‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வீர்களா’?
“ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.”—கலாத்தியர் 5:16.
1. பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பாவம் செய்துவிடுவோமோ என்ற அச்சத்தை எவ்வாறு போக்கலாம்?
ப ரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பாவம் செய்துவிடுவோமோ என்ற அச்சம் ஒருவேளை நமக்கு ஏற்படலாம்; அந்த அச்சத்தைப் போக்க ஒரு வழி இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் அதைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” (கலாத்தியர் 5:16) ஆகவே, கடவுளுடைய ஆவி நம்மை வழிநடத்துவதற்கு அனுமதித்தோமானால், தவறான மாம்ச இச்சைகள் நம்மை ஆட்கொள்ளாது.—ரோமர் 8:2-10.
2, 3. நாம் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வோமானால் எதைச் செய்வோம், எதைச் செய்ய மாட்டோம்?
2 நாம் ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்கையில்’ யெகோவாவுக்குக் கீழ்ப்படிய அவருடைய செயல்நடப்பிக்கும் சக்தி நம்மைத் தூண்டுவிக்கும். அப்போது ஊழியத்திலும் சபையிலும் வீட்டிலும் பிற இடங்களிலும் அவருடைய பண்புகளை நாம் வெளிக்காட்டுவோம். நம் மணத்துணையிடமும், பிள்ளைகளிடமும் சக விசுவாசிகளிடமும் பிறரிடமும் நாம் நடந்துகொள்ளும் விதத்தில் ஆவியின் கனியை வெளிக்காட்டுவோம்.
3 “தேவன் முன்பாக ஆவியிலே” வாழ்வது, பாவம் செய்யாதபடி நம்மைத் தடுக்கிறது. (1 பேதுரு 4:1-6) பரிசுத்த ஆவி நம்மிடம் இருக்குமானால், மன்னிக்க முடியாத பாவத்தை நிச்சயமாகவே நாம் செய்ய மாட்டோம். அதுமட்டுமின்றி, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளும்போது வேறென்ன சிறந்த வழிகளில் நாம் பயனடைவோம்?
கடவுளிடமும் கிறிஸ்துவிடமும் நெருக்கமாயிருங்கள்
4, 5. ஆவியின்படி நடந்தோமெனில் இயேசுவை நாம் எப்படிக் கருதுவோம்?
4 நாம் பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடப்பதால்தான், கடவுளோடும் அவருடைய குமாரனோடும் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. ஆவிக்குரிய வரங்களைக் குறித்து எழுதுகையில் கொரிந்துவிலுள்ள சக விசுவாசிகளிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாதென்றும், உங்களுக்குத் [முன்னாள் விக்கிரகாராதனைக்காரருக்கு] தெரிவிக்கிறேன்.” (1 கொரிந்தியர் 12:1-3) இயேசுவைச் சபித்துப் பேசுவதற்கான எந்தவொரு தூண்டுதலும் பிசாசாகிய சாத்தானிடமிருந்தே வருகிறது. என்றாலும், ஆவிக்கேற்றபடி நடக்கிற கிறிஸ்தவர்களாகிய நாம், மரித்த இயேசுவை யெகோவா எழுப்பினார் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார் என்றும் நம்புகிறோம். (பிலிப்பியர் 2:5-11) இயேசுவை கர்த்தராக கடவுள் நியமித்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்; அதோடு, கிறிஸ்துவின் மீட்கும்பலியிலும் நாம் விசுவாசம் வைக்கிறோம்.
