நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கிறீர்களா?
“தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.”—லூக்கா 12:21.
1, 2. (அ) எதற்காக மக்கள் பெரிய பெரிய தியாகங்களைச் செய்ய தயாராய் இருக்கிறார்கள்? (ஆ) கிறிஸ்தவர்கள் என்ன சவாலையும் ஆபத்தையும் சந்திக்க வேண்டியுள்ளன?
புதையலைத் தேடுவது வெறுமனே பிள்ளைகளின் விளையாட்டல்ல. இது காலங்காலமாக பல நாடுகளில் நிஜ வாழ்க்கையில் நடக்கும் ஒன்றாக இருக்கிறது. உதாரணத்திற்கு, 19-ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தச் செய்தி தொலைதூர இடங்களிலுள்ள மக்களைக் காந்தமாக இழுத்தது. பரிச்சயமில்லாத இடங்களாய் இருந்தாலும் ஏன், சிலசமயங்களில் வாழ்வதற்குச் சாதகமற்ற இடங்களாய் இருந்தாலும்கூட எதையும் பாராமல் செல்வம் சேர்க்கும் எண்ணத்தில் இவர்கள் வீடுவாசலையும் உறவுக்காரர்களையும் விட்டுவிட்டு அங்குச் செல்லத் தயாராய் இருந்தார்கள். ஆம், மனம் விரும்புகிற செல்வங்களை அடைய அநேகர் எந்த ஆபத்தையும் சந்திக்கத் தயாராய் இருக்கிறார்கள், எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
2 இன்று அநேகர் நிஜமாகவே புதையல்களைத் தேடி செல்வதில்லைதான். என்றாலும், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கு அவர்கள் கடினமாய் உழைக்க வேண்டியுள்ளது. இன்றைய உலகில் அது ஒரு சவாலாக ஆரம்பித்து காலப்போக்கில் நம்மைச் சக்கையாகப் பிழிந்தெடுத்து கடைசியில் சுமையாக மாறிவிடுகிறது. உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு அளவுக்கதிகமாய் கவனம் கொடுப்பதால் அதிமுக்கியமான காரியங்களை நாம் அசட்டை செய்துவிடவோ மறந்துவிடவோ நிறைய வாய்ப்பிருக்கிறது. (ரோமர் 14:17) மனிதர்களின் இந்தக் குணத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தும் ஓர் உவமையை அல்லது உதாரணத்தை இயேசு கூறினார். அது லூக்கா 12:16-21-ல் காணப்படுகிறது.
3. லூக்கா 12:16-21-ல் பதிவாகியுள்ள இயேசுவின் உவமையைச் சுருக்கமாகச் சொல்லவும்.
3 பேராசையிலிருந்து காத்துக்கொள்வதன் அவசியத்தைக் குறித்துப் பேசியபோதுதான் இயேசு இந்த உவமையையும் கூறினார். முந்தைய கட்டுரையில் இந்தப் பேராசையைக் குறித்து கொஞ்சம் விளக்கமாகவே கலந்தாலோசித்தோம். பேராசையைக் குறித்து எச்சரித்தப் பிறகு இயேசு ஓர் ஐசுவரியவானைப்பற்றிப் பேசினார். ஏற்கெனவே நல்ல பொருள்களால் நிரம்பியிருந்த தன்னுடைய களஞ்சியங்களில் அவன் திருப்தியாய் இராமல் இன்னும் அநேக நல்ல பொருள்களைச் சேர்த்து வைப்பதற்காக பழைய களஞ்சியங்களை இடித்து, பெரிதாக்கினான். இனிமேல் தான் இளைப்பாறி சொகுசாய் வாழலாம் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தபோது, அவனுடைய வாழ்க்கை சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போவதாக கடவுள் அவனிடம் கூறினார். அதோடு, அவன் சேர்த்து வைத்த எல்லா நல்ல பொருள்களும் வேறு யாருக்காவது கொடுக்கப்படும் என்றார். பிறகு இயேசு முடிவாக இந்த வார்த்தைகளைக் கூறினார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.” (லூக்கா 12:21) இந்த உவமையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? அதை நம் சொந்த வாழ்க்கையில் எவ்வாறு பின்பற்றலாம்?
சவாலை எதிர்ப்பட்ட மனிதன்
4. இயேசுவின் உவமையில் சித்தரிக்கப்பட்டுள்ள மனிதன் எப்படிப்பட்டவன் என்று சொல்லலாம்?
