துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!
“அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது.”—உபாகமம் 32:4.
1, 2. (அ) முடிவில்லா வாழ்க்கை என்ற நம்பிக்கையை நீங்கள் பொக்கிஷமாகப் போற்றுவது ஏன்? (ஆ) எதிர்காலத்தைக் குறித்து அருமையான வாக்குறுதிகளை அளித்திருக்கிற கடவுள்மீது நம்பிக்கை வைக்கமுடியாதபடி அநேகரை எது தடுக்கிறது?
பரதீஸ் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க உங்களுக்குப் பிடிக்குமா? ஒருவேளை உங்கள் கற்பனை பயணத்தில் இந்த எழில்கொஞ்சும் பூமியெங்கும் சுற்றித்திரிந்து, அதிலுள்ள எண்ணிலடங்கா உயிரினங்களை நீங்கள் ஆராயலாம். அல்லது, இந்தப் பூமி முழுவதையும் பூங்காவனமாக மாற்ற மற்றவர்களோடு சேர்ந்து உழைக்கையில், ஆகா, அது எவ்வளவு திருப்தி அளிக்கும் என்று நீங்கள் எண்ணிப் பார்க்கலாம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பதால் கட்டடக்கலை, ஓவியம், இசை போன்ற பிடித்தமான வேலைகளில் ஈடுபட உங்களுக்கு நேரம் இல்லாதிருக்கலாம். ஆனால், இவற்றில் திறமைகளை வளர்த்துக்கொள்ள பரதீஸில் நேரமிருக்கும் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கலாம். எதுவாக இருப்பினும், என்றென்றும் இந்தப் பூமியில் வாழும் நம்பிக்கையை நீங்கள் பொக்கிஷமாகப் போற்றுகிறீர்கள். இதையே பைபிள் ‘உண்மையான வாழ்வு’ என்றழைக்கிறது. நாம் இப்படி வாழ வேண்டுமென்பதே யெகோவாவின் நோக்கம்.—1 தீமோத்தேயு 6:19, பொது மொழிபெயர்ப்பு.
2 பைபிள் அளித்துள்ள அந்த நம்பிக்கையைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வது இன்பமளிக்கும் வேலை, பெருமதிப்புமிக்க வாய்ப்பு, அல்லவா? ஆனால், அநேகர் இப்படிப்பட்ட எதிர்காலத்தை வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். காரணம், இதெல்லாம் வெறும் கற்பனை, ஏமாளிகளின் பகல் கனவு என்று அவர்கள் சொல்கிறார்கள். பரதீஸ் பூமியில் முடிவில்லாத வாழ்க்கையைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிற அந்தக் கடவுளை நம்புவதுகூட அவர்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஏன்? இன்று எங்கும் நிறைந்திருக்கும் தீமையைக் கண்டு வேதனைப்படுகிற சிலர், சர்வவல்லமையுள்ள, அன்பான கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், இந்த உலகத்தில் தீமையும் துன்பமும் ஏன் தலைவிரித்தாடுகின்றன என்று கேட்கிறார்கள். கடவுளால் தீமையைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஒருவேளை அவர் பொறுத்துக்கொள்கிறார் என்றால், அவர் சக்தியற்றவராகவோ நம்மீது அக்கறையற்றவராகவோ இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதாடுகிறார்கள். அவர்கள் சொல்வது நியாயமானதே என சிலர் ஒத்துக்கொள்கிறார்கள். இதிலிருந்து, மக்களின் மனதைக் குருடாக்குவதில் சாத்தான் திறமையாகச் செயல்பட்டிருக்கிறான் என்பது தெள்ளத் தெளிவாய் தெரிகிறதல்லவா?—2 கொரிந்தியர் 4:4.
3. எந்தக் கடினமான கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள நாம் மக்களுக்கு உதவலாம், அவ்வாறு உதவ நாம் ஏன் விசேஷ நிலையில் இருக்கிறோம்?
