உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 4/1 பக். 4-7
  • பலன்தரும் பதில்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பலன்தரும் பதில்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மது அருந்துவதில் சமநிலை
  • உடலைக் கெடுக்கும் பழக்கவழக்கங்களைத் தவிருங்கள்
  • “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்”
  • குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துங்கள்
  • கடினமாய் உழைக்கும் தொழிலாளியும் நியாயமாய் நடத்தும் எஜமானரும்
  • ஞானத்தின் உன்னத ஊற்று
  • மது அருந்துவது பற்றிய சமநிலையான கண்ணோட்டம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான ஒரு புத்தகம்
    எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
  • குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல்
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • மது
    விழித்தெழு!—2013
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 4/1 பக். 4-7

பலன்தரும் பதில்கள்!

இன்றைக்கு ஏராளமாகக் கிடைக்கிற சுய உதவி புத்தகங்களில் புதைந்துகிடக்கும் பெரும்பாலான ஆலோசனைகள், மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு உதவுபவையாகவே இருக்கின்றன. ஆனால் பைபிள் அப்படிப்பட்டதல்ல. இதன் ஆலோசனைகள் துன்பத்தில் தவிப்போருக்கு உதவினாலும், அதைவிட மேலான காரியத்தையும் செய்கின்றன. இதன் ஆலோசனைகள், அநாவசியமான சிக்கலில் மாட்ட வைக்கும் தவறுகளை செய்யாதிருக்க ஒருவருக்கு உதவுகின்றன.

பைபிள், “அனுபவமில்லாதோருக்கு விவேகத்தையும், இளைஞன் ஒருவனுக்கு அறிவையும் சிந்திக்கும் திறமையையும் அளிக்க” முடியும். (நீதிமொழிகள் 1:4, NW) பைபிளின் ஆலோசனையைக் கடைப்பிடிக்கும்போது, ‘நல்யோசனை உங்களைக் காப்பாற்றும், புத்தி உங்களைப் பாதுகாக்கும். அதினால் நீங்கள் துன்மார்க்கனுடைய வழிக்கு . . . தப்புவிக்கப்படுவீர்கள்.’ (நீதிமொழிகள் 2:11, 12, 15) பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுவது, உங்களுடைய ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாக்கும், குடும்ப வாழ்க்கையை எப்படி மேம்படுத்தும் எப்படி ஒரு சிறந்த தொழிலாளியாக அல்லது எஜமானராக ஆக்கும் என்பதற்கு குறிப்பிட்ட சில உதாரணங்களைச் சிந்திக்கலாம்.

மது அருந்துவதில் சமநிலை

மதுபானத்தை மிதமாக அருந்துவதை பைபிள் கண்டனம் செய்வதில்லை. இளம் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கொடுக்கையில் திராட்சை மதுவின் சில மருத்துவ குணங்களைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.” (1 தீமோத்தேயு 5:23) மருந்தாக உபயோகிப்பதற்கு மட்டுமே திராட்சை மதுவை கடவுள் கொடுக்கவில்லை என்பது பற்றி பைபிளின் பிற வசனங்களிலிருந்து அறிந்துகொள்ள முடியும். திராட்சை மது “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்” என அது சொல்கிறது. (சங்கீதம் 104:15) என்றாலும், ‘மதுபானத்துக்கு அடிமைப்படுவதை’ குறித்து பைபிள் எச்சரிக்கிறது. (தீத்து 2:3) “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்” என அது குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 23:20, 21) இத்தகைய சமநிலையான ஆலோசனைகளுக்குப் பாராமுகம் காட்டும்போது என்ன விளைவு ஏற்படுகிறது? சில நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

“மதுபானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அயர்லாந்து மக்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 240 கோடி யூரோக்கள் [300 கோடி அமெரிக்க டாலர்கள்] செலவாகின்றன” என உலக சுகாதார அமைப்பு கொடுத்த மதுபானம் பற்றிய உலக நிலை அறிக்கை 2004 (ஆங்கிலம்) கூறுகிறது. “உடல்நல பராமரிப்பு செலவுகள் (27.9 கோடி யூரோக்கள்) சாலை விபத்து செலவுகள் (31.5 கோடி யூரோக்கள்) குடித்து குற்றச்செயலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட செலவுகள் (10 கோடி யூரோக்கள்) குடித்துவிட்டு வேலைக்கு மட்டம்போடுவதால் உற்பத்தி பாதிக்கப்படுதல் (103.4 கோடி யூரோக்கள்).” இவை யாவும் இந்த மாபெரும் பணச்சுமையில் உட்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

குடித்து வெறிப்பதால் ஏற்படும் பணச்சுமையைவிட, மக்களுக்கு ஏற்படுகிற கஷ்டம்தான் மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் 5,00,000-⁠க்கும் அதிகமானோர் குடிகாரர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பிரான்சில், சுமார் 30 சதவீத குடும்ப வன்முறைக்கு குடியே காரணமாக இருந்திருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மதுபானம் சம்பந்தமாக பைபிள் கொடுக்கிற ஆலோசனைகள் உங்களுக்கு நியாயமாகப் படவில்லையா?

உடலைக் கெடுக்கும் பழக்கவழக்கங்களைத் தவிருங்கள்

புகைபிடிப்பது நாகரிகமாகக் கருதப்பட்ட 1942-⁠ஆம் ஆண்டிலேயே புகையிலையைப் பயன்படுத்துவது பைபிள் நியமங்களுக்கு எதிரானது என்பதையும் அதைப் பயன்படுத்தக் கூடாதென்பதையும் காவற்கோபுர பத்திரிகை அதன் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தியது. கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்’ என்ற பைபிள் கட்டளையைப் பின்பற்றுவது அவசியமென அதே ஆண்டில் வெளிவந்த ஒரு கட்டுரை விளக்கியது. (2 கொரிந்தியர் 7:1) இப்போது சுமார் 65 ஆண்டுகளுக்குப் பின்பும்கூட பைபிள் சார்ந்த இந்த ஆலோசனை நியாயமானதாக இருக்கிறது, அல்லவா?

புகையிலையைப் பயன்படுத்துவது, “உலகில் சாவுக்கு வழிவகுக்கும் இரண்டாவது முக்கிய காரணமாயிருக்கிறது” என 2006-⁠ல் உலக சுகாதார அமைப்பு கூறியது. புகையிலையைப் பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சம் ஜனங்கள் சாகிறார்கள். இதோடு ஒப்பிட, எச்ஐவி/எய்ட்ஸ் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பலியாவோரின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் மட்டுமே. 20-⁠ஆம் நூற்றாண்டின்போது, புகைபிடித்ததன் காரணமாக 10 கோடி ஜனங்கள் இறந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது; இந்த எண்ணிக்கை, ஏறக்குறைய அந்த நூற்றாண்டில் நடந்த எல்லாப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கைக்குச் சமம். ஆம், புகையிலையைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமானது என்பதை அறியாதோர் இன்று யாருமிலர்.

“வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்”

பாலியல் விஷயங்களைப்பற்றி பைபிள் சொல்பவற்றை அநேகர் மனதார ஏற்றுக்கொள்வதில்லை. பாலியல் ஆசைகளை அறவே தவிர்க்க வேண்டுமென பைபிள் சொல்வதாக பலர் நினைக்கிறார்கள், ஆனால் பைபிள் அப்படிச் சொல்வதில்லை. மாறாக, மனிதர் தங்களுடைய பாலியல் ஆசைகளை எப்படித் திருப்தி செய்துகொள்வது என்பதன் பேரில் சிறந்த ஆலோசனைகளை அது தருகிறது. திருமணமான ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களுக்குள் மட்டுமே பாலியல் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ள வேண்டுமென பைபிள் கற்பிக்கிறது. (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:4-6; எபிரெயர் 13:4) மணத்துணைகள் தங்களுக்குள் அன்பையும் பாசத்தையும் பரிமாறிக்கொள்வதற்குரிய ஒரு வழியே பாலுறவு ஆகும். (1 கொரிந்தியர் 7:1-5) இப்படி மணத்துணைகளுக்குப் பிறந்த பிள்ளைகள், ஒருவரையொருவர் நேசிக்கிற பெற்றோர்களின் கவனிப்பால் நன்மை அடைகிறார்கள்.​—⁠கொலோசெயர் 3:18-21.

