அழியாத ஆத்துமா உங்களுக்கு இருக்கிறதா?
மனிதர்களாகிய நமக்கு, கண்ணுக்குத் தெரியும் இந்தச் சரீரம் மட்டும்தான் இருக்கிறதா? அல்லது கண்ணுக்குத் தெரியாத விசேஷமான வேறு ஏதோவொன்றும் இருக்கிறதா? நாம், இன்று முளைத்து நாளை வாடிவிடும் புல்லைப் போன்றவர்களா? அல்லது, இறந்த பின்பு கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு பாகம் நம்மிலிருந்து பிரிந்துசென்று உயிர்வாழ்கிறதா?
ஒருவர் மண்ணைவிட்டு மறைந்தபின் வேறெங்கோ சென்று மீண்டும் உயிர்வாழ்கிறார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது; இது சம்பந்தமாக குழப்பமூட்டும் பல்வேறு கருத்துகளை இவ்வுலக மதங்கள் உருவாக்கியுள்ளன. இருந்தாலும், அவற்றில் பெரும்பாலான மதங்கள் ஒத்துக்கொள்ளும் ஓர் அடிப்படைக் கருத்து இதுதான்: ஒரு நபரினுள் அழியாத ஏதோவொன்று இருக்கிறது; அந்நபர் இறந்தபின்பும் அது அழியாமல் தொடர்ந்து வாழ்கிறது. “ஏதோவொன்று” எனப்படுகிற இதுவே ஆத்துமா என்பதாக அநேகர் நம்புகின்றனர். அப்படியானால், உங்கள் நம்பிக்கை என்ன? உடலும் ஆத்துமாவும் சரிபாதியாகக் கலந்த கலவையா நாம்? ஆத்துமா என்றால் என்ன? அழியாத ஆத்துமா மனிதருக்கு இருக்கிறதா? நம் இயல்பைக் குறித்த உண்மையை அறிவது எவ்வளவு முக்கியம்!
“மனுஷன் ஜீவாத்துமாவானான்”
“ஆத்துமா” எனப்படுவது, மனிதனின் இறப்புக்குப் பின்னர் அவனது உடலைவிட்டுப் பிரிந்து தொடர்ந்து வாழும் இயல்புடைய ஒரு பாகமா? “ஆத்துமா என்பது பெரும்பாலும் ஒரு முழு நபருக்கு இணையாகவே இருக்கிறது” என ஹோல்மன் படவிளக்க பைபிள் அகராதி (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. உதாரணமாக, ஆதியாகமம் 2:7 குறிப்பிடுவதாவது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” ஆகவே, முதல் மனிதனாகிய ஆதாம் ஓர் ஆத்துமாவாக இருந்தான்.
“ஆத்துமா” என்ற வார்த்தை, ஒரு முழு நபரையே குறிக்கிறது என்பதை பிற வேதவசனங்களும் ஆதரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆத்துமா வேலை செய்வதுபற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (லேவியராகமம் 23:30) ஆத்துமா விசனப்படுகிறது, வருத்தப்படுகிறது, சஞ்சலப்படுகிறது, கலங்குகிறது என்றெல்லாம் பைபிள் சொல்கிறது. (நியாயாதிபதிகள் 16:16; யோபு 19:2; சங்கீதம் 119:28; யோவான் 12:27). “எந்த மனுஷனும் [“ஆத்துமாவும்,” NW] மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்” என்று ரோமர் 13:1 தெரிவிக்கிறது. 1 பேதுரு 3:20-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘நோவாவின் . . . நாட்களில், . . . அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப் பேர் [“ஆத்துமா,” NW] மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.’ ஆத்துமா என்பது ஒருவர் இறந்தபின் அவரது உடலிலிருந்து பிரிந்துசெல்கிற உருவற்ற ஒரு பொருள் என இவற்றில் எந்தவொரு வசனமும் குறிப்பிடுவதில்லை.
மிருகங்களையும் தாவரங்களையும் குறித்து என்ன சொல்லலாம்? அவையும் ஆத்துமாக்களா? மிருகங்களின் படைப்பைக் குறித்து பைபிள் அளிக்கிற விளக்கத்தைச் சற்று கவனியுங்கள். “நீந்தும் ஜீவ ஜந்துக்களை [“ஆத்துமாக்களை,” NW] . . . ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது” என்று கடவுள் சொன்னார். படைப்பின் அடுத்த கட்டமாக அவர் இவ்வாறு சொன்னார்: “பூமியானது ஜாதிஜாதியான ஜீவ ஜந்துக்களாகிய [“ஆத்துமாக்களாகிய,” NW] நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது.” (ஆதியாகமம் 1:20, 24) ஆகவே, மனிதனாய் இருந்தாலும் சரி மிருகமாய் இருந்தாலும் சரி, உயிரினங்கள் அனைத்தும் ஆத்துமாக்களே. தாவரங்களைப் பொறுத்தவரை, பைபிள் அவற்றை ஆத்துமாக்களெனக் குறிப்பிடுவதில்லை.
“ஆத்துமா” என்ற வார்த்தை மற்றொரு அர்த்தத்திலும் குறிப்பிடப்படுகிறது. யோபு 33:22-ல் நாம் வாசிப்பதாவது: “அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் [அதாவது, உயிர்] சாவுக்கும் சமீபிக்கிறது.” இங்கே, “ஆத்துமா,” ‘உயிர்’ ஆகிய வார்த்தைகள் ஒன்றுக்கொன்று இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன; ஒன்றின் பொருளை மற்றொன்று வலியுறுத்திக் கூறுகிறது. ஆகவே, “ஆத்துமா” என்பது, ஜீவனுள்ள ஆத்துமாவின் அல்லது நபரின் உயிரையும் குறிக்கிறது. எனவேதான், மோசேயின் “பிராணனை [“ஆத்துமாவை,” NW] வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள்” என அவரது உயிரை வேட்டையாட முயன்ற பகைவர்களைக் குறித்து பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 4:19) இயேசு கிறிஸ்துவைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மனுஷகுமாரனும் . . . அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் [“ஆத்துமாவை,” NW] கொடுக்கவும் வந்தார்.”—மத்தேயு 20:28.