4 இயேசு சொன்ன இந்த உவமை அநேக நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. “ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது” என்று சொல்லி இயேசு கதையை ஆரம்பித்ததைக் கவனியுங்கள். அந்த மனிதன் மற்றவர்களை ஏமாற்றியோ சட்டத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்தோ பணம் சம்பாதித்ததாக இயேசு கூறவில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவன் ஒரு கெட்ட மனிதனாகச் சித்தரிக்கப்படவில்லை. இயேசு சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, அவன் கஷ்டப்பட்டு உழைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதே நியாயமாக இருக்கிறது. அந்த மனிதன் தன் குடும்பத்தின் நலனைக் கருதி எதிர்காலத்திற்காக இப்படித் திட்டமிட்டு பொருள்களைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும் என்பதையாவது புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால், தன் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் அவசியத்தை உணர்ந்து கடினமாய் உழைக்கும் ஒருவனுக்கு அந்த ஐசுவரியவானை ஒப்பிடலாம்.
5. இயேசுவின் உவமையில் வருகிற அந்த மனிதன் என்ன சவாலை எதிர்ப்பட்டான்?
5 என்னவாக இருந்தாலும், இயேசு தன் உவமையில் அந்த மனிதனை ஒரு ஐசுவரியவான் என்றுதான் அழைத்தார். எனவே, அவன் ஏற்கெனவே ஏகப்பட்ட பொருள் செல்வங்களைப் பெற்றிருந்தான் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. என்றாலும், இயேசு குறிப்பிட்டதுபோல் அந்த மனிதன் ஒரு சவாலை எதிர்ப்பட்டான். அவனுடைய நிலம் அவன் எதிர்பார்த்ததைவிட அதிக பலன் தந்தது. அது அவனுடைய தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. அவை எல்லாவற்றையும் அவனால் பாதுகாப்பதும் கடினமே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் என்ன செய்திருக்க வேண்டும்?
6. இன்று கடவுளுடைய ஊழியர்கள் என்னென்ன தீர்மானங்களை எதிர்ப்படுகிறார்கள்?
6 கிட்டத்தட்ட அந்த ஐசுவரியவான் எதிர்ப்பட்டது போன்ற சூழ்நிலைமையைத்தான் இன்று யெகோவாவின் ஊழியர்களில் அநேகரும் எதிர்ப்படுகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் நேர்மையாக இருந்து, கடினமாய் உழைத்து, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வேலை செய்ய பிரயாசப்படுகிறார்கள். (கொலோசெயர் 3:22, 24) அவர்கள் மற்றவர்களிடம் வேலை பார்க்கிறார்களோ சுயமாகத் தொழில் செய்கிறார்களோ எதுவாயிருந்தாலும் பெரும்பாலும் வெற்றியே பெறுகிறார்கள், ஏன், தாங்கள் செய்யும் காரியங்களில் சிறக்கவும் செய்கிறார்கள். பதவி உயர்வோ புதிய வாய்ப்புகளோ கிடைக்கையில் அவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் பதவி உயர்வை ஏற்றுக்கொள்ளவோ அதிக பணம் சம்பாதிக்கவோ வேண்டுமா? அதேபோல், சாட்சிகளாயிருக்கும் அநேக இளைஞர்களும் பள்ளியில் சிறக்கிறார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு விருதுகள் அல்லது பெயர்பெற்ற கல்லூரிகளில் மேல்படிப்பு படிப்பதற்கான உதவித் தொகை வழங்கப்படலாம். பொதுவாக மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதுபோல அவர்களும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
7. இயேசுவின் உவமையில் வருகிற அந்த மனிதன் தன் சவாலை எவ்வாறு சமாளித்தான்?
7 மறுபடியும் இயேசுவின் உவமைக்கே நம் கவனத்தைத் திருப்புவோம். அந்த ஐசுவரியவானுடைய நிலம் மிக நன்றாய் விளைந்து, தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லாமல் போனபோது அவன் என்ன செய்தான்? ஏற்கெனவே இருந்த களஞ்சியங்களை இடித்து, இன்னும் பெரிய களஞ்சியங்களைக் கட்டி அதில் மிகுதியாய் விளைந்த தானியங்களையும் நல்ல பொருள்களையும் சேர்த்துவைக்கலாம் என்று தீர்மானித்தான். அவனுடைய திட்டம் அந்தளவுக்கு பாதுகாப்புணர்வையும் திருப்தியையும் அவனுக்கு அளித்ததால் தனக்குள்ளே இவ்வாறு சிந்தித்துக்கொண்டான்: “ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்.”—லூக்கா 12:19.