கட்டுப்பாடற்ற பாலியல் பழக்கங்கள் சம்பந்தமாக பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்.” (1 கொரிந்தியர் 6:18) இப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் என்ன? அந்த வசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.” பாலியல் சம்பந்தமாக பைபிள் கொடுக்கும் ஆலோசனையை உதறித்தள்ளுகையில் என்ன சம்பவிக்கிறது?

அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளிலேயே இந்நாட்டில்தான் டீனேஜ் பெண்கள் கருத்தரிப்பது இப்போது மிக அதிகமாகி வருகிறது; ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,50,000 டீனேஜ் பெண்கள் கருத்தரிக்கிறார்கள். கருக்கலைப்புக்குத் தப்பிக்கிற அநேக குழந்தைகள் மணமாகாத தாய்மாருக்குப் பிறந்தவையாகவே இருக்கின்றன. இந்த இளம் தாய்மார் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பைக்காட்டி, ஒழுக்கத்தைப் புகட்டி கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள்; இதன் விளைவாக சிலருடைய முயற்சிக்குப் பலன் கிடைக்கிறது. என்றாலும், கொடுமை என்னவென்றால் இந்த டீனேஜ் தாய்மாருக்குப் பிறக்கிற பையன்களின் வாழ்க்கை பெரும்பாலும் சிறையில்தான் கழிகிறது; அவர்களுடைய பெண் பிள்ளைகளோ பெரும்பாலும் தங்களுடைய தாய்மாரைப் போலவே டீனேஜ் தாய்மாராகி விடுகிறார்கள். கடந்த சில பத்தாண்டுகளின் புள்ளிவிவரத்தை அலசிய பின் ஆய்வாளரான ராபர்ட் லர்மன் இவ்வாறு எழுதினார்: “பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ளுதல், மதுபானத்தையும் போதைப்பொருளையும் பயன்படுத்துதல், டீனேஜிலேயே கருத்தரித்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தல், இளங்குற்றவாளியாதல் போன்ற சமூக பிரச்சினைகள் பெருமளவு நடப்பதற்கு ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் அதிகரிப்பதே காரணமாக இருக்கலாம்.”

கட்டுப்பாடற்ற பாலியல் பழக்கங்களை உடையவர்கள் உடல் ரீதியான, மன ரீதியான ஆபத்துகளையும்கூட சந்திக்கிறார்கள். உதாரணமாக, பீடியாட்ரிக்ஸ் என்ற இதழ் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “பாலியல் காரியங்களில் அதிகமாய் ஈடுபடுகிற டீனேஜர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படுவதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.” உடலுக்கு ஊறு விளைவிக்கும் பிற ஆபத்துகளைப்பற்றி அமெரிக்க சமூக சுகாதார சங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “[அமெரிக்க] மக்களில் பாதிபேருக்கும் அதிகமானோர் தங்களுடைய வாழ்க்கையில் ஏதோவொரு காலக்கட்டத்தில் பால்வினை நோயால் பாதிக்கப்படுவார்கள்.” பாலியல் சம்பந்தப்பட்டதில் பைபிளின் நடைமுறையான ஆலோசனையைப் பின்பற்றியிருந்தால் எவ்வளவோ வேதனையையும் கஷ்டத்தையும் அவர்கள் தவிர்த்திருக்கலாம், அல்லவா?

குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துங்கள்

பைபிள், தீய பழக்கவழக்கங்களைக் குறித்து எச்சரிப்பதோடு நிறுத்திவிடுவதில்லை. குடும்ப வாழ்க்கையின் தரத்தை எப்படி மேம்படுத்துவது என்பதன் பேரில் அது அளிக்கிற நடைமுறையான ஆலோசனைகளைக் கவனியுங்கள்.

கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்லுகிறது: ‘புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவிக்க வேண்டும்.’ (எபேசியர் 5:28) மனைவிகளைத் துச்சமாகக் கருதுவதற்குப் பதிலாக, அவர்கள் ‘பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், . . . விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யும்படி’ கணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். (1 பேதுரு 3:7) சச்சரவுகள் சம்பந்தமாக, கணவர்களுக்கு இவ்வாறு ஆலோசனை கொடுக்கப்படுகிறது: “உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.” (கொலோசெயர் 3:19) இந்த ஆலோசனையைப் பின்பற்றுகிற கணவர் தன் மனைவியின் அன்பையும் மரியாதையையும் பெற்றுக்கொள்வார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்தானே?

மனைவிகளுக்கு பைபிள் இவ்வாறு அறிவுரை அளிக்கிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; . . . மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [அதாவது, ஆழ்ந்த மரியாதையுடையவளாய் இருக்கக்கடவள்].” (எபேசியர் 5:22, 23, 33) தன் கணவரிடத்தில் பேசும்போதோ அவரைப் பற்றி பிறரிடம் பேசும்போதோ இந்த ஆலோசனையைப் பின்பற்றுகிற ஒரு மனைவி அவரால் மிகவும் நேசிக்கப்படுவாள் என்பதை ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?

பிள்ளைகளைப் பயிற்றுவிப்பது சம்பந்தமாக பெற்றோர்களுக்கு பைபிள் கொடுக்கிற ஆலோசனை என்னவெனில், ‘உங்களுடைய வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்’ உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள். (உபாகமம் 6:7) பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைப் போதித்து அன்புடன் சிட்சை அளிக்கும்படி முக்கியமாக தகப்பன்மாருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (எபேசியர் 6:4) பிள்ளைகள் ‘பெற்றாருக்குக் கீழ்ப்படியும்’படியும் ‘தகப்பனையும் தாயையும் கனம்பண்ணும்’படியும் சொல்லப்படுகிறார்கள்.a​—⁠எபேசியர் 6:1-3.

இந்த ஆலோசனையைப் பின்பற்றும்போது குடும்பங்கள் நன்மை அடையும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ‘ஆம், இதையெல்லாம் வாசிப்பதற்கு நன்றாய் இருக்கிறது, ஆனால் நடைமுறைக்கு ஒத்துவருமா, என்ன?’ என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். உங்கள் ஏரியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்குப் போய் பார்க்கும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அங்கே, பைபிளின் ஞானமான ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்க முயலுகிற குடும்பங்களை நீங்கள் பார்க்க முடியும். அவர்களிடம் பேசுங்கள். அங்கு குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் விதத்தைக் கவனியுங்கள். பைபிள் நியமங்களின்படி வாழ்வதால் குடும்பங்களில் உண்மையிலேயே சந்தோஷம் நிலவுவதை நீங்கள் கண்ணாரக் காண்பீர்கள்.

கடினமாய் உழைக்கும் தொழிலாளியும் நியாயமாய் நடத்தும் எஜமானரும்

வேலையைத் தக்கவைத்துக்கொள்வதில் உள்ள அன்றாட பிரச்சினையைச் சமாளிக்க பைபிள் என்ன ஆலோசனை கொடுக்கிறது? தன் வேலையை நன்கு கற்றுக்கொள்கிறவனை பெரும்பாலும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்றும் தன் உழைப்புக்குத் தக்க பலனை அவன் பெறுவான் என்றும் அது குறிப்பிடுகிறது. “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை [அதாவது, திறமையுள்ளவனை] நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்” என்று ஞானமுள்ள அரசராகிய சாலொமோன் கூறினார். (நீதிமொழிகள் 22:29) மறுபட்சத்தில், ‘சோம்பேறியோ கண்களுக்குப் புகை’ எரிச்சலூட்டுவது போல தன் எஜமானுக்கு எரிச்சலூட்டுகிறவனாய் இருக்கிறான். (நீதிமொழிகள் 10:26) பணியாளர்கள் நேர்மையானவர்களாயும் கடினமாய் உழைப்பவர்களாயும் இருக்க வேண்டுமென பைபிள் சொல்கிறது. “திருடுகிறவன் இனித் திருடாமல், . . . தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) எஜமான் பார்க்காத சமயத்திலும் இந்த ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். “சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:22) நீங்கள் ஓர் எஜமானாக இருந்தால், இந்த ஆலோசனையைப் பின்பற்றி நடக்கிற ஒரு பணியாளரை உயர்வாகக் கருதுவீர்கள், அல்லவா?

எஜமான்களுக்கு பைபிள் இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.” (1 தீமோத்தேயு 5:18) எஜமான்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு நியாயமான கூலியை காலந்தாழ்த்தாமல் கொடுக்க வேண்டுமென இஸ்ரவேலர்களுக்கு கடவுளுடைய சட்டம் கற்பித்தது. “பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது” என மோசே எழுதினார். (லேவியராகமம் 19:13) பைபிளின் அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து காலந்தாழ்த்தாமல் தகுந்த கூலியை வழங்குகிற ஓர் எஜமானரிடம் வேலை பார்க்க நீங்கள் விரும்புவீர்கள்தானே?

ஞானத்தின் உன்னத ஊற்று

பழம்பெரும் புத்தகமாகிய பைபிளில் இன்றைக்கும்கூட நடைமுறையான இத்தனை ஆலோசனைகள் இருப்பதை எண்ணி ஆச்சரியப்படுகிறீர்களா? எத்தனையோ புத்தகங்கள் மண்ணில் புதையுண்டு போயிருக்க, பைபிள் மட்டும் இன்றுவரை நிலைத்திருக்கிறதென்றால், அதற்குக் காரணம் அதிலுள்ள விஷயங்கள் மனுஷனுடையது அல்ல, மாறாக அது ‘தேவவசனம்.’​—⁠1 தெசலோனிக்கேயர் 2:13.

கடவுளுடைய வார்த்தையை நன்கு படிப்பதற்கு நேரமெடுத்துக்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அப்படிச் செய்வீர்களானால், பைபிளின் ஆசிரியரான யெகோவா தேவனின் அன்பை நீங்கள் ருசிக்க ஆரம்பிப்பீர்கள். அவர் அளிக்கிற ஆலோசனைகளைப் பின்பற்றும்போது தீங்கிலிருந்து அவை உங்களைப் பாதுகாப்பதையும் உங்களுடைய வாழ்க்கை செழிக்க உதவுவதையும் காண்பீர்கள். இப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் ‘கடவுளிடம் நெருங்கி வருவீர்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார்.’ (யாக்கோபு 4:8, NW) இந்தளவு பயன்தருகிற புத்தகம் வேறேதும் இல்லை.

[அடிக்குறிப்பு]

a உங்கள் குடும்பத்துக்கு உதவும் பைபிள் நியமங்களை விளக்கமாக அறிய யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைக் காண்க.

[பக்கம் 4-ன் படம்]

மதுபானம் சம்பந்தமாக பைபிளின் கருத்து நடைமுறையானதென நீங்கள் நம்புகிறீர்களா?

[பக்கம் 5-ன் படம்]

புகையிலையைத் தவிர்க்கும்படி பைபிள் கொடுக்கும் ஆலோசனையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

[பக்கம் 7-ன் படங்கள்]

பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றும்போது குடும்ப வாழ்க்கை செழிக்கிறது

[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]

கோளம்: Based on NASA photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்