையில், அவர்களுடைய பிரகாசமான எதிர்காலம் இருண்டுபோகிறது, அவர்களை ஆதரிக்கும் புகழ்பெற்ற நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது. கைமேல் லாபம் கிடைக்கும் மோசடி திட்டங்களில் முதலீடு செய்த அப்பாவிகள் பலர் வாழ்நாள் முழுவதும் சேமித்த எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றனர்; அதைவிட பயங்கரமான இழப்புகளும்கூட ஏற்பட்டிருக்கின்றன. யெகோவா தேவன் அருவருக்கிற காரியங்களின் பட்டியலில் “பொய்நாவு,” “அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி” ஆகியவையும் இடம்பெற்றிருப்பதாக பைபிள் சொல்வதில் ஆச்சரியமேதுமில்லை!—நீதிமொழிகள் 6:16-19.
பரவலாகப் பேசப்படும் பொய்கள் தனிநபர்களுக்கும் முழு சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படியிருந்தும், மக்கள் ஏன் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பானதைப் பேசுகிறார்கள்? உண்மைக்குப் புறம்பானதைப் பேசுவதும் பொய் பேசுவதும் ஒன்றுதானா? இக்கேள்விகளுக்கும், வேறு கேள்விகளுக்கும் அடுத்தக் கட்டுரையில் பதில்களைக் காணலாம்.
[பக்கம் 3-ன் படம்]
பொய் பேசுவதால் தம்பதிகளிடையே நம்பிக்கை மறைந்துவிடுகிறது