அவன் ஏன் ‘மதிகேடன்’?
8. இயேசுவின் உவமையில் வருகிற அந்த மனிதன் எந்த முக்கியமான அம்சத்தை கவனிக்கத் தவறினான்?
8 என்றாலும், இயேசு சொன்னதுபோல் அந்த ஐசுவரியவானின் திட்டம் பொய்யான பாதுகாப்புணர்வையே அளித்தது. அது நடைமுறையான திட்டம்போல் தோன்றியிருக்கலாம், ஆனால், ஒரு முக்கியமான அம்சத்தை விட்டுவிட்டது. அதுதான் கடவுளுடைய சித்தம். அந்த மனிதன் தன்னைக் குறித்து மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தான், தான் எப்படி இளைப்பாறி, புசித்துக் குடித்துப் பூரிப்பாயிருக்கலாம் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். தன்னிடம் “அநேகம் பொருள்கள்” இருப்பதால் ‘அநேக வருஷங்கள்’ வாழ முடியும் என்று நினைத்தான். ஆனால் வருத்தகரமாக, காரியங்கள் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. இயேசு முன்பு குறிப்பிட்டது போலவே, “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) அவன் உழைத்து சேர்த்ததெல்லாம் அந்த இரவே பிரயோஜனமில்லாமல் ஆகிவிட்டன. ஏனென்றால், கடவுள் அவனிடம், “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்றார்.—லூக்கா 12:20.
9. உவமையில் குறிப்பிடப்படுகிற மனிதன் ஏன் மதிகேடன் என அழைக்கப்படுகிறான்?
9 நாம் இப்போது இயேசு கூறிய உவமையின் மையக்கருவைச் சிந்திக்கப் போகிறோம். கடவுள் அந்த மனிதனை மதிகேடன் என்று அழைத்தார். இதுபோன்ற வார்த்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல், “புரிந்துகொள்ளும் திறன் இல்லாததையே எப்போதும் குறிக்கிறது” என்பதாக புதிய ஏற்பாட்டின் விளக்க அகராதி (ஆங்கிலம்) சொல்கிறது. இந்த உவமையில், “ஐசுவரியவான்களின் எதிர்கால திட்டங்களின் அர்த்தமற்றத் தன்மையை” வெளிச்சத்துக்கு கொண்டுவரவே கடவுள் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்று அந்த அகராதி கூறுகிறது. அந்த வார்த்தை அறிவில்லாத ஒருவரைக் குறிப்பதில்லை, மாறாக, “கடவுளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர மறுக்கும் ஒருவரைக் குறிக்கிறது.” இயேசு அந்த ஐசுவரியவானை விவரித்திருக்கிற விதமானது ஆசியா மைனரில் லவோதிக்கேயாவிலிருந்த முதல் நூற்றாண்டு சபையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் பிறகு சொன்னதை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது: ‘நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்கிறாய்.’—வெளிப்படுத்துதல் 3:17.
10. ‘அநேக பொருள்கள்’ இருந்தால் ‘அநேக வருஷங்கள்’ வாழ முடியும் என்று ஏன் சொல்ல முடியாது?
10 நாம் இந்த உவமை கற்பிக்கிற பாடத்தை தியானிப்பது அவசியம். இந்த உவமையில் வருகிற மனிதன் தனக்காக ‘அநேக பொருள்களைச்’ சேர்த்து வைத்தான். ஆனால், ‘அநேக வருஷங்கள்’ வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையானதைச் செய்யத் தவறிவிட்டான். நாமும் இந்த மனிதனைப்போல் ஆகிவிட வாய்ப்பிருக்கிறதா? (யோவான் 3:16; 17:3) “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது” என்றும் “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:4, 28) எனவே, இயேசு தன் உவமையின் முடிவில் இந்த அறிவுரையையும் கூறினார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.”—லூக்கா 12:21.
11. ஒருவர் பொருள் செல்வங்களில் நம்பிக்கையை வைப்பதும் பாதுகாப்பிற்காக அவற்றையே சார்ந்திருப்பதும் ஏன் வீணாக இருக்கிறது?
