நாம் ஒருமித்து யெகோவாவின் பெயரை உயர்த்துவோமாக
“என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.”—சங்கீதம் 34:3.
1. பூமியில் தம்முடைய ஊழிய காலத்தின்போது, இயேசு எப்படிப்பட்ட சிறந்த முன்மாதிரியை வைத்தார்?
அது பொ.ச. 33, நிசான் 14. அன்றிரவு, எருசலேமிலிருந்த ஒரு வீட்டின் மேலறையில் இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள். (மத்தேயு 26:30) மனிதராயிருந்த இயேசு தம் அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து கடவுளைத் துதித்துப் பாடியது அதுதான் கடைசி முறை. என்றாலும், அந்தக் கடைசி சந்தர்ப்பத்தைத் துதி பாடலுடன் அவர் நிறைவுசெய்தது பொருத்தமாயிருந்தது. ஏனெனில், பூமியிலே தம்முடைய ஊழிய காலத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை இயேசு தம் பிதாவைத் துதித்து, அவருடைய பெயரைப் பக்திவைராக்கியத்தோடு அறிவித்தார். (மத்தேயு 4:10; 6:9; 22:37, 38; யோவான் 12:28; 17:6) இதன்மூலம், சங்கீதக்காரன் பின்வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்ததைப் போன்றே இயேசுவும் அழைப்பு விடுத்தார்: “என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.” (சங்கீதம் 34:3) நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி!
2, 3. (அ) தீர்க்கதரிசன செய்தி 34-ஆம் சங்கீதத்தில் அடங்கியுள்ளது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) இந்தக் கட்டுரையிலும் இதற்கடுத்த கட்டுரையிலும் நாம் எதைக் குறித்துச் சிந்திப்போம்?
2 இயேசுவுடன் சேர்ந்து துதி பாடல்களைப் பாடி ஒருசில மணிநேரத்திற்குப் பிறகு, முற்றிலும் மாறுபட்ட ஒன்று சம்பவிப்பதை அப்போஸ்தலன் யோவான் கண்டார். தன்னுடைய ஆண்டவரும் வேறு இரண்டு குற்றவாளிகளும் கழுமரங்களில் அறையப்பட்டதை அவர் பார்த்தார். அந்த இரு குற்றவாளிகளும் சீக்கிரம் இறப்பதற்காக ரோம படைவீரர்கள் அவர்களுடைய கால்களை முறித்தனர். ஆனால், இயேசுவின் கால்களை அவர்கள் முறிக்கவில்லை என்பதாக யோவான் குறிப்பிட்டார். ஏனெனில், படைவீரர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்துப்போயிருந்தார். இது, “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று 34-ஆம் சங்கீதத்தில் வேறொரு இடத்தில் சொல்லப்பட்டதன் நிறைவேற்றமே என்று அவர் தன்னுடைய சுவிசேஷத்தில் விளக்கினார்.—யோவான் 19:32-36; சங்கீதம் 34:20.
3 கிறிஸ்தவர்களுக்கு ஆர்வமூட்டும் அநேக குறிப்புகள் 34-ஆம் சங்கீதத்தில் அடங்கியுள்ளன. ஆகவே, எந்தச் சூழ்நிலையில் தாவீது இந்தச் சங்கீதத்தை எழுதினார் என்பதையும் அதிலுள்ள உற்சாகமூட்டும் குறிப்புகளையும் இந்தக் கட்டுரையிலும் இதற்கடுத்த கட்டுரையிலும் நாம் சிந்திக்கலாம்.
சவுலிடமிருந்து தாவீது தப்பிக்கிறார்
4. (அ) இஸ்ரவேலின் வருங்கால அரசராக தாவீது ஏன் அபிஷேகம் செய்யப்பட்டார்? (ஆ) தாவீதை சவுல் மிகவும் ‘சிநேகித்தது’ ஏன்?
