பர்சிலா தன் வரையறைகளை அறிந்த மனிதர்
‘நான் ஏன் உமக்குப் பாரமாய் இருக்க வேண்டும்?’ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜாவிடம் இப்படிக் கேட்டவர் 80 வயதான பர்சிலா. அவருக்கிருந்த செல்வச் செழிப்பின் காரணமாக பைபிள் அவரை ‘மகா பெரிய மனுஷராயிருந்தார்’ என்று அழைப்பதில் ஆச்சரியமேதுமில்லை. (2 சாமுவேல் 19:32, 35) யோர்தான் நதிக்குக் கிழக்கே உள்ள கீலேயாத் மலைப்பகுதியில் பர்சிலா வாழ்ந்தார்.—2 சாமுவேல் 17:27; 19:31.
பர்சிலா எந்தச் சூழ்நிலைகளில் இந்த வார்த்தைகளை தாவீதிடம் சொன்னார்? இந்த முதியவர் ஏன் அவ்வாறு சொன்னார்?
ராஜாவிற்கு எதிரான கலகம்
தாவீது ஆபத்தில் இருந்தார். அவருடைய மகனான அப்சலோம், “இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்ட” பிறகு, அவருடைய சிங்காசனத்தையும் அபகரித்துக்கொண்டார். தன்னுடைய தந்தைக்கு உண்மைத்தன்மையோடு இருப்பவர்களை அப்சலோம் சும்மா விடமாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதனால் தாவீதும் அவருடைய ஊழியக்காரர்களும் எருசலேமைவிட்டு புறப்பட்டுச் சென்றார்கள். (2 சாமுவேல் 15:6, 13, 14) யோர்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள மக்னாயீமிற்கு தாவீது வந்தபோது பர்சிலா அவருக்கு உதவினார்.
பர்சிலாவும் மாகீர், சோபி என்ற இன்னும் இருவரும் தாவீதுக்கு ஏராளமான பொருளுதவிகளைத் தாராளமாய் வழங்கினார்கள். உண்மையுள்ள அந்த மூன்று பேரும் தாவீதையும் அவருடைய மனிதரையும் குறித்து, “அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள்” என்று சொன்னதிலிருந்து அவர்களுடைய சூழ்நிலையை நன்கு புரிந்திருந்ததைக் காட்டினார்கள். பர்சிலாவும் மற்ற இருவரும் தாவீதுக்கும் அவருடைய மனிதர்களுக்கும் வேண்டியவற்றைக் கொடுப்பதன்மூலம் தங்களாலான அனைத்தையும் செய்தார்கள். அவர்களுக்கு மெத்தைகளையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும் பயற்றையும், சிறு பயற்றையும், தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும் இன்னும் பிற பொருள்களையும் கொடுத்தார்கள்.—2 சாமுவேல் 17:27-29.
தாவீதுக்கு உதவுவது ஆபத்தாக இருந்தது. ஆளுவதற்கு உரிமை பெற்றிருந்த இந்த ராஜாவுக்கு உதவும் எவரையும் அப்சலோம் தண்டிக்காமல் விடமாட்டார். என்றாலும், பர்சிலா தைரியமாக தாவீதுக்கு உண்மைத்தன்மையைக் காட்டினார்.
சூழ்நிலை தலைகீழாய் மாறுகிறது
அதன் பிறகு விரைவிலேயே அப்சலோமின் கலகப் படைகள் தாவீதின் மனிதர்களை எதிர்கொண்டன. எப்பிராயீமின் காட்டில் யுத்தம் மூண்டது; இந்த இடம் ஒருவேளை மக்னாயீமுக்கு அருகே இருந்திருக்கலாம். அப்சலோமின் படைகள் தோற்கடிக்கப்பட்டன; “அன்றையதினம் . . . பெரிய சங்காரம் உண்டாயிற்று.” அப்சலோம் தப்பியோட முயற்சிசெய்த போதிலும் சீக்கிரத்தில் சாகடிக்கப்பட்டான்.—2 சாமுவேல் 18:7-15.
எதிர்ப்பதற்கு யாரும் இல்லாததால் தாவீது மீண்டும் ராஜாவானார். அவருடன் சென்றவர்கள் இனியும் நாடோடிகளாக வாழ வேண்டியதில்லை. மேலும், அவர்கள் தாவீதிடம் உண்மைத்தன்மையுடன் நடந்துகொண்டதால் அவருடைய நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றார்கள்.
தாவீது, எருசலேமுக்கு திரும்புகிற சமயத்தில், ‘கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவரோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தார்.’ அந்தச் சமயத்தில், வயது முதிர்ந்த பர்சிலாவுக்கு தாவீது பின்வருமாறு அழைப்பு விடுத்தார்: “நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன்.”—2 சாமுவேல் 19:15, 31, 33.
பர்சிலா செய்த உதவிக்குத் தாவீது நன்றியுள்ளவராய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அந்த அழைப்பு, ஏதோ பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதன்மூலம் கைமாறு செய்வதற்கு ராஜா விரும்பியதாகத் தெரியவில்லை. செல்வந்தரான பர்சிலாவுக்கு அதுபோன்ற உதவி தேவைப்பட்டிருக்காது. அந்த முதியவரிடம் மெச்சத்தகுந்த குணங்கள் இருந்ததால் தன்னுடைய அரசவையில் அவர் இருக்க வேண்டுமென தாவீது விரும்பியிருக்கலாம். அங்கே நிரந்தரமாய் ஓர் இடத்தைப் பெறுவது கெளரவமாயிருக்கும்; அதோடு, ராஜாவுடன் நட்புறவு கொள்ளும் சிறப்புரிமையையும் அவருக்கு அளிக்கும்.