11 “இப்படியே” என்று இயேசு சொல்கையில், பொருள் செல்வங்களை முழுக்க முழுக்க நம்பியிருந்து பாதுகாப்பிற்காக அவற்றையே சார்ந்திருக்கிறவர்கள் அந்த ஐசுவரியவானுக்கு வந்த அதே நிலையைத்தான் அடைவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். ‘தங்களுக்காக பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதில்’ தவறில்லை. ஆனால், ‘கடவுளிடம் ஐசுவரியவானாய்’ இருக்க தவறுவதே தவறு. சீஷனாகிய யாக்கோபும் இதே போன்ற ஓர் எச்சரிக்கையை விடுத்தார்: “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே.” அப்படியென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? “ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.” (யாக்கோபு 4:13-15) ஒருவர் எவ்வளவு ஐசுவரியமுள்ளவராய் இருந்தாலும், அவரிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அவர் தேவனிடம் ஐசுவரியவானாய் இராவிட்டால் அவை எல்லாமே வீண்தான். அப்படியென்றால், கடவுளிடத்தில் ஐசுவரியவானாய் இருப்பதன் அர்த்தம் என்ன?
தேவனிடம் ஐசுவரியவானாய் இருத்தல்
12. நாம் என்ன செய்தால் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் ஆக முடியும்?
12 இயேசு கூறிய வாக்கியத்தில், தேவனிடம் ஐசுவரியவானாய் இருப்பதும் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்பதும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. ஆம், பொருள் செல்வங்களைச் சேர்த்து வைப்பதும் நம்மிடம் உள்ள பொருள்களை மகிழ்ந்து அனுபவிப்பதுமே நம் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக இருக்கக்கூடாது என்பதை இயேசு வலியுறுத்தினார். மாறாக, யெகோவாவிடமுள்ள நம் உறவை பலப்படுத்தும் விதத்தில் அந்தச் சொத்துக்களை நாம் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்கையில், யெகோவாவிடமிருந்து நாம் நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்று அவரிடத்தில் ஐசுவரியவான்களாய் ஆவோம் என்பதில் சந்தேகமேயில்லை. “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 10:22.
13. யெகோவாவின் ஆசீர்வாதம் எவ்வாறு ‘ஐசுவரியத்தைத் தரும்’?
13 யெகோவா தம் மக்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்கு மிகச் சிறந்ததையே அளிக்கிறார். (யாக்கோபு 1:17) உதாரணத்திற்கு, இஸ்ரவேலர்களுக்காக யெகோவா ஒரு தேசத்தைக் கொடுத்தபோது அது ‘பாலும், தேனும் ஓடுகிற தேசமாய்’ இருந்தது. எகிப்து தேசமும் அதேபோல் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த தேசம் ஒரு விசேஷித்த விதத்திலாவது வித்தியாசமாய் இருந்தது. “அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம்” என்று மோசே இஸ்ரவேலர்களிடம் கூறினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவா அவர்களைப் பார்த்துக்கொள்வதால் அவர்கள் வளமாக வாழ்வார்கள். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்த காலம்வரை யெகோவா அவர்களை மிகுதியாக ஆசீர்வதித்தார். அவர்களுடைய வாழ்க்கை முறையும் அவர்களைச் சுற்றி இருந்த தேசத்தாரிலிருந்து நிகரற்றதாய் தனித்துக் காணப்பட்டது. ஆம், யெகோவாவின் ஆசீர்வாதமே “ஐசுவரியத்தைத் தரும்”!—எண்ணாகமம் 16:13; உபாகமம் 4:5-8; 11:8-15.
14. கடவுளிடம் ஐசுவரியவான்களாய் இருப்பவர்கள் எதையெல்லாம் அனுபவிக்கிறார்கள்?
