எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகையில்
காதலிக்கும் காலத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தங்களைப் பொருத்தமான ஜோடியாக நினைக்கலாம். இருந்தாலும்கூட எந்தவொரு ஜோடியும் மணவாழ்வில் ஏமாற்றத்தைச் சந்திப்பது சகஜம். ஆனால், திருமணத்திற்கு முன் பொருத்தமான ஜோடியாகத் தெரிந்தவர்கள் பிற்பாடு ஏன் மாறிவிடுகிறார்கள்?
திருமணம் செய்துகொள்வோர் “வேதனையையும் துயரத்தையும்” அடைவர் என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:28, த நியூ இங்லீஷ் பைபிள்) பொதுவாக, மனித அபூரணமே இத்தகைய துன்பத்திற்கு ஓரளவு காரணமாக இருக்கிறது. (ரோமர் 3:23) அதுமட்டுமல்ல, தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவருமேகூட பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்காமல் போவதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். (ஏசாயா 48:17, 18) என்றாலும், சில சமயங்களில் ஓர் ஆணோ பெண்ணோ நடைமுறைக்கு ஒத்துவராத ஆசைகளுடன் தன் மணவாழ்வை ஆரம்பிக்கிறார். இதனால், கருத்து வேறுபாடுகள் கசிந்து பிரச்சினைகள் பூகம்பங்களாக வெடிக்கின்றன.
நடைமுறைக்கு ஒத்துவராத எதிர்பார்ப்புகள்
நீங்கள் ஒரு கணவராக அல்லது மனைவியாக இருந்தால், ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளுடன் மணவாழ்வில் அடியெடுத்து வைத்திருப்பீர்கள்; பெரும்பாலோர் விஷயத்தில் இது உண்மை. உங்களுடைய ஆசைக் கனவு என்னவாக இருந்ததென ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்கள் மணவாழ்வு நீங்கள் நினைத்தபடி அமையவில்லையா? அப்படியென்றால், பிரச்சினைகளுக்குத் தீர்வே இல்லையென முடிவுகட்டி விடாதீர்கள். பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது பிரச்சினைகளைச் சரிசெய்ய உங்களுக்கு உதவும்.a (2 தீமோத்தேயு 3:16, 17) அதே சமயத்தில், மணவாழ்வு சம்பந்தமாக உங்களுக்கு இருந்த சில எதிர்பார்ப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதும் சிறந்தது.
உதாரணமாக, சிலர் மணவாழ்வை கற்பனை கதைகளில் விவரிக்கப்படுவது போன்ற பாச மழை பொழியும் பூஞ்சோலை என நினைத்திருக்கிறார்கள். ஒருவேளை, நீங்களும் உங்கள் துணையும் பெரும்பாலான நேரத்தை ஒன்றாகச் சேர்ந்து கழிப்பீர்கள் என்றோ எல்லாக் கருத்துவேறுபாடுகளையும் இருவருமாகச் சேர்ந்து தேர்ந்த முறையில் சமாதானமாகச் சரிசெய்வீர்கள் என்றோ நீங்கள் நினைத்திருக்கலாம். பாலியல் விஷயங்களில் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்ள மணவாழ்வு வழிசெய்வதாக பலர் நினைத்திருக்கிறார்கள். இந்தப் பொதுவான எதிர்பார்ப்புகள் எல்லாம் நிஜ வாழ்க்கைக்குச் சற்று ஒத்துவராதவையாய் இருப்பதால் சிலருக்கு அவை ஏமாற்றத்தையே தரும்.—ஆதியாகமம் 3:16.
கல்யாணம் பண்ணிக்கொண்டால் ஒருவருடைய வாழ்க்கையில் சந்தோஷம் பிறந்துவிடும் என நினைப்பதுகூட நடைமுறைக்கு ஒத்துவராத கனவுதான். வாழ்க்கைத் துணையாக ஒருவர் கிடைக்கும்போது பெருமகிழ்ச்சி அடைவது உண்மையே. (நீதிமொழிகள் 18:22; 31:10; பிரசங்கி 4:9) ஆனால், திருமணம் எல்லாக் கருத்துவேறுபாடுகளுக்கும் அற்புத நிவாரணியாய் இருக்குமென எதிர்பார்க்கலாமா? அவ்வாறு நினைப்பவர்கள் திடீரென்று நிஜத்தை சந்திக்க நேரிடும்!
