உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 6/1 பக். 8-பக். 11 பாரா. 8
  • புலம்பல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புலம்பல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது”
  • (புலம்பல் 1:1–2:22)
  • ‘என் பெருமூச்சுக்கு உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்’
  • (புலம்பல் 3:1–5:22)
  • யெகோவாவை உங்கள் நம்பிக்கையாக்கிக் கொள்ளுங்கள்
  • பைபிள் புத்தக எண் 25—புலம்பல்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • புலம்பல் புத்தகத்துக்கு அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்:
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • பைபிள் புத்தக எண் 24—எரேமியா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 6/1 பக். 8-பக். 11 பாரா. 8

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது

புலம்பல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

எரேமியா தீர்க்கதரிசி 40 வருடங்களாக அறிவித்து வருகிற நியாயத்தீர்ப்பு செய்தி நிறைவேறுவதைக் கண்ணாரக் காண்கிறார். தான் நெஞ்சார நேசித்த நகரம் தன் கண்முன்னே அழிந்துபோவதைப் பார்க்கையில் தீர்க்கதரிசி எப்படி வேதனைப்படுகிறார்? “எரேமியா உட்கார்ந்து அழுது எருசலேமைப் பற்றிய இந்தப் புலம்பலைப் பாடினார்” என கிரேக்க செப்டுவஜின்டில் இந்தப் புத்தகத்தின் ஆரம்ப வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. பொ.ச.மு. 607-⁠ல் தீர்க்கதரிசி இந்தப் புலம்பல் புத்தகத்தை எழுதுகையில், 18 மாத முற்றுகைக்குப் பின் எருசலேம் நகரம் தீக்கிரையான சம்பவம் அவர் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது; இப்புத்தகம் அவருடைய தாங்க முடியாத மன வேதனையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. (எரேமியா 52:3-5, 12-14) அந்தளவுக்கு வருத்தத்தைத் தெரிவிக்கும் விதத்தில் எந்தவொரு நகரத்தைக் குறித்தும் இதுவரையில் புலம்பிப் பாடப்பட்டதே இல்லை.

இந்தப் புலம்பல் புத்தகம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கவிதை நடையில் எழுதப்பட்ட ஐந்து பாடல்களின் தொகுப்பாகும். முதல் நான்கும் புலம்பல் பாடல்களாகும், அதாவது துயரப் பாடல்களாகும்; ஐந்தாவது பாடல் ஒரு விண்ணப்பமாகும், அதாவது ஜெபமாகும். முதல் நான்கு பாடல்களும் அகர வரிசையில் எழுதப்பட்டுள்ளன; அதாவது, அவற்றின் ஒவ்வொரு வசனமும் எபிரெய மொழியின் 22 எழுத்துக்களில் ஒன்றோடு தொடங்குகிறது. ஐந்தாம் பாடலில் எபிரெய மொழியின் எழுத்துக்களுக்கு இணையாக 22 வசனங்கள் இருக்கிறபோதிலும், அது அகர வரிசையில் எழுதப்படவில்லை.

“கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது”

(புலம்பல் 1:1–2:22)

எரேமியா தீர்க்கதரிசி எருசலேமைக் குறித்து இவ்வாறு புலம்பிப் பாட ஆரம்பிக்கிறார்: “ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!” அந்த நகரத்திற்கு இத்தகைய அழிவு ஏற்பட்டதற்கான காரணத்தை தீர்க்கதரிசி இவ்வாறு சொல்கிறார்: “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்.”​—⁠புலம்பல் 1:1, 5.

கணவனையும் பிள்ளைகளையும் பறிகொடுத்த ஒரு விதவையைப்போல் உருவகப்படுத்தப்பட்டுள்ள எருசலேம் இவ்வாறு கேட்கிறாள்: “எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ?” தன் விரோதிகளைக் குறித்து கடவுளிடம் அவள் இவ்வாறு ஜெபிக்கிறாள்: “அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.”​—⁠புலம்பல் 1:12, 22.

கடுந்துயரத்தில் இருந்த எரேமியா இவ்வாறு சொல்கிறார்: யெகோவா “தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினி ஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரிந்தார்.” தனது தாளாத துயரத்தைத் தெரிவித்து தீர்க்கதரிசி இவ்வாறு புலம்புகிறார்: “கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது.” வழிப்போக்கர்களும்கூட திகைத்துப்போய் இவ்வாறு கூறுகிறார்கள்: “பூரணவடிவும் சர்வ பூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா?”​—⁠புலம்பல் 2:3, 11, 15.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

1:15​—⁠யெகோவா எவ்வாறு ‘திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்’? கன்னிகையாக வர்ணிக்கப்பட்டுள்ள அந்த நகரத்தை அழிக்கையில், பாபிலோனியர் பெருமளவில் இரத்தஞ்சிந்தினார்கள்; அது திராட்சப்பழங்கள் ஆலையில் மிதிக்கப்படுவதற்கு ஒப்பாக இருந்தது. அப்படி நடக்குமென யெகோவா முன்னறிவித்தார், அது நடக்கும்படியும் அனுமதித்தார்; அதனால், யெகோவாதாமே ‘திராட்சப்பழத்தை ஆலையில் மிதித்தார்’ என சொல்லலாம்.

2:1​—⁠‘இஸ்ரவேலின் மகிமை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளப்பட்டது’ எப்படி? ‘பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்திருப்பதால்,’ ‘வானத்திலிருந்து தரையிலே தள்ளப்படுவது’ சில சமயங்களில், உயர்நிலையில் உள்ளவை தாழ்நிலைக்குத் தள்ளப்படுவதைக் குறிக்கிறது. எருசலேம் அழிக்கப்பட்டு, யூதா பாழாக்கப்பட்டதோடு, “இஸ்ரவேலின் மகிமை,” அதாவது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தபோது அது பெற்றிருந்த புகழும் செல்வாக்கும் தரையிலே விழத்தள்ளப்பட்டது.​—⁠ஏசாயா 55:9.

2:1, 6​—⁠யெகோவாவின் ‘பாதபீடம்’ மற்றும் “வேலி” என்பது என்ன? “அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் [அதாவது, பாதபீடத்தில்] பணிவோம்” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 132:7) ஆகவே, புலம்பல் 2:1-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘பாதபீடம்,’ யெகோவாவின் வழிபாட்டு ஸ்தலம் அல்லது ஆலயம் ஆகும். ஒரு தோட்டத்திலுள்ள வேலியை எரித்துப்போடுவதுபோல் ‘கர்த்தருடைய ஆலயத்தை’ பாபிலோனியர் ‘சுட்டெரித்துப்போட்டனர்.’​—⁠எரேமியா 52:12, 13.

2:17​—⁠எருசலேம் சம்பந்தமான என்ன “வார்த்தையை” யெகோவா நிறைவேற்றினார்? யெகோவா நிறைவேற்றுவதாகச் சொன்ன வார்த்தை லேவியராகமம் 26:17-⁠ல் காணப்படுகிறது, அது இவ்வாறு சொல்கிறது: “நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.”

நமக்குப் பாடம்:

1:1-9. எருசலேம் இரவு முழுக்க அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் கன்னங்களில் வடிகிறது. அவளுடைய வாசல்கள் பாழாய்க்கிடக்கின்றன, அவளுடைய ஆசாரியர்களோ தவிக்கிறார்கள். அவளுடைய கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள், அவளுக்குக் கசப்பு உண்டாயிருக்கிறது. ஏன்? ஏனெனில், எருசலேம் படுபயங்கரமான பாவத்தைச் செய்திருக்கிறாள். அவளுடைய தீட்டு அவள் ஆடைகளில் தெரிகிறது. ஆகவே, தவறு செய்வதால் கிடைக்கும் பலன் சந்தோஷம் அல்ல, கண்ணீரும் தவிப்பும் துக்கமும் கசப்புமே.

1:18. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதில் யெகோவா எப்போதுமே நீதியாயும் நேர்மையாயும் செயல்படுகிறார்.

2:20. யெகோவாவின் சொல்லுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் போனால், சாபத்தை அனுபவிப்பார்கள் என அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தது; தங்கள் “புத்திரபுத்திரிகளின் மாம்சத்தை” சாப்பிடுவதும் அந்தச் சாபத்தில் உட்பட்டிருந்தது. (உபாகமம் 28:15, 45, 53) கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!

‘என் பெருமூச்சுக்கு உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்’

(புலம்பல் 3:1–5:22)

புலம்பல் 3-ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேல் ஜனம் ஒரு ‘புருஷனாக’ பேசப்படுகிறது. துன்பத்தின் மத்தியிலும் அந்தப் புருஷன் இவ்வாறு பாடுகிறார்: “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.” உண்மை கடவுளிடம் ஜெபிக்கையில் அந்தப் புருஷன் இவ்வாறு வேண்டிக்கொள்கிறார்: “என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக் கொள்ளாதேயும்.” விரோதிகள் நிந்திப்பதைக் கவனிக்கும்படி யெகோவாவிடம் இவ்வாறு கேட்கிறார்: “கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.”​—⁠புலம்பல் 3:1, 25, 56, 64.

எருசலேம் 18 மாத முற்றுகையின்போது அனுபவிக்கிற கொடிய கஷ்டங்களைப் பார்த்து தன் மன வேதனைகளையெல்லாம் கொட்டி எரேமியா இவ்வாறு புலம்புகிறார்: “கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.” எரேமியா புலம்பி தொடர்ந்து பாடுவதாவது: “பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.”​—⁠புலம்பல் 4:6, 9.

ஐந்தாம் பாடல், எருசலேம்வாசிகள் பேசுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.” தங்களுடைய கஷ்டங்களை எடுத்துக்கூறி இவ்வாறு முறையிடுகிறார்கள்: “கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.”​—⁠புலம்பல் 5:1, 19, 21.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

3:16​—⁠‘அவர் பருக்கைக் கற்களால் என் பற்களை நொறுக்குகிறார்’ என்பதன் அர்த்தம் என்ன? ஆராய்ச்சி புத்தகம் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “அடிமைகளாக யூதர்கள் கொண்டு செல்லப்படும் வழியில், தரையில் குழி தோண்டி அப்பம் சுடவேண்டிய நிலை ஏற்பட்டதால், அதில் கற்கள் கலந்திருந்தன.” அப்படிப்பட்ட அப்பத்தைச் சாப்பிட்டபோது ஒருவருடைய பற்கள் நொறுங்கியிருக்கலாம்.

4:3, 10​—⁠யெகோவாவின் ‘ஜனமாகிய குமாரத்தியை’ ‘வனாந்தரத்திலுள்ள தீக்குருவிக்கு’ எரேமியா ஏன் ஒப்பிடுகிறார்? தீக்குருவி ‘தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் கடினமாக நடத்தும்’ என யோபு 39:16 கூறுகிறது. உதாரணமாக, குஞ்சுகள் பொரித்ததும் பெண் தீக்​குருவி கூட்டை விட்டுவிட்டு மற்ற பெண் தீக்குருவி​களோடு போய்விடுகிறது; ஆண் தீக்குருவியோ குஞ்சுகளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஆபத்து வருகையில் என்ன நடக்கிறது? ஆண் தீக்குருவியும் சரி பெண் தீக்குருவியும் சரி, குஞ்சுகளை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடுகின்றன. எருசலேமை பாபிலோனியர் முற்றுகையிட்டபோது, அங்கே பயங்கரமான பஞ்சம் நிலவியது. அச்சமயத்தில், பாசத்தையும் நேசத்தையும் காட்ட வேண்டிய தாய்மார்களே வனாந்தரத்தில் உள்ள தீக்குருவி​களைப் போல் தங்கள் பிள்ளைகளிடம் கொடூரமாக நடந்துகொண்டார்கள்.