3 சாத்தானாலும், உலக ஞானத்தாலும் ஏமாற்றப்பட்டிருக்கிற மக்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் ஒரு விசேஷ நிலையில் இருக்கிறோம். (1 கொரிந்தியர் 1:20; 3:19) எப்படியெனில், பைபிள் அளித்திருக்கும் வாக்குறுதிகளை அநேகர் நம்பாததற்கான காரணத்தை நாம் அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு யெகோவா யாரென்றே தெரியாதிருக்கலாம். அவருடைய பெயரோ, அதன் முக்கியத்துவமோ அவர்களுக்குத் தெரியாதிருக்கலாம். ஒருவேளை அவருடைய குணங்களைப்பற்றியோ, அவர் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் வல்லவர் என்பதைப்பற்றியோ அவர்கள் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது ஒன்றுமே அறியாதிருக்கலாம். இவற்றை எல்லாம் நாம் அறிந்திருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! “கடவுள் ஏன் தீமையையும் துன்பத்தையும் அனுமதித்திருக்கிறார்?” என்பது மனிதர்களின் மனதை அரிக்கும் கடினமான கேள்விகளில் ஒன்று. இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள ‘புத்தியில் அந்தகாரப்பட்டிருக்கும்’ மக்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதை அவ்வப்போது சிந்தித்துப் பார்ப்பது சிறந்தது. (எபேசியர் 4:18) முதலில், திருப்திகரமாக பதில் அளிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்பதைக் கவனிக்கலாம். தீமை தலைதூக்கியபோது யெகோவா அதைக் கையாண்ட முறையில் அவருடைய குணங்கள் எவ்வாறு பளிச்சிடுகின்றன என்பதை அடுத்ததாக சிந்திக்கலாம்.
சரியான விதத்தில் பதில் அளிப்பது எப்படி?
4, 5. கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்று ஒருவர் கேள்வி கேட்கையில் முதலாவதாக நாம் என்ன செய்ய வேண்டும்? விளக்குங்கள்.
4 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற கேள்வியை யாராவது கேட்கையில், நாம் எப்படிப் பதில் அளிக்கிறோம்? உடனடியாக, ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவத்தில் தொடங்கி விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்க நாம் விரும்பலாம். இது சில சமயங்களில் ஒத்துவரலாம். இருப்பினும், பதில் அளிப்பதைப் பொறுத்தவரை நம் மனதில் வைக்க வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. அதாவது, விளக்கத்தை அளிப்பதற்கு முன்னால் நாம் தகுந்த அடித்தளத்தைப் போட வேண்டியிருக்கலாம். (நீதிமொழிகள் 25:11; கொலோசெயர் 4:6) மேற்கூறப்பட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன், நாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய மூன்று வேதப்பூர்வ குறிப்புகளை இப்போது கவனிக்கலாம்.
5 உங்களிடம் கேள்வி கேட்ட நபர், இந்த உலகத்தில் தீமை புரையோடிப் போயிருப்பதை நினைத்து அளவுக்கதிகமாகக் கவலைப்படலாம். அவரோ, அவருக்கு அன்பானவர்களோ அதில் பாதிக்கப்பட்டிருப்பதே அதற்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். ஆகவே, முதலாவதாக அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, உண்மையான கரிசனை காட்டுவதே ஞானமான செயலாகும். “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். (ரோமர் 12:15) அந்த நபருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது, அதாவது அவரிடம் ‘இரக்கத்தை’ காட்டுவது அவருடைய மனதைத் தொடலாம். (1 பேதுரு 3:8) நாம் அவர்மீது அக்கறை காட்டுவதை அவர் புரிந்துகொள்ளும்போது, நாம் சொல்வதைக் கேட்பதற்கான ஆர்வம் அவருக்கு அதிகரிக்கலாம்.
6, 7. ஆழமான பைபிள் விஷயத்தைக் குறித்து தன் மனதில் எழும்புகிற கேள்வியை ஒருவர் கேட்கையில் நாம் ஏன் அவரைப் பாராட்டலாம்?