வெளிப்படுத்தாத எதிர்பார்ப்புகள்
எல்லா எதிர்பார்ப்புகளுமே நடைமுறைக்கு ஒத்துவராதவை அல்ல. மாறாக, சில ஆசைகள் நியாயமானவையே. என்றாலும், சில எதிர்பார்ப்புகளால் பிரச்சினைகள் தலைதூக்கலாம். “தம்பதியரில் ஒருவர் தன்னுடைய ஆசை ஒன்று நிறைவேற காத்திருக்கையில், அப்படியொரு ஆசை இருப்பதுபற்றி அவருடைய துணைக்குத் தெரிவதே இல்லை; இதனால் தம்பதியர் ஒருவருக்கொருவர் கோபப்படுவதை நான் பார்க்கிறேன்” என திருமண ஆலோசகர் ஒருவர் கூறுகிறார். இப்பிரச்சினை எப்படி உருவாகலாம் என்பதை அறிய பின்வரும் சூழ்நிலையைக் கவனியுங்கள்.
மேரி என்ற பெண் தன்னுடைய ஊரிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிற டேவிட் என்பவரை மணம் செய்கிறாள். அவள் கூச்ச சுபாவமுள்ளவளாய் இருந்ததால் ஒரு புதிய இடத்திற்கு மாறிச் செல்வது தனக்குச் சிரமமாக இருக்கும் என்பதைத் திருமணத்திற்கு முன்பே உணர்ந்தாள். இருந்தாலும், தன்னுடைய கூச்ச சுபாவத்தைச் சமாளிக்க தன் கணவர் தனக்கு உதவுவார் என அவள் உறுதியாக நம்பினாள். உதாரணமாக, தன் கணவர் தன்னுடன் இருந்து அவருடைய நண்பர்களுடன் நன்கு பழகுவதற்கு உதவி செய்வார் என எதிர்பார்த்தாள். ஆனால், நடந்தது வேறு. மேரி ஊருக்குப் புதியவள் என்பதையே மறந்து டேவிட் அவளைத் தனிமையில் விட்டுவிட்டு தனக்கிருக்கும் பல நண்பர்களுடன் உரையாடுவதில் மூழ்குகிறார். தான் புறக்கணிக்கப்பட்டது போலவும் கைவிடப்பட்டது போலவும் மேரி உணருகிறாள். ‘டேவிட்டுக்கு ஏன்தான் என் உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்க முடியவில்லையோ?’ என யோசிக்கிறாள்.
மேரியின் எதிர்பார்ப்பு நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றா? இல்லவே இல்லை. புதிய சூழ்நிலைக்குத் தன்னைப் பழக்கிக்கொள்ள தன் கணவரின் உதவியை அவள் எதிர்பார்க்கிறாள், அவ்வளவுதான். மேரி கூச்ச சுபாவமுடையவள் என்பதால் முன்பின் அறிமுகமில்லாத புதிய முகங்களைப் பார்க்கும்போது அவளுடைய நெஞ்சு படப்படக்கிறது. ஆனால், மேரி தன்னுடைய உணர்ச்சிகளைத் தன் கணவரிடம் வாயைத் திறந்து சொல்லததுதான் தவறு. இதனால், தன் மனைவி சுமக்கிற சிரமங்களைப்பற்றி டேவிட்டுக்குக் கொஞ்சம்கூட தெரிவதில்லை. நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன நடக்கும்? மனக்கசப்பு வேர்விட்டு, காலப்போக்கில் தன்னுடைய கணவர் தன் உணர்ச்சிகளை அப்படியே அலட்சியம் செய்பவரென மேரி நினைக்கலாம்.
உங்கள் தேவைகளைப் புரிந்துகொள்ளாமல் உங்களுடைய மணத்துணை பாராமுகம் காட்டுவதாக நினைத்து நீங்களும்கூட ஏமாற்றமும் விரக்தியும் அடைந்திருக்கலாம். அப்படியானால், நீங்கள் என்ன செய்யலாம்?
மனம்விட்டு பேசுங்கள்
எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகையில் மனதுக்கு உண்மையிலேயே வேதனையாக இருக்கும். (நீதிமொழிகள் 13:12) என்றாலும், நிலைமையைச் சரிசெய்ய ஒரு வழி உள்ளது. “ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்” என ஒரு பைபிள் பழமொழி குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 16:23, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, உங்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாவிட்டால், உங்கள் துணையுடன் அதைக் குறித்துப் பேசுங்கள்.
உங்களுடைய பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு ஏற்ற நேரத்தை, ஏற்ற சூழ்நிலையை, ஏற்ற வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். (நீதிமொழிகள் 25:11) மரியாதை குறையாமல் நிதானமாய்ப் பேசுங்கள். உங்களுடைய நோக்கம், உங்கள் துணையைக் குற்றப்படுத்துவது அல்ல, மாறாக உங்களுடைய எதிர்பார்ப்புகளையும் உணர்ச்சிகளையும் தெரிவிப்பதே என்பதை மனதில் வைத்திருங்கள்.—நீதிமொழிகள் 15:1.