4 தாவீது இளைஞராக இருந்தபோது, இஸ்ரவேல் தேசத்தை சவுல் அரசாண்டார். என்றபோதிலும், கீழ்ப்படியாததால் யெகோவாவின் தயவை சவுல் இழந்தார். அதனால், சாமுவேல் தீர்க்கதரிசி அவரிடம் பின்வருமாறு சொன்னார்: ‘யெகோவா இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுப்பார்.’ (1 சாமுவேல் 15:28) பிற்பாடு, ஈசாயின் கடைசி மகனான தாவீதை இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்யும்படி சாமுவேலிடம் யெகோவா கூறினார். இதற்கிடையே, கடவுளுடைய ஆவி சவுலை விட்டு நீங்கியதால் அவர் மனச்சோர்வால் வாடினார். ராஜாவுக்குச் சேவை செய்வதற்காக, திறம்பட்ட இசைக்கலைஞரான தாவீது கிபியாவுக்கு அழைத்துவரப்பட்டார். தாவீதின் இசை சவுலின் மனதுக்கு இதமாயிருந்தது. சவுல் ‘இவரை மிகவும் சிநேகித்தார்.’—1 சாமுவேல் 16:11, 13, 21, 23.
5. சவுல் ஏன் தாவீதை வெறுக்க ஆரம்பித்தார், தாவீது என்ன செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்?
5 காலம் செல்லச்செல்ல, தாவீதுக்கு யெகோவா துணை நின்றது தெளிவாகத் தெரிந்தது. பெலிஸ்த ராட்சதனாகிய கோலியாத்தை வீழ்த்த தாவீதுக்கு யெகோவா உதவினார். அவருக்கு ஆதரவாகவும் இருந்தார்; ஆகையால், தாவீது திறமையான போர்வீரரென இஸ்ரவேலில் புகழப்பட்டார். தாவீதை யெகோவா ஆசீர்வதிப்பதைக் கண்டு சவுலுக்குப் பொறாமை ஏற்பட்டதால் அவர் தாவீதை வெறுக்க ஆரம்பித்தார். சவுலுக்கு முன்பாக தாவீது சுரமண்டலம் வாசிக்கும்போது இருமுறை தன் ஈட்டியை அவர்மீது வீசியெறிந்தார். இருமுறையுமே, ஈட்டி தன்மீது படாதபடி தாவீது ஒதுங்கி தப்பினார். மூன்றாவது முறையாக அவரைக் கொல்ல சவுல் முயற்சி செய்தபோது, இஸ்ரவேலின் வருங்கால ராஜாவான தாவீது, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பியோட வேண்டுமென்று உணர்ந்தார். தாவீதைக் கண்டுபிடித்துக் கொல்வதற்கு சவுல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இதனால், இஸ்ரவேல் தேசத்திற்கு வெளியே எங்காவது போய் தஞ்சமடைய வேண்டுமென்று தாவீது தீர்மானித்தார்.—1 சாமுவேல் 18:11; 19:9, 10.
6. நோபின் குடிமக்களைக் கொல்லும்படி சவுல் ஏன் உத்தரவிட்டார்?
6 இஸ்ரவேலின் எல்லையை நோக்கி தாவீது சென்றுகொண்டிருந்தபோது, நோப் என்ற நகரத்திற்கு வந்தார். அங்குதான் யெகோவாவின் ஆசரிப்புக்கூடாரம் இருந்தது. தப்பித்து வந்த தாவீதுக்குத் துணையாக சில இளைஞர்களும் அவருடன் வந்திருந்தார்கள். அவர்களுக்கும் தனக்கும் உணவு வேண்டுமென்று பிரதான ஆசாரியரிடம் தாவீது கேட்டார். பிரதான ஆசாரியர், தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் உணவு கொடுத்ததுமின்றி, கொல்லப்பட்ட கோலியாத்தின் பட்டயத்தையும் தாவீதுக்குக் கொடுத்தார். இந்தத் தகவல் சவுலின் காதுக்கு எட்டியது. கோபமடைந்த சவுல், அங்கிருந்த 85 ஆசாரியர்கள் உட்பட அந்நகரத்து குடிமக்கள் அனைவரையும் கொல்லும்படி உத்தரவிட்டார்.—1 சாமுவேல் 21:1, 2; 22:12, 13, 18, 19; மத்தேயு 12:3, 4.
