சுருளிலிருந்து கோடெக்ஸ்வரை— பைபிள் புத்தக வடிவம் பெற்றது எப்படி
சரித்திரம் முழுவதிலும் பல வழிகளில் மக்கள் தகவல்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். பழங்காலங்களில், எழுத்தாளர்கள் தங்களுடைய எண்ணங்களை நினைவுச் சின்னங்களில் பொறித்தார்கள், கல்வெட்டுகளில் வடித்தார்கள் அல்லது மரப்பலகைகளில் செதுக்கினார்கள், பதப்படுத்தப்பட்ட தோல்களிலும் இன்னும் பிற பொருள்களிலும் எழுதினார்கள். முதல் நூற்றாண்டுவாக்கில், மத்திய கிழக்கில் சுருளில் எழுதுவதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஸ்தாபிக்கப்பட்ட முறையாக இருந்தது. பிறகு, கோடெக்ஸ் வந்தது; மெல்ல மெல்ல இது சுருளின் இடத்தை ஏற்றது, எழுத்தில் வடித்துப் பாதுகாக்கும் பொதுவான முறையாக மாறியது. மேலும், பைபிள் விநியோகிப்பில் இது முக்கியப் பங்கு வகித்தது. கோடெக்ஸ் என்பது என்ன, அது எப்படி உபயோகத்திற்கு வந்தது?
கோடெக்ஸ் என்பது இன்றைய புத்தகத்தின் முந்தைய வடிவம். அதில், தாள்கள் மடிக்கப்பட்டு, ஒன்றாகச் சேர்த்து மடிப்பில் கட்டப்பட்டன. இந்தத் தாள்கள் இரு புறமும் எழுதப்பட்டு அட்டைகளுக்கு இடையே பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அன்றைய கோடெக்ஸ்கள் பார்ப்பதற்கு இன்றைய புத்தகங்கள்போல இருக்கவில்லை; எனினும், மற்ற அநேக கண்டுபிடிப்புகளைப் போலவே, அவற்றைப் பயன்படுத்தியவர்களின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்றபடி மேம்பட்ட விதத்தில் அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
மரப்பலகை, மெழுகு, பதப்படுத்தப்பட்ட தோல்
ஆரம்பத்தில், கோடெக்ஸ்கள் பெரும்பாலும் மெழுகு பூசப்பட்ட மரப்பலகைகளாக இருந்தன. இத்தகைய மரப்பலகைகள் ஹெர்குலேனியம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன; அவை நீளவாட்டில் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. இந்நகரம், பொ.ச. 79-ல் வெசுவியஸ் எரிமலை வெடித்துச் சிதறியபோது பாம்ப்பே நகருடன் சேர்ந்து அழிந்துபோனது. காலப்போக்கில், உறுதியான மரப்பலகைகளுக்குப் பதிலாக மடிக்க முடிகிற தாள்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கோடெக்ஸ்கள் லத்தீன் மொழியில் மெம்ப்ரானை என்றழைக்கப்பட்டன; ஏனென்றால் அவற்றின் பக்கங்கள் பொதுவாக தோலால் ஆனவை.
நாணற்புற்களால் தயாரிக்கப்பட்ட கோடெக்ஸ்கள் சில இன்றுவரை இருக்கின்றன. கிறிஸ்தவர்களுடைய மிகப் பழமையான கோடெக்ஸ்கள் வறண்ட வானிலை நிலவும் எகிப்தின் சில பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டன; அவை நாணற்புல் கோடெக்ஸ்களென அழைக்கப்பட்டன.a
சுருளா, கோடெக்ஸா?