6 இரண்டாவதாக, பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக அந்நபரை நாம் பாராட்டலாம். சிலர், தங்களுக்கு விசுவாசம் இல்லாததால், அல்லது கடவுள்மீது மரியாதை இல்லாததால்தான் இதுபோன்ற கேள்விகள் தங்களுக்கு எழும்புகின்றன என்ற முடிவுக்கு வருகிறார்கள். பாதிரியார்கள்கூட இப்படிப்பட்ட எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்திருக்கலாம். என்றாலும், இதை வைத்து ஒருவருக்கு விசுவாசம் இல்லையென்று முடிவுகட்டிவிட முடியாது. சொல்லப்போனால், பூர்வ காலத்தில் கடவுளுக்கு உண்மையாய் வாழ்ந்த மக்கள் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். உதாரணமாக, “கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?” என்று சங்கீதக்காரனாகிய தாவீது கேட்டார். (சங்கீதம் 10:1) அதேபோல, ஆபகூக் தீர்க்கதரிசி பின்வருமாறு கேட்டார்: “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.”—ஆபகூக் 1:2, 3.
7 இவர்கள் கடவுள்மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்த உண்மையுள்ள மனிதர்கள். தங்களை வாட்டியெடுத்த இதுபோன்ற கேள்விகளைக் கேட்டதற்காக அவர்கள் கண்டிக்கப்பட்டார்களா? இல்லை. அதற்கு மாறாக, அவர்களுடைய உள்ளப்பூர்வமான கேள்விகள் பைபிளில் எழுதப்படும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். இன்றும்கூட, தீமை தலைவிரித்தாடுவதைக் குறித்து கவலைப்படுகிற நபர் ஒருவேளை ஆன்மீக ரீதியில் பசிதாகம் உள்ளவராக இருக்கலாம். பைபிள் மட்டுமே அளிக்க முடிகிற பதில்களுக்காக அவர் ஏங்கிக் கொண்டிருக்கலாம். ஆன்மீக ரீதியில் பசியோடிருப்பவர்களை, அதாவது “தங்கள் ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாய்” இருப்பவர்களை இயேசு பாராட்டினார் என்பதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 5:3, NW) அப்படிப்பட்ட மக்களுக்கு இயேசு வாக்குறுதி அளித்த சந்தோஷத்தைக் கண்டடைய உதவுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
8. கஷ்டத்திற்கு கடவுளே காரணர் என்று மக்களை நம்ப வைக்கும் தவறான போதனைகள் யாவை, அத்தகையோருக்கு நாம் எப்படி உதவலாம்?
8 மூன்றாவதாக, இந்த உலகமுழுவதும் அதிகரித்து வருகிற அட்டூழியங்களுக்கு கடவுள் காரணர் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள அந்த நபருக்கு நாம் உதவ வேண்டியிருக்கலாம். தவறான தகவல்கள் அநேகருக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, நாம் வாழும் இந்த உலகத்தை கடவுள் ஆளுகிறார்; வெகு காலத்திற்கு முன்பே நம் தலைவிதியை அவர் எழுதிவிட்டார், அதன்படியே அனைத்தும் நடக்கின்றன; அவர் மனிதர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதற்கான காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பொய் போதனைகள் கடவுளை அவமதிப்பதாய் இருக்கின்றன; உலகத்தில் காணப்படும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் அவரே காரணர் என்று முத்திரை குத்துகின்றன. ஆகவே, இந்த விஷயங்களில் உண்மையைத் தெளிவுபடுத்துவதற்கு நாம் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். (2 தீமோத்தேயு 3:16, 17) ஊழல் மலிந்த இந்த உலகத்தை ஆளுவது யெகோவா அல்ல, பிசாசாகிய சாத்தானே. (1 யோவான் 5:19) புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளின் தலைவிதியை யெகோவா முன்கூட்டியே எழுதிவிடவில்லை. நல்லது கெட்டது, சரி தவறு ஆகியவற்றைத் தாங்களாகவே தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தையும், வாய்ப்புகளையும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் அளித்திருக்கிறார். (உபாகமம் 30:19) யெகோவா ஒருபோதும் அக்கிரமத்திற்குக் காரணர் அல்ல; அவர் அக்கிரமத்தை வெறுக்கிறார், அநியாயமாக கஷ்டப்படுவோர்மீது அவர் அக்கறை காட்டுகிறார்.—யோபு 34:10; நீதிமொழிகள் 6:16-19; 1 பேதுரு 5:7.
9. யெகோவா தேவன் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” அளித்திருக்கும் பிரசுரங்கள் சில யாவை?