மரணத்திலிருந்து மறுபடியும் தப்பினார்
7. தாவீது ஒளிந்துகொள்வதற்கு காத் ஏன் பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை?
7 நோப் நகருக்கு மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்த பெலிஸ்தரின் பிராந்தியத்திற்குத் தாவீது தப்பிச் சென்றார். கோலியாத்தின் சொந்த ஊரான காத்தில் இருந்த ஆகீசு ராஜாவிடம் அடைக்கலம் புகுந்தார். இந்த இடத்தில் சவுல் தன்னைத் தேடி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தாவீது ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனால், காத்தின் ராஜாவுடைய ஊழியக்காரர்கள் சீக்கிரத்திலேயே தாவீதை அடையாளம் கண்டுகொண்டார்கள். இதைத் தெரிந்துகொண்ட தாவீது ‘காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டார்.’—1 சாமுவேல் 21:10-12.
8. (அ) காத் பட்டணத்தில் தாவீதுக்குக் கிடைத்த அனுபவத்தைப்பற்றி 56-ஆம் சங்கீதம் என்ன சொல்கிறது? (ஆ) தாவீது எப்படி மரணத்திலிருந்து மயிரிழையில் தப்பினார்?
8 அதன் பிறகு, பெலிஸ்தர் தாவீதைப் பிடித்தார்கள். ஒருவேளை இந்தச் சமயத்தில்தான், “என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” என்று யெகோவாவிடம் கெஞ்சுகிற ஓர் இருதயப்பூர்வமான பாடலை தாவீது இயற்றியிருக்க வேண்டும். (சங்கீதம் 56:8 மற்றும் மேற்குறிப்பு) இவ்வாறு, தன்னுடைய கஷ்டத்தை யெகோவா மறந்துவிடமாட்டார்; அதற்குப் பதிலாக, அன்புடன் அரவணைத்து, தன்னைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை தாவீது வெளிப்படுத்தினார். அதோடு, பெலிஸ்த ராஜாவை ஏமாற்றுவதற்கும் தாவீது திட்டம் தீட்டினார். அதன்படி ஒரு பைத்தியக்காரனைப் போல் நடித்தார். இதைப் பார்த்த ஆகீசு ராஜா ஒரு ‘பயித்தியக்காரனை’ தன் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியதற்காக தன் ஊழியரைக் கண்டித்தார். தாவீதின் திட்டம் வெற்றியடைய யெகோவா உதவினார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. தாவீது அந்தப் பட்டணத்திலிருந்து விரட்டப்பட்டார். இந்த முறையும் மரணத்திலிருந்து மயிரிழையில் தப்பினார்.—1 சாமுவேல் 21:13-15.
9, 10. தாவீது 34-ஆம் சங்கீதத்தை என்ன காரணத்திற்காக எழுதினார், யாரை மனதில் வைத்து அதை இயற்றினார்?
9 தாவீதோடு தப்பி வந்த அவருடைய ஆதரவாளர்கள் காத் பட்டணத்தில்தான் இருந்தார்களா அல்லது அவருக்குக் காவலாக அருகிலிருந்த இஸ்ரவேல கிராமங்களில் தங்கியிருந்தார்களா என்பதைப்பற்றி பைபிளில் எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் எங்கு இருந்திருந்தாலும், தாவீதைத் திரும்பவும் சந்தித்து, யெகோவா அவரை மறுபடியும் எப்படிக் காப்பாற்றினார் என்பதைக் கேள்விப்பட்டபோது நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் 34-ஆம் சங்கீதம் இயற்றப்பட்டிருப்பதை அதன் மேற்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சங்கீதத்தின் முதல் ஏழு வசனங்களில், தன்னைக் காப்பாற்றியதற்காக கடவுளை தாவீது புகழ்கிறார். தம் மக்களை விடுவிப்பதில் வல்லவரான யெகோவாவைத் தன்னுடன் சேர்ந்து புகழும்படி தன் ஆதரவாளர்களையும் ஊக்கப்படுத்துகிறார்.—சங்கீதம் 34:3, 4, 7.
