வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அர்மகெதோனில் நடக்கவிருக்கும் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய . . . யுத்தம்’ எதைக் குறிக்கிறது, அதன் விளைவு என்னவாக இருக்கும்?—வெளிப்படுத்துதல் 16:14, 16.
சுருங்கச் சொன்னால், அர்மகெதோன் யுத்தம் என்பது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உலகளாவிய யுத்தம்; அதில் யெகோவாவால் நியமிக்கப்பட்ட அரசரான இயேசு கிறிஸ்து கடவுளுடைய எதிரிகளை அழித்துப்போடுவார். ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்களான’ கடவுளுடைய எதிரிகள், “பிசாசுகளால் ஏவப்பட்ட கூற்றுகளால்” (NW) உந்துவிக்கப்பட்டு, “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு . . . எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே” கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
போரிடும் தரப்பினர் கூடிவரும் இடம் உண்மையான ஓர் இடமல்ல. “அர்மகெதோன்” என்பதற்கு “மெகிதோ மலை” என்று அர்த்தம். (வெளிப்படுத்துதல் 16:16) அந்தப் பெயரில் எந்தவொரு மலையும் உண்மையில் இருந்ததே கிடையாது. அதோடு, “பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும்” ஒரே இடத்தில் கூடிவருவதென்பதும் நடக்காத காரியம். (வெளிப்படுத்துதல் 19:19) ஆகவே, ‘இடம்’ என்பது, உலக அரசியல் ஆட்சியாளர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கொண்டு வரப்படுகிற ஒரு நிலைமையைக் குறிக்கிறது. அதாவது, யெகோவாவுக்கும், ‘ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகிய’ இயேசு கிறிஸ்துவின் தலைமையின்கீழ் செயல்படும் ‘பரலோக சேனைகளுக்கும்’ எதிரான நிலைமைக்கு அவர்கள் கொண்டுவரப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:14, 16.
“அர்மகெதோன்” என்ற வார்த்தை பூர்வ இஸ்ரவேல் நகரமான மெகிதோவுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. கர்மேல் மலைக்குக் கிழக்கே வாய்ப்பான இடத்தில் அமைந்திருந்ததால், மெகிதோ முக்கிய வர்த்தக மார்க்கமாகவும், ராணுவ மார்க்கமாகவும் இருந்தது. இறுதித் தீர்வான பல போர்கள் இங்குதான் நடந்தன. உதாரணமாக, இஸ்ரவேல நியாயாதிபதியான பாராக், “மெகிதோவின் தண்ணீர் அருகான” இடத்தில்தான் தளபதி சிசெராவின் தலைமையில் வந்த வலிமை வாய்ந்த கானானிய படையைத் தோற்கடித்தார். (நியாயாதிபதிகள் 4:12-24; 5:19, 20) அதற்கு அருகில்தான், நியாயாதிபதியான கிதியோன் மீதியானியரைத் துடைத்தழித்தார். (நியாயாதிபதிகள் 7:1-22) வரவிருக்கும் போரை மெகிதோவுடன் சம்பந்தப்படுத்துவதன் மூலம், கடவுள் தம் மகனைப் பயன்படுத்தி எல்லா எதிரிகளுக்கும் முடிவுகட்டுவார் என பைபிள் உறுதி அளிக்கிறது.
இதன் விளைவு என்னவாக இருக்கும்? அர்மகெதோன் யுத்தம் பூமியிலுள்ள எல்லா அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் முடிவுகட்டும். மனித சரித்திரத்தின் மிக உன்னதமான சகாப்தத்திற்கு வழியைத் திறக்கும். (வெளிப்படுத்துதல் 21:1-4) கடவுளுடைய ராஜ்யத்தின் அன்பான ஆளுகையின்கீழ் பூமி பூங்காவன பரதீஸாக மாற்றப்படும், அதில் நீதிமான்கள் என்றென்றும் வாழ்வார்கள்.—சங்கீதம் 37:29.