14 ‘தேவனிடம் ஐசுவரியவானாய் இருத்தல்’ என்ற கூற்று ‘தேவனுடைய பார்வையில் ஐசுவரியவானாய் இருத்தல்’ (டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) அல்லது ‘தேவனுடைய கண்களில் ஐசுவரியவானாய் இருத்தல்’ (ஜெ. பி. ஃபிலிப்ஸின் த நியூ டெஸ்டமென்ட் இன் மாடர்ன் இங்லிஷ்) என்றும் மொழிபெயர்க்கப்படுகின்றன. பொருளாதார ரீதியில் ஐசுவரியவான்களாய் இருப்பவர்கள் மற்றவர்களின் கண்களில் தாங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக் குறித்தே பொதுவாகக் கவலைப்படுகிறார்கள். இது அவர்களுடைய வாழ்க்கை முறையில் பெரும்பாலும் பிரதிபலிக்கப்படுகிறது. அவர்கள், பைபிளில் குறிப்பிடப்படுகிற ‘ஜீவனத்தின் பெருமையினால்’ மக்களைக் கவர நினைக்கிறார்கள். (1 யோவான் 2:16) இதற்கு நேர்மாறாக, தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் இருப்பவர்கள் அவருடைய அங்கீகாரத்தையும், ஆதரவையும், தகுதியற்ற தயவையும் ஏராளமாகப் பெற்று அவருடன் நெருக்கமான உறவை வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அருமையான நிலையில் இருப்பது உண்மையிலேயே அவர்களுக்குச் சந்தோஷத்தையும் பாதுகாப்புணர்வையும் அளிக்கிறது. இதுபோன்ற உணர்வை வேறு எந்தப் பொருள் செல்வங்களாலும் அளிக்க முடியாது. (ஏசாயா 40:11) இப்போது நாம் சிந்திக்க வேண்டிய கேள்வியானது, கடவுளுடைய பார்வையில் ஐசுவரியவான்களாய் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
கடவுளுடைய பார்வையில் ஐசுவரியவான்களாய் இருத்தல்
15. தேவனிடத்தில் ஐசுவரியவானாய் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
15 இயேசுவின் உவமையில் வருகிற அந்த மனிதன், மேலும் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் நன்றாக காரியங்களைத் திட்டமிட்டு கடினமாக உழைத்தான். அதனாலேயே அவன் மதிகேடன் என அழைக்கப்பட்டான். எனவே, தேவனிடம் ஐசுவரியவானாய் இருப்பதற்கு, கடினமாய் உழைத்து அவருடைய பார்வையில் உண்மையிலேயே மதிப்புள்ளதாயும் பயனுள்ளதாயும் இருக்கிற காரியங்களில் முழுமூச்சாய் ஈடுபட வேண்டும். ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளையும் அவற்றில் உட்படுகிறது. (மத்தேயு 28:19) நம்முடைய சொந்த முன்னேற்றத்திற்காக அல்லாமல் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் நம் நேரத்தையும் சக்தியையும் திறமைகளையும் பயன்படுத்துவதை முதலீடு செய்வதோடு ஒப்பிடலாம். அப்படிச் செய்திருப்பவர்கள், பின்வரும் அனுபவங்கள் காட்டுகிறபடி ஆன்மீக ரீதியில் ஏராளமான ஐசுவரியத்தை ஆதாயமாகப் பெற்றிருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 19:17.
16, 17. எப்படிப்பட்ட வாழ்க்கைமுறை ஒருவரை கடவுளுடைய பார்வையில் ஐசுவரியவானாக ஆக்கும் என்பதற்கு நீங்கள் என்ன உதாரணங்களைத் தருவீர்கள்?
16 ஆசிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவரின் பின்வரும் அனுபவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். கணினி தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்த அவர் கைநிறைய சம்பாதித்தார். இருந்தாலும், அவருடைய வேலை அவருக்கு இருந்த எல்லா நேரத்தையும் உறிஞ்சிக்கொண்டிருந்தது. அதனால், ஆன்மீக ரீதியில் வலுவற்று இருந்ததாய் உணர்ந்தார். எனவே, தன்னுடைய ஆன்மீகத் தேவைகளையும் பொறுப்புகளையும் பூர்த்தி செய்யத் தீர்மானித்தார், அதனால், தன் வேலையில் இன்னும் முன்னேறுவதற்கு வழி தேடாமல் அதை விட்டுவிட்டு ஐஸ் கிரீம் தயாரித்து அதைத் தெருவில் விற்கும் தொழிலை ஆரம்பித்தார். முன்பு அவருடன் வேலை செய்தவர்கள் அவரைக் கேலி செய்தார்கள். ஆனால், அவர் எடுத்த முடிவுக்கு என்ன பலன் கிடைத்தது? “நான் கணினி வேலை செய்தபோது கிடைத்த பணத்தைவிட அதிகமாகவே சம்பாதித்தேன்” என்று அவர் சொன்னார். “என்னுடைய பழைய வேலையில் இருந்த அழுத்தமோ கவலையோ இப்போது எனக்கு இல்லாததால் நான் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லாவற்றையும்விட முக்கியமாக நான் யெகோவாவிடம் நெருக்கமாய் இருப்பதாக உணருகிறேன்” என்று அவர் மேலுமாகச் சொல்கிறார். அவர் அந்த மாற்றத்தைச் செய்ததால் முழுநேர ஊழியத்தில் ஈடுபட முடிந்தது, அவர் இப்போது தன்னுடைய நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார். யெகோவாவின் ஆசீர்வாதம் உண்மையிலேயே ‘ஐசுவரியத்தைத் தருகிறது’.
