தைரியம்—கடவுளுடைய ஊழியர்களுக்குத் தேவை
தைரியம் என்பது பலம், துணிச்சல், தீரம் ஆகியவற்றை அர்த்தப்படுத்துகிறது. இது, பயம், துணிவின்மை, கோழைத்தனம் ஆகியவற்றிற்கு நேர்மாறானது. (மாற்கு 6:49, 50; 2 தீமோத்தேயு 1:7) கடவுளுடைய ஊழியர்களுக்கு இந்தக் குணம் எப்போதுமே தேவைப்பட்டிருக்கிறது. சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு இது அதிமுக்கியமாய் தேவைப்படுகிறது.
தைரியமாக இருப்பது என்ற கருத்தைத் தெரிவிப்பதற்கு, சாஸக் என்ற எபிரெய வினைச்சொல் அடிக்கடி பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்தச் சொல், “உறுதியாக இரு” என்பதை அர்த்தப்படுத்துகிறது. இது, செயலோடு பெரும்பாலும் தொடர்புடையதாக இருக்கிறது. அதையே 2 நாளாகமம் 19:11-ல் நாம் காண்கிறோம்: “நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை.” பெரும்பாலும் அமாட்ஸ் என்ற வார்த்தையோடு சேர்த்து சாஸக் பயன்படுத்தப்படுகிறது. இதுவும்கூட “திடமாயிருங்கள்” என்ற அர்த்தத்தையே கொடுக்கிறது. “பலத்துத் திடமனதாயிருங்கள்,” ‘திடமனதாயிருங்கள், . . . உங்கள் இருதயம் ஸ்திரமாயிருப்பதாக’ ஆகிய வசனங்களில் இந்த இரு வினைச்சொற்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.—யோசுவா 10:25; சங்கீதம் 31:24.
தைரியமாக இருப்பதைக் குறிப்பதற்குக் கிரேக்க மொழியில் தாரியோ என்ற வினைச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2 கொரிந்தியர் 5:8-ல் உள்ள “நாம் தைரியமாகவேயிருந்து” என்ற சொற்றொடரில் இந்த வினைச்சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தார்சியோ என்ற வினைச்சொல் மத்தேயு 9:2-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு இவ்வாறு வாசிக்கிறோம்: “மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.” டால்மாவ் என்ற வினைச்சொல் “துணிவு” என்பதாக பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (யூதா 9; மாற்கு 12:34; ரோமர் 15:18; 2 கொரிந்தியர் 11:21) ஒரு காரியத்தைத் துணிவோடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த வினைச்சொல் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையோடு நிலைத்திருக்க தைரியம் தேவை
மகா உன்னதமானவருக்கு உண்மையோடு நிலைத்திருக்க அவருடைய ஊழியர்களுக்கு எப்போதுமே தைரியம் தேவைப்பட்டிருக்கிறது. ஆகவே, இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குத் தயாராக இருந்தபோது, “பலங்கொண்டு திடமனதாயிருங்கள்” என்று மோசே அவர்களிடம் சொன்னார். தனக்குப் பிறகு தலைவராக நியமிக்கப்படவிருந்த யோசுவாவிடமும் அவர் அதையே அறிவுறுத்தினார். (உபாகமம் 31:6, 7) மோசேயின் வார்த்தைகளை வலியுறுத்தும் விதமாக, யெகோவாதாமே யோசுவாவிடம் பிற்பாடு இவ்வாறு கூறினார்: “பலங்கொண்டு திடமனதாயிரு; . . . மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு.” (யோசுவா 1:6, 7, 9) தேவையான தைரியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, அந்தத் தேசத்தார் கடவுளுடைய சட்டத்திற்குச் செவிகொடுத்து, கற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிவது அவசியமாயிருந்தது. (உபாகமம் 31:9-12) அதேபோல, திடமனதோடும் பலத்தோடும் இருப்பதற்கு, கடவுளுடைய சட்டத்தைத் தவறாமல் வாசித்து, அதை கவனமாகக் கடைப்பிடிக்கும்படி யோசுவாவிடம் சொல்லப்பட்டது. “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” (யோசுவா 1:8) தைரியமுள்ளவர்களாக, உண்மையுள்ளவர்களாக, ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதையே இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