9 இப்படிப்பட்ட அடித்தளத்தைப் போட்ட பிறகு, துன்பம் தொடர கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அந்த நபர் தயாராக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். உங்களுக்கு உதவ, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் பயனுள்ள பிரசுரங்கள் பலவற்றை அளித்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) உதாரணமாக, 2005/06-ல் நடந்த “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டில், துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரதி வெளியிடப்பட்டது. இந்தத் துண்டுப்பிரதியை வாசித்து அதிலுள்ள விஷயங்களை நன்கு தெரிந்துகொள்ளும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறோம். அதேபோல, தற்போது 157 மொழிகளில் கிடைக்கிற, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திலுள்ள ஓர் அதிகாரம் முழுவதும் இந்த முக்கிய கேள்வியைக் கலந்தாலோசிக்கிறது. இந்தப் பிரசுரங்களை முடிந்தளவு நல்ல முறையில் பயன்படுத்துங்கள். இவை, சர்வலோக பேரரசாட்சி குறித்து ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதத்தின் பின்னணியை பைபிளின் அடிப்படையில் தெளிவாக விளக்குகின்றன. யெகோவா அதைக் கையாண்ட விதத்திற்கான காரணத்தையும் சொல்கின்றன. இவ்விஷயத்தை விளக்கும்போது, யெகோவாவையும் அவருடைய உன்னத பண்புகளையும் பற்றிய அறிவை அவருக்கு அளிக்கிறீர்கள். இந்த அறிவு அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று என்பதை மனதில் வையுங்கள்.
யெகோவாவின் பண்புகள்மீது கவனத்தைத் திருப்புங்கள்
10. கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பது சம்பந்தமாக எதைப் புரிந்துகொள்ள முடியாமல் அநேகர் திணறுகிறார்கள், எதைத் தெரிந்துகொள்வது அவர்களுக்கு உதவும்?
10 சாத்தானுடைய செல்வாக்கின் கீழ் மனிதர்கள் தங்களையே ஆண்டுகொள்ள யெகோவா ஏன் அனுமதித்திருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்கும்போது, யெகோவாவுடைய அருமையான பண்புகளிடம் அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள். கடவுளுக்கு வல்லமை இருப்பதை அநேகர் அறிந்திருக்கிறார்கள். அவரை சர்வவல்லமையுள்ள கடவுள் என்று மற்றவர்கள் அழைப்பதையும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அநியாயத்திற்கும், துன்பத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க தம் மகத்தான சக்தியை அவர் ஏன் பயன்படுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறார்கள். யெகோவாவின் மற்ற பண்புகளான பரிசுத்தம், நீதி, ஞானம், அன்பு போன்றவற்றை அவர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளாததே அதற்குக் காரணமாய் இருக்கலாம். யெகோவா இந்தப் பண்புகளை பூரணமாயும், அதே சமயத்தில் சமநிலையோடும் வெளிக்காட்டுகிறார். ஆகவேதான், “அவர் கிரியை உத்தமமானது [அதாவது, பூரணமானது]” என்று பைபிள் சொல்கிறது. (உபாகமம் 32:4) சாத்தான் எழுப்பிய விவாதம் சம்பந்தமாக அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், இந்தப் பண்புகளை எப்படிச் சிறப்பித்துக் காட்டலாம்? சில உதாரணங்களைக் கவனிப்போம்.
11, 12. (அ) ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, மன்னிப்பு ஏன் சாத்தியமில்லாமல் போனது? (ஆ) யெகோவா ஏன் பாவத்தை என்றென்றைக்கும் பொறுத்துக்கொள்ள மாட்டார்?
11 ஆதாமையும் ஏவாளையும் யெகோவா மன்னித்திருக்க முடியுமா? இவர்களுடைய விஷயத்தில் மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை. பரிபூரண மனிதர்களாயிருந்த ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே யெகோவாவின் ஆட்சியை நிராகரித்து, சாத்தானின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். ஆகவே, இந்தக் கலகக்காரர்கள் மனந்திரும்பாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. என்றாலும், யெகோவா அவர்களை ஏன் மன்னிக்கவில்லை என்று கேள்வி எழுப்புபவர்கள், தம்முடைய தராதரங்களை கொஞ்சம் விட்டுக்கொடுத்து, பாவத்தையும் கலகத்தையும் அவர் ஏன் பொறுத்துக்கொள்ளவில்லை என்றுதான் கேட்கிறார்கள். இதற்கான பதில், யெகோவாவின் சுபாவத்துடன் இரண்டறக் கலந்த மிக முக்கியமான ஒரு குணத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அதுதான் பரிசுத்தம்.—யாத்திராகமம் 28:36; 39:30.