தன்னடக்கமும் எதார்த்தமும்
தாவீது ராஜாவின் அழைப்பிற்கு பர்சிலா இவ்வாறு பதில் அளித்தார்: “நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்? இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ?” (2 சாமுவேல் 19:34, 35) இவ்வாறு பர்சிலா அந்த அழைப்பை மரியாதையோடு மறுத்தார், இதனால் ஓர் அருமையான வாய்ப்பைத் தவறவிட்டார். ஏன்?
பர்சிலாவின் முதுமையும் அதைச் சார்ந்த குறைபாடுகளும் அவர் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். அதிக காலம் உயிர் வாழ மாட்டாரென அவர் நினைத்திருக்கலாம். (சங்கீதம் 90:10) தாவீதை ஆதரிப்பதற்குத் தன்னால் முடிந்ததை அவர் செய்துவிட்டார், அதோடு முதுமையால் வரும் குறைபாடுகளையும் அவர் அறிந்திருந்தார். கெளரவமும் முதன்மையான நிலையில் இருக்க வேண்டுமென்ற எண்ணமும் தன்னுடைய பலத்தை எதார்த்தமாய் மதிப்பிடாதபடி தடுக்க அவர் அனுமதிக்கவில்லை. பெயருக்கும் புகழுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட அப்சலோமைப்போல் இல்லாமல் பர்சிலா ஞானமாக, தன்னடக்கத்துடன் நடந்துகொண்டார்.—நீதிமொழிகள் 11:2.
தன்னுடைய குறைபாடுகள் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாய் இருக்கக்கூடாது என பர்சிலா விரும்பியது அவர் அந்தத் தீர்மானம் எடுத்ததற்கு மற்றொரு காரணமாயிருக்கலாம். “உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்க வேண்டியது என்ன?” என்று பர்சிலா கேட்டார். (2 சாமுவேல் 19:35) அவர் தாவீதை இன்னும் ஆதரித்து வந்தாலும், தன்னைவிட ஓர் இளைஞன் பொறுப்புகளை அதிக திறமையாகக் கையாள முடியுமென பெரும்பாலும் நம்பியிருக்கலாம். உண்மையில், தன் மகனை மனதில் வைத்து பர்சிலா இவ்வாறு சொன்னார்: “இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும்.” தாவீது வருத்தப்படுவதற்குப் பதிலாக இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். சொல்லப்போனால், யோர்தானைக் கடப்பதற்கு முன்னால் தாவீது ‘பர்சிலாவை முத்தமிட்டு அவரை ஆசீர்வதித்தார்.’—2 சாமுவேல் 19:37-39.
சமநிலை அவசியம்
பர்சிலாவைப் பற்றிய பதிவு சமநிலை அவசியம் என்பதைச் சிறப்பித்துக் காட்டுகிறது. வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதால் அல்லது பொறுப்பை ஏற்பதற்குத் தகுதி இல்லை என்று நினைப்பதால் சிறப்பான சேவையைச் செய்வதற்கான வாய்ப்பை மறுக்கவோ அதை அடைவதற்காக முயற்சி எடுக்காதிருக்கவோ கூடாது. நாம் பலத்திற்காகவும் ஞானத்திற்காகவும் கடவுளைச் சார்ந்திருந்தால் அவர் நம்முடைய குறைகளை நிவர்த்தி செய்வார்.—பிலிப்பியர் 4:13; யாக்கோபு 4:17; 1 பேதுரு 4:11.
எனினும், நம்முடைய வரையறைகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவர் ஆன்மீக நடவடிக்கைகளில் ஏற்கெனவே சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கிறார். கூடுதலான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் பொருள் சம்பந்தமாகவும் ஆன்மீக ரீதியிலும் தன்னுடைய குடும்பத்தாரின் தேவைகளைக் கவனிக்க வேண்டிய வேதப்பூர்வ கடமைகளைச் செய்ய முடியாமல் போகலாமென அவர் உணருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், கூடுதலான பொறுப்புகளைத் தற்சமயம் ஏற்க மறுப்பது அவர் தன்னடக்கத்தோடும் நியாயத்தன்மையோடும் நடந்துகொள்வதற்கு அடையாளமாய் இருக்கும், அல்லவா?—பிலிப்பியர் 4:5, NW; 1 தீமோத்தேயு 5:8.
பர்சிலா ஓர் அருமையான முன்மாதிரியை வைத்திருக்கிறார், நாம் அதைத் தியானித்துப் பார்க்க வேண்டும். அவர் உண்மைத்தன்மையோடும் தைரியத்தோடும் தாராள மனதோடும் தன்னடக்கத்தோடும் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலுமாக, தன் சொந்த காரியங்களைவிட கடவுளுடைய காரியங்களுக்கே அவர் முதலிடம் கொடுக்கத் தீர்மானித்தார்.—மத்தேயு 6:33.
[பக்கம் 15-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
தாவீதுக்கு உதவிசெய்வதற்காக எண்பது வயதான பர்சிலா களைப்பூட்டும் பயணத்தை மேற்கொண்டார்
கீ லே யா த்
ரோகிலிம்
சுக்கோத்
மக்னாயீம்
யோர்தான் நதி
கில்கால்
எரிகோ
எருசலேம்
எப்பிராயீம்
[பக்கம் 13-ன் படம்]
தாவீதின் அழைப்பை பர்சிலா ஏன் மறுத்தார்?