5:7​—⁠தங்கள் பிதாக்கள் செய்த பாவங்களுக்காக ஜனங்களிடம் யெகோவா கணக்குக் கேட்கிறாரா? இல்லை, தங்கள் பிதாக்கள் செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனையை ஜனங்களுக்கு யெகோவா அளிப்பதில்லை. “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” என பைபிள் சொல்கிறது. (ரோமர் 14:12) என்றாலும், தவறுகளால் விளையும் பாதிப்புகள் தொடர்ந்திருக்கலாம்; அவை பின்வரும் சந்ததியாரையும் பாதிக்கலாம். உதாரணமாக, பூர்வ இஸ்ரவேலர் விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்டதால் அவர்களுடைய சந்ததியாரில் உண்மையுள்ளவர்கள்கூட நீதியான வழியைப் பின்பற்ற முடியாமல் போனது.​—⁠யாத்திராகமம் 20:5.

நமக்குப் பாடம்:

3:8, 43, 44. எருசலேமுக்கு அழிவு ஏற்பட்ட சமயத்தில் அதன் குடிமக்கள் உதவிக்காகக் கூப்பிட்டபோது அதைக் கேட்க யெகோவா மறுத்துவிட்டார். ஏன்? ஏனெனில், அந்த ஜனங்கள் கீழ்ப்படியாதவர்களாக இருந்தார்கள், அவர்கள் மனந்திரும்பவே இல்லை. நம் ஜெபங்களுக்கு யெகோவா பதில் அளிக்க வேண்டுமானால், நாம் அவருக்குக் கீழ்ப்படிவது அவசியம்.​—⁠நீதிமொழிகள் 28:9.

3:20. “பூமியனைத்தின் மேலும் உன்னதமான” யெகோவா மிகவும் உயர்ந்தவராய் இருப்பதால், “வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.” (சங்கீதம் 83:17; 113:6) எனினும், சர்வவல்லமையுள்ள கடவுள் ஜனங்களிடம் தம்மைத் தாழ்த்துவதற்கு மனமுள்ளவராய் இருப்பதை, அதாவது அவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுடைய நிலைக்கு இறங்கிவர அவர் மனமுள்ளவராய் இருப்பதை, எரேமியா நன்கு அறிந்திருந்தார். உண்மை கடவுள் சர்வ சக்தியும் சர்வ ஞானமும் படைத்தவராய் மட்டுமல்ல தாழ்மையுள்ளவராயும் இருப்பதால் நாம் எவ்வளவாய் மகிழ்ச்சி அடையலாம்!

3:21-26, 28-33. கடும் துன்பத்தைக்கூட நாம் எப்படிச் சகிக்க முடியும்? அதைப்பற்றி எரேமியா நமக்குச் சொல்கிறார். அன்போடும் கருணையோடும் யெகோவா செய்கிற காரியங்களுக்கு அளவில்லை என்பதையும் அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. நாம் உயிருடன் இருப்பதுதானே, நம்பிக்கை இழந்துவிடாதிருப்பதற்கும் இரட்சிப்பைக் குறித்து யெகோவாவைக் குறைகூறாமல் பொறுமையோடு காத்திருப்பதற்கும் போதுமான காரணத்தை அளிக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, “[நம்] வாயைத் தூளில்” வைக்க வேண்டும்; அதாவது, கடவுள் அனுமதிப்பதெல்லாம் நம் நல்லதுக்குத்தான் என்பதை ஒத்துக்கொண்டு சோதனைகளைப் பொறுமையோடு தாங்கிக்கொள்ள வேண்டும்.

3:27. இளவயதில் விசுவாசப் பரீட்சைகளைச் சந்திப்பது என்பது, துன்பத்தையும் ஏளனத்தையும் சகிப்பதை அர்த்தப்படுத்தலாம். இருந்தாலும், “இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.” ஏன்? ஏனென்றால், இளம் வயதிலேயே கஷ்டத்தைச் சுமக்கக் கற்றுக்கொள்வது, பிற்காலத்தில் சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க ஒருவரைத் தயார்படுத்துகிறது.

3:39-42. நாம் செய்த பாவங்களினால் துன்பப்படும்போது அதைக் குறித்து ‘முறையிடுவது,’ அதாவது குறைசொல்வது, ஞானமற்ற செயல். தவறு செய்ததால் நேர்ந்த துன்பங்களைக் குறித்து குறைசொல்வதற்குப் பதிலாக, “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.” மனந்திரும்பி நம் வழிகளைச் சரிசெய்துகொள்வதே ஞானமான செயல்.

யெகோவாவை உங்கள் நம்பிக்கையாக்கிக் கொள்ளுங்கள்

பாபிலோனியர் எருசலேமைச் சுட்டெரித்ததையும், யூதா தேசத்தைப் பாழாக்கியதையும் யெகோவா எப்படிக் கருதினார் என்பதை புலம்பல் புத்தகம் தெரிவிக்கிறது. பாவத்தை ஒத்துக்கொண்டதைத் தெரிவிக்கும் வார்த்தைகள் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதானது, யெகோவாவின் நோக்குநிலையில் இந்த அழிவுக்கான காரணம் ஜனங்கள் செய்த தவறே என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இப்புத்தகத்தின் பாடல் வரிகளில், யெகோவாவுக்காகக் காத்திருப்பதையும் சரியான வழியில் நடக்க ஆசைப்படுவதையும் தெரிவிக்கிற வார்த்தைகளும் உள்ளன. இந்த வார்த்தைகள், எரேமியாவின் நாளில் இருந்த பெரும்பாலோரின் உணர்ச்சிகளை அல்ல, ஆனால் எரேமியா மற்றும் மனந்திரும்பிய மீதிப்பேரின் உணர்ச்சிகளைத் தெரிவிக்கின்றன.

எருசலேமின் நிலையை யெகோவா சீர்தூக்கிப் பார்த்த விதத்தைப்பற்றி புலம்பல் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது இரண்டு முக்கியப் பாடங்களை நமக்குக் கற்பிக்கிறது. முதலாவதாக, எருசலேமின் அழிவும் யூதாவின் பாழ்க்கடிப்பும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நம்மைத் தூண்டுகின்றன; அவருடைய சித்தத்திற்குப் பாராமுகம் காட்டக்கூடாது என்பதற்கு ஓர் எச்சரிப்பாகவும் அமைகின்றன. (1 கொரிந்தியர் 10:11) இரண்டாவதாக, எரேமியாவின் உதாரணம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. (ரோமர் 15:4) சூழ்நிலை நம்பிக்கையற்றதாகத் தெரிந்தபோதிலும், மிகவும் நொந்துபோயிருந்த தீர்க்கதரிசி இரட்சிப்புக்காக யெகோவாவை நோக்கியிருந்தார். யெகோவாவையும் அவரது வார்த்தையையும் முழுமையாகச் சார்ந்திருப்பதும் அவர்மீது நம்பிக்கை வைத்திருப்பதும் எவ்வளவு முக்கியம்!​—⁠எபிரெயர் 4:12.

[பக்கம் 9-ன் படம்]

தான் உரைத்த நியாயத்தீர்ப்பு செய்தி நிறைவேறியதை எரேமியா கண்ணாரக் கண்டார்

[பக்கம் 10-ன் படம்]

கிறிஸ்தவ நடுநிலைமை விஷயத்தில் இந்த கொரிய நாட்டு சாட்சிகள் எடுத்த தீர்மானத்தின் காரணமாக அவர்களது விசுவாசம் சோதிக்கப்பட்டது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்