தைரியத்தை வளர்ப்பதற்கான வழிகள்
தைரியமாயிருக்கும்படி தெளிவான அநேக கட்டளைகள் பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை ஒருவர் எப்படிப் பெறலாம் என்பதையும் அவை காட்டுகின்றன. (சங்கீதம் 31:24) சக வணக்கத்தாரோடு கூடிவருவது மிகப் பெரிய உதவியாக இருக்கலாம். கஷ்டமான சூழ்நிலையில் இருந்த பவுல், தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களைப் பார்த்தபோது, “தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்.” (அப்போஸ்தலர் 28:15) தைரியசாலியான தாவீது, சங்கீதம் 27:14-ல் பின்வருமாறு சொன்னார்: ‘உன் இருதயம் ஸ்திரமாயிருப்பதாக . . . திடமனதாயிரு.’ 27-ஆம் சங்கீதத்தின் முந்தைய வசனங்களில், தைரியமாயிருக்க தனக்கு எது உதவியது என்பதை அவர் குறிப்பிட்டார்: தன் உயிரின் ‘பெலனானவரான’ யெகோவாமீது சார்ந்திருந்தது (வசனம் 1), கடந்த காலத்தில் தன்னுடைய எதிரிகளை யெகோவா சரிக்கட்டிய சம்பவங்களை நினைத்துப் பார்த்தது (வசனங்கள் 2, 3), யெகோவாவுடைய ஆலயத்திடம் இருந்த மதித்துணர்வு (வசனம் 4), யெகோவா அளிக்கிற பாதுகாப்பு, உதவி, மீட்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தது (வசனங்கள் 5-10), கடவுளுடைய நீதியான வழிகளைப்பற்றி தவறாமல் கற்றறிந்தது (வசனம் 11), விசுவாசம், நம்பிக்கை ஆகிய பண்புகள் (வசனங்கள் 13, 14).
கிறிஸ்தவர்களுக்கு ஏன் தைரியம் தேவை
யெகோவா தேவனிடம் பகைமை பாராட்டும் இந்த உலகின் மனப்பான்மைகளாலும் செயல்களாலும் கறைபடாதிருப்பதற்கு, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தைரியம் தேவை. உலகம் நம்மை பகைத்தாலும் கடவுளுக்குத் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கும் நமக்குத் தைரியம் தேவை. இயேசு கிறிஸ்து தம் சீஷர்களிடம் பின்வருமாறு கூறினார்: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16:33) கடவுளுடைய குமாரன் ஒருபோதும் உலக செல்வாக்கிற்கு இடமளிக்கவில்லை. அதன் வழிகளை எவ்விதத்திலும் பின்பற்றாதிருப்பதன் மூலம் அவர் இந்த உலகத்தை ஜெயித்தார். உலகத்தை ஜெயிப்பதில் இயேசு கிறிஸ்து வைத்த மிகச் சிறந்த முன்மாதிரியும், அவருடைய பிழையற்ற வாழ்க்கை முறையினால் விளைந்த நன்மைகளும், உலகத்திலிருந்து பிரிந்திருக்கவும், அதன்மூலம் கறைபடாதிருக்கவும் தேவையான தைரியத்தை நமக்கு அளிக்கும்.—யோவான் 17:16.
இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் ஒப்படைத்த வேலையை நிறைவேற்றுவதற்குத் தைரியம் தேவை. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்றும் “பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றும் இயேசு தம் சீஷர்களிடம் கூறினார்.—மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 1:8.
