இளைஞர்களே—கடவுளைக் கனப்படுத்துகிற இலக்குகளை நாடுங்கள்
“தேவபக்தியை இலக்காக வைத்து உன்னையே பயிற்றுவித்துக் கொள்.”—1 தீமோத்தேயு 4:7, NW.
1, 2. (அ) பவுல் ஏன் தீமோத்தேயுவைப் பாராட்டினார்? (ஆ) இன்று இளைஞர்கள் எவ்வாறு ‘தேவபக்தியை இலக்காக வைத்து தங்களைப் பயிற்றுவித்துக்’ கொள்கிறார்கள்?
‘உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. . . . தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தான்.’ (பிலிப்பியர் 2:20, 22) இத்தகைய மனமார்ந்த பாராட்டை, பிலிப்பி பட்டணத்திலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அவர் யாரை அப்படிப் பாராட்டினார்? அவருடைய பயணங்களில் உறுதுணையாய் இருந்த இளம் தீமோத்தேயுவைத்தான். பாசத்தோடும் நம்பிக்கையோடும் பவுல் சொன்ன இந்த வார்த்தைகள் தீமோத்தேயுவுக்கு எவ்வளவு சந்தோஷத்தைத் தந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
2 தீமோத்தேயுவைப் போன்ற ஆன்மீகச் சிந்தையுள்ள இளைஞர்கள் யெகோவாவின் மக்களுக்கு எப்போதுமே மதிப்புமிக்க சொத்தாக இருந்திருக்கிறார்கள். (சங்கீதம் 110:3) இன்றோ, கடவுளுடைய அமைப்பிலுள்ள அநேக இளைஞர்கள் பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும் கட்டுமானப் பணியில் வாலண்டியர்களாகவும் பெத்தேல் ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். மற்ற வேலைகளைக் கவனித்துக்கொண்டு அதே சமயத்தில், சபை காரியங்களிலும் பக்திவைராக்கியமாகப் பங்கேற்கிற இளைஞர்களே, சபாஷ்! உங்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்! இத்தகைய இளைஞர்கள், நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவாவைக் கனப்படுத்துகிற இலக்குகளை வைப்பதன்மூலம் உண்மையான திருப்தியைப் பெறுகிறார்கள். இவர்கள் ‘தேவபக்தியை இலக்காக வைத்து தங்களைப் பயிற்றுவித்துக்’ கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.—1 தீமோத்தேயு 4:7, NW, 8.
3. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
3 ஓர் இளைஞராக, குறிப்பிட்ட ஆன்மீக இலக்குகளை அடைய நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? அவ்வாறு அடைவதற்கு உதவியையும் ஊக்குவிப்பையும் நீங்கள் எங்கிருந்து பெற முடியும்? பேராசையோடு பணத்தையும் பொருளையும் நாடுகிற இந்த உலகின் அழுத்தங்களை நீங்கள் எவ்வாறு எதிர்த்து நிற்கலாம்? கடவுளைக் கனப்படுத்துகிற இலக்குகளை நாடினால் எத்தகைய ஆசீர்வாதங்களை நீங்கள் அறுவடை செய்வீர்கள்? தீமோத்தேயுவின் வாழ்க்கையையும் அவருடைய வாழ்க்கைப் பணியையும் சிந்திப்பதன்மூலம் இத்தகைய கேள்விகளுக்கு நாம் பதிலைக் கண்டடையலாம்.
தீமோத்தேயுவின் பின்னணி
4. ஒரு கிறிஸ்தவராக தீமோத்தேயுவின் வாழ்க்கைப் பணியைப்பற்றி சுருக்கமாக விவரிக்கவும்.
4 ரோம மாகாணமாகிய கலாத்தியாவிலுள்ள லீஸ்திரா என்ற சிறிய பட்டணத்தில் தீமோத்தேயு வளர்ந்தார். பொ.ச. 47 வாக்கில் லீஸ்திராவில் பவுல் பிரசங்கித்தபோது, பருவ வயதிலிருந்த தீமோத்தேயு கிறிஸ்தவத்தைப்பற்றி அறிந்துகொண்டிருக்க வேண்டும். சீக்கிரத்திலேயே, அங்கிருந்த கிறிஸ்தவ சகோதரர்களிடம் அவர் நல்ல பெயரை எடுத்திருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து லீஸ்திராவிற்கு பவுல் திரும்பி வந்தபோது, தீமோத்தேயுவின் ஆன்மீக முன்னேற்றங்களை அறிந்துகொண்டார்; எனவே, மிஷனரி பயணத்தில் தன்னோடு அழைத்துச் செல்ல பவுல் அவரைத் தேர்ந்தெடுத்தார். (அப்போஸ்தலர் 14:5-20; 16:1-3) தீமோத்தேயு முதிர்ச்சியுள்ளவராக வளர்ந்தபோது இன்னும் கூடுதலான பொறுப்புகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன; சகோதரர்களைப் பலப்படுத்துகிற முக்கியப் பொறுப்புடன் பல முறை பயணப்பட்டதும் அதில் உட்பட்டிருந்தது. பொ.ச. 65 வாக்கில் பவுல், ரோமச் சிறையிலிருந்து தீமோத்தேயுவுக்குக் கடிதம் எழுதியபோது, தீமோத்தேயு எபேசுவில் கிறிஸ்தவ மூப்பராகச் சேவை செய்துவந்தார்.
5. ஆன்மீக இலக்குகளை அடைவதற்கான தீமோத்தேயுவின் தீர்மானத்திற்கு எந்த இரண்டு அம்சங்கள் உதவியதாக 2 தீமோத்தேயு 3:14, 15 சொல்கிறது?
5 தீமோத்தேயு ஆன்மீக இலக்குகளை நாடவே தீர்மானித்தார். ஆனால், அவ்வாறு செய்ய எது அவரைத் தூண்டியது? தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் அவரைத் தூண்டிய இரண்டு அம்சங்களை பவுல் குறிப்பிட்டார். ‘நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், . . . பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.’ (2 தீமோத்தேயு 3:14, 15) தீமோத்தேயு தெரிவுகள் செய்வதற்கு மற்ற கிறிஸ்தவர்கள் எவ்வாறு உதவினார்கள் என்பதைப்பற்றி நாம் முதலில் ஆராயலாம்.
நல்ல முன்மாதிரிகளால் கிடைத்த நன்மை
6. எத்தகைய பயிற்றுவிப்பு தீமோத்தேயுவுக்குக் கிடைத்தது, அவர் அதற்கு எவ்வாறு பிரதிபலித்தார்?
6 தீமோத்தேயுவின் குடும்பத்தார் மத்தியில் மத சம்பந்தமான வேறுபாடு இருந்தது. அவருடைய அப்பா கிரேக்கர்; அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும் யூதர்கள். (அப்போஸ்தலர் 16:1) சிசுப்பருவத்திலிருந்தே ஐனிக்கேயாளும் லோவிசாளும் எபிரெய வேதாகமத்திலுள்ள சத்தியங்களை தீமோத்தேயுவுக்குக் கற்பித்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு, கிறிஸ்தவ போதனைகளை நம்புவதற்கு அவருக்கு உதவினார்கள் என்பதில் சந்தேகமில்லை. தனக்குக் கிடைத்த சிறந்த பயிற்றுவிப்பை தீமோத்தேயு நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.”—2 தீமோத்தேயு 1:5.
7. அநேக இளைஞர்கள் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், இது அவர்களுக்கு எவ்வாறு பயன் அளிப்பதாய் இருக்கிறது?
7 ஐனிக்கேயாளையும் லோவிசாளையும்போல ஆன்மீக இலக்குகளின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிற, கடவுள் பயமுள்ள பெற்றோரும் தாத்தா பாட்டிமாரும் இன்று அநேக இளைஞர்களுக்கு இருக்கிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த பெரும் ஆசீர்வாதம். சாமிரா என்ற பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள்; அவள் டீனேஜராக இருந்தபோது, அடிக்கடி பெற்றோருடன் நீண்டநேரம் உரையாடியதை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாள். “யெகோவாவின் நோக்குநிலையைக் கொண்டிருக்கவும் பிரசங்க வேலையை முதலிடத்தில் வைக்கவும் எனக்கு அம்மா அப்பா கற்றுக்கொடுத்தார்கள்; முழுநேர ஊழியத்தை செய்யும்படி அவர்கள் என்னை எப்போதும் ஊக்குவித்தார்கள்” என்று அவள் சொல்கிறாள். பெற்றோர் தந்த ஊக்குவிப்பை சாமிரா ஏற்றுக்கொண்டாள். இப்போது தன்னுடைய நாட்டிலுள்ள பெத்தேல் குடும்பத்தில் சேவை செய்யும் விசேஷ வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள். ஆன்மீக இலக்குகளில் கவனத்தை ஊன்ற வைக்கும்படி உங்களுடைய பெற்றோர் ஊக்குவித்தால், அவர்களுடைய அறிவுரையைக் கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய மிகச் சிறந்த நலனில் அவர்கள் அக்கறை உடையவர்களாய் இருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 1:5.
8. உற்சாகமூட்டுகிற கிறிஸ்தவத் தோழமையிலிருந்து தீமோத்தேயு எவ்வாறு பயன் அடைந்தார்?
8 கிறிஸ்தவ சகோதரத்துவத்தில் உற்சாகமூட்டுகிற தோழமையை வைத்துக் கொள்வதும்கூட மிக முக்கியம். தன்னுடைய சபையிலிருந்த மூப்பர்களோடும், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலிருந்த இக்கோனியா சபையின் மூப்பர்களோடும் தீமோத்தேயு நன்கு பரிச்சயமானவராக இருந்தார். (அப்போஸ்தலர் 16:1, 2) துடிப்பும் ஆர்வமுமிக்கவராய் இருந்த பவுலுடன் நெருங்கிய நட்புறவை வளர்த்துக் கொண்டார். (பிலிப்பியர் 3:14) அறிவுரைகளை தீமோத்தேயு மனமார ஏற்றுக்கொண்டாரென்றும் விசுவாசத்திற்கு முன்மாதிரிகளாய் திகழ்ந்தவர்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றத் தயாராக இருந்தாரென்றும் பவுலின் கடிதங்கள் காட்டுகின்றன. (1 கொரிந்தியர் 4:17; 1 தீமோத்தேயு 4:6, 12-16) பவுல் இவ்வாறு எழுதினார்: “என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றி வந்திருக்கிறாய்.” (2 தீமோத்தேயு 3:10, பொது மொழிபெயர்ப்பு) ஆம், பவுலின் மாதிரியை தீமோத்தேயு அச்சுப்பிசகாமல் பின்பற்றினார். அதேவிதமாகவே, சபையில் ஆன்மீக பலம் படைத்தவர்களிடம் நெருங்கிப் பழகினால், நல்ல ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கு உங்களுக்கு உதவி கிடைக்கும்.—2 தீமோத்தேயு 2:20-22.
“பரிசுத்த வேத எழுத்துக்களை” படியுங்கள்
9. ‘தேவபக்தியை இலக்காக வைத்து உங்களைப் பயிற்றுவித்துக் கொள்வதற்கு’ சரியான நபர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதோடு வேறு எதையும் நீங்கள் செய்ய வேண்டும்?
9 ஆன்மீக இலக்குகளை அடைய சரியான நபர்களுடன் நட்பு வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா? போதாது. தீமோத்தேயுவைப் போல, “பரிசுத்த வேத எழுத்துக்களை” நீங்கள் கருத்தூன்றிப் படிக்கவும் வேண்டும். படிப்பது உங்களுக்கு அவ்வளவு சுவாரஸ்யமானதாய் இல்லாதிருக்கலாம். ஆனால், தீமோத்தேயு ‘தேவபக்தியை இலக்காக வைத்து தன்னைப் பயிற்றுவித்துக் கொள்ள’ வேண்டியிருந்தது என்பதை நினைவில் வையுங்கள். விளையாட்டு வீரர்கள் தங்களுடைய இலக்கை அடைவதற்காக மாதக்கணக்கில் கடும் பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதைப் போலவே, ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு தியாகமும் விடாமுயற்சியும் தேவைப்படுகின்றன. (1 தீமோத்தேயு 4:7, NW, 8, 10) ‘ஆனால், பைபிளைப் படிப்பது என்னுடைய இலக்குகளை அடைய எவ்வாறு உதவும்?’ என நீங்கள் கேட்கலாம். அதற்கு உதவுகிற மூன்று வழிகளை நாம் சிந்திப்போம்.
10, 11. ஆன்மீக இலக்குகளை அடைய பைபிள் வசனங்கள் உங்களை ஏன் தூண்டுவிக்கலாம்? உதாரணம் கொடுங்கள்.
10 முதலாவதாக, பைபிள் வசனங்கள் சரியானதைச் செய்வதற்கான உள்ளத் தூண்டுதலை உங்களில் ஏற்படுத்தும். பைபிள் வசனங்கள், நம்முடைய பரலோகத் தகப்பனுடைய அருமையான குணாதிசயங்களையும், நமக்காக அவர் தலைசிறந்த விதத்தில் அன்பைக் காட்டியதையும், தம்முடைய உண்மை ஊழியர்களுக்காக அவர் வைத்திருக்கிற நித்திய நன்மைகளையும் நமக்குத் தெரிவிக்கின்றன. (ஆமோஸ் 3:7; யோவான் 3:16; ரோமர் 15:4) யெகோவாவைப்பற்றிய அறிவு வளரவளர, அவர் மீதுள்ள அன்பும், அவருக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதற்கான ஆர்வமும் வளரும்.
11 தனிப்பட்ட விதத்தில் தவறாமல் பைபிளைப் படிப்பது சத்தியத்தைத் தங்களுடையதாக்கிக் கொள்வதற்கு மிகவும் இன்றியமையாததாய் இருப்பதாக அநேக கிறிஸ்தவ இளைஞர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக, அடெல் என்ற பெண் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டாள்; ஆனால், ஆன்மீக இலக்குகளை அவள் வைத்ததே கிடையாது. அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என்னுடைய பெற்றோர் என்னை ராஜ்ய மன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள், ஆனால், நான் தனிப்பட்ட விதத்தில் பைபிளைப் படிக்கவும் இல்லை, கூட்டங்களில் கவனிக்கவும் இல்லை.” அவளுடைய அக்கா முழுக்காட்டுதல் பெற்ற பிறகோ, சத்தியத்தில் அடெல் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினாள். “முழு பைபிளையும் வாசித்து முடிக்க வேண்டுமென்ற இலக்கோடு அதை வாசிக்க ஆரம்பித்தேன்; ஒவ்வொரு முறையும் கொஞ்ச நேரம் வாசித்தபிறகு, அந்த விஷயங்களைப்பற்றி குறிப்பு எழுதிக் கொள்வேன். அப்படி எழுதிய குறிப்புகளை இன்னும்கூட வைத்திருக்கிறேன். இப்படியாக ஒரே வருடத்தில் முழு பைபிளையும் வாசித்து முடித்தேன்” என்று அவள் சொல்கிறாள். அதன் விளைவாக, யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க அடெல் தூண்டப்பட்டாள். உடல் ஊனத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிற போதிலும்கூட அவள் பயனியராக அதாவது, முழுநேர ஊழியராக இருக்கிறாள்.
12, 13. (அ) ஓர் இளைஞர் என்ன மாற்றங்களைச் செய்ய பைபிள் படிப்பு உதவும், எப்படி உதவும்? (ஆ) கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற நடைமுறை ஞானத்திற்கு உதாரணங்களைத் தருக.
12 இரண்டாவதாக, உங்களுடைய சுபாவத்தில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு பைபிள் உங்களுக்கு உதவும். ‘பரிசுத்த வேத எழுத்துக்கள்,’ ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜமுள்ளவைகளாயிருக்கின்றன’ என்று தீமோத்தேயுவிடம் பவுல் கூறினார். (2 தீமோத்தேயு 3:16, 17) கடவுளுடைய வார்த்தையுடன் தொடர்புடைய விஷயங்களைத் தவறாமல் தியானிப்பதன்மூலமும் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன்மூலமும் கடவுளுடைய ஆவி உங்களுடைய சுபாவத்தைச் செதுக்கிச் சீராக்க அனுமதியுங்கள். அதனால், மனத்தாழ்மை, விடாமுயற்சி, கடின உழைப்பு, உடன் கிறிஸ்தவர்களின்மீது உள்ளப்பூர்வமான அன்பு போன்ற இன்றியமையாத குணங்களை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். (1 தீமோத்தேயு 4:15) இத்தகைய குணங்கள் தீமோத்தேயுவிடம் இருந்தன; இதனால், பவுலுக்கும்சரி தீமோத்தேயு சேவை செய்த சபைகளுக்கும்சரி அவர் சொத்தாகத் திகழ்ந்தார்.—பிலிப்பியர் 2:20-22.
13 மூன்றாவதாக, கடவுளுடைய வார்த்தை நடைமுறை ஞானத்தின் களஞ்சியமாக விளங்குகிறது. (சங்கீதம் 1:1-3; 19:7; 2 தீமோத்தேயு 2:7; 3:15) நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுக்கவும், தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கவும், எண்ணற்ற பிற சவால்களைச் சமாளிக்கவும் அது உங்களுக்கு உதவும். (ஆதியாகமம் 34:1, 2; சங்கீதம் 119:37; 1 கொரிந்தியர் 7:36) ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு ஞானமான தீர்மானங்களை இப்போது செய்வது மிக முக்கியம்.
“நல்ல போராட்டத்தைப் போராடு”
14. ஆன்மீக இலக்குகளை நாடுவது ஏன் எளிதானதல்ல?
14 யெகோவாவைக் கனப்படுத்துகிற இலக்குகளுக்கு முதலிடம் கொடுப்பதே ஞானமான செயல்; ஆனால், அது நிச்சயம் எளிதானதல்ல. உதாரணமாக, உயர் கல்வியும் பணம் கொழிக்கும் தொழிலுமே உண்மையான வெற்றிக்கும் சந்தோஷத்துக்கும் மிக அவசியம் என சொந்தபந்தங்கள், நண்பர்கள், நல்லெண்ணமுள்ள ஆசிரியர்கள் ஆகியோர் நம்பலாம்; அதனால், வாழ்க்கைப் பணியை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, உங்களுக்கு அவர்கள் அதிக நெருக்கடியை ஏற்படுத்தலாம். (ரோமர் 12:2) யெகோவா உங்களுக்காக வைத்திருக்கிற ‘நித்தியஜீவனைப் பற்றிக்கொள்வதற்காக’ தீமோத்தேயுவைப்போல, நீங்களும் ‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட’ வேண்டியிருக்கும்.—1 தீமோத்தேயு 6:12, NW; 2 தீமோத்தேயு 3:12.
15. தீமோத்தேயு எத்தகைய எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்திருக்கலாம்?
15 சத்தியத்தில் இல்லாத குடும்பத்தார் உங்கள் தெரிவுகளை ஏற்றுக்கொள்ளாதபோது, அது கடும் சோதனையாக இருக்கலாம். தீமோத்தேயு அத்தகைய எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்திருக்கலாம். தீமோத்தேயுவின் குடும்பத்தார் “கல்வியறிவும் வசதியும் படைத்த உயர் வர்க்கத்தினராக” இருந்திருக்கலாம் என்று ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. அவர் உயர்கல்வியைப் பெற்று குடும்பத்தொழிலை எடுத்து நடத்த வேண்டுமென அவருடைய அப்பா எதிர்பார்த்திருக்கலாம்.a பொருளாதார நன்மை அளிக்காததும், அபாயங்கள் நிறைந்ததுமான மிஷனரி வேலையில் பவுலுடன் சேர்ந்து தீமோத்தேயு செல்ல தீர்மானித்ததை அறிந்தபோது, அவருடைய அப்பா எப்படிப் பிரதிபலித்திருப்பார் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்!
16. தன் அப்பாவிடமிருந்து வந்த எதிர்ப்பை ஓர் இளைஞர் எவ்வாறு சமாளித்தார்?
16 இன்றுள்ள கிறிஸ்தவ இளைஞர்களும் இதேவிதமான சவால்களை எதிர்ப்படுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிற மேத்யூ இவ்வாறு நினைவுகூருகிறார்: “நான் பயனியராக சேவை செய்யத் துவங்கியபோது, என் அப்பா ரொம்பவே ஏமாற்றம் அடைந்தார். ஊழியம் செய்துகொண்டு என்னையும் பராமரித்துக் கொள்வதற்காக சுத்தம் செய்கிற வேலை ஒன்றில் சேர்ந்தேன்; அதனால், படித்த படிப்பை நான் ‘வீணாக்கிவிட்டேன்’ என அவர் நினைத்தார். நான் முழுநேரமாக வேலை செய்தால் எக்கச்சக்கமாகச் சம்பாதித்திருப்பேன் என்பதைச் சொல்லிக் காட்டி என்னைக் கேலி செய்வார்.” இந்த எதிர்ப்பை மேத்யூ எவ்வாறு சமாளித்தார்? “பைபிள் வாசிப்பதற்காக அட்டவணை போட்டு அதை தவறாமல் பின்பற்றி வந்தேன்; அதோடு, அடிக்கடி ஜெபம் செய்தேன்; அதிலும் குறிப்பாக, கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் உடனடியாக ஜெபம் செய்தேன்.” மேத்யூவின் திடத்தீர்மானத்திற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. காலப்போக்கில், அவருடைய அப்பாவுடன் சுமுகமான உறவு ஏற்பட்டிருக்கிறது. யெகோவாவிடமும் நெருங்கிய பந்தத்தை மேத்யூ ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். “யெகோவா என்னை நன்கு கவனித்துக் கொண்டதை, என்னை உற்சாகமூட்டிய விதத்தை, தவறான தீர்மானங்கள் எடுக்காதபடி என்னைப் பாதுகாத்ததை என் வாழ்க்கையில் ருசித்திருக்கிறேன். ஆன்மீக இலக்குகளை நான் வைக்காமல் இருந்திருந்தால் இது போன்ற எதையும் நான் அனுபவித்திருக்க மாட்டேன்” என்று மேத்யூ சொல்கிறார்.
ஆன்மீக இலக்குகளில் கவனத்தை ஊன்றுங்கள்
17. முழுநேர சேவையில் அடியெடுத்து வைக்க திட்டமிடுகிறவர்களை எவ்வாறு தவறுதலாக சிலர் உற்சாகமிழக்கச் செய்யலாம்? (மத்தேயு 16:22)
17 ஆன்மீக இலக்குகளை அடைய முயற்சி செய்யும்போது உடன் விசுவாசிகளும்கூட தங்களையே அறியாமல் உங்களை ஊக்கமிழக்கச் செய்யலாம். ‘பயனியராக இருக்க வேண்டுமென்றா ஆசைப்படுகிறாய்?’ என சிலர் கேட்கலாம். ‘எல்லாரையும்போல சராசரி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு பிரசங்க வேலை செய்யலாமே. பணத்தைப்பற்றிக் கவலைப்படாதளவுக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கிற வேலையைத் தேடிக்கொள்கிற வழியைப் பார்’ என்றெல்லாம் சொல்லலாம். இது நடைமுறையான ஆலோசனை என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், இந்த அறிவுரைக்கு நீங்கள் செவிசாய்த்தால், தேவபக்தியை இலக்காக வைத்து உங்களைப் பயிற்றுவித்துக் கொள்கிறீர்கள் என சொல்ல முடியுமா?
18, 19. (அ) ஆன்மீக இலக்குகளில் நீங்கள் எவ்வாறு கவனத்தை ஊன்றலாம்? (ஆ) ஓர் இளைஞராக நீங்கள் ராஜ்யத்திற்காக என்னென்ன தியாகங்களைச் செய்கிறீர்கள் என்பதை விளக்குங்கள்.
18 தீமோத்தேயுவின் காலத்திலிருந்த சில கிறிஸ்தவர்களுக்கும் இதுபோன்ற கருத்துகள் இருந்ததாகத் தெரிகிறது. (1 தீமோத்தேயு 6:17) தீமோத்தேயு ஆன்மீக இலக்குகளில் தன்னுடைய கவனத்தை ஊன்றச் செய்வதற்காக பவுல் அவரை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபட மாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ!” (2 தீமோத்தேயு 2:4, பொ.மொ.) படைவீரராக பணிபுரிபவர், பொதுமக்களுடைய அலுவல்களில் தன் கவனத்தைச் சிதறடிக்க மாட்டார். அவருடைய மேலதிகாரியின் உத்தரவுக்கு அடிபணிந்து செயல்பட எப்போதுமே தயாராக இருப்பதில்தான் அவருடைய உயிரும் மற்றவர்களுடைய உயிரும் சார்ந்துள்ளது. நீங்கள் இயேசுவின் கீழே பணிபுரிகிற படைவீரர்கள்; எனவே, உங்கள் கவனத்தை ஊன்ற வைப்பதோடு, உயிர்காக்கும் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிப்பதற்குத் தடையாயிருக்கிற தேவையில்லாத பொருளாதார நாட்டங்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.—மத்தேயு 6:24; 1 தீமோத்தேயு 4:16; 2 தீமோத்தேயு 4:2, 5.
19 சொகுசான வாழ்க்கை அமைத்துக்கொள்வதை உங்கள் இலட்சியமாக்காமல், சுயதியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். “இயேசு கிறிஸ்துவின் படையிலுள்ள போர்வீரனாக, வாழ்க்கையின் சௌகரியங்களை இழக்கத் தயாராக இருங்கள்.” (2 தீமோத்தேயு 2:3, தி இங்லிஷ் பைபிள் இன் பேஸிக் இங்லிஷ்) பவுலுடன் நெருங்கிப் பழகிய காலத்தில், மிகக் கடினமான சூழ்நிலைகளிலும்கூட திருப்தியாக இருப்பதன் இரகசியத்தை தீமோத்தேயு கற்றுக்கொண்டார். (பிலிப்பியர் 4:11, 12; 1 தீமோத்தேயு 6:6-8) நீங்களும் அவ்வாறு கற்றுக்கொள்ள முடியும். ராஜ்யத்திற்காகத் தியாகங்களைச் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
ஆசீர்வாதங்கள்—இன்றும் எதிர்காலத்திலும்
20, 21. (அ) ஆன்மீக இலக்குகளை நாடுவதால் கிடைக்கிற சில ஆசீர்வாதங்களை விவரியுங்கள். (ஆ) உங்களுடைய தீர்மானம் என்ன?
20 தீமோத்தேயு சுமார் 15 வருடங்கள் பவுலுடன் சேர்ந்து அயராது உழைத்தார். மத்தியதரைக் கடலின் வடக்குப் பகுதியிலுள்ள கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டதையும், அதனால் புதிய சபைகள் உருவானதையும் தீமோத்தேயு கண்கூடாகக் கண்டார். அவருடைய வாழ்க்கை அதிக விறுவிறுப்பானதாகவும் அதே சமயத்தில் மனநிறைவு அளிப்பதாகவும் இருந்தது. “சராசரி” வாழ்க்கை வாழ அவர் தெரிவு செய்திருந்தால்கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார். ஆன்மீக இலக்குகளை நாடுவதன்மூலம் நீங்களும்கூட மதிப்புமிக்க ஆன்மீக ஆசீர்வாதங்களை அறுவடை செய்வீர்கள். யெகோவாவிடம் நெருங்கி வருவதோடு உடன் கிறிஸ்தவர்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவீர்கள். பொருள் செல்வத்தை நாடிச் செல்வதால் வருகிற வேதனைகளுக்கும் ஏமாற்றத்துக்கும் பதிலாக, சுயநலமில்லாமல் கொடுப்பதால் கிடைக்கிற நிஜமான சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். எல்லாவற்றிலும் மேலாக, “உண்மையான வாழ்க்கையை உறுதியாக பற்றிக் கொள்வீர்கள்,” அதாவது பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்.—1 தீமோத்தேயு 6:9, 10, 17-19, NW; அப்போஸ்தலர் 20:35.
21 எனவே, இதுவரை நீங்கள் இவ்வாறு செய்யாதிருந்தால், உடனடியாகத் தேவபக்தியை இலக்காக வைத்து உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுமாறு நாங்கள் உங்களை மனதார ஊக்குவிக்கிறோம். சபையில் ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிற நபர்களிடம் நெருங்கிப் பழகுங்கள்; அவர்களுடைய அறிவுரையை நாடுங்கள். கடவுளுடைய வார்த்தையைத் தனிப்பட்ட விதமாகத் தவறாமல் படிப்பதற்கு முதலிடம் கொடுங்கள். இந்த உலகின் பொருளாசைமிக்க மனப்பான்மையை எதிர்க்கத் திடத்தீர்மானமாயிருங்கள். கடவுளைக் கனப்படுத்துகிற இலக்குகளை நீங்கள் தெரிவு செய்தால், “நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற” தேவன் இன்றும் எதிர்காலத்திலும் அபரிமிதமான ஆசீர்வாதங்கள் அள்ளி வழங்குவார்; கடவுள் தந்த அந்த வாக்குறுதியை எப்போதும் நினைவில் வையுங்கள்.—1 தீமோத்தேயு 6:17.
[அடிக்குறிப்பு]
a கிரேக்க சமுதாயம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. தீமோத்தேயுவின் காலத்தில் வாழ்ந்த புளூடார்க் இவ்வாறு எழுதினார்: “நல்ல கல்வியைப் பெறுவதுதான் எல்லா நன்மைகளுக்கும் ஆதாரமாகவும் ஆணிவேராகவும் இருக்கிறது. . . . நான் சொல்வது என்னவென்றால், இதுமட்டும்தான் உயர்ந்த ஒழுக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வழிநடத்துகிறது, உதவுகிறது. . . . மற்ற பயன்கள் அனைத்துமே மனித குறைபாடுகளுக்கு உட்பட்டவையாக, அற்பமானவையாக இருக்கின்றன; இவற்றிற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.”—மோராலியா, I, “பிள்ளைகளின் கல்வி.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு இளைஞர்களுக்கு எங்கே உதவி கிடைக்கும்?
• பைபிளைக் கருத்தூன்றிப் படிப்பது ஏன் மிக முக்கியம்?
• இவ்வுலகின் பொருளாசைமிக்க செல்வாக்கை இளைஞர்கள் எவ்வாறு எதிர்த்து நிற்கலாம்?
• ஆன்மீக இலக்குகளை அடைய முயலுவதால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
[பக்கம் 24-ன் படம்]
தீமோத்தேயு நல்ல இலக்குகளை நாடினார்
[பக்கம் 25-ன் படங்கள்]
நல்ல முன்மாதிரி வைப்பதன்மூலம் தீமோத்தேயுவுக்கு உதவியவர்கள் யாவர்?
[பக்கம் 26-ன் படங்கள்]
நீங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய முயலுகிறீர்களா?