இதை நீங்கள் ஏன் செய்தே ஆக வேண்டும்? அக்கறையுள்ள துணையால் உங்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாதா? ஒருவேளை, உங்களுடைய மணத்துணை காரியங்களை வித்தியாசமான கோணத்தில் பார்த்திருக்கலாம்; ஆனால், உங்களுடைய தேவைகளைப்பற்றி அவரிடம் பேசினால் கண்டிப்பாக அவற்றிற்கும் அவர் கவனம் செலுத்துவார். உங்கள் விருப்பத்தையோ தேவையையோபற்றி சொல்வது உங்களுடைய மணவாழ்வு தோல்வியடைந்து விட்டதெனவும் அர்த்தப்படுத்தாது, உங்களுடைய துணை உணர்ச்சியற்றவர் எனவும் அர்த்தப்படுத்தாது.
ஆகவே, எதிர்பார்ப்பதை உங்கள் துணையிடம் சொல்லத் தயங்காதீர்கள். உதாரணமாக, மேற்குறிப்பிடப்பட்ட மேரியின் விஷயத்தில், அவள் டேவிட்டிடம் இவ்வாறு சொல்லலாம்: “முன்பின் தெரியாத அத்தனை புதியவர்களிடம் பழகுவதற்கு எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய தயக்கம் போகும்வரை, எல்லாரிடமும் பழக எனக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?”
‘கேட்கிறதற்குத் தீவிரமாய் இருங்கள்’
இப்போது மற்றொரு கோணத்தில் சிந்திக்கலாம். உங்களுடைய துணையின் நியாயமான எதிர்பார்ப்பை நீங்கள் பூர்த்தி செய்யாததால் அவர் மனம்வெந்துபோய் இருக்கிறார். அதனால் உங்களிடத்திற்கு வருகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வரும்போது உங்கள் துணை சொல்வதைக் கேளுங்கள்! உங்கள் தவறை ஒத்துக்கொள்ளுங்கள், அதைச் சமாளிக்க முயலாதீர்கள். அதற்கு மாறாக, ‘கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருங்கள்.’ (யாக்கோபு 1:19; நீதிமொழிகள் 18:13) அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்: “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:24.
உங்களுடைய துணையின் நிலையில் உங்களை வைத்துப் பார்ப்பதன்மூலம் இதைச் செய்யலாம். பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘புருஷர்களே, . . . நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே [உங்கள் மனைவிகளுடனே] வாழுங்கள்’; அல்லது ஜே. பி. ஃபிலிப்ஸ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி, “கணவர்களே, உங்களுடன் சேர்ந்து வாழும் மனைவிகளைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.” (1 பேதுரு 3:7) அதேபோல், மனைவிகளும் தங்கள் கணவர்களைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.
நீங்களும் உங்கள் துணையும் எந்தளவு பொருத்தமானவர்களாக இருந்தாலும் சரி, எல்லாக் காரியங்களிலும் உங்களுக்கு ஒரேவிதமான கண்ணோட்டம் இருக்காது என்பதை நினைவில் வையுங்கள். (“ஒரே காட்சி, வித்தியாசமான கண்ணோட்டங்கள்” என்ற பெட்டியைக் காண்க.) உண்மையிலேயே இது ஓர் ஆசீர்வாதம்; ஏனென்றால், காரியங்களை மற்றொருவரின் நோக்குநிலையில் பார்க்க முடிகிறது. நீங்களும் உங்களுடைய துணையும் அவரவருடைய குடும்பப் பின்னணியையும் கலாச்சாரத்தையும் பொறுத்து வித்தியாசப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் மணவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். அதன் விளைவாக, நீங்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கிறவர்களாக இருக்கலாம்; என்றாலும், ஒரேவிதமான எதிர்பார்ப்புகள் இல்லாதிருக்கலாம்.
உதாரணமாக, தலைமைவகிப்பைக் குறித்த பைபிள் நியமத்தை கிறிஸ்தவ மணத்துணைகள் நன்கு அறிந்திருக்கலாம். (எபேசியர் 5:22, 23) ஆனால், தலைமை வகிப்பைப் பொறுத்ததிலும் அதற்குக் கீழ்ப்படிதலைக் காட்டுவதைப் பொறுத்ததிலும் உங்கள் குடும்பம் எப்படி நடந்துகொள்ளும்? நீங்கள் இருவரும் பைபிள் நியமங்களின்படி நடக்கிறீர்களா, அவற்றைப் பின்பற்ற ஊக்கமாய் முயலுகிறீர்களா?