12 யெகோவாவின் பரிசுத்தத்தை பைபிள் எண்ணற்ற தடவை வலியுறுத்துகிறது. பித்தலாட்டம் நிறைந்த இந்த உலகில் அநேகரால் இந்தக் குணத்தைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பது வருந்தத்தக்கது. யெகோவா தூய்மையானவர், மாசற்றவர், பாவங்களுக்கு விலகியிருப்பவர். (ஏசாயா 6:3; 59:2) பாவத்தை நிவிர்த்தி செய்வதற்கு, அதாவது, முற்றிலும் நீக்கிவிடுவதற்கான ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார். ஆனால், பாவத்தை என்றென்றைக்கும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். பாவத்தை என்றென்றைக்கும் பொறுத்துக்கொள்ள யெகோவா மனமுள்ளவராக இருந்திருந்தால், நமக்கு எதிர்கால நம்பிக்கையே இல்லாமல் போயிருக்கும். (நீதிமொழிகள் 14:12) தம்முடைய உரிய காலத்தில், யெகோவா அனைத்து படைப்புகளையும் பரிசுத்தமான நிலைக்கு மறுபடியும் கொண்டுவருவார். இது நிச்சயம் நடக்கும்; ஏனெனில், இது பரிசுத்தரின் விருப்பம்.
13, 14. ஏதேனில் கலகக்காரர்களை அழிக்க வேண்டாமென யெகோவா தீர்மானித்தது ஏன்?
13 ஏதேனில், கலகக்காரர்களை யெகோவா அழித்துவிட்டு, மற்றொரு ஜோடியை படைக்க முடிந்திருக்குமா? நிச்சயமாக முடிந்திருக்கும், கலகக்காரர்களை அழிப்பதற்கான வல்லமை யெகோவாவுக்கு இருந்தது; சீக்கிரத்தில் அந்த வல்லமையைப் பயன்படுத்தி பொல்லாதவர்கள் அனைவரையும் அவர் அழிப்பார். ‘இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று பாவிகள் மட்டும் இருந்தபோதே அதைச் செய்திருக்கலாமே? பாவம் பரவியிருக்காதே, உலகத்தில் காணப்படும் கொடுமைகள் தடுக்கப்பட்டிருக்குமே’ என்று சிலர் யோசிக்கலாம். யெகோவா ஏன் அதைச் செய்யவில்லை? “அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்று உபாகமம் 32:4 பதில் அளிக்கிறது. யெகோவா நியாயத்தைக் கடைப்பிடிப்பதில் அதிக உறுதி காட்டுகிறார். ஆம், “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்.” (சங்கீதம் 37:28) அவர் நியாயத்தை விரும்புவதன் காரணமாகவே, ஏதேனில் கலகக்காரர்களை அழிக்காதிருந்தார். ஏன் அப்படி?
14 சாத்தானுடைய கலகம், யெகோவா ஆளும் விதம் சரியானதா என்ற கேள்வியை எழுப்பியது. யெகோவா நீதியுள்ளவராக இருந்ததால், அதன் அடிப்படையில் சாத்தானுக்குப் பதில் அளிக்க வேண்டியிருந்தது. அந்தக் கலகக்காரர்களை உடனடியாக அழிப்பது தகுந்ததாய் இருந்தது. ஆனால், அப்படிச் செய்திருந்தால் அது நியாயமான பதிலை அளித்திருக்காது. மாறாக, அவருடைய ஈடிணையற்ற வல்லமைக்கு மற்றொரு அத்தாட்சியாகவே அது இருந்திருக்கும். ஏதேனில் கடவுளுடைய வல்லமையைச் சந்தேகித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை, ஆதலால் அதை நிரூபிக்க அவசியமிருக்கவில்லை. மற்றொரு காரணம், ஆதாமிடமும் ஏவாளிடமும் தம்முடைய நோக்கத்தை யெகோவா சொல்லியிருந்தார். அவர்கள் பிள்ளைகளைப் பெற்று, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, அதிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டுகொள்ள வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 1:28) ஆதாமையும் ஏவாளையும் யெகோவா அழித்திருந்தால், மனிதர்களைக் குறித்து அவர் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும். அப்படியொன்று நடப்பதற்கு யெகோவாவின் நீதி ஒருபோதும் இடங்கொடுக்காது, ஏனெனில், அவருடைய நோக்கம் எப்போதுமே நிறைவேறும்.—ஏசாயா 55:10, 11.