10 காத் பட்டணத்திற்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், இஸ்ரவேல் தேசத்தின் மலைப்பகுதியில் இருந்த அதுல்லாம் குகையில் தாவீதும் அவருடைய ஆட்களும் தஞ்சம் புகுந்தார்கள். சவுலின் ஆட்சியில் அதிருப்தியடைந்த இஸ்ரவேலரும் தாவீதுடன் சேர்ந்துகொள்ள அவரிடம் வர ஆரம்பித்தார்கள். (1 சாமுவேல் 22:1, 2) அப்படிப்பட்ட ஆட்களை மனதில் வைத்தே சங்கீதம் 34:8-22-ல் உள்ள வார்த்தைகளை தாவீது வடித்திருக்கலாம். அவற்றிலுள்ள நினைப்பூட்டுதல்கள் இன்று நமக்கும் முக்கியமானதாய் இருக்கின்றன. இந்த அழகிய சங்கீதத்தை விரிவாகச் சிந்திப்பதன் மூலம் நாம் நிச்சயம் பயன் அடைவோம்.
தாவீதின் முக்கிய குறிக்கோள் உங்களுக்கும் இருக்கிறதா?
11, 12. யெகோவாவைத் துதித்துக்கொண்டே இருக்க நமக்கு என்ன காரணங்கள் உள்ளன?
11 “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.” (சங்கீதம் 34:1) நாடோடியாக அலைந்து கொண்டிருந்ததால், பொருளாதார தேவைகளைப்பற்றிய பல கவலைகள் தாவீதுக்கு இருந்திருக்கும். என்றாலும், யெகோவாவைத் துதிக்க வேண்டுமென்ற தீர்மானத்தில் அவர் கொஞ்சமும் தளர்ந்துவிடவில்லை என்பதையே இவ்வார்த்தைகள் காண்பிக்கின்றன. பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! பள்ளியிலோ, வேலை செய்யுமிடத்திலோ, சக கிறிஸ்தவர்களோடு இருக்கையிலோ, ஊழியத்திலோ எங்கிருந்தாலும் யெகோவாவைத் துதிக்க வேண்டுமென்ற விருப்பமே எப்போதும் நம் மனதில் மேலோங்கி இருக்க வேண்டும். அவரைத் துதிப்பதற்கு நமக்கு எத்தனை எத்தனை காரணங்கள் இருக்கின்றன என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! உதாரணமாக, யெகோவாவின் மலைக்க வைக்கும் படைப்புகளில் புதிது புதிதாய் கண்டுபிடித்து மகிழ்வதற்கு எல்லையே இல்லை. அதோடு, யெகோவா தம்முடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தின் மூலமாக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்! அபூரணர்களாக இருக்கிறபோதிலும், தமக்கு உண்மையுள்ளவர்களைப் பெரிய பெரிய காரியங்களைச் செய்ய யெகோவா இந்தக் காலங்களில் பயன்படுத்தியிருக்கிறார். இந்த உலகம் பூஜிக்கிற ஆட்களின் சாதனைகளை கடவுளுடைய செயல்களோடு ஒப்பிட முடியுமா? “ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை” என்ற தாவீதின் வார்த்தைகளை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?—சங்கீதம் 86:8.
12 யெகோவாவின் எண்ணிலடங்காச் செயல்களுக்காக அவரைத் துதித்துக்கொண்டே இருக்க தாவீதைப் போல நாமும் தூண்டப்படுகிறோம். அதோடு, கடவுளுடைய ராஜ்யம் இப்போது தாவீதின் நிரந்தர வாரிசான இயேசு கிறிஸ்துவின் கரங்களில் இருக்கிறது என்பதை அறிவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். (வெளிப்படுத்துதல் 11:15) சாத்தானின் உலகத்திற்கு முடிவு சமீபத்திலிருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. 600 கோடிக்கும் அதிகமான ஜனங்களின் முடிவில்லா வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் விரைவில் அது மனிதர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றியும் சொல்லி, நம்முடன் சேர்ந்து யெகோவாவைத் துதிக்க அவர்களுக்கு உதவ வேண்டிய தேவை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகமாயிருக்கிறது. காலம் கடந்துபோகும் முன், இந்தச் ‘சுவிசேஷத்தை’ ஏற்றுக்கொள்ள மற்றவர்களைத் தூண்டுவிப்பதற்கு நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில் அதுவே நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாய் இருக்க வேண்டும்.—மத்தேயு 24:14.