அன்றாட வாழ்க்கையின் பிற விஷயங்களிலும்கூட உங்களுக்கு வித்தியாசப்பட்ட கருத்துகள் இருக்கலாம். யார் யார் என்னென்ன வீட்டு வேலைகளைச் செய்வது? நீங்கள் எப்போது உறவினர்களைப் போய்ப் பார்ப்பது, எவ்வளவு நேரத்தை அவர்களோடு செலவிடுவது? ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதை கிறிஸ்தவ மணத்துணைகள் எப்படி வெளிக்காட்டுவார்கள்? (மத்தேயு 6:33) பண விஷயத்தைப் பொறுத்ததில் கடனில் மூழ்கிவிடுவது எளிது; ஆகவே, சிக்கனமாய் இருப்பதும் சேமித்து வைப்பதும் நல்லது. இருந்தாலும், சிக்கனமாய் இருப்பது சேமித்து வைப்பது என்றால் என்ன? இதுபோன்ற விஷயங்களைப்பற்றி மரியாதைக்குரிய விதத்தில் மனம்விட்டு பேசுவது சிறந்த பலனைத் தரும்.
இதுவரையில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாதிருந்தாலும்கூட, இவ்விதமாகப் பேசுவது மணவாழ்வில் மிகுந்த சமாதானத்தைக் காண உங்களுக்கு உதவும். ஆம், அப்போஸ்தலன் பவுல் தருகிற பின்வரும் அறிவுரையை உங்களால் நன்கு பின்பற்ற முடியும்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் தம்பதியருக்கான சிறந்த ஆலோசனைகள் பல உள்ளன.
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
ஒரே காட்சி, வித்தியாசமான கண்ணோட்டங்கள்
‘சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஒன்று, கண்ணைக்கவரும் வனப்புடைய இயற்கைக் காட்சியைக் காண்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அந்தப் பயணிகள் எல்லாருமே ஒரே காட்சியைத்தான் பார்க்கிறார்கள்; என்றாலும், ஒவ்வொருவரும் அதை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் இருக்கிறது. எந்த இரு நபர்களும் ஒரே இடத்தில் நின்றுகொண்டில்லை. அதுமட்டுமல்ல, எல்லாருமே அந்த இயற்கைக் காட்சியின் ஒரே பகுதிக்குக் கவனம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு ஆளும் ஒரு வித்தியாசப்பட்ட அம்சத்தை மிகவும் ஆசையோடு கண்டு மகிழ்கிறார். மணவாழ்விலும் இதுவே நடக்கிறது. அவர்கள் ஏக பொருத்தமாக இருந்தாலுங்கூட, எந்த இரண்டு துணைகளும் ஒரே விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில்லை. . . . இந்த வேறுபாடுகளை கணவன்-மனைவி என்ற பந்தத்திற்குள் ஒன்றுபடுத்துவதற்கு முயற்சி செய்வதும் பேச்சுத்தொடர்பில் உட்படுகிறது. இதைச் செய்ய வேண்டுமானால் பேசுவதற்காக நேரம் செலவிடுவது அவசியமாகிறது.’—காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1993, பக்கம் 4.
[பக்கம் 11-ன் பெட்டி]
இப்போது நீங்கள் செய்ய முடிந்தவை
• உங்களுடைய எதிர்பார்ப்புகளை மீண்டும் சீர்தூக்கிப் பாருங்கள். அவை நடைமுறையானவையா? நீங்கள் அளவுக்கதிகமாக உங்கள் துணையிடம் எதிர்பார்க்கிறீர்களா?—பிலிப்பியர் 2:4; 4:5, NW.
• நடைமுறைக்கு ஒத்துவராத எதிர்பார்ப்புகளை விட்டுக்கொடுக்க முயலுங்கள். உதாரணமாக, “நமக்குள் எந்த அபிப்பிராய பேதங்களும் வரக்கூடாது” என்று சொல்வதற்குப் பதிலாக, வேறுபாடுகளை சுமூகமாக சரிசெய்ய தீர்மானம் எடுங்கள்.—எபேசியர் 4:32.
• உங்கள் எதிர்பார்ப்புகளைப்பற்றி பேசுங்கள். விஷயங்களை மனந்திறந்து பேசுவது, ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் காட்டுவது எப்படியென கற்றுக்கொள்வதற்கு முக்கியப் படியாகும்.—எபேசியர் 5:33.
[பக்கம் 9-ன் படம்]
உங்கள் துணையின் குறைகளை ‘கேட்கிறதற்குத் தீவிரமாய் இருங்கள்’