15, 16. ஏதேனில் நடந்த கலகத்தின் சம்பந்தமாக மக்கள் மாற்று “தீர்வுகளை” சொல்கையில், அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
15 இந்தக் கலகத்திற்கு யெகோவாவைவிட ஞானமாக வேறொருவரால் தீர்வு கண்டிருக்க முடியுமா? ஏதேனில் நடந்த கலகத்திற்கு சிலர் தங்கள் சொந்த “தீர்வுகளை” சொல்லலாம். என்றபோதிலும், அப்படிச் சொல்வோர் கடவுளைவிட சிறந்த முறையில் தங்களால் அந்த விவாதத்தைத் தீர்த்திருக்க முடியும் என்றல்லவா தெரிவிக்கிறார்கள்? அவர்கள் கெட்ட உள்ளெண்ணத்தோடு அப்படிச் சொல்லாதிருக்கலாம். ஆனால், அவர்கள் யெகோவாவையும் அவருடைய வியத்தகு ஞானத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, கடவுளுடைய ஞானத்தைப்பற்றி விளக்கமாக விவரித்தார். உண்மையுள்ள மனிதர்களுக்கு இரட்சிப்பை அளிக்கவும், தம் புனிதமான பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் மேசியானிய ராஜ்யத்தைப் யெகோவா பயன்படுத்துவார்; இந்த ‘பரிசுத்த இரகசியத்தைப்பற்றியும்’ பவுல் விவரித்தார். இந்த ஏற்பாட்டைச் செய்த கடவுளுடைய ஞானத்தைக் குறித்து பவுல் எவ்வாறு உணர்ந்தார்? அந்த அப்போஸ்தலன் பின்வரும் வார்த்தைகளோடு தன் கடிதத்தை நிறைவு செய்தார்: “தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.”—ரோமர் 11:25; 16:25-27.
16 யெகோவா ‘ஒருவரே ஞானமுள்ளவர்,’ இந்த சர்வலோகத்தில் அவரே ஞானத்தின் உன்னத ஊற்றுமூலர் என்பதை பவுல் அறிந்திருந்தார். கடவுள் சரியான முறையில் ஆட்சி செய்கிறாரா என்பதைக் குறித்து சாத்தான் எழுப்பிய கேள்விக்கு மட்டுமல்ல, வேறெந்த பிரச்சினைக்கும் எந்த அபூரண மனிதனால் கடவுளைக் காட்டிலும் சிறந்த தீர்வைக் காண முடியும்? ஆகவே, ‘இருதயத்தில் ஞானமுள்ளவரான’ கடவுள்மீது நமக்கிருக்கும் அதே பயபக்தியைப் பிறரும் பெற நாம் உதவ வேண்டும். (யோபு 9:4) யெகோவாவின் ஞானத்தை நன்றாகப் புரிந்துகொள்கையில், காரியங்களை அவர் கையாளும் விதமே சிறந்தது என்பதில் நம் நம்பிக்கை உறுதிப்படும்.—நீதிமொழிகள் 3:5, 6.
யெகோவாவின் பிரதான பண்பைப் புரிந்துகொள்ளுதல்
17. யெகோவா துன்பத்தை அனுமதித்திருப்பதைக் குறித்து கலங்குவோர் அவரது அன்பைப்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்கையில் எப்படிப் பயன் அடைகிறார்கள்?