“ஆத்துமா” என்பதற்கு பைபிள் எளிய விளக்கத்தை அளிக்கிறது; அதுவும் மாறாத விளக்கத்தை அளிக்கிறது. ஆத்துமா என்பது, ஒரு மனிதனையோ, ஒரு மிருகத்தையோ, ஜீவனுள்ள ஆத்துமாவாக இருக்கிற ஓர் உயிரினத்தின் உயிரையோ குறிக்கிறது. நாம் பார்க்கப்போகிறபடி, ஆத்துமா இறக்கும்போது என்ன நடக்குமென்று பைபிள் சொல்வதுடன் இந்தக் கருத்து ஒத்துப்போகிறது.
‘பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும்’
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” என பைபிள் குறிப்பிடுகிறது. (எசேக்கியேல் 18:4) ஓர் இக்கட்டான சூழ்நிலையிலிருந்த எலியா தீர்க்கதரிசி, “கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று வேண்டினார். (1 இராஜாக்கள் 19:4) அவ்வாறே யோனாவும், தான் ‘உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாவது [அதாவது தன் ஆத்துமா சாவது] நலமாயிருக்கும்’ என்றார். (யோனா 4:8) ஆம், ஒருவர் இறக்கையில், அந்த ஆத்துமா சாகிறது; அது அழியா இயல்புடையது அல்ல. ஒரு நபரே ஓர் ஆத்துமாவாக இருப்பதால், அவர் இறந்துவிட்டார் எனச் சொல்வது, அவருடைய ஆத்துமா இறந்துவிட்டது எனச் சொல்வதையே அர்த்தப்படுத்தும்.
ஆத்துமா பிரிந்து செல்வதாகவும், அது திரும்பி வருவதாகவும் சொல்கிற பைபிள் வசனங்களைப்பற்றி என்ன சொல்லலாம்? தன் மகனைப் பிரசவித்தபோது ராகேலுக்குச் சம்பவித்ததைக் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.” (ஆதியாகமம் 35:18) ஒரு விதவையின் மகன் உயிர்த்தெழுந்ததைப்பற்றி விவரிக்கையில் 1 இராஜாக்கள் 17:22 இவ்வாறு குறிப்பிடுகிறது: “கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.” ஆகவே, ஆத்துமா என்பது உடலைவிட்டுப் பிரியவோ உடலுக்குள் நுழையவோ முடிகிற கண்ணுக்குத் தெரியாத உருவற்ற ஒரு பாகமென இவ்வசனங்கள் காட்டுகின்றனவா?
“ஆத்துமா” என்ற வார்த்தைக்கு, “உயிர்” என்ற ஓர் அர்த்தமும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ராகேலின் ஆத்துமா பிரிவதாகச் சொல்வது, ராகேலின் உயிர் பிரிவதையே அர்த்தப்படுத்துகிறது. சொல்லப்போனால், “அவள் ஆத்துமா பிரியும்போது” என்ற சொற்றொடரை, சில பைபிள்கள், “அவளுடைய உயிர் மறையும்போது,” (நாக்ஸ்) “அவள் இறுதிமூச்சை விட்டபோது” (ஜெருசலேம் பைபிள்) என்றே மொழிபெயர்க்கின்றன. அவ்வாறே, விதவையின் மகனைப் பற்றியதிலும், அந்தப் பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்பி வந்தது.—1 இராஜாக்கள் 17:23.
மனிதனின் இயல்பு
ஆகவே, மனிதனின் இயல்பைப்பற்றி பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அவனிடம் ஆத்துமா எனப்படும் ஒரு பாகம் இல்லை; மாறாக, அவனே ஓர் ஆத்துமாவாக இருக்கிறான். மனிதனின் இயல்பு இவ்வாறு இருப்பதால், அவன் இறந்தபின் அவனுக்கிருக்கும் ஒரே எதிர்பார்ப்பு உயிர்த்தெழுதல்தான். பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:28, 29) உயிர்த்தெழுதலைப் பற்றிய இந்த வாக்கு நிறைவேறுவது உறுதி என்பதால், இது இறந்தவர்களுக்கு நிஜமான எதிர்பார்ப்பை அளிக்கிறது; அழியாத ஆத்துமா பற்றிய போதனை அத்தகைய எதிர்பார்ப்பை அளிப்பதில்லை.
உயிர்த்தெழுதல் என்றால் என்ன, அது மனிதருக்கு எதைக் குறிக்கிறது என்பதைப்பற்றி திருத்தமாக அறிந்துகொள்வது எவ்வளவு முக்கியம்! அவ்வாறே, கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வதும் அவசியம்; ஏனெனில் இயேசு ஜெபிக்கையில் இவ்வாறு கூறினார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) பைபிளைப் படித்து கடவுளைப் பற்றியும், அவருடைய மகனைப் பற்றியும், கடவுளின் வாக்குறுதிகளைப் பற்றியும் நீங்கள் இன்னும் அதிகமான விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கு உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியோடு உங்களுக்கு உதவுவார்கள். அவர்களைத் தொடர்புகொள்ளும்படி, அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
[பக்கம் 4-ன் படங்கள்]
இவை அனைத்தும் ஆத்துமாக்களே
[படத்திற்கான நன்றி]
ஆடு: CNPC—Centro Nacional de Pesquisa de Caprinos (Sobral, CE, Brasil)