கிறிஸ்தவர்கள் பிரசங்கிக்கையில் எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்பார்க்கலாம்? பவுல் பிரசங்கித்தபோது “சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.” (அப்போஸ்தலர் 28:24) கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் பிரசங்கிக்கையில் ஏதோவொரு வித பிரதிபலிப்பை அது ஏற்படுத்துகிறது. அது வலிமை வாய்ந்தது, எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு முக்கிய விவாதத்தை முன்வைக்கிறது. அந்த விவாதத்தில் தாங்கள் எந்தப் பக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்ட அது மக்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சிலர் ராஜ்ய செய்தியை ஒரேயடியாக எதிர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். (அப்போஸ்தலர் 13:50; 18:5, 6) சிலர் கொஞ்ச காலத்திற்குச் செவிகொடுக்கிறார்கள், காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் பின்வாங்கி விடுகிறார்கள். (யோவான் 6:65, 66) ஆனால், வேறு சிலர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நடக்கிறார்கள். (அப்போஸ்தலர் 17:11; லூக்கா 8:15) என்றாலும், நற்செய்தியை எதிர்ப்பவர்கள், அக்கறை காட்டாதவர்கள் ஆகியோரின் சாதகமற்ற பிரதிபலிப்பை எதிர்கொள்ள ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பவர்களுக்குத் தைரியம் தேவை.
துன்புறுத்தலைக் குறித்த சரியான மனப்பான்மை
ஒரு கிறிஸ்தவர், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவர் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில், “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” (2 தீமோத்தேயு 3:12) இருப்பினும், உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லா வகையான கொடிய துன்புறுத்தலையும் தைரியமாகச் சகித்திருக்கிறார்கள். அதே சமயத்தில், கசப்புணர்வோ எதிர்ப்பவர்கள் மீதான விரோதமோ இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏனென்றால், இந்தத் துன்புறுத்தலுக்கு யார் காரணம் என்பதையும், இது ஏன் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். துன்புறுத்தலைக் கண்டு குழப்பமடைவதற்கோ கவலைப்படுவதற்கோ பதிலாக, இந்தச் சூழ்நிலைமைகளில் கிறிஸ்துவைப் போலவே தங்களுடைய உத்தமத்தன்மையும் சோதிக்கப்படுவதற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.—1 பேதுரு 4:12-14.
தைரியமாய் ஜெயிப்பவர்கள்
தம் சீஷர்களிடம் இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” அவருடைய மாதிரியை உண்மையோடு பின்பற்றி, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளும் யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்படும் அமைப்பும் அளிக்கும் அனைத்து உதவிகளையும் பயன்படுத்திக்கொள்வோரால் இயேசுவைப் போன்றே உலகத்தை ஜெயிக்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு யெகோவா தேவன் உதவுவதாக உறுதி அளித்திருப்பதை எபிரெயர் 13 அதிகாரம், 5, 6 வசனங்களில் காணமுடிகிறது: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.”
[பக்கம் 31-ன் பெட்டி]
2007 “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
தேதிகள் நகரம் மொழி
1. ஆக. 31–செப். 2 சென்னை-1 தமிழ்
2. ஆக. 31––செப். 2 கொச்சி-1 மலையாளம்
3. ஆக. 31––செப். 2 கோழிக்கோடு மலையாளம்
4. செப். 7-9 கேங்டாக் நேப்பாளி
5. செப். 21-23 கொச்சி-2 மலையாளம்
6. செப். 28-30 சென்னை-2 தமிழ்
7. செப். 28-30 கோயம்புத்தூர் தமிழ்
8. அக். 5-7 டுலியாஜான் ஹிந்தி
9. அக். 5-7 மதுரை தமிழ்
10. அக். 5-7 திருச்சிராப்பள்ளி தமிழ்
11. அக். 13-14 ஐஜால் மிசோ
12. அக். 12-14 பெங்களூர் ஆங்கிலம்
13. அக். 12-14 ஜாம்ஷெட்பூர் ஹிந்தி
14. அக். 12-14 மங்களூர் கன்னடம்
15. அக். 12-14 மும்பை ஹிந்தி
16. அக். 12-14 விஜயவாடா தெலுங்கு
17. அக். 19-21 பெங்களூர் தமிழ்
18. அக். 19-21 சின்ச்வாட் ஹிந்தி
19. அக். 19-21 ஜலந்தர் பஞ்சாபி
20. அக். 19-21 புது டெல்லி ஹிந்தி
21. அக். 19-21 போர்ட் ப்ளேயர் ஹிந்தி
22. அக். 19-21 செகந்திராபாத் தெலுங்கு
23. அக். 26-28 ஆனந்த் குஜராத்தி
24. அக். 26-28 கொல்கொத்தா பெங்காலி