17 “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) குறிப்பிடத்தக்க இந்த வார்த்தைகள் மூலமாக யெகோவாவின் பிரதான பண்பை பைபிள் அடையாளம் காட்டுகிறது. அவரது பண்புகளிலேயே மனதைக் கவருவது இந்தப் பண்புதான். அக்கிரமத்தால் அலைக்கழிக்கப்படுவோருக்கு அதிக ஆறுதல் அளிப்பதும் இந்தப் பண்புதான். தம் படைப்புகள்மீது பாவம் ஏற்படுத்தியிருக்கும் ரணங்களைக் குணப்படுத்துவதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாடுகள் ஒவ்வொன்றிலும் அன்பு வெளிப்படுகிறது. ஆதாம் ஏவாளின் பாவமுள்ள சந்ததியாருக்கு எதிர்கால நம்பிக்கை அளிக்க அன்பு அவரைத் தூண்டியது; இதனால், தம்மை அணுகவும், தம்முடன் ஒரு நல்லுறவை அவர்கள் அனுபவிக்கவும் அவர் வழியைத் திறந்தார். அன்பின் காரணமாக கிரயபலிக்கான ஏற்பாட்டை கடவுள் செய்தார். இது பாவத்திலிருந்து முழுமையான விடுதலையைப் பெறவும், பரிபூரணத்தோடு முடிவில்லா வாழ்க்கையைப் பெறவும் வழியைத் திறந்தது. (யோவான் 3:16) மனிதர்களிடம் பொறுமை காட்டவும் அன்பே அவரைத் தூண்டியது. இந்த அன்பின் காரணமாக, சாத்தானை ஒதுக்கித் தள்ளவும், தம்மை அவர்களது ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கவும் முடிந்தவரை பல வாய்ப்புகளை அவர்களுக்கு அளிக்கிறார்.—2 பேதுரு 3:9.
18. எதை அறிந்திருப்பதைக் குறித்து நாம் சந்தோஷப்படுகிறோம், அடுத்த கட்டுரையில் எதைக் குறித்து கலந்தாராய்வோம்?
18 நிலைகுலைய வைத்த தீவிரவாத தாக்குதல் ஒன்றின் நினைவுநாளின்போது கூடிவந்திருந்தோரிடம் பாஸ்டர் ஒருவர் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “தீமையையும் துயரத்தையும் கடவுள் ஏன் அனுமதித்து வருகிறார் என்று நமக்குத் தெரியவில்லை.” இது எத்தனை பரிதாபத்திற்குரியது! இவ்விஷயத்தைப்பற்றி நாம் தெளிவாக அறிந்திருப்பதைக் குறித்து சந்தோஷப்படுகிறோம், அல்லவா? (உபாகமம் 29:29) யெகோவா ஞானமுள்ளவராக, நீதியுள்ளவராக, அன்புள்ளவராக இருப்பதால் துன்பத்திற்கெல்லாம் முடிவை அவர் விரைவில் கொண்டு வருவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதோடு, அவ்வாறு செய்யப்போவதாக அவரே வாக்குறுதி அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:3, 4) இத்தனை ஆண்டுகாலத்தில் இறந்து போயிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு ஏதாவது எதிர்காலம் இருக்கிறதா? ஏதேனில் நடந்த கலகத்தை யெகோவா கையாண்ட விதத்தால் அவர்களுக்கு எதிர்காலம் இருண்டுவிட்டதா? இல்லை. அன்பின் காரணமாக, அவர்களுக்கு உயிர்த்தெழுதல் என்ற ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார். அடுத்த கட்டுரையில் அதைக் குறித்து கலந்தாராய்வோம்.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்று கேட்போருக்கு எப்படிப் பதில் அளிக்கலாம்?
• ஏதேனில் கலகக்காரர்களை யெகோவா கையாண்ட விதத்தில் அவருடைய பரிசுத்தமும் நீதியும் எப்படி வெளிப்படுகின்றன?
• யெகோவாவின் அன்பைக் குறித்து அதிகமாகப் புரிந்துகொள்ள நாம் ஏன் மக்களுக்கு உதவ வேண்டும்?
[பக்கம் 21-ன் படம்]
உலகில் கஷ்டத்தைக் கண்டு கலங்குவோருக்கு உதவ முயலுங்கள்
[பக்கம் 23-ன் படங்கள்]
உண்மையுள்ள தாவீதும் ஆபகூக்கும் கடவுளிடம் உள்ளப்பூர்வமான கேள்விகளைக் கேட்டார்கள்