17 இன்னொரு உதாரணம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் வளர்ந்த ஒரு பெண்மணியினுடையது. அவர் பிரான்சு, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயின்றவர், அவருக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. “வெற்றி என்னைப் பார்த்து புன்னகைத்தது; பதவியும் சிலாக்கியங்களும் என்னைத் தேடி வந்தன” என்று அவர் சொன்னார். “ஆனால், என் மனதிற்குள் வெறுமையாக உணர்ந்தேன், மிகவும் அதிருப்தியாய் இருந்தேன்” என்றும் அவர் சொன்னார். பிறகு அவர் யெகோவாவைப்பற்றிக் கற்றார். “நான் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தபோது யெகோவாவை பிரியப்படுத்த ஆசைப்பட்டேன்; அவர் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறார், அவற்றில் கொஞ்சத்தையாவது அவருக்குத் திரும்பக் கொடுக்க ஆசைப்பட்டேன். சரியானப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு இந்த ஆசை எனக்கு உதவியது. அதனால் அவருக்கு முழுநேர சேவை செய்ய தீர்மானித்தேன்” என்று அவர் மேலும் சொல்கிறார். அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெற்றார். கடந்த 20 ஆண்டுகளாக அவர் சந்தோஷமாய் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார். “நான் என் திறமைகளை வீணாக்கிவிட்டதாக சிலர் நினைத்தாலும், நான் சந்தோஷமாக இருப்பதை அவர்கள் உணருகிறார்கள். என் வாழ்வில் நான் கடைப்பிடிக்கிற நியமங்களை அவர்கள் பெரிதும் போற்றுகிறார்கள். யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நான் மனத்தாழ்மையாய் இருக்க உதவும்படி தினமும் அவரிடம் ஜெபிக்கிறேன்” என்று அவர் சொல்கிறார்.
18. பவுலைப்போல் நாம் எப்படிக் கடவுளிடம் ஐசுவரியவான்களாய் இருக்கலாம்?
18 அப்போஸ்தலன் பவுலாக மாறிய சவுலுக்கு இவ்வுலகில் முன்னேற நல்ல வாய்ப்பு இருந்தது. இருந்தாலும், அவர் “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்று பிறகு எழுதினார். (பிலிப்பியர் 3:7, 8) உலகம் தரக்கூடிய வேறெந்த செல்வத்தை விடவும் கிறிஸ்து மூலமாக கிடைத்த செல்வத்தையே பவுல் மேலானதாகக் கருதினார். அதேபோல், நாமும் சுயநலமான லட்சியங்களை விட்டுவிட்டு தேவபக்தியுள்ள வாழ்க்கையை நாட வேண்டும். அப்படிச் செய்தால் கடவுளுடைய பார்வையில் ஐசுவரியமுள்ள வாழ்க்கையை நாமும் அனுபவித்து மகிழ முடியும். “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 22:4.
உங்களால் விளக்க முடியுமா?
• இயேசுவின் உவமையில் வருகிற அந்த மனிதன் என்ன சவாலை எதிர்ப்பட்டான்?
• உவமையில் பேசப்படுகிற மனிதன் ஏன் மதிகேடன் என அழைக்கப்பட்டான்?
• கடவுளிடம் ஐசுவரியவானாய் இருப்பதன் அர்த்தம் என்ன?
• நாம் எப்படிக் கடவுளிடம் ஐசுவரியவான்களாய் ஆகலாம்?
[பக்கம் 26-ன் படம்]
ஐசுவரியமுள்ள அந்த மனிதன் ஏன் மதிகேடன் என அழைக்கப்பட்டான்?
[பக்கம் 27-ன் படம்]
முன்னேறுவதற்கான சில வாய்ப்புகள் எவ்வாறு சோதனையாக அமையலாம்?
[பக்கம் 28, 29-ன் படம்]
“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்”