13. (அ) தாவீது யாரைக் குறித்து பெருமையாகப் பேசினார், எப்படிப்பட்டவர்கள் அதற்குப் பிரதிபலித்தார்கள்? (ஆ) தாழ்மையுள்ள ஆட்கள் இன்று எவ்வாறு கிறிஸ்தவ சபையிடம் ஈர்க்கப்படுகிறார்கள்?
13 “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.” (சங்கீதம் 34:2) தாவீது தன்னுடைய சாதனைகளைப்பற்றி இங்கே பெருமையடிக்கவில்லை. உதாரணமாக, தான் காத் பட்டணத்தின் ராஜாவை ஏமாற்றிய விதத்தைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. காத்தில் இருந்தபோது தன்னை யெகோவா பாதுகாத்தார் என்பதையும், அவருடைய உதவியால்தான் தப்பிக்க முடிந்தது என்பதையும் தாவீது உணர்ந்திருந்தார். (நீதிமொழிகள் 21:1) ஆகையால், தாவீது தன்னைக் குறித்து அல்ல, மாறாக யெகோவாவைக் குறித்தே பெருமையாகப் பேசினார். அவர் இப்படிச் செய்ததால் மனத்தாழ்மையுள்ளோர் கடவுளிடம் ஈர்க்கப்பட்டார்கள். அதைப்போல் இயேசுவும் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தினார். ஆகையால், தாழ்மையும் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும் உள்ளவர்கள் கடவுளிடமாகக் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். இன்று, எல்லா நாடுகளையும் சேர்ந்த தாழ்மையுள்ளோர் கிறிஸ்துவின் தலைமையின்கீழ் செயல்படும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய சர்வதேச சபையிடம் ஈர்க்கப்படுகிறார்கள். (கொலோசெயர் 1:18) கடவுளுடைய மனத்தாழ்மையுள்ள ஊழியர்கள் அவரைத் துதிப்பதைக் கேட்கையிலும், பரிசுத்த ஆவியின் உதவியோடு பைபிளிலுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்கையிலும் அவர்களுடைய மனம் தூண்டப்படுகிறது.—யோவான் 6:44; அப்போஸ்தலர் 16:14.
விசுவாசத்தைப் பலப்படுத்தும் கிறிஸ்தவக் கூட்டங்கள்
14. (அ) தனிமையில் யெகோவாவைப் புகழ்வதோடு தாவீது திருப்தி அடைந்துவிட்டாரா? (ஆ) வணக்கத்திற்காகக் கூடிவருவதில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
14 “என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.” (சங்கீதம் 34:3) தனிமையில் யெகோவாவைப் புகழ்வதோடு தாவீது திருப்தி அடைந்துவிடவில்லை. தன்னோடு சேர்ந்து கடவுளுடைய பெயரைப் புகழும்படி தன் தோழர்களையும் அவர் அன்புடன் ஊக்கப்படுத்தினார். பெரிய தாவீதான இயேசு கிறிஸ்துவும் வெளிப்படையாக யெகோவாவைப் புகழ்வதில் மகிழ்ச்சி கண்டார். ஆகையால், உள்ளூர் ஜெப ஆலயத்தில், எருசலேமிலிருந்த கடவுளுடைய ஆலயத்தில் நடைபெற்ற பண்டிகைகளில், தம்மைப் பின்பற்றுகிறவர்களோடு சேர்ந்திருந்த சமயத்தில் என பல சந்தர்ப்பங்களில் யெகோவாவை வெளிப்படையாகப் புகழ்ந்தார். (லூக்கா 2:49; 4:16-19; 10:21; யோவான் 18:20) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாக நாமும் சக வணக்கத்தாரோடு சேர்ந்து, நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யெகோவாவைப் புகழ வேண்டும். அதுவும் ‘நாளானது சமீபித்துவருகிறதை . . . பார்ப்பதால்’ அப்படிச் செய்வது இன்னும் முக்கியம்; இது நமக்குக் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட சந்தோஷமான பாக்கியம்!—எபிரெயர் 10:24, 25.