5 பொ.ச. முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொண்ட சிலர், இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதையே மறுதலித்து, விசுவாசதுரோகிகள் ஆனார்கள். (2 யோவான் 7-11) அவர்களுக்குச் செவிகொடுத்தவர்கள் மேசியாவான இயேசுவைப் பற்றிய உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். (மாற்கு 1:9-11; யோவான் 1:1, 14) பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடப்பது அத்தகைய விசுவாசதுரோகத்திற்கு அடிபணிந்துவிடாதபடி நம்மைத் தடுக்கிறது. பைபிளிலுள்ள சரியான போதனைகளையும் கடவுளுடைய எண்ணங்களையும் தெள்ளத்தெளிவாக மனதில் பதியவைத்திருந்தால் மட்டுமே யெகோவாவின் அளவற்ற கருணையை நாம் தொடர்ந்து பெற்றுக்கொண்டு, எப்போதும் ‘சத்தியத்திலே நடக்க’ முடியும். (3 யோவான் 3, 4) ஆகவே, நம் பரலோகத் தகப்பனுடன் முறிக்க முடியாத பந்தத்தை வைத்துக்கொள்வதற்காக எல்லா விதமான விசுவாசதுரோகத்தையும் ஒதுக்கித்தள்ள நாம் தீர்மானமாய் இருப்போமாக.
6. ஆவிக்கேற்றபடி நடப்பவர்களிடத்தில் கடவுளுடைய ஆவி என்ன பண்புகளைப் பிறப்பிக்கிறது?
6 விபச்சாரம், காமவிகாரம் போன்ற மாம்சத்தின் கிரியைகளோடு சேர்த்தே விசுவாசதுரோகிகளின் விக்கிரகாராதனையையும் மார்க்கபேதங்களையும் பவுல் பட்டியலிட்டுள்ளார். ஆனால், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” என்று அவர் அறிவுறுத்தினார். (கலாத்தியர் 5:19-21, 24, 25) ஆவிக்கேற்றபடி வாழ்ந்து, அதன்படி நடக்கிறவர்களிடத்தில் கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி என்ன பண்புகளைப் பிறப்பிக்கிறது? “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் [அதாவது தன்னடக்கம்]” ஆகிய பண்புகளைப் பிறப்பிக்கிறது; இவற்றையே “ஆவியின் கனி” என பவுல் குறிப்பிட்டார். (கலாத்தியர் 5:22, 23) ஆவியின் கனியில் உட்பட்டுள்ள இந்தப் பண்புகளை நாம் இப்போது சிந்திக்கலாம்.
‘ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்’
7. அன்பு என்றால் என்ன, அதன் சிறப்பம்சங்கள் சில யாவை?
7 ஆவியின் கனியில் ஒன்றான அன்பு, பிறர் மீதுள்ள அளவுகடந்த பாசத்தையும் சுயநலமற்ற அக்கறையையும், அதோடு அவர்களுடன் உள்ள அன்யோன்யத்தையும் உட்படுத்துகிறது. கடவுள், அன்பின் உருவாக இருப்பதால், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. மனிதகுலத்தின்மீது கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்கும் உள்ள மிகப்பெரிய அன்புக்கு, இயேசுவின் மீட்கும்பலி எடுத்துக்காட்டாய் இருந்தது. (1 யோவான் 4:8; யோவான் 3:16; 15:13; ரோமர் 5:8) இயேசுவைப் பின்பற்றுவோராக நம்மை அடையாளம் காட்டுவதே நாம் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்புதான். (யோவான் 13:34, 35) சொல்லப்போனால், ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்ற’ கட்டளை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (1 யோவான் 3:23) அன்பு, நீடிய பொறுமையும் தயவுமுள்ளது என பவுல் சொல்கிறார். அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது, அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தை நாடாது; அன்பு கோபங்கொள்ளாது, தீங்கை கணக்கில் வைக்காது. அது அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படுகிறது; சகலத்தையும் தாங்குகிறது, சகலத்தையும் விசுவாசிக்கிறது, சகலத்தையும் நம்புகிறது, சகலத்தையும் சகிக்கிறது. அன்பு ஒருக்காலும் ஒழியாது.—1 கொரிந்தியர் 13:4-8.
8. சக வணக்கத்தாரிடத்தில் நாம் ஏன் அன்பு காட்ட வேண்டும்?
8 கடவுளுடைய ஆவி நம்மில் அன்பைப் பிறப்பிப்பதற்கு நாம் அனுமதித்தால், கடவுளோடும் பிறரோடும் அன்பான பந்தத்தை வைத்திருப்போம். (மத்தேயு 22:37-39) “சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 3:14, 15) பூர்வ இஸ்ரவேலில், கொலைசெய்த ஒருவர் அடைக்கலப் பட்டணத்தில் பிரவேசிக்க வேண்டுமென்றால், தான் கொலைசெய்த நபர்மீது அவருக்கு முன்விரோதம் எதுவும் இல்லாதிருந்திருக்க வேண்டும். (உபாகமம் 19:4, 11-13) நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறோம் என்றால், கடவுளையும் சக வணக்கத்தாரையும் மற்றவர்களையும் நேசிப்போம்.
‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்’
9, 10. மகிழ்ச்சி என்பது என்ன, நாம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கான சில காரணங்கள் யாவை?
9 ஆவியின் கனியாகிய சந்தோஷம், உள்ளத்தில் பொங்கியெழும் மகிழ்ச்சி ஆகும். யெகோவா ‘நித்தியானந்த தேவனாய்’ இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11; சங்கீதம் 104:31) தந்தையின் சித்தத்தைச் செய்வதில் குமாரன் இன்பம் காண்கிறார். (சங்கீதம் 40:8; எபிரெயர் 10:7-9) அதுமட்டுமல்ல, ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம் பெலன்.’—நெகேமியா 8:10.
10 நெருக்கடியான சமயங்களிலும் துயரமான சூழ்நிலைகளிலும் துன்புறுத்தப்படுகையிலும்கூட அவருடைய சித்தத்தை நாம் செய்யும்போது தேவன் அருளும் சந்தோஷத்தால் பரம திருப்தியைப் பெறுகிறோம். ‘தேவனை அறியும் அறிவும்கூட’ எவ்வளவாய் சந்தோஷத்தைத் தருகிறது! (நீதிமொழிகள் 2:1-5) கடவுள்மீதும் இயேசுவின் பலியின் மீதுமுள்ள விசுவாசத்தின் அடிப்படையிலும், திருத்தமான அறிவின் அடிப்படையிலுமே கடவுளோடு இனிய பந்தத்தை வைத்திருக்கிறோம். (1 யோவான் 2:1, 2) ஒரே உண்மையான சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாய் இருப்பது மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகும். (செப்பனியா 3:9; ஆகாய் 2:7) ராஜ்ய நம்பிக்கையும் நற்செய்தியை அறிவிக்கும் மகத்தான வாய்ப்பும் நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குகின்றன. (மத்தேயு 6:9, 10; 24:14) நித்திய வாழ்க்கை என்ற எதிர்பார்ப்பும்கூட நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குகிறது. (யோவான் 17:3) நமக்கு இத்தகைய அருமையான நம்பிக்கை இருப்பதால், நாம் ‘சந்தோஷமாய்’ இருக்க வேண்டும்.—உபாகமம் 16:15.
சமாதானமாயும் நீடிய பொறுமையாயும் இருங்கள்
11, 12. (அ) சமாதானம் என்ற வார்த்தையை எப்படி விளக்குவீர்கள்? (ஆ) தேவசமாதானம் நமக்கு எப்படிப் பயனளிக்கிறது?
11 ஆவியின் கனியில் அடங்கியுள்ள மற்றொரு பண்பு சமாதானம். இது, பதட்டம் இல்லாத சாந்தமான நிலை ஆகும். நம் பரம பிதா சமாதானத்தின் தேவனாக இருக்கிறார்; அவர் நமக்கு இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 29:11; 1 கொரிந்தியர் 14:33) இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவான் 14:27) அது அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு எப்படி உதவும்?
12 இயேசு தம் சீஷர்களுக்கு அருளிய சமாதானம், அவர்களுடைய இருதயத்தையும் மனதையும் அமைதிப்படுத்தியது, அவர்களுடைய கவலையைக் குறைத்தது. முக்கியமாக, அவர் வாக்குக்கொடுத்த பரிசுத்த ஆவியைப் பெற்றபோது அவர்கள் சமாதானத்தை அனுபவித்தார்கள். (யோவான் 14:26) இன்று, கடவுளுடைய ஆவியின் உதவியினாலும் நம் ஜெபங்களுக்குக் கிடைக்கிற பதில்களினாலும், ஒப்பற்ற ‘தேவசமாதானத்தை’ நாம் அனுபவிக்கிறோம்; இது நம் இருதயத்தையும் மனதையும் அமைதிப்படுத்துகிறது. (பிலிப்பியர் 4:6, 7) அதுமட்டுமல்ல, சக விசுவாசிகளிடமும் பிறரிடமும் சாந்தமாயும், சமாதானமாயும் இருக்க யெகோவாவின் ஆவி நமக்கு உதவி செய்கிறது.—ரோமர் 12:18; 1 தெசலோனிக்கேயர் 5:13.
13, 14. நீடிய பொறுமை என்றால் என்ன, நாம் ஏன் அதைக் காட்ட வேண்டும்?
13 நீடிய பொறுமை என்பது சமாதானமாய் இருப்பதோடு சம்பந்தப்பட்ட ஒரு பண்பு; ஒருவர் நமக்குத் தீங்கு செய்தாலோ நம்மைக் கோபமூட்டினாலோ, எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நாம் பொறுமையோடு சகித்திருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. கடவுள் நீடிய பொறுமையுள்ளவர். (ரோமர் 9:22-24) இயேசுவும்கூட இப்பண்பை வெளிக்காட்டுகிறார். அதன்மூலம் நாமும் நன்மையடையலாம்; பவுல் இவ்வாறு எழுதியதிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம்: “நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.”—1 தீமோத்தேயு 1:16.
14 மற்றவர்கள் நம்மிடம் அன்பற்ற விதத்தில் முன்யோசனையின்றி பேசும்போதோ நடந்துகொள்ளும்போதோ, நீடிய பொறுமை என்ற இப்பண்பு சகித்திருக்க நமக்கு உதவுகிறது. “எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” என சக கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுறுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:14) நாம் எல்லாருமே அபூரணராயும் தவறு செய்கிறவர்களாயும் இருக்கிறோம்; எனவே, மற்றவர்களை சங்கடப்படுத்துகிற விதத்தில் நாம் நடந்துகொள்ளும்போது அவர்கள் நம்மைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், நம்மிடம் நீடிய பொறுமையைக் காட்ட வேண்டும் என நாம் நினைக்கிறோம். ஆகவே, நாமும் ‘சந்தோஷத்தோடே கூடிய நீடிய சாந்தத்தை’ காட்ட முயலுவோமாக.—கொலோசெயர் 1:9-12.
தயவையும் நற்குணத்தையும் வெளிக்காட்டுங்கள்
15. தயவு என்றால் என்ன? உதாரணங்கள் தந்து விளக்குங்கள்.
15 தயவு என்ற பண்பு, அன்பாகப் பேசுவதன் மூலமும் உதவி செய்வதன் மூலமும் மற்றவர்களுடைய நலனில் நாம் காட்டும் அக்கறையில் வெளிப்படுகிறது. யெகோவா தயவுள்ளவர், அவரது குமாரனும் தயவுள்ளவர். (ரோமர் 2:4; 2 கொரிந்தியர் 10:1) கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற ஊழியர்கள் தயவு என்ற பண்பை வெளிக்காட்டுவது அவசியம். (மீகா 6:8; கொலோசெயர் 3:12) யெகோவாவோடு எவ்வித பந்தமும் இல்லாத சிலரும்கூட “அசாதாரண தயவைக்” காட்டியிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 27:3; 28:2, NW) அப்படியானால், நாமும் ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளும்போது’ தயவு எனும் பண்பை வெளிக்காட்ட முடியும்.
16. தயவு காட்டுவதற்கான சில சூழ்நிலைகள் யாவை?
16 ஒருவர் புண்படுத்தும் விதத்தில் பேசியதாலோ முன்யோசனையின்றி நடந்துகொண்டதாலோ நாம் கோபப்படுவதற்கு நியாயமான காரணம் இருந்தாலும்கூட தயவை வெளிக்காட்டலாம். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (எபேசியர் 4:26, 27, 32) முக்கியமாக, துன்பத்தில் தவிப்போருக்கு தயவு காட்டுவது பொருத்தமானது. ஆனால், ‘நற்குணமும் நீதியும் உண்மையுமாய் இருக்கிற’ வழியைவிட்டு ஒருவர் விலகிச் செல்கிறார் என்பது தெளிவாகத் தெரியும்போது, அவருடைய மனம் புண்பட்டு விடுமோ என நினைத்து ஒரு கிறிஸ்தவ மூப்பர் பைபிள் ஆலோசனையைக் கொடுக்காமல் விட்டுவிடுவது தயவு காட்டுவதாக இருக்காது.—எபேசியர் 5:9.
17, 18. நற்குணம் எவ்வாறு விளக்கப்படுகிறது, இப்பண்பு நம் வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்கிறது?
17 நற்குணம் என்பது சீரிய பண்பை, உயர்ந்த ஒழுக்கநெறியை, நன்மை செய்யும் இயல்பை அல்லது நிலையைக் குறிக்கிறது. கடவுள் நற்குணத்தில் பூரணராய்த் திகழ்கிறார். (சங்கீதம் 25:8) இயேசு சீரிய பண்புடையவர், நெறிபிறழாதவர். ஆனாலும், “நல்ல போதகரே” என அவரை ஒருவர் அழைத்தபோது “நல்லவன்” என்ற பட்டப்பெயரை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (மாற்கு 10:17, 18) அதற்குக் காரணம், கடவுள்தாமே நற்குணத்தின் சிகரமாய்த் திகழ்கிறார் என்பதை இயேசு அறிந்திருந்தார்.
18 நாம் பரம்பரையாய்ப் பெற்றிருக்கிற பாவத்தின் காரணமாக, நல்லதைச் செய்வது நமக்குக் கடினமாகிறது. (ரோமர் 5:12) இருந்தாலும், நற்குணத்தைப் போதித்தருளும்படி கடவுளிடம் வேண்டினால், இந்தப் பண்பை நாம் வெளிக்காட்ட முடியும். ரோமிலிருந்த சக விசுவாசிகளிடம் பவுல் இவ்வாறு கூறினார்: ‘என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களாய் இருக்கிறீர்களென்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்.’ (ரோமர் 15:14) ஒரு கிறிஸ்தவக் கண்காணி ‘நன்மையில் நாட்டமுள்ளவராய்’ இருப்பது அவசியம். (தீத்து 1:7, 8, பொ.மொ.) கடவுளுடைய ஆவியால் நாம் வழிநடத்தப்படுவோமானால், நற்குணத்தைக் காட்டுவதில் பெயர்பெற்றவர்களாக ஆவோம்; அதோடு, யெகோவா ‘நாம் செய்கிற நன்மைகளுக்காக நம்மை நினைவுகூருவார்.’—நெகேமியா 5:19; 13:31.
‘மாயமற்ற விசுவாசம்’
19. எபிரெயர் 11:1-ன் அடிப்படையில் விசுவாசத்தை விளக்குங்கள்.
19 விசுவாசமும்கூட ஆவியின் கனியின் ஒரு பாகமாகும். இதை, “நம்பப்படும் விஷயங்களைப் பற்றிய உறுதியான எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய தெளிவான வெளிக்காட்டு” என பைபிள் விளக்குகிறது. (எபிரெயர் 11:1, NW) நமக்கு விசுவாசம் இருந்தால், யெகோவா வாக்குறுதி அளிக்கிற எல்லாமே நிச்சயம் நிறைவேறும் என உறுதியாய் இருப்போம். காணமுடியாத உண்மைகள் மீதுள்ள விசுவாசம் அந்தளவு உறுதியாய் இருப்பதால் அதுவே அந்த உண்மைகளுக்குரிய நம்பகமான அத்தாட்சி என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, படைப்புகள்தாமே படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்று நம்மை நம்பச் செய்கிறது. நாம் ஆவிக்கேற்றபடி நடப்போமானால் இத்தகைய விசுவாசத்தையே வெளிக்காட்டுவோம்.
20. ‘நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்’ என்ன, அதையும் மாம்சத்தின் கிரியைகளையும் நாம் எப்படித் தவிர்க்கலாம்?
20 விசுவாசக் குறைவோ, ‘நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவமாய்’ இருக்கிறது. (எபிரெயர் 12:1) நம் விசுவாசத்தைக் குலைத்துப்போடுகிற பொய்ப் போதனைகளையும் மாம்சத்தின் கிரியைகளையும் பொருளாசையையும் தவிர்க்க கடவுளுடைய ஆவியை நாம் சார்ந்திருப்பது அவசியம். (கொலோசெயர் 2:8; 1 தீமோத்தேயு 6:9, 10; 2 தீமோத்தேயு 4:3-5) கிறிஸ்துவுக்கு முன்னரும் பின்னரும் வாழ்ந்த சாட்சிகளிடத்தில் இருந்தது போலவே யெகோவாவுடைய இன்றைய ஊழியர்களிடத்திலும் கடவுளுடைய ஆவி விசுவாசத்தைப் பிறப்பிக்கிறது. (எபிரெயர் 11:2-40) நம்முடைய ‘மாயமற்ற விசுவாசம்’ மற்றவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த உதவலாம்.—1 தீமோத்தேயு 1:5; எபிரெயர் 13:7.
சாந்தத்தையும் இச்சையடக்கத்தையும் காட்டுங்கள்
21, 22. சாந்தகுணம் எப்படி விளக்கப்படுகிறது, அதை நாம் ஏன் காட்ட வேண்டும்?
21 சாந்தமானது, நம்முடைய மனப்பான்மையிலும் நடத்தையிலும் காட்டப்படும் மென்மையான குணமாகும். சாந்தம், கடவுளுடைய குணங்களில் ஒன்றாகும். இது நமக்கு எப்படித் தெரியுமென்றால், யெகோவாவின் சுபாவத்தை அச்சுப்பிசகாமல் பிரதிபலித்த இயேசு சாந்தமுள்ளவராய் இருந்தார். (மத்தேயு 11:28-30; யோவான் 1:18; 5:19) அப்படியானால், கடவுளுடைய ஊழியர்களான நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
22 ‘எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கும்படி’ கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. (தீத்து 3:2) ஊழியத்தில் நாம் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டியுள்ளது. தவறுசெய்த ஒரு கிறிஸ்தவரை “சாந்தமுள்ள ஆவியோடே” சீர்பொருந்தப் பண்ணும்படி ஆன்மீகத் தகுதிகளைப் பெற்றிருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. (கலாத்தியர் 6:1) நாம் எல்லாருமே ‘மனத்தாழ்மையையும் சாந்தத்தையும்’ காட்டினால், நம் மத்தியில் ஒற்றுமையும் சமாதானமும் செழித்தோங்கும். (எபேசியர் 4:1-3) நாம் தொடர்ந்து ஆவிக்கேற்றபடி நடந்து, தன்னடக்கத்தோடு இருந்தால் சாந்தகுணத்தைக் காட்ட முடியும்.
23, 24. தன்னடக்கம் என்றால் என்ன, அது நமக்கு எப்படி உதவுகிறது?
23 நம் சிந்தனையையும் சொல்லையும் செயலையும் கட்டுப்படுத்த தன்னடக்கம் நமக்கு உதவுகிறது. எருசலேமைப் பாழாக்கிய பாபிலோனியர்களின் விவகாரத்தில் யெகோவா தம்மையே ‘அடக்கிக்கொண்டிருந்தார்.’ (ஏசாயா 42:14) அவருடைய குமாரனும், துன்பப்படுகையில் தன்னடக்கத்தைக் காட்டி, ‘நமக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.’ ‘ஞானத்தோடே இச்சையடக்கத்தையும் [அதாவது, தன்னடக்கத்தையும்] கூட்டி வழங்கும்படி’ சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு ஆலோசனை வழங்கினார்.—1 பேதுரு 2:21-23; 2 பேதுரு 1:5-8.
24 கிறிஸ்தவ மூப்பர்கள் தன்னடக்கம் உள்ளவர்களாய் இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். (தீத்து 1:7, 8) உண்மையில், பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிற எல்லாருமே தன்னடக்கத்தைக் காட்டலாம். அதன்மூலம், இழிவான பேச்சையோ ஒழுக்கக்கேடான நடத்தையையோ நாம் தவிர்க்கலாம்; யெகோவாவின் வெறுப்பைச் சம்பாதிக்கிற எந்தவொரு காரியத்தையும் தவிர்க்கலாம். கடவுளுடைய ஆவி நம்மில் தன்னடக்கத்தைப் பிறப்பிப்பதற்கு நாம் அனுமதிப்போமானால், அது மற்றவர்களுக்குப் பளிச்சென தெரியும்; ஏனெனில், நம் பேச்சிலும் நடத்தையிலும் அது வெளிப்படும்.
ஆவிக்கேற்றபடி நடவுங்கள்
25, 26. ஆவிக்கேற்றபடி நடப்பதால் இன்றும் என்றும் என்ன நன்மையைப் பெறுவோம்?
25 நாம் ஆவிக்கேற்றபடி நடந்தால், பக்திவைராக்கியத்துடன் ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பவர்களாய் இருப்போம். (அப்போஸ்தலர் 18:24-26) மற்றவர்களுக்கு நாம் இனிய நண்பர்களாக இருப்போம்; முக்கியமாக தேவபக்தியுள்ள ஆட்கள் நம்முடன் தோழமைகொள்ள விரும்புவார்கள். பரிசுத்த ஆவிக்கேற்றபடி வழிநடத்தப்படுபவர்களைப் போலவே, நாமும்கூட யெகோவாவை வணங்குகிற சக ஊழியர்களுக்கு ஆன்மீக உற்சாகத்தின் ஊற்றாகத் திகழ்வோம். (பிலிப்பியர் 2:1-4) கிறிஸ்தவர்கள் எல்லாருமே அப்படியிருக்கத்தானே விரும்புவார்கள்?
26 சாத்தானின் ஆதிக்கத்திலுள்ள இந்த உலகில் ஆவிக்கேற்றபடி நடப்பது எளிதல்ல. (1 யோவான் 5:19) என்றாலும், லட்சோப லட்சம் பேர் இன்று அப்படி நடக்கிறார்கள். நாம் முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கை வைத்தால், நம் வாழ்க்கையை இன்று அனுபவித்து மகிழ்வதோடு, பரிசுத்த ஆவியை அருளுகிறவர் காட்டுகிற நீதியான வழிகளில் என்றென்றும் நடப்போம்.—சங்கீதம் 128:1; நீதிமொழிகள் 3:5, 6.
உங்கள் பதில்?
• ‘ஆவிக்கேற்றபடி நடப்பது’ கடவுளோடும் அவரது குமாரனோடும் உள்ள நம் பந்தத்தை எப்படிப் பாதிக்கிறது?
• பரிசுத்த ஆவியின் கனியில் உட்பட்டுள்ள பண்புகள் யாவை?
• கடவுளுடைய ஆவியின் கனியை வெளிக்காட்டுவதற்கான சில வழிகள் யாவை?
• ஆவிக்கேற்றபடி நடந்தால் இன்றும் என்றும் என்ன நன்மையைப் பெறுவோம்?
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் பரிசுத்த ஆவி, சக விசுவாசிகளுக்கிடையே அன்பை வளர்க்கிறது
[பக்கம் 24-ன் படம்]
அன்பாகப் பேசுவதன் மூலமும் உதவி செய்வதன் மூலமும் தயவு காட்டுங்கள்