சகிப்புத்தன்மையோடு யெகோவாவின் நாளுக்காகக் காத்திருங்கள்
‘விசுவாசத்தோடு சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.’—2 பேதுரு 1:5, 6, NW.
1, 2. சகிப்புத்தன்மை என்றால் என்ன, கிறிஸ்தவர்களுக்கு அது ஏன் தேவை?
யெகோவாவின் பெரிய நாள் மிகவும் சமீபித்திருக்கிறது. (யோவேல் 1:15; செப்பனியா 1:14) கடவுளுக்கு உத்தமமாயிருக்க உறுதிபூண்டுள்ள நாம், யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானதென நிரூபிக்கப்படும் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். அதுவரையில், விசுவாசத்தின் நிமித்தம் பகை, நிந்தை, துன்புறுத்தல், மரணம் ஆகியவற்றை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. (மத்தேயு 5:10-12; 10:22; வெளிப்படுத்துதல் 2:10) இவற்றைச் சந்திப்பதற்கு சகிப்புத்தன்மை தேவை, அதாவது கஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி தேவை. ‘உங்கள் விசுவாசத்தோடு சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்’ என்று அப்போஸ்தலன் பேதுரு நம்மை அறிவுறுத்துகிறார். (2 பேதுரு 1:5, 6, NW) ஆம், நமக்கு சகிப்புத்தன்மை தேவை; ஏனெனில் இயேசு இவ்வாறு சொன்னார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே [அதாவது, சகித்திருப்பவனே] இரட்சிக்கப்படுவான்.”—மத்தேயு 24:13.
2 சுகவீனமும், மீளாத் துயரமும், பிற சோதனைகளும் நமக்கு வருகின்றன. நாம் விசுவாசத்தைக் கைவிட்டால் சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாயிருக்கும்! (லூக்கா 22:31, 32) ஆனால், எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் யெகோவாவின் உதவியோடு நம்மால் சகிக்க முடியும். (1 பேதுரு 5:6-11) நாம் சகிப்புத்தன்மையோடும் குறையாத விசுவாசத்தோடும் யெகோவாவின் நாளுக்காகக் காத்திருக்க முடியும் என்பதைத் தெளிவுபடுத்த சில உண்மைச் சம்பவங்களைச் சிந்திக்கலாம்.
சுகவீனம் அவர்களை முடக்கவில்லை
3, 4. சுகவீனத்தின் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்ய முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
3 இன்று கடவுள் நம்மை அற்புதமாய்ச் சுகப்படுத்துவதில்லை; ஆனால் சுகவீனத்தைச் சகிப்பதற்கான பலத்தை அவர் தருகிறார். (சங்கீதம் 41:1-3) ஷாரன் என்பவர் சொல்வதைக் கவனியுங்கள்: “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வீல்சேர்தான் என் உடன்பிறப்பு. பிறவியிலேயே மூளைவாதம் (cerebral palsy) பாதித்திருந்ததால் அது என் குழந்தைப்பருவத்தின் சந்தோஷத்தையே பறித்துவிட்டது.” யெகோவாவைப் பற்றியும் பூரண ஆரோக்கியத்தைத் தரப்போவதாக அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றியும் தெரிந்துகொண்டபோது ஷாரனுக்கு நம்பிக்கை பிறந்தது. பேசுவதற்கும் நடப்பதற்கும் அவர் கஷ்டப்பட்டாலும், ஊழியத்தில் ஈடுபடுவது அவருக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. சுமார் 15 வருடங்களுக்கு முன் அவர் இவ்வாறு சொன்னார்: “என்னுடைய உடல்நிலை இன்னும் மோசமடையலாம், ஆனால் கடவுள்மீது நான் வைத்திருக்கிற நம்பிக்கையும் அவரோடு வைத்திருக்கிற பந்தமுமே என் உயிர்நாடியாக இருக்கின்றன. யெகோவாவின் மக்களில் ஒருத்தியாய் இருப்பதும் அவர் என்னைத் தொடர்ந்து ஆதரித்து வருவதும் எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது!”