15. (அ) தாவீதின் அனுபவம் அவருடைய ஆட்களின்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? (ஆ) கூட்டங்களில் கலந்துகொள்வதன்மூலம் நாம் எவ்வாறு பயன் அடைகிறோம்?
15 “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.” (சங்கீதம் 34:4) இந்த அனுபவம் தாவீதுக்கு முக்கியமானதாய் இருந்தது. ஆகையால், “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்” என்று அவர் குறிப்பிட்டார். (சங்கீதம் 34:6) சக விசுவாசிகளோடு கூடிவரும்போது, கடினமான சூழ்நிலைகளைச் சகித்துக்கொள்ள யெகோவா நமக்கு எப்படி உதவியிருக்கிறார் என்பதைப்பற்றிய உற்சாகமூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள நமக்கு அநேக வாய்ப்புகள் கிடைக்கின்றன. தாவீதின் வார்த்தைகள் அவருடைய ஆதரவாளர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியதைப் போலவே, நம்முடைய உற்சாகமூட்டும் அனுபவங்களும் நம் சக வணக்கத்தாரை ஊக்கப்படுத்துகின்றன. தாவீதின் விஷயத்தில், அவருடைய தோழர்கள் “[யெகோவாவை] நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” (சங்கீதம் 34:5) சவுல் ராஜாவிடமிருந்து தப்பித்து நாடோடியாக அலைந்துகொண்டிருந்தபோதிலும், அவர்கள் வெட்கப்படவில்லை. தாவீதுக்கு யெகோவா துணை நிற்கிறார் என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது; ஆகவே, அவர்களுடைய முகங்கள் பிரகாசித்தன. அதேபோல, புதிதாகச் சத்தியத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களும், அதிக காலம் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களும் யெகோவாவின் உதவியையே எதிர்நோக்கியிருக்கிறார்கள். அவருடைய உதவியைத் தனிப்பட்ட விதமாக ருசித்திருப்பதன் காரணமாக, உண்மையோடு நிலைத்திருக்க வேண்டுமென்ற உறுதி அவர்களுடைய முகங்களில் பிரகாசிக்கிறது.
தேவதூதர்களின் உதவிக்காக நன்றியோடிருங்கள்
16. நம்மைப் பாதுகாப்பதற்கு யெகோவா தம் தேவதூதர்களை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்?
16 “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” (சங்கீதம் 34:7) யெகோவாவால் விடுவிக்கப்பட்ட தாவீது, தன்னை மட்டும்தான் அவர் காப்பாற்றுவார் என்று நினைக்கவில்லை. தாவீது, யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்டவர், இஸ்ரவேலின் வருங்கால ராஜா என்பது உண்மையே. இருந்தாலும், தம்மை உண்மையுடன் வணங்குவோர் முக்கியமானவர்களோ சாமானியர்களோ யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தேவதூதர்களுடைய பாதுகாப்பை யெகோவா அளிக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்தக் காலத்தில், யெகோவா அளிக்கிற பாதுகாப்பை உண்மை வணக்கத்தாரும் அனுபவித்திருக்கிறார்கள். நாசி ஜெர்மனி, அங்கோலா, மலாவி, மொசாம்பிக் போன்ற பல நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென்று அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்குப் பதிலாக, அந்நாடுகளில் யெகோவாவின் ஜனங்கள் பல மடங்காகப் பெருகி, அவருடைய பெயரை ஒன்றுசேர்ந்து துதித்து வருகிறார்கள். ஏன்? ஏனெனில், யெகோவா தம்முடைய பரிசுத்த தேவதூதர்களைப் பயன்படுத்தி தம் மக்களைப் பாதுகாத்து வழிநடத்துகிறார்.—எபிரெயர் 1:14.
17. தேவதூதர்கள் நமக்கு எவ்விதங்களில் உதவுகிறார்கள்?