கிட்டத்தட்ட பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவுவரையிலாவது கிறிஸ்தவர்கள் முக்கியமாக சுருளையே பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவிலிருந்து மூன்றாம் நூற்றாண்டுவரையான காலப்பகுதியில், கோடெக்ஸ்களை ஆதரித்தவர்களுக்கும் சுருளை ஆதரித்தவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. சுருளையே பயன்படுத்திப் பழகிப்போன பழமைவாதிகள் சம்பிரதாயங்களையும் பாரம்பரியங்களையும் விட்டுக்கொடுக்கத் தயங்கினார்கள். ஆயினும், ஒரு சுருளைப் படிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிக்கலாம். பொதுவாக ஒரு சுருள், குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய நாணற்புல் தாள்களால் அல்லது பதப்படுத்தப்பட்ட தோல்களால் தயாரிக்கப்பட்டது; இது, நீளமாக இருப்பதற்காக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, சுருட்டப்பட்டிருந்தது. வாசகங்கள் சுருளின் உட்பக்கத்தில் பத்திகளாகப் பிரித்து எழுதப்பட்டன. அதைப் பயன்படுத்துபவர் சுருளைத் திறந்து தனக்கு விருப்பமான பகுதியைக் கண்டுபிடித்துப் படித்தார். படித்த பிறகு, மீண்டும் அதைச் சுருட்டி வைத்தார். (லூக்கா 4:16-20) ஒரேயொரு புத்தகத்தை உருவாக்குவதற்குக்கூட பெரும்பாலும் பல சுருள்கள் தேவைப்பட்டன; இதுவும்கூட அதைப் பயன்படுத்துவதில் அதிக சிரமத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் நூற்றாண்டுமுதல் வேதவாக்கியங்களை கோடெக்ஸ்களில் பிரதி எடுக்க கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது; என்றாலும், கோடெக்ஸ்கள் புழக்கத்திற்கு வந்து பல நூற்றாண்டுகள்வரை சுருள்கள் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும், கோடெக்ஸ்களைக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தியதன் காரணமாகவே பெரும்பாலோர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
கோடெக்ஸைப் பயன்படுத்துவதில் நிறைய நன்மைகள் இருப்பது பளிச்செனத் தெரிகிறது. இது, நிறைய விஷயங்களை எழுதி வைக்கப் போதுமானதாகவும், வசதியானதாகவும், எடுத்துச் செல்வதற்குச் சுலபமானதாகவும் இருந்தது. பூர்வத்தில் இருந்த சிலர் இந்த நன்மைகளை அறிந்திருந்தாலும், பெரும்பான்மையோர் சுருள்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதற்குத் தயங்கினார்கள். என்றாலும், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் பல்வேறு காரணிகள் படிப்படியாக கோடெக்ஸ்களின் ஆதிக்கத்திற்கு வழிநடத்தின.
சுருள்களோடு ஒப்பிடுகையில் கோடெக்ஸ்கள் அதிக செலவுபிடிக்காதவை. அவற்றின் இரு புறமும் எழுத முடியும்; பல புத்தகங்களை ஒரே தொகுதியாக இணைக்க முடியும். குறிப்பிட்ட விஷயங்களை கோடெக்ஸ்களில் எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதுதான் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் வழக்கறிஞர் போன்றவர்கள் மத்தியிலும், கோடெக்ஸ்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டதற்குக் காரணம் என சிலர் கருதுகிறார்கள். கைக்கு அடக்கமான வேதாகமம் அல்லது பைபிள் மேற்கோள்கள் அடங்கிய எளிய புத்தகம் நற்செய்தியைப் பரப்ப கிறிஸ்தவர்களுக்குப் பேருதவியாக இருந்தது. மேலும், கோடெக்ஸுக்கு மரத்தாலான அட்டை இருந்தது; அதனால், சுருளைவிட அதிக காலம் நீடித்துழைத்தது.
தனிப்பட்ட படிப்பிற்கும் கோடெக்ஸ்கள் நடைமுறையானதாக இருந்தன. கிட்டத்தட்ட மூன்றாம் நூற்றாண்டின் முடிவில், தோலினாலான, நற்செய்தி அடங்கிய சிறிய கோடெக்ஸ்கள் கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொண்டவர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. அதன் பிறகு, முழுமையாகவோ பகுதியாகவோ பைபிள்கள் கோடெக்ஸ் வடிவில் கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்டன.
பைபிளில் உள்ள தெய்வீக ஞானத்தைச் சுலபமாகக் கண்டடைய இன்று ஏராளமான சாதனங்கள் உள்ளன. அதைக் கணிப்பொறியிலும், ஒலி நாடாக்களிலும், அச்சடிக்கப்பட்ட வடிவிலும் காண முடிகிறது. நீங்கள் எந்த வடிவிலுள்ள பைபிளைத் தேர்ந்தெடுத்தாலும் கடவுளுடைய வார்த்தையின்மேல் அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்; நாள்தோறும் அதை வாசியுங்கள்.—சங்கீதம் 119:97, 167.
[அடிக்குறிப்பு]
a ஆங்கில காவற்கோபுரம், 1962, ஆகஸ்ட் 15, பக்கங்கள் 501-5, “பூர்வ கிறிஸ்தவர்களின் கோடெக்ஸ்” என்ற தலைப்பிலுள்ள கட்டுரையைக் காண்க.
[பக்கம் 15-ன் படங்கள்]
பைபிள் விநியோகிப்பில் கோடெக்ஸ் மிகப் பெரிய பங்கு வகித்தது