4 “மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்” என்று தெசலோனிக்கே சபையின் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு) நம்பிக்கையிழந்து தவிக்கும் ஒருவர் மனத்தளர்ச்சியுறலாம், அதாவது மனச்சோர்வடையலாம். 1993-ல் ஷாரன் இவ்வாறு எழுதினார்: “என் கதி அவ்வளவுதான் என நினைத்து நொந்து நூலாகிப்போனதால், . . . மூன்று வருஷம் மனச்சோர்வில் தவித்தேன். . . . மூப்பர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள், ஆலோசனையும் தந்தார்கள். . . . மனச்சோர்வு சம்பந்தமாக காவற்கோபுர பத்திரிகைமூலம் யெகோவா நமக்கு கனிவோடு கற்றுத் தந்திருக்கிறார். ஆம், அவர் தம்முடைய மக்கள்மேல் அக்கறை காட்டுகிறார், நம்முடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்.” (1 பேதுரு 5:6, 7) ஷாரன், யெகோவாவின் பெரிய நாளுக்காகக் காத்திருப்பதோடு, கடவுளுக்கு உண்மையுடன் சேவையும் செய்துவருகிறார்.
5. தாங்கமுடியாத மன உளைச்சலை கிறிஸ்தவர்கள் சகிக்க முடியும் என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.
5 கடந்த கால வாழ்க்கையில் எதிர்ப்பட்ட அனுபவங்களின் காரணமாக, கிறிஸ்தவர்கள் சிலர் தாங்கமுடியாத மன உளைச்சலால் அவதிப்படுகிறார்கள். ஹார்லி என்பவர் இரண்டாம் உலகப் போரின்போது நடந்த கொடுமைகளைக் கண்ணாரக் கண்டவர், அவற்றைப்பற்றி இரவில் கொடுங்கனவுகளைக் கண்டவர். தூக்கத்தில், “எச்சரிக்கை! கவனம்!” என்றெல்லாம் அவர் கத்துவார். கண்விழித்துப் பார்த்தால், வியர்வையில் குளித்ததுபோல் இருப்பார். பிற்பாடு, கடவுளுடைய வழிகளுக்கு இசைவாக வாழ ஆரம்பித்தார்; அதனால் இப்போதெல்லாம் அந்தளவுக்கு பயங்கரமான கனவுகள் அவருக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் எப்போதாவதுதான் வருகிறது.
6. மனநலக் கோளாறை ஒரு கிறிஸ்தவர் எப்படிச் சமாளித்தார்?
6 ஒரு கிறிஸ்தவர், பைபோலார் டிஸார்டர் என்று அழைக்கப்படும் ஒருவித மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டார். அதனால், வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பது அவருக்குச் சிரமமாக இருந்தது. என்றாலும், அந்த வேலையை அவர் விடாமல் செய்தார்; ஏனென்றால், அந்த வேலையின் மூலமே தனக்கும் தான் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்பவர்களுக்கும் இரட்சிப்பு கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். (1 தீமோத்தேயு 4:16) சில சமயங்களில், கதவருகே சென்ற பிறகுகூட ‘பெல்’ அடிக்க அவருக்குத் தைரியம் வரவில்லை. ஆனால் அவர் இவ்வாறு சொல்கிறார்: “நாள் ஆக ஆக, ஊழியம் செய்கையில், ஒரு வீட்டில் பேசி முடித்துவிட்டு என்னை நானே சற்று நிதானப்படுத்திக்கொண்ட பிறகு அடுத்த வீட்டிற்குச் சென்றேன்; அதன்பின் இன்னொரு வீட்டிற்குச் சென்று திரும்பவும் பேசினேன். இப்படித் தொடர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டு, என்னுடைய ஆன்மீக ஆரோக்கியத்தைக் காத்துக்கொண்டேன்.” கூட்டங்களில் கலந்துகொள்வதும்கூட அந்தச் சகோதரருக்குக் கடினமாக இருந்தது; என்றாலும், சக விசுவாசிகளுடைய தோழமையின் மதிப்பை உணர்ந்ததால், அவர் பெருமுயற்சி எடுத்து கூட்டங்களில் கலந்துகொண்டார்.—எபிரெயர் 10:24, 25.
7. மற்றவர்கள் முன்பாகப் பேசுவதோ கூட்டத்தில் கலந்துகொள்வதோ சிலருக்குப் பயமாக இருந்தாலும் அவர்கள் அதை எப்படிச் சகித்திருக்கிறார்கள்?
7 கிறிஸ்தவர்கள் சிலரை ஃபோபியா எனப்படும் அளவுகடந்த பயம் ஆட்டிப்படைக்கிறது. அவர்கள், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளை அல்லது பொருட்களைக் கண்டு பயப்படலாம். உதாரணமாக, மற்றவர்களுக்கு முன்பாகப் பேசுவதற்கோ கூட்டத்தில் கலந்துகொள்வதற்கோகூட பயப்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவ கூட்டங்களில் பதில் சொல்வதும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுப்பதும் எவ்வளவு கடினமாயிருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! இருந்தாலும், அவர்கள் அதைச் சகிக்கிறார்கள்; அவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டு பதில்சொல்வது நமக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.
8. உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு எது அருமருந்தாய் இருக்கும்?
8 உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சகிப்பதற்கு அதிகப்படியான ஓய்வும் உறக்கமும் உதவலாம். மருத்துவரின் உதவியை நாடுவதும் நல்லது. இருந்தாலும், எல்லாவற்றையும்விட ஜெபத்தோடு கடவுளைச் சார்ந்திருப்பதே அருமருந்தாய் இருக்கும். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என சங்கீதம் 55:22 சொல்கிறது. அப்படியானால், ‘உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாய் இருங்கள்.’—நீதிமொழிகள் 3:5, 6.
மீளாத் துயரத்தைச் சகித்தல்
9-11. (அ) பாசத்துக்குரிய ஒருவர் மரிக்கையில் துயரத்தைச் சகிக்க எது நமக்கு உதவலாம்? (ஆ) மீளாத் துயரத்தைச் சமாளிக்க அன்னாளின் உதாரணம் நமக்கு எப்படி உதவலாம்?
9 குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அந்தப் பேரிழப்பு குடும்ப அங்கத்தினரைக் கடுந்துயரத்தில் ஆழ்த்திவிடலாம். தன் அருமை மனைவி சாராள் மரித்தபோது ஆபிரகாம் மனங்கசந்து அழுதார். (ஆதியாகமம் 23:2) பரிபூரண மனிதரான இயேசுவும்கூட தம்முடைய நண்பர் லாசரு மரித்தபோது “கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:35) பாசத்துக்குரிய ஒருவரைப் பறிகொடுக்கும்போது துக்கத்தில் துவண்டுபோவது இயல்பே. என்றாலும், மரித்தோர் உயிர்த்தெழுவார்கள் என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 24:15) ஆகவே, அவர்கள் ‘நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்திருப்பதில்லை.’—1 தெசலோனிக்கேயர் 4:13.
10 மீளாத் துயரத்தை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? பின்வரும் உதாரணத்தைச் சிந்திப்பது இதற்கு உதவலாம். நம்முடைய நண்பர் ஒருவர் தொலைதூர தேசத்திற்குச் செல்வதை நினைத்து நாம் காலங்காலமாய்க் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதில்லை; அவர் திரும்பி வரும்போது மீண்டும் அவரைப் பார்க்கலாம் என எதிர்பார்ப்போம். கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருந்த ஒரு கிறிஸ்தவர் மரிக்கையிலும்கூட இதே விதமாகக் கருதுவது நம்முடைய துக்கத்தைத் தணிக்கலாம்; ஏனென்றால், அவர் உயிர்த்தெழுந்து வருவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.—பிரசங்கி 7:1.
11 ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாய்’ இருக்கிறவரை முழுமையாய்ச் சார்ந்திருப்பது, மீளாத் துயரத்தைச் சகிக்க நமக்கு உதவும். (2 கொரிந்தியர் 1:3, 4) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அன்னாள் செய்ததைச் சிந்தித்துப்பார்ப்பதும்கூட நமக்கு உதவும். திருமணமாகி ஏழு வருடத்திலேயே அவர் விதவையாகிவிட்டார். ஆனால், தனது 84-ஆம் வயதிலும்கூட ஆலயத்தில் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்துவந்தார். (லூக்கா 2:36-38) தன் வாழ்க்கையையே அவ்வாறு அர்ப்பணித்தது, துயரத்தையும் தனிமையையும் சமாளிக்க அவருக்கு நிச்சயம் கைகொடுத்திருக்கும். அவ்வாறே, ராஜ்ய பிரசங்க வேலையில் ஈடுபடுவது உட்பட, கிறிஸ்தவ நடவடிக்கைகளில் தவறாமல் பங்குகொள்வது மீளாத் துயரத்தின் பாதிப்புகளைச் சகிக்க நமக்கு உதவும்.
பலதரப்பட்ட சோதனைகளைச் சமாளித்தல்
12. மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட என்ன சோதனைகளை கிறிஸ்தவர்கள் சிலர் சகித்திருக்கிறார்கள்?
12 கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட சோதனைகளைச் சகிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, கணவனோ மனைவியோ விபச்சாரத்தில் ஈடுபட்டால் குடும்பத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதிப்புகளை அது ஏற்படுத்தும்! அதிர்ச்சியும் துக்கமும் வாட்டியெடுக்க, துரோகம் இழைக்கப்பட்ட அந்த மணத்துணை தூக்கமின்றி தவிக்கலாம், கதறிக் கதறி அழலாம். சின்னச் சின்ன வேலைகள்கூட அவருக்குப் பாரமாகத் தெரியலாம்; அவற்றைத் தப்பும் தவறுமாகச் செய்யலாம். அவரால் சரிவரச் சாப்பிட முடியாமல் போகலாம், அவருடைய எடை குறைந்துவிடலாம், அவர் மனக் கலக்கமுறலாம். கிறிஸ்தவ நடவடிக்கைகளில் பங்குகொள்வது அவருக்குச் சிரமமாக இருக்கலாம். பிள்ளைகளுக்கும்கூட அது எப்பேர்ப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்!
13, 14. (அ) ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன் செய்த ஜெபத்திலிருந்து என்ன ஊக்கத்தை நீங்கள் பெறுகிறீர்கள்? (ஆ) பரிசுத்த ஆவிக்காக நாம் ஏன் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்?
13 அத்தகைய சோதனைகளை எதிர்ப்படுகையில், நமக்குத் தேவையான உதவியை யெகோவா அளிக்கிறார். (சங்கீதம் 94:19) தம் மக்களின் ஜெபங்களை யெகோவா கேட்கிறார் என்பதை ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன் ராஜா செய்த ஜெபம் காட்டுகிறது. கடவுளிடம் அவர் இவ்வாறு ஜெபித்தார்: “உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.”—1 இராஜாக்கள் 8:38-40.
14 பரிசுத்த ஆவிக்காகத் தொடர்ந்து ஜெபிப்பது மிகவும் உதவியாக இருக்கும். (மத்தேயு 7:7-11) ஏனெனில் ஆவியின் கனியில், சந்தோஷம், சமாதானம் போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. (கலாத்தியர் 5:22, 23) பரலோகத் தகப்பன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கையில் நமக்கு எப்பேர்ப்பட்ட ஆசுவாசத்தை அது அளிக்கிறது! துக்கம் நீங்கி சந்தோஷமும், துயரம் நீங்கி சமாதானமும் கிடைக்கிறது!
15. நம் கவலை குறைவதற்கு எந்த பைபிள் வசனங்கள் உதவலாம்?
15 பிரச்சினைகள் நம்மை அழுத்துகையில் கவலை மனதில் குடிகொள்ளத்தான் செய்யும். ஆனால், இயேசுவின் பின்வரும் வார்த்தைகளை மனதில் வைக்கும்போது இந்தக் கவலை ஓரளவுக்காவது குறையலாம்: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் . . . முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:25, 33, 34) ‘கடவுள் நம்மேல் அக்கறையாய் இருக்கிறபடியால் நம் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடும்படி’ அப்போஸ்தலன் பேதுரு நம்மை அறிவுறுத்துகிறார். (1 பேதுரு 5:6, 7, NW) பிரச்சினை ஏதாவது இருந்தால், அதைத் தீர்ப்பதற்காக முயற்சியெடுப்பது சரியே. என்றாலும், நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்தபிறகு, அந்தப் பிரச்சினையை நினைத்து சதா கவலைப்படுவதைவிட அதைக் குறித்து ஜெபிப்பதே நல்லது. “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” என சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 37:5.
16, 17. (அ) நாம் ஏன் கவலையிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக இல்லை? (ஆ) பிலிப்பியர் 4:6, 7-லுள்ள அறிவுரையைப் பின்பற்றினால் நாம் எதை அனுபவிப்போம்?
16 பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) ஆதாமின் அபூரண சந்ததியராய் இருக்கிற நம்மால் கவலையிலிருந்து முற்றிலும் விடுபட முடியாதுதான். (ரோமர் 5:12) ஏசா மணமுடித்த ஏத்தியப் பெண்கள், அவருடைய தேவபயமுள்ள பெற்றோரான ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் “மனநோவாயிருந்தார்கள்.” (ஆதியாகமம் 26:34, 35) தீமோத்தேயு, துரோப்பீமு போன்ற கிறிஸ்தவர்களுக்கு வியாதியின் காரணமாக கவலை ஏற்பட்டிருக்கலாம். (1 தீமோத்தேயு 5:23; 2 தீமோத்தேயு 4:20) பவுலுக்கு சக விசுவாசிகளைக் குறித்த கவலை இருந்தது. (2 கொரிந்தியர் 11:28) எதுவானாலும்சரி, ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ கடவுள் தம்மை நேசிப்போருக்கு எப்போதும் உதவத் தயாராய் இருக்கிறார்.—சங்கீதம் 65:2.
17 யெகோவாவின் நாளுக்காக நாம் காத்திருக்கையில், ‘சமாதானத்தின் தேவன்’ நமக்குப் பக்கபலமாய் இருந்து ஆறுதல் அளிப்பார். (பிலிப்பியர் 4:9) அவர், “இரக்கமும், கிருபையும்” உள்ளவர்; அவர் ‘நல்லவரும், மன்னிக்கிறவருமாய்’ இருக்கிறார்; “நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (யாத்திராகமம் 34:6; சங்கீதம் 86:5; 103:13, 14) ஆகவே, ‘நம் விண்ணப்பங்களை அவருக்குத் தெரியப்படுத்துவோமாக’; அப்போது ‘தேவ சமாதானத்தையும்’ அறிவுக்கெட்டாத மன அமைதியையும் நாம் பெறுவோம்.
18. யோபு 42:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடவுளை நாம் எவ்வாறு ‘காண’ முடியும்?
18 நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கையில் கடவுள் நம்மோடிருப்பதை அறிந்துகொள்கிறோம். சோதனைகளைச் சகித்த பிறகு யோபு இவ்வாறு சொன்னார்: ‘என் காதினால் உம்மைக் [யெகோவாவை] குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.’ (யோபு 42:5) கடவுள் நமக்குச் செய்பவற்றை மனக்கண்களாலும் விசுவாசத்தாலும் நன்றியுணர்வாலும் நாம் சிந்தித்துப் பார்த்து, ஒருபோதும் கண்டிராத அளவுக்கு அவரை நாம் ‘காண’ முடியும். இத்தகைய அன்யோன்யத்தால் நம் இருதயத்துக்கும் மனதுக்கும் கிடைக்கிற சமாதானத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
19. ‘நம் கவலைகளையெல்லாம் யெகோவாமீது போட்டுவிட்டால்’ நாம் எதை அனுபவிப்போம்?
19 ‘நம் கவலைகளையெல்லாம் யெகோவாமீது போட்டுவிட்டால்’ மன அமைதியோடு சோதனைகளைச் சகிக்க முடியும்; இந்த மன அமைதி, நம் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளும். இதனால், தவிப்பிலிருந்தும் பயத்திலிருந்தும் கலக்கத்திலிருந்தும் விடுபட்ட உணர்வை நம் இருதயத்தின் ஆழத்தில் அனுபவிப்போம். கலக்கமோ கவலையோ நம் மனதை அலைக்கழிக்காது.
20, 21. (அ) துன்புறுத்தலைச் சந்திக்கும்போது மன அமைதியுடன் இருக்க முடியும் என்பதை ஸ்தேவானின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது? (ஆ) சோதனைகளைச் சகிக்கையில் மன அமைதியை அனுபவித்ததைப் பற்றிய நவீனகால உதாரணத்தைக் குறிப்பிடுங்கள்.
20 சீஷனாகிய ஸ்தேவான் தனக்கு வந்த விசுவாசப் பரீட்சையைச் சகிக்கையில் கலவரமின்றி அமைதியாக இருந்தார். அவர் கடைசியாகச் சாட்சிகொடுப்பதற்கு முன்பு, ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் ‘அவருடைய முகம் தேவதூதன் முகம் போலிருக்கக் கண்டார்கள்.’ (அப்போஸ்தலர் 6:15) ஆம், ஒரு தேவதூதனுடைய முகத்தைப்போல் அவருடைய முகத்தில் அமைதி படர்ந்திருந்தது. இயேசுவின் இறப்புக்கு அவர்களே குற்றவாளிகள் என்பதை ஸ்தேவான் வெட்டவெளிச்சமாக்கியபோது, அந்த நியாயாதிபதிகள் ‘மூர்க்கமடைந்து, அவரைப்பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.’ அவர் ‘பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் வானத்தை அண்ணாந்து பார்த்து தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டார்.’ அந்தத் தரிசனத்தால் பலமடைந்த ஸ்தேவான், உயிர்விடும்வரை உண்மையோடு நிலைத்திருந்தார். (அப்போஸ்தலர் 7:52-60) நமக்கு இதுபோன்ற தரிசனங்கள் கிடைப்பதில்லை; என்றாலும் துன்புறுத்தப்படுகையில் கடவுள் தரும் மன அமைதியை நாம் அனுபவிக்க முடியும்.
21 இரண்டாம் உலகப் போரின்போது நாசி ஆட்சியில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலர் சொன்னதைக் கவனியுங்கள். நீதிமன்றத்தில் நடந்ததை ஒருவர் இவ்வாறு சொன்னார்: “எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது; அது என் காதில் விழுந்தவுடனே, ‘மரணபரியந்தம் உண்மையாயிரு’ என்ற வார்த்தைகளையும் கர்த்தர் சொன்ன வேறுசில வார்த்தைகளையும் நான் சொன்னேன், அவ்வளவுதான். . . . ஆனால், அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், உங்களால் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு மன அமைதியுடன் இருக்கிறேன், நிம்மதியாகவும் இருக்கிறேன்!” சிரச்சேதம் செய்யப்படவிருந்த ஓர் இளம் கிறிஸ்தவர் தன் பெற்றோருக்கு இவ்வாறு எழுதினார்: “இப்போது நள்ளிரவுக்கும் மேலாகிவிட்டது. என் மனதை மாற்றிக்கொள்ள இன்னும் நேரமிருக்கிறது. இருந்தாலும், நம்முடைய கர்த்தரை மறுதலித்துவிட்டு இந்த உலகில் நான் மறுபடியும் சந்தோஷமாக வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது! ஆனால் இப்போது நான் சந்தோஷத்தோடும் சமாதானத்தோடுமே இந்த உலகை விட்டுப் போகிறேன் என்பது உறுதி.” ஆம், தமது உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா பக்கபலமாக இருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நீங்கள் சகிக்க முடியும்!
22, 23. யெகோவாவின் நாளுக்காக சகிப்புத்தன்மையோடு காத்திருக்கையில் எதைக் குறித்து நீங்கள் உறுதியாய் இருக்கலாம்?
22 இங்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ள சில பிரச்சினைகளை நீங்கள் ஒருவேளை சந்தித்திருக்க மாட்டீர்கள். ஆனாலும், தேவபயமுள்ள யோபு இவ்வாறு சொன்னது சரியே: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.” (யோபு 14:1) ஒருவேளை, பிள்ளைகளை பைபிள் ஆலோசனைகளின்படி வளர்க்கப் பிரயாசப்படும் ஒரு பெற்றோராக நீங்கள் இருக்கலாம். உங்களுடைய பிள்ளைகள் பள்ளியில் சோதனைகளைச் சகிக்க வேண்டியிருக்கிறது; ஆனால், அவர்கள் யெகோவாவையும் அவருடைய நீதியுள்ள நியமங்களையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதைக் காணும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்! நீங்களும்கூட வேலை செய்யுமிடத்தில் நெருக்கடிகளையோ சபலங்களையோ சந்தித்துக் கொண்டிருக்கலாம். என்றாலும், இவற்றையும் பிற சூழ்நிலைகளையும் உங்களால் சகிக்க முடியும்; ஏனெனில், யெகோவா ‘ஒவ்வொரு நாளும் நமது பாரத்தைச் சுமக்கிறார்.’—சங்கீதம் 68:19, NW.
23 ‘நானெல்லாம் ஒரு சாதாரண ஆள்தானே?’ என உங்களைப்பற்றி ஒருவேளை நீங்கள் தாழ்வாக நினைக்கலாம். ஆனால், உங்கள் உழைப்பையும் யெகோவாவுடைய பரிசுத்த பெயருக்கு நீங்கள் காண்பிக்கிற அன்பையும் அவர் ஒருபோதும் மறந்துவிட மாட்டார் என்பதை நினைவில் வையுங்கள். (எபிரெயர் 6:10) அவருடைய உதவியோடு விசுவாசப் பரீட்சைகளை நீங்கள் சகிக்கலாம். ஆகவே, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைக் குறித்து உங்கள் ஜெபங்களில் தெரிவியுங்கள்; கடவுளுடைய சித்தத்தை மனதில் வைத்தே எந்தவொரு காரியத்தையும் திட்டமிடுங்கள். அப்போது, யெகோவாவின் நாளுக்காக சகிப்புத்தன்மையோடு காத்திருக்கையில் அவருடைய ஆசியும் ஆதரவும் இருக்கும் என்பதில் நீங்கள் உறுதியாய் இருக்கலாம்.
உங்கள் பதில்?
• கிறிஸ்தவர்களுக்கு சகிப்புத்தன்மை ஏன் தேவை?
• சுகவீனத்தையும் மீளாத் துயரத்தையும் சகிக்க எது நமக்கு உதவும்?
• சோதனைகளைச் சகிக்க ஜெபம் நமக்கு எப்படி உதவும்?
• யெகோவாவின் நாளுக்காக சகிப்புத்தன்மையோடு காத்திருப்பது ஏன் சாத்தியம்?
[பக்கம் 29-ன் படம்]
யெகோவாமேல் நம்பிக்கை வைப்பது மீளாத் துயரத்தைச் சகிக்க நமக்கு உதவுகிறது
[பக்கம் 31-ன் படம்]
இதயப்பூர்வ ஜெபம், விசுவாசப் பரீட்சைகளைச் சகிக்க நமக்கு உதவுகிறது