17 கூடுதலாக, மற்றவர்களுக்கு இடறலாக இருப்போரை யெகோவாவின் ஜனங்கள் மத்தியிலிருந்து நீக்குவதற்கு ஏற்றவாறு அவருடைய தூதர்கள் காரியங்களை வழிநடத்தலாம். (மத்தேயு 13:41; 18:6, 10) தேவதூதர்கள் நமக்கு உதவுவதை நாம் உணராதிருக்கலாம்; ஆனாலும், யெகோவாவுக்கு நாம் சேவை செய்யும்போது முட்டுக்கட்டைகளாக இருப்பவற்றைத் தேவதூதர்கள் நீக்குகிறார்கள்; யெகோவாவுடனான நம் உறவைப் பாதிக்கக்கூடிய காரியங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறார்கள். மிக முக்கியமாக, எல்லா மனிதர்களுக்கும் “நித்திய சுவிசேஷத்தை” அறிவிக்கும் வேலையில் நம்மை வழிநடத்துகிறார்கள், ஆபத்தான சூழ்நிலைகளின்கீழ் பிரசங்கிக்க வேண்டிய இடங்களிலும்கூட அவர்கள் வழிநடத்துகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:6) யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்படும் பிரசுரங்களில் தேவதூதர்களின் உதவியைப்பற்றிய அனுபவங்கள் அடிக்கடி வெளிவந்திருக்கின்றன.a எதேச்சையாக நடந்த சம்பவங்கள் என்று அவற்றை ஒதுக்கிவிட முடியாதளவுக்கு அவை ஏராளமாக உள்ளன.
18. (அ) தேவதூதர்களுடைய உதவி தேவை என்றால் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்? (ஆ) அடுத்தக் கட்டுரையில் எது கலந்தாராயப்படும்?
18 தேவதூதர்களுடைய வழிநடத்துதலும் பாதுகாப்பும் நமக்குத் தேவை என்றால், எதிர்ப்பின் மத்தியிலும் நாம் தொடர்ந்து கடவுளைத் துதிக்க வேண்டும். கடவுளுடைய தூதன் “[யெகோவாவுக்கு] பயந்தவர்களை” மட்டுமே “சூழ” பாளையமிறங்கி பாதுகாக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். இது எதை அர்த்தப்படுத்துகிறது? கடவுள் பயம் என்றால் என்ன, அதை நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்? தமக்குப் பயப்படும்படி அன்பான கடவுள் ஏன் விரும்புகிறார்? இக்கேள்விகளுக்கான பதில் அடுத்தக் கட்டுரையில் கலந்தாராயப்படும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்), பக்கம் 550; யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2005, பக்கம் 53-4; காவற்கோபுரம், மார்ச் 1, 2000, பக்கங்கள் 5-6; ஜனவரி 1, 1991, பக்கம் 27 (ஆங்கிலம்); பிப்ரவரி 15, 1991, பக்கம் 26 (ஆங்கிலம்) ஆகியவற்றைக் காண்க.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• இளைஞராக இருக்கையில் தாவீது என்ன சோதனைகளை எதிர்ப்பட்டார்?
• தாவீதைப்போல நாமும் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்?
• கிறிஸ்தவக் கூட்டங்களை நாம் எவ்வாறு கருதுகிறோம்?
• நமக்கு உதவ தேவதூதர்களை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார்?
[பக்கம் 21-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ராமா
காத்
சிக்லாக்
கிபியா
நோப்
எருசலேம்
பெத்லகேம்
அதுல்லாம்
கேகிலா
எப்ரோன்
சீப்
ஹோரெஷ்
கர்மேல்
மாகோன்
என்கேதி
உப்புக் கடல்
[படத்திற்கான நன்றி]
வரைபடம்: Based on maps copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[பக்கம் 21-ன் படம்]
நாடோடியாய் தாவீது அலைந்தபோதும் யெகோவாவின் பெயரைத் துதித்தார்
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்தவக் கூட்டங்களில் சொல்லப்படும் உற்சாகமூட்டும் அனுபவங்கள் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன