இருண்ட உலகில் பிரகாசமான நம்பிக்கை
“பொது மக்களுக்கு நல்லது செய்வதற்கும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும், சரித்திரம் கண்டிராதளவு இன்று சாமானியர்களுக்குச் சக்தி இருக்கிறது” என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் சொன்னார்; மார்ச் 2006-ல் கனடாவிலுள்ள ஒட்டாவா நகரில் நடந்த ஒரு மாநாட்டில் இதை அவர் சொன்னார். 2004-ஆம் ஆண்டில் சூனாமி தாக்கியதைத் தொடர்ந்து, மக்களிடையே தர்மம் செய்யும் மனப்போக்கு பன்னாட்டு அளவில் அதிகரித்து வருகிறதென அந்த மாநாட்டின் இறுதியில் அவர் குறிப்பிட்டார்; “ஒருபோதும் இல்லாதளவுக்கு மக்கள் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிற காலத்தில்” இன்று உலகம் இருக்கிறது என்றும் தன் நம்பிக்கையை சூசகமாகத் தெரிவித்தார்.
இயற்கைப் பேரழிவுகள், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எங்குமுள்ள மக்களைத் தூண்டுவிக்குமென எதிர்பார்க்கலாமா? ‘ஒருபோதும் இல்லாதளவுக்கு மக்கள் ஒருவரையொருவர் சார்ந்திருப்பது,’ உண்மையான சமாதானத்தையும் நிலையான பாதுகாப்பையும் தரும் எதிர்காலத்தில் நம்பிக்கை வைப்பதற்கு உறுதியான ஆதாரத்தை அளிக்கிறதா?
உண்மையான நம்பிக்கையின் பிறப்பிடம்
ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் எடுத்த முயற்சிகளைப்பற்றிய நீண்டகாலப் பதிவுகள், அவர்கள் எப்போதும் ஒருவரையொருவர் நம்புகிற விதத்தில் நடந்துகொள்ளவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றன. கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட வார்த்தை நியாயமாகவே நமக்கு இவ்வாறு புத்திமதி கொடுக்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” (சங்கீதம் 146:3) இந்த உலகின் அமைப்புகள்மீது, பொருள்கள்மீது, நாட்டங்கள்மீது நம்பிக்கை வைப்பது ஏமாற்றத்தையே தரும். ஏன்? ஏனெனில், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்.”—1 யோவான் 2:17.
எனினும், பல நூற்றாண்டுகளாகவே நீதியாய் நடக்கிற மனிதர்களுக்கு நம்பிக்கையின் நித்திய பிறப்பிடமாக கடவுள் இருந்து வந்திருக்கிறார். பைபிள் அவரை “[பூர்வ] இஸ்ரவேலின் நம்பிக்கை” என்றும் ‘[இஸ்ரவேலரின்] பிதாக்கள் நம்பினவர்’ என்றும் அழைக்கிறது; அவருக்காகக் காத்திருப்பதை, அவர்மீது நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அநேக சொற்கள் பைபிளில் பல இடங்களில் காணப்படுகின்றன. (எரேமியா 14:8; 17:13; 50:7) சொல்லப்போனால், ‘கர்த்தருக்கு [அதாவது, யெகோவாவுக்கு] காத்திரு’ என்று பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது.—சங்கீதம் 27:14.
நீதிமொழிகள் 3:5, 6 பின்வருமாறு நம்மை அறிவுறுத்துகிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” இத்தகைய வாக்குறுதியில் நீங்கள் தாராளமாய் நம்பிக்கை வைக்கலாம்; ஏனெனில், யெகோவா தேவன் மாறாதவர், நம்பகமானவர், வாக்குத் தவறாதவர். (மல்கியா 3:6; யாக்கோபு 1:17) உங்களுக்கு உண்மையில் எது நல்லதோ அதையே அவர் செய்ய விரும்புகிறார்; அவருடைய வார்த்தையாகிய பைபிளில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைபடியே எப்போதும் நடந்தால், பயம் நிறைந்த இந்தக் காலத்தில் வெற்றிப் பாதையில் அது உங்களை வழிநடத்தும்.—ஏசாயா 48:17, 18.
கடவுளுடைய அறிவுரையை மனதாரப் பின்பற்றுகிற ஒரு நபர் பின்வரும் இந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைக்கலாம்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10) ஊக்கமாய் ஜெபம் செய்வதோடுகூட இந்த வாக்குறுதியைத் தியானிப்பது, யெகோவா தேவனை நெஞ்சார நேசிக்கிற அனைவருக்கும் ஆறுதலின் அருமருந்தாய் அமைகிறது; எப்படியெனில் இது, கஷ்டமான சூழ்நிலைகளையும் கவலைகளையும் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது.
ஆன்ட்ரியாவை எடுத்துக்கொள்வோம்; இவர் ஒரு யெகோவாவின் சாட்சி, இரண்டு பிள்ளைகளுக்குத் தாய். இவர் பின்வருமாறு சொல்கிறார்: “வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தவிக்கிற சமயங்களிலெல்லாம், ஜெபமும் யெகோவாவின் வாக்குறுதிகளைத் தியானிப்பதும் மட்டுமே எல்லாவற்றையும் சமாளிக்க எனக்கு சக்தியைத் தருகின்றன. என் வாழ்க்கையில் யெகோவாவை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கையில், தடுமாறாமல் இருப்பது ரொம்பவே எளிதாகிறது.”
யெகோவா மீதுள்ள நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்
யெகோவாமீது நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சங்கீதக்காரன் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.” (சங்கீதம் 119:165) கடவுளுடைய வார்த்தையைக் கருத்தூன்றிப் படிப்பது, ‘உண்மையும், ஒழுக்கமும், நீதியும், கற்பும், அன்பும், நற்கீர்த்தியும், புண்ணியமும், புகழும்’ உள்ள விஷயங்களால், அதாவது ஆன்மீக ரீதியில் பயன் தருகிற, நல்ல விஷயங்களால் உங்கள் மனதையும் இருதயத்தையும் நிரப்ப உதவும். இத்தகைய விஷயங்களைக் கேட்டு, படித்து, ஏற்றுக்கொண்டு, அதன்படி நடப்பதற்கு நீங்கள் ஊக்கமாய் முயற்சி செய்தால், “சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.”—பிலிப்பியர் 4:8, 9.
பல பத்தாண்டு கால அனுபவமுள்ள ஜான் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “எதிர்காலத்தைப்பற்றிய என் கருத்தை மாற்றிக்கொள்வதற்கு சில காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பரிபூரணரும், காணக்கூடாதவருமான கடவுளோடு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதைப்பற்றி எதிர்பார்ப்பதற்கு முன்பாக, என் சுபாவத்தையும் எண்ணத்தையும் அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை நான் புரிந்துகொள்வது முக்கியமாய் இருந்தது. ஆன்மீக நபராக நான் மாறுவதே கடவுளோடு அப்படியொரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒரே வழியாக இருந்தது. அதற்காக, கடவுளுடைய வார்த்தையான பைபிளை நான் வாசித்து, தியானிப்பதன்மூலம் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நபராக மாறுவதும், எதையும் அவருடைய மனதிற்குப் பிரியமான விதத்தில் செய்வதும் அவசியமாக இருந்தது.”
கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட பைபிளில் புத்துணர்ச்சியூட்டுகிற, உயிர் அளிக்கிற சத்தியத்தின் தண்ணீர் உள்ளது; அதை நீங்கள் குடித்தால், பயன் அளிக்கிற, பலன் கண்ட முறையைப் பின்பற்றி, மீடியாக்கள் தினம் தினம் அள்ளிக் கொட்டுகிற மோசமான காரியங்களை எதிர்ப்பீர்கள். அதோடு, பைபிள் சொல்கிறபடி நடப்பது உங்கள் குடும்ப உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் கவலைகளைக் குறைப்பதற்கும் உதவும். அதுமட்டுமல்லாமல், ‘தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ண’ கடவுள் தயாராய் இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். (2 நாளாகமம் 16:9) நீங்கள் எதைக் குறித்தும் கவலையே படாதிருக்கும் விதத்தில் காரியங்களை அவர் சரிசெய்வார்.
ஃபின்னியஸ் என்பவர் போர்க் காலங்களில், எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டதைக் கண்ணாரக் கண்டவர்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் காக்கும் கரங்களில் என்னையே ஒப்படைத்துவிட கற்றுக்கொண்டிருக்கிறேன். பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்க்க எனக்கு உதவியிருக்கிறது.” நீங்கள் உண்மையிலேயே யெகோவா தேவன்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்றால் மதில் போல் எத்தகைய துன்பங்கள் சூழ்ந்தாலும் அவற்றைத் தாண்டுவதற்கு அவர் உங்களுக்கு உதவுவார். (சங்கீதம் 18:29) பெற்றோரின் பாசப் பிணைப்பில் அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிற ஒரு பிள்ளை அவர்களை முழுக்க முழுக்க நம்புகிறது; வியாதிப்படும்போதோ வேறு ஏதாவது பிரச்சினைகள் வரும்போதோ தன் பெற்றோரின் பராமரிப்பில் பாதுகாப்பை உணருகிறது. தம்மீது நம்பிக்கை வைக்கும்படி யெகோவா கொடுக்கிற அழைப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்போது நீங்களும் பாதுகாப்பை உணருவீர்கள்.—சங்கீதம் 37:34.
நம்பிக்கைக்கு அசைக்க முடியாத அஸ்திவாரம்
இயேசு கிறிஸ்து தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) அந்தப் பரலோக ராஜ்யமே, அதாவது இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் அரசாங்கமே, இந்தப் பூமியில் கடவுளுடைய பேரரசாட்சியை சரியென நிரூபித்துக் காட்டும் ஒரே வழிமூலம் ஆகும்.—சங்கீதம் 2:7-12; தானியேல் 7:13, 14.
இன்று நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அநேக காரணங்களின் நிமித்தம் பயப்படுகிறோம்; இது, கடவுளுடைய தலையிடுதல் தேவை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. அப்படி கடவுள் தலையிடும் நாள் வெகு தொலைவில் இல்லை! இயேசு கிறிஸ்துவை மேசியானிய ராஜாவாக யெகோவா இப்போது முடிசூட்டியிருக்கிறார்; இந்த ராஜாவிடம், யெகோவாவின் பேரரசாட்சியே சரியானதென நிரூபித்து, அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 28:18) சீக்கிரத்தில் அவருடைய அரசாங்கம், பூமிக்குக் கவனம் செலுத்தி பயத்திற்கும் கவலைக்கும் காரணமான எல்லாவற்றையும் அடியோடு அகற்றிவிடும். நம் பயங்கள் அனைத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்குத் தகுதியான ராஜாவாக இருப்பவர் இயேசுவே என்பதற்கு ஏசாயா 9:6 சான்று அளிக்கிறது. உதாரணத்திற்கு, “நித்திய பிதா,” “வியத்தகு ஆலோசகர்” (பொது மொழிபெயர்ப்பு), “சமாதானப்பிரபு” என்றெல்லாம் அவர் அழைக்கப்படுகிறார்.
“நித்திய பிதா” என்ற நெஞ்சைத் தொடும் சொற்றொடரை எடுத்துக்கொள்வோம். நித்திய பிதாவாக இயேசு இருப்பதால், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்குப் பூமியில் நித்தியமாய் வாழும் வாய்ப்பை அளிப்பதற்கான ஆற்றலும் அதிகாரமும் மட்டுமல்ல, ஆசையும் இருக்கிறது; இந்த வாய்ப்பை தம்முடைய தியாகப் பலியினுடைய மதிப்பின் அடிப்படையில் அவர் அளிக்கவிருக்கிறார். பாவம் செய்த முதல் மனிதன் ஆதாமிடமிருந்து வழிவழியாய் பெற்ற பாவத்திலிருந்தும் அபூரணத்திலிருந்தும் இறுதியில் அவர்கள் விடுதலை பெறுவார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. (மத்தேயு 20:28; ரோமர் 5:12; 6:23) இறந்துபோயிருக்கும் அநேகரை மீண்டும் உயிரோடு எழுப்புவதற்கும்கூட கடவுள் தந்த அதிகாரத்தை கிறிஸ்து பயன்படுத்துவார்.—யோவான் 11:25, 26.
பூமியிலிருக்கும்போது இயேசு, ‘வியத்தகு ஆலோசகராக’ தம்மை நிரூபித்தார். கடவுளுடைய வார்த்தையில் அவர் கரைகண்டவராய் இருந்ததாலும் மனித இயல்பை அவர் அத்துப்படியாக அறிந்து வைத்திருந்ததாலும், தினசரி வாழ்க்கையில் எழுகிற பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்பதைத் தெரிந்திருந்தார். பரலோகத்தில் ராஜாவாக சிங்காசனத்தில் அமர்ந்ததிலிருந்து, ‘வியத்தகு ஆலோசகராக’ கிறிஸ்து செயல்பட்டு வருகிறார்; மனிதர்களுடன் யெகோவா தொடர்புகொள்கிற வழிமூலத்தில் முக்கிய நபராக இருந்து வருகிறார். பைபிளில் காணப்படுகிற இயேசுவின் ஆலோசனைகள் எப்போதுமே ஞானமுள்ளதாயும் குறையற்றதாயும் உள்ளன. இதை அறிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும், நம்பிக்கையற்ற நிலையில் வாழ்வதிலிருந்தும் செயலிழக்கச் செய்துவிடுகிற பயத்திலிருந்தும் உங்களை விடுவிக்கும்.
ஏசாயா 9:6 இயேசுவை “சமாதானப்பிரபு” என்றும்கூட அடையாளம் காட்டுகிறது. அந்த ஸ்தானத்தில் இருக்கிற கிறிஸ்து, அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்குச் சீக்கிரத்தில் தம் அதிகாரத்தைப் பயன்படுத்துவார். எப்படி? மேசியானிய ராஜ்யத்தின் சமாதானமிக்க ஒரே ஆட்சியின்கீழ் மனிதகுலத்தைக் கொண்டுவருவதன்மூலமே.—தானியேல் 2:44.
அந்த ஆட்சியில், பூமியெங்கும் முடிவில்லா சமாதானம் நிலவும். இது நடக்குமென நீங்கள் எப்படி உறுதியாய் நம்பலாம்? அதற்கான காரணத்தை ஏசாயா 11:9 கொடுக்கிறது; அங்கு நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” இறுதியில், பூமியில் குடியிருக்கும் ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றவர்களாகவும் அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருப்பார்கள். அத்தகைய எதிர்பார்ப்பு உங்கள் மனதிற்கு இதம் அளிக்கிறதா? ஆம் என்றால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக ‘யெகோவாவை அறிகிற [மதிப்புமிக்க] அறிவை’ தொடர்ந்து பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
நம் நாளில் நடக்கிற சம்பவங்களைப்பற்றியும் பைபிளில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிற ஒளிமயமான எதிர்காலத்தைப்பற்றியும் பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்பதை நீங்கள் ஆராயலாம்; இவ்வாறு செய்வதன்மூலம், விசுவாசத்தைப் பலப்படுத்துகிறதும், உயிர் அளிக்கிறதுமான அறிவை, அதாவது கடவுளைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, உங்கள் பிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் அளிக்கிற இலவச பைபிள் கல்வி திட்டத்திலிருந்து பயன் அடையும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். இதுவே, துன்பம் நிறைந்த இந்த உலகில், பயத்தைப் போக்குவதற்கும், உண்மையான நம்பிக்கையைப் பெறுவதற்குமான ஒரு வழி.
[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]
பரலோக அரசாங்கம் நம்பிக்கை அளிப்பதற்கான காரணங்கள்
பிரபஞ்சத்தின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான உரிமையும் திறமையும் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 28:18) பூமியிலுள்ள உயிரின வாழ்க்கைச் சூழலை அவர் மீண்டும் பூரண சமநிலைக்குக் கொண்டுவருவார். நோய்நொடிகளைப் போக்கும் அதிகாரமும் அவருக்கு இருக்கிறது. பூமியிலிருந்தபோது அவர் செய்த அற்புதங்கள், அவருடைய ஆட்சியில் பெரிய அளவில் அளிக்கப்போகிற ஆசீர்வாதங்களின் முற்காட்சிகளாகவே இருந்தன; இவை அவரை நம்பகமான, பரிபூரண ராஜாவாக ஆக்குகின்றன. கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்த மேசியானிய ராஜாவின் குணாம்சங்களில் முக்கியமாய் எது உங்கள் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது?
▪ அணுகத்தக்கவர்.—மாற்கு 10:13-16.
▪ நியாயமானவர், பாரபட்சமற்றவர்.—மாற்கு 10:35-45.
▪ பொறுப்பானவர், தன்னலமற்றவர்.—மத்தேயு 4:5-7; லூக்கா 6:19.
▪ நீதியும் நேர்மையுமானவர்.—ஏசாயா 11:3-5; யோவான் 5:30; யோவான் 8:16.
▪ சிந்தித்துச் செயல்படுகிறவர், பிறர்நிலை கருதி செயல்படுபவர், மனத்தாழ்மையுள்ளவர். —யோவான் 13:3-15.
[பக்கம் 4-ன் படம்]
பைபிளை வாசித்து, தியானிப்பது யெகோவாமீது நம் நம்பிக்கையைப் படிப்படியாகப் பலப்படுத்தும்